Wednesday, March 02, 2005

நடு வானம் - சுணுக்கு

மரத்தடியில் முதலில் ஷக்திப்ரபா "மேற்கு வானம்" என்றொரு கவிதை எழுதினார். அது இங்கே:

"மேற்கு வானம்"-ஷக்திப்ரபா

பிறைச்சந்திரனின் சாயையில்
மஞ்சள் தோய்ந்த மாலைச் சூரியன்.
பார்வை தொடாத இடத்திற்கு
மௌனப் பயணம்.
வாழ்ந்த பொழுது பெருமையாய்
வீழும் பொழுதும் நளினமாய்
மென்மையாய்..
மலைகளின் மரங்களின் பின்னால்
மெல்ல மறைய
ஒவ்வொரு கணமும் என்னுள்
ஏதோ கரைகிறது.
மறையப் போகும் சுடரொளியை
தடுக்கயியலாது தவிக்கையில்
அடிவயிற்றில் எழும்பிய வலி.
கடைசியாய் ஒரு மஞ்சள் புள்ளி
இருட் கரைசலில் காணமல் போனதும்
இன்ன பிறவும் தொலைந்தது.
இருள் விலகி,
இதே மரவிடுக்கிலிருந்தே
மறுபடி மலரும் சாதகப் பறவை.
விடியலுக்கு இன்னும் சிறிதே நேரம்.

***

பின்பு ஷைலஜா "கிழக்கு வானம்" என்ற தலைப்பில் ஒரு கவிதையை உள்ளிட்டார்:

"கிழக்கு வானம்" - ஷைலஜா

வெளுத்தது கிழக்கு
வைகறையின் வரவில்
புள்ளினங்கூடி
இசைத்தது கானம்
சிரித்தன மலர்கள்
பெண்மலராம்
சூரியகாந்தி ஒன்று
பேரொளி ஞாயிறின்
வரவுகண்டு

நாணம் துறந்தது
அவன்முகம் நோக்கத்
தன் இதழ் விரித்தே
திரும்பியது
ஆதவன் அதனை
ஆசைப்பார்வை
பார்க்கவுமில்லை
அன்பாய் தன்கரம்
நீட்டவுமில்லை

விண்ணிடை ஏறினான்
அவன் வழிதன்னில் சென்றிட்டான்
ஆருயிர்க்காதலி காந்தியின்
அன்புமனம் அறிந்திலான்
ஆயிரம் கனவுகள் பெண்மலருக்கு
ஆண் மகன் ஆதவன்
அதை உணரவில்லைதான்
பாவிக் கொடுங்கதிர்வீசியே
பாவை அவள் மேனியை
வாட்ட வைத்தான்
மேற்குமலை உச்சியை
வேகமுடன் போய்
முத்தமிட்டான்
மலைமகளோடு
மனம் மகிழ

இருட்டுப் போர்வையை
இழுத்துப் போர்த்திக்
கொண்டான்

ஏங்கித் தவித்திட்ட
நங்கை காந்தி
தாங்கணா சோகத்தில்
தலை குனிந்தாள்
எட்டாத காதலில் சிக்கி
ஏங்கித் தவித்தமனம்
மற்றைய நாளின்
கிழக்குவிடியலுக்கு
மானசீகமாய்
காத்திருக்கும்.

***

'அட இது நல்லாருக்கே' என்று புருவம் உயர்த்தி, 'நம்மளும் எதாச்சும் இதே மாரி எஜுகை மஜுகையா எழுதணும்' என்று என் சுணுக்குப் புத்திக்குத் தோன்றி எழுதிய சுணுக்கு இதோ.

"நடு வானம்" - சுணுக்கு சுந்தர்

கால்களுக்கிடையில்
கண்ணாமூச்சியாடும்
என் நிழல்
காதோரமிறங்கிக்
கழுத்தில் நுழையும்
வியர்வையின் கசகசப்பு
கண்களிலும் பரவி
மங்கும் பார்வை

இயக்கமற்ற தெருவினூடே
நிழல் தேடியோடும் நாய்
குப்பைத் தொட்டியருகில்
எறியப்பட்ட
வாழையிலைகள்

திடீரெனச் சந்தில்
வெளிப்பட்டு
இலக்கற்று இரைந்து
ஓடும் எருமை

அதீத வெப்பத்தில்
ஆடை நனைய
மிதிவண்டியைத் தள்ளும்
ஐஸ் விற்பவன்

திண்ணையில் விசிறியுடன்
வெறித்து நோக்கும்
வயசாளிகள்

மணியொலிப்பிக்கொண்டே
நெல்மூட்டைகள் சுமந்து
சீரான தப்படியில்
கடந்து போகும்
ரெட்டை மாட்டுவண்டி

சுடுகிறது உச்சந்தலை

மொத்தமும் பூமியில்
தஞ்சமடைந்திட
புல்பூண்டற்றுக்
கட்டாந்தரையாய்
பறவைகளற்ற வானத்தில்
அனாதையாய்
உச்சியில் தொங்குகிறது
ஒற்றைச் சூரியன்
உக்கிரமாய்

***

'சரி முடிஞ்சுதுடா சாமி'ன்னு நினைச்சுக்கிட்டிருக்கும் போதே ஷைலஜா நடுவானத்தைப் படிச்சுட்டு 'கிட்டத்தட்ட இதேமாரி ஏற்கெனவே "பகற்பொழுது"ன்னு எழுதிருந்தேன்' ஒரு குண்டைத் தூக்கிப்போட்டு, 'பகற்பொழுதை'யும் தூக்கிப் போட்டார்.

"பகற்பொழுது" - ஷைலஜா

பட்டப்பகல்
பக்கத்திலெல்லாம்
பலப்பல ஓசைகள்
வாகன இரைச்சல்
காய்கறிக்காரனின்
தக்காளி கிலோஏழுரூபா
காகம் ஒன்றின்
ஓயாக்கரையல்
சக நாய்கண்டு
தெருநாய் குறைக்கும்
யார்வீட்டு தொலைக்காட்சியிலோ
மெகாசீரியலில்
மாமியாருக்கும்
மருமகளுக்கும்
வாக்குவாதம்
சின்ராசுக்கடையின்
கல்லாப்பெட்டியில்
சில்லரைவிழும்சத்தம்
செந்தில் சைக்கிள்கடையில்
வைராஜாவை
பாட்டும் ஆட்டமும்
உச்சிகாலபூஜைக்குக்
கோயிலுக்கு விரையும்
கோமளா மாமியின்
மெட்டிஒலிச்சத்ததைமீறும்
செருப்புச்சத்தம்
எதிர்வீட்டுத்தாத்தாவின்
தூக்கிவாரிப்போடும்
ஒற்றைத்தும்மல்
இத்தனை அமளிக்குநடுவே
வெய்யிலிடைத்தீவாய்
விண் நோக்கிதியானிக்கும்
மரம்மட்டும்
தரைமீது
அமைதியாய்
தன் நிழல்
பரப்பும்

***

சரி சரி. இன்னும் அர்த்த சாமங்களுக்கும் யாராச்சும் கவிதையோ சுணுக்கோ எழுதிருப்பாங்க. எல்லாரும் நல்லாருங்க!

அன்புடன்
சுந்தர்

நன்றி : மரத்தடி இணையக்குழுமம்

No comments: