Sunday, July 25, 2004

*** ஜே.ஜே.சில குறிப்புகள் பற்றிச் சில குறிப்புகள் -4 *** 

ஜே.ஜே. ஓமனக்குட்டியுடன் சுற்றுகிறான் என்று கேள்விபட்டதும், நிம்மதியின்றித் துடிக்கும் அவன் திருமண வாழ்விற்குத் திரும்பினால் சரியாகிவிடுவான் என்று பேராசியர் அரவிந்தாட்ச மேனன் நம்பினார். திடீரென்று சில நாள்களாக ஜே.ஜே.யையும், ஓமனக்குட்டியையும் காணவில்லை என்றதும் மேனன் சந்தோஷப்படத்தொடங்கினார். அவருடைய மகிழ்ச்சி வெகு சீக்கிரமே முடிவுக்கு வந்தது இரண்டு நாள்கள் கழித்து தனியே வந்து சேர்ந்த ஜே.ஜே.யினால். ஓமனக்குட்டியுடன் ஜே.ஜே. கொண்டிருந்த உறவு ஒரு ரயில்வே ஸ்டேஷனில், ஓமனக்குட்டி அவள் எழுதிய கவிதைத் தொகுப்பை ஜே.ஜே.யிடம் காட்டிக் கருத்துக் கேட்டதும் முடிவுக்கு வந்துவிட்டது. ஜே.ஜே. அவளுடன் இருப்பதைவிட, அக்கவிதைத் தொகுப்பைப் பற்றிய அவனது உண்மையான அபிப்ராயத்தைச் சொல்வெதென்று முடிவெடுத்ததே காரணம்! 

"உண்மை பயங்கரமானது. அது மனிதனைத் தனிமைப்படுத்திவிடுகிறது. உறவுகளை ஈவிரக்கமின்றித் துண்டித்து விடுகிறது. உலகின் விதூஷகக் குணத்தைக் கண்டு சிரிக்கும் நுட்பமான ஹாஸ்ய உணர்வு கொண்டவன் ஜே.ஜே. பெரும் துக்கத்தில் அவன் சிரிப்பான். ஆனால் அது சிரிப்பல்ல. பிராண்டல்களில் கசியும் ரத்தம். நண்பர்களுக்குக்கூட அந்த ரத்தத்தைத் துடைக்கத் தெரியவில்லை. மோசமான வதந்தியிலிருந்து கிடைக்கும் பரபரப்பையே அவர்கள் அடைகிறார்கள். மறைந்து நிற்கும் துக்கம் எவருக்கும் தெரிவதில்லை. 

தத்துவங்களை அவன் பார்த்துக்கொண்டே போகிறான். அவற்றிலிருந்து ஒரு ஒளிக்கீற்று வெளிப்பட்டு, இந்த உலக வாழ்வின் மீது- மாறி மாறிக் காட்சி தரக்கூடிய சிக்கல்களும், முரண்களும் நிறைந்த, தனது புதிய வெளிப்பாடுகளால் நம் ஆராய்ச்சி முடிவுகளைப் புறம் தள்ளிவிடுகிற கடல்போல், நிறங்களிலும், கொந்தளிப்புகளிலும், அமைதிகளிலும் விதவிதமான புறந்தோற்றங்களைக் கொள்கிற இவ்வுலகின்மீது பட்டு விளக்கம் பெற அவன் துடிக்கிறான். உண்மையின் கீற்றுகள். முழுமையாக ஏற்று மனம் ஒப்பிப் பின் தொடர எங்கு அவை குவிந்து கிடக்கின்றன? எங்கு அவை தொகுக்கப்பட்டிருக்கின்றன? தேடியவர்களில் கீற்றுகளை ஸ்பரிசிக்காதவனும் இல்லை. முழுமையாக ஸ்பரிசித்தவனும் இல்லை. ஒரு பகுதி புதிய பரிமாணங்கள். மறுபகுதி மீண்டும் சரிவுகள். இவனிலிருந்து ஒரு பகுதியையும் அவனிலிருந்து ஒரு பகுதியையும் சேர்த்து முழுமைபடுத்திவிடலாம் என்று கற்பனை செய்கிறோம். முழுமைக்கு அலையும் பேதை மனத்தின் சபலம் இது. மாறுபட்ட அடிப்படைகளை எப்படி இணைக்கமுடியும்?" 

நமக்குத் தெரிந்த ஒருவரைப் பற்றிய நம்பிக்கைகளை வளர்த்துக்கொண்டே போகும்போது, தெரிந்தவரைப் பற்றிய உண்மைகளுக்கும், நமது நம்பிக்கைகளுக்கும் உள்ள தூரம் புறச்செயல்களாலும், போலித்தனங்களாலும் அதிகமாகிக்கொண்டே போய், உண்மை நம்பிக்கைக்கு எதிராகத் திரும்பும் தருணத்தில் நாம் பலமிழந்து போகிறோம். போக்கிடமில்லாது தவிக்கிறோம். உறவுகள் முறிவது இத்தருணங்களில்தான். நேரெதிராக நிற்கும் நிலைகளில் அவரவர் நம்பிக்கைகள் அவரவர்க்குச் சரியெனத் தோன்ற உண்மை நடுவே நின்று கைகொட்டிச் சிரிக்கிறது. ஆனால் வெவ்வேறு நிலைகளை எடுத்துக்கொண்டவர்களுக்கு உண்மையைப் பார்க்க முடிவதில்லை; விருப்பமுமில்லை. இது என்னுடைய சிந்தனை ஓட்டங்கள். சார்புநிலை எடுத்துக்கொண்ட பின் வேறு எந்த விவாதங்களாலும் எனது நம்பிக்கையைத் தகர்க்கமுடிவதில்லை. எனது வாழ்வின் கடந்த சம்பவங்களை எடுத்துக்கொண்டு பார்த்தால், எனது நம்பிக்கைக்கு எதிரான நிலையை எதிர்கொள்ள மறுத்து, நம்பிக்கையின் உச்சத்திலேயே வாசம் செய்திருக்கிறேன் என்றும், எதிர்நிலையின் ஆழத்திற்குச் சென்று உண்மையைக் கண்டுபிடித்து, என் நம்பிக்கையோ, எதிர் நிலையின் நம்பிக்கையோ மாற்ற எந்த அளவு முயற்சித்திருக்கிறேன் என்றும் என்னை நானே கேட்டுப்பார்த்தால் வெட்கமே மிஞ்சுகிறது. இவ்வுணர்வு என்னில் எதிர்நிலை கொண்டிருக்கும் உங்களுக்கும் தோன்றலாம். இருவருக்கும் இப்படித் தோன்றும் பட்சத்தில், நமது வெட்கச் சுவர்களை உடைத்து, நாமிருவரும் உண்மையைக் காண்பதற்கு வழிவகை செய்வது எது என்று நமது இருவருக்கும் தெரியாததால் வாய்மூடி மெளனியாக இருக்கவே பிரியப்படுகிறோம். எனது இந்தப் புரிந்துகொள்ளலை, சுந்தர ராமசாமி வேறுவிதமாக ஜே.ஜே.சில குறிப்புகளில் சொல்கிறார். அதைப் பார்ப்போம். 

"மனித மனத்தின் கூறுகள் மிகப்பயங்கரமான அடர்த்தி கொண்டவை. பெரிய பள்ளத்தாக்கு அது. ஆழம். இருட்டு. அடர்த்தி. கண்களுக்குப் புலப்படாத தொலைதூரங்கள். இவற்றை வகைப்படுத்தமுடியாத ஒவ்வொரு ஜீவனும், ஒவ்வொரு நிமிஷமும் இந்த உலகை முட்டி மோதிக்கொண்டிருக்கிறது. அந்தரங்கமான காரணங்கள் பல இருக்க, வேறொரு வெளிப்படையான காரணம் சொல்லிக்கொண்டு, முகமூடிகள் அணிந்து, உடலை இழுத்துப் போர்த்திக்கொண்டு, இருட்சுவர்களில் சாய்ந்து, ஆயுதங்களை உடலுக்குள் மறைத்து, முகங்களில் புன்னகைகளுடன் பீறிடுகின்றன. கருத்துகளை உற்பத்தி செய்கின்றன; புணருகின்றன; குழந்தைகளை உற்பத்தி செய்கின்றன. இயந்திரங்களை உருவாக்குகின்றன. இவற்றின் ஆணைப்படி இயந்திரங்கள் இடையறாது அசைந்து கத்திக்கொண்டே இருக்கின்றன. சிக்கல்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றன. வியாக்கியானங்களைப் பிறப்பித்துக்கொண்டே இருக்கின்றன. இந்த அகன்ற இருட்காட்டுக்குள் ஒருவன் எப்படி நுழைந்து வெளியே வரமுடியும்? எல்லாவற்றையும் அறியவும், குறை நிறைகளைத் தொகுக்கவும் சாத்தியமா? எத்தனை நிலைகள்? எத்தனை எதிர் நிலைகள்? அதன்பின் எதிர்நிலைகளுக்குமான பதில்கள். பெரும் சுமடாய்ச் சுமந்துவிட்ட சிந்தனையின் அச்சுறுத்தலில் மனிதன் கடவுளின் கால்களில் சரணாகதி அடைந்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  பகுத்தறிவுக்குப்பின் எப்போதும் ஒரு நம்பிக்கை ஒளிந்துகொண்டிருக்கிறது. கொள்கை சார்ந்த முடிவுகளுக்குப்பின் தனி நபர் உறவுகள் பல்லை இளிக்கின்றன. ஸ்திதியின் உக்கிரம் மனிதனை வாட்டி வதைக்கிறது. பழைய நம்பிக்கைகள் கழன்று தெறிக்கின்றன. புது நம்பிக்கைகளை, அவற்றின் குறைகளைப் பார்க்க பயந்து, சூன்யத்திற்குள் விழப் பயந்து, முழுமையானதாகக் கற்பனை செய்துகொண்டு இழுத்துத் தழுவிக் கொள்கிறான் மனிதன். வாழ்க்கையில் உரசி தத்துவங்களின் முலாம் கழல்கிறது. வியாக்கியானங்கள் ஆரம்பிக்கின்றன. இட்டுக்கட்டும் வியாக்கியானங்கள். தத்துவத்திற்கு ஒட்டுப் பிளாஸ்திரிகள். மனிதனுடைய ஆசை, கனவு லட்சியங்கள். கடவுளை உருவமாகப் பார்க்க, நம்பிக்கையின் வடிவமாகப் பார்க்க, பகுத்தறிவுக்குள் பார்க்க மனிதனின் பிரயாசைகள். பாவம் மனிதன். சத்திய தரிசனங்களுக்கு வெற்றி தேடித்தரும் சிறு பொறுப்பும் வாழ்க்கைக்கு இல்லை. அது சுழன்று கொண்டிருக்கிறது. அதன் இச்சையும் சுழற்சியும் புத்திக்கு என்றேனும் மட்டுப்படுமோ?" 

தொடரும் 

***

No comments: