Monday, March 24, 2008

I know.. I know.. I know.. I know.. I know.........



யதேச்சையாக இருந்தாலும் இவ்வருடத்தில் விரல்விட்டு எண்ணுமளவு எழுதியவைகளில் இது மூன்றாவது பதிவு - மரணித்தவர்களைப் பற்றி. :(

வில்லன் என்றாலே அபத்தமான தருணங்களில் அபத்தமாகச் சிரித்து அபத்த ஒளியமைப்புக் காட்சிகளில் - கீழேயிருந்து சர்க்கஸ் லைட் அளவிற்கு பளீரென்று கலர் கலராக ஒளியை வில்லனின் முகத்தில் பாய்ச்சி - பசுவைக்கூட பயங்கரமாகக் காட்டி விடும் அது - பயங்கரமாகச் சித்தரிப்பார்கள் - அபத்தமான வசனங்களைப் பேசும் பாத்திரங்களையே பார்த்துவந்த தமிழ்ச்சினிமாவில் 'ஹீரோவை விட நல்லாருக்காருய்யா வில்லன்' என்று ரசிகர்களைப் பேச வைத்தவர் ரகுவரன் - ஹீரோவாக அறிமுகமாகி காணாமல் போகாமலிருப்பதற்காக வில்லன் வேடங்களை ஏற்று - அவற்றிலும் தனி முத்திரை பதித்தவர். என்ன செய்வது - நமது ரசிகர்களின் ரசனை அப்படி - ஏழாவது மனிதனில் (1982) அவர் கதாநாயகனாக அறிமுகமானார் - நல்ல படம் - ஆனால் ஏழு ரசிகர்கள்தான் வந்திருந்தார்கள் போல - வேறு வழி? - ஆனார் வில்லன். ஆனால் வித்தியாசமான வில்லன். ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தாத வில்லன்.

ரகுவரன் என்றதும் அவர் முத்திரை பதித்த படங்கள் நினைவுக்கு வருகின்றன:

ஒரு ஓடை நதியாகிறது

அருமையான படம். இன்றும் காதில் ஒலிக்கும் பாடல்கள். பாலு பாடிய சிறந்த பாடல்களில் நான் எப்போதும் "தலையைக் குனியும் தாமரையே" பாடலைச் சேர்ப்பேன்.

பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு - குழந்தை, பெற்றோர் இடையே நிகழும் உணர்வு ரீதியான உறவுகள், பிரச்சினைகள், போராட்டங்களை மையமாக வைத்து வந்த படங்களில் வெளுத்துக் கட்டியிருப்பார்.

சம்சாரம் அது மின்சாரம் - பெருவெற்றி பெற்ற படம். ஒரு மத்திய வகுப்புக் குடும்பத்தில் ஒருவராக அன்றாடப் பிரச்சினைகளையும் உறவு ரீதியான பிரச்சினைகளையும் கூட்டுக்குடும்பப் பிரச்சினைகளையும் அலசிய படம். விசுவுக்கு நிகராக ரகுவரன் முக்கிய பாத்திரத்தில் அசத்தியிருந்தார்.

காதலன், உல்லாசம், ரட்சகன் போன்ற படங்களில் நல்ல பாத்திரங்களில்.

முதல்வன்

தமிழ்த் திரைப்படங்களில் பொதுமக்களிடையே அதிகம் பேசப்பட்ட காட்சிகளில் முதல்வன் படத்தில் அர்ஜுன் முதல்வராக வரும் ரகுவரனைத் தொலைக்காட்சி நிலையத்தில் வைத்துப் பேட்டி காணும் அந்தக் காட்சி முக்கியமானது. ஒரு கட்டத்தில் பதில் சொல்லாமல் உதடுகளுக்குக் குறுக்காக விரலை வைத்து 'உஷ்' என்று 'நான் பேசப் போவதில்லை' என்று சைகை செய்துவிட்டு விழிகளில் வன்மம் கக்கும் அந்தக் காட்சியில் அர்ஜுனைத் தூக்கிச் சாப்பிட்டிருப்பார் ரகுவரன்.

என் சுவாசக் காற்றே - அரவிந்த சாமியோடு ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்திருப்பார் ரகுவரன்.

அஞ்சலி

மூளைவளர்ச்சி குன்றிய குழந்தையின் தகப்பனாக, மனைவியிடம்கூட உண்மையை வெளிப்படுத்தாமல் மனதுக்குள் போட்டுக் குமைந்து கொண்டு, கேள்வி கேட்கும் குழந்தைகளை எதிர்கொள்ள முடியாமல் தவித்து, அதே சமயத்தில் பாசத்தில் கட்டுண்டு திணறும் அந்தப் பாத்திரத்தை அவர் மிகவும் சிறப்பாகச் செய்திருந்தார். சாதாரணமாகவே குறைந்த வசனங்களைப் பேசக் கூடியவர் - மணி ரத்னம் படம் வேறு - நடிப்பதற்குக் கிடைத்த அபாரமான வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார். என்றும் நினைவில் நிற்கும் படம்.

அமர்க்களம்

அஜீத் (எங்க அந்த அஜீத்?) கலக்கலான நடிப்பைத் தந்த படத்தில் அவருக்குக் கார்டியனாக ரகுவரன் படம் முழுதும் அஜீத்தை மட்டுமல்ல - நம்மையும் ஆக்கிரமித்திருப்பார்.

புரியாத புதிர்

கமல் சிகப்பு ரோஜாக்களில் 'நத்திங்.. நத்திங்... என்று சீவாத பென்சிலால் அழுத்தமாகக் கிறுக்கும் அந்தக் காட்சி நினைவிலிருக்கிறதா? கிட்டத்தட்ட அதே மாதிரியான காட்சி - ரகுவரன் I Know என்ற இரண்டு வார்த்தைகளை அவருடைய பிரத்யேகமான குரலில் விதவிதமான ஏற்ற இறக்கங்களுடன் மறுபடி மறுபடி சொல்லி நடித்த அந்தக் காட்சி அபாரமானது (கிட்டத்தட்ட 30 தடவைக்கு மேல் சொல்வார்). திகில் படத்திற்கு மேலும் திகிலூட்டியதில் அந்த வசனம் பேசி நடித்த ரகுவரனின் பங்கு அபாரமானது.

பாட்ஷா

கிட்டத்தட்ட பதினாறு வருடங்களுக்கு முன்பு ரஜினியை மதுரையில் அவர் தங்கியிருந்த பசுமலை தாஜ் ஹோட்டலில் பறவைகளின் இரைச்சல் மட்டுமே சூழ்ந்திருந்த ஒரு ரம்யமான சூழ்நிலையில் சந்தித்தது நினைவுக்கு வருகிறது (காதெல்லாம் கிர்ரென்று அடைத்துக்கொள்ள மூளை இயங்காமல் - ஜுரம் அடித்த - காந்தத்தில் சிக்குண்ட உணர்வைத் தந்த அவரது Charisma மறக்க முடியாதது) - அவர் நல்ல உயரம் - காதுவரையில் தான் நான் இருந்தது போல நினைவு - ரஜினி என்றாலே உடனடியாக நினைவுக்கு வரும் வெகுசில முத்திரைப் படங்களில் பாட்ஷா பிரதானமானது. அவரைப் போலவே உயரமான ரகுவரன் அவருக்கு எதிரியாக, வில்லனாக பாட்ஷாவில் கலக்கியிருந்தார். பின்னால் தாடி மீசையெல்லாம் வைத்துக்கொண்டு வரும் காட்சிகள் கண்றாவியாக இருந்தாலும் எல்லாவற்றையும் மீறி மிளிர்ந்தது ரகுவரனின் நடிப்பு! ரஜினி-ரகுவரன் ஜோடி அபார வெற்றி பெற்றது. மிஸ்டர் பாரத், சிவா, ராஜா சின்ன ரோஜா, முத்து, அருணாசலம், சிவாஜி என்று ரஜினியோடு பல படங்களில் இணைந்திருக்கிறார்.

கூட்டுப் புழுக்கள்

தென்றல் தழுவுவது மாதிரியான இன்னொரு அருமையான படம். என்னுடைய Sweet heart-உடன் நடித்திருந்தார்.

கமலோடு ஏன் ஒரு படத்தில் கூட அவர் நடிக்கவில்லை என்பது புரியாத புதிர்! மற்றபடி சத்யராஜ், விக்ரம், அஜீத், விஜய், அரவிந்தசாமி, மாதவன் என்று அநேக ஹீரோக்களுடன் அவர் நடித்திருக்கிறார். நடிப்பைப் பொருத்தவரை தனக்கென ஒரு தனிப்பாணியை ஏற்படுத்திக்கொண்டு ரசிகர்களைக் கவர்ந்தவர். அலட்டிக்கொள்ளாத வெள்ளெழுத்துக் கண்ணாடியுடன், மீசையில்லாது, ஒடிசலான உயர்ந்த தேகத்துடன், கோட், சூட்டெல்லாம் போட்டு நடித்த மிகவும் 'நட்பான வில்லன்' அவர்! இன்றும் கலக்க, அசத்தப் போவது யார் போன்ற நிகழ்ச்சிகளிலும், குரல் மாற்றிப் பேசும் எந்த மிமிக்ரி நிகழ்ச்சியானாலும், கமல், ரஜினி, எம்ஜியார், சிவாஜி, விஜயகாந்த் (பாவம்) ஆகியோருக்கு அடுத்தபடியாக ரகுவரன் போல் பேசிக் காட்டுபவர்கள் அநேகம் பேர். பிரபல நடிகர்களைப் போலவே பல வயதுகளிலும் ரசிகர்களைப் பெற்ற ஒரு intellectual villain ரகுவரன் என்று சொன்னால் மிகையாகாது. தமிழக அரசின் கலைமாமணி விருதினைப் பெற்றவர். ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் பெற்றவர்.

கிட்டத்தட்ட 200 படங்களில் நடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். மிகவும் குறிப்பிடத்தக்கது சிவசங்கரியின் 'ஒரு மனிதனின் கதை' (சின்னத்) திரைக்கு வந்தபோது நல்ல நிலையில் இருந்து குடியினால் சீரழிந்த பாத்திரத்தை ஏற்று அவர் இயல்பாக, அழகாகச் செய்திருந்தார். மிகவும் பேசப்பட்டது அது. பிறகு தியாகு என்ற திரைப்படமாகவும் வந்தது. இவ்வளவு நல்ல நடிகர் தனிப்பட்ட வாழ்க்கையில் குடி, போதை என்று உடல்நலத்தைக் கெடுத்துக்கொண்டது சோகம். அவர் இன்னும் கவனமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அவர் மீது கோபம்கூட வருகிறது. நல்ல படங்களைத் தரக்கூடிய விரல்விட்டு எண்ணக்கூடிய நடிகர்களில் அவரும் ஒருவர். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கும் ரசிகர்களுக்கும் ஒரு இழப்பு.

'ஒரு ரகுவரனின் கதை' எடுக்கும்போது சில சமயங்களில் காலில் தங்கிவிடும் உடைந்த முள்ளின் முனை போன்று சிலகாலம் அவரது மறைவு நினைவுகளில் உறுத்திக்கொண்டு இருக்கும்.

+++++

2 comments:

துளசி கோபால் said...

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணம் கிடைச்சிருது போதையில் மூழ்க(-:

அருமையான நடிகர்.

ஆமாம் அவருக்கு என்ன வயசு?

IMDBயில் 48லே பிறந்தார்ருன்னு போட்டுருக்கு.

சில இடங்களில் 49 வயசுன்னு?

ச்சும்மாத் தெரிஞ்சுக்கத்தான் கேக்கறேன்.

Sundar Padmanaban said...

//ஆமாம் அவருக்கு என்ன வயசு?

IMDBயில் 48லே பிறந்தார்ருன்னு போட்டுருக்கு.
//

1948 ன்னு போட்ருக்காங்க. ஆனா 49 மாதிரி இருக்கு படங்களைப் பாக்கறப்போ. முதல் படம் ஏழாவது மனிதன் வந்தது 1982-ல - அப்போ அவர் இருபதுகளில் இருந்திருக்கக்கூடும். ரோகிணிக்கும் நாற்பதுக்கு அருகில் இருக்கணும்னு நினைக்கிறேன் - எப்படிப் பார்த்தாலும் 49-க்கு மேல நினைக்கத் தோணலை. மாரடைப்புன்னு சொல்றாங்க. ஒரு வாரமா ICU-ல இருந்தார்னு சொல்றாங்க. அது எப்படி மீடியா கண்ணுல படாம போனதுன்னு தெரியலை. ஒரு வேளை செய்தி எதுவும் வந்து நான்தான் பாக்கலையோ?

எது எப்படியோ நல்லா இன்னும் நிறைய வாழ்ந்திருக்கவேண்டியவர். உடல்நிலையைக் கவனிச்சுக்காம போயிட்டார். :(