Friday, April 18, 2008

மாக்கள்!



இந்தியன் படத்தில் எரிந்த மகளை வண்டியில் போட்டு எடுத்துக்கொண்டு மருத்துவ சிகிச்சைக்காக நாய் மாதிரி அலைவார் கமல். வைட்டமின் 'ப' கண்ணில் படாதவரைக்கும் மனிதர்களைப் பன்றிகள் போல நடத்தும் மருத்துவமனையில் அவர் அல்லாடிக்கொண்டிருக்க அங்கே மழையில் நனைந்துகொண்டு இறந்துபோவார் மகள். அக்காட்சியைப் பார்க்கும்போது கொழுந்துவிட்டெரியும் தீயின் நடுவில் நின்ற உணர்வு எழுந்தது.

இதையொட்டிய சமீபத்தில் படித்த செய்தியொன்றை நாளிதழ்களில் படிக்க நேரிட்டபோதும் தீயின் நடுவில் நிற்கவேண்டியிருந்தது. அச்செய்தி:

பெரம்பூர் மாநகராட்சியில் பிரசவத்திற்கு வந்த தாயும் சேயும் சரியான சிகிச்சையின்றி மரணமடைந்தனர். அப்பெண்ணின் வயசாளியான தாயார் மரித்துப் போன பச்சிளங் குழந்தையை ஒரு கையில் வைத்துக்கொண்டு உயிருக்குப் போராடிய மகளை மீன்பாடி வண்டியில் ஏற்றி இரவெல்லாம் அலைந்து திரிந்தாராம்.

இரண்டே வரிகளில் இது இருந்தாலும் பெருங்கூட்டத்தின் நடுவே நிர்வாணமாக நிற்க வைக்கப்பட்ட உணர்வைத் தந்து கூசிக் குறுகச் செய்தது இந்தச் செய்தி. பிரசவச் சிக்கல்களில் தாயும் சேயும் மரித்தார்களா அல்லது தகுந்த சிகிச்சையின்றி மரித்தார்களா என்பது உண்மை வெளியில் வரும்போது தெரியும்தான். ஆனாலும் அரசு மருத்துவமனைகள் இயங்கும் லட்சணத்தை நேரில் பார்த்த அனுபவத்தைக் கொண்டு பார்க்கப்போனால் அவர்களுக்குத் தகுந்த சிகிச்சைக் கிடைக்காது போயிருக்கும் என்பதைத்தான் நம்பவேண்டியிருக்கிறது.

கொந்தளிக்கும் மனதுடன் வார்த்தைகளைக் கோவையாக எழுத வரவில்லை. ஆனாலும்..

மனிதன் மிருகங்களைவிட மிகவும் கேவலமானவன் என்று அடிக்கடி நிரூபணமாகும் சம்பவங்களில் இந்த அசம்பாவிதமும் ஒன்று.

மனசாட்சியைக் கொன்றுவிட்டு பணத்திற்காக அலையும் பேய்களினால் நிரம்பியிருக்கும் அத்தியாவசியச் சேவை இயந்திரங்களை எந்த அரசும் கவனிக்காமல் இப்படி பொதுமக்களின் உயிரை உதாசீனப்படுத்தி துச்சமாக மதித்து எதிர்கட்சி, ஆளும்கட்சி, கடந்த ஆட்சி, இந்த ஆட்சி என்று வெட்டியறிக்கைகளை விட்டுக்கொண்டு வெள்ளை வேட்டி சட்டையில் கறைபடாமல் வியர்க்காமல் இருக்கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பொதுமக்களின் வரிப்பணத்தில் உண்டு கொழுத்து நாட்களை ஓட்டி காசுகளை எண்ணும் காவாலிக் கூட்டத்தினை நினைத்தால்........

அறுபத்தோரு ஆண்டுகளில் ஒரு எழவுக் கட்சியும், எந்த எழவு பிரதமரும், எழவு முதல்வரும் இன்ன பிற எழவுப் பெருச்சாளித் தலைவர்களும் ஒரே ஒரு துறையை - அதுவும் போக்கிடமற்ற ஏழை மக்களுக்கான - உயிர்காக்கும் சிகிச்சை முதல் எல்லா சிகிச்சைக்கும் அவர்கள் தஞ்சமடையவேண்டிய - ஒரே ஒரு மருத்துவ துறையைக்கூடவா - சிறப்பாக இயங்க வைக்க முடியவில்லை? என்ன கேவலம் இது!

இப்படிப் பட்ட சம்பவங்களை அனுமதித்துக்கொண்டு எப்படி இவர்களால் எந்தக் கூச்சமுமின்றி அடுத்தவேளைச் சோற்றைத் தின்ன முடிகிறது?

இவர்களுக்கு ஓட்டுப் போட்டு பதவியில் அமர வைத்த முதுகெலும்பற்ற கோழைகளான நம்மைப் போன்ற மக்களைத்தான் செருப்பாலடிக்க வேண்டும். ம்ஹும்.. மக்களா நாம்... மாக்கள்!

ச்சீ!

***

7 comments:

வடுவூர் குமார் said...

:-((

PRABHU RAJADURAI said...

சுந்தர்,

பிரச்னை தாங்கள் நினைப்பு போல அவ்வளவு எளிதாக அரசியல்வாதிகளிடமும், ஓட்டுப்போடும் மக்களிடமும் மட்டுமில்லை.

உணர்ச்சிவசப்படாமல் இருப்பது பல சமயங்களில் நல்லது.

Sundar Padmanaban said...

பிரபுஜி

//உணர்ச்சிவசப்படாமல் இருப்பது பல சமயங்களில் நல்லது.
//

உண்மைதான். ஆனாலும் சிலநேரங்களில் அதிகப்படியான மெளனம் அவமான உணர்வைத் தருகிறது.

அந்த வயதான தாய், இறந்த பெண், குழந்தை நிலையில் என்னை ஒரு கணம் நிறுத்திப் பார்த்தேன். காசு இல்லையென்றால் குப்பைக்குச் சமமாக நடத்தப்படும் ஏழைகள் எங்குதான் போவார்களண்ணே?

திட்டங்கள் என்று எதையெதையோ செய்கிறார்கள். செய்துகொண்டேயிருக்கிறார்கள். அடுத்த ஆட்சி வந்தால் சென்ற ஆட்சி செயல்படுத்திய திட்டங்களில் எவ்வளவு ஊழல்கள் நடந்தன - யார் எவ்வளவு 'அடித்தார்கள்' என்பது பற்றி - அல்லது சென்ற ஆட்சியில் செய்யாத எதை நாங்கள் செய்கிறோம் - என்பதைப் பற்றி மட்டுமே பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகிறார்கள்.

If streamlining Healthcare and providing Healthcare to poor general public is not a priority for the Government, what else could be?

I fail to understand! :(

யாத்ரீகன் said...

சுந்தர் இன்று வரை எனக்கு புரியாத ஒரு விஷயம் இதுதான். அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் என அரசு இயந்திரங்களில் பணிபுரியும் இடைநிலை, கடைநிலை ஊழியர்கள் அவர்களும் நடுத்தர வர்க்க அல்லது அதனினும் கீழ் வர்க்க நிலையில் தானே இருப்பார்கள். அவர்களின் குடும்பத்தினரும் இத்தகைய அரசாங்க சேவைகளை பயன் படுத்தும் போது இந்த மாதிரியான அவலங்களால் பாதிக்கபடுகின்றார்கள் தானே ?! பின் ஏன் அவர்களும் தங்கள் வேலையை குறையுடன் செய்கிறார்கள் ?!

ஒரு ரேசன் கடை ஊழியர் வீட்டில் அரசு மருத்துவமனை போக மாட்டார்களா ? அரசு மருத்துவமனை ஊழியர் பத்திர பதிவு அலுவலகத்திற்கு போக மாட்டார்களா ? இல்லை அங்கிருந்து தான் வேறு அரசு சேவைகளை பயன்படுத்த மாட்டார்களா ?! எல்லோரும் தங்களால் இயன்றவற்றை சரியாய் செய்தாலே எல்லோரும் நன்றாய் இருக்கலாமே .. சொல்வது மிக மிக எளிது , இதில் உள்ள நடைமுறை சிக்கல்களையும் தாண்டி இதன் படி பணி புரிய ஒவ்வொருவரையும் தூண்டினால் மாற்றம் கொஞ்சமாவது நடக்காதா ? இல்லை அப்படி பணி புரிபவர்களின் பொருளாதார சிக்கல்கள் அவர்களின் இந்த செயல்களை தூண்டுதா ?! எளிதாய் பதில் அளிக்க முடியாத கேள்வி :-(

எல்லாம் சரி, இந்த மரணத்தை பார்க்கும் , இந்த குற்றத்தில் கொஞ்சமாவது பங்கு கொண்டவர்கள் மனசாட்சி உருத்தி அன்றைய உணவு உள்ளே சென்றுறிருக்குமா ?!

Anonymous said...

இது போன்ற பிரச்சனைகளுக்கு என்னதான் தீர்வா இருக்க முடிய்யும்? யார் திருந்தணும்? ஊழியர்களா? அரசியல்வாதிகளா? நிர்வாகமா? இல்லை ஒவ்வொரு முறையும் துக்கப்பட்டு கண்கலங்கும் நாமா?

Uma said...

2 days ago ,there was another case where 2 new born babies got mixed up in a govt hosp and both families are bidding for the boy baby only
how shameful
there is 50% probability that the girl baby belongs one of the families
bnow they are going in a DNA test
maaakkalthan !

கானகம் said...

சமீபத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அதில் நோயாளிகளுக்கான கழிப்பிட வசதியைப்பார்த்தால் அதன் மூலமே வியாதிகள் வரும். அத்தனை மோசம். பயிற்சி மருத்துவர் ஒருவரிடம் கொஞ்சம் சுத்தமாக வைத்துக்கொள்ளக்கூடாதா எனக்கேட்டதற்கு நான் எதுவும் பேசுவதற்கில்லை. பாய் டீன பாருங்க என நடையைக்கட்டினார்.

துரதிர்ஷ்டவசமாய் ஏழையாய் பிறந்ததைத் தவிர எந்த பாவமும் செய்யாத அவர்களுக்கு கிடைக்கும் இந்த மரியாதைக்கு காலம் பதில் சொல்லும் என்றுதான் சொல்ல முடியும். காத்திருக்க வேண்டும். ...

ஜெயக்குமார்