நினைவலைகள் *** சலூன் *** # 2
எங்கள் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு வயதானதும் குலதெய்வம் கோவிலில் வைத்து மொட்டை போடவேண்டும். காட்டழகர் கோவில்தான் எங்களுக்குக் குலதெய்வம். முன்பெல்லாம் வத்திராயிருப்பிலிருந்து அர்ஜுனா நதி வழியாக (முழுதும் மணல்தான் ஓடும்) மேற்குமலைத்தொடரின் காட்டுப்பாதையில் நடந்து செல்வோம். காட்டுயானைகள் அதிக அளவில் நடமாடியதால் காட்டுப்பாதை காணாமல் போய் விட்டது. ஆதலால் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று அங்கிருந்து செண்பகத்தோப்பு வழியாக கோவிலுக்குக் போகவேண்டும். அருமையான பயணம். எப்போது காட்டுயானைகள் வழி மறிக்குமோ என்று திகிலுடன் ஏழெட்டு கிலோமீட்டர்கள் நடக்கவேண்டும். அந்த இடத்தில் அப்படியொரு கோவிலைக் கட்டியதை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது.
ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்தே நாவிதரை அழைததுக்கொண்டு போகவேண்டும். ஆமாம். அதே தகரப்பெட்டி நாவிதர்தான். அர்ச்சகருக்கும் முதல்நாளே சொல்லிவிட்டால் சைக்கிளை எடுத்துக்கொண்டு சரியான நேரத்திற்கு வந்துவிடுவார். காட்டழகர் கோயில் நுழைவில் அட்டகாசமான ஒரு மடப்பள்ளியும் கற்குளமும் இருக்கிறது. யானை புகாமல் இருக்க ஆள் நுழையும் இடைவெளி விட்டு கல் தூண்களைப் பதித்திருக்கிறார்கள். அங்கேயே வைத்து குழந்தைக்கு மொட்டைபோட்டுவிட்டு குளத்தில் குளித்து முடித்ததும் நூற்றுச் சொச்சம் படிகளேறி அழகரைத் தரிசிக்கவேண்டும். சித்ரா பெளர்ணமியன்று ராஜபாளையத்திலிருந்து உபயதாரர்கள் வந்து படுவிமரிசையாக வழிபடுவார்கள். அக்கோவிலின் வரலாறை சன்னிதானத்துக்கு முன்னால் எழுதிவைத்திருக்கிறார்கள். அடுத்த முறை செல்ல வாய்ப்பு கிடைத்தால் குறித்துக்கொண்டு பகிர்ந்து கொள்கிறேன். நண்பர்களிடம் தகவல்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். சுற்றிலும் மலைத்தொடர்கள்; அடர்ந்த காடுகள் - I miss them all.
பள்ளி முடிக்கும் போது மீசை அரும்பியிருந்தது. கட்டை கட்டையாக மீசை வைத்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் 'நமக்கு எப்போது இந்த மாதிரி மீசை முளைக்கும்' என்று ஆதங்கமாக இருக்கும். மலையாளிகளுக்கு மட்டும் அப்படி ஒரு கட்டை மீசை எப்படித்தான் முளைக்கிறதோ தெரியவில்லை. அப்பாவின் ஷேவிங் செட்டைத் திருட்டுத்தனமாக எடுத்துக்கொண்டு போய் முயன்றதில் கன்னம் தாடையெல்லாம் ரத்த விளாறானதுதான் மிச்சம். டெட்டால் வேறு எரிஎரியென்று எரிந்தது. சூடுகண்ட பூனையாய் செல்·ப் ஷேவிங்கை நீண்டநாள் முயற்சிக்காமலிருந்தேன். இதே போன்று ஒரு முறை நானும் என் அண்ணனும் ஒருவருக்கொருவர் முடிவெட்டிவிட முயன்றதில் சீக்குப்பிடித்த பூனையின் தோல் போன்று ஆகி, கடைசில் மொட்டையடிக்க நேர்ந்தது.
கல்லூரி வாழ்க்கைக்கும் சலூன்களுக்கும் நிறைய நெருக்கமுண்டு. அதற்கு முன்பு செலவழித்ததை விட நிறைய நேரம் முடிதிருத்தகத்தில் செலவழிப்போம். தீட்டு கீட்டு எல்லாம் ஒழிந்து போய், சிற்றுண்டி விடுதிக்குச் செல்வதைப் போல முடிதிருத்தகத்திற்கும் சென்று ஹலோ சொல்லிவிட்டு சீப்பை எடுத்து தலையை வாரிக்கொண்டு நடையைக் கட்டுவது தினப்படி நடக்கும் விஷயம். முடிவெட்டுபவரை வெளியில் எங்கு பார்த்தாலும் நட்பாக நின்று விசாரித்துக் கொள்வது போன்றவையெல்லாம் பதின்வயதின் பரிணாம வளர்ச்சியின் அங்கங்கள்.
ஒரு முறை செட்டாகிவிட்டால் Brand Loyalist-ஆக ஒரே சலூனில் முடிவெட்டிக் கொள்வது - அதுவும் வருடக்கணக்கில் - வழக்கம். அதிலும் ஒருவருக்கு மேற்பட்ட சிகையலங்காரக் கலைஞர்கள் இருக்கும் கடைகளில் ஒருவரிடமே தொடர்ந்து முடிவெட்டிக் கொள்வது உண்டு. "நம் தலையில் என்ன எழுதியிருக்கிறது; என்ன எழுத வேண்டும் என்பதை அவர் அறிவார்" என்று அவர் கையில் விட்டு விடுவோம்.
மதுரையில் சலூன்கள் நிறைய உண்டு. மதுரைக்கு இடம் பெயர்ந்த பொழுதில் ஜெய்ஹிந்து புரத்தில் வசித்தோம் (பாரதியார் சாலை). நண்பர்களிடம் விசாரித்தபோது மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் இருக்கும் 'மார்ஷல் ஸலூன்'னில் 'நல்லபடியாக' முடிவெட்டுவார்கள் என்று கேள்விப் பட்டு ராஜாங்கத்துடன் சென்றேன். ராஜாங்கம் மார்ஷல் ஸலூனின் வாடிக்கையாளன். உள்ளே நுழைந்ததும் ராஜாங்கத்தைப் பார்த்து 'வாங்க பங்காளி' என்ற வரவேற்க 'என் ·ப்ரெண்டு' என்று என்னை அறிமுகப்படுத்திவைக்க 'வாங்க பாஸ்' என்று என்னையும் வரவேற்றனர். நான்கு தொழிலாளிகள். நால்வரும் விதவிதமான சிகை அலங்காரத்துடன் இருந்தனர். அது தவிர சுவரில் ஒரு போஸ்டரில் ஏகப்பட்ட சிகையலங்காரங்களுடன் ஆண் மாடல்கள். நான் முதலில் ஸ்டைலைப் பார்க்காமல் நம் மூஞ்சி போல யாராவது இருக்கிறார்களா? என்று பார்த்தேன். யாருமில்லை.
அப்போது சத்யா ஓடிக்கொண்டிருந்தது (1988). சத்யாவுக்காக முடியை ஒட்ட வெட்டிக்கொண்டு கையில் வளையம் ஒன்றையும் போட்டுக்கொண்டாகிவிட்டது. கல்லூரியில் எதிர் கோஷ்டி மாணவர்களைக் கடக்க நேரும்போதெல்லாம் வளையத்தை முழங்கை வரை ஏற்றி முறுக்கிக் கொள்வதுண்டு. அதை கழற்றி உபயோகப்படுத்தும் சந்தர்ப்பம் ஏற்படவேயில்லை. ஏற்பட்டிருந்தாலும் வளையத்தைக் கழற்றியிருப்பேனா என்பது சந்தேகம்தான். சத்யா ஸ்டைல் வசதியாகவும் இருந்தது. முடி வளர நாளாகுமென்பதால் மாதமொரு முறை மார்ஷலுக்குச் செல்லவேண்டியிருக்கவில்லை. தேவர் மகன் வந்தபோதும் இதே கதைதான். நிறைய வளர்க்க வேண்டியிருந்ததால் (பங்க்) அடிக்கடி முடிவெட்ட வேண்டியிருக்கவில்லை.
பின்பு மகாநதி வந்ததும் (கைதிகளும் காவல்காரர்களும் குடுமிப்பிடியைத் தவிர்ப்பதற்காக ஒரேமாதிரி ஒட்ட வெட்டிக்கொள்கிறார்களோ?) "பாஸ். மகாநதி ஸ்டைல்ல 'கரைச்சுருங்க'" என்று கரைத்து, நிறைய வருடங்கள் அதே ஸ்டைலைத் தக்க வைத்துக்கொண்டேன். டிவிஎஸ் நகருக்குக் குடிபெயர்ந்ததும் அங்கிருந்து மே.பெ.மே.வீதிக்குப் போய்வர சோம்பல்பட்டு பழங்காநத்தத்தில் இருந்த சேகர் சலூனுக்குப் போக ஆரம்பித்தேன் தண்டல்காரன் பட்டித் தெருவுக்கு முக்கில் இருக்கும் டீக்கடை அருகில் இருந்தது சேகர் சலூன். இரண்டு கடைகளுக்கும் பொதுவாக நிழலைப் பொருத்து நாய் ஒன்று படுத்துக்கிடக்கும். சலூன் கடை முன்பு அது படுத்திருக்கும்போது வருவோரையும் போவோரையும் வேறு அது அண்ணாந்து பார்த்துக்கொள்ளும். அக்காட்சி சற்று விபரீத சிந்தனைகளைத் தோற்றுவிக்கக் கூடியதுதான். பொதுவாகப் போட்டு வைத்திருக்கும் பெஞ்ச்சில் சேகரின் வாடிக்கையாளர்கள் டீ குடித்தபடி அமர்ந்திருப்பார்கள்.
யாரைப் பகைத்துக்கொண்டாலும் முடிவெட்டுபவரை மட்டும் பகைத்துக் கொள்ளவே கூடாது. கத்தியும் கத்திரிக்கோலையும் கையில் வைத்திருக்கும்போது, நாற்காலியில் புளிமூட்டை மாதிரி கிட்டத்தட்ட கட்டப்பட்டு அமர்ந்திருக்கும்போது அரசியல் பேசாதிருப்பது உசிதம். அவர் ரஜினி ரசிகராக இருக்கும் பட்சத்தில் வேறு நடிகரைப் பற்றிப் பாராட்டியோ, ரஜினியை மட்டம்தட்டியோ பேசாமலிருப்பது லைப்· கியாரண்ட்டி. விகடனில் காதுகளுக்காக வெளியில் காத்திருக்கும் நாயைப் பத்தி எத்தனை ஜோக்குகள் படித்திருப்பேன்?
சேகரின் தொழில் பக்தி அபாரமானது. குறிப்பிட்ட இடைவெளியில் டீக்கடைப் பையன் கொண்டு வந்து வைக்கும் டீயை ஆறிப்போகும் வரை குடிக்காமல் வேலையில் ஆழ்ந்திருப்பார். "டீ சாப்பிட்றீங்களா?" என்று ஒவ்வொரு தடவையும் தவறாது விசாரிப்பார். இறைந்திருக்கும் முடித்துகள்களுக்கு நடுவில் டீ சாப்பிட ஒரு மாதிரியாக இருந்ததால் நாசூக்காக மறுத்துவிடுவேன். சேகர் முடிவெட்டுவதைக் கூர்ந்து கவனிக்கைகையில் கத்திரியின் ஒவ்வொரு வெட்டுக்கும் கடைவாய்ப் பல்லைக் கடித்துக் கொள்வது தெரிந்தது. கேட்டதில் "ஆமாண்ணே... சிலசமயம் மூச்சையும் பிடிச்சுக்கிடுவேன்" என்றார்.
முடிவெட்டி முடித்ததும், பின்னால் சுவரில் பெரிய கண்ணாடி பதித்திருந்தாலும், சேகர் ஒரு கண்ணாடியை தலைக்குப் பின் வைத்து "சரியா இருக்கா?" என்று சைகையில் கேட்க நானும் "நல்லா இருக்கு" என்று தலையாட்டுவேன். சேகரின் முகத்தில் திருப்தி பரவும். "ஒங்க முடி கம்பி மாரி இருக்குண்ணே. ரெட்டச் சுழி வேற. படிய மாட்டேங்கு" என்பார்.
சேகர் கிருதா வைக்காமல் காதின் மேல் மட்டத்திற்கு நேராக வெட்டிவிடுவார் - "இதாண்ணே உங்களுக்கு நல்லாருக்கு". கிருதா இல்லாமல் இருந்தது ஏதோ குண்டலத்தை இழந்த மாதிரி முதலில் இருந்தாலும் பின்பு பழகிவிட்டது. அவ்வப்போது பழுப்பு சாயமடித்துக்கொள்வது (ப்ளீச்சிங்) போன்று நிறைய சாகசங்கள் செய்திருக்கிறேன் - "இது என்னடா பூனை மயிர் மாதிரி கலர்?" - அப்பா).
சென்னை எனக்குக் கொஞ்சம்கூட பரிச்சயமில்லாத ஊர். ஒரு முறை தி.நகரோ பாண்டி பஜாரோ வரவேண்டியிருந்தது. அங்கு ஒரு குளிரூட்டப்பட்ட சலூன் இருந்தது. முடிவெட்ட 75 ரூபாயோ என்னவோ எழுதிவைத்திருந்தார்கள். அம்மாடி என்று சொல்லிக்கொண்டு பேசாமல் நடையைக் கட்டினேன். சேகர் அதிகப்பட்சம் இருபது ரூபாய்தான் வாங்குவார்.
பஞ்சதந்திரம் வந்தபோது குறுந்தாடிக்காக மறுபடியும் கிருதா வைத்துக்கொண்டேன். குறுந்தாடிக்கும் பொட்டிதட்டும் தொழிலுக்கும் போன ஜென்மத்தில் தொடர்பு இருந்திருக்கும் போல. நிறைய பேர் குறுந்தாடி வைத்திருக்கிறார்கள். எனக்கும் இன்று வரை குறுந்தாடி தொடர்கிறது. என் தலையும் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்திருக்கிறது.
இப்போதைக்கு ஸ்டைலை மாற்றும் உத்தேசம் இல்லாவிட்டாலும் ஆங்காங்கு எட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்ட நரை முடியைப் பார்க்கும்போது பேசும்படம் கமல் ஸ்டைலுக்கு மாறிவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும் லொடுக்குப்பாண்டி கருணாஸ்ஸின் "குருதிப்புனல் ஸ்டைல்" சலூன் காட்சியைப் பார்த்ததிலிருந்து இப்போதெல்லாம் 'அந்த ஸ்டைல் இந்த ஸ்டைல்' என்று எந்த ஸ்டைலையும் குறிப்பிடுவதில்லை. "ரொம்ப குறைச்சுடாதீங்க. ரொம்ப முடியும் வேண்டாம். மையமா இருக்கட்டும்" என்று சொல்வதோடு சரி. அதை என்னத்தையாவது புரிந்துகொண்டு முடிவெட்டுவார்கள்.
முன்பு போல மிகவும் மெனக்கெடாமல் அவ்வை சண்முகியில் நாகேஷ் சொல்லும் "இப்ப என்ன?...உசிரா போச்சு? ம-ரு தானே" என்பதை நினைத்துக்கொண்டு தேமேயென்று தலையைக் காட்டிவிட்டு வந்துவிடுவேன். "திரும்ப வளராது என்று மட்டும் இருந்தால் யாராவது மொட்டை போட்டுக்கொள்வார்களா?" என்று எங்கோ யாரோ எழுதியதைப் படித்த ஞாபகம். ஆனால் இங்கு (பாஸ்டன்) முடிவெட்டுவதற்கான கூலியைப் பார்க்கும்போது பேசாமல் அடர்த்தியாகத் தாடி வளர்த்து, போனி டெய்ல் ஒன்றைப் போட்டுக் கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
சில பொட்டிதட்டும் ஆசாமிகள்கூட அம்மாதிரி வளர்த்துக்கொண்டு ஸ்டைலாகத்தான் இருக்கிறார்கள்.
***
No comments:
Post a Comment