Saturday, February 24, 2007

துக்ளக்கா சோ? # 3 (நிறைவுப் பகுதி)

Image and video hosting by TinyPic
துக்ளக் 37-ஆம் ஆண்டுவிழா நிறைவுரையில் பேசிய சோ அவர்களின் உரையின் இறுதிப் பகுதி.

நன்றி: துக்ளக்.காம்

தீவிரவாதத்தில் மத்திய அரசு எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்று சொன்னேன். அதற்கு ஏற்ற வகையில் இங்கே ஒரு அரசு செயல்படுகிறது. பொடா சட்டத்தில் கைதானவர்களை எல்லாம் வெளியில் விட்டு விட்டார்கள். எல்.டி.டி.ஈ. மீது விதிக்கப்பட்டிருக்கும் தடை விவாதத்திற்குரியது என்கிறார் முதலமைச்சர். இங்கே, ஒரு முன்னாள் பிரதம மந்திரியைக் கொலை செய்திருக்கிறார்கள். அங்கே இலங்கையில் தமிழ் தலைவர்களை எல்லாம் கொன்று குவித்தார்கள். இந்த மாதிரியெல்லாம் செயல்பட்டவர்களை "தடை செய்தது சரியா, தவறா என்று பார்க்கிறோம் என்ற அளவில் விவாதத்திற்குரியது' - என்கிறார்.

அதனால்தான் எல்.டி.டி.ஈ. பிரச்சாரம் இப்போது ஓங்கிக் கொண்டே இருக்கிறது. நல்லதா இது? யாழ்ப்பாணத்தில் இதனால் என்ன சாதித்தார்கள்? யாழ்ப்பாணத்தை சுடுகாடாக ஆக்கியிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தவர்கள் மாதிரி படிப்பில் புத்திசாலிகள் கிடையாது. சுமார் 92 சதவிகிதம் பேர் படித்தவர்கள். இப்போது அது எல்லாமே பாழ். வெளியேறியவர்கள் தப்பித்தார்கள். இல்லா விட்டால் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்துதான் தீர வேண்டும். வேறு வழியில்லை. 7 வயதிலும், 10 வயதிலுமுள்ள பையன்களின் கைகளில் துப்பாக்கியைக் கொடுத்து, இலங்கை ராணுவத்தின் முன்னால், தங்களுக்குக் கேடயமாக நிறுத்தும் கோழைகளை எப்படி நாம் பாராட்டுவது? அந்த மாதிரி நிலைமை தமிழ்நாட்டுக்கு வர வேண்டுமா? அந்த மாதிரி கலாச்சாரம் இங்கே பரவ வேண்டுமா? இவற்றுக்கெல்லாம் இந்த அரசு ஆதரவு தருகிறது.

சரி. மற்றதை பார்ப்போம் என்றால், இந்த இலவசத் திட்டத்தில் என்னென்னவோ வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். எல்லோருக்கும் கொடுக்க முடியுமா என்ற சந்தேகம் வந்து விட்டது. ஆகையால் தவணை முறையில் கொடுக்கிறார்கள். தவணை முறையில்தான் கொடுக்க முடியும். டெலிவிஷன் செட்டுகளை திடீரென்று எல்லோருக்கும் கொடுக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. டி.வி. கொஞ்சம் பேர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள்; கேஸ் அடுப்பு கொஞ்சம் பேருக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இதுவே பெரிய விஷயம் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஏனென்றால் இந்த அளவு கூட தருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

மூன்றுபடி அரிசியைப் பார்த்தவன் நான். அது கூட கலைஞர் பண்ணியிருக்க மாட்டார், வேறு யாராவதுதான் செய்திருப்பார்கள் என்று நினைக்கக் கூட இடமில்லை. ஏனென்றால் அவரே (கலைஞரே), ""1967ல் இருந்து தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கிறவன் நான்தான்'' என்று சொல்லி விட்டார். ஆகையால் அந்த டுபாக்கூரும் அவருடையதுதான் என்று தெரிந்து போயிற்று. சரி. அப்பொழுதிலிருந்தே பழக்கப்பட்டவர், இப்போது இந்த மாதிரி சொல்லி இருக்கிறார் போலிருக்கிறது. இதில் கொஞ்சமாவது இலவசங்களைக் கொடுக்கவில்லை என்றால், தவறாகப் போய்விடும் என்று நினைத்திருக்கிறார்.

"மைனாரிட்டி அரசு, மைனாரிட்டி அரசு' என்று ஜெயலலிதா சொல்கிறார். பா.ம.க.வினரும் அவ்வப்போது சந்தேகத்தைக் கிளப்புகிற வகையில் பேசுகிறார்கள். காங்கிரஸையும் முழுக்க நம்ப முடியாது. அதிலும் காங்கிரஸிலும் இருக்கிற த.மா.கா. சக்திகள் என்ன செய்யும் என்று சொல்ல முடியாது. ஆகையால் பாராளுமன்றத் தேர்தல் வந்தால், அப்பொழுது சட்டசபையையும் கலைத்து விட்டு, தேர்தல் நடத்தலாமா என்று (கலைஞர்) யோசிக்கிறாராம். இது நிச்சயமா என்று எனக்குத் தெரியாது. அப்படி இருந்தால் வியப்பதற்கில்லை. இந்த கூட்டணியை அப்படியே தக்க வைத்துக் கொள்ள முடிந்தால் - சீட் பேரங்கள் எப்படி நடக்கும் என்று சொல்ல முடியாது ௲ சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என்று அவர் (கலைஞர்) நினைக்கலாம். அதனால் இந்த இலவசங்கள் எல்லாம் நடக்கிறது. அதுவரைக்கும் இவையெல்லாம் நடக்கும் என்று சிலர் சொன்னார்கள்.

இலவசத்தில் எல்லாம் கொஞ்சம் சாம்பிள் செய்து காட்டியவர், இந்த இரண்டு ஏக்கர் நிலத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை. கொடுப்பதற்கு நிலம் இல்லை. எங்கே
இருந்து கொடுப்பது? ஆகையால் இவர் என்ன செய்தார் என்றால், "ஜெயலலிதா அரசுதான் தவறாகக் கணக்குக் கொடுத்தது; அதை நான் நம்பி விட்டேன்' என்று சொன்னார். "53 லட்சம் ஏக்கர் இருப்பதாக ஜெயலலிதா அரசு கணக்குக் கொடுத்தது; அப்படிக் கூறிய பொன்னையன் இப்போது எங்கே?' என்று கேட்டார்.

உண்மையில் நடந்தது என்னவென்றால், இவர் (கலைஞர்) கொடுத்த கணக்கு அது. 55 லட்சம் ஏக்கர் என்று இவர் கணக்குக் கொடுத்தார். ""தேர்தல் சமயத்தில் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் கிடப்பதை என்னுடைய அரசாங்கம் கண்டுபிடித்து, அதை உரிய வகையில் பயன்படுத்த நினைத்தபோதுதான், நாங்கள் வெளியேற நேர்ந்தது'' என்றார். அதாவது ஐந்து வருடங்களுக்கு முன்பே இது அவருக்குத் தெரியும். இவர்கள்தான் கண்டுபிடித்தார்கள். இப்போது அதை மறைக்கப் பார்க்கிறார்கள். அதனால் "இப்போது கலைஞர் எங்கே?' - என்றுதான் கேட்க வேண்டும். "பொன்னையன் எங்கே?' என்று கேட்டு பயன் இல்லை. அதற்கு முன்பே தீர்மானம் செய்தவர்கள் இவர்கள்தான்.

அதில் என்னவாயிற்று? "இரண்டு ஏக்கர்... இல்லை ஒரு ஏக்கர்... உள்ளங்கை அளவாவது நிலம் கொடுப்பேன்' என்று கூறி விட்டார். உள்ளங்கை அளவு நிலத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? சில பேர்களுக்கு பதவி கொடுக்காத சமயத்தில், "இதயத்தில் இடம் தருகிறேன்' என்பார். அந்த மாதிரி யாருக்குமே நிலம் கிடைக்காத போது, எல்லோருக்கும் உள்ளங்கை அளவு நிலம். ஃப்ளாட் கட்டுகிறவர்கள் கொடுக்கும் ஷேர் கூட கொஞ்சம் அதிகமாகத் தான் இருக்கும். "ஒளவையார் படத்தில் ஒரு பாட்டு வரும். ஒருவரிடம் ஒளவையார் செல்ல, "நாளைக்கு வா, நாளைக்கு வா' என்று கூறி, கடைசியில் ஒன்றும் கொடுக்க மாட்டார்.

"கரியாகி, பரியாகி, கார் எருமை
தானாய் எருதாகி,
முழப் புடவையாகி, திரிதிரியாய்த்
தேரைக்கால் பெற்று மிகத் தேய்ந்து
காலோய்ந்ததே
கோரைக்கால் ஆழ்வான் கொடை'
- என்று ஒரு பாடல் வரும்.

அந்த மாதிரி, இவருடைய இரண்டு ஏக்கர் நிலம் கோரைக்கால் ஆழ்வான் கொடையாகி விட்டது; அவருக்கு இப்பொழுது "கோரைக்கால் ஆழ்வான்' என்று பட்டம் கொடுத்தால் கூட தவறில்லை. அவர் விரும்புவார். பட்டம் என்றால் எதுவாக இருந்தாலும் கவலைப்பட மாட்டார். பட்டம்தானே? பட்டம் வாங்கிக் குவிப்பதை அவர் விரும்புவார். ஆகையால் வந்த வரைக்கும் லாபம் என்று வாங்கினாலும் வாங்கிக் கொள்வார்.

இதைத் தவிர தமிழை வளர்க்கப் போகிறோம் என்கிறார்கள். எப்படி வளர்க்கிறார்கள்? சினிமாவின் பெயரை தமிழில் வைத்தால், அந்தப் படத்திற்கு கேளிக்கை வரி கிடையாது. சினிமா பெயரை மட்டும் தமிழில் வைத்தால் போதும். சினிமாவில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எவ்வளவு அசிங்கம் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் படத்தின் பெயர் மட்டும் தமிழில் இருக்க வேண்டும். இதனால் எல்லோரும் படத்தின் பெயரை தமிழில் வைக்க ஆரம்பித்து விட்டார்கள். அரசுக்கு கேளிக்கை வரி வசூலாகப் போவதில்லை.

இந்த இலவசங்களால் இந்த அரசு திவாலாகப் போகிறது என்று நான் நினைக்கிறேன். பெரிய பிரச்சனை வரப் போகிறது. பீஹாரில் ஒருமுறை, சுமார் ஒரு வருடத்திற்கு மேல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. அதைப் பற்றி அவர்களும் கவலைப்படவில்லை. ஏனென்றால் மற்ற வருமானம் அவர்களுக்கு வந்து கொண்டிருந்தது.

அந்த மாதிரி நிலைமை இங்கு வரலாம். அதனால் கமர்ஷியல் டாக்ஸையெல்லாம் வசூல் செய்து விடுவோம் என்கிறார்கள் - இப்பொழுது பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது. வணிக வரியை இதுவரை கட்டாதவர்களிடமெல்லாம், வசூல் செய்வதற்காக ஒரு திட்டம். அதாவது "கட்ட வேண்டிய பாக்கித்தொகையை கட்டினால் போதும்; அதற்கு அபராதமும் கிடையாது, ஒன்றும் கிடையாது' என்று திட்டத்தை அறிவித்தார்கள். இதில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் வசூலாகி விடும் என்று எதிர்பார்த்தார்கள். ஒன்றரை கோடி ரூபாய்தான் வசூலாகி இருக்கிறது. பிறகு எங்கே போவார்கள் இவர்கள்? இப்படிப்பட்ட சூழலில் தமிழக அரசு திவாலாகப் போகிறதோ என்னவோ? அந்த மாதிரிதான் தோன்றுகிறது. இதில் இலவசங்களை வேறு வாரிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழை செம்மொழியாக்கி விட்டோம் என்று சொல்கிறார்கள். சரி, செம்மொழியாக்கி விட்டார்கள். நான் ஒரு யோசனை சொல்கிறேன்: பெரியாருக்கு 128 சிலை வைக்கப் போகிறார்கள். செம்மொழி என்றால் அதைச் செயல்படுத்துவதற்கு ஒரு அலுவலகம் இருக்கும். அந்த அலுவலகத்தின் எதிரில் பெரியார் சிலையை வைக்க வேண்டும். ஏற்கெனவே கோவிலுக்கு எதிரில் வைக்கப்பட்டிருக்கும் பெரியார் சிலையில் "கடவுளை கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்பினவன் அயோக்கியன்; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி' என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அதே போல இந்த பெரியார் சிலைகளின் கீழ் "தமிழ் காட்டுமிராண்டி பாஷை'; "தமிழை படித்தவன் உருப்பட முடியாது' என்றெல்லாம் எழுதுவார்களா?

அதுதான் வேண்டாம். கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் எதிரே பெரியார் சிலையை வைக்க வேண்டும். 128 சிலையையும் வைக்க வேண்டுமே? அவர்கள் மட்டும் பின் தங்கி இருப்பானேன்? அவர்களையும் முன்னேற்றி விடுவோம். கம்யூனிஸ்ட் அலுவலகம் எதிரே சிலை. அந்த சிலையில் "எவன் காலை நக்கியாவது, பிழைப்பவன் கம்யூனிஸ்ட்; அயோக்கியர்கள், பித்தலாட்டக்காரர்கள், கலவரக்காரர்களைக் கொண்டதுதான் கம்யூனிஸ்ட் கட்சி'. இதெல்லாம் பெரியாருடைய பொன்மொழிகள். இவற்றையெல்லாம் அங்கே எழுதி வைக்கலாமே!

காங்கிரஸ் கட்சி இவர்களுக்கு வேண்டிய கட்சிதான். அவர்களுடைய அலுவலகக் கட்டிடத்தின் வாசலில் பெரியார் சிலை இல்லை என்றால் எப்படி? அவர்கள் தினமும் அதைப் பார்க்க வேண்டாமா? அந்த சிலைக்கு முன்னால் "ஒழிய வேண்டியது காங்கிரஸ் கட்சி; "பொறுக்கித் தின்பவன்தான் காங்கிரஸை ஆதரிப்பான்' - என்று எழுதி வைக்க வேண்டியதுதானே! ஆனால் அப்படி சிலை வைத்தால் கூட காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியாமல் போய் விடும். அவர்கள்தான் சத்திய மூர்த்தி பவனுக்குப் போவதில்லையே! அறிவாலயம்தானே போகிறார்கள்.

கலைஞர், ஒவ்வொன்றுக்கும் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

"சிவாஜி சிலையை வைக்க நீதிமன்றத்தில் அனுமதி தந்து விட்டார்கள். அதற்கு அனுமதி மறுத்திருந்தால், இன்னொரு சிலை வைக்க வேண்டியிருக்கும்' என்கிறார். அதாவது இவரும் (கலைஞரும்) சிலையாகி விடுவாராம். இதெல்லாம் என்ன பேச்சு? இதெல்லாம் பெண்கள் பேசும் பேச்சு போல் இருக்கிறது. பேச்சில் ஒரு கம்பீரம் இருக்க வேண்டாமா? அப்படிப் பார்க்கும்போது ஜெயலலிதா பேசுகிற பேச்சு, ஆண்கள் பேசுவது போல் இருக்கிறது. நாம் என்னதான் செய்வது என்று தெரியவில்லை.

மஞ்சள் துண்டுக்கு என்னென்னவோ விளக்கம் கொடுத்தார். "மருத்துவர்கள் குளுமையாக இருக்கும் என்று சொன்னார்கள்' என்றார். இன்னொன்று - "இது பொருத்தமாக இருக்கிறது' என்று சொன்னார். இன்னொன்று - "புத்தர் போட்ட கலர் இது' என்றார். "இப்பொழுது முதலில் இந்த மஞ்சள் துண்டை ராமதாஸ் எனக்கு அணிவித்தார். அந்த உறவுக்காக இதை அணிகிறேன்' என்றார். நல்லவேளையாக ராமதாஸ் மலர் கிரீடம் வைக்கவில்லை; வைத்திருந்தால், இவர் போகுமிடமெல்லாம் மலர் கிரீடத்துடனே போவார் போலிருக்கிறது. மன்மோகன் சிங்கே பார்த்து இவர் யாரென்று ஆடிப் போய் விடுவார். ஒவ்வொன்றுக்கும் பல காரணங்கள். ஒரு காரணத்தோடு எதையுமே விடுவது கிடையாது.

"ராமர் கோவில் கட்டுவோம் என்று பிடிவாதமாக இருந்ததால், பா.ஜ.க. கூட்டணியை விட்டேன்' என்றார். பிறகு இப்பொழுது சமீபத்தில் "தாழ்த்தப்பட்டவர்களை மந்திரியாக்க வேண்டும் என்று சொன்னேன். கேட்கவில்லை. அதனால் பா.ஜ.க. கூட்டணியை விட்டேன்' என்றார். ஒவ்வொன்றுக்கும் இரண்டு மூன்று காரணங்களைக் கூறுகிறார். இந்த ஈழம் கொள்கைக்கு இவர் கொடுத்திருக்கிற விளக்கம் இருக்கிறதே அது மிகவும் அசாத்தியம். தெளிவான சிந்தனையே கிடையாது. ஆனால் இவர்கள் எல்லாம் பகுத்தறிவுவாதிகள்.

இப்படி இருக்கிற போது, கார்ப்பரேஷன் தேர்தலில் நடந்த மாதிரி ஒரு அட்டூழியமான தேர்தல் பீஹாரிலும் கூட நடந்திருக்குமா என்பது சந்தேகமே. அப்படி ஒரு தேர் தலை நடத்திக் காட்டினார்கள். எவ்வளவு வன்முறை? எவ்வளவு கள்ள ஓட்டு? கடைசியாக நீதிபதியே, "அட்டூழியம் நடந்திருக்கிறது; தேர்தலே நடக்கவில்லை. 99 வார்டுகளில் தேர்தல் நடத்துங்கள்' என்று கூறி விட்டார்.

ஒரு நீதிபதியே இந்த அளவுக்கு மாநிலத் தேர்தல் கமிஷனைப் பற்றி பேசியிருக்கிறார். முன்பு எதிர்க் கட்சியினர் எல்லாம் சொன்ன பொழுது, "தேர்தல் கமிஷனர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர், ஆகையால் இவர்கள் எல்லாம் சொல்கிறார்கள்' என்றார் கலைஞர். இதுதான் அவருடைய (கலைஞருடைய) பதில். இப் போது நீதிபதியைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்? அப்படி ஏதாவது சொன்னால், அது நீதிமன்ற அவமதிப்பாகி விடும். இதையே ஒரு பிராமண நீதிபதி சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. கொஞ்சத்துக்குக் கொஞ்சம் பூடகமாக ஏதாவது சொல்லி விடலாம். சொன்னது ஒரு முஸ்லிம் ஜட்ஜ். ஆகையால் இன்னும் தர்மசங்கடம் அதிகம். அவ்வளவு கேவலமாக ஒரு தேர்தல் நடந்தது.

இன்னொரு நீதிபதியான முகோபாத்யாயா, "தேர்தலில் தலையிட முடியாது. ஆகையால் இந்த வழக்கில் சாரம் இருக்கிறதா என்று நான் பார்க்கப் போவதில்லை' என்று கூறி விட்டார். அவரும் தேர்தல் ஒழுங்காகத் தான் நடந்தது என்று சொல்லவில்லை. "இப்பொழுது அதைப் பார்க்க முடியாது' என்று கூறி விட்டார். இந்த வழக்கைப் பொறுத்தவரையில் சட்டத்தினுடைய நிலைமை அதேதான் என்று உறுதி செய்யப்பட்டாலும், வியப்பதற்கில்லை. சட்டம் அப்படித்தான் இருக்கிறது. இருந்தாலும் ஒரு நீதிபதி, இவ்வளவு தூரம் கண்டனம் செய்திருக்கிறார் என்பது அரசாங்கம் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம். சரி, இது இதோடு முடியும் என்று நான் நினைக்கவில்லை.

சட்டசபைத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றுக்கு இந்த கார்ப்பரேஷன் தேர்தல் ஒரு ஒத்திகை என்றுதான் நான் நினைக்கிறேன். அந்தத் தேர்தலில் இந்த மாதிரி செய்ய முடியுமா? அது தேசிய தேர்தல் கமிஷனின் கீழ் இருக்கிறது. அவர்கள் இந்த மாதிரி ஒத்துழைக்க மாட்டார்களே என்றால் - உண்மை தான்; ஒத்துழைக்க மாட்டார்கள். ஆனால் ஓட்டுச் சாவடி அதிகாரிகள் அனைவரும் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். போலீஸ், மாநில போலீஸ். தேர்தல் கமிஷனுக்கென்று தனி போலீஸ் கிடையாது. ஆகையால் பெரிய அளவில் 150 சட்டமன்றத் தொகுதிகளில் அட்டூழியம் நடந்தது என்றால், தேர்தல் கமிஷன் மீண்டும் அந்த எல்லாத் தொகுதிகளிலும் தேர்தலை நடத்திக் கொண்டிருக்க முடியாது. மேலும் இந்த மாதிரி பெரிய அட்டூழியம் நடந்தது என்று சொன்னால், தேர்தல் கமிஷனுக்கும் இழுக்கு.

ஏனென்றால் "மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் எப்பேற்பட்ட தேர்தலை நடத்தி இருக்கிறோம்' என்று சொல்ல வேண்டும். ஆகையால் ஒரு நான்கு சட்டசபை தொகுதிகளை தேர்ந்தெடுத்து, "இங்கே அட்டூழியம் நடந்து விட்டது. ஆகையால் மறு தேர்தல்' என்று சொல்லி விடுவார்கள். அவ்வளவுதான். மற்ற இடங்களில் தோற்றவர்கள், தோற்றவர்கள்தான். வெற்றி பெற்றவர்கள், பெற்றவர்கள்தான். இந்த மாதிரி நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

விஜயகாந்தை எடுத்துக் கொண்டால், அவர் ஓட்டை பிரிக்க முடியுமே தவிர, அவர் வெற்றி பெற்று என்றைக்கு ஆட்சிக்கு வரப் போகிறார்? "எல்லா இடங்களிலும் இவர் கட்சிக்கு டெபாசிட் போகும்; இவர் மட்டும் ஜெயிப்பார்' என்று நான் முதலிலேயே எழுதினேன். அதே மாதிரி முக்கால்வாசி இடங்களில் இவர் கட்சிக்கு டெபாசிட் போய் விட்டது. இவர் மட்டும் தான் ஜெயித்தார். ஆகையால், இவரும் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதாவும், "யாருமே வேண்டாம்; நான் ஜெயித்துக் காட்டுவேன்' என்று நினைத்தால், அவர் தனக்குத்தானே தோண்டிக் கொள்கிற குழிதான் அது. அவரும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். பா.ஜ.க., அ.தி.மு.க., விஜயகாந்த் -எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து போட்டியிட்டால், இப்போதைக்கு ஒரு மாற்றத்தை காணலாம். பல தவறான விஷயங்களில் அரசு காட்டும் வேகத்தையும் தடை செய்யலாம் என்று நினைக்கிறேன்.

(அரங்கத்திலிருந்து வைகோ பற்றி ஒருவர் கேட்டார்) அவருடைய விடுதலைப் புலி ஆதரவை நான் கடுமையாக எதிர்க்கிறேன். அதில் ஒரு விஷயத்தை நாம் பார்க்க வேண்டும். அவர் ஜெயலலிதாவுடன் கூட்டணியில் இருக்கிறார். வைகோ விடுதலைப் புலியின் தீவிர ஆதரவாளர். அவர் கூட்டணியில் இருக்கும்போதே "நளினியை ஏன் தூக்கில் போடவில்லை?' என்று ஜெயலலிதா அறிக்கை விடுகிறார். அதுதான் தைரியம் என்பது. ஜெயலலிதா செய்வது எல்லாம் சரி என்று நான் சொல்லவில்லை. நிறைய தவறுகள் இருக்கின்றன. ஆனால் தி.மு.க., அ.தி.மு.க.தான் மாற்று என்கிற போது எந்தெந்த சமயத்தில் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைப் பார்க்கத்தான் வேண்டும். அ.தி.மு.க. ஊழல் அதிகமான பொழுது, தி.மு.க.வைப் பார்த்தோம். தி.மு.க. தவறு செய்யும்பொழுது, அ.தி.மு.க.வைப் பார்க்க வேண்டும். வேறு வழியில்லை. ஆகையால் இப்பொழுதிலிருந்தே இவர்கள் (அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க.) ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு, ஒரு வலுவான கூட்டணி அமைய, ஏற்பாடு செய்ய வேண்டும்.

காங்கிரஸிலும் எப்படி என்று சொல்ல முடியாது. த.மா.கா.வில் இருந்தவர்கள் தினமும் அங்கே அவமானப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சென்ற முறையே தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியே வருகிற மாதிரிதான் இருந்தது. அந்தக் கட்சி என்ன செய்யும் என்று சொல்ல முடியாது. ஆகையால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். மத்தியிலும் என்ன ஆகப் போகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

(9ஆவது அட்டவணையைப் பற்றி ஒருவர் கேட்டார்) "9ஆவது அட்டவணையில் 284 சட்டங்களைச் சேர்த்திருக்கிறார்கள். இது மாதிரி சேர்த்த சட்டங்களை சுப்ரீம் கோர்ட் பரிசீலிக்கத்தான் வேண்டும்' என்று முதலிலேயே எழுதி இருந்தேன். அந்த மாதிரிதான் இப்பொழுது தீர்ப்பும் வந்திருக்கிறது. ரொம்ப நல்ல தீர்ப்பு. இந்த விஷயத்தில் வக்கீல் விஜயனையும் நாம் பாராட்ட வேண்டும். அவர் மிகவும் கடுமையாகத் தாக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஏழெட்டு மாதங்கள் ஆஸ்பத்திரியில் இருந்தார். நான் போய் அவரைப் பார்த்தேன். உடல் முழுக்க பேண்டேஜ்தான் தெரிந்தது. நான் போய்ப் பார்த்தது கூட அவருக்குத் தெரியுமோ, தெரியாதோ! அவர் அப்பொழுது பேசினார். அதனால் நான் வந்தது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். சினிமாவில் எல்லாம் காட்டுவார்களே அந்த மாதிரி - கண் மட்டும்தான் தெரிந்தது. உடல் முழுக்கவும் பேண்டேஜ்தான். அப்படி அவரை அடித்திருக்கிறார்கள். அப்படி அடி வாங்கியும் கூட விடாமல் அதைச் செய்கிறார் என்றால், என்ன மனோதைரியம் இருக்க வேண்டும்?.

அந்த மாதிரி தைரியத்தை நீங்கள் ராமகோபாலனிடமும் பார்க்கலாம். அவர் தலையில் துணியை கழட்டுவதில்லை. கழட்டினார் என்றால், இரண்டு விரலை அவர் தலையினுள் வைக்கலாம். அவ்வளவு ஆழமாக வெட்டி இருக்கிறார்கள். கால்வாய் மாதிரி. அதன் பிறகும், அவர் விடாமல் தன்னுடைய பணியைச் செய்து கொண்டிருக்கிறார் என்றால், அதற்கு வேண்டிய நெஞ்சுரம் அவரிடம் இருக்கிறது. இந்த மாதிரி சில பேர் இன்னமும் இந்த நாட்டில் இருக்கிறார்கள்.

(இந்த நேரத்தில் ஆசிரியரிடம் ஒரு துண்டு காகிதம் கொடுக்கப்படுகிறது). ஒரு வாசகர் கோரிக்கை - "இதற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். நீங்கள் இதற்கு பதில் சொல்லாமல் மழுப்பாதீர்கள். தமிழக முதல்வர் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் சொத்துக் கணக்கை வெளியிடுமாறு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பலமுறை கேட்டு விட்டார். ஆனால் கலைஞர் தன் குடும்பத்தினரின் சொத்து விவரத்தை வெளியிடவில்லை. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?' - என்று எழுதி இருக்கிறார்.

நான் என்ன ஆடிட்டரா? யாருக்கு தெரியும் இது? தெரிந்தவர்கள் நம்மிடம் வந்து சொல்லப் போகிறார்களா? இதைப் போய் என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்வது?

"கண்டாரும் கிடையாது; விண்டாரும்
சொன்னதில்லை;
அண்டாண்ட கோடியெல்லாம்
ஒன்றாய் சமைந்திருக்கும் அல்லவோ
ஏழை சொல்லவோ
நேரமாகுதல்லவோ...!
ஐயே... மெத்த கடினம்...'


முற்றிற்று.

***

நன்றி. துக்ளக்.காம்

2 comments:

Anonymous said...

//..யாழ்ப்பாணத்தவர்கள் மாதிரி படிப்பில் புத்திசாலிகள் கிடையாது. சுமார் 92 சதவிகிதம் பேர் படித்தவர்கள். இப்போது அது எல்லாமே பாழ். வெளியேறியவர்கள் தப்பித்தார்கள். இல்லா விட்டால் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்துதான் தீர வேண்டும். வேறு வழியில்லை. 7 வயதிலும், 10 வயதிலுமுள்ள பையன்களின் கைகளில் துப்பாக்கியைக் கொடுத்து, இலங்கை ராணுவத்தின் முன்னால், தங்களுக்குக் கேடயமாக நிறுத்தும் கோழைகளை எப்படி நாம் பாராட்டுவது?...//

ஆஹா, யாழ்ப்பாணத்தமிழர் மீது என்னே அக்கறை! இவர் தான் முன்னர் (1983 என நினைக்கிறேன்) தமிழருக்கு எதிரான 'தரப்படுத்தல்' என ஒரு திட்டத்தை ஸ்ரீலங்கா அமுல்படுத்த ஆரம்பித்த போது ஆதரித்தவர் மட்டுமல்ல சிங்கள மக்களுக்கு இட ஒதுக்கீடு (தரப்படுத்தல்) தேவை என எழுதியவர். யாழ்ப்பாண தமிழர் வசதியாக இருப்பதால் கல்வியில் மற்றவர்களை (மலையக, மட்டக்களப்பு தமிழர்) ஓரம் கட்டுகிறார்கள் என் பிரதேச வாதம் பேசியவர்.
சோ இந்திய அரசியல் பற்றிய கருத்துடன் நிற்பதே பொருத்தமானது!

தமிழ்பித்தன் said...

ஆரம்ப காலத்தில் சோவை எனக்கு நன்றாக பிடிக்கும் ஒரு படத்தில் சீன வைத்தியர் வந்து கதாநாயகனின் தந்தைக்கு நினைவை கொண்டு வர ஒரு கயிறை பயன் படுத்துவார் அதை எடுத்து வைத்துக்கொண்டு இதை வைத்து நான் அரசியல் வாதிகளுக்கு மீண்டும் வாக்குறுதிகளை நினைவுக்கு கொண்டு வரப்போகிறேன் என்று கூறுவார் ஆனால் அதே இப்பொது இவருக்கு தேவை போல கிடக்கு ஏனென்றால் முன்னுக்கு பின் முரனான கருத்தை அவர் வெளியிடுவதில் அவர் வல்லவர் அதாவது யாருக்கு மக்கள் ஆதரவே அல்லது எந்த விடயத்துக்கு ஆதரவு கூடவே அதற்கு எதிராக செயற்படுவது அல்லது கருத்து தெரிவிப்பது இது உண்மையில் ஒரு வகை மனநோயாம் எங்கே படித்த ஞாபகம்