Tuesday, March 22, 2005

*** FIRST BLOOD ***

*** FIRST BLOOD ***

Image hosted by TinyPic.com

‘டேய்.. நட்ராஜ் தியேட்டர்ல ·பஸ்ட் பிளட் போட்ருக்கான் செகண்ட் ஷோ போலாமா?’ என்று ராஜாங்கம் கேட்டபோது துள்ளிக் குதித்து சரியென்று சொன்னேன். காலையில் கல்லூரி செல்லும் போது பஸ் ஸ்டாப்பில் ஸ்டாலோனின் முறுக்கேறிய புஜங்களுடன், தலையில் சின்ன ரிப்பன் கட்டி, தோளின் குறுக்காக தோட்டா பெல்ட்டை அணிந்து, கையில் ஒரு மெகா சைஸ் துப்பாக்கியைப் பிடித்திருக்கும் போஸ்ட்டரைப் பார்த்ததிலிருந்து, படத்தை பார்த்துவிட துடித்துக் கொண்டிருந்தேன்.

‘மொத நாள். கூட்டமா இருக்கும்டா.’ என்ற போது ‘அதெல்லாம் பரவால்ல வாங்கிரலாம். ஒம்பதரைக்குஷோ. நீ எட்ரைக்கு கவுண்ட்டர் முன்னாடி வந்துடு’ என்றான்.

எட்டரைக்கு தியேட்டருக்குப் போனபோது, தியேட்டர் காம்பவுண்டு முன்பாக பேய்க் கூட்டமாக இருந்தது. குறுகலான கம்பித் தடுப்புக்குள் புகுந்து சற்று தூரம் போனால் தான் டிக்கெட் கொடுக்குமிடத்தை அடைய முடியும். ஆனால் வாசலே தெரியாதவாறு கூட்டம் அடைத்திருந்தது. மேலும் செல்வதற்கு முன் ராஜாங்கத்தைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம்.

மதுரையில் டி.வி.எஸ்.ஸில் பிளஸ் ஒன் சேர்ந்த போது ராஜாங்கம் அறிமுகமானான். ஒடிசலான பையன்கள் மத்தியில் பல வருடங்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து உடலை கும்மென்று வைத்திருந்தான். அந்த வயதிற்குப் பொருந்தாத முரட்டு உடல் வாகு. நாங்கள் அனைவரும் அடிக்கடி அவன் சட்டையின் அரைக் கையை தோள்வரை சுருட்டி விட்டு, புஜத்தை முறுக்கிக் காட்டச் சொல்வோம். பந்து போல் விம்மியிருப்பதைப் பார்த்து வியப்பில் எங்கள் விழிகள் விரியும். எங்களுக்கு அவன் ஸாம்ஸன் போல. அவன் உடல் ‘V’ ஷேப்பிலிருக்க, நாங்களனைவரும் ‘A’ ஷேப்பிலிருந்தோம்..

சுப்புணி, 'காதன்' என்கிற பிரபாகரன் என்று பள்ளித் தோழர்கள். நான், சுப்புணி, ராஜாங்கம் மூவரும் பள்ளியிலிருந்து கல்லூரி முடித்து வேலைக்குச் சேர்ந்தது வரை பத்து வருட காலம் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். அப்புறம் வாழ்க்கையோட்டத்தில் பல திசைகளில் பிரிந்தோம்.

தியேட்டர் வாசலில் மொய்த்திருந்த மனிதத் தலைகளிலிருந்து, ராஜாங்கத்தின் தலை எட்டிப் பார்த்து, ‘இங்க இருக்கேன் வாடா’ என்றான். அவனை எப்படி அடைவது என்று யோசித்துக் கொண்டிருக்கையில் கையை நீட்டி ‘பிடி’ என்றான். பிடித்த அடுத்த வினாடியில் இழுக்கப் பட்டு சில உடல்களை ஊடுருவி அவனருகில் நின்றுகொண்டிருந்தேன்.

ஒரு வரிசை நிற்பதற்கான குறுகிய இடத்தில் நான்கு வரிசைகளாக அடைத்து நின்றிருந்தனர். நான் ராஜாங்கத்தின் பரந்த முதுகுக்குப் பின்னால் ஒட்டி நின்று கொள்ள கூட்டம் நெருக்கியடித்தது. இம்மாதிரி நேரங்களில் ரவுடிகளின் ராஜ்ஜியம் தலைவிரித்து ஆடும். சில முரடர்கள் அரை ட்ரவுசருக்கு மேல் மடித்துக் கட்டிய லுங்கியுடனும் பீடியுடனும் வரிசையில் நிற்பவர்களின் தோள்கள் மீது சாவதானமாக நடந்து சென்று டிக்கெட் வாங்கிச் செல்வார்கள். சுற்றிலும் ‘டேய்..டேய்’ என்று எதிர்ப்புக் குரல்களும், காதைக் கூசச் செய்யும் வசவு மொழிகளும் எழுந்தாலும், தோள் மீது நடப்பவர்களை யாரும் தடுக்க மாட்டார்கள். சில சமயம் சில தைரியசாலிகள் மேலே நடப்பவர்களின் கால்களைப் பிடித்து இழுத்து விட்டுச் சரியச் செய்வார்கள். ஆனால் அத்தகைய செய்கைகள் கைகலப்பில்தான் பெரும்பாலும் முடியும். கவுண்ட்டரிலும் ஒரு கை புகக் கூடிய அளவே இருக்கும் சிறிய எலிப் பொந்து போன்ற ஓட்டையில் ஒரே சமயத்தில் நான்கு கைகள் திணிக்கப் பட்டு டிக்கெட் வாங்கச் சண்டை நடக்கும்.

நின்றிருந்த என் தோள் மீது கால்கள் பதிய ஒரு முரடன் பக்கவாட்டுத் தடுப்புக்கம்பிகளைப் பிடித்துக் கொண்டு முன்னேறிச் சென்றான். ராஜாங்கத்தின் மீது நடக்காவிட்டாலும் அவன் வரிசையில் முந்திச் சென்றதே ராஜாங்கத்தைக் கோபம் கொள்ளச் செய்யப் போதுமானதாக இருந்தது. ஆனால் அவன் சுதாரிப்பதற்குள் முரடன் கவுண்ட்டரை அடைந்து டிக்கெட் வாங்கிச் சென்று விட்டான். ராஜாங்கம் பக்க வாட்டுக்கம்பி வரிசைகளில் இரண்டாவது வரிசை மீது ஏறி நின்று கொண்டு கைகளால் மேல் கம்பி வரிசையைப் பிடித்துக் கொண்டு வேறு யாரும் ஏறிச் செல்லாதபடி வழியை அடைத்துக் கொண்டான். நாங்கள் கவுண்ட்டரிலிருந்து பத்தாவது ஆளாக நின்றிருந்தோம். மற்றும் சிலர் டிக்கெட் வாங்கிச் செல்ல, வரிசையிலிருந்து முன்னேற வேண்டி ராஜாங்கம் இறங்கி நின்றது தான் தாமதம். என் தலை மேல் நிழல் படிய அடுத்த வினாடி ராஜாங்கத்தின் தோள்களில் இரண்டு கால்கள் நின்றன. நான் அண்ணாந்து பார்த்த போது இன்னொரு முரடன் மடித்து கட்டின கைலியுடன் பக்கவாட்டுக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு ராஜாங்கத்தின் மேல் நின்றிருந்தான். நான் அடுத்து நிகழப் போவதை நினைத்துக் கலவரமடைந்தேன். கூட்டத்தின் காரணமாக அசையமுடியாமல் நின்றிருந்த ராஜாங்கம் தன் கையை முரடனின் கால்களுக்கிடையில் செலுத்தி அவன் மர்மப் பிரதேசத்தில் ஒரு குத்து விட, முரடன் அலறி எனக்குப் பின்னால் இருந்த ஆட்களின் தலைகள் மேல் சரிந்தான். அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. படிப்பறிவில்லாத நாகரீகமற்ற முரடனாயிற்றே. பின்னால் இருந்தவர்களின் தலைகள் மீது எழுந்து நின்று ராஜாங்கத்தின் பெற்றோர்களைப் பழிக்கும் கெட்ட வார்த்தை ஒன்றை பிரயோகித்து முன்னேற முயல, ராஜாங்கம் ரெளத்திரமானான். அப்படியே என்னை நோக்கித் திரும்பி, கம்பிகளைப் பிடித்து எழுந்து என் தலை மீது வலுவான கால்களைச் செலுத்திமுரடனைக் கடுமையாக உதைத்தான். ராஜாங்கம் படித்த நாகரீகமான ஆனால் முரடனுக்கு முரடன்.

அடிவாங்கியவன், புகைபிடித்தல் மற்றும் இன்ன கெட்ட பழக்கங்களால் உடல் வலுவிழந்து இருந்தான். அவனால் சில நிமிடங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. மேலும் அசெளகரியமான இடத்தில் இருந்ததால் அவனால் எதிர்க்க முடியவில்லை. ராஜாங்கம் தன் நகங்களால் அவன் முகத்தைப் பிடித்து கன்னங்களில் ஆழமாகக் கோடிட்டான். என் தோளில் சில துளிகள் ரத்தம் சிந்தின. என் பின்னே எரிச்சலுடன் நின்றிருந்தவர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டுமுரடனை இன்னும் பின்னே தூக்கி எறிய, நாங்கள் முன்னே தள்ளப்பட்டு கவுண்ட்டரை அடைந்து டிக்கெட் வாங்கிக் கொண்டு நெரிசலில் இருந்து விடுபட்டு வந்தோம்.

படம் ஆரம்பிக்க இன்னும் நேரம் இருந்ததால் தியேட்டரின் உள்ளே செல்லாமல் காம்பவுண்டுக்குள்ளே திறந்த வெளியில் காற்று வாங்கிக் கொண்டிருக்க, ராஜாங்கம் முகம் கழுவச் சென்றான். திடீரென்று என் தோளில் கனமான கை ஒன்று விழத் திரும்பிப் பார்த்தால் அடி வாங்கிய அந்த முரடன் கண்களில் வெறியுடன். என் குலை நடுங்கியது. ‘எங்கடா.. அவன்...ங்.....’ என்று கேட்டதும் நான் சமாதான தொனியில் ‘அண்ணே விடுங்கண்ணே.. சண்டை வேணாம்..’ என்று சொல்லி முடிக்கும் முன்னே, என் கழுத்தைப்பிடித்து ‘டேய்... ஐய்யா...எங்க அவன்? இன்னிக்கு அவன வெட்டாம விட்றதில்ல...’ என்று என் முகத்தருகே உறுமினான். அவன் கன்னங்களில் ஆழமான ரத்தக் கோடுகள். சில வினாடிகளில் ராஜாங்கம் திரும்பி வந்து என்னையும் என் நிலையையும் பார்த்ததும் அவன் மீது பாய்ந்தான்.

கால்களில் இருந்த செருப்புக்கள் கைகளுக்கு மாறி இருவரும் அடித்துக்கொண்டனர். முரடனுக்கு புத்தியில்லாமல் மேலும் அடி வாங்கினான். அவன் பற்களிலிருந்து ரத்தம் வந்ததைப் பார்த்தேன். அவன் அடி தாங்காமல் தியேட்டரை விட்டு ஓடினான். ‘திரும்ப வர்றேண்டா.... மவனே நீங்க தியேட்டர விட்டு திரும்ப மாட்டீங்க’ என்று சத்தம் போட்டு விட்டு ஓடினான்.

படம் துவங்க நீண்ட மணி ஒலித்ததும் நாங்கள் தியேட்டருக்குள் ஐக்கியமானோம். ராஜாங்கம் சூடாக மூச்சு விட்டு சண்டைக் காளை மாதிரி இருந்தான். ‘டேய்.. வீண் சண்டை வேண்டாம்டா.. வா வீட்டுக்குப் போகலாம். அப்றமா இன்னொரு நாளைக்கு படம் பாத்துக்கலாம்டா’ என்று சொல்லிப் பார்த்தேன். ம்ஹ{ம்.. அவன் மசியவில்லை. ‘பயப்படாதேடா.. இன்னிக்கு அவனா நானா பாத்துரலாம். தெரு நாயி.. முட்டாக் #&*... அவனுக்கே இம்புட்டு திமிர்னா.. எனக்கு எம்புட்டு இருக்கும்?’ என்றான். நியாயம்தான் என்று தோன்றியது.

படம் வேறு ரத்தக் களறியாக இருக்க, எனக்கே காட்சிகளைப் பார்க்கும் போது வீரம் வந்தது போல் தோன்றியது. ராஜாங்கத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அவன் ஸ்டாலோனைப் பார்த்து இன்னும் முறுக்கேறியிருந்தான். இடைவேளையில் நான் வெளியே லேசாக எட்டிப் பார்த்த போது வெளியில் சுவரில் பதிக்கப் பட்டிருந்த பெரிய முட்டை வடிவக் கண்ணாடி முன்பாக அந்த முரடன் நின்று கொண்டு கன்னத்திலிருந்த கோடுகளைத் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் கொலை வெறி. நான் உள்ளே புகுந்து ராஜாங்கத்திடம் வெளியே வரவேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டு சம்மதிக்கச் செய்தேன். படம் முடிந்ததும் கூட்டத்தில் கரைந்து வெளியேறி வீட்டுக்குச் சென்றோம்.

மறுநாள் யெஸ்டி மோட்டார் பைக் மெக்கானிக் கடை வைத்திருந்த ராஜாங்கத்தின் முருகேசுச் சித்தப்பாவைப் பார்த்த போது ‘என்ன சுந்தராசு.. நேத்திக்கு பயங்கரமா சண்டை போட்டியாம்ல’ என்றார் குரலில் கிண்டலுடனும், கேலியுடனுமாக. ராஜாங்கம் நடந்ததைச் சொல்லி நான் கையாலாகாமல் வேடிக்கை பார்த்ததையும் சொல்லியிருக்க வேண்டும். எனக்கு வெட்கமாகவும் அவமானமாகவும் இருந்தது. ‘இல்ல சித்தப்பா. அவன்தான் அந்த ஆள போட்டு பின்னிட்டான்’ என்றேன். ‘நீ ஒரு அடியாவது அடிச்சிருக்க வேணாமாய்யா? ஒன் பிரண்டுதானே?’ என்றார். நான் பதில் சொல்ல முடியாமல் அசட்டுச் சிரிப்பை உதிர்த்தேன். வாழ்க்கையில் சண்டையே போட்டதில்லை என்றும் அதைப் பற்றி நினைத்ததும் கூட இல்லை என்றும் அவரிடம் சொல்ல முடியவில்லை. சுத்த சைவத்தில் சண்டை சச்சரவில்லாது படிப்பு மட்டுமே வாழ்க்கையில் ஓரே குறிக்கோளாகக் கொண்டு வளர்ந்ததால் சமாதானத்தை மட்டும் நம்புவதாகச் சொல்ல முடியவில்லை.. அவர்கள் அப்படியில்லை. கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்ந்தவர்கள். உழைத்து வலுவேறிய உடலுடையவர்கள். எதையும் எதிர் கொள்ளும் மனத் துணிவும் உடல் துணிவும் உண்டு.

முருகேசு சித்தப்பாவை இப்போது பார்த்தாலும் ‘என்ன சுந்தராசு.. நட்ராஜ் தியேட்டருக்குப் போவமா?’ என்று கேட்டுவிட்டு கண்ணடிப்பார்.

***
சுந்தர்.
அக்டோபர் 17, 2002
நன்றி : மரத்தடி.காம்

Monday, March 21, 2005

:: வண்டியிழுக்கும் நல்ல மாடு ::

:: வண்டியிழுக்கும் நல்ல மாடு ::

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீரவிளையாட்டாக இருந்த காலம் போய், இப்போது நடக்கும் ஜல்லிக்கட்டு கண்றாவிகள் சகிக்கவில்லை. பட்டியிலிருந்து திறந்து விடப்படும் இன்றோ நாளையோ என்றிருக்கும் சோப்ளாங்கி மாட்டின் மேல் பத்துப் பேர் பாய்ந்து அதை வீழ்த்தி கொம்பில் கட்டியிருக்கும் குங்குமக் கலர் துண்டை உருவிக்கொண்டு விடுவிப்பார்கள். இல்லையென்றால் கன்றுக்குட்டிகளின் மேல் பாய்வார்கள்.

Image hosted by TinyPic.com

ஆனாலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்றும் பிரபலம். ஜல்லிக்கட்டு நடக்கும் நாள் உள்ளூர் ஆஸ்பத்திரியும் மதுரை ராஜாஜி மருத்துவமனையும் சுறுசுறுப்பாக இருக்கும். உருப்பெருக்கிக் கண்ணாடியின் மூலம் சேமியா உப்புமாவைப் பார்ப்பது போல், கை நிறைய சரிந்த குடலைப் பிடித்துக்கொண்டு ஆட்கள் வந்து சேருவார்கள். புறமுதுகிட்ட சிலர் முதுகில் ஆழமாக குத்து வாங்கியிருப்பார்கள். எனக்குத் தெரிந்து ஒருவர் கொம்பை மிகவும் உற்றுப் பார்க்க ஆசைப்பட்டு கண்ணுக்குள்ளேயே விட்டுக்கொண்டு மாட்டின் மீது ஆதாரமில்லாமல் தொங்கினார்.

புழுதி பறக்க கருமையும் வெண்மையும் கலந்த புஷ்டியான மாடுகள் மீது இளைஞர்கள் தொங்குவதையும், வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தில் பாயும் மாடுகளையும் இன்று வரை தினமலரில் முதல் பக்கத்தில் வண்ணப் புகைப் படங்களில் பார்க்கலாம். சிவப்பு வண்ணம் அதிகம் இருக்கும் படங்கள்.

அவ்வப்போது ஏதாவது ஒரு திரைப்படத்தில் இதைக்காட்டி இப்படியொரு வீர விளையாட்டு இருக்கிறது என்பதை தமிழர்கூறும் நல்லுலகிற்கு நினைவுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும் போல இருக்கிறது.

தமிழ்த் திரைப்படங்களில்தான், ஜமீன்தார் தன் மாட்டை மைதானத்தில் விட்டு 'பதினெட்டு பட்டியிலும் ஒரு ஆம்பளை கூட கிடையாதா?' என்று சவால்விட, மாட்டின் வால் அளவிற்கு உடல்வாகு பெற்றிருக்கும் நாயகன், பாடியோ அல்லது க்ளோசப்பில் கொம்புகளைப் பிடித்தோ அந்த மாட்டை மண்ணைக் கவ்வச் செய்ய, ஜமீன்தார் விரோதத்துடன் அவனை முறைத்துக்கொண்டிருக்க, இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் ஜமீன்தாரின் ஒரே பெண்ணான நாயகிக்கு கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாமல் தந்தையை அவமானப் படுத்திய நாயகன்மீது காதல் மலரும். கருமம்!

ஜல்லிக்கட்டு நடத்த மைதானம் கிடையாததால் வத்திராயிருப்பில் ஊர்க்கோடியில் மாடுகளை அலங்கரித்து விட்டுவிடுவார்கள். அடக்குபவர்கள் அடக்கிக்கொள்ளலாம். என்னைப் போன்ற சிறுவர்கள் கடுமையாக பயமுறுத்தப்பட்டிருந்ததால், சிறுநீரை அடக்கிக்கொண்டு வீட்டுத் திண்ணையில் முடங்கியிருப்போம். அவ்வப்போது சில மாடுகள் சாவதானமாக தெருவைக் கடந்து போகும். தாத்தா ஒருமுறை அப்பாவின் எச்சரிக்கையைப் புறக்கணித்து தெருவில் இறங்கி ஓரமாக நடந்துசெல்லும்போது பின்புறம் வந்த மாடு அவர் முதுகில் குத்தி எறிந்ததில் பக்கத்திலிருந்த முள்செடியில் விழுந்து, பிறகு ஒரு மாதம் படுக்கையில் இருந்தார். தாத்தாவின் அப்பா (முத்தாத்தா) ஊரில் மிகவும் செல்வாக்கோடு இருந்தாராம். செல்வந்தர். அவர் சேர்த்த சொத்தையெல்லாம் தாத்தாதான் ஊதாரியாக (என்னைப் பொறுத்தவரை தயாள குணத்துடன்) கரைத்தார் என்று ஊரில் பேசிக்கொண்டார்கள். நான் பிறந்து வளர்ந்த கூரைவீடு, முத்தாத்தா காலத்தில் எங்கள் மாட்டுத்தொழுவமாக இருந்தது என்று தாத்தாவே சொல்லியிருக்கிறார். மண்தரையுடன் மின்வசதியின்றி கீற்றுக்கொட்டகை வீடு அது. சாண நீரில் மெழுகப்பட்டு படுசுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் எப்போதும் இருக்கும்.

தாத்தா ஒரு வளர்ந்த கன்றை வாங்கி வளர்த்தார். என்னையும் அதனையும் குளிப்பாட்ட குளத்தங்கரைக்கு அழைத்துச் செல்வார். என் கையில் கன்றின் கயிறைக் கொடுத்து 'இழுக்காமல் பிடித்துக்கொண்டே வா' என்று பணித்து பின்தொடர்ந்து நடப்பார். நான் கன்று எப்போது துள்ளிக்குதித்து ஓடப்போகிறது என்று பயத்துடன் வேகமாக நடப்பேன். குளத்தில் இடுப்பளவுதான் ஆழம். வரமறுக்கும் கன்றை இழுத்து, வைக்கோல் கொத்து ஒன்றால் நன்கு தேய்த்துக் குளிப்பாட்டுவார். நானும் என் பங்குக்கு நீரூற்றித் தேய்ப்பேன். ஒரு நாள் எதுவும் சாப்பிடாமல் மந்தமாக இருக்க, மேயப் போன இடத்தில் விஷச் செடிகளைத் தின்று விட்டது என்று தாத்தா சொன்னார். விளக்கெண்ணையில் நனைத்த முழு வாழைப் பழத்தை முழுங்கச்செய்து என்னென்னவோ வைத்தியம் செய்தும் பயனில்லாமல் மறுநாள் இறந்து போனது. அதன்பின் மாடு வளர்க்கவில்லை.

எருமை மாடுகள் ஒரு ரகம். இவற்றைவிட சோம்பேறியான பிராணி இருக்கிறதா என்று தெரியவில்லை. தெருவில் குறுக்காக நின்றுகொண்டு சண்டித்தனம் செய்யும் எருமைகளை அசைப்பதற்கு ஒரு பெரும்பாறையை அசைத்துவிடலாம். எருமைப் பால் பசும்பாலைவிட அடர்த்தி என்பதால், பால்காரர்களின் விருப்பம் அதுவே - நிறைய தண்ணீர் கலக்கலாமே! :) சும்மா ஒரு தமாஷ¤க்குத்தான்.

அனைத்து மாடுகளும் பால் டிப்போவிற்கு கொண்டுசெல்லப்பட்டு கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் பால்கறந்து விற்பதால் தண்ணீர் கலக்கும் பேச்சிற்கே இடமில்லை. கூட்டுறவுச் சங்க மாட்டுத் தொழுவத்தில் வரிசையாக அனைத்து மாடுகளும் கட்டப்பட்டு, கன்றுகள் நக்கிக்கொடுத்து குடிக்க ஆரம்பித்தவுடன் இழுத்து ஓரம்கட்டப்பட்டு (பரிதாபம்!), கறவை துவங்கிவிடும். சில துர்ப்பாக்கியசாலிப் பசுக்களுக்கு வைக்கோல் அடைத்த பொய்க்கன்றுகள்! ஏமாற்றப்படும் நிஜக்கன்றுகளைவிட, வைக்கோல் கன்றுகள் பரவாயில்லை என்று சில சமயம் தோன்றும்.

எருமைப் பால் குடித்தால் புத்தி மந்தமாகிவிடும் என்று ஒரு நம்பிக்கை நிலவியதால், பசும்பால் தான் எப்போதும். வத்திராயிருப்பு மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பால் கிருஷ்ணன் கோயில் நிறுத்தத்திற்குக் பெரிய கேன்களில் கொண்டுபோகப் பட்டு, ராஜபாளையத்திலிருந்து, ஸ்ரீவில்லிப்புத்தூர் வழியாக மதுரைக்கு வரும் ஜெயவிலாஸ் பேருந்துகளில் ஏற்றப்படும்.

நுரைபொங்க கறந்த பாலை அப்படியே பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டுவந்து காய்ச்சிக் குடித்த காலம் போய், இப்போது நாடு, இனம், வெள்ளை, கறுப்பு, பசு, எருமை வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாமல் அல் ரவாபி, அல் மராய் கேன்களில் வரும் பாலை வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். நம்மூரில் ஓட்டை ஆவின் பால் பாக்கெட்டுகள்! அல்லது பூத்தில் குளிரூட்டப்பட்ட பால் குழாயைத் திறந்தால் வருகிறது.

கோயில் மாடுகள் ஒரு வகை. கோயில் பூசாரியைவிட புஷ்டியாகவே இருக்கும். கேட்கவே ஆளிருக்காது. தெருவில் எப்போதாவது நடைபோட்டுச் செல்லும்போது தெருவே அது போகும்வரை ஸ்தம்பித்திருக்கும். சில தைரியலட்சுமிகள் மட்டும் அதன் இடுப்பைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்ள, அது தலையை ஆட்டிக்கொள்ளும்.

வண்டி மாடுகள் இன்னொரு ரகம். வெள்ளை வெளேரென்று குதிரையின் கம்பீரத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இருக்கும். நல்ல உயரம். கூர் கொம்புகள். ஜோடியாகவோ, தனியாகவோ (வண்டி சுமக்கும் எடையைப் பொறுத்து), வண்டியில் பூட்டி ஓட்டிச் செல்வார்கள். சரியான எடை இருந்தால் அவை ஒரு சீரான ஜதியில் மணிகளலிக்க ஓடிச்செல்லும் அழகே அழகு. 'ஹேக்.. க்க' என்று அதட்ட துள்ளி ஓடும்.

வண்டியிழுத்துக் குளம்பு தேய்ந்த இம்மாடுகளுக்கு Tyre retreading செய்வது போல லாடம் அடிப்பார்கள். அவ்வளவு உயரமான ஒரு சாதுவான ஜீவனை கயிறு கட்டித் தரையில் வீழ்த்தி நான்கு கால்களையும் சேர்த்துக் கட்டி லாடம் அடிக்கத் தொடங்குவார்கள். அதைப் பார்க்கையில் எனக்கு முகத்தில் ஈயாடாது. ஆனால் மாட்டின் முகத்தில் நிஜமாகவே (மாட்டு) ஈயாடும்! உரிமையாளனுக்கு லாடத்திலேயே கவனம். முகத்தில் மொய்க்கும் ஈக்களை ஒரு காதால் விரட்டப் பிரயாசைப் படும் மாட்டின் சிரமம் எப்படிப் புரியும்? நம்மைத் தூணில் அசையாது கட்டிப்போட்டு, முகத்தில் அரிப்பெடுத்தாலோ, ஈ அல்லது கொசு கடித்தாலோ நமக்கு எப்படி இருக்கும்?

பழைய தேய்ந்த லாடத்தை நெம்பி எடுத்து எறிந்துவிட்டு, பளபள புது லாடம் அடிப்பார்கள். அதிகம் ஓடிய மாடாக இருந்தால், குளம்பில் ஆணியடிக்கவே இடம் இருக்காது. சிலசமயம் அடிக்கும் ஆணி குளம்பை மீறி தசையைத் தொடுகையில், அது வலியில் ஒருமுறை சிலிர்க்கும் பாருங்கள்! நகம் வெட்டும்போது சதை லேசாக வெட்டப்பட்டால் உதறிக்கொள்வோமே! அது போல. மனைவியின் நிர்ப்பந்தங்களைப் புறக்கணித்து இன்றுவரை நானே நகம் வெட்டிக்கொள்வேன். ஒருமுறை வற்புறுத்தி கால்விரல் நகங்களை மனைவி நகவெட்டி கொண்டு வெட்டியபோது, எப்போது சதை வெட்டுப்படும் என்ற டென்ஷனில் கை நகங்களைக் கடித்தே காலி செய்திருந்தேன். மருத்துவர் ஊசி போடும் முன், ஊசி எப்போது குத்தப்படும் என்ற ஒரு வினாடி காத்திருப்பு அவஸ்தை இருக்கிறதே!

சற்று இடைவெளி விட்டு மறுபடியும் சீராக அடிக்கத் தொடங்குவார்கள். அடித்து முடித்ததும், கால்கள் விடுவிக்கப் பட்டுத் துள்ளியெழும் மாடு. அது சற்றும் உயரம் கூடியது போன்ற ஒரு பிரமை! புதிய குளம்பொலி பழக சிறிது நேரம் எடுத்துக்கொண்டு அப்புறம் 'ஜல் ஜல் ஜல் என்னும் சலங்கையொலி' தான்.

மனிதர்களுக்கு மட்டும் குளம்புகளை இறைவன் படைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்! கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாக நடந்திருக்கலாமே! -என்று பல தடவைகள் நினைத்திருக்கிறேன். என்ன.... நைக்கியும், அடிடாஸ¤ம் விதவித வண்ணங்களில் லாடம் விற்றுக்கொண்டிருப்பார்கள்!

அன்புடன்
சுந்தர்.

நன்றி: மரத்தடி.காம்

Sunday, March 20, 2005

*** டை ***

Image hosted by TinyPic.com

1991

பெப்ஸியில் வேலைசெய்து கொண்டிருந்த ஒரு நாள், திடீரென்று டை கட்டிக்கொண்டால் என்ன என்று ஆசை வந்துவிட்டது.

'டை போட்டே ஆவணும் சார். நம்ம கம்பெனி எப்படிப்பட்ட மல்ட்டி நேஷனல் கம்பெனி!' என்று நிறுவன எக்ஸிக்யூட்டிவ் டைரக்டரிடம் சொன்னபோது 'மதுரைல எதுக்குடா டை கிய் எல்லாம்?' என்று சொல்லிப் பாத்தார். அவர் எங்களுடைய நலம்விரும்பி. ஆதலால் நாங்கள் அவருக்குச் கொஞ்சம் செல்லமும் கூட. நாங்களென்றால் நானும் ராஜாங்கமும்.

அவரை மேலும் படுத்தி எடுத்து 'அனைத்து ஆபிஸ் மக்களும் நாளைல இருந்து டை கட்டணும்' என்று அவசரச் சட்டம் இயற்ற வைத்து, அன்று மாலையே மதுரை அமெரிக்கன் கல்லூரி முன் இருக்கும் ரேமண்ட்ஸ் கடையில் பார்க் அவென்யூ டை சிலவற்றையும், அதை சட்டையுடன் நிறுத்தி வைக்க க்ளிப்புகளையும் வாங்கிக்கொண்டு, அலுவலகத்தில் உடனடி வினியோகம் செய்து முடித்தோம்.

நான் அதுவரை பார்த்ததெல்லாம் இங்கிலீஷ் மீடியம் படிக்கும் பொடிசுகள் ஒரு எலாஸ்டிக் வளையத்தில் முன்கூட்டியே கட்டப்பட்ட டையை கழுத்தில் அப்படியே மாட்டிக்கொண்டு போவதைத்தான். பார்க் அவென்யூ டை பாம்புபோல் நீளமாக இருந்ததைப் பார்த்ததும் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. அப்படியே ஒரு கல்லு முடிச்சு போட்டுவிடலாமா என்று முயற்சித்ததில் அது அபாயகரமாகச் சேதாரம் ஆவதுபோல் இருந்ததால் அதைக் கைவிட்டுவிட்டு, என்ன செய்வதென்று பேய் முழி முழித்துக் கொண்டிருந்தோம்.

கணக்காளர் கணேஷ் உள்ளே வந்து 'தம்பி.. ஏதோ டை கட்டச்சொல்லி இ.டி.யைச் சொல்ல வச்சீட்டீங்க.. நா முன்ன பின்ன இத தொட்டுக்கூட பாத்ததில்லை. அப்படியே கொஞ்சம் ஒரு முடிச்சு போட்டுக் கொடுத்திட்டீங்கன்னா சவுகரியமா இருக்கும். ஆயுசுக்கும் பிரிக்காம போட்டுக்கிடுதேன்' என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்.

'அடக்கடவுளே' என்று மனதுக்குள் அலறிவிட்டு 'வச்சுட்டுப் போங்க.. எல்லாருக்கும் போட்டுக் கொடுப்போம்' என்று தெனாவெட்டாக பதில் சொல்லிவிட்டு, அவர் போனதும் தலையில் கை வைத்துக் கொண்டோம்.

ஆபத்பாந்தவனாக சூசை வந்தார். சூசை அட்மின் மேனேஜர். எக்ஸ்-ஏர்மென். ஏற்கெனவே ஆதிகாலத்தில் டைகட்டிய அனுபவம் அவருக்கு இருந்தபடியால், அவரைச் சரணடைந்தோம். 'ஒங்களுக்கு இது தேவையா?' என்ற ரீதியில் பார்த்துவிட்டு, டை கட்டும் டெமோ காட்டினார்.

'சிங்கிள் நாட்டா? டபுள் நாட்டா?'

'அப்டின்னா?' என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டோம். அப்படியே ஒரு அவசரக்கணக்கு போட்டு, எப்படியும் டபுள் நாட் சிங்கிள் நாட்டைவிடக் கஷ்டமாக இருக்கும் என்று லாஜிக்கல் அண்ட் ரீஸனிங்கில் முடிவுசெய்து கொண்டு 'சிங்கிள் நாட்' என்றோம். என்னதான் பொறுமையாக அவர் டை கட்டிக் காண்பித்தாலும், எங்களுக்கு ஏதோ மாஜிக் நிபுணர் கயிறு வித்தை காட்டியது போல் இருந்தது. முதல் ஸ்டெப் தவிர வேறு எதுவும் நினைவில் நிற்கவில்லை. போதாதற்கு எங்கள் எதிரில் நின்று கொண்டு அவர் செய்து காண்பித்ததால் இடவலக் குழப்பம் வேறு. அவருடைய தோளோடு ஒட்டி நின்றுகொண்டு 'சார். மறுபடியும் ஒரு தடவ செஞ்சு காமிங்க. ஸ்டெப் பை ஸ்டெப்பா' என்று கேட்டுக்கொண்டு, அவரைத் தொடர்ந்து ஒருவழியாக டை கட்டி முடித்தோம். கணேஷுக்கும் ஒன்று கட்டி எடுத்துக்கொண்டு அவரிடம் நன்றிகூறி வெளியேறினோம்.

அன்று மாலை வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும், டையை முழுதும் அவிழ்க்காமல் கழுத்து வளையத்தைச் சற்று நெகிழ்த்திப் பெரிதாக்கி கழற்றிவைத்துவிட்டு, மறுநாள் மாட்டிக்கொண்டு அலுவலகம் சென்றேன். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு சூசை போட்ட முடிச்சு தாலி முடிச்சு கணக்காய் கழற்றப்படவேயில்லை.

நானும் ராஜாங்கமும் அலுவலகத்திற்கு அலுவலக டிவிஎஸ் சுசூகியில் வந்து செல்வோம். பாத்திமா கல்லூரி தாண்டிதான் பேக்டரிக்குச் செல்லவேண்டும் என்பதால் காற்றில் முடியும், டையும் பறக்க, குளிர்கண்ணாடி அணிந்துகொண்டு பைக்கில் பறந்து செல்வோம். எங்கு சென்றாலும் டை! சமத் தையலகத்தில் சட்டை தைக்கக் கொடுக்கும்போது 'டை காலர்' என்று சொன்னோம். அநேகமாக அச்சமயத்தில் மதுரையில் டை கட்டித் திரிந்த கோஷ்டி நாங்கள் ஒன்றுதான் என்று நினைக்கிறேன்.

பாண்டியன் பஸ்ஸில் அலுவலகம் வரும் ஆத்மாக்கள் எங்களை மனதாரத் திட்டித் தீர்த்தார்கள். சிவக்குமார் வந்து 'பாவிங்களா, பழிவாங்கிட்டீங்களே' என்றான்.

'என்னடா ஆச்சு'

'டவுன் பஸ்ஸுல வந்தா ஒரேயடியா கேலி பண்றாங்கடா.. அவனவன் வேட்டியும் சட்டையும், லுங்கியுமா இருக்க கோமாளி மாதிரி டை கட்டிக்கிட்டு கம்பியப் புடிச்சு நின்னுக்கிட்டு வர்றது எனக்கே கேவலமா இருக்குடா'

'அப்படியா?'

'என்ன நொப்படியா? அதும் சாயங்காலம் கூட்டம் அடைச்சுக்கிட்டு வரும்போது சும்மாவே மூச்சு திணறும்.. அதுல டை வேற கழுத்தை இறுக்குது'

'அடடா..'

'நேத்திக்குச் சாயங்காலம் கூட்டத்துல ரொம்ப கழுத்து இறுக்குதேன்னு பாத்தா, ஒரு பொடியன் பிடிக்கறதுக்கு வாகா எதும் இல்லாம என் டையப் பிடிச்சுக்கிட்டு நிக்கறான்' அதற்கு மேல் சிரிப்பை அடக்கமுடியவில்லை. அவர்களைப் பார்க்க பாவமாகவும் இருந்தது. ஆனால் ஒருவருக்கும் இ.டி.யிடம் போய்ச் சொல்ல தைரியம் இல்லை.

அன்று மதியம் சூசை அவரது மொபட்டை நிறுத்திவிட்டு, டையைத் தளர்த்திக்கொண்டு வியர்க்க விறுவிறுக்க வந்து 'தம்பிங்களா.. இந்த வெயில்ல டை போட்டுக்கறது கஷ்டமா இருக்குப்பா.. கொஞ்சம் சொல்லக்கூடாதா' என்று கேட்க நாங்கள் 'சொல்றோம் சார்' என்றோம்.

கணேஷ் டையுடன் சண்டை போடுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். அளவு தெரியாமல் முடிச்சுப் போட்டுவிட, ஒன்றா வால் நீளமாகத் தொங்கும். அல்லது டை நீளமாக அவர் பேண்ட்டின் ஜிப்பைக் கடந்து தொங்கும். அப்போதெல்லாம் பேண்ட் பெல்ட்டுக்கு மேலே இன் செய்திருக்கும் சட்டை பட்டனை கழட்டி அதில் டையை நுழைத்து வைத்துக் கொள்வார். ஒருமாதிரி தராசில் சரி செய்து கட்டி வந்தாரென்றால், அவர் தொப்பையில் படிந்து, பார்ப்பதற்கு அசப்பில் தும்பிக்கை போன்றிருக்கும். சட்டை தைக்கும்போது டை என்ற ஒன்றை நினைத்தே பார்த்திராததால், சட்டை கழுத்துப் பட்டியில் டை சரியாகப் பொருந்தாமல், வெளியே தெரியும். இல்லாவிட்டால் காலர், நாய் காதுகளை லேசாக நிமிர்த்து அழைப்பவரை நோக்குவது போல், தூக்கிக் கொண்டிருக்கும்.

கொஞ்ச நாளில் எல்லாருக்கும் டை பழகிவிட்டது.

ஒருநாள் ஆபிஸ் பாய் ராஜு டீ கொடுக்கும்போது, சிந்தியதில் டையில் ஒரு ரூபாய்க் காசு அளவிற்கு ஈரமாகி, உலர்ந்ததும் கறையாகிவிட்டது. அதைச் சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று மாலையில் துவைத்துக் கொடியில் தொங்கவிட்டு, மறுநாள் பார்த்தபோது 'திக்'கென்று இருந்தது. காய்ந்த டை பாம்பு உரித்துப் போட்ட சட்டைபோல் ஆகிவிட்டிருக்க, அயர்ன் செய்து பார்த்தும் முடியவில்லை. ஒருமாதிரி ஆங்காங்கே புடைத்துக்கொண்டு அசிங்கமாக இருக்க, வேறுவழியில்லாமல் தூக்கி எறியவேண்டியதாயிற்று. புது டை நூற்றியைம்பது ரூபாய் ஆகும். சம்பளமே முன்னூற்றைம்பது ரூபாய்தான் அப்போது. யோசிக்க வேண்டியிருந்தது.

o o o

ராஜு வந்து 'சுந்தர் சார். இ.டி. கூப்பிடறாரு' என்றான்.

உள்ளே போய் சலவைக் கதர் சட்டையில் அமர்ந்திருந்தவரிடம் 'குட் மார்னிங் சார்' என்றேன்.

'எங்கேப்பா டை?'

'அது வந்து.. சார்... ஒங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்..'

'என்ன?'

'ஒரு ஆர்வத்துல டை கட்டணும்னு ஒங்ககிட்ட சொல்லிப் போட்டுக்கிட்டேச்சு.. ரொம்ப நன்றி.. ஆனா கொஞ்ச நாளாவே மனசு உறுத்துது சார்.. '

'ஏன்.. என்ன ஆச்சு.. மனசு உறுத்துதா? கழுத்து உறுத்துதா?' என்றார் நமுட்டுச் சிரிப்புடன்.

'இல்லை சார். பாரபட்சம் இருக்கக்கூடாதுங்கற ஒங்க கொள்கைப்படி பேக்டரில லோடு மேன்ல இருந்து மேனேஜர் வரைக்கும் எல்லாரும் ஒரே யூனிபார்ம்ல வராங்க. ஆபிஸ்ல இருக்கற எங்களுக்கும் அதே யூனிபார்ம் தான். ஆனா பாருங்க. யோசிக்காம டை வேணும்னு கேட்டுப் போட்டுக்கிட்டோம். அது எங்களை தொழிலாளர்ங்ககிட்ட இருந்து பிரிச்சிடுச்சுன்னு நெனக்கிறேன். பெரிய ஆபிசருங்க மாதிரி எங்களை அவங்க முன்னாடி காட்டிக்கற மாதிரி. மனசு ரொம்ப உறுத்துது சார்'
இதை அவர் எதிர்பார்க்கவில்லை என்பது அவர் முகத்தில் தெரிந்தது.

o o o

'ரொம்ப தேங்க்ஸ் தம்பி' என்றார் சூசை.

அவர் போனதும், நான் சட்டையின் மேல் பொத்தானைத் திறந்து காலரைப் பின் தள்ளி, ஏஸி குளிர் கழுத்தில் பரவ நாற்காலியில் சாய்ந்து கொண்டேன்.

நன்றி: மரத்தடி.காம்

வாலிபங்கள் ஓடும்....

சில வருடங்களுக்கு முன்பு மதுரையில் பணிசெய்து கொண்டிருந்தேன். சிந்தாமணியில் உள்ள ஒரு வங்கிக்கு ஏதோ ஒரு அலுவலாகச் சென்று என் தந்தையின் வரவிற்காக வங்கியின் வாசலில் காத்துக் கொண்டிருந்தேன். ஜன சந்தடி மிகுந்த தெரு அது.சைக்கிள்களும், டூ வீலர்களும் நெரிசலாக நிறுத்தப்பட்டிருக்க, தெரு முழுவதும் மனிதத்தலைகள் வியாபித்திருந்தன.

சேலை மட்டும் அணிந்த மூதாட்டி கூன் முதுகுடனும், இடுங்கிய கண்களுடனும் மெதுவாகக் கம்பு ஊன்றி நடந்து வந்தார். உழைப்பின் அயர்ச்சி உடலில் தெரிந்தது. கையில் ஒரு தூக்குச் சட்டி. நான் அவரையே கவனித்துக் கொண்டிருந்தேன்.
Image hosted by TinyPic.com
பள்ளிச் சீருடையுடன் எதிரே வந்த ஒரு சிறுவன் மூதாட்டியை அடைந்து ‘பாட்டீ’ என்று விளிக்க, அவர் சிறுவனை ஒரு கணம் உற்றுப் பார்த்துவிட்டு அணைத்துக் கொண்டார். அவர் கண்களில் ஈரத்தை கவனித்தேன். ‘நல்லாருக்கியா தம்பி’ என்று கேட்டுவிட்டு நடுங்கும் கையால் சிறுவனின் தலையை வருட, சிறுவன் தலையசைத்தான்.

‘ஒன் அப்பன் எப்டி இருக்கான்?’

‘நல்லா இருக்காரு பாட்டி’

‘அவ எப்டி இருக்கா?’ என்று பாட்டி (மருமகளைப் பற்றி) வினவ, சிறுவன் மௌனமாகஇருந்தான்.

ஒன்னயும் அடிக்கிறாளா?’

மௌனம்.

‘நல்லாப் படி ராசா’

‘சரி பாட்டீ’

பாட்டி சட்டென்று தூக்குச் சட்டி திறந்து ஒரு கை நீர் சாதத்தை ஊட்ட பையன் உள்ளங்கையால் கீழுதட்டைத் தடுத்து சோறு சிதறாமல் விழுங்கினான். போதும் என்று தலையாட்டினான்.

‘நான் வாரேன். நீ எங்கிட்ட பேசுறத பாத்தா ஒன்னய அடிப்பா.. நீ போ ராசா. என்ன தான் வெரட்டிட்டாளே அவ.. நீயாவது சூதானமா இருந்துக்கப்பா’

பையன் ஒன்றும் பேசாமல் அமைதி காக்க, பாட்டி மெதுவாக கம்பூன்றி நடந்து சென்றார். வலக்கையில் முழங்கைக்கும் மணிக்கட்டுக்கும் நடுவே தூக்குச் சட்டி ஊசலாடிக் கொண்டிருந்தது. சிறுவன் பாட்டியையே சில கணங்கள் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, கண்களில் நீர்சிதற ஓடிப் போனான். நான் சிலையாக நின்றிருந்தேன்.

ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களிலும், கோயிலினுள்ளேயும் நிறைய வயசாளிகளைக் காணலாம். சிலர் கடலையோ முறுக்கோ விற்றுக் கொண்டிருப்பர். பெரும்பாலானோர் அழுக்கான அல்லது கிழிந்த உடைகளுடன் கால் நீட்டி அமர்ந்து போவோர் வருவோரைப் பார்த்துக் கொண்டிருப்பர். பசி தாங்காத சிலர் நடுங்கும் கைகளை அருகே வருவோரிடம் நீட்டி யாசகம் கேட்பர். குடும்பத்தால் கைவிடப்பட்டு இப்படி அனாதையாகத் தெருவில் இருக்கும் இத்தகைய வயசாளிகளைக் காண்கையில் இதயம் வலித்து கண்ணீர் எட்டிப் பார்க்கும். என் தாத்தாவையோ அல்லது பாட்டியையோஅந்நிலையில் காண நேரிட்டது போல இதயம் பதறும். எப்படி மனது வந்தது என்று உள்ளம் அரற்றும். இந்நிலை மாற வேண்டும் என்று இறைவனை இறைஞ்சிக் கொள்வேன்.

தனிக்குடும்பங்கள் பெருகிவிட்ட இக்கால சூழ்நிலையில், கிட்டத்தட்ட பதினைந்து பேர்வரை வாழ்ந்த வத்திராயிருப்பு கூரை வீட்டை நினைத்துப் பார்க்கிறேன். குறைந்த வருவாயிலும் அத்தனை பெரிய குடும்பத்தை வழிநடத்திய தாத்தா மற்றும் அப்பாவின் மனத்துணிவை நினைக்கையில் நெஞ்சம் நெகிழ்கிறது. விறகடுப்பிலும் கரியடுப்பிலும் அயராது சமைத்துப் போட்ட பாட்டியின் உடல் வலு வியக்க வைக்கிறது.

அக்ஷராவுக்கு காய்ச்சல் என்றால் பதறி மருத்துவமனைக்கு ஓடி செய்வதறியாது தவிக்கும் என்னையும் என்னைப் போன்றவர்களையும் நினைக்கும் போது, உடலளவில் மட்டுமல்லாது மனதளவிலும் பலவீனப்பட்டுப் போன தலைமுறையை உணர முடிகிறது.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று சும்மாவா சொன்னார்கள்!

சுந்தர். அக்டோபர் 30, 2002

Saturday, March 19, 2005

***'அ' ***

***'அ' ***

முதல் நாள் பள்ளிக்குச் செல்கையில் தாத்தாதான் கூட வந்தார். புதிய சிலேட்டும் புத்தம் புதிய குச்சியும் (இது பலப்பம் என்றும் அழைக்கப் படுகிறது என்று பின்னாளில் தெரிந்துகொண்டேன். ஆனால் எங்கள் ஊரில் குச்சிதான்) துவைத்த ஆடையும் அணிந்து கொண்டு தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு சற்றே நிச்சயமில்லாமல் வகுப்பறை வாசலில் நின்றது பசுமையாக நினைவிருக்கிறது. வகுப்பறைக்கு வாசல் என்று எதுவும் தனியாகக் கிடையாது. பள்ளியின் பிரதான சுற்றுச் சுவரைத் தாண்டினால் நீளமான சிமிண்ட் கூரை வேயப்பட்ட, இடப்புறம், வலப்புறம் மற்றும் பின்புறங்களில் மட்டும் சுவர்கள் இருக்கும் ஒரு கட்டிடத்துக்குள் `தட்டி'கள் போடப்பட்டு வகுப்பறைகள் பிரிக்கப் பட்டிருந்த ஆரம்பப் பள்ளி அது. ஆகவே வகுப்பறை முழுவதையும் பார்த்துக்கொண்டே உள்ளே நுழையலாம்.

நல்ல நேரம் பார்த்துவிட்டு பத்து மணிக்கு மேல் சென்றதால், பள்ளி ஏற்கெனவே இரைச்சலாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆசிரியர் தாத்தாவைப் பார்த்து `நம்ம பேரனா?' என்று கேட்டுவிட்டு `நாளைக்குக் காலைல ஒம்பது மணிக்கு வந்திரணும், சரியா?' என்று என்னிடம் கேட்டார். அவர் முகமும் பெயரும் ஞாபகத்திலில்லை. தாத்தா ஊரில் மிகப் பிரபலம். எனக்கு அவர் பெயரைத் தான் வைத்திருக்கிறார்கள்.

நனைந்த கோழிக்குஞ்சு போல அமர்ந்த ஐந்தாவது நிமிடத்தில் தொடர்ச்சியான மணி ஒலிக்க (இடைவேளையாம்), அனைத்துச் சிறுவர்களும், சிறுமிகளும் எழுந்து `ஒண்ணுக்குத் தொண்ணி விட்டாச்சு ஊரையெல்லாம் சுத்தியாச்சு.....ஒண்ணுக்குத் தொண்ணி......' என்று இடைவிடாது இரைச்சலாகப் பாடிக்கொண்டே சிதறி பள்ளிக்கு வெளியே ஓடிவிட, நான் மணி ஒலித்த காரணமும், பாடல்களின் வரிகளும் புரியாமல் வகுப்புத் தரையில் அமர்ந்திருந்தேன். பத்து நிமிடம் கழித்து மறுபடியும் மணி ஒலித்ததும் அனைவரும் `கம்பாக'த் திரும்பி வந்து அமர்ந்தார்கள். எனக்கு முன்பாக மஞ்சள் நிறத்தில் பூப்போட்ட சட்டை அணிந்திருந்த சிறுவனைக் காணாமல் ஆசிரியர் `எங்கடா?' என்று கேட்க, `பாண்டி வீட்டுக்குப் போய்ட்டான் சார்' என்ற பதில் இன்னொரு சிறுவனிடமிருந்து.

பாண்டி வீடு பள்ளிக்கு அடுத்துதான் இருந்தது என்று தெரிந்து கொண்டேன். பின்புறம் இருந்து `சார் இவனைக் கட்டிப் போட்ருங்க' என்று குரல் வந்து திரும்பிப் பார்த்தால் கலங்கிய கண்களுடன் பாண்டியும் அவன் கழுத்தைப் பிடித்துக் கொண்டு, மேல் சட்டை இல்லாத தோளில் துண்டுடன் அவன் அப்பாவும். பாண்டி சத்தமில்லாமல் வந்து உட்கார்ந்து கொண்டான்.
ஆசிரியர் கறுப்புப் பலகையில் பெரியதாக `அ' வை எழுதி எங்களையும் எழுதச் சொல்ல, நான் ஏற்கெனவே எழுதிப் பழகியிருந்ததால் சுலபமாக எழுதிவிட்டு அவர் கவனத்துக்காக காத்துக்கொண்டிருந்தேன். கையில் ஒன்றரையடி நீளமுள்ள சிறிய குச்சியுடன் (ஆனால் அதன் கீர்த்தி பெரியது), ஒவ்வொரு வரிசை சிலேட்டுக்களையும் புரட்டிப் பார்த்துக்கொண்டே வந்தார். என் பக்கம் அமர்ந்திருந்த கண்ணன் எழுதியிருந்ததை எட்டிப் பார்த்ததும் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது. மண்புழுவை வரைந்தது போல் ஏதோ எழுதியிருந்தான். அதைப் பார்த்ததும் ஆசிரியர் புருவம் (மற்றும் குச்சியை) உயர்த்தி `என்னடா' என்று கேட்க, கண்ணன் அவசரமாக `புளிச்'சென்று மண்புழுவின் மேல் எச்சில் துப்பி அழிக்கத் துவங்கி, முதுகில் பொளேரென்று அறை வாங்கினான். எனக்கு நாக்கு மேலெண்ணத்தில் ஒட்டிக்கொண்டு விட, சந்தேகத்துடன் கறுப்புப் பலகையில் எழுதியிருந்ததையும் என் சிலேட்டில் எழுதியிருந்ததையும் மறுபடி ஒருமுறை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டேன். என் முறை வந்ததும் ஆசிரியர் என் சிலேட்டை வாங்கிப் பார்க்க நான் அவர் முகத்தை பயத்துடன் படித்துக் கொண்டிருந்தேன். அவர் ஒன்றும் சொல்லாமல் சிலேட்டை எடுத்துக் கொண்டு அவரிடத்திற்குத் திரும்பிச் சென்று அதை அனைவருக்கும் உயர்த்திப் பிடித்துக் காண்பித்து `இங்க பாருங்கப்பா இப்படி எழுதணும்' என்று முறைத்துக் கொண்டே சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.

சற்று நேரத்தில் மறுபடி நீளமாக மணி அடிக்க, பொன்னு சாமி வந்து `சார்.. இன்னிக்கு மொத நாளுங்கறதால, அரை நாள் லீவு விடச் சொல்லி எட்மாஸ்டர் ஐயா சொல்லிட்டாருங்க'என்று சொல்ல, அனைவரும் சந்தோஷமாகப் பறந்தோடிப் போனோம்.

நான் அன்று இரவு சிலேட்டின் `அ' அருகில் படுத்துக்கொண்டுத் தூங்கினேன். மறுநாள் `1' எழுதுவதற்காக `அ'வை அழிக்க வேண்டிவந்த போது சோகமாக இருந்தது.

மதிய உணவு இடைவேளையில் பள்ளிக்கு வெளியே வியாபாரம் சூடு பிடிக்கும். எனக்கு பள்ளிக்கூட வாசலில் பாட்டி விற்கும் எலந்த வடை, முறுக்கு, கொடிக்காப்புளி, ஆகியவற்றை ஒருநாளாவது தின்ன வேண்டும் என்று அளவிலாத ஆசை இருந்தது. பள்ளிக்கு முன்பாக ஒருவன் உயர்ந்த மூங்கில் கம்பின் உச்சியில் பொம்மை ஒன்று பெரிய கண்கள், சிரித்த வாய், பளபளக்கும் ஆடைகள் மற்றும் இரண்டு கைகளிலும் `ஜிஞ்சா' மூடிகளுடன் பொருத்தப்பட்டு, பொம்மையின் இடுப்புக் கீழே மூன்று நிறங்களில் (பச்சை, மஞ்சள் மற்றும் சிகப்பு என்று நினைக்கிறேன்) கோடுகள் போட்ட ஜவ்வு போன்ற மிட்டாயைச் சுற்றி வைத்து விற்றுக் கொண்டிருப்பான். கேலிச் சித்திரங்களில் வரையப்படும் பேய் போல, கால்களில்லாமல், மிட்டாயின் வால் உருட்டப்பட்டு மூங்கில் கம்பில் ஒட்டிக்கொண்டிருக்கும். பத்து காசு கொடுக்கும் சிறுவர்களுக்கு மிட்டாய்க் காரன் மிட்டாயின் வாலை இழுத்துப் பிய்த்து மின்னல் வேகத்தில் கைக்கடிகாரம் செய்து கட்டிவிட்டு, `கொசுறு'வை கன்னத்தில் ஒட்டி விடுவான். சிறுவர்களின் முகத்தில் சூரியன் பிரகாசிக்கும். மிட்டாய்க்காரன் பேசவே மாட்டான். பொம்மை மட்டும் `ஜிங் ஜிங்'கென்று தட்டிக்கொண்டே இருக்கும். வாலைப் பிய்க்கும் போது மட்டும் தட்டுவதை நிறுத்திவிடும். இந்த ரகசியத்தை அவன் முங்கிலின் கீழ் முனையில் நீட்டிக்கொண்டிருந்த கம்பி வளையத்தை தன் கால் கட்டை விரலால் இழுத்து இழுத்து விடுவதைப் பார்த்துக் கண்டுபிடித்து விட்டேன். வளையத்தை இழுக்கும் போது `ஜிங்'.

பள்ளியில் முக்கால் வாசிப் பேர் சிலேட்டும் அலுமினியத் தட்டுக்களுடன் தான் வருவார்கள். எல்லாரும் மதியம் பெரிய பாத்திரங்களில் சமைக்கப்பட்ட புழுங்கலரிசிச் சோறும் பருப்பையும் வரிசையில் நின்று வாங்கிச் சாப்பிட என் நாக்கில் எச்சில் ஊறும். மேல்பத்தியில் எழுதப்பட்டிருந்த தின்பண்டங்கள் அனைத்தும் என் வீட்டவர்களால் தடைசெய்யப் பட்டவை. மதிய உணவு எனக்குக் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். பாட்டியிடம் கேட்டபோது `நாமெல்லாம் யாரு.. அந்த சாதம் சாப்பிடப்படாது' என்று சொல்லி விட்டார்கள். புழுங்கல் சோறின் மணமும் அதன் பெரிய அளவும் என்னை ஈர்த்துக் கொண்டே இருந்தன. ஆனால் வத்திராயிருப்பில் இருந்த வரை அதைச் சாப்பிடும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை.

மதுரையில் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்ததும் என் உற்ற தோழர்களான ராஜாங்கம் மற்றும் சுப்புணியின் வீட்டில் தான் பெரும்பாலும் தவம் கிடப்பேன் - புழுங்கல் சோறுக்காக. வத்திராயிருப்பில் எங்கே இருந்தாலும் கண்டுபிடித்து விடுவார்கள். தாத்தாவை அனைவருக்கும் தெரியும் என்பதால் எங்கேயும் ரகசியமாகச் செல்ல முடியாது. கிராமங்களில் எல்லோரையும் எல்லோருக்கும் தனிப்பட்ட முறையில் தெரியும் - அல்லவா? ஆனால் மதுரை பெரிய ஊர். அடுத்தத் தெருவில் இருப்பவர்கள் கூட யாரென்று தெரியாது. இன்னும் பெரிய ஊர்களில் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் கூட யாரென்று தெரியாமலிருப்பார்கள் என்று பின்பு தெரிந்து கொண்டேன். இன்னும் கொஞ்ச நாளில், நம் குடும்பத்திலேயே யார் இருக்கிறோம் யார் இல்லை என்று தெரிந்து கொள்ளாமல் சோபாவில் உடலைப் புதைத்துக்கொண்டு கையில் தொலை இயக்கியுடனும், அரைக்கண்களுடனும் சாட்டிலைட் சானல்களில் முழுவதும் மூழ்கி விடுவோம் என்று நினைக்கிறேன். நினைக்கையில் பயமாக இருக்கிறது.

கல்லூரி சேர்ந்ததும் வருடத்திற்கு ஓரிரு நாள் வத்திராயிருப்புக்கு வருவதுண்டு. அப்போதெல்லாம் தைரியமாக எலந்த வடையும், கொடிக்காப் புளியும் வாங்கித் தின்றபோது வீட்டில் யாரும் எதுவும் சொல்லவில்லை.
மதுரையில் அம்மாவழி உறவினர்கள் எல்லோரும் இருக்கிறார்கள். வத்திராயிருப்பிலிருந்து அடிக்கடி மதுரைக்கு வருவேன் அப்பாவுடன். மதுரைக்கல்லூரி மேம்பாலம் தாண்டியதும் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தை ஒட்டியவாறு மத்திய பேருந்து நிலையம் (பின்பு பெரியார் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டது). அங்கே கடைசி சில வரிசைகளில் நீண்ட தூரப் பேருந்துகளும் (மொபசல்) முதல் சில வரிசைகளில் அலுமினிய நிறத்தில் நகரப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டிருக்கும். பேருந்து வெளியேறும் வாசலில் தான் பெரும்பாலான பயணிகள் நின்று கொண்டிருப்பார்கள் (எந்த பேருந்து முதலில் கிளம்பும் என்பது தெரியாததால்). ஆதலால் எல்லாப் பேருந்துகளும் நிலையத்தை விட்டு வெளியேறும் முன்பாக ஒரு சில நிமிடங்கள் அங்கே நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டுவிட்டுக் கிளம்பும். அங்கே இனிப்புக் கடைகளும் கே.ஏ.ஏஸ். சேகரின் பரிசுச் சீட்டுக் கடைகளும் நிறைந்திருக்கும். வரிசையாக பரிசுச் சீட்டுக்கள் அட்டையில் அடுக்கி மஞ்சள் பல்பின் ஒளியில் வைக்கப் பட்டிருக்கும் (அவ்வளவு பெரிய மஞ்சள் பல்பை அங்கே தான் முதன் முதலில் பார்த்தேன்). ஒலிபெருக்கியில்அனைவரையும் கோடீஸ்வரர்களாக்க இடைவிடாது அழைத்துக் கொண்டே இருப்பார்கள்.

நான் மதுரையில் சிதறியிருக்கும் அனைத்து உறவினர்களின் இல்லங்களுக்கு நடந்தேதான் செல்வேன். தனியாக. எனக்கு மீனாட்சியம்மன் கோயிலின் கோபுரங்கள் தான் திசைகாட்டிகள். சிம்மக்கல்லின் அந்தப் பக்கம் வைகையாற்றின் கரையில் இருந்த ஆதிமூலம்பிள்ளை அக்ரஹாரத்தில் என் பெரியப்பா வீடு இருக்கிறது. அதற்கும் ஜெய்ஹிந்த்புரத்திலிருந்த என் பாட்டி (அம்மாவின் அம்மா) வீட்டிற்கும் மீனாட்சியம்மன் கோயில் வழியாக நடந்தே செல்வேன். இப்போது கோபுரங்களை மறைத்து நிறைய கட்டிடங்கள் வந்து விட்டன.

என் சித்தப்பா வடக்கு கோபுரத்தை நோக்கியிருக்கும் ஒரு குறுகிய சந்திலிருந்த ஒரு `பேச்சிலர்' அறையில் நிறைய வருடங்கள் தங்கியிருந்தார். அவர் கதைப் புத்தகத்திற்கும் தினசரிக் காலண்டரின் அட்டைக்கும் ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்தார். அவர் அறையில் அடுக்கடுக்காக படக் கதைப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு முறையும் குறைந்தது பத்து புத்தகங்களாவது தருவார். அனைத்து காமிக்ஸ் புத்தகங்களையும் படித்துக் கொண்டேயிருப்போம் நானும் என் அண்ணனும். படிக்கும் ஆர்வம் வளர்ந்தது என் சித்தப்பாவால் தான். எங்காவது பழைய தேதியிட்ட காமிக்ஸ் அட்டைப் படங்களில் `krishna' என்ற கையெழுத்தைப் பார்த்தீர்களானால் அது என் சித்தப்பா தான். அவர் நான்கு வருடங்களுக்கு முன்பு இறந்து போனார் சர்க்கரை வியாதியில்.

அனைத்துக் காமிக்ஸகளும் அதன் கதாநாயகன்களும் எங்களால் மிக விரும்பப்பட்ட அம்சங்கள். அதிலும் மந்திரவாதி மாண்ட்ரேக்கின் ஜாலங்களும், இரும்புக் கை மாயாவியின் சாகசங்களும், வேதாளத்தின் வெள்ளைக் குதிரையும், நாயும், மனைவி டயானாவும் அந்த பிக்மி குள்ளர்களும், மண்டையோட்டு வடிவ குகையும் எப்போதும் நினைவில் நிற்பவை.

குண்டான இளவரசரை வேதாளம் காட்டுக்குக் கடத்திக்கொண்டு போய் பெண்டைக் கழட்டி, தினமும் `இன்னும் பத்தே மைல்தான்' என்று ஜாகிங் ஓடச் செய்து, ஒருமாதம் கழித்து இளவரசன் தன் இளைத்துப் போன உடலை ஓடைத் தண்ணீரில் பார்த்து அசந்து போய் வேதாளத்திற்கு நன்றி சொல்லும் காட்சிகள் நினைவிலிருந்து அகலவில்லை.

வேதாளத்திற்கும் டயானாவிற்கும் பிறக்கும் வேதாளக் குட்டிக் குழந்தைகள் அவர் இரு கைகளிலும் அணைத்து நிற்கும் காட்சியும் தான். குழந்தைகளும் அப்பாவைப் போலவே ஆடையணிந்திருக்கும்!

ஒரு கதையில் மாண்ட்ரேக் அவரது சகோதரரின் மந்திர சக்தியை, சகோதரர் அநியாயங்களுக்கு அதை பயன்படுத்தியதால், பறித்துக்கொள்ள, சகோதரர் தனிமையில் அமர்ந்து கொண்டு கண்ணாடிக் குவளையைப் பார்த்து `குவளையே! உடைந்து போ' என்று சொல்ல, குவளை உடையாமல் அப்படியே இருக்கவும், சக்தியனைத்தும் போய்விட்டதை உணர்ந்து வெதும்பும் காட்சிகளெல்லாம் இன்னும் கண்ணில் நிற்கின்றன.

நானும் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் வீட்டில் கண்ணில் படும் சாமான்களையெல்லாம் `உடைந்து போ, நெளிந்து போ, அங்கேயிருந்து கீழே விழு' என்றெல்லாம் முறைத்துக் கொண்டே சொல்லிப் பார்த்திருக்கிறேன். என்றாவது ஒருநாள் அது நிகழாதா என்று. அப்படிப் பட்ட சக்தி வந்தால் என்னென்னவெல்லாம் செய்யலாம் என்று என் கற்பனைக் குதிரை சிறகடித்துப் பறக்கும். இந்த கதாநாயகர்களின் சக்தி வந்தால் கீழ்க்கண்டவற்றினைச் செய்வது என்று திட்டம் போட்டு வைத்திருந்தேன்:

- பள்ளி இடைவேளையில் சிறுநீர்க் கழிக்கும் போது, பின்னாலிருந்து என்னையும் மற்ற சாதுப் பையன்களையும் அடிக்கடி பிருட்டத்தில் உதைத்து, நாங்கள் தடுமாறி நனைத்துக்கொள்வதைப் பார்த்து சிரிக்கும் முரட்டுப் பையன் முத்துலிங்கத்தை இரும்புக்கையைக் கொண்டு ஓங்கி அவன் பிருட்டத்தில் குத்தி லேசாக மின்சாரம் பாய்ச்ச வேண்டும்.

- கடைத்தெருவில் இருக்கும் ஐயர் கடையில் நன்றாக சாப்பிட்டு விட்டு, வெறும் தாளை கல்லாவில் நீட்டி விரலைச் சொடுக்கினால், அது ஐயருக்கு நூறு ரூபாய்த்தாளாகத் தெரிய, அவர் கொடுக்கும் மீதி 95 ரூபாயை வாங்கிக்கொண்டு அசால்ட்டாக நடையைக் கட்டவேண்டும்.

- குற்றம் செய்யும் அனைவரையும் இடது கையால் குமட்டில் குத்தி மண்டையோட்டு மோதிர முத்திரையை பதிக்க வேண்டும்.

- குதிரையில் காட்டழகர் கோயிலுக்குச் செல்ல வேண்டும்

செப்டம்பர் 26, 2002

Thursday, March 17, 2005

*** பேருந்து நிறுத்தம் ***

*** பேருந்து நிறுத்தம் ***


என்னைக் கேட்டால் நான் (முதலமைச்சர் ஆனால்) அனைத்து அப்பாக்களையும், வண்டி நிற்கும் போது தற்காலிகமாக இறங்கிச் சென்று மறுபடியும் வண்டி கிளம்பும் முன் ஏறிக்கொள்வதை உடனடியாகத் தடை செய்வேன். சிறுவயதில் அப்பாவுடன் பயணிக்கும் போதெல்லாம் என்னை அதிகபட்ச மன உளைச்சலுக்கு ஆளாக்கியது இதுதான்.

வத்திராயிருப்பிலிருந்து மதுரைக்குச் செல்லும்போது, பேருந்து ஓட்டுனருக்குத் தூக்கம் வந்தால் (அதை வண்டியின் வேகத்திலும் சாலையில் ஒழுங்கீனமாக ஓடுவதிலும் கண்டு கொள்ளலாம்), கல்லுப்பட்டியில் முன்பே ஒப்பந்தம் செய்திருக்கும் சாலையோர உணவகத்தில் நிறுத்திவிட்டு சத்தமில்லாமல் இறங்கிச் செல்வார். நடத்துனரோ ‘வண்டி பத்து நிமிசம் நிக்கும். டீ சாப்டறவங்க சாப்ட்டு சீக்ரம் வாங்க’ என்று விற்பனைக் குரலில் சத்தமாகச் சொல்லிவிட்டு இறங்கிப் போவார். அவர் குரலிலும் கண்களிலும் லேசான குற்ற உணர்ச்சி தெரிந்ததாக ஞாபகம்.

இத்தகைய சாலையோர உணவகங்களின் கட்டாயமான குணாதிசயங்கள் என்னவென்றால்:·

1. மூக்கைத் துண்டால் இறுக மூடிக்கொண்டாலும் அதையும் மீறி அடிக்கும் சிறுநீர் நாற்றம்

2. இன்றோ நாளையோ என்ற நிலையில் இருக்கும் ஓரிரு நாய்கள்

3. அடுத்து வருவதோ, முன்பு சென்றதோ ஒரு கிராமமென்றால் - ஓரிரு பன்றிகள்· அதிசயமாக ஒரு பூனை·

4. அரிவாள் மீசையுடன், எண்ணெய் வழியும் சிலை போல், வியர்வை வழியும் சமையல் காரரும் பரிமாறுபவர்களும்·

5. என்று செய்தது அல்லது எப்படிச் செய்தது என்று கண்டே பிடிக்க முடியாத பண்டங்கள். அதிலும் மழை பெய்திருந்தால் கேட்கவே வேண்டாம்.

நிற்க. (இந்த வார்த்தையை பெரியவர்கள் அடிக்கடி கடிதங்களில் உபயோகிப்பதைக் கண்டிருக்கிறேன். எதற்காக எழுதுகிறோம் என்று யாராவது விளக்கினால் நலமாக இருக்கும்).
Image hosted by TinyPic.com

நான் சுதாரிப்பதற்குள் அப்பா இறங்கிச் சென்றிருப்பார். அவ்வளவுதான். அதற்குப் பின்பு அவர் வரவே மாட்டார் என்றுதான் ஒவ்வொரு முறையும் நினைத்துக் கொள்வேன். ஒருவேளை அவர் வராமல் வண்டி கிளம்பி விட்டால் என்னென்ன செய்ய வேண்டும் என்று கடுமையாக ஒத்திகை பார்த்துக் கொள்வேன். கை அவ்வப்போது என் அரைக்கால் சட்டைப் பையில் இருக்கும் எட்டணாவைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளும். என் பயணச் சீட்டைக் (அரைச் சீட்டு) கொடுத்து விட்டுப் போங்கள் என்று ஒவ்வொரு முறையும் கெஞ்சுவேன். அதைக் கண்டு கொள்ளவே மாட்டார். ஒருவேளை அவர் வராமலிருந்து நடத்துனரோ அல்லது பரிசோதகரோ என்னைப் பயணச் சீட்டு இல்லாத காரணத்துக்காக அபராதம் விதித்து, சிறையில் தள்ளினால் என்ன செய்வது என்று யோசித்து திகிலடைவேன். சன்னலுக்கு மேலே சிகப்பு வர்ணத்தில் எழுதப்பட்டிருக்கும் பயணச்சீட்டு இல்லாப் பயணிகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனை எச்சரிக்கையை மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பேன். கிலியுடன் எங்கே என் தந்தை என்று பார்வை அலை பாயும்.

பயணிகள் ஒவ்வொருவராக வந்து அமர்ந்ததும் ஓட்டுனர் பல் குத்திக் கொண்டே அமர்ந்து வண்டியைக் கிளப்ப, நடத்துனர் கடைசியாக (என் அப்பா இன்னும்வரவில்லை) ஏறிக்கொண்டு விரைவாக எல்லா இருக்கைகளிலும் பார்வையை ஓட்டிவிட்டு ‘எல்லாம் வந்தாச்சா?’ என்று பெயருக்கு ஒருமுறை கேட்பார். நான் ‘அப்பா இன்னும் வர்லே’ என்று தீனமாகக் கத்துவது எனக்கே கேட்காது. வண்டி கிளம்ப ‘அய்யோ நான் காலி’ என்று நினைக்கையில் என் அப்பா எங்கிருந்தோ உதயமாகி ஒரு கையால் வேட்டியை தூக்கிப் பிடித்தவாறு இன்னொரு கையில் முறுக்குப் பொட்டலத்துடன் ஓடிவந்து ஏறுவார். அவர் என் அருகில் வந்து அமரும் போது, நான் சன்னல் பக்கம் திரும்பி கண்களில் துளிர்த்திருந்த நீரை துடைத்துக் கொள்வேன்.

அவர் மீது நிறைய கோபம் வரும். ஆனால் ஒருமுறை கூட வெளியே காட்டிக் கொண்டது கிடையாது. அப்பா ‘இந்தாடா’ என்று கொடுக்கும் முறுக்கை, அதன் எண்ணெய் பிசுக்கு வாசனையைச் சகித்துக் கொண்டு, ஓரிரண்டைத் தின்று விட்டு, மீதத்தை மஞ்சள் பைக்குள் திணித்துக் கொள்வேன் - இன்னும் ஓரிரு நாட்களுக்கு வைத்துத் தின்ன.

மீதிப் பயணம் முழுவதும் பேருந்தின் உள்புறங்களைக் கவனிப்பதிலும் சக பயணிகளின் உரையாடல்களையும், கூட்டம் நெருக்கியடித்தால் வசவு மொழிகளையும் கேட்டுக்கொண்டே கழிப்பேன்.

ஓட்டுனரின் பின்புறம் இருக்கும் தடுப்பில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறளை அருகில் அமர்ந்திருந்தால் படித்தும், பின்புற வரிசைகளில் அமர்ந்திருந்தால் படிக்க முயற்சியும் செய்வேன். கரம் சிரம் புறம் நீட்டாதீர் என்று உட்புறம் எழுதியிருந்தாலும், அநேகமாக சன்னலருகே அமர்ந்திருக்கும் அனைத்துப் பயணிகளும், முழங்கைகளையோ அல்லது தலையையோ புறம் நீட்டியவாறு பயணம் செய்வர்.

கூட்டமில்லாத சமயங்களில் உட்புற நடைபாதை காலியாக இருப்பதால் நடத்துனர் குறுக்கும் நெடுக்கும் பலமுறை நடந்து தலைகளை மறுபடி மறுபடி எண்ணிக் கணக்குப் பார்த்துக் கொள்வார். அவர் எப்படி எதையும் பிடித்துக் கொள்ளாமல், கீழே விழாமல், சில்லறை சிதறாமல், சரியாக சீட்டும் சில்லறையும் கொடுத்து, காதில் செருகியிருக்கும் பேனாவையும் அவ்வப்போது எடுத்து ஏதோ எழுதிக்கொண்டு, நிறுத்தங்களில் பார்க்காமலேயே சரியாக விசிலடித்து நிறுத்துகிறார் என்று மகா ஆச்சரியமாக இருக்கும்.

பிற்பாடு நடத்துனர்களைப் பார்க்கையில் என்றோ விகடனில் படித்த (பார்த்த!) நடத்துனர் வேலைக்காக ஒருவர் ஊஞ்சலில் நின்று கொண்டே இங்கும் அங்கும் ஆடி ஏதோ எழுத பயிற்சி செய்யும் கேலிச் சித்திரம் நினைவுக்கு வந்து (மதன்?) புன்சிரித்துக் கொள்வேன்.

வயதானால் நீண்ட நேரம் இருக்கையில் அமர்வது எவ்வளவு கடினம் என்பது இப்போது எனக்குப் புரிகிறது. அவர் இன்றும் அயராது சுற்றங்களைப் பார்க்கப் பேருந்தில் பயணம் செய்கிறார். என்னால் முடியவில்லை.

வெளிநாட்டில் இப்போது இருந்தாலும், இந்த வசதி வாய்ப்புகள் உறுத்துகின்றன – அங்கே இப்போது அப்பா ஏதாவது ஒரு நகரப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருப்பார் என்று நினைக்கையில்.

***

சுந்தர்

செப்டம்பர் 24, 2002 அன்று எழுதியது

Wednesday, March 16, 2005

ஸீல்

எங்கும் பனிக்குவியல்; நீர் உறைந்து பனிக்கட்டியாக இருக்கிறது. ஆங்காங்கே பனித்தரையின் பிளவுகளில் நீர் தெரிகிறது. கண்களைக் கூசச் செய்யும் வெண்மையோ வெண்மை.

அதன் முகம் அச்சாக நாய்க்குட்டியையும் கரடியையும் கலந்த கலவைபோல, குறுகுறுவென கருத்த விழிகளுடன் கொள்ளை அழகாக இருக்கிறது. உடல் பெரிய மீன் போலப் பருத்து, பட்டையான பெரிய செதிள்கள் போன்ற பின்கால்கள் பெயருக்கு தேய்த்துக்கொண்டு வர, முன் கால்களால் நெம்பி நெம்பி முன்னேறுகிறது அந்தக் கருப்புவெள்ளை ஸீல். பசுவைவிட சாதுவாக இருப்பது போன்ற தோற்றம். வெண்பனிக்குவியலில் கருப்பு ஸீல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அலைந்து கொண்டிருக்கின்றன.

கனத்த ஆடைகளால் தலையிலிருந்து கால்வரை மூடி, பூட்ஸ¤களணிந்த அந்த மனிதன் மெதுவாக நடந்து ஒரு ஸீலை நெருங்க அது சமர்த்தாய்த் தலையைத் தூக்கிப் பார்க்கிறது. அவன் கையில் நீண்ட வலுவான தடியொன்று முனையில் துருத்திக்கொண்டிருக்கும் கூரான கம்பியுடன். கைகளை உயர்த்தி அவனைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஸீலின் தலையில் தடியை வலுவாக இறக்க 'ம்க்'கென்ற ஒலியுடன் தரையை இடித்து மறுபடியும் முகத்தை உயர்த்த முயற்சிக்கிறது ஸீல். இம்முறை இன்னொரு வலுவான அடி. தலை தரையில் படர, மெதுவாக சிவப்பு ரத்தம் வெண்பனிக்கட்டித் தரையில் பரவுகிறது. மேலும் சில அடிகள். ஸீல் அசைந்து அடங்க அதைச்சுற்றிச் சிவப்புக் குட்டை.

அவன் சில அடி தூரத்தில் ஊர்ந்துகொண்டிருக்கும் அடுத்த ஸீலை நோக்கி நடக்கிறான்.
Image hosted by TinyPic.com
மேற்குறிப்பிடப்பட்ட 'படுகொலை'யைத் தொலைக்காட்சியில் பார்க்க நேரிட்டபோது அந்தச் சில நொடிகள் இயக்கம் ஸ்தம்பித்து அதீத அதிர்ச்சியுடனும், வேதனையுடனும் நொறுங்கிப்போனேன்.

இப்படிக் கொல்லப்படும் ஸீல்கள் ஒன்றல்ல இரண்டல்ல - ஆயிரக்கணக்கில் - ஒவ்வொரு வருடமும் - அவற்றில் 95% ஸீல்களின் வயது மூன்று மாதங்களுக்கும் குறைவாம்.

அந்த ஸீலின் முகம் தோன்றி இறைஞ்சுகிறது. உறங்க இயலவில்லை.

சுந்தர்

நினைவலைகள் *** கொய்யாப் பழங்கள் ***

முன்னுரை:

இணையத்தில் முதன்முதலில் எழுதப் பழகத் துவங்கியது மரத்தடி இணையக் குழுமத்தில் - சரியாகச் சொல்லவேண்டுமென்றால் 24 செப்டம்பர் 2002 அன்று குழுமத்தில் இணைந்து எனது முதற்கட்டுரையை இட்டேன். 'அதற்கென்ன இப்போ?' என்கிறீர்களா? அலுவல்பளுவில் ஒன்றும் புதிதாக எழுதவில்லை (பழைய பல்லவிதான்). இடைவெளி விட்டால் எழுத மறந்துபோகுமோ என்று பயமாகவும் இருக்கிறது. 'சரி வலைப்பதிவுக்கு வந்து கொஞ்ச நாள்கள் தானே ஆகிறது; ஆரம்பத்தில் எழுதியவற்றைச் சற்று அசைபோடலாம்' என்ற அவாவில் எனது முதற் கட்டுரையான 'கொய்யாப் பழங்கள்'-ஐ உங்கள் வாசிப்பிற்கு வைக்கிறேன். இன்னும் சில கட்டுரைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக இட உத்தேசம்.

அன்புடன்
சுந்தர்

நினைவலைகள் *** கொய்யாப் பழங்கள் ***

வத்திராயிருப்பு என்ற ஊரை உங்களில் எவ்வளவு பேருக்குத் தெரியும்? தமிழகத்தின் தென்கோடியில் மேற்கு மலைத்தொடரின் அடிவாரத்தில் இருக்கும் ஒரு குக்கிராமம். இப்போதும் குக்கிராமமாக இருக்கவேண்டும். அவ்விடம் விட்டு வந்து இருபது வருடங்களாகிவிட்டது. ஆரம்பப் பள்ளியில் படித்தபோது தமிழ் ஐயா ‘இது ராமநாதபுர மாவட்டத்தின் நெற்களஞ்சியம்’ என்று சொல்லியிருக்கிறார். பெயர்க் காரணம் கேட்டபோது ‘வற்றா இருப்பு’ என்றிருந்தது மருவி ‘வத்திராயிருப்பு’ என்று ஆகிவிட்டது என்றார். ஆங்கிலத்தில் ‘Watrap’ என்று எழுதப்பட்டு ‘வத்ராப்பு’ என்று அழைக்கப் படுகிறது. எப்போதாவது சில சாதி மோதல்களுக்கும், வெள்ளத்தால் சூழப் பட்டதற்கும் செய்திகளில் அடிபட்ட ஊர். மூன்று திசைகளிலும் மலைகள் சூழ்ந்திருக்கும் ஊர். தெற்கே கிருஷ்ணன் கோயிலைக் கடந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் செல்லலாம். வடக்கே தாணிப்பாறை. மேற்கே கூமாப்பட்டியைக் கடந்து சிறிது தூரம் சென்றால் மலையடிவாரத்தில் கிழவன் கோயிலும், பிளவக்கல் அணையும் உள்ளன. மலையைத் தாண்டினால் கேரளா என்று சொல்வார்கள். கிழக்கே சென்றால் தொலைதூரத்தில் மதுரையும் மிச்ச இந்தியாவும்.

கிருஷ்ணன் கோயிலென்பது ஒரு சிற்றூரின் பெயர். மதுரையிலிருந்து ராசபாளையம் செல்லும் வழியில், ஸ்ரீவில்லிப்புத்தூருக்குச் சில காத தூரம் முன்பே நெடுஞ்சாலையில் இருக்கிறது கிருஷ்ணன் கோயில். அனைத்துப் பேருந்துகளும் அங்கு நின்று செல்லும். நிற்கும் சில விநாடிகளில் மூங்கில் கூடைகளிலும், தட்டுக்களிலும் இனிய கொய்யாப் பழங்களை அடுக்கிக் கொண்டு அழுக்கு வேட்டி சட்டை விவசாயிகளும், தபால் பொந்துடன் அரைக்கால் சட்டையணிந்த சிறுவர்களும், குச்சியுடல் சிறுமிகளும், பெண்களும் பேருந்துகளைச் சூழ்ந்து கொள்வார்கள்.

பெரியவர்கள் சன்னல் வழியாக நீட்டி விற்பனை செய்ய, சிறுவர்கள் பேருந்தின் உள்ளே புகுந்து, ‘அக்கா, அண்ணே..டசன் மூணு ரூவா..’ என்று கூவிக் குறுக்கேயும் நெடுக்கேயும் நடத்துனர் மற்றும் ஓட்டுனரின் வசவுகளைப் புறக்கணித்துச் செல்வார்கள். பேரமும் விற்பனையும் சில விநாடிகளில் முடிந்து பேருந்து நகர்ந்து ஓடத் துவங்க, சிறுவர்கள் அபாயகரமாகக் குதித்து (பழங்கள் சிதறாமல்) ஒதுங்க, காலணியில்லா பெரியவர்கள் கூடவே ஓடிவந்து பயணிகளிடம் காசு வாங்கிக் கொள்வார்கள். இந்த நிகழ்ச்சி முடியும் வரை, என் இதயம் அதிகத் துடிப்பில் இயங்குவது வழக்கம் - யார் விழுவார்களோ, அடிபடுவார்களோ என்று. சில வம்பர்கள் பேருந்து நகரும் வரை நீட்டப்பட்ட தட்டுக்களில் இருக்கும் பழங்களை ஆராய்ந்து விட்டு, கடைசி விநாடியில் சிலவற்றை எடுத்துக் கொண்டு, வேகம் பிடித்ததும் சன்னல் வழியாகக் காசுகளை விட்டெறிவார்கள். வண்டியின் பின்புறம் எழும் புழுதியில் அந்த உழைத்துக் களைத்த, கருத்த மனிதர்கள் மறைவதை நான் கழுத்து வலிக்கும்வரை திரும்பிப் பார்த்துக் கொண்டேயிருப்பேன். இதயத்திலும் வலியுடன்.

கிருஷ்ணன்கோயில் இன்றும் அதே நிலைமையில் இருக்கிறது. அன்று நான் பார்த்த சிறுவர்கள் இன்று அழுக்கு வேட்டி சட்டையுடன் சன்னல் வழியாகப் பழத்தட்டு நீட்டி காசு வாங்கக் கூடவே ஓடி வருகிறார்கள், செருப்பில்லாக் கால்களுடன். பழத்தட்டில் கொய்யாவுடன் நீங்கள் ஆப்பிளையும் பார்க்கலாம்.

கிருஷ்ணன் கோயில் நிறுத்தத்தில் வலதுபுறம் செல்லும் வண்டிப் பாதையில் சென்றால் பத்தாவது மைலில் வத்திராயிருப்பு. நான் பிறந்து பதின்மூன்று வயது வரை இருந்த ஊர். எவ்வளவோ பசுமையான நினைவுகள் வற்றா இருப்பாக இன்னும் உள்ளன. அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

தமிழைத் தவிர வேறு மொழி அறியா பருவம். எனக்குத் தெரிந்த உலகத்தில் வத்திராயிருப்பும், மதுரைப் ‘பட்டணமும’, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலும் மட்டுமே இருந்தன. வேறெங்கும் சென்றறியாதிருந்தேன். அப்போதிருந்த என் சில அசைக்கமுடியாத நம்பிக்கைகள் வேடிக்கையானவை. அவற்றில் சில இதோ:

1. வத்திராயிருப்பில் மழை பெய்தால் ‘உலகம்’ முழுதும் மழை பெய்துகொண்டிருக்கிறது என்றும்

2. அங்கு வெயிலென்றால் எங்கும் வெயிலடிக்கும் என்றும்

3. அங்கு இரவானால் எங்கும் இரவு என்றும் நம்பினேன்.

செய்தித்தாள்கள் படிக்கத் துவங்கியும் (ஓசியில்) வானொலியில் செய்திகள் கேட்கத் துவங்கியவுடன், மேற்சொன்ன நம்பிக்கைகள் தகர்ந்தன. மதுரையில் மழை என்று செய்தி படித்தவுடன் ஏன் நம் ஊரில் மழை பெய்யவில்லை என்ற கேள்வி பிறந்தது. தாத்தாவிடம் ஓடிச் சென்று கேட்டவுடன், மடியிலமர்த்தி விளக்கினார். வெண் மேகங்களுக்கும், கார் மேகங்களுக்கும் உள்ள வித்தியாசத்தையும், அவைகளின் பயணத்தையும், கண் கூசச் செய்யும் மின்னலுடனும், ஆர்ப்பாட்டமான இடியுடனும் கூடி மழையருவி பொழிவதையும் விழிகள் விரிய ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டேன். மழைப் பிரளயம் முடிந்ததும், அதன் வலிமையையும் விசையையும் தாங்காமல் சிவந்த செவ்வானத்தைப் பற்றி அறிந்துகொண்டேன். என் கையளவு அறிவு என் தாத்தாவின் கடலளவு அன்பிலிருந்து கிட்டியது. மழை பெய்த விளக்கில்லா இரவுகளில் அருகிலிருக்கும் மரங்களிலிருந்தும் முட்காடுகளிலிருந்தும் சில்வண்டுகளின் உலோகச் சத்தம் இடைவிடாது கேட்கும். நீங்கள் கேட்டதுண்டா? சில்வண்டுகள் பகலிலும் ஆளில்லா முட்காடுகளில் ரீங்கரித்துக் கொண்டிருக்கும். எவ்வளவோ முயன்றும் அவற்றைக் கண்ணால் இதுவரை கண்டதில்லை. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

தாத்தாவின் விளக்கங்களைக் கேட்டவுடன், எனக்கு உடனடியாகத் தோன்றியது என்னவென்று சொன்னால் சிரிப்பீர்கள். மற்றுமொரு முறை வத்ராப்பில் மழை பெய்தால் ஊர்க் கோடிவரை ஓடிச் சென்று, அதாவது மழை பெய்யும் எல்லை வரை ஓடிச்சென்று, எல்லையைக் கடந்து மழை பெய்யா இடத்தில் நின்று திரும்பிப் பார்த்தால் மழை வானருவியாகப் பெய்வதை நனையாமல் (?) பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். பின்பு மெதுவாக தலையை மட்டும் மழை எல்லையின் உள் நீட்டி, உடல் நனையாமல் நின்று பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். கிட்டத்தட்ட இதேபோல் ஒரே சமயத்தில் இரவாகவும் பகலாகவும் இருக்கும் இரு வேறு இடங்களின் நடுவே நின்று இருளையும் ஒளியையும் மாறிமாறி ரசிக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்தக் குழந்தைத்தனம் இப்போது நினைக்கையில் இனிக்கிறது.

சிற்சில சமயங்களில் நினைத்துப் பார்க்கிறேன். அந்த வயதிலேயே இருந்திருக்கலாமோ என்று.

செப்டம்பர் 24, 2002

நன்றி : மரத்தடி இணையக் குழுமம்

Wednesday, March 02, 2005

நடு வானம் - சுணுக்கு

மரத்தடியில் முதலில் ஷக்திப்ரபா "மேற்கு வானம்" என்றொரு கவிதை எழுதினார். அது இங்கே:

"மேற்கு வானம்"-ஷக்திப்ரபா

பிறைச்சந்திரனின் சாயையில்
மஞ்சள் தோய்ந்த மாலைச் சூரியன்.
பார்வை தொடாத இடத்திற்கு
மௌனப் பயணம்.
வாழ்ந்த பொழுது பெருமையாய்
வீழும் பொழுதும் நளினமாய்
மென்மையாய்..
மலைகளின் மரங்களின் பின்னால்
மெல்ல மறைய
ஒவ்வொரு கணமும் என்னுள்
ஏதோ கரைகிறது.
மறையப் போகும் சுடரொளியை
தடுக்கயியலாது தவிக்கையில்
அடிவயிற்றில் எழும்பிய வலி.
கடைசியாய் ஒரு மஞ்சள் புள்ளி
இருட் கரைசலில் காணமல் போனதும்
இன்ன பிறவும் தொலைந்தது.
இருள் விலகி,
இதே மரவிடுக்கிலிருந்தே
மறுபடி மலரும் சாதகப் பறவை.
விடியலுக்கு இன்னும் சிறிதே நேரம்.

***

பின்பு ஷைலஜா "கிழக்கு வானம்" என்ற தலைப்பில் ஒரு கவிதையை உள்ளிட்டார்:

"கிழக்கு வானம்" - ஷைலஜா

வெளுத்தது கிழக்கு
வைகறையின் வரவில்
புள்ளினங்கூடி
இசைத்தது கானம்
சிரித்தன மலர்கள்
பெண்மலராம்
சூரியகாந்தி ஒன்று
பேரொளி ஞாயிறின்
வரவுகண்டு

நாணம் துறந்தது
அவன்முகம் நோக்கத்
தன் இதழ் விரித்தே
திரும்பியது
ஆதவன் அதனை
ஆசைப்பார்வை
பார்க்கவுமில்லை
அன்பாய் தன்கரம்
நீட்டவுமில்லை

விண்ணிடை ஏறினான்
அவன் வழிதன்னில் சென்றிட்டான்
ஆருயிர்க்காதலி காந்தியின்
அன்புமனம் அறிந்திலான்
ஆயிரம் கனவுகள் பெண்மலருக்கு
ஆண் மகன் ஆதவன்
அதை உணரவில்லைதான்
பாவிக் கொடுங்கதிர்வீசியே
பாவை அவள் மேனியை
வாட்ட வைத்தான்
மேற்குமலை உச்சியை
வேகமுடன் போய்
முத்தமிட்டான்
மலைமகளோடு
மனம் மகிழ

இருட்டுப் போர்வையை
இழுத்துப் போர்த்திக்
கொண்டான்

ஏங்கித் தவித்திட்ட
நங்கை காந்தி
தாங்கணா சோகத்தில்
தலை குனிந்தாள்
எட்டாத காதலில் சிக்கி
ஏங்கித் தவித்தமனம்
மற்றைய நாளின்
கிழக்குவிடியலுக்கு
மானசீகமாய்
காத்திருக்கும்.

***

'அட இது நல்லாருக்கே' என்று புருவம் உயர்த்தி, 'நம்மளும் எதாச்சும் இதே மாரி எஜுகை மஜுகையா எழுதணும்' என்று என் சுணுக்குப் புத்திக்குத் தோன்றி எழுதிய சுணுக்கு இதோ.

"நடு வானம்" - சுணுக்கு சுந்தர்

கால்களுக்கிடையில்
கண்ணாமூச்சியாடும்
என் நிழல்
காதோரமிறங்கிக்
கழுத்தில் நுழையும்
வியர்வையின் கசகசப்பு
கண்களிலும் பரவி
மங்கும் பார்வை

இயக்கமற்ற தெருவினூடே
நிழல் தேடியோடும் நாய்
குப்பைத் தொட்டியருகில்
எறியப்பட்ட
வாழையிலைகள்

திடீரெனச் சந்தில்
வெளிப்பட்டு
இலக்கற்று இரைந்து
ஓடும் எருமை

அதீத வெப்பத்தில்
ஆடை நனைய
மிதிவண்டியைத் தள்ளும்
ஐஸ் விற்பவன்

திண்ணையில் விசிறியுடன்
வெறித்து நோக்கும்
வயசாளிகள்

மணியொலிப்பிக்கொண்டே
நெல்மூட்டைகள் சுமந்து
சீரான தப்படியில்
கடந்து போகும்
ரெட்டை மாட்டுவண்டி

சுடுகிறது உச்சந்தலை

மொத்தமும் பூமியில்
தஞ்சமடைந்திட
புல்பூண்டற்றுக்
கட்டாந்தரையாய்
பறவைகளற்ற வானத்தில்
அனாதையாய்
உச்சியில் தொங்குகிறது
ஒற்றைச் சூரியன்
உக்கிரமாய்

***

'சரி முடிஞ்சுதுடா சாமி'ன்னு நினைச்சுக்கிட்டிருக்கும் போதே ஷைலஜா நடுவானத்தைப் படிச்சுட்டு 'கிட்டத்தட்ட இதேமாரி ஏற்கெனவே "பகற்பொழுது"ன்னு எழுதிருந்தேன்' ஒரு குண்டைத் தூக்கிப்போட்டு, 'பகற்பொழுதை'யும் தூக்கிப் போட்டார்.

"பகற்பொழுது" - ஷைலஜா

பட்டப்பகல்
பக்கத்திலெல்லாம்
பலப்பல ஓசைகள்
வாகன இரைச்சல்
காய்கறிக்காரனின்
தக்காளி கிலோஏழுரூபா
காகம் ஒன்றின்
ஓயாக்கரையல்
சக நாய்கண்டு
தெருநாய் குறைக்கும்
யார்வீட்டு தொலைக்காட்சியிலோ
மெகாசீரியலில்
மாமியாருக்கும்
மருமகளுக்கும்
வாக்குவாதம்
சின்ராசுக்கடையின்
கல்லாப்பெட்டியில்
சில்லரைவிழும்சத்தம்
செந்தில் சைக்கிள்கடையில்
வைராஜாவை
பாட்டும் ஆட்டமும்
உச்சிகாலபூஜைக்குக்
கோயிலுக்கு விரையும்
கோமளா மாமியின்
மெட்டிஒலிச்சத்ததைமீறும்
செருப்புச்சத்தம்
எதிர்வீட்டுத்தாத்தாவின்
தூக்கிவாரிப்போடும்
ஒற்றைத்தும்மல்
இத்தனை அமளிக்குநடுவே
வெய்யிலிடைத்தீவாய்
விண் நோக்கிதியானிக்கும்
மரம்மட்டும்
தரைமீது
அமைதியாய்
தன் நிழல்
பரப்பும்

***

சரி சரி. இன்னும் அர்த்த சாமங்களுக்கும் யாராச்சும் கவிதையோ சுணுக்கோ எழுதிருப்பாங்க. எல்லாரும் நல்லாருங்க!

அன்புடன்
சுந்தர்

நன்றி : மரத்தடி இணையக்குழுமம்