Thursday, May 03, 2007

ஊற்றும் நெகிழ்வும்

ஸ்ரீரங்கத்தில் தனிமையில் அவர்களை விட மனமேயில்லை. அதிலும் வயது ஆக ஆக கவலை ரேகைகள் நிறையவே ஏறிக்கொண்டதால் ரொம்பவும் தவித்து, குளிர்காலமாக இருந்தாலும் பரவாயில்லை என்று அவர்களை அழைத்துவர முடிவாகிவிட்டது. கடந்த டிசம்பரில் விஸாவுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் அனுப்பி, இணையத்தில் நாள் குறித்து, அம்மாவும் அப்பாவும் சென்னையின் அமெரிக்கத் தூதரகத்தில் நேர்முகத்திற்குச் சென்று விஸா கிடைத்தது என்று தொலைபேசி சொன்னதும்தான் நிம்மதியாக இருந்தது.

பிப்ரவரி 1-ம் தேதி அவர்களது 40-வது திருமணநாள். சென்னையிலிருந்து கிளம்பி பாஸ்டனுக்கு பிப்-1 பிற்பகல் வந்து சேர்ந்தார்கள். நல்லபடியாக வந்து சேரவேண்டுமே என்று கவலையாக இருந்தது - அம்மாவின் உடல்நிலையை நினைத்து. கூடப் பயணித்த இன்னொரு நல்ல தமிழ் உள்ளம் அவர்களுக்கு பிராங்க்பர்ட்டில் விமானம் மாறுவதற்கு உதவி செய்து பாஸ்டனில் விமான நிலைய வாசல்வரை வந்தது - அவருக்கு நன்றி சொல்லி கிளம்பி வீட்டுக்கும் வந்தாகிவிட்டது. குழந்தைகள் இருவருக்கும் தாத்தா பாட்டி அன்று வரப்போவது தெரியாது. அவர்கள் பள்ளியிலிருந்து திரும்பும்முன் வீட்டிற்குச் சென்றுவிடவேண்டும் என்று சற்று வேகமாகவே வண்டியை ஓட்டி வந்தோம்.

பெரியவள் சின்னவள் இருவரும் மூன்று மணிக்கு வருவார்கள். பெற்றோரது பெட்டிகளை தற்காலிகமாக ஒளித்துவைத்துவிட்டு, அவர்களை குழந்தைகளின் அறையில் அமரச்செய்து கதவை மூடிவிட்டு 'ஒண்ணுமே தெரியாதது' போல வரவேற்பறையில் அமர்ந்துகொண்டோம்.

முதலில் வந்தது சின்னவள் துர்கா. வழக்கத்துக்கு மாறாக நான் வீட்டில் அந்த நேரத்தில் இருப்பதைப் பார்த்துவிட்டு 'இன்னிக்கு ஆபீஸ் லீவா?' என்று கேட்க, 'ஆமா. லீவு விட்டுட்டாங்க. Early Release day today' என்றேன்! அவள் புத்தகப் பையை இறக்கிவைக்க அவளது அறைக் கதவைத் திறந்ததும் தாத்தா பாட்டியைப் பார்த்து ஒரே ஒரு கணம்தான் ஸ்தம்பித்து நின்றாள். பிறகு ஒரு கையால் வாயை மூடிக்கொண்டு சிரித்துக்கொண்டே அறையைவிட்டு வெளியே ஓடி வந்தாள். பிறகு அதே வேகத்தில் உள்ளே திரும்ப ஓடி சட்டெனத் தரையில் அமர்ந்து பையைப் பிரித்து ஒவ்வொன்றாக வெளியே எடுத்து அவள் அன்று பள்ளியில் செய்த சாகசங்களை விவரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

ஜன்னல் வழியாகப் பார்த்தபோது தூரத்தில் பள்ளிப் பேருந்து வந்து நிற்க, பெரியவள் அக்ஷரா இறங்கி வருவது தெரிந்தது.

அக்ஷரா வரும் ஸ்டைலே தனி. ஆடிக்கொண்டே வருவாள். தரையில் கிடக்கும் சிறு கற்கள் உதைபட்டுப் பறக்கும். நீட்டிக்கொண்டிருக்கும் மரக்கிளைகளிலிருந்து சுள்ளிகளைப் பிய்ப்பாள். ஓரமாக உறைந்திருக்கும் பனிக்கட்டியை மிதித்து அது அசைகிறதா என்று பார்ப்பாள். வாய் ஏதாவது பாடலை முணுமுணுக்கும். நாங்கள் புன்னகையை அடக்கிக்கொண்டு அவள் கதவைத் திறந்து வரும்வரை காத்திருந்தோம். ஒவ்வொரு முறை அவள் வரும்போதும் அப்படியே படியிலேறி உள்ளே வர, என் மனைவி 'செருப்பைக் கழட்டிட்டு வா' என்று அவளுக்குச் சொல்லவேண்டும். வேண்டுமென்றே காலணியோடு உள்ளே வருவாள்! :-) இன்றும் அப்படியே வர, "shoe-வைக் கழட்டு" என்று அதட்டியதும் கழற்றிப் போட்டுவிட்டு உள்ளே வந்தாள். வேண்டுமென்றே புத்தகப்பையை இறக்கி நடு அறையில் போட - 'ஒன் ரூம்ல கொண்டு போய் வை' என்ற இரண்டாம் சம்பிரதாய அதட்டல் வர, எடுத்துக்கொண்டு அறையை நோக்கி நடந்தாள்.

நாங்கள் மெதுவாக அவள் பின்னாலேயே போனோம். கதவைத் திறந்தாள். எதிரே தாத்தா பாட்டி அடக்கமாட்டாத சிரிப்புடன்! தொப்பென்று பையைக் கீழே போட்டுவிட்டு 'பாட்டீ' என்று அலறினாளே பார்க்கணும்! அப்படியே ஓடிச்சென்று இருவரையும் கட்டிப்பிடித்துக்கொள்ள அவள் கண்களிலிருந்து கரகரவென்று கண்ணீர் அருவியாய் வர எங்களுக்கு அவளது உணர்வு வெளிப்பாடுகள் ஆச்சரியமாக இருந்தது. சிரிப்பும் அழுகையுமாய் தொடர்ந்து பல நிமிடங்கள் அந்த நிலை நீடித்தது. என் அம்மா 'எதுக்கு அழறே. அதான் வந்துட்டோமே' என்று மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டே இருந்தார்.

பிறகு 'Why didn't you tell before?' என்று என் மேல் பாய்ந்து சண்டை போட்டது தனிக்கதை.

ஆனால் அந்தக் கண்ணீரில் எனக்குள் சில ஊற்றுகள் திறந்தன போல உணர்ந்தேன்.


***

4 comments:

குமரன் (Kumaran) said...

இங்கேயும் ஒரு ஊற்று பெருகியது சுந்தர்.

உண்மைத்தமிழன் said...

ஒரு மனிதன், ஆண், தந்தை, மகன் எனத் தன் வாழ்வில் சந்திக்கும் பாத்திரங்களில் ஒன்றின் மீதான சுவையான நிகழ்வுகள் இது.
இதனை எந்தத் திரைப்படத்திலும் இப்படியொரு காட்சியமைப்பாக வைக்க முடியாது சுந்தர்.
சுவைபட எழுதியுள்ளீர்கள்.. படித்து மனக்கண்ணில் காட்சியைப் பார்த்தேன்.

Sundar Padmanaban said...

குமரன், உண்மைத் தமிழன்

என்ன சொல்வது! உங்கள் பின்னூட்டங்களும் நெகிழ்வைத் தந்தன.

நன்றிகள்.

Anonymous said...

Migha Migha arumayaana padhivu Sundar.. Nijamaai Unmai thamilan ezhudhiyadhu pola nighalchikalai manakkannil paarthean.. Akshara eppadi react seidhiruppazh endru unara mudighiradhu.. Innum bandhaa paarvadhi dhaana ?? maarivittalaa?? Anbudan.. Kumar. Doha