Monday, March 24, 2008

I know.. I know.. I know.. I know.. I know.........



யதேச்சையாக இருந்தாலும் இவ்வருடத்தில் விரல்விட்டு எண்ணுமளவு எழுதியவைகளில் இது மூன்றாவது பதிவு - மரணித்தவர்களைப் பற்றி. :(

வில்லன் என்றாலே அபத்தமான தருணங்களில் அபத்தமாகச் சிரித்து அபத்த ஒளியமைப்புக் காட்சிகளில் - கீழேயிருந்து சர்க்கஸ் லைட் அளவிற்கு பளீரென்று கலர் கலராக ஒளியை வில்லனின் முகத்தில் பாய்ச்சி - பசுவைக்கூட பயங்கரமாகக் காட்டி விடும் அது - பயங்கரமாகச் சித்தரிப்பார்கள் - அபத்தமான வசனங்களைப் பேசும் பாத்திரங்களையே பார்த்துவந்த தமிழ்ச்சினிமாவில் 'ஹீரோவை விட நல்லாருக்காருய்யா வில்லன்' என்று ரசிகர்களைப் பேச வைத்தவர் ரகுவரன் - ஹீரோவாக அறிமுகமாகி காணாமல் போகாமலிருப்பதற்காக வில்லன் வேடங்களை ஏற்று - அவற்றிலும் தனி முத்திரை பதித்தவர். என்ன செய்வது - நமது ரசிகர்களின் ரசனை அப்படி - ஏழாவது மனிதனில் (1982) அவர் கதாநாயகனாக அறிமுகமானார் - நல்ல படம் - ஆனால் ஏழு ரசிகர்கள்தான் வந்திருந்தார்கள் போல - வேறு வழி? - ஆனார் வில்லன். ஆனால் வித்தியாசமான வில்லன். ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தாத வில்லன்.

ரகுவரன் என்றதும் அவர் முத்திரை பதித்த படங்கள் நினைவுக்கு வருகின்றன:

ஒரு ஓடை நதியாகிறது

அருமையான படம். இன்றும் காதில் ஒலிக்கும் பாடல்கள். பாலு பாடிய சிறந்த பாடல்களில் நான் எப்போதும் "தலையைக் குனியும் தாமரையே" பாடலைச் சேர்ப்பேன்.

பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு - குழந்தை, பெற்றோர் இடையே நிகழும் உணர்வு ரீதியான உறவுகள், பிரச்சினைகள், போராட்டங்களை மையமாக வைத்து வந்த படங்களில் வெளுத்துக் கட்டியிருப்பார்.

சம்சாரம் அது மின்சாரம் - பெருவெற்றி பெற்ற படம். ஒரு மத்திய வகுப்புக் குடும்பத்தில் ஒருவராக அன்றாடப் பிரச்சினைகளையும் உறவு ரீதியான பிரச்சினைகளையும் கூட்டுக்குடும்பப் பிரச்சினைகளையும் அலசிய படம். விசுவுக்கு நிகராக ரகுவரன் முக்கிய பாத்திரத்தில் அசத்தியிருந்தார்.

காதலன், உல்லாசம், ரட்சகன் போன்ற படங்களில் நல்ல பாத்திரங்களில்.

முதல்வன்

தமிழ்த் திரைப்படங்களில் பொதுமக்களிடையே அதிகம் பேசப்பட்ட காட்சிகளில் முதல்வன் படத்தில் அர்ஜுன் முதல்வராக வரும் ரகுவரனைத் தொலைக்காட்சி நிலையத்தில் வைத்துப் பேட்டி காணும் அந்தக் காட்சி முக்கியமானது. ஒரு கட்டத்தில் பதில் சொல்லாமல் உதடுகளுக்குக் குறுக்காக விரலை வைத்து 'உஷ்' என்று 'நான் பேசப் போவதில்லை' என்று சைகை செய்துவிட்டு விழிகளில் வன்மம் கக்கும் அந்தக் காட்சியில் அர்ஜுனைத் தூக்கிச் சாப்பிட்டிருப்பார் ரகுவரன்.

என் சுவாசக் காற்றே - அரவிந்த சாமியோடு ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்திருப்பார் ரகுவரன்.

அஞ்சலி

மூளைவளர்ச்சி குன்றிய குழந்தையின் தகப்பனாக, மனைவியிடம்கூட உண்மையை வெளிப்படுத்தாமல் மனதுக்குள் போட்டுக் குமைந்து கொண்டு, கேள்வி கேட்கும் குழந்தைகளை எதிர்கொள்ள முடியாமல் தவித்து, அதே சமயத்தில் பாசத்தில் கட்டுண்டு திணறும் அந்தப் பாத்திரத்தை அவர் மிகவும் சிறப்பாகச் செய்திருந்தார். சாதாரணமாகவே குறைந்த வசனங்களைப் பேசக் கூடியவர் - மணி ரத்னம் படம் வேறு - நடிப்பதற்குக் கிடைத்த அபாரமான வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார். என்றும் நினைவில் நிற்கும் படம்.

அமர்க்களம்

அஜீத் (எங்க அந்த அஜீத்?) கலக்கலான நடிப்பைத் தந்த படத்தில் அவருக்குக் கார்டியனாக ரகுவரன் படம் முழுதும் அஜீத்தை மட்டுமல்ல - நம்மையும் ஆக்கிரமித்திருப்பார்.

புரியாத புதிர்

கமல் சிகப்பு ரோஜாக்களில் 'நத்திங்.. நத்திங்... என்று சீவாத பென்சிலால் அழுத்தமாகக் கிறுக்கும் அந்தக் காட்சி நினைவிலிருக்கிறதா? கிட்டத்தட்ட அதே மாதிரியான காட்சி - ரகுவரன் I Know என்ற இரண்டு வார்த்தைகளை அவருடைய பிரத்யேகமான குரலில் விதவிதமான ஏற்ற இறக்கங்களுடன் மறுபடி மறுபடி சொல்லி நடித்த அந்தக் காட்சி அபாரமானது (கிட்டத்தட்ட 30 தடவைக்கு மேல் சொல்வார்). திகில் படத்திற்கு மேலும் திகிலூட்டியதில் அந்த வசனம் பேசி நடித்த ரகுவரனின் பங்கு அபாரமானது.

பாட்ஷா

கிட்டத்தட்ட பதினாறு வருடங்களுக்கு முன்பு ரஜினியை மதுரையில் அவர் தங்கியிருந்த பசுமலை தாஜ் ஹோட்டலில் பறவைகளின் இரைச்சல் மட்டுமே சூழ்ந்திருந்த ஒரு ரம்யமான சூழ்நிலையில் சந்தித்தது நினைவுக்கு வருகிறது (காதெல்லாம் கிர்ரென்று அடைத்துக்கொள்ள மூளை இயங்காமல் - ஜுரம் அடித்த - காந்தத்தில் சிக்குண்ட உணர்வைத் தந்த அவரது Charisma மறக்க முடியாதது) - அவர் நல்ல உயரம் - காதுவரையில் தான் நான் இருந்தது போல நினைவு - ரஜினி என்றாலே உடனடியாக நினைவுக்கு வரும் வெகுசில முத்திரைப் படங்களில் பாட்ஷா பிரதானமானது. அவரைப் போலவே உயரமான ரகுவரன் அவருக்கு எதிரியாக, வில்லனாக பாட்ஷாவில் கலக்கியிருந்தார். பின்னால் தாடி மீசையெல்லாம் வைத்துக்கொண்டு வரும் காட்சிகள் கண்றாவியாக இருந்தாலும் எல்லாவற்றையும் மீறி மிளிர்ந்தது ரகுவரனின் நடிப்பு! ரஜினி-ரகுவரன் ஜோடி அபார வெற்றி பெற்றது. மிஸ்டர் பாரத், சிவா, ராஜா சின்ன ரோஜா, முத்து, அருணாசலம், சிவாஜி என்று ரஜினியோடு பல படங்களில் இணைந்திருக்கிறார்.

கூட்டுப் புழுக்கள்

தென்றல் தழுவுவது மாதிரியான இன்னொரு அருமையான படம். என்னுடைய Sweet heart-உடன் நடித்திருந்தார்.

கமலோடு ஏன் ஒரு படத்தில் கூட அவர் நடிக்கவில்லை என்பது புரியாத புதிர்! மற்றபடி சத்யராஜ், விக்ரம், அஜீத், விஜய், அரவிந்தசாமி, மாதவன் என்று அநேக ஹீரோக்களுடன் அவர் நடித்திருக்கிறார். நடிப்பைப் பொருத்தவரை தனக்கென ஒரு தனிப்பாணியை ஏற்படுத்திக்கொண்டு ரசிகர்களைக் கவர்ந்தவர். அலட்டிக்கொள்ளாத வெள்ளெழுத்துக் கண்ணாடியுடன், மீசையில்லாது, ஒடிசலான உயர்ந்த தேகத்துடன், கோட், சூட்டெல்லாம் போட்டு நடித்த மிகவும் 'நட்பான வில்லன்' அவர்! இன்றும் கலக்க, அசத்தப் போவது யார் போன்ற நிகழ்ச்சிகளிலும், குரல் மாற்றிப் பேசும் எந்த மிமிக்ரி நிகழ்ச்சியானாலும், கமல், ரஜினி, எம்ஜியார், சிவாஜி, விஜயகாந்த் (பாவம்) ஆகியோருக்கு அடுத்தபடியாக ரகுவரன் போல் பேசிக் காட்டுபவர்கள் அநேகம் பேர். பிரபல நடிகர்களைப் போலவே பல வயதுகளிலும் ரசிகர்களைப் பெற்ற ஒரு intellectual villain ரகுவரன் என்று சொன்னால் மிகையாகாது. தமிழக அரசின் கலைமாமணி விருதினைப் பெற்றவர். ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் பெற்றவர்.

கிட்டத்தட்ட 200 படங்களில் நடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். மிகவும் குறிப்பிடத்தக்கது சிவசங்கரியின் 'ஒரு மனிதனின் கதை' (சின்னத்) திரைக்கு வந்தபோது நல்ல நிலையில் இருந்து குடியினால் சீரழிந்த பாத்திரத்தை ஏற்று அவர் இயல்பாக, அழகாகச் செய்திருந்தார். மிகவும் பேசப்பட்டது அது. பிறகு தியாகு என்ற திரைப்படமாகவும் வந்தது. இவ்வளவு நல்ல நடிகர் தனிப்பட்ட வாழ்க்கையில் குடி, போதை என்று உடல்நலத்தைக் கெடுத்துக்கொண்டது சோகம். அவர் இன்னும் கவனமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அவர் மீது கோபம்கூட வருகிறது. நல்ல படங்களைத் தரக்கூடிய விரல்விட்டு எண்ணக்கூடிய நடிகர்களில் அவரும் ஒருவர். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கும் ரசிகர்களுக்கும் ஒரு இழப்பு.

'ஒரு ரகுவரனின் கதை' எடுக்கும்போது சில சமயங்களில் காலில் தங்கிவிடும் உடைந்த முள்ளின் முனை போன்று சிலகாலம் அவரது மறைவு நினைவுகளில் உறுத்திக்கொண்டு இருக்கும்.

+++++

Friday, March 14, 2008

Parent Trap - குட்டி பத்மினி - Lindsay Logan


குழந்தையும் தெய்வமும் (1965) என்றாலே நினைவுக்கு வருவது குட்டி பத்மினியின் ரெட்டை வேட நடிப்பு. வாய் கிழிய படம் முழுவதும் எல்லாரும் பேசிக்கொண்டே இருப்பார்கள் - நாடகத்திலிருந்து வெள்ளித் திரைக்கு இடம் பெயர்ந்த ஆரம்ப காலங்களில் படங்களனைத்திலும் வசனமும் பாடல்களுமே பிரதானமாக இருந்ததில் ஆச்சரியமில்லை - ஆனாலும் சுவாரஸ்யமாக இருந்தது. பல பாடல்கள் இனிமையாக இருக்கும் - என்ன வேகம் நில்லு பாமா, அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம், நான் நன்றி சொல்வேன் உங்கள் கண்களுக்கு, கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே கோழிக் குஞ்சு ரெண்டுமிப்போ அன்பில்லாத காட்டிலே (த்சோ த்சோ) என்று நல்ல பாடல்கள்.

அப்பாவாக ஜேம்ஸ் பேண்ட் (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை) ஜெய்ஷங்கரும், அம்மாவாக ஜமுனா (எனக்கு மிகவும் பிடித்த பெண் பெயர்களில் ஒன்று!)வும் நடித்திருப்பார்கள். இரட்டைக் குழந்தைகள் வேடத்தில் குட்டி பத்மினி அட்டகாசமான நடிப்பைக் கொடுத்து தாய்மார்கள் மனங்களைக் கொள்ளை கொண்டிருந்தார். குழந்தைகளில் ஒன்று அப்பாவிடமும் இன்னொன்று அம்மாவிடமும் - தனக்கொரு சகோதரி இருக்கிறாள் என்று அறியாமல் - தனித்தனியாக வளர்ந்து பின்பு பள்ளிச் சுற்றுலா ஒன்றில் எதேச்சையாக சந்தித்துக்கொள்கிறார்கள். அம்மா யாரென்றே தெரியாத அப்பாக் குழந்தையும், அப்பாவைப் பார்த்திராத அம்மாக் குழந்தையும் அவர்களுக்கு உதித்த யோசனைப்படி இடம்மாறி வீடு திரும்புகிறார்கள். அவர்களை அடையாளம் கண்டுபிடிக்காமல் பெற்றோரிருக்க, பெற்றோருக்கிடையே இருக்கும் ஊடல்களையும் பூசல்களையும் களைந்து இருவரும் ஒன்று சேர குழந்தைகள் எப்படி உதவுகிறார்கள் என்று எல்லாரையும் சுற்றிப் பின்னப்பட்ட அழுத்தமான திரைக்கதையுடன் குழந்தையும் தெய்வமும் படம் வெளிவந்த பெருவெற்றி பெற்றது.

ஏவிஎம்மினால் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் மூலம் 1961-இல் David Swift இயக்கி Hayley Millis இரு வேடங்களில் நடித்து வெளிவந்து ஆங்கிலத்தில் சக்கை போடு போட்ட Parent Trap என்ற படம்!



இந்தப் பழையை ஒயினைப் புதிய பாட்டிலில் ஊற்றி மறுபடியும் அமெரிக்கர்களின் தற்போதைய கனவுக்கன்னிகளில் ஒருவரான லிண்ட்ஸே லோஹன் பத்து வருடங்களுக்கு முன்பு சிறுமியாக இருந்தபோது (1998) Parent Trap என்ற அதே தலைப்பில் - தமிழில் மட்டும்தான் பில்லா, பொல்லாதவன் என்று மறுபடியும் வரலாமா? - அப்போதைய தொழில் நுட்பங்களைக் கொண்டு அசத்தலாகப் படம் எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள. இந்தப் புதிய குழந்தையும் தெய்வமும் உலகம் முழுவதுமாக கிட்டத்தட்ட 100 மில்லியன் டாலர்களை வசூலித்துக் குவித்திருக்கிறது. இதில் அப்பாவாக நடித்திருப்பவர் The Day After Tomorrow-விலும் அப்பாவாக நடித்துப் புகழ் பெற்ற Dennis Quad. அம்மாவாக Natasha Richardson. இயக்கியவர் Nancy Meyers.

இப்போது கழுதையாகத் திரியும் Lindsay Lohan பதினொரு வயதுச் சிறுமியாக இப்படத்தில் நடித்து சக்கை போடு போட்டிருப்பார். அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இரட்டையரில் ஒருவர் லண்டனில் புகழ் பெற்ற டிஸைனர் பெண்ணிடமும் வளர்வார்கள. Vineyard வைத்திருக்கும் அப்பா இருப்பதோ அமெரிக்க மேற்குக் கடற்கரையின் Napa Valley-யில். கோடையில் பெரும்பாலான அமெரிக்கப் பள்ளிகள் நடத்தும் Summer Camp-இல் இரண்டு சகோதரிகளும் சந்தித்துச் செய்யும் அமர்க்களங்கள் மிகவும் ரசிக்க வைப்பவை. பிறகு இருவரும் இடம்மாறிக் கொள்ள அமெரிக்காவில் அப்பாவிடம் வளரும் சிறுமி விமானமேறி லண்டன் அம்மாவைப் பார்க்கப் போகிறாள். லிண்ட்ஸேயின் நடிப்பு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. அம்மாவை முதன்முறையாகச் சந்திக்கும்போது ஆனந்தக் கண்ணீர் விட்டுக்கொண்டு வெளிப்படுத்தும் முகபாவமென்ன, அப்பாவைச் சந்திக்கும் (இன்னொரு வேடத்தில்) வார்த்தைக்கு வார்த்தை 'அப்பா' என்று அழைத்து ஆனந்தப்படுவதென்ன? அப்பா தனது பெண் நண்பியைத் திருமணம் செய்யும் யோசனையை வெளிப்படுத்தியதும் கோபத்தில் பிரெஞ்ச் மொழியில் கத்துவதென்ன? பணத்திற்காக அப்பாவிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்தப் பெண் நண்பியைப் படாத பாடு படுத்தித் துரத்துவதென்ன? அப்பாவையும் அம்மாவையும் சந்திக்க வைத்து - இரவு உணவுச் சந்திப்பை அவர்கள் முதன்முதலில் அதே சொகுசுப் படகில் சந்திக்க வைப்பார்கள் - அருமையான வசனங்கள்- துணை நடிகர்களாக வரும் அப்பா வீட்டில் சமையல்கலைஞராக இருக்கும் Lisa Ann Walter - சிறுமி அம்மாவிடம் வளர்ந்த இன்னொரு குழந்தை என்ற தெரிந்ததும் ஒரு நடிப்பை வெளிப்படுத்துவாரே, சான்ஸே இல்லை! - அம்மாவின் சமையல்காரராக இருக்கும் Simon Kunz இருவரும் அட்டகாசமாக நடித்திருப்பார்கள். அப்பாவின் தற்காலிகக் காதலியாக வரும் Elaine Hendrix-ம் கலக்கியிருப்பார்.

கலகலப்பூட்டும் காட்சிகளுக்குப் படத்தில் பஞ்சமே இல்லை. இரட்டை வேடம் என்றாலே சுமாரான காட்சியமைப்புகளில் கிராபிக்ஸ் அது இது என்று தட்டையான படங்களையே பார்த்துப் பழகிய நமக்கு இப்படத்தில் நல்ல ஒளியில் எடுக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான காட்சிகளில் லிண்ட்ஸே இரட்டை வேடத்தில் வரும் காட்சிகள் அருமையாக எடுக்கப்பட்டிருக்கும்.

நம்மூரில் குழந்தைகளோடு பார்க்கும் வகையில் படங்கள் வருவது அபூர்வம். இம்மாதிரிப் படங்களை - மொழி புரியாவிட்டாலும் - குழந்தைகளோடு பார்த்து மகிழலாம்.

++++++

Thursday, March 13, 2008

மன்னியுங்கள் ஸ்டெல்லா ப்ரூஸ்



தமிழில் வாசித்த எல்லா எழுத்தாளர்களின் பெயர்களையும்விட என்னை அதிகம் கவர்ந்த பெயர் ஸ்டெல்லா ப்ரூஸ். படித்தவற்றில் சட்டென நினைவுக்கு வருவது அது ஒரு நிலாக்காலம். எந்த வித கவர்ச்சிப் பூச்சுமன்றி எளிமையான நடையில் நீரோட்டமாக எழுதியவர்.

அவர் ஒரு பெண் எழுத்தாளர் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். அவர் ஒரு ஆண் என்பதையோ அவரது இயற்பெயர் ராம்மோகன் என்பதையோ அவர் மறைந்த நாள் வரை அறிந்திராத என் அறியாமையை எண்ணி வெட்கமாக இருக்கிறது.

மரணம் தந்த வருத்தத்தை விட அதை அவர் தேடிக்கொண்ட வழிமுறையை அறிந்து ஏற்பட்ட அதிர்ச்சியின் தாக்கம்தான் மிகமிக அதிகமாக இருந்தது.

சுஜாதா இயற்கையாக மரணமடைந்தார். வாழ்வில் பொருளாதார ரீதியாக எந்தச் சவால்களையும் சந்திக்காது பிரபலமானவராகவே மறைந்தார். அவரது மறைவு ஏற்படுத்தியது துக்கம்.

ஆனால் ஸ்டெல்லா ப்ரூஸ் மரணமடைந்தது பலத்த அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தியது. கைவிடப்பட்ட முதியோர்களைப் பற்றிய செய்திகளை அடிக்கடி படிக்க நேரும்போதெல்லாம் மிகவும் வலிக்கும். இருப்பதிலேயே கொடுமையானது முதுமையில் வறுமை - ஸ்டெல்லா அவர்கள் மனைவியின் பிரிவினால் ஏற்பட்ட தனிமையைத் தாங்காமலும், வறுமையினை எதிர்கொள்ள முடியாமலும் தற்கொலை என்ற அதீத முடிவைத் தேடிக்கொண்டது அறிந்து - குற்றமிழைத்தது போல உணர்ந்தேன். பிரபலமானவர்களுக்கு ஒன்று என்றால் ஓடிவர ஆயிரம் பேர் இருக்க ஏழை சொல் அம்பலம் ஏறாது என்று மறுபடியும் மறுபடியும் நிரூபிக்கப்படுகிறதே என்று வேதனையாக இருந்தது.

அவர் இம்மாதிரி ஒரு துன்பமான நிலையில் இருந்தார் என்பதைக்கூட தமிழ் எழுத்துலகம் அறிந்திராதிருந்தது (அல்லது நான் அறிந்திராமலிருந்தது) பெரிய அவமானம். கேவலம்.

எப்படி யார் கண்ணிலும் படாமல் போய் விட்டார் என்ற கேள்வியே தொக்கி நிற்கிறது. காலம் மறக்கச் செய்துவிடுகிறதோ? வெளிநாட்டுக்கு வேலை விஷயமாகக் கிளம்ப நேரும்போது பெற்றோரைப் பிரி்ந்து செல்லும் அந்தச் சூழ்நிலையில் தனியாகச் சமாளிப்பார்களா? ஏதாவது உடல்நிலை சரியில்லையென்றால்கூட சட்டென ஓடி வரமுடியாதே என்று பல்வேறு எண்ணச்சிக்கல்களில் உழன்றுகொண்டே கிளம்பி வந்து சில காலம் கழித்து வாரயிறுதித் தொலைபேசி அழைப்புகளிலும், முக்கிய நாட்களின் தொலைபேசி அழைப்புகளிலும், flicker-இல் புகைப்படங்களையிட்டு நண்பனுக்கு அனுப்பி பெற்றோரிடம் காட்டச் சொல்வதிலும் - ஆரம்ப நாட்களின் வலிகளை மறந்து - மரத்து - ஒரு விதமாக வாழ்க்கையை வெளிநாட்டில் ஓட்டுவதில் - வாழ்க்கையின் முக்கியத்துவங்களும், கவலைகளும் மாறிவிட்டதைப் போல - ஸ்டெல்லா ப்ரூஸ் போன்ற எத்தனையோ எழுத்தாளர்களை ரசித்துப் படித்த காலங்கள் தேய்ந்து நினைவிலிருந்தே கிட்டத்தட்ட மறைந்து போய்விட்ட வேளையில்தான், அவர்களது மறைவின் மூலம் எத்தகைய அவல நிலையில் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற உண்மை உறைத்துச் செவிட்டிலடிக்கிறது. இன்னும் எத்தனை கலைஞர்களும், படைப்பாளிகளும் இப்படி அவலநிலையில் கவனிப்பாரற்று மூலையில் இருளில் போடப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

முன்பே அவரை நினைவு கூர்ந்திருந்தால் அவரது தனிமையைத் தீர்க்காவிட்டாலும், வறுமையையாவது போக்கியிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. வாசகர்களின் தொடர்புமற்று எழுத்தாளன் இப்படி ஐயோவென முடிவைத் தேடிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவது என்னைப் போன்ற வாசகர்களின் குற்றமாகத்தான் பார்க்க முடிகிறது. நான் ஏதாவது செய்திருக்க வேண்டும் - செய்யவில்லை.

உங்கள் மரணத்திற்கு ஏதோவொரு வகையில் நானும் உடந்தை. வருத்தத்துடன் குற்றவுணர்ச்சியும் தொக்கி நிற்கிறது.

மன்னியுங்கள் ஸ்டெல்லா ப்ரூஸ் அவர்களே!

++++

சுஜாத்........ஆ!



'எண்ட்டர் த ட்ராகன்' படம் பாத்தியா என்று பசுபதி கேட்டபோது 'இல்லை' என்றேன்.

அது வரை நான் பார்த்த ஆங்கிலப் படங்களெல்லாம் பள்ளியில் மொத்தமாக எல்லாரையும் அழைத்துக்கொண்டு ஆசிரியர்களோடு சென்று புழுங்கித் தள்ளிய மதியக் காட்சி வரிவிலக்கு பெற்ற படங்கள் மட்டும்தான். அவற்றில் மிருகங்கள் மட்டுமே நடித்திருந்தன. ஒரு முறை பாடி பில்டர் படமெல்லாம் போஸ்டரில் அடித்திருந்தார்களே என்று ஆண்கள் மட்டுமே வந்திருந்த - நடுவில் பெண்கள் பகுதியைப் பிரிக்க போட்டிருந்த தட்டிகளைத் தற்காலிகமாக எடுத்திருந்தார்கள் - மாலைக்காட்சி படத்தில் முதற்காட்சியிலேயே அந்தப் பெண் 'புன்னகை மட்டும் அணிந்து வர' அடுத்த ஒரு வாரத்திற்கு ஜன்னி கண்டதால் பிறகு ஆங்கிலப் படங்களைப் பார்க்க முயற்சிக்கவில்லை.

பசு 'வாத்தியார் எண்ட்டர் த டிராகனுக்கு விமர்சனம் எழுதியிருக்கார் படிச்சயா?' என்றான். 'எதுல? இல்லையே' என்றேன். 'கேளு' என்று சொல்லிவிட்டு அவன் லேசான சிரிப்புடன் தொடங்கினான் 'ப்ரூஸ்லி கராத்தே முறையில் எதிரிகளிடம் சண்டை போடுகிறார். கராத்தே முறையில் பறந்து பறந்து எதிரிகளைத் தாக்குகிறார். கராத்தே பாணியில் எதிராளியின் கொட்டையைப் பிடித்து நசுக்குகிறார் நமக்கு வலிக்கிறது' என்று சொல்லி முடித்துவிட்டு கடகடவென்று சில நிடங்கள் தொடர்ச்சியாகச் சிரித்ததும் அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டதும் நினைவில் நிழலாடுகிறது. கிட்டத்தட்ட ஆங்கிலப்படங்களைப் பார்ப்பது போன்ற பிரமிப்பைக் கொடுத்த வாத்தியாரின் எழுத்துகளுக்கு நாங்களெல்லாம் அடிமையாகியிருந்த காலகட்டம் அது. தொடர்கதை, சிறுகதை, கட்டுரை என்று எதைப்படித்தாலும் அதில் ஊடறுத்திருக்கும் நையாண்டிகளைப் பற்றிப் பேசிப்பேசி ஆனந்தப்படுவது வழக்கமான பொழுதுபோக்கு.

ஓவியர் ஜெ.யின் சித்திரக் கவர்ச்சி, சுஜாதாவின் எழுத்துக் கவர்ச்சி என்று போதை தலைக்கேற கிடைத்த சந்து பொந்துகளிலெல்லாம் ஒளிந்துகொண்டு நானும் என் அண்ணனும் குமுதம் விகடன் போன்ற பத்திரிகைகளை யாருக்கும் தெரியாமல் சுஜாதா என்று கட்டையாக அச்சிடப்பட்ட பக்கங்களைப் புரட்டிப் புரட்டி வாசித்தது நினைவுக்கு வருகிறது. எப்போது அவருடைய எழுத்து எனக்கு முதன்முதலாக அறிமுகமானது என்று நினைவிலில்லை. ஆனால் வாசிப்புப் பழக்கம் துவங்கியதிலிருந்து அவருடைய எழுத்துகளையெல்லாம் படித்து வந்தது நினைவிருக்கிறது. நிதானமான, அறிவாளி கணேஷும், உற்சாகம் கொப்பளிக்கும் வசந்த்தும் ஆண்களாக இருந்தாலும் எங்களையெல்லாம் வசீகரித்துக் கொண்டேயிருந்தார்கள. கதையில் வசந்த் என்று அவன் பெயர் வரும் வாக்கியத்திலிருந்து அடுத்த வாக்கியத்திற்குப் போவதற்குள் யாராவது பெண்ணிடம் ஏதாவது குறும்பு செய்திருப்பான் அவன். மூன்றாவது வாக்கியத்தில் கணேஷ் கட்டாயம் அவனை ஒருமுறையாவது அதட்டியிருப்பார் என்பது அவர்கள் வரும் கதைகளில் பிரதானமாக இருந்தாலும் அலுத்ததேயில்லை.

ஆதர்ச திரைப்படக் கதாநாயகர்களை அந்த அளவு ரசித்தோமோ இல்லையோ வாத்தியாரின் எழுத்துகளை நிறையவே ரசித்தோம். என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, நைலான் கயிறு, பிரிவோம் சந்திப்போம், தூண்டில் கதைகள், கற்றதும் பெற்றதும் என்று சகட்டு மேனிக்கு இந்தியச் சாலைகளில் ஓடும் பலவித வாகனங்களைப் போல, பல களன்களைக் கொண்ட எழுத்துகளில் பயணித்துக்கொண்டே இருந்தார். ஜீனோவைக் கழற்றி செயலற்றதாக ஆக்கியபோது நிஜமாகவே கண்ணில் நீர் பெருகியது. அந்த எழுத்துகள் அழ வைத்திருக்கின்றன. நிறையவே சிரிக்க வைத்திருக்கின்றன. ஏராளமானவற்றை ரசிக்க வைத்திருக்கின்றன.

காலப் போக்கில் வாழ்க்கையின் ஓட்டத்தில் ஓடி இணையத்தில் தமிழ் குழுக்கள், வலைப்பதிவுகள் என்று பரவலாக தமிழை மறுபடியம் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்ததும் அச்சில் வாசித்தவற்றில் சிலவற்றை திரையில் வாசிக்க முடிந்ததும், ஆர்வத் தீ மறுபடியும் பற்றிக் கொண்டு எரிந்து சனி காலையின் அம்பல அரட்டையில் முதன்முதலாக முகமன் சொல்லி அவரைச் சந்தித்தபோது 'யாராச்சும் அவர் பெயரில் அரட்டையடிக்கிறார்கள்' என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் அரட்டை துவங்கியதும் கேள்விகளுக்குத் தெறித்து விழுந்த கூர்மையான அரைவரி அல்லது ஒரு வார்த்தை பதில்களில் அவர்தான் என்ற உறுதியானதும் உற்சாகமாக சனிக்கிழமை எதையும் தவறவிடாதிருந்தேன். பின்பு எப்படியோ அரட்டை நின்று போனது.

பிரபலமானவர்களைச் சந்தித்தால் அதுவரை நம் மனதில் எழுப்பியிருக்கும் பிம்பம் உடைந்து போகும் என்று அவர் குறிப்பிட்டதை வாசித்துவிட்டு அவரை நேரில் சந்திக்கவேண்டும் என்ற நினைப்பே எழாமலிருந்தது. அப்படியே சந்திக்க நினைத்தாலும் 'அவர் மாதிரி பெரியாளுங்களையெல்லாம் நம்மால் சந்திக்க முடியமா?' என்ற அவநம்பிக்கையே ஓங்கியிருக்கும். அதனாலேயே அவரைச் சந்திப்பது என்பதைப் பற்றியெல்லாம் யோசித்ததே இல்லை.

2003-ஆம் வருட இறுதியில் விடுமுறைக்கு ஸ்ரீரங்கம் சென்றிருந்தபோதுதான் அது வரை தவமிருந்த அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அதைப் பற்றி மரத்தடியில் எழுதியது...

+++++
பள்ளியில் முதல் வகுப்பு சேர்ந்தபோது தாத்தா கைப்பிடித்து அழைத்துச் சென்று வகுப்பறையைக் கண்டுபிடித்து 'போ.. நல்லா படி' என்று கையை விட்டுச் சென்றதும் தனியாக வகுப்பறை வாசலில் நின்ற அந்தச் சில வினாடிகளில் ஒரு வித பய உணர்வு ஆட்கொண்டது. 'வாத்யார் எப்படி இருப்பாரோ? அடிப்பாரா? என்ன கேள்வி கேட்பார்? என்ன பதில் சொல்ல வேண்டும்?' என்று வயிற்றைப் பிசைந்தது. அதேபோல் இன்றும் இதயம் படபடத்தது. ஒருவித இனம் புரியா பயம் அடிவயிற்றைக் கவ்வியது. எதற்கென்று கேட்கிறீர்களா? வாத்தியாரைப் பார்க்கப் போனேன்.

அம்பலத்தில் நேற்று காலை அரட்டையில் கலந்துகொண்டு பேசியபோது, 'நாளை ஸ்ரீரங்கம் வருகிறேன்' என்று சுஜாதா சொன்னதும் துள்ளிக் குதித்தேன். அவரை தூரத்தில் நின்று பார்த்தாலே போதும் என்று கனவு காண ஆரம்பித்துவிட்டேன். 'ஸ்ரீரங்கத்தில் சகோதரன் வீட்டில் தங்குகிறேன். இதோ தொலைபேசி எண்' என்று கேட்பதற்கு முன்பே கொடுத்த அவரின் எளிமை பிரமிப்பூட்டியது. காலையில் அத்தொலைபேசி எண்ணை அழைத்ததும் அவரது சகோதரர் 'அவர்ட்டயே பேசுங்களேன்' என்று சுஜாதாவிடம் கொடுத்ததும் 'சொல்லுங்க சுந்தர்' என்று எளிதாக அவர் பேசத் தொடங்கியதும்- எதுவும் எதிர்பாராதது- ஆதலால் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. 'வெல்கம் பேக் டு ஸ்ரீரங்கம். ஒங்கக்கிட்ட பேசுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு ஸார்' என்று வாய்குழறச் சொன்னாலும் அவரைச் சந்திக்க வேண்டுமே என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். 'ஒரு அஞ்சு நிமிஷம் வந்து பாத்துட்டுப் போய்டறேன் ஸார்' என்று கேட்க 'இப்பவே வாங்களேன். என் ப்ரதர்கிட்டக் கொடுக்கறேன். அட்ரஸ் கேட்டுக்கோங்க' என்று ஜெட்வேகத்தில் சொல்லி விட்டுக் கொடுக்க முகவரி பெற்று, மனைவியை அழைத்துக் கொண்டு சற்றுத் தாமதமாகச் சென்று வரவேற்பறையில் அமர்ந்துகொள்ள, அவர் மதிய உணவிலிருந்தார்.

பதற்றமாகவே இருந்தது. வரவேற்பறை மிகுந்த ரசனையுடன் அலங்கரிக்கப் பட்டிருக்க வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். சற்று நேரத்தில் அவரது சகோதரர் வர, அவர் பின்னே மெதுவாக மெலிந்த தேகத்துடன் சுஜாதா. பேசவே தோன்றவில்லை. வணக்கம் தெரிவித்து அமர்ந்ததும், தொலைபேசியதுபோலவே சகஜமாக உரையாடலைத் துவக்கினார். அவரே அவரது சகோதரரிடம் அம்பல அரட்டையைப் பற்றியும் அதில் பங்குபெறும் நம் குழு நண்பர்களையும் பற்றிச் சொல்லி (பாங்காக் சீனியையும் நினைவில் வைத்துச் சொன்னார் மனிதர்!) அறிமுகப் படுத்தி 'மரத்தடில ரொம்ப நல்லாப் பண்றாங்க' என்றார்.

இருவருக்கும் இருவருடங்கள் வித்தியாசமாம். ஆனால் முகங்கள் அச்சு அசலாக ஒரே மாதிரியாக இருந்தன. இரா.மு., எல்லே மற்றும் க்ளப் பெரியவர்களைப் பற்றியும் குறிப்பிடத் தவறவில்லை. முகுந்த் பற்றியும் தமிழா உலாவியைப் பற்றியும் இந்த வாரக் கற்றதும் பெற்றதுமில் குறிப்பிட்டிருந்த ஓப்பன் சோர்ஸ் பற்றியும் பேசிவிட்டு 'ஒரு லட்சம் வார்த்தைகளுக்கு தமிழ் வார்த்தைகள் தேவையாயிருக்கு. ஓப்பன் சோர்ஸ்ல (லினக்ஸ்) தமிழ் கொண்டு வரணும். நீங்கள்ளாம் உங்களால முடிஞ்ச அளவுக்கு எடுத்துப் பண்ணுங்க' என்று சொன்னார். இது குறித்து நண்பர்களிடம் பேசவேண்டியிருக்கிறது. அம்பல அரட்டையில் பங்கு கொள்ளும் மரத்தடி நண்பர்கள் ஒவ்வொருவர் பற்றியும் குறிப்பிட்டுக் கேட்டார். என் மனைவியிடம் குடும்பத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டார். ஓமான் மட்டும் துபாய் குறித்து சிலநிமிடங்கள் பேசினோம். நான் அறிந்த விவரங்களைச் சொன்னேன். வாய் பேசிக்கொண்டிருந்தாலும், கண்கள் அவர்மீதே இருந்தது. அவரது உடல்நிலை மிகவும் கவலையளித்தது. விடைபெறும்முன் மரத்தடி நண்பர்கள் சார்பாக, புத்தாண்டு வாழ்த்து மடல் ஒன்றை அவருக்கு அளித்துவிட்டு, தொந்தரவு செய்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு வணங்கி விடைபெறுகையில் ஒரு மணி நேரம் ஆகியிருந்தது. மாலை ஆறுமணிக்கு அரிமாசங்கக் கூட்டம்.

நேற்று அரட்டையில் ஒரு சிறு உரையாடல்

சுஜாதா : 'நாளை மாலை அரிமா சங்கக் கூட்டத்தில் கலந்து கொள்கிறேன். அங்கு வாருங்கள்'

நான் : 'நான் அரிமா உறுப்பினர் இல்லை. ஆனால் சிம்மராசி. அந்தத் தகுதியில் உள்ளே விடுவார்களா?'

சுஜாதா : 'நானே ரிஷப ராசிதான். சிம்மத்திற்கு உணவு. என்னை விடும்போது உங்களையும் விடுவார்கள்'

விட்டார்கள்.

குறிப்பிட்ட நேரத்திற்குச் சென்று அங்கிருந்த அரிமாக்களிடம் அறிமுகப் படுத்திக்கொண்டு திஸ்கி, யூனிக்கோட் பற்றி கொஞ்சம் கொளுத்திப் போட்டதும் அவர்களுக்குப் பற்றிக் கொண்டது. காய்ந்து போன கம்பங்கொல்லையாக இருந்தார்கள். இ-கலப்பையைக் கொண்டு எந்த விண்டோஸ் மென்பொருள்களிலும், இணையத்திலும் எங்கு வேண்டுமானாலும் தமிழில் உழலாம் என்று சொன்னபோது நூறு தடவையாவது 'அப்படியா?' என்று ஆச்சரியப் பட்டுக் கொண்டார்கள்.

'எதாவது செய்யணும் ஸார்' என்றார்கள். திக்குத் தெரியாமல் தவிப்பது கண்கூடாகத் தெரிந்தது. இவர்களுக்கு, தமிழுக்காக இப்போதிருக்கும் இணையத் தொழில்நுட்பத்தைப் பற்றிச் சொல்ல ஆள் தேவை. ஆசாத் மற்றும் ராஜா சவுதியில் இணையத் தமிழை அறிமுகப் படுத்தியது நினைவுக்கு வர, அவர்களிடம் அதேபோல் இங்கும் செய்துகாட்டமுடியும் என்று சொன்னவுடன் ஆர்வத்துடன் 'செஞ்சிரலாம் சார். தேதி குறிச்சுட்டு சொல்றோம். நீங்க ஊர் திரும்பறதுக்குள்ள நடத்திரலாம்' என்று மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டார்கள்.

ராஜாவிடம்/ஆசாத்திடம் அந்த நிகழ்ச்சியின் agenda-வைக் கேட்கவேண்டும். அதேபோல் இங்கு நடத்திக்காட்டினால் ஊர் பற்றிக்கொண்டு தமிழ்த் தீ எளிதாகப் பரவும் என்று நம்பிக்கை தோன்றுகிறது. பார்க்கலாம். கூட்டம் சம்பிரதாயமாக நடந்து, சுஜாதா சிறிது சொந்தமாகவும், பலது ஏற்கெனவே எழுதிய விஷயங்களையும் சற்றுச் சிரமத்துடன் மூச்சு வாங்கிக்கொண்டு பேசினார்- அவரை உட்கார வைத்தே பேசச் சொல்லியிருக்கலாமே என்று தோன்றியது. பிறகு சில கேள்விகளுக்கு சுருக்கமாக விடையளித்தார்.

நன்றியுரை முடிந்து இரவு உணவு விருந்து துவங்குகையில் அறிமுகமாயிருந்த அரிமாக்களிடமும், வாத்யார் கூட்டத்தில் புகைப் படத்திற்கும், கையெழுத்திற்கும் சிக்கியிருந்ததால், அவரது சகோதரரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன். வீட்டுக்கு வந்து நண்பர்களிடம் உடனே பகிர்ந்து கொள்ளும் ஆவலில் இந்தக் கடிதம்.

பசிக்கவில்லை. இன்று உறக்கம் வராது!

+++++

எத்தனையோ சிறுகதைகள், குறுங்கதைகள், நாவல்கள் என்று இது அது என்றில்லாமல் ஒரு சராசரி மனிதனின் வாழ்வில் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறுக்கிடும் அனைத்துத் துறைகளைப் பற்றியும் கட்டுரையாகவோ, கதையாகவோ, நாவலாகவோ, கேள்வி பதிலாகவோ, கற்றதிலும் பெற்றதிலுமோ அயராது தொடர்ச்சியாகப் பதிவு செய்துகொண்டே வந்திருக்கிறார் அவர்.

எந்த சஞ்சிகையாக இருந்தாலும் கடைசிப் பக்கத்திலிருந்துதான் படிப்பேன் - விதிவிலக்கு அவரது எழுத்துகளைத் தாங்கி வருபவை.

+++++

ஒரு வரிக்கதை, அரைவரிக்கதை, சிறுகதை, குறுங்கதை, கவிதை, நாவல், தூண்டில் கதைகள் என்று நானறிந்திருந்த எழுத்தின் சாத்தியங்களையும் எல்லைகளையும் தொடர்ச்சியாக விரித்துக்கொண்டே போனவர் அவர்.

இயல்பாகவே வரும் நகைச்சுவையும் நையாண்டியும் ஒரு வரம். அது அவருக்கு ஸ்ரீரங்க கோபுரமளவிற்கு வாய்த்திருந்தது. அவரது அஞ்சலிக் கூட்டத்தில் 'எதைக் கேட்டாலும் அதெல்லாம் பெரிய கம்ப சூத்திரமில்லப்பா சிம்ப்பிள்தான் என்று சொல்லிவிடுவார். கம்ப சூத்திரத்தையே அப்படித்தான் சொல்லுவார்' என்று குறிப்பிட்டாராம் கமல். உண்மை. எளிமையாக, அதே சமயத்தில் சுருக்கமாக, ஸ்வாரஸ்யமாக எழுதும் அவரது எழுத்து நடையின் பாதிப்பு இல்லாத ஆரம்பகால எழுத்தாளர்களே இல்லை என்று சொல்லிவிடலாம் போல.

சினிமான்னா என்ன என்று கேட்கப்பட்டபோது 'அது நெசம் போல பொய் சொல்றது' என்றாராம்.

கல்லூரிக் காதல் கதையை எழுதிக்கொண்டு வந்து அவரிடம் கருத்து கேட்டு நச்சரித்தவரிடம் 'காதல் கதையை எழுதணும்னா உங்களுக்குக் காதல் அனுபவம் இருக்கணும் ஸார்" என்றவரிடம், அந்த நபர் கேட்டது 'நீங்ககூடதான் கொலைக் கதையெல்லாம் எழுதறீங்க'!

+++

நதிகளைச் சார்ந்த இடங்களில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு நதிகள் மீதான ஸ்நேகத்தை மற்றவர்களால் புரிந்து கொள்வது கடினம். அவ்விடங்கள் சார்ந்து வந்த படைப்புகள் என்னை எப்போதும் பாதித்திருக்கின்றன. அது எழுத்து வடிவிலான படைப்புகளாயினும் சரி - மஹாநதி போன்ற படங்களும் சரி.

படித்த தினத்திலிருந்து இன்று வரை இன்னமும் என்னைப் பாதித்துக் கொண்டிருக்கும் அவரது நாவல் - "ஆ". சென்னையில் துவங்கினாலும் கதை ரயிலேறி திருச்சி, ஸ்ரீரங்கம், பாலத்திற்கு அந்தப் புறம் நின்று வாவா என்று அழைக்கும் ஆசிரியை, வற்றிய நதி நடுவே நிகழும் சம்பவங்கள் என்று என்னை ஹிப்னாடிஸத்தில் ஆழ்த்தியது போல, நானே அக்கதையின் பாத்திரமாக இருப்பது போல உணரவைத்த படைப்பு அது. தொடர்கதையாக வந்து ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஆ-வென 'ஒரு கமர்ஷியலுக்காக' அவர் முடித்ததை ஆர்வத்துடன் படித்து அடுத்த வார ஆ-விற்காகக் காத்திருந்த நாட்களையும், பின்னாளில் புத்தகமாக வாங்கியும் ஏராளமான முறை சலிக்காது படித்ததையும், புத்தகத்தை அன்றைய காதலி, இன்றைய மனைவிக்கு அவருடைய பெயரை முதற்பக்கத்தில் 'To my dear --+ஆ' என்று எழுதிப் பரிசளித்ததையும் நினைக்கையில் - எனது பல்வேறு வாழ்க்கை நிலைகளில் அவரது பாதிப்பை உணரமுடிகிறது.

ஆ-வைப் படமாக எடுத்தால் நாயகனே இல்லாது கேமராக் கோணத்தையே நாயகனது கோணமாகக் காட்டி முழுப்படத்தையும் எடுத்தால் எப்படியிருக்கும் என்றெல்லாம் யோசித்ததுண்டு!

ஆ-வை பற்றி நினைக்கும் போது, வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் நமது செயல்பாடுகளெல்லாம் நம்மிடம் நாமே மனதிற்குள் பேசிக்கொள்ளும் உரையாடல்களின் விளைவாகவே இருக்கின்றன என்று தோன்றுகிறது. ஆ -ஆடிட்டரி ஹலுஸினேஷன் - மாதிரியான குரல் பிரமைகள் எதுவும் இல்லாவிட்டாலும் மனதில் ஒலிக்கும் என் குரலே விரல்கள் வழியாக இப்பதிவில் ஒலி்த்துக்கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

ஆ-வைப் போலவே அவரது ஸ்ரீரங்கத்து தேவதைகளும், ஸ்ரீரங்கத்துக் கதைகளும் எனது வாழ்க்கையின் பல்வேறு பக்கங்களைத் தூசி தட்டியிருக்கின்றன.

+++++

விக்ரம் தொடர்கதையை தொடர்ச்சியாகப் படித்து அது படமாக்கப்பட்டபோது 'ஐயய்யோ சலாமியாவெல்லாம் கதையாகப் படிக்க ஸ்வாரஸ்யமாக இருக்கும். படத்திற்கு அது சரிவராது - நல்ல படம் வீணாகி விடுமே' என்ற கவலையாக இருந்தது. மதுரை மதி திரையரங்கத்தில் முதற் காட்சிக்குச் சென்று பார்த்தபோதும் அதிவேகமான முதல் பகுதியின் வெற்றியை, கற்பனை சலாமியாவும், அம்ஜத்கான், மனோரமா, ஜனகராஜ் தொடர்பான கொடுமையான நகைச்சுவைக் காட்சிகள் கெடுக்கப் போகிறது என்று நினைத்து வருந்தினேன். சுஜாதா இதைக் கமலிடம் சொல்லியிருக்கக்கூடாதா என்றும் நினைத்துக் கொண்டேன். 'கமலின் ஆறுகோடி ரூபாய் கனவு' என்று புத்தகமாகவும் வந்த நினைவு. ஒரு கேள்வி பதிலில் கமல் 'விக்ரம்?' என்ற ஒற்றை வார்த்தைக் கேள்விக்கு 'விரயம்' என்று பதிலளித்திருந்தார். இன்றைக்கெல்லாம் ஷங்கர் விக்ரம் படம் எடுத்திருந்தால் அந்த ஆறு கோடி ரூபாயை 'காப்பிச் செலவுக்கு' கணக்கு எழுதியிருப்பார்!

++++++

நட்புக்காக எழுத்தில் அவர் செய்த சமரசங்கள் அவர் மீது நிறைய பேருக்கு வெறுப்பையும் சம்பாதித்துக்கொடுத்திருந்தது. அவர் சினிமாவிற்குச் சென்றிருக்கக்கூடாது என்றுதான் இன்றுவரை நினைக்கிறேன். பத்திரிகைகளில் 'ஏராளமான மார்புகளுடன் அவள் வந்தாள்' என்று அவர் எழுதினால் அதைக் கண்கொட்டாது படித்து ரசிப்பவர்கள் அது படமாக்கப்பட்டால் 'ச்சீ' என்று விமர்சனம் செய்வார்கள் என்பதை உணர அவர் ஏனோ மறந்தார். கலாசாரக் காவலர்களின் பல்வேறு முகங்கள் ரத்தம் ஒரே நிறத்திலிருந்து பாய்ஸ் வரை அவரைத் துரத்தித் துரத்தி அச்சுறுத்தியதை எண்ணிப் பார்த்துக் கொள்கிறேன். அப்படி அச்சுறுத்தியவர்களுக்கும், இன்று வலையுலகில் சங்கடமேயில்லாமல் அவருக்கு அன்று மறுக்கப்பட்ட அதே 'எழுத்துச் சுதந்திரத்தை' ஆயுதமாகப் பாவித்து அவரைத் தாக்குபவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை.

++++++

மரணத்தின் விளி்ம்புவரை ஏற்கெனவே சென்று அந்த அனுபவங்களையும் அவரது வழக்கமான பாணியில் எழுதியதைப் படித்தபோது 'இவர் நிஜமாகவே மரணித்தபின் அந்த அனுபவங்களைக் கட்டுரையாக எழுதிவிடுவார்' என்று நம்பிவிடலாம் போல இருந்தது.

++++++

அவரது மரணச் செய்தியைக் கேட்டபோது வெறுமையாக இருந்தது. யாரிடமும் பேசப் பிடிக்காமலிருந்தது. தமிழ் மணத்தில் தொடர்ச்சியாக எங்கும் சுஜாதா வியாபித்திருக்க வருத்தம், அஞ்சலிகள், மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் பின்னூட்டம், விளக்கம், பதில் விளக்கங்கள், என்று ஒருபுறம் பதிவுகள் வந்துகொண்டிருக்க, இதற்கெல்லாம் ஒப்பாரியா என்று கேட்ட பதிவுகள் - சுஜாதா - சுரதா என்று ஒப்புமைப்படுத்தி கேள்வி கேட்ட பதிவுகள் - எல்லாரையும் ஏதோவொரு விதத்தில் அவர் பாதித்திருக்கிறார் என்ற மட்டில்தான் அவற்றைப் படிக்க முடிந்தது. இம்மாதிரி அடிதடிகளினூடே அஞ்சலி தெரிவித்துப் பதிவு போட மனம் இடங்கொடுக்கவில்லை. தவிர ஒவ்வொருவருக்கும் அவரவரது கருத்துக்கு ஒரு நியாயம் இருக்கும். யார் சரி யார் தவறு என்ற நடுநிலைப் பார்வை யாரிடமும் இல்லையென்பதால் எல்லாமே சரியாகிவிடுகிறது. ஊடகச் சுதந்திரம், கட்டற்ற இணையவெளி, அது தரும் முகமூடிகள் - யாரும் எதைப் பற்றியம் எப்படியும் எழுதலாம். யாரும் தடுக்க முடியாது. பிடித்தவற்றைப் பிடித்துக் கொண்டு இந்த பரந்த வெளியில் தொங்குவதுதான் வழி - பிடிக்காதவற்றை நினைக்காதிருப்பது மேல் - இரு சாராருக்கும் - அல்லது எல்லா சாராருக்கும் இது பொருந்தும். சற்று காட்டமாகச் சொல்லப் போனால் வலையுலகில் வலைப்பதிவுகளும் வலைப்பதிவர்களும் தத்தமது ஏரியாக்களைக் காத்துக்கொள்ளும் நாய்கள் மாதிரி. வேற்றாள் உள்ளே நுழைந்தால் - பிடித்திருந்தால் வாலாட்டப்படும் - இல்லையெனில் வள்வள்தான் - நாய் என்பதை தரக்குறைவான பிரயோகத்திற்காக இங்கு உபயோகிக்கவில்லை - எனக்கு நாய் பிடித்தமான தோழமை. ஒரு காரின் பின்புறத்தில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் சொல்வது போல சில நேரங்களில் 'The more people I meet, the more I love my dog' என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. நிற்க.

சாவுக்கு ஏன் ஒப்பாரி வைக்கவேண்டும்? அப்படியென்றால் எல்லாச் சாவுக்கும் ஏன் ஒப்பாரி வைக்கவில்லை என்று பகுத்தறிவு ரீதியாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டன. இது அஞ்சலிப் பதிவா, ஒப்பாரிப் பதிவா என்று நான் பகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்திக்கவில்லை. சிலரது சாவுச்செய்தி 'அப்படியா?' என்று கேட்கவைக்கும், சிலவற்றுக்கு 'ஐயோ' என்றிருக்கும். சிலவற்றுக்கு 'நாம் இப்போது எம்மாதிரியான உணர்ச்சிகளுக்கு ஆட்படவேண்டும்?'என்று குழப்பமாக இருக்கும். வெறுமையாக இருக்கும். அந்திப் பொழுதில் தோன்றும் இனந்தெரியாத சோக உணர்வு போல சோகமாக இருக்கும். பெரும்பாலும் அமைதியாக இருக்கத் தோன்றும். சுஜாதா இயற்கை எய்திய செய்தி என்னை வெறுமையாகத்தான் உணர வைத்தது. திடுக்கிடல்கள் எதுவுமின்றி ஆனால் ஆயாசமாக உணர்ந்தேன். துக்கமாக இருந்தது. கடந்த சில வருடங்களாகவே மரணத்தை நோக்கி ஒரு குழந்தையாக அவர் தவழ்ந்து சென்று கொண்டிருந்தார் என்றே எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது. ஆதலால் உடல் உபாதைகளிடம் தொடர்ச்சியாகப் போராடிக்கொண்டிருந்தவருக்கு விடுதலை கிடைத்துவிட்டது என்று ஓரத்தில் நிம்மதியாகவும் இருந்தது.

சுஜாதா ஜுரத்துடன் பதிவு பதிவாகப் போட்டு அலைந்ததில்லை என்றாலும் இப்பதிவு எழுதுவதற்கு எனக்கிருக்கும் முக்கிய காரணமாக நான் உணர்ந்தது - என் வாழ்நாளில் இவ்வளவு நீண்ட நாட்களாக தொடர்ந்து ரசித்து வாசித்த எழுத்தாளர் அவர் ஒருவர்தான் என்பதால். என்னையறியாமலேயே அடிமனதின் ஆழத்தில் நீண்ட வருடங்களாகத் தேங்கியிருக்கும் அவர் மீதான அபிமானத்தின் வெளிப்பாடாகவே இப்பொழுது அவர் மறைவிற்காக என்னுள் என்னைச் சூழ்ந்திருக்கும் வருத்த உணர்வினைப் பார்க்கிறேன்.

நம்மை ஏதோவொரு விதத்தில் பாதித்திருக்கும் எந்த உயிரும் மறையும்போது இயல்பாகவே எழும் வலிகளுக்கும் துக்கத்திற்கும் இம்மாதிரி வெளிப்பாடுகள் ஒரு வடிகால். ஒவ்வொரு மரணச் செய்தியும் நமக்கும் நாளை இது நிகழக்கூடும் என்ற நிஜத்தினை உணராது அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களில் மூழ்கி உறங்கிக்கொண்டிருக்கும் என் போன்றோருக்கு உறக்கத்தைக் கலைக்கும் கடிகார அலார ஒலி. சுஜாதா மறைந்த செய்தி ஒலித்தபோது விபத்துப் பகுதியைக் கடக்கும் வாகனம் போல, வாழ்க்கை தனது வேகத்தைக் குறைத்து நிதானித்துப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பயணத்தைத் தொடர்கையில் கடந்து சென்றவற்றை அடிக்கடி பார்த்துக்கொள்ள உதவும் வாகனக் கண்ணாடி போல, இம்மரணங்களை அடிக்கடி நினைத்துப் பார்த்துக்கொள்ள இப்பதிவுகள் துணைபுரியலாம்.

ஒரு பயணம் முடிவுக்கு வந்திருக்கிறது. நின்ற போது சன்னல்களுக்கு வெளியே எழுந்த ஏராளமான இரைச்சல்கள் இப்போது அடங்கிவிட்டன. நமது பயணம் தொடர்கிறது. அதுவும் ஒரு நாள் முடிவுக்கு வரும். இரைச்சல்கள் மறுபடியும் எழும். என்ன - அவற்றைக் கேட்கத்தான் நாம் இருக்க மாட்டோம்! எல்லாரும் போய்ச் சேருவதென்னவோ ஓரிடம்தான். நீங்கள் முதலில் போய்ச் சேர்ந்துவிட்டீர்கள். நாங்கள் எப்போது வந்து சேர்ந்துகொள்வோம் என்று தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் காதருகே வந்து சொல்லுங்கள் - சிலநொடிகளுக்கு முன்னால்!

அதுவரை உங்களைத் தொந்தரவு செய்யப் போவதில்லை சுஜாத்....ஆ!

++++++++++