'சவரம் செய்து கொள்ளல்' என்ற பழக்கம் மனிதர்களுக்கு என்றிலிருந்து உருவாயிற்று; எதற்காக சவரம் செய்து கொள்ளத் துவங்கினார்கள் என்பது நீண்ட நாட்களாகத் தலையை 'அரிக்கும்' கேள்வி. ஒருவேளை சவரம் என்ற சங்கதியே இருக்காவிட்டால் நாமெல்லாம் எப்படி இருப்போம் என்று கற்பனை செய்து பார்த்ததில் தமாஷாகவும் விபரீதமாகவும் காட்சிகள் மனக்கண்ணில் தோன்றுவதால் அதற்குள் போகாமல் நினைவலைகளுக்குள் மூழ்குகிறேன்.
கரிய உடலுடன், வெறுங்கால்களுடன், சற்றே முதுகு வளைந்து வீட்டுத் திண்ணைக்கு முன்னால் நின்று 'சாமீ. கூப்டீஹளாம்' என்று கையில் சிறு தகரப் பெட்டியோடு நின்ற அந்த நபர்தான் எனக்கு முதல் அறிமுகம். தாத்தா 'அப்படிச் சுத்தி வா' என்று சொல்லிவிட்டு கொல்லைப்பக்கத்திற்கு ஒரு பலகையை எடுத்துக்கொண்டு போய் உட்கார்ந்தார்.
'யார் தாத்தா அது?'
'அம்பட்டன் வந்திருக்கான்டா. வா. நீயும் முடி வெட்டிக்கோ' என்று அழைக்க அவருடன் சென்று அவர் முடிவெட்டிக்கொள்வதைக் கவனித்தேன். நாவிதரின் கட்டைவிரல் முந்திரிப் பருப்பு போன்று வளைந்திருந்தது. பெட்டியிலிருந்து ஒரு குட்டிக் கண்ணாடியை எடுத்து தாத்தா கையில் கொடுத்துவிட்டு, கத்திரிக்கோல் ஒன்றையும் சிறு சீப்பு ஒன்றையும் ஏந்திக்கொண்டு ரக்ய ரக்ய என்று மும்முரமாக அவர் வெட்டியதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.
தாத்தாவுக்கு உச்சந்தலையில் இட்லி அளவுக்கு வழுக்கை. ஐந்து நிமிடத்தில் வேலை முடிந்துவிட தாத்தா கண்ணாடியை பல கோணத்தில் வைத்து முகத்தைப் பார்த்துக்கொண்டார். வட்ட டப்பாவில் இருந்த சோப்புக் கட்டியில் ப்ரஷ் ஒன்றை நனைத்துத் தேய்த்து, தாத்தாவின் முகத்தில் கைவரிசையைக் காட்ட அது வெண் நுரையாய் விஸ்வரூபம் எடுத்ததை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். நாவிதர் மடக்கிய கத்தி ஒன்றை எடுத்து விரித்து கருங்கல் ஒன்றில் வீய் வீய் எனறு தீட்டிக்கொண்டு தாத்தாவின் தலையை ஒரு கோணத்தில் பிடித்துக்கொண்டு மழிக்கத் தொடங்க, தாத்தாவின் வயது குறைந்து கொண்டே வந்து, முடிக்கும்போது, பத்து வயது குறைந்திருந்தார். மிகமிக லேசான அவரின் புன்முறுவல் ரசம் போன கண்ணாடியில் தெரிந்தது. கண்ணாடியை லேசாகச் சாய்த்து சூரியனை எனக்குக் காட்ட, நான் கண் கூசி கிக்கிக் என்று சிரித்தேன.
தாத்தா கைகளை ஒவ்வொன்றாய் தூக்கிக் காட்ட நுரையெதுவும் பூசாமல் அக்குளை மழித்துக்கொண்டதைத் திகைப்புடனும் லேசான வெட்கத்துடனும் பார்த்தேன். எனக்கெல்லாம் லேசாகத் தொட்டாலே சிரிப்பு பொத்துக்கொண்டு வரும். இவர் எப்படி சிரிக்காமல் இருக்கிறார் என்று ஆச்சரியமாக இருந்தது.
"உள்ள போயி பாட்டிகிட்ட வெந்நீர் ஆச்சான்னு கேளு" என்று சொல்ல நான் வேகமாக வீட்டினுள் பாய்ந்தேன். சமையல் கட்டு இருளோவென்று இருக்கும். அப்போது வீட்டில் மின் இணைப்பு வந்திருக்கவில்லை. சமையலறையின் ஒரே ஜன்னல் வடக்கு நோக்கி இருந்ததால் அவ்வளவாக வெளிச்சம் வராது. ஆனால் கூரையின் ஏராளமான ஓட்டைகள் வழியாக சூரியன் மதிய நேரத்தில் ஒளிக் கோடுகளாக உள்ளே இறங்கும் போது நல்ல வெளிச்சமாக இருக்கும். மற்ற நேரங்களில் அரைகுறை இருட்டுக்குள்ளும் புகைக்குள்ளும் பாட்டி புழங்கிக்கொண்டிருப்பார்.
களிமண்ணால் செய்த அடுப்பு சுவரோரமாக அமைக்கப் பட்டிருக்கும். அதில் விறகுகள் செருகப்பட்டு, கிட்டத்தட்ட முழுவதுமாக கருப்படித்துப் போயிருக்கும் ஏதாவது ஒரு பாத்திரத்தில் பாட்டி சமைத்துக் கொண்டிருப்பார்.
குமுட்டி அடுப்பின் மீது வெண்கலப் பானையில் வெந்நீர் தயாராக இருந்தது. அதுதான் அதிகப் புகை கிளப்பிக்கொண்டிருந்தது. அதன் கழுத்தில் கம்பி ஜன்னல் ஒன்று இருக்கும். அதன்மேல் கரித்துண்டுகளைப் பரப்பி வைத்து விட்டு, வாசல் வழியாக எருவாட்டித் துண்டு அல்லது காகிதம் எதையாவதை நுழைத்துக் கொளுத்த வேண்டும். எருவாட்டியென்றால் லேசாகச் சீமண்ணையைத் தோய்த்துக் கொள்வது உத்தமம். கரி லேசாகக் கங்கானவுடன் ஊதுகோல் அல்லது விசிறியைக் கொண்டு காற்றடித்தால் நன்கு பற்றிக் கொண்டு பொறி பறக்கும். பாத்திரத்தை மேலே ஏற்றிவிட வேண்டியதுதான்.
குமுட்டியின் மொபைல் தன்மை பெரிய வசதி. காது வளையங்களைப் பிடித்துக்கொண்டு எளிதாக இடப்பெயர்ச்சி செய்துவிடலாம். சாம்பல் பறக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சாம்பல் பற்பொடி பற்றி இன்னொரு நாள் பேசலாம்.
வெண்கலப்பானையின் கழுத்தில் அழுக்குத் துண்டு ஒன்றைப் போட்டுத் தூக்கி வாளியில் ஊற்றி, வாளியை எடுத்துக்கொண்டு கொல்லைப்புறத்திற்குத் திரும்பிய போது அந்த விநோதக் காட்சியைக் கண்டேன். தாத்தா இப்போது எழுந்து நின்றிருந்தார். கைகளால் வேட்டியை விரித்துத் திரைபோலப் பிடித்திருந்தார். வேட்டிக்கும் தரைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் இரண்டு ஜோடிக் கால்கள் தெரிந்தன. எனக்குள் எழுந்த விபரீதக் கற்பனைகளால் திகிலாக இருந்தது. ரத்தம் சிந்தப் போகிறது. தாத்தா அலறப் போகிறார் என்று எதிர்பார்த்தேன். அப்படி எதுவும் நிகழாமல் அவர் வேட்டியைக் கட்டிக்கொண்டு மறுபடியும் உட்கார, நாவிதர் சாமான்களை தகரப்பெட்டிக்குள் அடுக்கினார். கையிலிருந்த சிறு துண்டால் தாத்தாவைச் சுற்றி வந்து வறட்வறட்டென்று அடித்து உடம்பில் ஆங்காங்கே ஒட்டியிருந்த முடியை நீக்கினார். பின்பு தரையில் சிதறிக்கிடந்த முடிக்கற்றைகளை ஒன்றாகக் கூட்டி பொட்டலத்தில் முடிந்து பையில் போட்டுக்கொண்டார். பவ்யமாக நிற்க, தாத்தா கழற்றி வைத்திருந்த சட்டைப் பையிலிருந்து காசுகளை எடுத்துக் கொடுக்க வணங்கி விடைபெற்றார்.
என்னைக் கண்டதும் அப்போதுதான் நினைவு வந்தவராக "அடடா. மறந்துட்டேனே. நீ முடி வெட்டிக்கலையா?" என்று கேட்டுக்கொண்டே நாவிதரை அழைக்க முனைய, நான் "வேணாம் தாத்தா. இன்னொரு நாளைக்கு வெட்டிக்கறேன்" என்று அவசரமாக மறுத்தேன். அப்போதுதான் கிட்டத்தட்ட ரஜினி ஸ்டைல் வந்து முடி வலது புருவத்தைத் தொட்டிருந்தது. அதற்குள் அதை இழக்க விரும்பவில்லை.
சவரம் செய்து கொண்டால் குளித்து முடிக்கும் வரை வீட்டினுள் வரக்கூடாது. எதையும் தொட்டுவிடக் கூடாது. குளிப்பதுகூட முதலில் யாராவது நான்கைந்து சொம்பு தண்ணீர் ஊற்றி முழுதும் நனைந்தபின்புதான் நாமே குளிக்கலாம்.
தாத்தா கோவணத்துடன் கிணற்றடியில் குத்துக்காலிட்டு உட்கார நான் வாளியை எடுத்துக் கிணற்றுக்குள் எறிந்துவிட்டு; விரல்களால் வளையம் செய்து அதன் வழியாக கயிறு விறுவிறுவென்று போவதைக் கவனித்தேன். காலடியில் பாம்புபோல சுருண்டிருந்த கயிறு படுவேகமாகக் காலியாகும். வாளியின் அடிப்பாகம் தண்ணீர் பரப்பைத் தொட்டதும் எழும் 'தொப்' சத்தத்திற்குக் காத்திருந்து கயிறை இறுக்கிப் பிடிக்கவேண்டும். விட்டால் கயிறோடு வாளி கிணற்றில் சமாதியாகிவிடும். அப்புறம் பாதாளக்கரண்டி கொண்டு துழாவி எடுக்க வேண்டும். அப்படி விட்டுவிடாமலிருக்க கயிற்றின் நுனியில் பெரிதாக முடிச்சு ஒன்றைப் போட்டுவைத்திருந்தார். விட்டாலும் முடிச்சு ராட்டினத்தில் சிக்கிக்கொண்டு நின்றுவிடும். என்ன அதை எம்பி எடுத்து விடுவித்து கயிறை மறுபடியும் ராட்டினத்தின் ட்ராக்கில் போடவேண்டும்.
தண்ணீரைத் தொட்ட வாளியை லேசாகச் சாய்த்தால் அது நீரை உள்வாங்கிக்கொண்டு மெதுவாக அமிழும். தண்ணீருக்குள் அதன் எடையை சுலபமாகத் தூக்கமுடிவதில் ஒரு அற்ப சந்தோஷம். நீர் பரப்பை வாளி அடைந்ததும், கால்களை கிணற்றின் கைப்பிடிச் சுவருக்கு முட்டுக் கொடுத்து விட்டு நன்றாகப் பின்னால் சாய்ந்து விய்க்விய்க் என்று ராட்டினம் கிறீச்சிடக் கயிற்றை இழுப்பேன். தட்டாமாலை சுற்றிக்கொண்டே தளும்பிச் சிதறும் நீருடன் குதித்துக்கொண்டு வெளியே வரும் வாளி. சில சமயம் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டே கயிற்றை இழுக்கையில், வாளி ராட்டினத்தில் முட்டி பாதி நீர் கிணற்றுக்குத் திரும்பிவிடும்.
தாத்தா அவரது சட்டைப்பையிலிருந்த நாணயங்களையும் காகிதங்களையும் என்னிடம் கொடுக்க அவற்றை அரைக்கால்சட்டைப் பையில் பத்திரப் படுத்திக் கொண்டு, நீரிறைத்து வாளியை என்னால் முடிந்தவரை உயர்த்திப் பிடித்து வெந்நீர் வைத்திருந்த பெரிய வாளியில் ஊற்றி விளாவினேன். பின்பு ஒரு சொம்பில் மிதவெப்பத்தில் இருந்த நீரை எடுத்து அவர் தலையில் கோடாக ஊற்ற அவர் பரபரவென்று உடலைத் தேய்த்துக்கொண்டார். அவர் வழுக்கைத் தலை இன்னும் பளபளக்கும். "போதும் நா குளிச்சுக்கறேன் போ" என்றதும் நனைந்த கால் கைகளை உதறிக்கொண்டு, கனக்கும் அரைக்கால் சட்டைப் பையுடன் வீட்டினுள் பாய்ந்தேன். அவருடைய தகரப் பெட்டியைத் திறந்து காசுகளைப் போட்டுவிட்டு தெருவுக்கு விளையாட ஓட வேண்டும். தாத்தாவின் தகரப்பெட்டியில் சலவை செய்த இரண்டு செட் வேட்டி சட்டைகள் அழகாக அடுக்கப்பட்டிருக்க, மூலைகளில் நான்கைந்து பாச்சா உருண்டைகள் வாசனையுடன் இருக்கும். அவ்வாசனை எனக்குப் பிடித்தமானது.
கடைத்தெருவில் முத்தாலம்மன் சாவடி அருகே ஒரு சலூன் இருந்தது. பச்சைக் கண்ணாடி பதிக்கப்பட்ட கதவுகளுடன் வெளியே விரித்துப்பிடித்த செய்தித்தாள்களைப் படிக்கும் சில நபர்களுடன் பரபரப்பாக இருக்கும். அதைக் கடந்து போகும்போதெல்லாம் ஓரக்கண்ணால் நோட்டம் விட்டுக்கொண்டே செல்வேன். ஒரு முறையாவது அக்கடைக்குள் சென்று நாகரிகமாக நவீன சாதனங்களுடன் முடிவெட்டிக்கொள்ள வேண்டும் என்ற பேராசை எனக்கு இருந்தது. வெளியே ஒட்டப்பட்டிருக்கும் கட்டணப் பட்டியலைப் பார்த்ததும் இந்த ஜென்மத்தில் கடைக்குச் செல்வது நடக்காது என்று நினைத்துக் கொண்டேன். உள்ளே சுற்றும் மின்விசிறியும் ட்யூப் லைட்டுகளும் என்னை ஈர்த்துக் கொண்டே இருந்தன - சதா பாடிக்கொண்டிருக்கும் ரேடியோவும்தான்.
என்னுடைய ரஜினி ஸ்டைல் ஒரு வாரத்திற்கு மேல் நீடிக்கவில்லை. வெளியூர் சென்றிருந்த அப்பா வாரயிறுதியில் வந்ததும் என்னைப் பார்த்து "என்னடா பரட்டை மாதிரி இருக்கே?" என்று கடுமையுடன் கேட்க "ஆஹா தலைவர் மாதிரி இருக்கேன்னு சொல்றாரே" என்று அற்ப சந்தோஷப் பட்டேன். அவர் முடியைக் கொத்தாகப் பிடித்துப் பார்த்துவிட்டு "என்ன ஜடை போட்டுக்கப் போறியா?" என்று கேட்டுவிட்டு என்னுடைய பதிலுக்குக் காத்திராமல் "நீயெல்லாம் படிக்கப் போறதில்லை. மாடு மேய்க்கத்தான் போறே.................." என்று ஆரம்பிக்கும் ஸ்டேண்டர்ட் டெம்ப்ளேட்டை அடுத்த ஐந்து நிமிடத்திற்குச் சொல்லி முடித்ததும் நாவிதர் வாசலில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
கொல்லைப்புறத்தில் காலை மடக்கிக்கொண்டு உட்கார்ந்ததும் நாவிதர் என் தலையை நனைத்து -கிளுகிளுவென்று குளிர்ந்தது - பிடித்து அமுக்கிக் குனிய வைத்தபோது கூட ஒன்றும் தெரியவில்லை. ஓரிரண்டு நிமிடங்களுக்கு மேல் குனிந்து உட்கார முடியாமல் பின்னங் கழுத்தில் வலித்தது. தலையை நிமிர்த்த முயற்சி செய்த போதெல்லாம் நாவிதரின் பிடி இறுகியது. தலைக்கு மேலே தொடர்ச்சியாக கிர்கக் கிர்கக் என்று கத்திரி இயங்கும் ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் பிடியை விட்டதும் நிமிர்ந்து திடீரென்று லேசானதைப் போல உணர்ந்தேன். முடியில் குளித்ததைப் போல தோள்கள், கைகால்களெல்லாம் ரோமம். அவர் தலையில் தெளித்த தண்ணீரும் காது கழுத்து வழியாக வழிந்து பெரும் அவஸ்தையாக இருந்தது. அவர் முடித்துவிட்டு எழுந்ததும் நானும் எழுந்து நின்றேன். முடியை இழந்த சாம்ஸனைப் போல உணர்ந்தேன். தலையில் கை வைத்துப் பார்த்தால் மொட்டையடிக்காத குறையாக உப்புத்தாள் காகிதத்தின் சொரசொர பரப்பைப் போல பெயருக்கு சிறிது முடி இருந்தது. நாளைக்கு பள்ளியில் நண்பர்களால் படப்போகும் அவமானத்தை நினைத்துக் கண்ணீர் எட்டிப் பார்த்தது. அப்பா "இப்பத்தான் உன்னைப் படிக்கிற பையன்னு சொல்வாங்க" என்று சொல்லிவிட்டுச் செல்ல, தாத்தா நீர் இறைத்து ஊற்றினார். முடிக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்துக் கொண்டேன். அப்பாவிடம் கேட்கவில்லை. கேட்டிருந்தால் அடுத்து நிச்சயம் மொட்டைதான்.
அதற்குப் பின்னால் தெருவில் யாராவது தகரப்பெட்டியோடு நடந்து போவதைப் பார்த்தாலே கிடைத்த சந்தில் ஒளிய ஆரம்பித்தேன்.
நான் என்ன கேட்டாலும் மறுப்பேதும் சொல்லாத ஒரே நபர் தாத்தாதான். அவரிடம் சலூனுக்குப் போகும் ஆசையைத் தெரிவித்தபோது லேசாக யோசித்துவிட்டு சரியெனத் தலையாட்டினார். அவர் கையைப் பிடித்துக் கொண்டு சென்று சலூனுக்குள் நுழைந்தபோது சிங்கத்தின் குகைக்குள் நுழைந்த உணர்வு எழுந்தது. எல்லாரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். தாத்தாவைப் பார்த்ததும் சிலர் எழுந்து நின்றார்கள். மடித்துக் கட்டின வேட்டி தழையவிடப் பட்டது. வாயில் புகைந்த பீடிகள் காணாமல் போயின. 'வாங்க சாமி' என்று கையில் கத்திரிக்கோலுடனும் சீப்புடனும் சலூன் காரர் வரவேற்க, குஷன் நாற்காலியில் ஒரு நபரின் தலை மட்டும் தெரிய வண்ணான் மூட்டை மாதிரி கழுத்துவரை மூடியிருந்தது.
அப்போதுதான் சுவரில் இருந்த போஸ்டர்களைப் பார்த்தேன். ஜெயமாலினி - பெயரைப் போலவே அபார வளைவுகளுடன் இடுப்பில் குடத்துடன் சிரிக்க, சில ஆங்கில மாதுகளின் போஸ்டர்கள். உடனே திரும்பி வீட்டுக்கு ஓடிவிட உத்தேசித்தேன். கண்ணாடியில் கவர்ச்சிக் கன்னிகள் பிரதிபலித்து எட்டுத் திக்கும் தெரிய, தலையைக் குனிந்து அமர்ந்துகொண்டேன். தாத்தா "மேலப் பாளையத்துல பழனி...." என்று தொடங்கி எதைப்பற்றியோ சத்தமாகப் பேசத்தொடங்கினார். வழக்கம் போலவே கண்டார....வல்லார...என்று சகட்டுமேனிக்கு திட்டி முடிக்கவும், நாற்காலியிலிருந்த ஆள் எழுந்துகொண்டு கண்ணாடியில் முகவாய்க்கட்டையின் பச்சையைத் தடவிப் பார்த்துக் கொள்ளவும் சரியாக இருந்தது. நான் அழைக்கப் பட்டேன். பலியாடு போல உணர்ந்தேன்.
அந்தச் சலூன் காரர் பெயர் மணி என்று தாத்தாவின் பேச்சிலிருந்து தெரிந்தது. மணி குஷன் நாற்காலியின் கைகளுக்குக் குறுக்காக ஒரு பலகையை வைத்தார். குஷனின் 'மெத்'தை அனுபவிக்க முடியாதது எனக்கு அதிருப்தியாக இருந்தது. பாதியாகக் கிழித்த வேட்டியில் என்னைக் கழுத்துவரை மூட, நான் கண்ணாடியில் தெரிந்த எனது முன், பின் பிம்பங்களை இமைக்காது பார்த்தேன். என் 'பொடனி'யை முதன்முதலாகப் பார்க்கிறேன். வீட்டிலிருக்கும் அஞ்சலட்டையைவிட சற்றுப் பெரிதான கண்ணாடியில் முகமே முக்கால் வாசிதான் தெரியும்.
மணி பாட்டிலை எடுத்து அதன் மூடியை விர்ரென்று உயர்த்தி திரும்ப அமுக்க எதிர்பாராது நீர் சர்ரென்று பீய்த்து அடித்ததைப் பார்த்து திடுக்கிட்டாலும் என் முகத்தில் சிரிப்பு பரவுவதைத் தவிர்க்க முடியவில்லை. அவர் என் தலையை நன்றாக நனைத்தார். "சம்மர் கட்டிங்கா?" என்று அவர் தாத்தாவைப் பார்த்துக் கேட்க நான் "வேணாம். கிராப்புதான்" என்று அலறினேன். அவர் அதைக் காதில் வாங்கியமாதிரியே தெரியவில்லை. ஆனால் மிக நேர்த்தியாக முடி வெட்டினார். பிறகு கத்தியைக் கொண்டு வலது கிருதாவில் ஆரம்பித்து பின் காது வழியாக இடது கிருதாவுக்கு வந்து முடித்தார். பின்னந்தலை அழகாகத் தோன்றியது. முன்னந்தலையும் அவ்வளவு மோசமில்லை. கொல்லைப்புறத்தில் சவரம் செய்துகொள்வதை விட இது எவ்வளவோ சிறந்ததாக எனக்குப் பட்டது. பின்பு மணி பாண்ட்ஸ் பவுடரை எடுத்து சகட்டுமேனிக்கு கழுத்து காது முகம் என்று பூச எனக்குக் கூச்சமாக இருந்தது. பவுடரெல்லாம் பெண்கள் சமாசாரம் என்ற எண்ணம் எனக்கு. தெருவில் பெருமையுடன் நடந்து வீட்டுக்குத் திரும்பினேன். ஆனால் குளிக்கவேண்டும் என்ற எண்ணமே பிடிக்கவில்லை. மணி நன்றாக தலை சீவி லேசாக கர்லிங் கூட வைத்து விட்டிருந்தார். அதைக் கலைக்க மனமேயில்லை. அப்படியே பள்ளிக்கு ஓடிவிடலாமா என்று யோசித்தேன்.
"கிணற்றுக்குப் போய் குளிச்சிர்றேன் தாத்தா" என்று சொல்லிவிட்டு கொடியிலிருந்த துண்டை எடுத்துக்கொண்டு செட்டியார் கிணற்றுக்குப் பறந்தோடிப் போனேன். மணி சீவியது போன்ற கர்லிங்கை என்னால் சீவ முடியவேயில்லை. தவிர குளித்ததும் பார்த்தால் தலையில் இன்னும் முடி குறைந்ததுபோன்று பிரமை.
-தொடரும்-
No comments:
Post a Comment