Thursday, December 11, 2008

கவித் தேவனை வணங்குவோம்



குழந்தைகளுக்கு இரவு தூங்கப் போகும்முன் பாட வேண்டும் அல்லது கதை சொல்லவேண்டும். பொதுவாக தாலாட்டுப் பாடல்கள் எதையாவது டேப் ரிகார்டரில் குறைந்த ஒலியில் ஓடவிட்டுவிடுவேன் - இரண்டாவது பாடல் முடியுமுன் சின்னவள் தூங்கிவிடுவாள். நேற்று ரிகார்டரை இயக்கியதும் “பாட்டு வேணாம். கதை சொல்லு” என்று அடம் பிடிக்க, யதேச்சையாக நினைவு வந்து குழந்தைகளுக்கு இந்தக் கதையைச் சொன்னேன்.

“ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம் - பேரு காந்திமதிநாதன்”

“ம்”

”அவனுக்கு யாராச்சும் அவனைப் பத்தி பாராட்டிக்கிட்டே இருக்கணுமாம். ஒவ்வொத்தரா வந்து ராஜாவைப் பத்திப் பாடி கிஃப்ட் வாங்கிக்கிட்டுப் போவானாம்”

“ம்“

“யாரோ பாரதியாராமே, நல்லா பாட்டெழுதுவாராமே, அவரைக் கூப்பிடுய்யா”ன்னு சொல்லி பாரதி அங்க்கிளை வரச் சொன்னானாம்”

இப்போது லேசாக விழிகள் விரிய, குறுநகை தவழ “ம்”

“முண்டாசு கட்டி, கோட்டு போட்டுக்கிட்டு, கம்போட உள்ள வந்தாராம் பாரதி அங்க்கிள்”

“ம்ம்”

“மீசையை முறுக்கிவிட்டுட்டு யாரு என்னை வரச் சொன்னது என்ன வேணும்?ன்னு கேட்டாராம்”

”ஹிஹி ம்”

“ஒடனே ராஜா என்னைப் பத்தி ஒரு பாட்டுப் பாடுன்னு சொன்னாராம்”

”ம்”

”ராஜா சொன்னா கேட்டாகணுமேன்னு பாரதி ஓகே சொன்னாராம். அவரு பாட்டு சொல்றதுக்குள்ள ராஜா வந்து - பாட்டோட கடைசில பாரதி சின்னப் பயல்னு முடிக்கணும்னு கண்டிஷன் போட்டாராம்”

“பயல்னா என்ன?” என்று அவள் கேட்க பெரியவள் குறுக்கிட்டு “குட்டிப் பாப்பா” என்று விளக்கினாள்.

“அப்புறம்?”

“பாரதி அங்க்கிள் பார்த்தாராம். ஓஹோ இந்த ஆளு நம்மை இன்சல்ட் பண்ணப் பாக்கிறாருன்னு தெரிஞ்சுக்கிட்டு பாட்டுப் பாடினாராம் - காரது போல் நெஞ்சிருண்ட காந்திமதி நாதனைப் பாரதி சின்னப்பயல்-னு பாடி முடிச்சாராம்”

அவர்கள் ஒன்றும் புரியாமல் விழிக்க நான் “பார்-னா என்ன?”

“பாக்கறது”

“அதின்னா அதிகம் - அதாவது ஜாஸ்தி, பெரியன்னு அர்த்தம்”

“சரி”

“இப்ப பாரதி சின்னப் பயல்ன்றத பிரிச்சு படிச்சா பார்+அதி சின்னப்பயல் - இங்க பாருங்கய்யா இந்த ராஜா ரொம்பச் சின்னப் பயல்-னு பாடிட்டார் - ராஜா தப்ப உணர்ந்து அபாலஜைஸ் பண்ணி கிஃப்ட் கொடுத்து மரியாதையா அனுப்பிச்சார்”

ரெண்டும் தூக்கம் கலைந்து கட்டிலில் எழுந்து உட்கார்ந்து கொண்டன! அமுக்கிப் படுக்க வைத்து பாம்பே ஜெயஸ்ரீ பாடிய ஆத்மா ஒலிக்கோப்பை ஒலிக்க விட்டு அவர்களை கண்களை மூடிக்கொள்ளச் சொல்லிவிட்டு நானும் சின்னவள் கட்டிலில் அமர்ந்து அவளைத் தட்டிக்கொண்டே கண்களை மூட

மழைக்காலம்.
மாலை நேரம்.
குளிர்ந்த காற்று வருகிறது.
மலைக்காற்று நல்லது.
கடற்காற்று மருந்து.
வான் காற்று நன்று.
காற்று தேவனை வணங்குவோம்
காற்றே வா, காற்றே வா
மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு
மனதை மயக்குகின்ற இனிய வாசனையுடன் வா
காற்றே வா காற்றே வா

என்று ஆத்மாவை ஊடுருவிச் செல்லும் குரலில் பாரதியின் வரிகள் உடலில் ரத்தம் ஓடுவதைப் போல ஒவ்வொரு வார்த்தையாக உள்ளிறங்க உடல் சிலிர்த்தது - வெளியில் நிஜமாகவே மழையும் காற்றும் வீசியடித்துக்கொண்டிருக்க, அந்த அனுபவத்தை இதற்கு மேல் விவரிக்க இயலவில்லை.

காலையில் எழுந்ததும் மறுபடியும் அதே நினைவு - அட. இன்று பாரதியார் பிறந்த நாள்!

பிறந்த நாளில் அந்தக் கவித் தேவனுக்கு சிரந்தாழ்ந்த வணக்கம்!

***

19 comments:

Anonymous said...

நன்று. கதையும், கவிதையும், நீங்கள் குழந்தைகளைத் தூங்கப் பண்ணியதும் நன்று.
இப்போது எனக்கு நிஜமாகவே தூக்கம் வருகிறது. காலை சந்திப்போம்.

அன்புடன்

ஹரன்.

Anonymous said...

Simply wonderful. As a parent who has told his children many tales at
bedtime I rejoice at your talent and also wonder at your capacity to recount
that experience in such a simple prose. Transformative experience.
பாரதியின் இயற்கையைக் கொண்டாடும் வசன கவிதைகளைப் படித்துச் சிலிர்த்துப் போகும்
எனக்கு நீங்கள் காற்று கவிதையை அனுபவித்த விதம் மிகத் தெளிவாகப் புரிகிறது.
வெயிலை மட்டும் தின்ன முடிந்தால் எப்படி இருக்கும் என்று பசு யோசிப்பதாக ஒரு
வரி எழுதி இருப்பார். என்ன ஒரு நுட்பம் அதில்!
இன்று நண்பகலை உயர்த்தினீர்கள். வாழ்க நீ எம்மான்.

RS

Sundar Padmanaban said...

RS

//வெயிலை மட்டும் தின்ன முடிந்தால் எப்படி இருக்கும் என்று பசு
யோசிப்பதாக//

அய்யோ சொல்லாதீங்க - என்னென்னவோ செய்யுது!

நன்றி.

Sundar Padmanaban said...

//மனதை மயக்குகின்ற* இனிய வாசனையுடன் வா //

மனதை மையலுறுத்துகின்ற (மயலுறுத்துகின்ற?) இனிய வாசனையுடன் வா -
என்றிருக்க வேண்டும்.

மற்ற வரிகள்..

மனதை மையலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா
இலைகளின் மீதும்
நீரலைகள் மீதும்
உராய்ந்து... உராய்ந்து..
இலைகளின் மீதும்
நீரலைகள் மீதும்
உராய்ந்து
இனிய பிராண ரசத்தை எங்களுக்குக் கொண்டுவா
காற்றே வா
காற்றே வா

வற்றாயிருப்பில் தெருக்களில் தார்ச்சாலைகள் போர்த்தப்படுவதற்கு முன்னர்
மண்சாலைகள் இருக்கையில் அடைமழை பெய்த நாட்களில் தெருக்களில் நீர் முதலில்
புழுதி கலந்து மண் நிறத்தில் ஓடி, பின்பு தெளிவாக ஓடும். அதில் காகிதக்
கப்பல் விடுவோம். கூரையின் விளிம்பிலிருந்து நீர் இழையாக இறங்கும். நாவை
நீட்டி நுனி நாக்கில் மழையின் தித்திப்பை ருசிப்போம். மேகமூட்டமாக வானம்
இருண்டிருக்க தூரத்தில் மின்னல் பளிச்சிட்டுக்கொண்டிருக்கும்.
கிராமத்தில் கதவுகளைப் பூட்டும் வழக்கமில்லாததால் திறந்திருக்கும்
கதவுகள் வழியாக காற்று அலைந்து உள்ளே வரும். ஆடைக்குள் புகுந்து உடலைச்
சிலிர்க்கச் செய்யும். பெரும்பாலும் மின்சாரம் தடைபட்டுப் போக
செயற்கையெல்லாம் ஓய்ந்து இயற்கை மட்டும் எங்கும் நிறைந்திருக்க இன்னும்
கொண்டாட்டமாக இருக்கும். ஹரிக்கேன் லைட் மட்டும் சோகையாக வீட்டின்
நடுவில் இருக்க பூச்சிகள் அதில் அம்மும்.

மழை நின்றதும் தெருக்களில் வண்டல் மண் படிவுகள், கூழாங்கற்கள் என்று
நீரோடிய பாதையில் வெறுங்கால்களில் நிற்க லேசாக உள்ளிருந்து கிளம்பும்
பூமியின் சூட்டை உள்ளங்கால்கள் வாங்கிக்கொள்ளும். காற்று பலத்து வீச
மழைத்துளிகள் ஒன்றிரண்டு மேலே தெறிக்கும். மறுநாள் மரங்களடியில் நடந்து
போகையில் நண்பர்களில் யாராவது ஒருவன் கிளையொன்றைப் பிடித்து உலுக்க ஒரு
“திடீர் மழை” ஓரிரு நொடிகள் பெய்ய நனைவோம். சிரிப்புகள் - சிந்தையில்
எக்கவலையும் இல்லாத சிரிப்புகள் - சந்தோஷங்கள். அதை இன்றும் மழையில்
நனைகையில் காற்று என்னை ஊடுருவுகையில் உணர்கிறேன். அப்படியே
மனவழுக்குகளைத் துடைத்தெடுத்துக்கொண்டு அவை செல்வதைப் போல உணர்கிறேன்.

மெட்டுகளாக உருவெடுத்து இசை சேர்த்து வரும்போது எல்லாப் பாடல்களும்
அப்பாடல்களை - கவிதையைப் படிக்கும்போது கொடுத்த உணர்வைத்
தந்துவிடுவதில்லை - இசையோ, பாடகரின் குரலோ பாடலுக்கு உலை வைத்திருக்கும்
- ஆனாலும் பலமுறை அருமையான இசையில் நல்ல குரலில் நிறைய பாடல்கள்
உயிர்பெற்று வந்து நம்மை வசீகரிக்கவும் செய்கின்றன. பாரதி வாழ்ந்த
காலத்தில் வாழ எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. பாரதி என்ற மாமனிதரைப்
பற்றிய உருவகம் எல்லாம் படித்த செய்திகளில் - அவரது கவிதைகளில் -
கேள்விப் பட்டவைகளிலேயே - அவரது பாடல்கள் பல திரைப்படங்களில்
இசையமைக்கப்பட்டு வந்திருக்கின்றன. எந்த இசையையும் குரலையும் மீறி நம்மை
ஆக்கிரமித்துக்கூடியவை அவர் பாடல்கள்.

ஆத்மா என்ற இந்த இசைத் தொகுப்பில் பாம்பே ஜெயஸ்ரீயின் அற்புதக் குரலில்
பாடல்கள் உயிர்பெற்று உலவுவதைக் காண முடிகிறது. பாலுவின் குரலில்
“தீர்த்தக் கரையினிலே” பாடலும் அப்படித்தான். ஜேசுதாஸ் பாடிய “காக்கைச்
சிறகினிலே நந்தலாலா”வும் அப்படித்தான்.

பாம்பே ஜெயஸ்ரீ பாடிய காற்று பாடலை இந்தச் சுட்டியில் கேட்கலாம்
http://www.musicindiaonline.com/p/x/3Jv2_v_xZS.As1NMvHdW/ மகா
இரைச்சலான சூழ்நிலையில் கேட்காமல், இரவில் மெல்லிய விளக்கொலியில் வேறு
சப்தங்களெதுவும் இல்லாத சூழ்நிலையில் - முடிந்தால் மழை பெய்யும், பெய்த
இரவில் கேட்க முயற்சிக்கவும்.

நன்றி.
வற்றாயிருப்பு சுந்தர்

Sundar Padmanaban said...
This comment has been removed by the author.
Anonymous said...

சுந்தர்

தமிழ் நாட்டின் மழை நினைவுகளைக் கொண்டு வந்து மனம் கனம் செய்து விட்டீர்கள்.
அமெரிக்கா வந்த பின் நான் பெரிதும் இழந்ததாக நினைப்பது நம் பருவ மழையையும்,
கோடை மழையையும், குற்றாலச் சாரலையுமே. மழை வரப் போகிறது மழைப் பெய்யப் போகிறது
என்ற நினைப்பே மனதுக்குள் ஒரு சிலிர்ப்பை அளிக்கும். மனம் ஏனோ உற்சாகத்தில்
துள்ளும். மழையில் நனையக் கிடைக்கும் தருணங்களையும் ஓடாமல் ஒளியாமல் நிதானமாக
அனுபவித்தே வந்திருக்கிறேன். அதிலும் கொட்டும் ம்ழையில் ரோட்ரோரத்திலோ,
நிழற்குடைகளிலோ ஒதுங்கி அவஸ்தைப் படாமல் நல்ல சொகுசாக வீட்டின் ஜன்னல் ஓரம்
அமர்ந்து கொண்டு ரசிப்பதற்குக் கொடுப்பினை வேண்டும்.

நான் வளர்ந்த இடங்களும் உங்கள் வற்றாயிருப்புத் தெருக்களைப் போலவெ செம்மண்
பரப்பில் சூழித்து மழை வெள்ளம் ஓடியத் தெருக்களே. அதிலும் வீட்டின் பின்னால்
ஒரு பெரிய குன்று அல்லது குன்றின் சரிவில் நாங்கள் குடியிருந்த வீடு. மழை பெய்ய
ஆரம்பித்துச் சில நேரங்களுக்குள் பெரு வெள்ளம் ஓடி வந்து வீட்டை ஆக்ரோஷமாக
வளைத்துக் கொண்டோடி கீழே பாயும். யானை போலப் படுத்திருக்கும் கரிய நிறப்
பெரும்பாறைகளின் வழியே அருவியாகக் கொட்டும். அந்த நேரத்தில் மின்சாரம் போய்
விடுமாதலால், உற்சாகம் இன்னும் கூடும். மழையின் ஓவென்ற பேரிரைச்சலும், இருண்டு
கருத்து வரும் இருட்டும் சேர்ந்து மந்தஹாசமான மனநிலையில் தள்ளும். க்தவுகள்
பேய்க்காற்றி படார் படாரென்று அடிக்க வீட்டுக்குள் சாரல் பெருக்கெடுத்து
அடிக்கும். ஒரு பெரும் மழை நாளில் தரை இறங்கிய மின்னல் எங்கள் வாசலில் வந்து
உக்கிரமாக இறங்கியது. சில அடி தூரங்களில் உயிர் பிழைத்திருக்கிறேன். மழை
முடிந்த பின்னர் வரும் விருந்தினர்கள் பல வகையாக இருப்பார்கள். வாழ்நாளில்
பார்த்திராத பச்சைக் கலர் தவளை, பெரிய கரும் கொடுக்குகளுடன் வரும்
நட்டுவக்காளி, சிவப்பு நிறப் பாம்பு என்று அனைத்து ஜீவராசிகளும் மழை
வெள்ளத்தில் அடித்து வரப் பட்டு வீட்டைச் சுற்றி படையெடுத்திருப்பார்கள். மறு
நாள் லேசாக வெயில் அடித்தாலும் கூட கூ கூ வென கிளம்பும் ஈசல் கூட்டங்கள். மழை
நின்றாலும் பல நாட்கள் வற்றாமல் பல ஊற்றுக்கள் வழியாகத் தொடர்ந்து நீர் மேலே
கசிந்து கொண்டேயிருக்கும். அந்த இனிய மழைக்காலம் எல்லாம் போய் இங்கு மழை பெய்த
அடையாளமேயில்லாமல், சிமிண்ட் சாலைகளிலும், தார் ரோடுகளிலும் நொடியில் மறைந்து
கண்ணுக்குத் தெரியாமல் கரைந்து விடுகிறது மழை. என் வீட்டு மாடியில் சூரிய
வெளிச்சம் வரப் பதித்துள்ள டோமில் மழை நீர் விழும் சப்தம் மட்டுமே
இப்பொழுது மழை என்றாகிப் போனது எனக்கு.

நல்ல மழை பெய்து பேய்க்காற்று அடிக்கும் வேளைகளில் குற்றாலத்தில்
கழித்திருக்கிறீர்களா? அடடா பேரானந்தம் அது. தினமும் நான் ஃபோன் செய்யும்
பொழுது லேசாகத் தூரலாக இருந்தாலும் அந்தச் செய்தியை என் அம்மா ஆர்வத்துடன்
தெரிவித்து விடுகிறார்கள். என் அம்மாவுக்குத் தெரியும் மழை என்ற ஒரு சொல் எனது
மனதுக்குக் கொடுக்கு உற்சாகத்தை. நேற்று ஃபோன் செய்த பொழுது முதலில் சொன்ன
செய்தி வானம் இருண்டு இருக்கிறது, லேசான தூறல் மட்டுமே விழுகிறது என்ற நேரடி
வர்ணணைதான். இப்பொழுதெல்லாம் ம்ழை பெரிதாகப் பெய்யும் பொழுது நான் இருக்க
நேர்ந்த ஒவ்வொரு இடங்களும் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்வதுடன் மழை தரும்
இன்பம் நின்று விடுகிறது. மழைக்காலத்தில் அனுபவிக்கவென்றே சில சினிமாப்
பாடல்களும் உள்ளன ஹும். கூட சூடான வடையோ பஜ்ஜியோ கிட்டுமாயின் இன்னும்
பேரின்பம்.

1974 அல்லது 75 சரியாக நினைவில்லை. ஒரு மாபெரும் புயலொன்று மதுரை வரை உக்கிரமாக
வந்து தாக்கியது. சாதாரணமாக மதுரை போன்ற நடுவில் அமைந்த ஊர்களில் புயலின்
சீற்றத்தைப் பார்க்க முடியாது ஆனால் அந்தப் புயல் இன்னும் என் நினைவில் உள்ளது.
பிரளயம் என்பார்களே அதுதானோ அது என்பது போல வீசியது. மரங்கள் வளைந்தன, கூ கூ
வென காற்று ஊளையிட கன மழை வானம் பூமி வித்தியாசம் இல்லாமல் நிறைத்தது. அது
போன்ற ஒரு புயலையும் மழையையும் இது வரை வேறு எங்கினும் கண்டதில்லை. மதுரை
வைகையில் வெள்ளத்தில் போனவர்களைக் காப்பாற்ற வந்த ஹெலிக்காப்டரையும் வெள்ளம்
அடித்துச் சுருட்டிக் கொண்டு போனது. பழங்காநத்தம் வரை முட்டளவு நீர்
நிறைந்திருந்தது.

மழை பெய்து முடிந்த பின் உரலில் சேரும் தண்ணீரைப் பற்றிக் கவிதை எழுதியது யார்?
நீங்களா? பிரசன்னாவா? அது என்னுள் எழுப்பிய எண்ண அலைகள் சொல்லி மாளாதவை.

மழை பெய்யும் பொழுது ஒதுங்கக் கூரை உள்ளவர்கள் மழையை ரசிக்கலாம். ப்ளாட்ஃபார்ம்
வாசிகளும், குடிசை வாசிகளும் என்றைக்காவது மழையை சபிக்கத்தான் முடியும். இயற்கை
தரும் இன்பம் என்றாலும் கூட அது எல்லோருக்கும் சமமாக அனுபவிக்கக்
கிட்டுவதில்லையே.

நினைவுகளுடன்
ச.திருமலை

Anonymous said...

தூங்கப்போகும் குழந்தைகளை ஏன் பயமுறுத்தவேண்டும் என்கிற லாஜிக்தான்
புரியவில்லை.

--பிரசன்னா

Anonymous said...

சபாஷ் சரியான போட்டி. :)

மழை பெய்த பின்பு உரலில் சேரும் தண்ணீரைப் பற்றி எழுதியதாக நினைவில்லை. பல வரிகள் நான் கவிதைகளில் எழுதியவை எனக்கு நினைவில் நிற்பதில்லை. ஆனால் இவ்வரி நான் எழுதியதில்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் ரசித்திருக்கிறீர்கள் என்றால் நான் எழுதியிருக்க வாய்ப்பே இல்லை என்பது கூடுதல் விஷயம்.

--பிரசன்னா

Anonymous said...

சுந்தர், அருமை. கவிதை நுட்பங்களைக் கூட குழந்தைகளுக்கு இரவு நேரக்
கதையாகச் சொல்லும் சாத்தியம் பற்றி உணர்த்தினீர்கள்.. அருமை.

ஒரு கட்டத்தில் என் மகளுக்கு அறிவியலாளர்கள் பற்றி கதைகளாகக் கூறத்
தொடங்கினேன் - ஜகதீஷ் போஸ், ஜேம்ஸ் வாட், எடிசன் இவர்களைப் பற்றிச்
சொன்னதை ரொம்பவும் ரசித்தாள். "உறங்குகின்ற கும்பகர்ண" என்ற கம்பன்
கவிதையைச் சொல்லி ராமாயணம் சொன்னதும் பிடித்திருந்தது. இதையும் முயன்று
பார்க்கிறேன்..

திருமலை, உங்கள் மழைச் சித்திரம் உறுத்தாது மேல்விழும் தூறல் போல சுகமாக
இருந்தது. அடடா, என்ன ஒரு passionate எழுத்து!

பெங்களூரில் கிள்ளிவிட்ட குழந்தை போல அவ்வப்போது திடீர் திடீர் என்று மழை
பெய்யும். ஆனால் சென்னை போல இந்தக் குளிர்மழையில் நனைந்து அனுபவிக்கத்
தோன்றுவதில்லை, ஜுரம், இருமல், தொண்டைவலி வந்துவிடுமோ என்ற கவலை
வந்துவிடுகிறது.. சொல்லிவைத்தாற் போல மழை காலங்களில் ஏகப்பட்ட பேர்
இருமிக் கொண்டிருப்பதும் பெங்களுரில் வழக்கமாக நடக்கும் விஷயம்.

ஜடாயு

Anonymous said...

> சுந்தர், அருமை. கவிதை நுட்பங்களைக் கூட குழந்தைகளுக்கு இரவு நேரக்
> கதையாகச் சொல்லும் சாத்தியம் பற்றி உணர்த்தினீர்கள்.. அருமை.

மென்மை நிறைந்த ஒருவனை, குழந்தைகளுக்கு பாரதி கதை சொல்லி வளர்க்கும் ஒருவனை
வாழ்த்தக் கிடைக்கும் சந்தர்ப்பத்தை இழப்பது பேதைமை. அன்புச் சுந்தருக்கு என்
வாழ்த்துகள்.

சுந்தர், கதையில் வரும் காந்திமதி நாதன் இன்னும் கொஞ்ச நாளுக்கு,
குழந்தைகளுக்கு ராஜாவாகவே இருந்துவிட்டுப் போகட்டும். நமக்கு அவரைப் பற்றித்
தெரியவேண்டுமல்லவா? அதற்காக இதைச் சொல்கிறேன்.

இந்தச் சம்பவம் நடந்தபோது பாரதிக்கு 12 வயது. காந்திமதிநாதப் பிள்ளை FA
படித்துக்கொண்டிருந்த மாணவன். எஃப்ஏ என்பது என் காலத்தில் பியூசி. இந்தக்
காலத்தில் +2. ஆக, ஒரு பன்னிரண்டு வயதுப் பையனுக்கும் ஒரு பதினேழு வயதுப்
பையனுக்கும் நடந்த விளையாட்டுத்தனமான பரஸ்பரக் கிண்டல் இது என்பதைத் தவிர
இதற்கு வேறு முக்கியத்துவம் எதுவும் இல்லை. காந்திமதி நாதப் பிள்ளை பாரதி
திரைப்படத்தில் காட்டப்பட்டது போல் 'வயதான பெரியவர்' (:P) எல்லாம் இல்லை.
அப்போதுதான் வயதுக்கு வந்திருந்த வாலிபன்.

காந்திமதி நாதனைப் பாரதி சின்னப் பயல் என்று ஒரு வெண்பா முடித்து அதற்குப்
பிறகு, 'பாரதி சின்னப் பயலேதான்' என்றும் அந்த 12 வயசு பாரதி (நினைத்துப்
பாருங்கள்.. பக்கத்து வீட்டில் யாரும் 12 வயதில் சின்னப் பையன் இருப்பான்;
'இப்படித்தான் இருந்திருப்பான் அந்தக் காலகட்டத்தில்' என்று அந்தப் பையனை
வைத்து அனுமானித்துக் கொள்ளுங்கள். முண்டாசு கட்டி, மீசை வச்சு, முதிர்ச்சியான
பாடல்களை எல்லாம் எழுதிய கருப்புக் கோட்டு பாரதி பிம்பத்தை மனத்திலிருந்து
அழித்துவிட்டு இந்தச் சம்பவத்தைப் பாருங்கள்) இரண்டு பாடல்கள் இயற்றினான்.
மிகுந்த சிரமப்பட்டு அந்த இரண்டு வெண்பாக்களையும் தேடி எடுத்திருக்கிறார்கள்.
இங்கே தருகிறேன்:

ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்தென்னை ஏளனஞ்செய் - மாண்பற்ற
காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்.

வயசுல சின்னவன் என்று என்னப் பாத்து குறைவா எடை போட்டு, மண்டை கர்வம் ஜாஸ்தியா
போயி என்ன ஏளம் செய்யுதே இதோ இந்த--மாண்பில்லாதவனும், இருண்ட நெஞ்சம்
கொண்டவனுமான--காந்திமதிநாதனைப் பார். அதி சின்னப் பயல்.

காந்திமதி நாதனுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
பிறர் முகம் வாடுவதைக் காணச் சகிக்காத உள்ளத்தைப் பாருங்கள். உடனே இன்னொரு
பாட்டை எழுதினான் நம்ம சின்னப் பயல்.

ஆண்டில் இளையவன்என் றைய அருமையினால்
ஈண்டின்றுஎன் றன்னைநீ ஏந்தினையால் - மாண்புற்ற
காரதுபோல் உள்ளத்தான் காந்திமதி நாதற்கு
பாரரதி சின்னப் பயல்.

வயதில் சிறியவன் என்று மிகுந்த வாத்சல்யத்துடன் நீ என்னை ஏந்திக் கொண்டாய்.
பெருமை மிகுந்தவனும், மழைபொழியும் மேகத்தைப் போல் உள்ளம் கொண்டவனுமான
காந்திமதி நாதனுக்குப் பாரதி சின்னப் பயல்.

இந்தச் சம்பவத்தைப் பின்னால் 'அகந்தைக்குப் பரிசு' என்றொரு கட்டுரை எழுதி
குறித்து வைத்தார். யார் தெரியுமோ? காந்திமதிநாதப் பிள்ளையேதான்.

--
அன்புடன்,
ஹரிகி.

Sundar Padmanaban said...
This comment has been removed by the author.
Anonymous said...

Simply superb Sundar sir. Superb.

Please make it available for public consumption. If possible, provide
an addendum of Hariki sir's additional writing.

Please continue to write such pieces. Thanks.

Anonymous said...

காந்திமதிநாதப் பிள்ளை சிறுவராக இருந்த போது எப்படி இருந்தாலும், வளர்ந்த பின்
தன் சிறுவயது குறித்து மறுமதிப்பீடு செய்ய முடிந்தவராகவும், பாரதியின்
மேன்மையைப் பாராட்ட முடிந்தவராகவும் இருப்பதைக் காட்டுகிறாது.
அதற்கு நாம் கொடுக்கும் பரிசு அவரது வளர்ச்சியைப் பாராட்டுவதாகத்தானே இருக்க
வேண்டும். மறுபடி சிறுவயதின் குறைகளை வெளிச்சம் போட்டுச் சொல்வதாக இருக்கக்
கூடாதில்லையா?

RS

Sundar Padmanaban said...

திருமலை

மழையாய்ப் பொழிந்து தள்ளிவிட்டீர்கள்! பாராட்ட வார்த்தைகளில்லை.

//மழை பெய்து முடிந்த பின் உரலில் சேரும் தண்ணீரைப் பற்றிக் கவிதை
எழுதியது யார்? //

அது மூன்று வருடங்களுக்கு முன் மரத்தடியில் எழுதியது - “ஒரு வழியாய்”
என்ற தலைப்பில். கீழே கொடுத்திருக்கிறேன். உங்களது பின்னூட்டத்தையும்
மற்ற பின்னூட்டங்களையும் இன்னுமொருமுறை ஆற அமரப் படிக்க வேண்டும்.
படித்துவிட்டு வருகிறேன்.

***ஒரு வழியாய் ***

மடிந்த ஈசல்களின் சிறகுக் குவியல்கள்
தெருநீரில் கவிழ்ந்த காகிதக் கப்பல்
சந்தேகத்துடன் அலையும் ஒற்றைத் தட்டான்
கோபுரச் சிற்பஙகளிடையில் ஒடுங்கிய புறாக்கள்

லேசாய் சேலை தூக்கி
நீர் சிதறாது நடக்கும் பெண்கள்
மழையின் விசைக்கு மயங்கி
நாணத்துடன் தலைகவிழும் மலர்கள்

மரக்கிளையில் கிழிந்திருக்கும் பட்டம்
உடலைச் சிலிர்த்துதறும் நாய்
மினுக்கிக் கொண்டிருக்கும் தெருவிளக்கு
பறக்க யோசிக்கும் மின்கம்பிக் காகம்

தரைச்சக்கரமாய்ச் சுருண்ட ரயில்பூச்சி
கூரையிலிருந்து சோகையாய் நீர்க்கோடுகள்
வாசலில் மண்ணொட்டிய காலணிகள்
காற்றில் மல்லாந்திருக்கும் குடை

வீட்டினுள் சிக்காது பறக்கும் வெளவால்
கொல்லைப்புற உரலில் தேங்கிய நீர்
கொடியில் தொங்கும் ஈர ஆடைகள்
உள்ளங்கால்களில் புல்தரைச் சில்லிப்பு
நரைக்கத் தொடங்கிய கருமேகங்கள்

ஒரு வழியாய் மழை விட்டிருக்கிறது.

***

நன்றி

வற்றாயிருப்பு சுந்தர்.

Anonymous said...

ரவி,

மன்னிக்க வேண்டும். காலையில் நான் எழுதியது தவறு. அந்தக் கட்டுரையை எழுதியவர்
பாரதியாரின் தம்பியான சி. விசுவநாத ஐயர். 1981ஆம் வருடம் டிசம்பர் மாதம்
வெளியான கட்டுரை. இந்த இரண்டு வெண்பாக்களையும் எப்படி எப்படியோ வீட்டிலிருந்து
தேடி எடுத்தவர் சி விசுவநாத ஐயர்தான். அவர்தான் இந்தச் சம்பவத்தை
விவரித்திருக்கிறார். ஆகவே, காந்திமதிநாதப் பிள்ளையே நினைவுக் குறிப்பாக இதை
எழுதியிருப்பதாக நான் சொன்னது தவறு.

காந்திமதிநாதப் பிள்ளை இப்படி பாரதியைச் சீண்டி விளையாடியது, ஒரு இளம்பிள்ளை
விளையாட்டு. 'இந்தப் பையனுக்கு பாரதி பட்டமா? அதுக்குள்ளயா? நம்மகிட்ட
நிப்பானா இவன்?' என்று விடலைப் பருவத்தில் யாருக்காயிருந்தாலும்
தோன்றியிருக்கக்கூடிய சாதாரணமான ஒரு சீண்டல், சவால் அவ்வளவுதான். இது புலமைக்
காய்ச்சல் அன்று. நல்ல புலமை கொண்ட இரண்டு சிறுவர்களின் பரஸ்பர சீண்டல்.
காந்திமதிநாதப் பிள்ளை அகந்தையால் இவ்வாறு செய்யச் சொன்னார் என்று சொல்வது
என்னவோ அவ்வளவாகச் சரி என்று எனக்குப் படவில்லை. அந்த வயது. அப்படித்தான்
செய்யச் சொல்லும். பாரதியின் துறுதுறுப்பும் அதற்குக் கொஞ்சமும் இளைத்ததாக
இல்லை. Repartee என்று சொல்வோம் இல்லையா அந்தவகையைச் சேர்ந்தது இந்த முதல்
பாடல்.

--
அன்புடன்,
ஹரிகி.

Anonymous said...

இதுவே ஒரு நல்லுதாரணம் எப்படி வரலாறு சுலபத்தில் திரியக் கூடியது என்பதைச்
சுட்ட. எனவேதான் தம் வரலாற்றுக் கருத்துகளே முடிபானவை என்று சொல்லி இதரரை
ஒழித்துக் கட்ட முன்வருவோரை மனநலம் குன்றியவர்கள் என்று நான் கருதுகிறேன். இது
இந்து கருத்தியலாளரிலும் சிலரை விமர்சிப்பதாக அமைந்தால் நான் ஏதும்
செய்வதற்கில்லை. காலுக்கு செருப்பு ஒத்து வந்தால் போட்டுக் கொள்ளட்டும்!

திருத்தத்தை நினைவு வைத்துக் கொள்ள முயல்வேன். குறைந்தது கா.ம.பிள்ளை இதை
எழுதினார் என்று சொல்ல மாட்டேன்.

மற்றபடி நீங்கள் கா.ம.பி - பாரதி உரையாடல், சீண்டல், உறவு ஆகியவற்றைப் பற்றிச்
சொன்னதில் இரண்டு க்ருத்துக்கு இடமில்லை. இளம்பிள்ளைப் பருவத்தில் இத்தகைய
உரசல்களும் பரஸ்பர சீண்டல்களும் இல்லையெனில் அது என்ன இளம்பிள்ளைப்
பருவமாகும்?

RS

Sundar Padmanaban said...

துக்ளக் கேள்வி பதிலில் படித்த பாரதியின் வசன கவிதை..

***
மழை பெய்கிறது
ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது
தமிழ் மக்கள் எருமைகளைப் போல
எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள்
ஈரத்திலேயே உட்காருகிறார்கள்
ஈரத்திலேயே நடக்கிறார்கள்
ஈரத்திலேயே உணவு
உலர்ந்த தமிழன் மருந்துக்குக்கூட அகப்பட மாட்டான்!

***

அன்றைய நிலை பற்றி எழுதியது - இன்றும் பொருந்துகிறது!

குமரன் (Kumaran) said...

ஆகா. அருமையாக சொன்னீர்கள். அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் போது நான் இந்தக் கதையைச் சொல்கிறேன். :-)

Sundar Padmanaban said...

குமரன்

நன்றி.