தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் இப்படி வெளியே இருந்ததில்லை - ஆதலால் இம்முறை விடுமுறையில் இந்தியா வந்த போது கிடைத்த அனுபவங்கள் மிகவும் வித்தியாசமானவை. நான்கு வாரங்களில் என்னென்னவோ செய்யவேண்டும் என்று வழக்கம்போல அட்டகாசமாகத் திட்டம்போட்டுக்கொண்டு வந்து, வழக்கம்போலவே எதையும் செயல்படுத்த இயலவில்லை. நாமொன்று நினைக்க நம்மாட்கள் வேறொன்று நினைக்கிறார்கள்!
சென்னை பன்னாட்டு விமானநிலையத்தின் உள் வளாகத்தைப் புதுப்பித்து இழைத்திருக்கிறார்கள். அட்டகாசம். நான் வந்த விமானம் அதிகாலை மூன்றரை மணிக்கு வந்திறங்க, அந்நேரத்தில் வேறு விமானங்கள் எதுவும் வரவி்ல்லையாதலால் குடியுரிமைச் சோதனைகளை முடித்து பெட்டிகள் வரும் Baggage Claims area-வுக்கு 10 நிமிடங்களில் வந்து விட்டேன். அமெரிக்காவின் பல நகரங்களிலிருந்து லண்டன் வரும் விமானங்களில் சென்னைப் பயணிகளைப் பிரித்து ஒரு விமானத்தில் போட்டு அனுப்புவதால் பெட்டிகள் எல்லாம் சீட்டுக் குலுக்கலைப் போலப் பிரிந்து பிரிந்து, என் முதல் பெட்டி உடனேயும், இரண்டாம் பெட்டி ஒரு மணிநேரம் கழித்தும் வந்தது. மற்ற மாநிலங்களில் - குறிப்பாக மும்பை - உள்ள நிலையங்களைப் போலல்லாது, சென்னை விமான நிலையம் எப்போதுமே இனிதான அனுபவத்தைத்தான் தந்திருக்கிறது. இம்முறையும் சுங்கச் சோதனை இனிதாகவே முடிய - அந்த அதிகாரியிடம் விசாரித்தபோது, முனையத்தைப் புதுப்பித்து இரண்டு வருடங்களாகிவிட்டன என்றார். நன்றாகவே பராமரிக்கிறார்கள். பாராட்டுகள்.
நிலையத்திலிருந்து வெளியேறி வந்தால் கையில் பஸ் டிக்கெட்டுகளைப் போல டாலர்களையும் ரூபாய்களையும் வைத்துக்கொண்டு 'FC, FC, FC மாத்தணுமா சார்' என்ற விசாரிப்புகளையும் ஆட்டோ டாக்ஸி அழைப்புகளையும் தாண்டி - நண்பர்கள் கால் டாக்ஸியில் வந்து காத்திருந்தார்கள் - வண்டியிலேறி பிரதான சாலையை அடைய ஏதோ பாலம் அரைகுறையாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்க அப்பகுதி முழுதும் மூத்திர நாற்றமடித்தது! ஒரு வழியாக அதை விட்டு விலகி உள்ளகரத்தில் இருக்கும் நண்பனின் வீட்டுக்குச் சென்று ஒரு காபியைக் குடித்துவிட்டு, குளித்துவிட்டு திருச்சி கிளம்பினேன். எட்டரைக்கு தாம்பரத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸில் முன்பதிவு செய்த பெட்டியில் ஏறினால் வெள்ளையுஞ் சொள்ளையுமாக ஒரு கோஷ்டியே அங்கு எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தது. 'இதுல ஒக்காருங்க' என்று நல்ல தமிழில் காலியாக இருந்த Middle Berth காட்டியவர் மார்வாரி. பெட்டிகளை வைக்க இடமில்லாமல் அதில் ஏற்றி வைத்துவிட்டு Aisle-இல் நின்று கொண்டேன். வாடி வாசலைப் பிரித்து வைத்துக்கொண்டு - அட்டைப்படத்திலிருந்து முதற் பக்கத்திற்குச் செல்லவே அரைமணி நேரமாகிவிட்டது. அற்புதமான படம் - அதையும் எழுதிய செல்லப்பாவே எடுத்திருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருந்தது - படிக்க ஆரம்பித்தேன். பத்து நொடிக்கு ஒருவராக வந்து போய்க்கொண்டேயிருந்தார்கள். விழுப்புரத்தில் சிலர் இறங்கிக்கொள்ள ஜன்னலோர இருக்கையில் சிறிது நேரம் அமர முடிந்தது. மிகவும் அயர்வாக இருந்தது. வெளியே காட்சிகளை வெற்றுச் சிந்தனையுடன் கவனித்துக்கொண்டே இருந்தேன். நிறைய வயல்களில் வெள்ளைக் கற்கள் 60 x 40 களில். அதன் பிறகு ஒரு வழியாக விவசாயத்திலிருக்கும் நிலங்களில் பசுமையைக் காண சற்று ஆறுதலாக இருந்தது. என்னுடன் பயணித்த ஆறு பேரும் கைப்பேசியில் ஓயாது திருச்சிவரைப் பேசிக்கொண்டேயிருந்தார்கள். இந்த கைப்பேசிப் புரட்சியைப் பற்றி பிற்பாடு.
ஸ்ரீரங்கத்தில் இறங்கி வீடு வந்து சேர்ந்ததும் குழந்தைகள் - ஒரு மாதம் முன்னதாகவே சென்றிருந்தார்கள் - ஓடி வந்து கட்டிக்கொண்டார்கள். லேசாக இளைத்திருந்து, களைத்திருந்தார்கள். ஆனால் தாத்தா, பாட்டி, மாமா, அத்தை என்று நிறைய உறவினர்கள் மத்தியில் உற்சாகமாக, சந்தோஷமாக, சுதந்திரமாக ஓடியாடினார்கள்.
அலறிக்கொண்டிருந்த தொலைக்காட்சியின் ஒலியளவைக் குறைத்தேன்.
இன்னும் வரும்...
3 comments:
//
அலறிக்கொண்டிருந்த தொலைக்காட்சியின் ஒலியளவைக் குறைத்தேன். //
:)
சூப்பர்... இதை தான் நானும் வீட்டுக்கு போனவுடனே செய்தேன்... ஏதோ ரொம்ப சத்தமா இருக்கற மாதிரி ஒரு ஃபீல் :)
வெட்டி
//ஏதோ ரொம்ப சத்தமா இருக்கற மாதிரி //
மாதிரியெல்லாம் இல்லை. நிஜமாகவே ஒலியளவு அதிகமாக வைத்துக் கேட்கிறார்கள்! இப்பத்தான் அதைப்பத்தி எழுதிப்போட்டேன்.
நானும் சமீபத்தில் ஸ்ரீரங்கம் போயிருந்தேன். புதுதில்லி வெயிலில் பழகியவளுக்கு ஸ்ரீரங்கம் வெயில் கொடுமையாக தாங்கி கொள்ளவே இயலாமல் போய் விட்டிருந்தது;((
Post a Comment