தொலைக்காட்சியின் தொகுப்பாளப் பெருமக்களைப் பற்றிச் சொல்லாமல் இருக்கவே முடியவில்லை. சிற்றலை வானொலிகள் ஒரு பக்கம், தொலைக்காட்சிச் சானல்கள் மறுபக்கம் என்று 24 மணி நேரமும் ஆங்கிலம் 4 தேக்கரண்டி, தமிழ் ஒரு சிட்டிகை என்ற விகிதத்தில் கலந்து தடித்த நாக்குடன் ஒரு கூட்டமே தமிழைச் சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது. கலைஞர், அலைஞர் என்று எல்லாத் தொலைக்காட்சிகளிலும் இடையறாத தமிழ்க் கொலை. விதிவிலக்காக மக்கள் தொலைக்காட்சியில் வேட்டி சட்டை போட்டுக்கொண்டு அறிவிப்பாளர் அடித்தட்டு வர்க்க மக்கள் வசிக்கும் பகுதியில் யார் ஒரு நிமிடத்தில் அதிக எண்ணிக்கையில் வறட்டி தட்டுகிறார் என்று பெண்மணிகளுக்கிடையில் நடத்திய போட்டி சுவாரஸ்யமாக இருந்தது. வறட்டி தட்டுவதற்காக சாணியைக் கையிலள்ளும் காட்சியைப் பார்த்த மாத்திரத்தில் என் இரண்டு குட்டீஸும் ஒரே நேரத்தில் 'யக்' என அலற, தொலைக்காட்சியை அணைத்துவிட்டு அடுத்த அரை மணி நேரத்திற்குச் சாணி கரைத்து நீர் தெளிப்பதற்கான காரணங்களை விளக்கி வறட்டியின் பெருமைகளையும் சொல்ல, சின்னவள் Can we buy it in Wal-Mart? எனக் கேட்டாள். கவலையாக இருந்தது.
Sun Music என்று துவங்கி ஒரு இருபது முப்பது இசைச் சானல்கள் இருக்கின்றன. பெரிய நிறுவனங்கள் நடத்தும் தொலைக்காட்சிகளைத் தவிர விண் டிவி, மண் டிவி, மலைக்கோட்டை டிவி என்ற வகையில் வட்டாரச் சானல்கள் தமிழகத்தில் மட்டும் ஒரு ஆயிரம் இருக்கும் என்று நினைக்கிறேன். நிறைய இளைஞர்களும், இளைஞிகளும் ஓயாது பேசுகிறார்கள். அவர்கள் பேசியதில் பெரும்பாலானவற்றைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அது தமிழ் போலவும் இல்லை, ஆங்கிலம் போலவும் இல்லை - கடும் காய்ச்சலில் ஈன ஸ்வரத்தில் உளறுவது எப்படிப் புரியாதோ அப்படி அவர்கள் பேசுவதும் புரியவில்லை.
இது தவிர SMS Mafia என்று வேரூன்றிப் பரவியிருக்கும் இன்னொரு கலாச்சாரம். எல்லா இசைச் சேனல்களிலும் திரைக்குக் கீழே இரண்டு அங்குலத்திற்கு ஓயாது குறுஞ்செய்திகள். புனைப்பெயர் பூனைப்பெயர் என்று எதையும் வைத்துக்கொள்ளாமல் நிசப் பெயர்களிலேயே இளைஞர்களும், யுவதிகளும் நாள் பூரா சாட்டுகிறார்கள். அவர்கள் கொடுத்த எண்ணிற்கு ஏர் டெல் கைப்பேசியிலிருந்து ஒரு சோதனைச் செய்தி அனுப்ப ஐந்தாவது வினாடியில் திரையில் அது வந்தது ஆச்சரியமாக இருந்தது. சன் ம்யூசிக்கில் 'Hi da..'. உதயாவில் 'Kano..' ஜெமினியில் 'Hi ra..' சூர்யாவில் 'ஞிங்களைப் பிரேமிக்கு' என்று மொழி காலாச்சார வித்தியாசமில்லாமல் வயதுக்கு வந்தவர்கள், வராதவர்கள், என்று எல்லாரும் SMS-இல் மூழ்கியிருக்கிறார்கள். பக்கத்து வீட்டுப் பெண், கூடப் படித்த பெண், பிரயாணத்தில் சந்தித்த பெண் என்று எல்லாருக்கும் பெயரைக் குறிப்பிட்டுக் காதலைத் தெரிவிக்க, அவர்கள் 'யா யா' என்று சளைக்காமல் பதில்செய்தி அனுப்புகிறார்கள். Love Meter என்று ஒன்று ஆண் பெண் பெயரை வைத்து அவர்களது ஜோடிப் பொருத்த சதவீதத்தை 'இணைபிரியாது இருப்பார்கள்' என்பது போன்ற கிளி ஜோசியக் கருத்துகளுடன் இன்னொரு சானலில் ஓடிக்கொண்டே இருக்கிறது. இது தவிர தொலை பேசி அழைப்புகள். இவற்றையும் மிஞ்சி் இன்னும் கடிதம் அனுப்பி பாடல் கேட்கும் ஆசாமிகள் கூட இருக்கிறார்கள். இணையக்குழுக்களை விஞ்சியிருக்கிறது தொலைக்காட்சி மூலமாக உரையாடும் குழுக்கள்.
ஆபாசப் பாடல்கள், SMS உரையாடல்கள், காதல் என்ற பெயரில் இச்சை பரிமாற்றங்கள் என்று இசைச்சானல்களில் இளையவர்கள் இருக்க நாற்பது + வயதில் மாமாக்களும் மாமிகளும் மெகா சீரியல்கள் என்ற பயங்கர போதை வஸ்துகளுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். 25க்கும் 35க்கும் இடைப்பட்டவர்களுக்கு என்று பெரிதாக எதுவும் நிகழ்ச்சிகள் இருப்பது போலத் தெரியவில்லை. ஒரு வேளை அவர்கள் வட இந்திய மேற்கத்திய சானல்களில் வரும் பிறன்மனை நோக்குவதை இயல்பாக, யதார்த்தமாகக் காட்டும் நிகழ்ச்சிகளில் இரவு 10 மணிக்கு மேல் மூழ்கியிருக்கிறார்களோ என்னவோ?
காதலை எப்படி தெரிவிப்பீர்கள் என்ற ஒரு நிகழ்ச்சியில் ஒரு இளைஞன் சாஷ்டாங்கமாக ஒரு பெண்ணின் காலில் விழுந்தான் - அதைப்பார்த்து ஆஹாகாரம் செய்தார்கள் பார்வையாளர்கள். எனக்கு நிஜமாகவே புல்லரித்தது. அவ்விளைஞனைப் பெற்றவர்கள் அநேகமாகக் குஷ்புவுக்குக் கோவில் கட்டிய திருப்பணிக்குழு உறுப்பினர்களாக இருந்திருப்பார்கள். இளைய பாரதத்தினாய் வா என்று பாடியவர் நல்ல வேளை இன்று உயிரோடு இல்லை. இருந்திருந்தால் வெறுப்புடன் இளைய பாரதத்தி நாய் போ போ என்று திட்டியிருப்பார். இல்லாவிட்டால் இக்கண்றாவிகளையெல்லாம் பார்த்துத் தற்கொலை செய்துகொண்டிருப்பார்.
மொத்தத்தில் களேபரம்.
இளைஞர்கள் ஒரு நாட்டிற்கு, சமுதாயத்திற்கு மிகப்பெரிய பலம். இந்திய போன்ற தேசத்தின் அபரிமிதமான இளைய சமுதாயத்தின் மனிதவளமும் சக்தியும் இப்படி உப்புப் பெறாத வெட்டிச் செயல்களில் எவ்வளவு அநியாயமாக வீணாக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்று வேதனையாக இருந்தது. 84-இல் சொற்ப பதக்கங்களுடனிருந்த சீனா இன்று உலகிலேயே அதிக தங்கப்பதக்கங்களை வென்றிருக்கிறது. இந்தியா? இம்மாதிரி தொலைக்காட்சிகள் இளைய சமுதாயத்தினைக் குறிவைத்து அவர்களது சக்தி முழுவதையும் அணுஅணுவாக அனுதினமும் உறிஞ்சிக்கொண்டிருக்கையில் பதக்கம் என்பது வெறும் கனவாகவே இன்னும் பல தலைமுறைகளுக்கு இருக்கும். சுதந்திரம் என்ற மாலையைக் கையிலெடுத்துக் கொண்டிருக்கும் குரங்கின் நிலையாக இருக்கிறது இன்றைய தலைமுறை. ஆக்கப்பூர்வமான வழிகளில் நேரத்தைச் செலவழிக்காமல் இப்படி அநியாயமாக எல்லாவற்றையும் கோட்டைவிட்டு மூழ்கியிருக்கிறார்களே என்று கவலையாக இருந்தது.
இன்னும் வரும்...
7 comments:
அந்த பொறுக்கி நாய் கால்ல விழுந்ததையே திரும்பத் திரும்ப காட்டுறானுங்க. வெக்கம் கெட்டவனுங்க. விஜய் டிவி உணர்ச்சிகளைத்தான் காசாக்கிக்கிட்டு இருக்கு.
நான் ஆறு மாதத்து ஒரு முறை ஊருக்கு போறப்பவே பல மாற்றங்களை பார்க்குறேன். நீங்க மூணு வருசம் கழிச்சு போனா சுத்தமா அடையாளம் தெரியாத அளவுக்கு மாற்றங்கள் இருந்துருக்குமே? எப்டி சமாளிச்சீங்க?
//காதலை எப்படி தெரிவிப்பீர்கள் என்ற ஒரு நிகழ்ச்சியில் ஒரு இளைஞன் சாஷ்டாங்கமாக ஒரு பெண்ணின் காலில் விழுந்தான் - அதைப்பார்த்து ஆஹாகாரம் செய்தார்கள் பார்வையாளர்கள்.//
ச்சின்னப் பையன்
என்ன சொல்ல வந்தீங்க? :-)
ஜோசம் பால்ராஜ்
//விஜய் டிவி உணர்ச்சிகளைத்தான் காசாக்கிக்கிட்டு இருக்கு. //
கிட்டத்தட்ட எல்லாத் தொலைக்காட்சிகளும் அப்படியே!
நன்றி.
//அடப்பாவி - அப்படியா செய்தான்.. உருப்பட்டா மாதிரிதான்//
ஹிஹி. இதுதான் நேத்து டைப் செய்தேன்... (அல்லது செய்தேன்னு நெனெச்சேன்....!!!)
நீங்கள் சொல்றா மாதிரி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மக்களை கட்டிப்போட்டிருக்கு.
என் உறவினர் பசங்க - கல்லூரியில் படிக்கறவங்க - மூணு வெவ்வேறு குடும்பங்கள் - எப்போ பேசணும்னு கூப்பிட்டாலும், இப்போ ஒரு முக்கியமான நிகழ்ச்சி (!!!) இருக்கு, ஏதோ போட்டி, இந்த வாரம் மிஸ் பண்ணவே கூடாதுன்னு... கொஞ்சம் நேரம் கழிச்சி பேசலாமான்னு உடனே கட் செய்துடறாங்க..... இப்படியே பயங்கர பிஸியா இருக்காங்க.....
//இளைஞர்கள் ஒரு நாட்டிற்கு, சமுதாயத்திற்கு மிகப்பெரிய பலம். இந்திய போன்ற தேசத்தின் அபரிமிதமான இளைய சமுதாயத்தின் மனிதவளமும் சக்தியும் இப்படி உப்புப் பெறாத வெட்டிச் செயல்களில் எவ்வளவு அநியாயமாக வீணாக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்று வேதனையாக இருந்தது. 84-இல் சொற்ப பதக்கங்களுடனிருந்த சீனா இன்று உலகிலேயே அதிக தங்கப்பதக்கங்களை வென்றிருக்கிறது. இந்தியா? இம்மாதிரி தொலைக்காட்சிகள் இளைய சமுதாயத்தினைக் குறிவைத்து அவர்களது சக்தி முழுவதையும் அணுஅணுவாக அனுதினமும் உறிஞ்சிக்கொண்டிருக்கையில் பதக்கம் என்பது வெறும் கனவாகவே இன்னும் பல தலைமுறைகளுக்கு இருக்கும். சுதந்திரம் என்ற மாலையைக் கையிலெடுத்துக் கொண்டிருக்கும் குரங்கின் நிலையாக இருக்கிறது இன்றைய தலைமுறை. ஆக்கப்பூர்வமான வழிகளில் நேரத்தைச் செலவழிக்காமல் இப்படி அநியாயமாக எல்லாவற்றையும் கோட்டைவிட்டு மூழ்கியிருக்கிறார்களே என்று கவலையாக இருந்தது.//
:((
ச்சின்னப்பையன்
//எப்போ பேசணும்னு கூப்பிட்டாலும், இப்போ ஒரு முக்கியமான நிகழ்ச்சி //
இவ்வளவு எதுக்கு? யார் வீட்டுக்காவது போனாலும் டிவி ஓடிக்கிட்டே இருக்கு. வாய் நம்ம கேக்கறதுக்கு பதில் சொல்ல கண்ணு டிவிலயே இருக்கு. வீட்ல டிவி, வெளில வந்துட்டா கைப்பேசி! ஒவ்வொத்தரும் ஒரு தனியுலகம்.
Post a Comment