Friday, March 14, 2008

Parent Trap - குட்டி பத்மினி - Lindsay Logan


குழந்தையும் தெய்வமும் (1965) என்றாலே நினைவுக்கு வருவது குட்டி பத்மினியின் ரெட்டை வேட நடிப்பு. வாய் கிழிய படம் முழுவதும் எல்லாரும் பேசிக்கொண்டே இருப்பார்கள் - நாடகத்திலிருந்து வெள்ளித் திரைக்கு இடம் பெயர்ந்த ஆரம்ப காலங்களில் படங்களனைத்திலும் வசனமும் பாடல்களுமே பிரதானமாக இருந்ததில் ஆச்சரியமில்லை - ஆனாலும் சுவாரஸ்யமாக இருந்தது. பல பாடல்கள் இனிமையாக இருக்கும் - என்ன வேகம் நில்லு பாமா, அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம், நான் நன்றி சொல்வேன் உங்கள் கண்களுக்கு, கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே கோழிக் குஞ்சு ரெண்டுமிப்போ அன்பில்லாத காட்டிலே (த்சோ த்சோ) என்று நல்ல பாடல்கள்.

அப்பாவாக ஜேம்ஸ் பேண்ட் (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை) ஜெய்ஷங்கரும், அம்மாவாக ஜமுனா (எனக்கு மிகவும் பிடித்த பெண் பெயர்களில் ஒன்று!)வும் நடித்திருப்பார்கள். இரட்டைக் குழந்தைகள் வேடத்தில் குட்டி பத்மினி அட்டகாசமான நடிப்பைக் கொடுத்து தாய்மார்கள் மனங்களைக் கொள்ளை கொண்டிருந்தார். குழந்தைகளில் ஒன்று அப்பாவிடமும் இன்னொன்று அம்மாவிடமும் - தனக்கொரு சகோதரி இருக்கிறாள் என்று அறியாமல் - தனித்தனியாக வளர்ந்து பின்பு பள்ளிச் சுற்றுலா ஒன்றில் எதேச்சையாக சந்தித்துக்கொள்கிறார்கள். அம்மா யாரென்றே தெரியாத அப்பாக் குழந்தையும், அப்பாவைப் பார்த்திராத அம்மாக் குழந்தையும் அவர்களுக்கு உதித்த யோசனைப்படி இடம்மாறி வீடு திரும்புகிறார்கள். அவர்களை அடையாளம் கண்டுபிடிக்காமல் பெற்றோரிருக்க, பெற்றோருக்கிடையே இருக்கும் ஊடல்களையும் பூசல்களையும் களைந்து இருவரும் ஒன்று சேர குழந்தைகள் எப்படி உதவுகிறார்கள் என்று எல்லாரையும் சுற்றிப் பின்னப்பட்ட அழுத்தமான திரைக்கதையுடன் குழந்தையும் தெய்வமும் படம் வெளிவந்த பெருவெற்றி பெற்றது.

ஏவிஎம்மினால் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் மூலம் 1961-இல் David Swift இயக்கி Hayley Millis இரு வேடங்களில் நடித்து வெளிவந்து ஆங்கிலத்தில் சக்கை போடு போட்ட Parent Trap என்ற படம்!



இந்தப் பழையை ஒயினைப் புதிய பாட்டிலில் ஊற்றி மறுபடியும் அமெரிக்கர்களின் தற்போதைய கனவுக்கன்னிகளில் ஒருவரான லிண்ட்ஸே லோஹன் பத்து வருடங்களுக்கு முன்பு சிறுமியாக இருந்தபோது (1998) Parent Trap என்ற அதே தலைப்பில் - தமிழில் மட்டும்தான் பில்லா, பொல்லாதவன் என்று மறுபடியும் வரலாமா? - அப்போதைய தொழில் நுட்பங்களைக் கொண்டு அசத்தலாகப் படம் எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள. இந்தப் புதிய குழந்தையும் தெய்வமும் உலகம் முழுவதுமாக கிட்டத்தட்ட 100 மில்லியன் டாலர்களை வசூலித்துக் குவித்திருக்கிறது. இதில் அப்பாவாக நடித்திருப்பவர் The Day After Tomorrow-விலும் அப்பாவாக நடித்துப் புகழ் பெற்ற Dennis Quad. அம்மாவாக Natasha Richardson. இயக்கியவர் Nancy Meyers.

இப்போது கழுதையாகத் திரியும் Lindsay Lohan பதினொரு வயதுச் சிறுமியாக இப்படத்தில் நடித்து சக்கை போடு போட்டிருப்பார். அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இரட்டையரில் ஒருவர் லண்டனில் புகழ் பெற்ற டிஸைனர் பெண்ணிடமும் வளர்வார்கள. Vineyard வைத்திருக்கும் அப்பா இருப்பதோ அமெரிக்க மேற்குக் கடற்கரையின் Napa Valley-யில். கோடையில் பெரும்பாலான அமெரிக்கப் பள்ளிகள் நடத்தும் Summer Camp-இல் இரண்டு சகோதரிகளும் சந்தித்துச் செய்யும் அமர்க்களங்கள் மிகவும் ரசிக்க வைப்பவை. பிறகு இருவரும் இடம்மாறிக் கொள்ள அமெரிக்காவில் அப்பாவிடம் வளரும் சிறுமி விமானமேறி லண்டன் அம்மாவைப் பார்க்கப் போகிறாள். லிண்ட்ஸேயின் நடிப்பு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. அம்மாவை முதன்முறையாகச் சந்திக்கும்போது ஆனந்தக் கண்ணீர் விட்டுக்கொண்டு வெளிப்படுத்தும் முகபாவமென்ன, அப்பாவைச் சந்திக்கும் (இன்னொரு வேடத்தில்) வார்த்தைக்கு வார்த்தை 'அப்பா' என்று அழைத்து ஆனந்தப்படுவதென்ன? அப்பா தனது பெண் நண்பியைத் திருமணம் செய்யும் யோசனையை வெளிப்படுத்தியதும் கோபத்தில் பிரெஞ்ச் மொழியில் கத்துவதென்ன? பணத்திற்காக அப்பாவிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்தப் பெண் நண்பியைப் படாத பாடு படுத்தித் துரத்துவதென்ன? அப்பாவையும் அம்மாவையும் சந்திக்க வைத்து - இரவு உணவுச் சந்திப்பை அவர்கள் முதன்முதலில் அதே சொகுசுப் படகில் சந்திக்க வைப்பார்கள் - அருமையான வசனங்கள்- துணை நடிகர்களாக வரும் அப்பா வீட்டில் சமையல்கலைஞராக இருக்கும் Lisa Ann Walter - சிறுமி அம்மாவிடம் வளர்ந்த இன்னொரு குழந்தை என்ற தெரிந்ததும் ஒரு நடிப்பை வெளிப்படுத்துவாரே, சான்ஸே இல்லை! - அம்மாவின் சமையல்காரராக இருக்கும் Simon Kunz இருவரும் அட்டகாசமாக நடித்திருப்பார்கள். அப்பாவின் தற்காலிகக் காதலியாக வரும் Elaine Hendrix-ம் கலக்கியிருப்பார்.

கலகலப்பூட்டும் காட்சிகளுக்குப் படத்தில் பஞ்சமே இல்லை. இரட்டை வேடம் என்றாலே சுமாரான காட்சியமைப்புகளில் கிராபிக்ஸ் அது இது என்று தட்டையான படங்களையே பார்த்துப் பழகிய நமக்கு இப்படத்தில் நல்ல ஒளியில் எடுக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான காட்சிகளில் லிண்ட்ஸே இரட்டை வேடத்தில் வரும் காட்சிகள் அருமையாக எடுக்கப்பட்டிருக்கும்.

நம்மூரில் குழந்தைகளோடு பார்க்கும் வகையில் படங்கள் வருவது அபூர்வம். இம்மாதிரிப் படங்களை - மொழி புரியாவிட்டாலும் - குழந்தைகளோடு பார்த்து மகிழலாம்.

++++++

4 comments:

சகாதேவன் said...

கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே என்று குட்டி பத்மினி பாடும் பாட்டில் ஒரு வரி--அங்கும் இங்கும் சேர்த்து வைக்க எங்களுக்கும் வயசில்லே, உங்களுக்கும் மனசில்லே-- தாத்தா சுந்தரராஜனைப் பார்த்து பாடுவாள். பாட்டிலேயே கதை அமைந்தது அந்தக்காலம்.
சகாதேவன்.

TBCD said...

தகவலுக்கு ரொம்ப நன்றி...

நான் கூட ரொம்ப நாள் முன்னாடி லோகன் படத்தைப் பார்த்துட்டு, ஹாலிவுட்லில் கூட, நம்ம தமிழ் படத்தை நகல் செய்திருக்காங்களே என்று பெருமை பேசிக் கொண்டியிருந்தேன்..

லோகனை கழுதை என்று சொன்னதை நான் கண்டிக்கிறேன். அவங்க இல்லாட்டி, ரொம்ப பத்திரிக்கைகள் செய்திகள் இல்லாம தள்ளாடும் தெரியும்மா உங்களுக்கு.. :P

Sundar Padmanaban said...

நன்றி சகாதேவன்

//பாட்டிலேயே கதை அமைந்தது அந்தக்காலம//

ஆமாம்.

அன்றிலிருந்து இன்று வரை நல்ல அழுத்தமான திரைக்கதை இருக்கும் படங்கள் வெற்றி பெற்றே வந்திருக்கின்றன. நாடகத்திலிருந்து திரைப்படங்களுக்கு இடம்பெயர்ந்த ஆரம்ப காலகட்டங்களில் குறைவான தொழில்நுட்ப வசதிகளினாலும், விஷுவல்களின் முக்கியத்துவம் அவ்வளவாக உணரப்படாததினாலும், பாமர ரசிகர்ளே பெரும்பான்மையாக இருந்ததினாலும் அதிகப்படியான வசனங்கள், பாடல்கள் அக்காலப் படங்களில் இடம் பெற்றிருந்தது இயல்பானதொன்றே.

நன்றி.

Sundar Padmanaban said...

tbcd,

நன்றி.

//ஹாலிவுட்லில் கூட, நம்ம தமிழ் படத்தை நகல் செய்திருக்காங்களே என்று பெருமை பேசிக் கொண்டியிருந்தேன்..//

எனக்கும் முதல்தடவை அப்படித்தான் தோணிச்சு. 'இருக்காதே' என்று தோண்டிப் பார்த்ததும்தான் 61-ல வந்த மூலப்படத்தைப் பற்றிய தகவல்கள் கிடைச்சது.

//லோகனை கழுதை என்று சொன்னதை நான் கண்டிக்கிறேன். அவங்க இல்லாட்டி, ரொம்ப பத்திரிக்கைகள் செய்திகள் இல்லாம தள்ளாடும் தெரியும்மா உங்களுக்கு.. //

லோகன் நல்ல பொண்ணுன்னு சொல்லணும்னுதான் நினைக்கிறேன். இன்னொரு குழந்தைகளுக்கான படம் Herby-லயும் அட்டகாசமா நடிச்சிருந்தாங்க.

ஆனா பிரிட்னியாகட்டும் லோகனாகட்டும் - போதை வஸ்துகளில் விழுந்து ஒரே நாளில் உச்சாணிக்கொம்பிலிருந்து தரைக்கு இறங்கி விடுகிறார்கள் - ரசிகர்களின் மதிப்பில். 'பிரிட்னி' போல தங்கள் குழந்தைகளும் வரவேண்டும் என்று அப்பெயரைக் குழந்தைகளுக்கு வைத்த தாய்மார்கள் எத்தனையோ பேர். இப்போது தறுதலையாக ஆனதும் அவரை வெறுப்பவர்களே அதிகம்.

தனிமனித சுதந்திரம் அதிகமுள்ள அமெரிக்காவில் ஒருவர் அவர் இஷ்டப்பட்டபடி எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம் - ஆனால் பொது வாழ்வு அல்லது பிரபலம் என்று வந்து விட்டால் அதிகபட்ச தனிமனித ஒழுக்கத்தை அமெரிக்கர்கள் எதிர்பார்க்கிறார்கள். சிறு தவறாக இருந்தாலும் - அது நாட்டின் அதிபராக இருந்தாலும் சரி - நிற்க வைத்துக் கேள்வி கேட்டு நாறடித்து, கோபுரத்திலிருந்து இழுத்துக் கீழே போட்டுவிடுவார்கள் - மன்னிப்பே கிடையாது! கட்சிக்காரர்களாக இருந்தாலும் நிற்கும் ஆட்களின் தனிப்பட்ட தகுதிகளுக்கே முன்னுரிமை. 'நான் பொறந்ததுலருந்து கச்சிக்காரன்' என்று பெருமைபேசிக்கொண்டு கட்சி சார்பில் நிற்கும் கழுதை நின்றால்கூட ஓட்டுப்போடும் அறியாமை இல்லை அல்லது குறைவாகவே இருக்கிறது என்று நினைக்கிறேன்.

'அவரோட சொந்த வாழ்க்கையில் அவர் எப்படி வேணா இருக்கலாம்'ங்கற சகிப்புத் தன்மை நிறைந்த மனோபாவமே நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கிறது. அந்த அளவில் தலைவர்களுக்கான தகுதிகளை நிர்ணயிப்பதில் நாம் இன்னும் கறாராக, எச்சரிக்கையாக, வெளிப்படையாக இருக்கவேண்டும் என்று நம்புகிறேன்.

அய்யோ என்ன ஆச்சு எனக்கு - லோகனைப் பத்திப் பேசறதுக்கு பதிலா எங்கிட்டோ போயிட்டேன். மன்னிச்சுக்குங்க!

லோகன் கழுதை - அதாவது கழுதை மாதிரி துள்ளித் துள்ளிச் செல்லும் சுறுசுறுப்பான கனவுக்கன்னி - போதுமா? :-)

நன்றி.