Tuesday, March 24, 2009

காலம் - முகம்



நாள் முழுவதும் அலுவலகத்தில் உழைத்துவிட்டு ஏழரை மணியளவில் வீட்டுக்குச் சென்று சோஃபாவில் சாய்ந்தமர ஸ்ருதி மறுநாள் சமர்ப்பிக்க வேண்டிய வீட்டுப்பாடத்தைக் கொண்டு வந்து முன் நின்று “Dad I need your help on this" என்றாள். களைப்பு மிகுந்து அசதியாக இருந்தது. ”என்னால முடியாதும்மா” என்று சொல்ல நினைத்தும் சொல்லவில்லை. வீட்டுப்பாடத்தை மேய்கையில் அவள் சளசளவென்று பேசிக்கொண்டிருந்தாள். வாயாடி. இரண்டரை மூன்று வயதாகும்போதே வாய் ஓயாது பேசும். ஒருவித மழலையில் டொனால்ட் டக் மாதிரி பேசுவாள். “டக்கு மாதிரி பேசாதேடி” என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டேயிருப்போம். இப்போது பனிரெண்டு வயதாகிவிட்டாலும் குரலின் ஏதோ ஒரு மூலையில் வாத்து இன்னும் பேசிக்கொண்டேயிருக்கிறது.

நான் புத்தகத்திலேயே இன்னும் ஆழ்ந்திருக்க அவள் பேச்சை ஒரு நொடி நிறுத்தி “Are you listening to me?" என அதட்ட அவளைப் பார்த்தேன். கருவண்டுகள் மாதிரி அவளுக்குக் குறுகுறுக்கும் விழிகள். அவள் என்னையே பார்த்துக்கொண்டிருக்க மௌனம் நிலவிய அந்த வினாடியில் விளக்கொளி படிந்த அவள் முகத்தில் திடீரென்று அவள் இரண்டு வயதாக இருந்தபோது கொண்டிருந்த குழந்தை முகத்தைப் பார்த்தேன். காலம் ஸ்தம்பித்தது.

நேற்றுதான் பிறந்த மாதிரி இருந்தது. அதற்குள் பனிரெண்டு வருடங்கள் ஓடிவிட்டதை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. இப்போது அடிக்கடி அம்மாவுடன் தோள் சேர்த்து நின்று ”I'm becoming taller than you Mom" என்கிறாள். சின்னதும் பக்கத்தில் எக்கி நின்றுகொண்டு "I'm almost up to your shoulders" என்று அம்மாவை வெறுப்பேற்றுகிறது.

பிரசவ அறையிலிருந்து துணியில் சுற்றிச் செவிலியர் கொண்டுவந்து காட்டிய முதல் மணித்துளிகளிலிருந்து கடந்து பல வருடங்களில் அவர்களின் முகங்கள் மேகமாக நினைவில் இருக்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் வளர வளர குழந்தைத்தனங்கள் ஒவ்வொன்றாகக் காணாமல்போய் ஒரு கட்டத்தில் அவர்கள் இன்னும் குழந்தைகள்தான் என்பதை மறந்து வாழ்வின் ஓட்டத்தில் பெரியவர்களைப் போன்று அவர்களை நடத்த ஆரம்பித்துவிட்டதையும் மனம் ஓரத்தில் உணர்ந்தே இருந்தது. அவ்வப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே மாற்றங்களை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன. காலம் ஓடும் வேகத்தில் வாழ்க்கையைத் துரத்திக்கொண்டு அனுதினமும் இயந்திரகதியில் செயற்பாடுகளை அமைத்துக்கொண்டு ஓடிக்கொண்டே இருப்பதில் வயதாவதை உணர்வதில்லை. ஆனால் வருடங்கள் உருண்டோடிவிட்டதை காதோர நரையும், லேசாக அவ்வப்போது தோன்றும் உடல் தளர்வும் உணர்த்துகின்றன. குழந்தைகள் வேகமாக வளர்கிறார்கள் என்பதையும் அடிக்கடி பெரிய அளவு காலணிகளும் உடைகளும் வாங்குவதில் உணர முடிகிறது.

”அட வாழ்க்கையில் பேர்பாதி போய்விட்டதே - ஒன்றுமே சாதிக்கவில்லையே” என்று திடீரென ஒரு எண்ணம் தோன்றி சட்டென ஒரு அதிர்வு உடலில் பரவியது. என் விழிகள் இன்னும் புத்தகத்தில் நிலைகுத்தியிருக்க, அவள் என்னை உலுக்கி "Are you sleeping?" என்றாள். நான் புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு அவளை தூக்கி உப்பு மூட்டை ஏற்றிக்கொண்டு தட்டாமாலை சுற்றி இறக்க வீடு சிரிப்புகளில் நிறைந்தது.

லேசாக மூச்சு வாங்கியது.

***

2 comments:

Anonymous said...

Wow! Good one Sundar

Anonymous said...

//அவள் சளசளவென்று பேசிக்கொண்டிருந்தாள். வாயாடி. இரண்டரை மூன்று வயதாகும்போதே வாய் ஓயாது பேசும். ஒருவித மழலையில் டொனால்ட் டக் மாதிரி பேசுவாள். “டக்கு மாதிரி பேசாதேடி” என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டேயிருப்போம். இப்போது பனிரெண்டு வயதாகிவிட்டாலும் குரலின் ஏதோ ஒரு மூலையில் வாத்து இன்னும் பேசிக்கொண்டேயிருக்கிறது. //

இதில் தெரிகிற தந்தைமை/தாய்மை அருமை!!