Wednesday, November 05, 2008

ஒளி படைத்த கண்ணினாய் வா - ஒபாமா from இல்லினாய் வா!



நான்காயிரத்திற்கும் மேலான அமெரிக்கர்களை ஈராக் ஆக்கிரமிப்பில் இழந்துவிட்டு வாடும் குடும்பங்கள், பலத்த அடிவாங்கித் தடுமாறும் பொருளாதாரம், படு பாதாளத்திற்குப் பாய்ந்துவிட்ட ரியல் எஸ்டேட், நிறுவனங்கள் மூடப்படுவதால் தொடர்ச்சியான வேலையிழப்புகள், வீட்டுக்கடன் தவணை கட்டமுடியாமல் வீட்டையிழந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கும் குடும்பங்கள் என்று அடுக்கடுக்காய் பற்றியெரிந்து அமெரிக்கர்களைப் பொசுக்கிக் கொண்டிருக்கும் தீச்சுவாலையின் வெப்பம் உலக நாடுகளையும் பாதிக்கத் தொடங்கிவிட்டது. கிட்டத்தட்ட அனைவரும் வெறுக்கும் தலைவராகிவிட்ட புஷ் - கடந்த 8 ஆண்டுகளில் அமெரிக்காவின் “பெரியண்ணன்” பிம்பத்தை “ரவுடி பெரியண்ணன்” என்ற நிலைக்கு உயர்த்திவிட்ட பெருமை வாய்ந்தவராகிய நிலையில் வந்தது தேர்தல். இத்தேர்தல் நடந்த முறையிலிருந்து “உலகின் பெரிய ஜனநாயக நாடு” என்று பெருமையடித்துக்கொள்ளும் நம் நாடும், நமது அரசியல்வாதிகளும் கற்க வேண்டியது ஏராளம்.

நேற்றிரவு ஓட்டெடுப்பு முடிந்து கிழக்குக் கடற்கரை நேரப்படி நள்ளிரவுக்குச் சற்று முன்னதாக ஒபாமா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். சொந்த மாநிலமான இல்லினாயின் ஷிகாகோவின் Grand Park இல் குழுமியிருந்த இலட்சத்திற்கும் மேலான ஆதரவாளர்கள் மத்தியில் மேடையில் குடும்பத்தோடு தோன்றினார் ஒபாமா. மனைவி மிஷெல் ஒபாமாவும் குழந்தைகளும் ஓரிரு நிமிடங்கள் கையசைத்துவிட்டு திரும்ப உள்ளே சென்றுவிட, ஒலிவாங்கியைப் பிடித்து கம்பீரமாகத் தனது பேச்சைத் துவக்கினார் ஒபாமா. சுருக்கமாகச் சொன்னால் இம்மாதிரி ஒரு பேச்சைக் கேட்டு எவ்வளவோ வருடங்களாகிவிட்டது! அவரது உரையின் தமிங்கில வடிவம் இதோ.

******************



”ஹலோ ஷிகாகோ”

அமெரிக்காவில் எதுவும் சாத்தியம் என்பதிலும், இந்நாட்டை உருவாக்கியவர்களின் கனவுகள் இன்னும் உயிர்ப்போடு இருக்கின்றனவா என்பதிலும், இந்நாட்டின் ஜனநாயகத்தின் சக்தியிலும் சந்தேகம் கொள்பவர்கள் இன்னும் இருந்தால் அவர்களுக்கு இன்றைய இரவே பதிலாக அமைந்திருக்கிறது.

இதற்கு முன்பு இந்த தேசம் பார்த்திராத பள்ளிகளிலும், கோவில்களிலும் இன்று நீண்ட வரிசைகளில் நின்ற மக்கள், பல மணி நேரமாகக் காத்திருந்தவர்கள், வாழ்நாளில் முதன்முறையாக வாக்கு அளிப்பவர்கள், என்று மக்கள் அளித்த பதில் அது. ஏனென்றால் முன்பு போலில்லாமல் இம்முறை நடைபெறும் தேர்தல் வித்தியாசமானது என்பதிலும், தங்கள் குரல்கள் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பிய மக்கள் அளித்த பதில் அது.

இளையவர்கள், முதியவர்கள், செல்வந்தர்கள், ஏழைகள், ஜனநாயகக் கட்சியனர், குடியரசுக் கட்சியினர், கறுப்பர், வெள்ளையர், ஆசியர், ஸ்பானியர், அமெரிக்கப் பழங்குடியினர், ஓரினச் சேர்க்கையாளர்கள், ஆண்பெண் உறவுகளை நம்புபவர்கள் (straight), ஊனமுற்றவர்கள், சாதாரணர்கள் எல்லாரும் சேர்ந்துவந்து கொடுத்த பதில் அது.

இதன் மூலமாக “நாம் எப்போதும் ஒரு சாதாரண கூட்டமாகவோ, அல்லது சிவப்பு மாநிலங்களின் கூட்டமாகவோ (குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற மாநிலங்கள்), நீல மாநிலங்களின் கூட்டமாகவோ(ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்ற மாநிலங்கள்) இல்லாமல், என்றென்றும் ஒருங்கிணைந்த அமெரிக்கக் குடியரசாகவே (United States of America) இருந்து வந்திருக்கிறோம்” என்ற முக்கிய செய்தியை அமெரிக்க மக்கள் உலகுக்குத் தெரிவித்திருக்கிறார்கள்.

நம்மால் எதையும் அடையவோ, சாதிக்கவோ, வரலாற்றை மாற்றியமைக்கவோ, சிறந்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவோ முடியாது இது வரை மக்களிடம் நம்பிக்கையின்மை, சந்தேகம், பயம் ஆகியவற்றை மட்டுமே விதைத்துவந்தவர்களுக்கும் இது பதிலாக அமைந்திருக்கிறது.

இந்தத் தேர்தலில், இந்த நாளில், இந்தத் தருணத்தில் நாம் நிகழ்த்தியிருப்பது அமெரிக்காவில் ஏற்படப் போகும் சிறந்த மாற்றங்களுக்கு அஸ்திவாரம் போட்டிருக்கிறது.

சற்று நேரத்திற்கு முன்பாக செனேட்டர் மெக்கெயினிடமிருந்து எனக்கு வந்த தொலைபேசி அழைப்பு அசாதாரணமானது, பெருந்தன்மை மிக்கது, மரியாதைக்குரியது. அவர் இந்தத் தேர்தலில் மிகவும் கடுமையான, நீடித்த போட்டியைத் தந்தார். அதைவிட தான் நேசிக்கும் இந்நாட்டிற்காக இன்னும் கடுமையாக அவர் போராடியிருக்கிறார். நம்மில் பலர் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத அளவுக்கு அமெரிக்காவிற்காக அவர் பல தியாகங்களைச் செய்திருக்கிறார். சுயநலமற்ற, நேர்மையான, தைரியமான தலைவரான மெக்கெய்னின் சேவைகளாலும், தியாகங்களாலும் நாம் பல பலன்களைப் பெற்றிருக்கிறோம். அவருக்கும், அவரோடு சேர்ந்து போட்டியிட்ட கவர்னர் சாரா பேலினுக்கும் அவர்களது சாதனைகளுக்காக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தேசத்திற்காக வரும் மாதங்களில் அவர்களோடு சேர்ந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியிருக்கிறேன்.

இந்நேரத்தில் எனது இந்த நீண்ட பயணத்தில் உறுதுணையாக நின்று, முழு அர்ப்பணிப்பு உணர்வுடன், தனது மக்களுக்காகவே எப்போதும் பேசிய, என்னுடன் பணியாற்றிய, துணையதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு எனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று உங்கள் முன்னிலையில் நான் நிற்பதற்குக் காரணம் 16 வருடங்களாக எனது தோழியாகவும், எனது குடும்பத்தைத் தாங்கும் தூணாகவும், எனது அன்புக்கும் நேசத்திற்கும் உரியவராகிய, இத்தேசத்தின் அடுத்த First Lady யாகப் போகும் எனது மனைவி மிஷெல் ஒபாமா. அவரது முழு ஒத்துழைப்பு இல்லையென்றால் நான் இன்று இங்கு நின்று பேசிக்கொண்டிருக்கமாட்டேன்.

சாஷா, மாலியா (ஒபாமாவின் குழந்தைகள்) - நான் உங்களை உங்களால் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு நேசிக்கிறேன். உங்களது செல்ல நாய்க்குட்டியும் நம்முடன் வெள்ளை மாளிகைக்கு வரப்போகிறது!

இப்போது எங்களுடன் இல்லாவிட்டாலும், என்னை இந்நிலைக்கு வளர்த்து ஆளாக்கிய எனது பாட்டி, மற்றும் (மறைந்த மூத்த) குடும்பத்தினரோடு என்னை பார்த்துக்கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். அவரது மறைவு என்னைப் பிரிவுத்துயருக்குள்ளாக்கியிருக்கிறது. அவர்களுக்கு நான் என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன்.

எனது சகோதரிகள் மாயா, ஆல்மா, சகோதரர்கள் அனைவருக்கும் எனது நன்றி.

அமெரிக்க வரலாற்றில் மிகச் சிறந்த தேர்தல் பிரச்சாரமாகத் திகழும் எனது தேர்தல் பிரச்சாரத்தை வடிவமைத்து, பிரச்சாரக் குழுவினரை நியமித்து, நிர்வகித்த பின்னணியில் இயங்கிய நாயகனான பிரச்சார மேலாளர் டேவிட் ப்ளஃப் (David Plouffe)க்கும், இந்தத் தேர்தல் பயணத்தில் நான் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் என்னுடனிருந்த எனது முதன்மைத் திட்ட மேலாளர் (Chief Strategist) டேவிட் ஆக்ஸல்ராட் (David Axelrod)க்கும் எனது நன்றிகள்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வெற்றிக்குரியவர்கள் நீங்கள். இவ்வெற்றி உங்களுக்கு உரித்தானது.

நான் முதன்முதலில் 20 மாதங்களுக்கு முன்பு எனது தேர்தல் பயணத்தைத் துவக்கியபோது அதிபர் பதவிக்கு வரத் தகுதியுள்ளவர்களின் பட்டியலில் நான் இல்லை. பண பலமோ, பெரும் ஆதரவோ அப்போது எங்களிடம் இல்லை. எங்களது பிரச்சாரம் வாஷிங்டனின் பளிங்கு மாளிகை வளாகங்களில் உருவாக்கப்படவில்லை. Des Moines இன் புல்வெளிப் பரப்புகளிலும், Concord வீடுகளின் வரவேற்பறைகளிலும், Charlestonனின் முற்றங்களிலும் உருவானது. உழைக்கும் வர்க்கத்தினைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் அவர்களின் கடின உழைப்பில் பெற்ற ஊதியத்திலிருந்து எங்களுக்கு அளித்த ஐந்து, பத்து, இருபது டாலர்களில் எழும்பியது அது. அது தங்கள் தலைமுறையின் சோம்பலை உதறி, வீட்டையும், குடும்பத்தினரையும் விட்டு குறைந்த ஊதியத்தையும், குறைந்த தூக்கத்தையும் அளித்த வேலைகளுக்காக வெளியேறிய இளைய சமுதாயத்தினரால் வலுப்பெற்றது. கடுமையான குளிரையோ, வெயிலையோ பொருட்படுத்தாது முன்பின் தெரியாத மக்களைச் சந்தித்து ஆதரவு கேட்க வீடு வீடாக ஏறி இறங்கிய லட்சக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களால் அது இன்னும் வலிமையடைந்தது.

அவர்கள் இருநூறு வருடங்கள் கழித்தும் மக்களால், மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட குடியரசு இப்பூமியிலிருந்து மறைந்துவிடவில்லை என்பதை உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.

இது உங்கள் வெற்றி.

இதை நீங்கள் இத்தேர்தலில் வெற்றியடைவதற்காக மட்டுமோ அல்லது என்னை வெற்றிபெறச் செய்வதற்காக மட்டுமோ செய்யவில்லை என்பதை நான் அறிவேன். இந்த வெற்றியை நீங்கள் தந்தது, நம் முன் இருக்கும் விஸ்வரூபமெடுத்து நிற்கும் பிரச்சினைகளையும் சவால்களையும் நீங்கள் நன்றாக உணர்ந்திருப்பதால்தான். இன்று நாம் இவ்வெற்றியைக் கொண்டாடினாலும், நாளை நமக்காகக் காத்திருக்கும் சவால்களை - இரண்டு போர்கள், அழிவுகளின் பிடியில் தத்தளிக்கும் உலகம், இந்நூற்றாண்டின் மோசமான பொருளாதாரச் சீரழி்வு ஆகியவற்றை - நாம் உணர்ந்திருக்கிறோம்.

இந்த இரவில் இங்கு நாம் நின்று கொண்டிருக்கையில், நமக்காக நம் தேசத்துக்காக இராக்கிய பாலைவனங்களிலும், ஆஃப்கானிஸ்தானின் மலைத் தொடர்களிலும் உயிரைப் பயணம் வைத்து நமது வீரர்கள் போராடிக்கொண்டிருப்பதை நாம் அறிவோம்.

குழந்தைகள் தூங்கிய பின்பும் விழித்திருந்து வீட்டுக்கடன் தவணையையோ, மருத்துவச் செலவுகளையோ எப்படி அடைப்பது என்றும், குழந்தைகளுடைய எதிர்காலக் கல்லூரிப் படிப்புச் செலவிற்கு எப்படிப் பணம் சேர்ப்பது என்றும் எப்படி அடைப்பது என்று யோசிக்கும் பெற்றோர்களின் நிலைமையை நாம் அறிவோம்.

மாற்று எரிசக்தியை உருவாக்குவது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, புதிய பள்ளிக்கூடங்களைக் கட்டுவது, அச்சுறுத்தல்களைச் சமாளிப்பது, பழுதான கூட்டுறவுகளைப் புதுப்பிப்பது என்று பல சவால்கள் காத்திருப்பதை நாம் அறிவோம்.

நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம். நாம் அதை ஒரு வருடத்திற்குள்ளோ நான்கு வருடத்திற்குள்ளோ கடக்க முடியாமல் போகலாம். ஆனால், அமெரிக்கா, அத்தூரத்தைக் கடந்துவிடமுடியும் என்பதை நான் முன்பு எப்போதையும் விட இன்று, இந்தத் தருணத்தில் தீவிரமாக நம்புகிறேன்.

நாம், ஒன்றிணைந்த மக்களாக, அத்தூரத்தைக் கடப்போம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நம்மால் முடியும்!

(பொது மக்கள் - “நம்மால் முடியும்”)



சில இடையூறுகள் ஏற்படலாம். அதிபராக நான் எடுக்கப் போகும் சில முடிவுகளில் சிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அரசால் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது என்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம். நாம் எதிர்நோக்கும் சவால்களைப் பற்றியும், அதன் நிலவரங்களைப் பற்றியும் நான் உங்களிடம் நேர்மையாக இருப்பேன். உங்களின் கருத்துகளைக் கவனமாகக் கேட்பேன், குறிப்பாக நம்மால் ஒருமித்த கருத்து உருவாக்க முடியாத தருணங்களில். எல்லாவற்றையும்விட, நாம் இத்தேசத்தைச் செப்பனிடும் வேலையில் எல்லாரும் இணைந்து - இந்த 221 ஆண்டுகள் இணைந்து பணியாற்றியது போல- பணியாற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இருபத்தோரு மாதங்களுக்கு முன்பு தீவிர குளிர்காலத்தில் துவங்கிய இந்தப் பயணம் இந்த இலையுதிர்காலத்தில் முடியப் போவதில்லை.

இந்த வெற்றி மட்டுமே நாம் விரும்பிய மாற்றம் அல்ல. இவ்வெற்றி மாற்றத்தை ஏற்படுத்த நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு. கடந்த காலச் செயல்பாடுகளையே நாம் தொடர்ந்தால் அம்மாற்றத்தை ஏற்படுத்த இயலாது.

நீங்களில்லாமல், உங்களுடைய சேவையில்லாமல், தியாகங்களில்லாமல் மாற்றம் நிகழாது.

ஆதலால், நாம் செய்ய வேண்டியது நமது தேசபக்தி, பொறுப்புணர்வு எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, கடுமையாக நமக்காகவும், நம்மைச் சார்ந்தவர்களுக்காகவும், பிறர்க்காகவும் உழைப்பதே.

வால் ஸ்ட்ரீட் (நியூயார்க்கில் பெரும் நிதி நிறுவனங்கள் இயங்கும் தெரு) நிறுவனங்கள் செழிக்க, மெயின் ஸ்ட்ரீட்(சாதாரண பொதுமக்கள்) கஷ்டப்படும் நிலை ஏற்றுக்கொள்ள முடியாதது. இன்றைய நிதி நெருக்கடி நமக்குக் கற்றுக்கொடுத்த பாடம் அது. இந்நாட்டில் நாம் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்று பட்டிருக்கவேண்டும். நமது அரசியலில் நீண்ட காலமாகப் புரையோடிப் போயிருக்கும் முதிர்ச்சியின்மை, பக்கச் சார்பு நிலை, சில்லறைத் தனங்களை எதிர்த்து, நீக்க வேண்டும்.

இந்த மாநிலத்திலிருந்துதான் ஒருவர் குடியரசுக்கட்சி சார்பாக - சுயசார்பு, தனிமனித சுதந்திரம், தேச ஒற்றுமை என்பதையே அடிப்படையாகக் கொண்ட கட்சி சார்பாக - வெள்ளை மாளிகையில் முன்பு நுழைந்தார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இம்மாதிரி சிறப்புகளில் நாம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. இன்று ஜனநாயகக் கட்சி பெரும் வெற்றி அடைந்தாலும் அதை நாம் அடக்கத்துடன் ஏற்றுக்கொண்டு, நம்மிடையே நமது வளர்ச்சிக்கு இதுவரை தடையாக இருந்த பிரிவுகளையும் பிளவுகளையும் களைய முனைப்புடன் இருக்கவேண்டும். ஆப்ரஹாம் லிங்கன் சொன்னது போல, நாம் எதிரிகள் அல்ல - நண்பர்கள். நமது சார்பு உணர்வுகள், நமது ஒற்றுமையைக் குலைத்துவிடக்கூடாது.

எனக்கு வாக்களிக்காத அமெரிக்க மக்களுக்கு - இன்று நீங்கள் எனக்கு வாக்களிக்காமலிருந்திருக்கலாம். ஆனால் நான் உங்கள் குரல்களுக்கும் செவிமடுப்பேன். உங்களது உதவியும் பங்களிப்பும் எனக்குத் தேவை. நான் உங்களுக்கும் அதிபரே.

பாராளுமன்றங்களிலிருந்தும், அரண்மனைகளிலிருந்தும், உலகின் மறக்கப்பட்ட மூலைகளிலிருந்து வானொலி மூலமாகவும், அமெரிக்கத் தேர்தலைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கும் மற்ற தேசத்தினருக்கு - எங்கள் வரலாறு எதுவாக இருந்தாலும், எங்கள் எதிர்காலம் ஒன்றே - இன்று ஒரு புதிய தலைமை உதயமாகியிருக்கிறது.

உலகில் அழிவுகளை ஏற்படுத்துவோருக்கு - நாங்கள் உங்களை வெல்வோம். உலகில் சமாதானத்தையும் பாதுகாப்பையும் வேண்டுவோருக்கு - நாங்கள் உங்கள் பக்கம் நிற்போம்.

அமெரிக்கா என்ற சக்தியின் ஜ்வாலை இன்னும் பிரகாசிக்கிறதா என்று கேள்வி எழுப்புவோருக்கு - அமெரிக்காவின் உண்மையான சக்தி எங்களது ஆயுத பலத்திலோ, பண பலத்திலோ இல்லை - அது எங்களது ஜனநாயகம், சுதந்திரம், வாய்ப்புகள், நம்பிக்கைகள் ஆகியவற்றில் இருக்கிறது என்பதை இன்றைய இரவு நிரூபித்திருக்கிறது. எங்களது ஒற்றுமை இன்னும் பலப்படும். நாங்கள் இன்று சாதித்தது, நாளை சாதிக்கவிருப்பவற்றுக்கான நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

இந்தத் தேர்தல் நிறைய “முதன் முறை”களையும், நிகழ்வுகளையும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு அளித்திருக்கிறது. குறிப்பாக எனது நினைவில் நிற்பது, அட்லாண்ட்டாவில் வாக்களித்த ஒரு பெண்மணி. அவர் வரிசையில் நின்று வாக்களித்த கோடிக்கணக்கான அமெரிக்கர்களிலிருந்து வித்தியாசப்பட்டவர். அவர் ஆன் நிக்ஸன் கூப்பர் (Ann Nixon Cooper) - 106 வயதானவர்!!

அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட அடுத்த தலைமுறையில் பிறந்தவர். கார், விமானம் போன்ற வாகனங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் பிறந்தவர். இரண்டு காரணங்களுக்காக - தோலின் நிறத்திற்காகவும், பெண் என்பதற்காகவும் - ஓட்டளிக்க முடியாத காலகட்டத்தில் வளர்ந்தவர். இன்று அவர் அவரது நூற்றாண்டு அமெரிக்க வாழ்க்கையில் சந்தித்தவற்றை - வலிகளை, நம்பிக்கைகளை, போராட்டங்களை, முன்னேற்றங்களை, நம்மால் முடியாது என்று சொல்லப்பட்ட காலங்களை - நினைத்துப் பார்க்கிறேன். பெண்களின் குரல்கள் ஒடுக்கப்பட்ட, நம்பிக்கைகள் மறுக்கப்பட்ட, காலங்களில் அவர் வாழ்ந்திருக்கிறார் - இழந்தவற்றை, மறுக்கப்பட்டவற்றை மீட்டெடுத்து இன்று அவர் வாக்களித்திருக்கிறார் - நம்மால் முடியும்!

{பொதுமக்கள் - “நம்மால் முடியும்!”}

உலகம் பேரழிவுகளையும், நெருக்கடிகளையும் சந்தித்தபோதும், புது உத்வேகத்துடன் மீண்டெழுந்ததை அவர் பார்த்திருக்கிறார். நம்மால் முடியும்!

{பொதுமக்கள் - “நம்மால் முடியும்!”}

நமது துறைமுகத்தைக் குண்டுகள் சிதறடித்தபோதும், கொடுங்கோலாட்சியாளர்கள் உலகை மிரட்டியபோதும், அதைப் பார்த்த சாட்சியாகவும், பின்பு ஜனநாயகம் தழைத்தோங்கியதைப் பார்த்த சாட்சியாகவும் அவர் இருக்கிறார். நம்மால் முடியும்!

{பொதுமக்கள் - “நம்மால் முடியும்!”}


நிலவில் மனிதன் காலடி வைத்தபோதும், பெர்லின் சுவர் விழுந்தபோதும், நமது அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகை இணைத்தபோதும் அவர் சாட்சியாக இருந்திருக்கிறார். நம்மால் முடியும்!

{பொதுமக்கள் - “நம்மால் முடியும்!”}

இந்த வருடம், இந்தத் தேர்தலில், அவரது விரலால் தொடுதிரையைத் தொட்டு வாக்களித்திருக்கிறார், நூற்றியாறு வருடங்கள் கழித்தும், பல சிறப்பான காலகட்டங்களையும், இருள் சூழ்ந்த காலங்களையும் கடந்தும், அமெரிக்கா இன்றும் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்ற நம்பிக்கையுடன்.

நம்மால் முடியும்!

{பொதுமக்கள் - “நம்மால் முடியும்!”}

அமெரிக்கா! நாம் கடந்துவந்த தூரம் பெரிது. செல்ல வேண்டிய தூரமும் பெரிது. ஆதலால் இந்த இரவில் நாம் நம்மைக் கேட்டுக்கொள்வோம் - நமது குழந்தைகள் அடுத்த நூற்றாண்டைப் பார்க்க வாழ வேண்டுமென்றால்,எனது குழந்தைகள் ஆன் நிக்ஸன் கூப்பர் போல நெடிய ஆயுளுடன் வாழும் அதிர்ஷ்டத்தைப் பெறவேண்டுமென்றால், அவர்கள் எந்த மாற்றங்களைக் காண வேண்டும்?. அதற்கு நாம் எத்தகைய முன்னேற்றங்களை அடைய வேண்டும்? இதுவே அக்கேள்விகளுக்கு விடைகாணும் வாய்ப்பு. இதுவே நம் தருணம்!

இத்தருணத்தில் மக்களாகிய நாம் நமது கடமைகளைளைத் திறம்படச் செய்து, நம் குழந்தைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கவேண்டும். வளங்களைப் பெருக்கவேண்டும். அமைதியை நிலைநாட்டவேண்டும். அமெரிக்கக் கனவை மீட்டெடுத்து, அடிப்படை உண்மைகளை நிலைநாட்டி, வேற்றுமையில் ஒற்றுமை காண்போம். இவற்றைச் சந்தேகிப்பவர்களுக்கும், நம்மால் முடியாது என்று சொல்வதற்கும் நம் செயல்களில் பதில் சொல்வோம். நம்மால் முடியும்!

{பொதுமக்கள் - “நம்மால் முடியும்!”}

நன்றி. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். கடவுள் அமெரிக்காவை ஆசிர்வதிக்கட்டும்!

*************

உரையின் போது பலரின் முகங்களில் காணப்பட்ட மலர்ச்சி, கண்ணீர், ஆனந்தம், உலகின் பல மூலைகளில் காணப்பட்ட கொண்டாட்டங்கள், ஈராக்கிலிருக்கும் அமெரிக்க வீரர்களின் ஆனந்த வெளிப்பாடுகள், கென்யாவில் ஒபாமா பிறந்த ஊரில் மக்களின் வெளிப்பாடுகள், வெள்ளை மாளிகை முன்பு கூடியிருந்து உரையைக் கேட்டு ஆர்ப்பரித்த இளைஞர்கள், யுவதிகள், கண்ணீரோடு கூக்குரலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கறுப்பின மக்கள் - மொத்தத்தில் உணர்வு மயமான அந்த அரைமணிநேரப் பொழுதில் ஆழ்ந்திருந்தது ஒரு புதிய அனுபவம். இங்கு ஒரு பணியாளனாக வந்து இருக்கும், இந்தியக் குடிமகனான எனக்கே ஒரு ஆசுவாசம் பிறக்கும்போது, அமெரிக்கர்களின் மனநிலையை, அவர்களது உணர்வு வெளிப்பாடுகளை, இந்தப் புதிய எழுச்சியை ஓரளவாவது என்னால் புரிந்துகொள்ள முடிந்தது!

மக்களின் நாடித் துடிப்பை உணர்ந்து பிரதிபலிக்கும் தலைவர் ஒருவருக்குக் கிடைக்கும் வெற்றியே ஒபாமாவுக்குக் கிடைத்த வெற்றி.

GO OBAMA! GO!

ஒபாமாவால் மந்திரவாதி போல எல்லாப் பிரச்சினைகளையும் மந்திரக்கோல் கொண்டு சரிசெய்ய முடியாது. ஆனால் எந்தவிதமான பணபல, அரசியல் பின்புலம், பின்னணி இல்லாது, ஒரு பேராசிரியராக, ஒரு செனேட்டராக, ஒரு வல்லரசின் அதிபராக உயர்ந்துள்ள ஒபாமாவின் சாதனை - வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அவர் வாக்குறுதிகள் எனக்கு வெறும் வாய்ச்சவடால்களாகத் தெரியவில்லை. வலியுணர்ந்து, முனைப்புடன் செயல்படக்கூடிய சாத்தியங்களே அதிகம் என்று தெரிகிறது.

அவர் சொன்னது போல் மாற்றங்கள் உடனடியாக நடைபெறப் போவதில்லை. சில வருடங்களாகலாம். ஆனால் அதற்கான அஸ்திவாரம் அவரது வெற்றி. குறிப்பாக போரை விரும்பாத ஒரு தலைவர் அமெரிக்காவுக்கு அதிபராக இருப்பது இன்றைய சூழ்நிலையில் மிகவும் அவசியம்.

மொத்த அமெரிக்கர்களிடமும் ஈரானை பரம எதிரியாகவும் சாத்தானாகவும் கட்டமைத்து வைத்திருக்கும் அரசியல்வாதிகள் மத்தியில், அவர்களுடன் முன் நிபந்தனைகளின்றி பேச்சு வார்த்தை தயார் என்று சொன்ன ஒபாமாவின் அணுகுமுறை மிகவும் முக்கியமானது. ஓரிரு வருடங்களில் அவரது செயற்பாடுகள் எந்தவிதமான மாறுதல்களை ஏற்படுத்தப்போகின்றன என்று தெரிந்துவிடும்.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. நம்மூரைப் போன்று “தலைவா! தலைவா!” என்று எந்த அடிமடையத் தலைவர்களுக்கும் - அவர்கள் என்ன குற்றம் செய்தாலும், கொள்ளையடித்தாலும், சுரண்டினாலும் - வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்து அடிவருடும் கும்பலாக அமெரிக்க மக்கள் எந்தத் தலைவருக்கும் இருக்க மாட்டார்கள். புஷ்ஷை ஆரம்பத்தில் ஆதரித்த அதே மக்களே அவரின் தவறான முடிவுகள் ஏற்படுத்திய பாதி்ப்புகளை உணர்ந்ததும் அவரைத் தூக்கியெறியத் தயங்கவில்லை. அதேபோல் ஒபாமா வாக்குறுதிகளைக் காப்பாற்றாத பட்சத்தில், செயல்படாத பட்சத்தில் அவரையும் தூக்கியெறியத் தயங்க மாட்டார்கள்.

அமெரிக்க ஜனநாயகமும் தேர்தல் முறைகளும் நூறு சதவீதம் அப்பழுக்கற்றது என்று சொல்ல முடியாது. ஆனால் இந்தியாவில் நடைபெறும் தேர்தல், கட்சி, தலைவர்கள், சீட்டுகளை “வாங்கும்” அல்லது ”விற்கும்” கூத்துகளோடு ஒப்பிட்டால் எவ்வளவோ தேவலாம் என்று சொல்ல வேண்டும். அதோடு போட்டியாளர்களாக இருந்தாலும், போட்டி முடிந்ததும் தோற்றவர் வெற்றி பெற்றவரைத் திட்டி, பழிசுமத்தி, ஏசும் கழகக் கலாசாரம் இல்லாமல் ஒருவரையொருவர் வாழ்த்திப் பாராட்டி, ஒன்றாக இணைந்து பணிபுரியும் - நாட்டை மட்டும் முன்வைத்துச் செயல்படும் - சுயநலமற்ற அணுகுமுறைகளையும் இவர்களிடமிருந்து நம்மவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

கருணாநிதி, ஜெயலலிதா போன்ற எதிரெதிர் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பொது விவாதம் செய்வதையோ, ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்வதையோ - தனிப்பட்ட, ஆபாசத் தாக்குதல்களின்றி ஆக்கப் பூர்வமான அணுகுமுறையைக் கொள்வதையோ என் வாழ்நாளில் பார்ப்பேனா என்று ஏக்கமாக இருக்கிறது. ஓட்டு என்ற ஒன்றைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் மக்களை விலக்கி வைத்துச் செயல்படும் நம்மூர்க் கட்சிகளின், கழகங்களின் செயல்பாடுகள் என்று மாறும்? மக்கள் நலமே பிரதானமானது, பெரிது - மற்ற எதுவும் முக்கியமல்ல என்று செயல்படும் ஒரு கட்சியோ தலைவரோ நமக்கு என்று கிடைப்பார்?

காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

*********

12 comments:

Anonymous said...

நல்ல தமிழாக்கம்
Arun
Houston-TX.

வல்லிசிம்ஹன் said...

வெகு நன்றாகத் தமிழில் அப்படியே அவரது பேச்சைக் கொடுத்திருக்கிறீர்கள்
சுந்தர்.

இது போல ஒரு வரலாற்று நிகழ்ச்சியின் போது அதைப் பார்க்க முடிந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
நம் இந்தியாவுக்கும் நல்லதே நடக்கவேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்.
இது மறக்க முடியாத ஒரு நிகழ்வு.

துளசி கோபால் said...

எங்கள் நாட்டிலும் நேரடி ஒளிபரப்பு இருந்துச்சு. ஒபாமா & மெக்கெயின் ரெண்டு பேருடைய பேச்சையும் கேட்டோம்.

சிறில் அலெக்ஸ் said...

தமிழிஆக்கத்துக்கு நன்றி. பாராட்டுக்கள்.

Sundar Padmanaban said...

நன்றி அருண்.

சில பத்திகளைப் பிற்சேர்த்திருக்கிறேன்!

Sundar Padmanaban said...

வல்லி மேடம்

//இது போல ஒரு வரலாற்று நிகழ்ச்சியின் போது அதைப் பார்க்க முடிந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
நம் இந்தியாவுக்கும் நல்லதே நடக்கவேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்.
இது மறக்க முடியாத ஒரு நிகழ்வு.//

அதேதான் எனக்கும் தோன்றியது.

நன்றி.

Sundar Padmanaban said...

துளசிக்கா

//எங்கள் நாட்டிலும் நேரடி ஒளிபரப்பு இருந்துச்சு. ஒபாமா & மெக்கெயின் ரெண்டு பேருடைய பேச்சையும் கேட்டோம்.//

என்னதான் தேர்தல் பிரச்சாரம், விவாதங்கள் என்று எல்லா இடங்கள்ளயும் அடிச்சுக்கிட்டாலும், முடிவு தெரிந்ததும் அவர்கள் ஒருவரையொருவர் பாராட்டிக்கொண்டதைப் பார்த்தீர்களா? எனக்கு வயிறெல்லாம் எரிந்து, அநியாயத்திற்கு பொறாமையாக இருந்தது!!!!!!

நன்றி.

Sundar Padmanaban said...

நன்றி சிறில்.

அவசர அவரசமாக அடித்து, வாசித்துத் திருத்தம் செய்யாமல் போட்டது. முன்னபின்ன இருந்தா கண்டுக்காதீங்க! நானும் முன்னபின்ன மொழிபெயர்ப்பு வேலையெல்லாம் பண்ணதில்லை. என்னமோ இதைச் செய்யணும்னு தோணிச்சு. அவ்வளவுதான்!

நன்றி.

துளசி கோபால் said...

தேர்தலுக்குத்தான் போட்டி. இது முடிஞ்சபிறகு நாட்டுநலனுக்கு ஒத்துமையாச் சேர்ந்து செயல்படணும் என்ற அரசியல் நாகரீகம் எப்பத்தான் நம்ம நாட்டுக்கு வருமோன்னு இருக்கு.

ஆளும் கட்சி பண்ணும் தவறைக் கண்காணிச்சுக் குற்றம் சொல்லும் அதே சமயம் செய்யும் நல்லதுகளை மனம் திறந்து பாராட்டவும் வேணும். இல்லையா?

Sundar Padmanaban said...

துளசிக்கா

//தேர்தலுக்குத்தான் போட்டி. இது முடிஞ்சபிறகு நாட்டுநலனுக்கு ஒத்துமையாச் சேர்ந்து செயல்படணும்//

உதாரணம் சொல்லிப் பழக்கப்பட்டுட்டோம்லியா - அதனால ஒரு உதாரணம்.

நாடு ஒரு பயணிகள் பேருந்து மாதிரி. பயணிகள் மக்கள்! பேருந்தை யார் ஓட்டிட்டுப் போறதுன்னு ஒரு பெரும் போட்டி நடக்குதுன்னு வச்சுக்குவோம் - அதான் தேர்தல். அதாவது யாரு மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்யப் போறாங்க அப்டீன்னு போட்டி போடறாங்க. ஜெயிச்ச ஆளு ட்ரைவர் சீட்ல உக்காந்து வண்டியை ஓட்டலாம். தோத்தவனும் பயணிகளும் பஸ்ல நிம்மதியா ஒக்காந்து தொந்தரவு பண்ணாம வரணும் - ஓட்றவன் ஒழுங்கா ஓட்ற வரைக்கும். அவ்வளவுதான்.

நம்மூர்ல என்னா நடக்குதுன்னா, ஜெயிச்சதும் ஓட்டுநர் சீட்ல ஒக்கார்றவன், மக்களையும் போட்டியிட்டவனையும் பஸ்லருந்து தள்ளி விட்டுர்ரான். இல்லாட்டி அவங்களை மறந்துட்டு இஷ்டத்துக்கு ஓட்டிட்டுப் போறான். இல்லாட்டி தாறுமாறா ஓட்டி எங்கிட்டாவது இடிச்சிர்றான். இல்லாட்டி வண்டிய பார்ட் பார்ட்டா சுரண்டி எடுத்து வித்துர்றான்.

கேட்டா “போன தடவை ஓட்டின அந்தாளு மட்டும் ஒழுங்கா?”ன்னு கேள்வி கேக்கறான். அவனே அவனுக்கு வேண்டிய ஆளுங்கள வண்டில ஏத்திக்கறான். பிடிக்காதவங்களை வெளிய தள்ளிடறான். அவனுக்கு ஓட்டுப்போட்டு வேலை கொடுத்த மக்கள் வெளில காத்துக்கிட்டு நிக்கறாங்க - சொரணையில்லாம!

என்னமோ போங்க!

Unknown said...

Awesome work!

Sundar Padmanaban said...

நன்றி ரமணி!