Saturday, October 02, 2004

Mahatma Gandhi

மகாத்மா காந்தி
நான் வத்திராயிருப்பு ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, வார பாட அட்டவணையில் 3 நாட்களுக்காவது "கைத் தொழில்" பாடம் இருக்கும். பள்ளியில் இதற்கென்றே ஒரு விஸ்தீரணமான அறையில் கைத்தறிகள் நான்கும், இராட்டைகள் நான்கும் வைத்திருந்தார்கள்.
ஆறு, ஏழு வகுப்பு மாணவர்களுக்குத் "தக்கிளி"யும், எட்டாம் வகுப்புக் காரர்களுக்கு இராட்டையும், ஒன்பது,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குக் கைத்தறியும் பயிற்றுவிக்கப் பட்டன.
பெரும்பாலும் அனைத்து வகுப்பினருக்கும் கைத் தொழில் பாடம் ஒரே நாளில் வருமாறு அட்டவணை அமைத்திருப்பார்கள். தக்கிளியையும் அரையடி நீள பஞ்சுக் கொத்தையும் கடையில் வாங்கிக்கொண்டு வந்துவிட வேண்டும். தக்கிளிக் கம்பியின் முனையிலிருக்கும் கொக்கி போன்ற அமைப்பை வைத்துப் பஞ்சின் நுனியில் பிடித்துக்கொண்டு, தக்கிளியைச் சுற்றி நூல் நூற்க வேண்டும். தக்கிளியின் கீழ்ப்புறம் எட்டணா அளவிலான வெண்கலக் காசைச் சொருகி வைத்தது போல் இருக்கும். காசுக்கு மேற்புறம் நூற்கும் நூலைச் சுற்றிச்சுற்றிச் சேர்க்கவேண்டும்.
முதல் சில வகுப்புகளுக்கு தக்கிளி பஞ்சைப் பிய்த்துக்கொண்டே இருந்தது. பின்பு பழகியதும் உத்திரத்திலிருந்து தொங்கிக்கொண்டு வலைபின்னும் சிலந்தியைப் போல் தக்கிளி உயர்த்திப் பிடித்த இடது கையிலிருக்கும் பஞ்சுக் கொத்திலிருந்து தொங்கிக் கொண்டே அழகாக அறுந்து போகாமல் நூல் நூற்றது. :)
பெரிய மாணவர்கள் சத்தமில்லாது இராட்டை சுற்றுவாகள். கைத்தறிகளில் அமர்திருக்கும் மாணவர்கள் ஒரு கை நெற்றிக்கு எதிரே தொங்கும் கயிற்றை இடவலமாக இழுக்க, கால்களினால் மாற்றிமாற்றி கட்டைகளை மிதித்து நூல் தொகுப்பை மாற்ற, இன்னொரு கையால் எலி போன்று நீளமாக வாலில் நூல் கோர்திருக்கும் ஒரு வஸ்துவை இடவலமாக குறுக்காய் எறிந்து அனாயசமாகக் கதர்த் துணி நெய்வார்கள் அதைப் பார்க்கையில் ஏதோ மாயாஜாலம் போன்று இருக்கும்.
"ரிகார்டு ப்ளேயர் இசைத்தட்டு வடிவ" இராட்டையை என் காரைக்கேணி மாமாவும், பக்கத்து வீட்டுக் கோமாளி ரங்கனும் வைத்திருந்தார்கள்.

நாங்களெல்லாம் தரையில் அமர்ந்துதான் தக்கிளி நூற்போம். பிடிக்காத மாணவன் ஒருவனை முரட்டு மாணவன் ஒருவன், அமரும் போது உட்காருமிடத்தில் தக்கிளியை வைத்துக் கழுவேற்றிய அசம்பாவிதமும் நடந்தது.
மதுரையில் கைத்தறி நெசவாளர்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. திருநகரின் கொனேயில் ஒரு தெரு முழுவதும் செளராஷ்டிரர்கள் ஓயாது கைத்தறியில் நூற்றுக்கொண்டே இருப்பார்கள். அடுத்த இரண்டு தெருக்களுக்கு அச்சத்தம் கேட்கும். மதுரைக் கல்லு¡ரிக்கு எதிரேயுள்ள தமிழ்நாடு பாலிடெக்னிக் முன்புறம் நீஈஈஈஈஈளமாக வண்ணநூல்களை ஒரு தாங்கியில் வைத்து, நெசவாளர்கள் சிக்கு பிரித்துக்கொண்டிருப்பார்கள்.
இராட்டைக்கு வந்து சில வகுப்புகளே ஆன நிலையில் தந்தைக்கு இடமாற்றத்தினால் முசிறி சென்று ஒன்பதாவது படிக்கச் சேர்ந்த அரசு மேல் நிலைப் பள்ளியில் கைத்தொழில் வகுப்புகளே இல்லை. :(
காந்தித் தாத்தா அவரது பிரபல பொக்கைவாய்ச் சிரிப்புப் புகைப்படத்தின் மூலம் அறிமுகம். அப்புறம் பள்ளியில் நடத்திய பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் மூலம் இன்னும் சிறிது அவரைத் தெரிந்துகொள்ள முடிந்தது (பேச்சோ, எழுத்தோ - அவற்றை "மனப்பாடப் போட்டி" என்றுதான் சொல்லவேண்டும்). பின்பு வந்த ரிச்சர்ட் அட்டன்பரோவின் பென் கிங்ஸ்லி மூலம் சற்றுக் "காண" முடிந்தது.
மதுரையிலிருந்தவரை காதிகிராப்டிற்குத் தவறாது சென்று கதர் ஜிப்பா, பைஜாமா வாங்குவோம். என் தந்தை அவரது உடைகளை, தோல்ச்செருப்பு உள்பட, அங்கேதான் இன்னும் வாங்குகிறார். திருமண விசேஷங்களுக்கு இலவம்பஞ்சு மெத்தை வாங்க காதிக்கு ஓடுவோம். காதி கிராப்ட், கோ-ஆப்டேக்ஸ்-இன் நிரந்தர வாடிக்கையாளராக இருப்பதில் ஒரு பெருமை எங்களுக்கு.
ஆங்காங்கே வெயிலில் காய்ந்தும், பறவை எச்சங்களில் குளித்தும், பிறந்த தினத்தன்றும் நினைவு தினத்தன்றும் மட்டும் சுத்தமாகி மாலைகள் சாத்தப் பட்டும் இழிவுக்குள்ளாகும் அவரது சிலைகளை சற்று நல்லவிதமாகப் பராமரிப்பது அரசுகளும் அரசியல்வாதிகளும் அவருக்குச் செய்யும் குறைந்தபட்ச மரியாதை.
"Need of the hour" எனத் தேவைப்படும் பொறுமை, சகிப்புத்தன்மை, அகிம்சை, விடாமுயற்சி போன்ற குணநலன்களால் உதாரண புருஷராகத் திகழ்ந்து, சுதந்திரத்துக்கு வித்திட்ட மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று, அவரை நினைவுகூர்வோம்.
யுத்தங்களும், இரத்தச் சிதறல்களும் நின்று, வன்முறை ஒழிந்து, உலகம் அமைதியாய்ச் சுழல பிரார்த்திப்போம்.
அன்புடன்
சுந்தர்.
பி.கு.: நேற்று என்டிடிவியில் இலண்டன் மேடம் துஸ்ஸாத் மெழுகுச் சிலைகள் அரங்கத்தில் ஐஸ்வர்யா ராயின் சிலை திறப்பு விழாவிற்கு ஐஸ்வர்யா ராயே வந்திருந்து "என்னுடைய இரட்டைச் சகோதரியைப் பார்ததுபோல் இருக்கிறது" என்று அவர் அதிசயித்ததைக் காட்டினார்கள். நிகழ்ச்சி குறித்து வர்ணணை செய்த நிருபி நம்மைப் பார்த்துப் பேச, நமக்கு முதுயையும், பளபளக்கும் பின் வழுக்கைத் தலையையும் காட்டிக்கொண்டு திரை ஓரமாகக் கையில் ஊன்றுகோலுடன் நின்று கொண்டிருந்தது காந்தி சிலை.......

No comments: