Tuesday, January 28, 2014

பஸ்!


வற்றாயிருப்பிலிருந்து மதுரை, திருச்சி, திருநெல்வேலி - எப்போதாவது சென்னை என்று நெடுந்தூரப் பேருந்து பயணங்களின்போது பேருந்து ஓட்டுனரின் இடப்பக்கம் இருக்கும் பக்கவாட்டு இருக்கையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துகொள்வது வழக்கம். பயணிகள் நிறைந்ததும் டிரைவர் தோளில் டர்க்கி டவலுடனும் எவர்சில்வர் ஸ்ட்ராப் வாட்ச்சுடனும் கதவைத் திறந்து ஏறி வயர் பின்னியிருக்கும் இருக்கையில் அமர்ந்ததும் ஒரு கை கியர் லீவரைப் பிடித்து பல்ஸ் பார்த்து கியர் மாற்றி, தொப்பி வைத்திருக்கும் ஸ்ட்ரா போன்ற கம்பியை இழுத்து, இன்னொரு கையால் சில பொத்தான்களை இயக்கி, ஸ்டியரிங் வீலைப் பிடித்துக்கொண்டு இடது வலது கால்களால் பெடல்களை மிதித்துச் சாலையை நோக்கி, ஹாரனை ஒருமுறை அழுத்தியதும் மொத்த வண்டியும் ஓர் உதறி உதறிக் கிளம்பும்.

வண்டி ஐட்லிங் போதும் பயணத்தின் போதும் கியர் லீவர் ர்க்கர ர்க்கர என்று நடுங்கிக் கொண்டிருப்பதையும் அதைப் பிடித்திருக்கும் அவரின் இடது மணிக்கட்டும் அந்த வாட்சும் சேர்ந்து நடுங்குவதும் சுவாரஸ்யமான காட்சி.

அஷ்டாவதானி மாதிரி அவர் கைகளாலும், கால்களாலும் சாகசம் செய்து வண்டியோட்டுவதைக் கணகொட்டாமல் மணிக்கணக்கில் பார்த்துக்கொண்டிருந்து அவரைப் போன்றே மானசீகமாக வண்டியை மனசுக்குள் ஓட்டுவது வழக்கம்.

வாழ்நாளில் அவர் மாதிரி ஸ்டைலாக ஒருமுறையாவது பேருந்தை ஓட்டிவிடவேண்டுமென்பது தீராத ஆசையாக இன்னும் இருக்கிறது. இப்போதும் கண்மூடிக்கொண்டு அந்தப் பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்துகொள்வதைக் கற்பனை செய்தால் பேருந்து ஓட்டுதலின் வசீகரிப்பு ஞாபகங்களின் மூலையில் இன்னும் அழியாமலிருக்கிறது.

Saturday, January 25, 2014

காசு மேலே காசு வந்து




வற்றாயிருப்பில் நடுத்தெருவில் நாங்கள் வசித்தோம் (தெருவோட பேரே அதாங்க!). தெருவில் எதிர் படும் தாத்தாக்கள், மாமாக்களில் கட்டாயம் யாராவது ஒருத்தர் காதிலாவது பளபளவென்று ஒரு ரூபாய் காசு மின்னும். அதிலும் சிலை வைத்து சுற்றிலும் குரோட்டன்ஸ் வளர்த்ததைப்போல காசைச்சுற்றி காது மடலில் அடர்த்தியாக முடி. காது மடலில் காசைச் சொருகி வைப்பது ஆயகலைகளில் அறுபத்தைந்தாவது போல.

மதிய உணவு உண்டுவிட்டு திண்ணையில் உருளுவது, அல்லது கூட்டம் சேர்த்து ரம்மி விளையாடுவது வயசாளிகளின் தலையாய பொழுது போக்கு. சில சமயம் சட்டசபையைக் கலைக்கும் ரேஞ்சுக்கு சீட்டுக்கட்டைக் கலைத்துப்போடுவார்கள். ஒன்றிரண்டு பேருக்கு சீட்டுகள் அநியாயமாகக் கலைந்து வர, ரம்மி சேரும் சாத்தியமில்லாததை ஞானக்கண்ணால் உணர்ந்து ஸ்கூட் விட்டுவிடுவாரகள். மற்றவர்கள் ஆட்டத்தை முடிக்கும் வரை அவரகளுக்குப் பொழுது போகாது. ஒன்றா பைசா நகரத்து கோபுரம் போல அவ்வப்போது உடலைச் சாய்த்து இரைச்சலாகக் குசு விடுவார்கள். இல்லாவிட்டால் வேட்டியின் நுனியைத் திருகி மூக்குக்குள் நுழைத்துத் தலையே தெறிக்கும் படி தும்முவார்கள். ஆனாலும் காதுக்குள் காசு அசைந்து கொடுக்காமல் அமர்ந்திருக்கும்..

நானும் ஒரு ரூபாயில் ஆரம்பித்து எட்டணா, நாலணா வரை முயன்று பார்த்தேன். ம்ஹூம். எதுவும் நிற்கவில்லை. வலி உயிர் போயிற்று. அதில் ஏதோ வில்லத்தனம் அல்லது ஹீரோத்தனம் இருக்கிறது என்று புரிகிறது. அந்த வித்தை கைகூடவேயில்லை. பரவாயில்லை. கண்ணுக்குள் நிலவு மாதிரி காதுக்குள் காசு என்று தமிழர்கள் படம் எடுத்துவிடுவார்கள். அப்போது பாரத்துக்கொள்கிறேன்.

சார் ரன் கேலியே!


தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலெல்லாம் கிரிக்கெட் ஜூரம் பரவத்தொடங்கிய எண்பதுகளின் ஆரம்பம். 83-இல் உலகக்கோப்பையை வென்றதும் ஜூரம் உச்சத்திற்குப் போனது. ஆனாலும் தொலைக்காட்சி பரவலாக வரவில்லை. விலை ஜாஸ்தியான பணக்கார வஸ்து அது. தமிழகத் தென்கோடி ஊர்களில் ரூபவாஹினி மட்டும் பூச்சி பூச்சியாகத் தெரிய யாராவது ஒரு மாமா மொட்டை மாடியில் ஆண்ட்டெனாவை திருகித் திருகி “இப்பத் தெரியுதா?” என்று கேட்டுக்கொண்டேயிருப்பார். 

கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒலிபரப்பு வானொலிகளில் - ஒற்றை ஸ்பீக்கர் வைத்திருக்கும் ட்ரான்ஸிஸ்டரை காதருகில் குண்டலம் மாதிரி ஏந்தி ஒருவர் வைத்திருக்க அவரைச் சுற்றி ஒரு கூட்டம் சிலை மாதிரி நின்று கேட்டுக்கொண்டிருக்கும். எவ்வளவு திருகினாலும் ஒன்றிரண்டு ஸ்டேஷன்கள் எடுக்கும் பாக்கெட் ரேடியோவும் மிகப் பிரபலம். அதன் ஈசான மூலையிலிருந்து சர்ரென்று இரண்டடி உயரத்திற்கு எவர்சில்வர் ஆண்ட்டனாவை அடுக்காக இழுத்து - உச்சியில் கொண்டை வைத்திருக்கும் - ரேடியோவை ஆன் செய்வார்கள். 

விக்கெட் விழும்போதும், ஓட்டங்கள் எடுக்கப்படும்போதும் மைதானத்திலிருந்து வரும் ரசிகர்களின் ஆரவாரத்தின் இரைச்சல் வர்ணணை செய்பவரின் பின்னணியில் ஏறியிறங்கி ஓஷ்ஷ்ஷ் என்று கேட்டுக் கொண்டேயிருக்க, வானொலி கேட்பவர்களின் ரத்த அழுத்தமும் அதற்கேற்ப ஏறியிறங்கிக் கொண்டியிருக்கும். ஆங்கில வர்ணனை அபூர்வம். வந்தாலும் ரொம்ப விளங்கினாற்போலத்தான். 

எப்போதும் ஹிந்தி வர்ணனைதான் என்பதால் ஹிந்தி தெரியாத கழக ஆட்சி புகழ், பந்திக்கு முந்தி ஹிந்திக்குப் பிந்திய தமிழர்களுக்கு ஒரு மண்ணும் புரியாமலிருந்தாலும் வர்ணனையை அழிச்சாட்டியமாகக் கேட்டுக்கொண்டிருப்போம். இந்தியா பேட்டிங் செய்யும் போது திடீரென்று ஆரவாரம் உச்சத்திற்குப் போக வர்ணனையாளர் லாட்டரி விழுந்த உற்சாகத்துடன் கிடுகிடுவென்று ஏதோ சொல்லி கடைசியில் “கிதார்ரப் சார் ரன் கேலியே” என்று அலறி முடிப்பார். அந்த மொத்த வாக்கியத்தில் “சார் ரன்” என்பது மட்டும் புரியும். “ஃபோர்” என்று நாங்கள் இங்கு கத்துவோம். 

அப்புறம் “ஏக் ரன்” “தோ ரன்” ”தீன் ரன்” “சே ரன்” என்பதும் புரியும். ஆனால் பௌலிங் போடும்போது விக்கெட் விழுந்ததா யாராவது விழுந்தார்களா என்று வர்ணனையாளர் எவ்வளவு கதறினாலும் ஒன்றும் புரியாது. அதேபோல் ஹிந்தியில் ஒன்று இரண்டு என்று பத்துவரை மட்டுமே எண்ணத் தெரியும் என்பதால் மொத்த ரன்கள் எவ்வளவு என்று வர்ணனையாளர் சொல்வது தெரியவே தெரியாது. ஆட்டத்தில் ஜெயித்தோமா தோற்றாமா என்பதும் புரியாது. நாலு வார்த்தை வாக்கியத்தில் மூன்று வார்த்தை ஆங்கிலம் கலந்து பேச அவர்கள் என்ன மறத் தமிழர்களா? “ரன்“ “விக்கெட்” போன்ற தவிர்க்கவியலாத வார்த்தைகள் தவிர சுத்த ஹிந்தியில்தான் வர்ணனை. 

இந்த ஹிந்திபுரியா கழிவிரக்கமும் எரிச்சலும், சென்னை சேப்பாக்கத்தில் எப்போது போட்டி நடக்கும் என்று காத்திருந்து அப்துல் ஜப்பார் அவர்களின் அழகுத் தமிழ் வர்ணனையைக் கேட்டதும்தான் அடங்கும்! அவர் சரியான (அசலான) மறத்தமிழர்! “ரன்” என்று சொல்லாமல் “ஓட்டம்” என்று சொல்வார். “மட்டை” “எல்லையைத் தாண்டிச் சென்றது பந்து” (பவுண்டரிக்கு “தரையில் பட்டுச் சென்றது” - சிக்ஸருக்கு “பறந்து எல்லைக் கோட்டைக் கடந்தது”) என்று தூய தமிழில் சொல்வார். காதில் நிஜமாகவே தேன் பாயும்! 

சரீஇஈ! ஏக் துஜே கேலியே-வெல்லாம் விழுந்து விழுந்து பார்த்தோமே. அதற்கு அர்த்தம் என்ன?