Wednesday, September 07, 2016

ஆசிரியர்கள்!

தெற்குத் தெருவில் இருந்தது சுந்தரராஜன் ஸார் வீடு. அவர் அப்போது வற்றாயிருப்பில் பிரபல வாலிபால் ப்ளேயர். லேசான கூன் விழுந்ததுபோல் முதுகு. நல்ல உயரம். தலையை கர்லிங்காக படிய வாரியிருப்பார். நல்ல மீசை. தெற்குத்தெரு தலைகாணித்தெரு சந்திப்பில் ஒரு பாழடைந்த திரையரங்கம் இருந்தது. அதன் முன்னால் சிறிய வாலிபால் மைதானத்தில் ஆடுவார்கள். மேலப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களிலிருந்து மற்ற ஆட்டக்காரர்கள் வந்திருக்க சுந்தரராஜன் ஸார் மட்டும்தான் ஒரே அக்ரஹார ஆட்டக்காரர். அவர் வீட்டு மொட்டை மாடியில் குழுமுவோம். சூரிய நமஸ்காரத்தில் ஆரம்பித்து யோகாசனங்கள் ஒவ்வொன்றையும் கற்றுக்கொடுப்பார். சவாசனம் முடிந்தபிறகு சில நிமிடங்கள் உக்கிரமாகச் சொற்பொழிவாற்றுவார். நரம்புகளெல்லாம் முறுக்கேறும். மனதில் பாரதியார் வந்து போவார். வகுப்பில் பையன்களில் யாரையாவது எழுப்பி பாடம் ஒன்றை முழுவதுமாக வாசிக்கச் செய்து பிறகு அப்பாடத்தைப் பற்றிய விளக்கங்கள் சொல்லி நடத்துவது அவரது பாணி. வாசிக்க என் முறை எப்போது வரும் என்று ஆவலுடன் இருந்த நாட்கள் இனிது.

முசிறியில் வசித்த இரண்டாண்டுகள் எனக்கு மிக முக்கியமானவை. அரசு உயர்நிலைப் பள்ளியின் பிரம்மாண்ட மைதானத்தில் செலவழித்த நாட்கள் அதிகம். முட்டி ஒட்டியதால் என்ஸிஸியில் நிராகரிக்கப்பட்டதும், விளையாட்டு ஏதாவது ஒன்றில் சேரலாம் என்று நினைத்தபோது ஆபத்பாந்தவனாக வந்தவர்கள் பாலாஜி ஸாரும், சுந்தர்ராஜ் ஸாரும். தினமும் காலையில் ஐந்தரை மணிக்கு மைதானத்துக்கு வந்துவிடவேண்டும். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் வாலிபால் பயிற்சி. எங்கள் குழு நன்றாக விளையாடி அக்கம்பக்க ஊர்களையெல்லாம் ஜெயித்தோம். நானும், சுந்தரபாண்டியனும், அய்யாவு-வும் பிரதான ஆட்டக்காரர்கள். எனது அஃபென்ஸ் ஸ்டைல் ஸர்வீஸை எடுக்க இயலாமல் எதிராளிகள் திண்டாடினார்கள். இது தவிர ஷட்டில் காக்கிலும், ஹாக்கியில் லெஃப்ட் ஹாஃப் ஆகவும் விளையாடினேன். முசிறி நூலகத்திற்கு எதிர்வீட்டில்தான் நடராசன் ஸார் இருந்தார். கணக்கு வாத்தியார். அவர் வீட்டுக்கு ட்யூஷன் போவோம். ‘மட்டி’ ‘பண்டி’ என்று பிரத்யேக வார்த்தைகளால் பையன்களைத் திட்டுவார்.

‘மா.இ. ஐயா’ என்ற மா. இராமசாமி ஐயாதான் தமிழாசிரியர். கதராடை மட்டுமே உடுத்தி வருவார். வார்த்தைக்கு வார்த்தை நிறைய இடம் விட்டு எழுதவேண்டும். எழுத்துகள் ஒட்டாது எழுத வேண்டும் என்று மிகுந்த கண்டிப்பு காட்டுவார். கையில் ஓரடி நீளத்திற்குக் குறுந்தடி ஒன்றை வைத்திருப்பார். எங்கள் எல்லாரது உள்ளங்கைகளிலும் அந்தக் குறுந்தடி விளையாடியிருக்கிறது. நோட்டுப்புத்தகத்தில் வீட்டுப்பாடத்தைப் பார்த்து, அவரது குண்டான விரல்களிலொன்றை வார்த்தைகளுக்கு இடையே வைப்பார். போதுமான இடைவெளி இல்லாமல் வார்த்தைகள் விரலின்பின் மறைந்தால் அந்தப் பையன் அழைக்கப்பட்டு குறுந்தடி பரிசளிக்கப்பட்டு கையை உதறிக்கொண்டே இருக்கைக்குத் திரும்பிச் செல்வான்.

மதுரை டிவிஎஸ் பள்ளியில் +1, +2 படித்தேன். விளாச்சேரியிலிருந்து வெங்கட்ராமன் ஸார் வருவார். கணக்குப் பதிவியல், வணிகவியல் பாடங்களை ஆங்கிலத்திலும் (மூன்றாம் க்ரூப்பிற்கும்) தமிழிலும் (நான்காம் க்ரூப்பிற்கும்) எடுப்பார். செக்கச் செவேலென்று தாடி மீசையுடன் இளமையாக சத்யா கமல்ஹாசன் போன்றிருப்பார். அப்போது எபினேசர்தான் பள்ளி முதல்வர். பள்ளியில் சேர்ந்த நாளன்றும், ஓரிரு தருணங்களிலும் அவரைப் பார்த்ததோடு சரி. மொத்தப்பள்ளியும் கண்டிப்புக்கும், ஒழுக்கத்திற்கும் பேர் போனது.

செளராஷ்ட்டிர கல்லூரியில் சொ.சொ.மீ. சுந்தரம் ஸார். நிறுவனச் சட்டம், வணிகம் என்று நிறைய பாடங்கள் எடுத்தார். SSM sir என்று மாணவர்கள் மத்தியில் அழைக்கப்பட்டார். சொ.சொ.மீ. சுந்தரம் என்பது ‘சொல்லைச் சொல்லால் மீட்டிய சுந்தரம்’ என்று கேள்விப்பட்டு ஆச்சரியமாக இருந்தது. நெற்றி நிறைய திருநீறணிந்து வருவார். மிகவும் கண்டிப்பானவர். மீனாட்சியம்மன் கோவிலில் சைவச் சொற்பொழிவாற்றுவார் என்று கேள்விபட்டிருக்கிறேன்.

இவர்கள் அனைவரும் நினைவுப்பதிவின் மேலடுக்குகளில் இருந்ததினால் நினைவுகூர்ந்து குறிப்பிடுகிறேன். இன்னும் நிறைய முகம் நின்று பெயர் மறந்த, பெயர் நின்று முகம் மறைந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.

குரு தெய்வம் என்று சும்மா சொல்லி வைக்கவில்லை. இந்த ஆசிரியர்கள் இல்லையேல் நானில்லை. எழுத்தறிவித்த அனைத்து இறைவர்களுக்கும் நன்றிகளும் வந்தனங்களும்.

***

No comments: