Wednesday, September 07, 2016

மெய் நிகர்சனம்!

மெய்நிகர்சனம் என்றால் தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டாம். Virtual Reality!.  உண்மைபோல் தோன்றும் பொய்த்தோற்றம். மெய்நிகர் காட்சி. தரிசனம். ரொம்பவும் நீட்டவேண்டாம் என்று மெய்நிகர்சனம் என்று சுருக்கியிருக்கிறேன்!

காதில் செருகித் திருகினால் கண்களைச் சொருகவைக்கும் கோழி இறகுபோல் அதை அணுகலாம்.


‘சினிமா என்றால் நெசம் போல பொய் சொல்றது’ என்று சுஜாதா ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார். ஒலிவாங்கி ஒலிப்பெருக்கி போன்ற உபகரணங்களின்றி, நிஜ மனிதர்கள் கதாபாத்திரங்களை வரித்துக்கொண்டு, நிஜமான குரலில் ஒரு கதையை உரையாடல் மூலமாக நகர்த்திச்சென்று அபிநயங்களுடனும், நிஜமான வாத்தியக்காரர்களின் இசையுடனும் மொத்த அரங்கமும் கேட்கும்படியாகச் சொன்ன நாடகங்கள் அபரிமித பரிணாம வளர்ச்சியடைந்து சினிமா என்ற நிழல்பிரதிகளாக சுருள்களில் அடைக்கப்பட்டு இப்போது டிஜிட்டலில் வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் தொடுதிரைப் பலகையிலும் கைப்பேசியிலும் உலகெங்கும் காணக்கிடைத்ததுபோல, தகவல் தொழில்நுட்பத்துறையும் படுவேகத்தில் அசுரத்தனமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. அறுபது, எழுபதுகளில் ஒரு பத்திருபது எம்பி அளவிற்கு தகவல் சேகரித்து வைக்கவே பங்களா அளவிற்கு வன்தட்டு வைத்திருந்தார்கள். இந்தப் படத்திலிருப்பது வெறும் ஐந்தே எம்பி அளவிலான வன்தட்டு. இப்போது இதைவிட ஒரு இலட்சம் மடங்கு இடம் இருக்கும் வன்தட்டு கட்டைவிரல் நகமளவிற்கு வந்துவிட்டது.



வன்தட்டு எல்லாம் தகவல்தொழில்நுட்பத்துறையைப் பொருத்தவரை பால்வாடி வயது சமாசாரம். இத்துறையின் விஸ்வரூப வளர்ச்சியைக் குறிப்பிடுவதற்காக ஓர் ஒப்பீடு அவ்வளவே! 

சம்பவம் - 1

எண்பதுகளின் இறுதியில் மதுரை செளராஷ்ட்ரா கல்லூரியில் படித்தேன். வசித்தது சுப்பிரமணியபுரத்தில். திருப்பரங்குன்றம் சாலை வழியாகத் தினமும் பைசா நகரத்துக்கோபுரம்போல சாய்ந்துவரும் நிற்காத பாண்டியன் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஒன்றில் எப்படியாவது ஓடிப்போய் ஒட்டிக்கொண்டு செல்வது வழக்கம். மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் திரும்பி செம்மண் சாலையில் சென்று இறங்கிக்கொண்டு, செம்மண் மலையில் இருந்த கல்லூரிக்கட்டிடத்திற்கு ஏற்றத்தில் நடந்து செல்லவேண்டும். ஒரேயொரு கல்லூரிப் பேருந்து இருந்தது. அதில் பெண்கள் மட்டும் அனுமதி. பொட்டலம் பிரித்து பொரியைக் குளத்திலெறிந்தால் சளசளவென்று குமியும் மீன்கள் போல இருக்கும் அப்பேருந்து வரும்போதெல்லாம். தென்னிந்திய மொழிகளின் சுவடு எதுவுமில்லாது, தார் எழுதி மறைத்தாலும், தர்ணா செய்தாலும், டிம்பிள் கபாடியாவையும், மாதுரி தீட்சித்தையும் பாபி, தேஸாப் படங்களிலெல்லாம் பார்த்துத் தமிழன் தெரிந்துகொண்ட ஓரிரு ஹிந்தி வார்த்தைகளும் இல்லாது, அவர்கள் பேசும் செளராஷ்டிர மொழி புரியாமல் மூன்று வருடங்கள் மகா அவஸ்தை!  வகுப்புகள் இல்லாத நேரத்தில் (‘வகுப்புகளில் நாங்கள் இல்லாத நேரத்தில்’ என்று வாசிக்க!) மன்னர் கல்லூரிக்கு எதிரே சாலை வளைவில் ஒரு குட்டிச்சுவர் இருந்தது - அங்கேதான் அமர்ந்திருப்போம். அரட்டை. கல்லூரித்தோழர்களில் ஒருவன் ராம்பிரசாத். இன்னொருவன் முரளி. ராம்பிரசாத் பேசும்போது மொத்த உடல், கண்கள் என்று எல்லாமும் பேசும். படு உணர்ச்சிகரமாக கைகள் கால்களை ஆட்டி எச்சில்தெறிக்க விவரிப்பான். ஒருமுறை தெருக்கோடியில் கடைக்குப்போன சம்பவத்தைத் தொடர்ச்சியாக ஐந்து நிமிடங்கள் உணர்ச்சிகரமாக நிறுத்தாது பேசி முடிக்கவும் நாங்களெல்லாம் மயான அமைதியாக இன்னும் அவன் வர்ணித்த காட்சியிலிருந்து வெளிவராமல் இருக்க முரளி மெதுவாக ‘மச்சி! அப்படியே நான் ஒங்கூட கடைக்கு போய்ட்டு வந்துட்ட ஃபீலிங் இருக்குடா!’ என்றான்.  

சம்பவம் - 2

போன வாரம் கென்னி ராபர்ட்டைச் சந்தித்தேன். சமீபத்தில்தான் இந்தியாவுக்குப் போய்விட்டுத் திரும்பியிருந்தார்.கென்னி கலிஃபோர்னியா மாகாணத்தில் சிலிக்கான் வா(வே)லி பகுதியிலுள்ள சிலிக்கான் சில்லு நிறுவனங்கள் ஒன்றின் முதன்மைத் தகவல் தொழில்நுட்ப அதிகாரி.  பங்களூருவில் அவர்களுக்கு ஐநூறு பேர் வேலைபார்க்கும் கிளை இருக்கிறது. அடிக்கடி பணியாளர்கள் கூடுதல் சம்பளம், இன்ன பிற காரணங்களுக்காக ராஜினாமா செய்துவிட்டு அடுத்தடுத்த நிறுவனங்களுக்குத் தாவும் பிரச்சினையைப் பற்றிப் பேச்சு வந்தது. அவர்களுக்கும் ப்ரோக்ராமர்களை வேலைக்கெடுக்க வேண்டியிருந்தது. கென்னி பங்களூரு போனார். ஐடிஸி விண்ட்ஸரில் அவருக்கு அறை பதிவாகியிருந்தது. 

‘இந்தியர்கள் எல்லாருமே சொல்லி வைத்தாற்போல் அவர்களுடைய ரெஸ்யூம்களில் பொழுதுபோக்குகள் என்று தலைப்பிட்டு பல விஷயங்களை எழுதுகிறார்கள்!” என்று சிரித்தார். 

பங்களூருவுக்குச் சென்ற மதியமே கென்னி நேர்காணல் செய்வதற்காக விண்ணப்பித்த சிலரை வரச்சொல்லியிருந்தார்கள்.ஒரு சந்திப்பு அறையில் கென்னி அமர்ந்திருக்க முதலாவதாக ஒரு இளைஞன் உள்ளே வந்தான். வந்தவன் தன்னை நேர்காணல் செய்யப்போகிறவர் ஒரு வெள்ளைக்காரர் என்று எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய விஸிட்டிங் கார்ட் ஒன்றை அவனிடம்  நகர்த்த - அவன் வாழ்நாளில் சந்திக்கும் முதல் ஸி லெவல் நபர் கென்னி.  உடனடியாக அவனுக்கு வியர்த்துக்கொட்டத் தொடங்கியது. வாய் குழறியது. ரெஸ்யூமை கென்னியிடம் கொடுக்கும்போது அவன் கைகள் நடுங்கியதைக் கென்னி பார்த்தார். அந்தப் பையனின் ரெஸ்யூமை விரைவாகப் பார்த்துவிட்டு ஓரமாக வைத்தார். 

‘ஹலோ ராவி. ஒன்னோட பொழுதுபோக்கு கிரிக்கெட்னு போட்ருக்கியே?’

‘ஆமாம் சார்! ஸ்டேட் லெவல்ல ஆடியிருக்கேன்!’

பெரும்பான்மை அமெரிக்கர்களுக்கு கிரிக்கெட் என்றால் இந்தியர்களுக்கு அமெரிக்க பேஸ்பால் தெரிந்த அளவிற்குத்தான் தெரியும். 

‘எங்கே. எனக்குக் கொஞ்சம் கிரிக்கெட் விளையாட்டைப் பற்றியும், அதன் விதிகளைப் பற்றியும் விளக்க முடியுமா? அந்த வெள்ளைப் பலகையை வரைய உபயோகித்துக் கொள்’ 

ரவி அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. விளையாடுகிறாரோ என்று தோன்றியது. ஒரு கணம்தான். சட்டென்று எழுந்தான். மார்க்கர் பேனா ஒன்றை எடுத்துக்கொண்டு சுவரில் மாட்டியிருந்த பலகையருகில் சென்றான். கர்சீஃபால் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு, லேசாகச் செருமிக்கொண்டு தொடங்கினான். பலகையில் மைதானத்தையும், பிட்ச்சையும், வீரர்கள் நிற்கும் பொசிஷனையும் வரைந்தான். 

கென்னி என்னிடம் ‘அடுத்த அரை மணி நேரத்தில் நான் கிரிக்கெட்டைப் பற்றித் தெரிந்துகொண்டேன். அதன் விதிகள் புரிந்தன. இந்தியாவின் சாதனை வீரர்களைப் பற்றி அறிந்தேன். அதற்குமுன் இந்தியாவில் பயணம் செய்தபோது தெருக்கள், சந்து பொந்துகளிலெல்லாம் சிலர் குச்சிகள், மட்டைகள், மட்டை மாதிரிப் பலகைகள், பலவித பந்துகள் எல்லாம் வைத்துக்கொண்டு பல்வேறு ஆடைகளில், வெவ்வேறு வயதுகளில் ஆடியதெல்லாமே கிரிக்கெட்தான் என்று புரிந்தது. பள்ளி மைதானமொன்றில் ஒரே சமயத்தில் நூறு பேர் பத்து பதினைந்து குழுக்களாக எல்லாத் திசைகளிலும் களேபரமாக விளையாடிக்கொண்டிருந்ததும் கிரிக்கெட்தான்  என்று புரிந்தது. இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதம் என்பதும் புரிந்தது’  என்றார். ‘When Ravi explained it to me, I felt as if I was there in the playground’!.   

*** 

மகாபாரதம் எப்படி நமது எல்லாருக்கும் பரிச்சயமோ, புரவிகள் காற்றைக் கிழித்துக்கொண்டு தேரை இழுத்து ஓட, வில்லுடன் அர்ஜுனன், கிருஷ்ணபரமாத்மா என்று மகாபாரதப் போர்க்காட்சி ஓவியங்களையும் கிட்டத்தட்ட நாம் எல்லாரும் ஒருமுறையாவது பார்த்திருப்போம். இம்மாதிரி ஓவியங்களைப் பார்க்கும்போது ஒருகணம் அந்தப் போர்க்களக்காட்சி நம் மனக்கண்ணில் விரியுமல்லவா. புரவிகளின் ஓலங்களும், குளம்பொலிகளுக், வாட்களின் கூர்மையும், ஆயுதங்கள் மோதும் ஓசையும், மரணங்களும், வெற்றிமுழக்கங்களும், இரத்த ஆறும் என்று எத்தனையெத்தனைக் காட்சிகளை அந்த ஒரு மெளன ஓவியம் நம் மனதில் விரித்துக் காட்டுகிறது!  மொத்தப் போர்க்களத்தையும் காட்டும் ஒரு Panoramic பிம்பத்தை அந்த ஓவியம் ஏற்படுத்துகிறது. ஒரு பரந்துபட்ட இயற்கைக் காட்சியைக் காட்டும் ஓவியம், ஒரு நிகழ்வின் அற்புத கணத்தைப் பதிவு செய்த புகைப்படங்கள் என்று எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். இவற்றின் ஆதார விளைவு பார்வையாளரை அந்தக் களனிற்குக் கொண்டுசென்று அந்தக் காட்சியை உணரவைப்பது. இது ஒருவகை மெய்நிகர்சனமே! 

நமக்கு இரண்டு கண்களில்லாமல் ஒன்று மட்டும் இருந்தால் நாம் காணும் காட்சிகள் எப்படியிருக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா? நாம் காண்பவை எல்லாம் முப்பரிமாணத்தில். ஒவ்வொரு கண்ணும் தனித்தனியே காண்பது ஒரு பரிமாணத்தையே. இரண்டு பரிமாணங்களை ஒரே காட்சியாக இணைத்து மத்தியஸ்தம் செய்து முப்பரிமாணத்தில் நமக்குக் காட்டும் மந்திரத்தை மூளை செய்கிறது. இதை ஆராய்ச்சிமூலம் 1838-இல் நிரூபித்தவர் சார்ல்ஸ் வீட்ஸோட்ன் (Charles Wheatstone) என்பவர். Stereoscope, depth, immersion, depth of field, field of view போன்ற புகைப்படக்கலை, பார்வை சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களை நேரம் கிடைக்கும்போது லேசாகப் படித்துவைத்துக்கொள்ளுங்கள்.   வில்லியம் க்ரூபரினால் (William Gruber) ஸ்டேரியோஸ்கோப் அடிப்படையில் 1939-இல் தயாரிக்கப்பட்டு, காப்புரிமையும் பெறப்பட்ட View-Master Stereoscope மகாபிரபலம். அதைவைத்து மெய்நிகர் சுற்றுலாவெல்லாம் (Virutal Tourism) காட்டினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கி, பிறகு பலப்பல ஆண்டுகள் ஆமை, நத்தை வேகத்தில் மெய்நிகர்சனப் பொருட்கள் பரிணாம வளர்ச்சிபெற்றுவந்தாலும் அது புலிப்பாய்ச்சல் எடுத்தது மின்னணு தொழில் நுட்பமும், கணிணித் தொழில்நுட்பமும் உருவான இருபதாம் நூற்றாண்டில்தான். 

விமானியாக விரும்புபவர்கள் நாலுசக்கர வாகனம்போல ஏறியமர்ந்துகொண்டு, பக்கத்து இருக்கையில் பயிற்சியாளர் ஒரு கையால் மாணவரின் தோளை அணைத்துக்கொண்டு ’ஆங். வண்டியை எடுங்க தம்பி!’ என்று ஆரம்பிப்பதில்லை. பல நிலைகளைக் கடக்கவேண்டும். ஏகமாக அடிப்படை விதிகள், பாதுகாப்பு விதிகள், தட்பவெப்பநிலைக்குத் தகுந்தாற்போல் விமானத்தைக் கையாள்வது என்று நிறைய படித்துப் பரீட்சை எழுதித் தேர்வாகி, விமானம்போன்ற ஒரு ஸிமுலேட்டரில் நிறைய நேரம் செலவழிக்கவேண்டும். அப்புறம்தான் அசல் விமானத்தில் காலையே வைக்க விடுவார்கள். அந்த ஸிமுலேட்டரை முதன்முதலில் உருவாக்கியவர் எட்வர்ட் லிங்க் - 1929 இல். மின்சார மோட்டார்களின் உதவியுடன் பல பாகங்களை இணைத்து, மழை, மேகம், காற்று, காற்றில்லா வெற்றிடம் போன்றவற்றால் விமானத்திற்கு நேரும் அசைவுகளைச் செயற்கையாக உருவாக்கினார் அவர். இயந்திரத்துக்குப் பெயர் Link Trainer. இராணுவ விமானிகளுக்குப் பயிற்சியளிக்க ஆறு இயந்திரங்களை அமெரிக்க அரசு மூவாயிரத்து ஐநூறு டாலர்களுக்கு வாங்கியது (இன்றைய மதிப்பு ஐம்பதாயிரம் டாலர்கள்!). 


இரண்டாம் உலகப்போரின்போது பத்தாயிரத்திருக்கும் மேற்பட்ட இயந்திரங்களில் ஐந்து இலட்சம் விமானிகள் பயிற்சி பெற்றனர். 

ஸ்டான்லி ஜி. வெய்ன்பாம் (Stanley G. Weinbaum) என்பவர் 1930 களில் எழுதிய அறிவியல் புனைக்கதையொன்றில் வினோதக் கண்ணாடி ஒன்றின் வழியாக ஒளியினாலான பிம்பங்கள், வாசனை, சுவை, தொடுதல் போன்ற உணர்வுகளையும் அனுபவிக்க முடியும் ஒரு கற்பனை உலகைப் பற்றி எழுதியிருப்பார். இன்றைய மெய்நிகர்சனக் கண்ணாடிக்கருவிகளைப் போன்றதொரு கண்ணாடியைப் பற்றி அன்றே எழுதிய தீர்க்கதரிசியாக அவரைக் கருதலாம். 

அதற்குப் பின்னர் அறுபதுகளில் மார்ட்டன் ஹெலிக் என்ற சினிமா ஒளிப்பதிவாளர் உருவாக்கிய சென்ஸோரமா கருவியானது வீடியோ கேம் விளையாடும் பூத் போன்றதொரு அமைப்பு. முப்பரிமாணத் திரை, ஸ்டெரியோ ஒலிபெருக்கிகள், காற்றடிக்க மின் விசிறி, வாசனைகளை உற்பத்திசெய்யும் கருவிகள், அதிர்வலைகளை ஏற்படுத்தும் இருக்கை என்று பல்வேறு அம்சங்கள் கலந்தது சென்ஸோரமா. அதற்காகவே பிரத்யேகமாக ஆறு குறும்படங்களையும் அவர் உருவாக்கினார். பார்வையாளரை திரைப்படத்திற்குள்ளேயே ஒரு பாத்திரமாக உணரவைக்கச் செய்த முயற்சி அது. அவருடைய நேர்காணலை இங்கே காணலாம்.


சென்ஸோரமாவுக்குப் பிறகு தலையில் மாட்டிக்கொள்ளும்படியான கருவியைக் கண்டுபிடித்தார் அவர். அதுவே இன்றைய மெய்நிகர்சனக் கண்ணாடிகளின் முன்னோடி! முப்பரிமாணப் படமும் ஸ்டேரியோ ஸ்பீக்கர்களும் கொண்டிருந்தது அவர் கண்டுபிடித்த டெலெஸ்பியர் மாஸ்க் (Telesphere Mask). அக்கருவியில் வீடியோ வசதி இல்லை. அதற்கு அடுத்த வருடமே பில்கோ கார்ப்பரேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பொறியாளர்கள் சேர்ந்து கண்டுபிடித்தது Headsight. அதில் ஒவ்வொரு கண்ணுக்கும் ஒரு வீடியோ திரையையும், காந்தப்புலனில் அசைவை கட்டுப்படுத்தி அதைத் தனியாக ஒரு ஸிஸி கேமராவில் இணைத்திருந்தார்கள். அப்போது Virtual Reality என்ற பதங்களெல்லாம் பயன்பாட்டுக்கு வந்திருக்கவில்லை. Headsight-ஐ தொலைதூரத்திலிருந்து அபாயகரமான இடங்களைப் பார்ப்பதற்காக இராணுவத்தின் பயன்பாட்டுக்கு வைத்திருந்தார்கள். கண்ணாடியை மாட்டிக்கொண்டு தலையை அசைத்தால், அந்த அசைவைக் கொண்டு தூரத்திலிருந்த கேமராவை இயக்கினார்கள். அந்தக் கேமராவின் காட்சிகள் கண்ணாடியில் தெரியும். சுருக்கமாக தூரத்தில் வைக்கப்பட்ட கேமராவின் காட்சிகளை நேரலையாக தலையில் மாட்டிக்கொண்ட கண்ணாடியின் திரையில் பார்ப்பது.   

அதற்கு அடுத்த இருபது இருபத்தைந்து வருடங்களில் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டாலும், 1987-இல்தான் Virtual Reality என்ற பதத்தை ஜேரன் லேன்யே (Jaron Lanier) முதன்முதலில் பயன்படுத்தினார். Visual Programming Lab-இன் நிறுவனர் அவர். அவர் தயாரித்த VR கண்ணாடிகளெல்லாமே பத்தாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் டாலர்கள் விலையில்!! 

முப்பரிமாணத் திரைப்படங்கள் பிரபலமாக இருந்த வருடங்கள் அவை. நம்மூரில் மைடியர் குட்டிச்சாத்தானில் ஆரம்பித்து சில படங்கள் வந்தன. ம்ஹூம்! ஜெகன் மோகினி 3-டியில் வந்திருக்கவேண்டும்!  யாருக்குவேண்டும் குட்டிச் சாத்தானெல்லாம்!

1992-இல் ஜேம்ஸ்பாண்ட் நாயகர் பியர்ஸ் ப்ராஸ்னன் நடித்து வந்த The Lawnmower Man திரைப்படத்தில் விஞ்ஞானி ஹீரோ மெய்நிகர்சனத்தைப் பயன்படுத்தி மனநலம் குன்றிய நோயாளி ஒருவரை குணப்படுத்துவதைச் சொல்லியிருப்பார்கள். 1993-இல் SEGA நிறுவனம் தயாரித்த VR கண்ணாடி மாதிரி பல்வேறு தொழில்நுட்பச் சவால்களால் பயன்பாட்டுக்கு வராமலேயே போனது. அதே போலத் தோல்வியடைந்த இன்னொரு முயற்சி 1995-இல் சந்தையில் இறக்கப்பட்ட நிண்டண்டோவின் VR-32. 

அதுவரை பொழுதுபோக்கு, விளையாட்டு என்றிருந்த மெய்நிகர்சனத் தொழில்நுட்பத்தை புதிய கோணத்தில் அணுகி அபாரமான திரைப்பட வரிசையை உருவாக்கி உலகச் சந்தையை ஒரு கலக்கு கலக்கினார்கள். அந்தப் பட வரிசை - மாட்ரிக்ஸ்! 1999-இல் முதல் பாகம் வந்தது. எங்கே கூகுளின் உதவியின்றி அந்தப் படத்தின் கதையைச் சொல்லுங்கள் பார்க்கலாம்! 

அதற்கடுத்த பதினைந்து வருடங்கள் இத்தொழில்நுட்பத்தின் அற்புத கால கட்டங்கள். அதீத சக்தி கொண்ட கணிணிகள், கைக்கடக்கமாக ஆனால் சக்திவாய்ந்த கைபேசிகள், ஏகமாக செறிவூட்டப்பட்ட க்ராபிக்ஸ், முப்பரிமாணத் தொழில்நுட்பம், கேமராக்கள் என்று எல்லாம் ஒரே சமயத்தில் கைகூடி வர, சகாய விலையில் இப்போது சிட்டுக்குருவி லேகியம் விற்பது போல் ஆளாளுக்கு VR கண்ணாடிகளைச் சந்தையில் இறக்கத் தொடங்கிவிட்டார்கள். நிஜமாகவே அட்டையைப் பயன்படுத்தி சல்லிசாக கூகுள் கார்ட்போர்ட் கிடைக்கிறது. ஸாம்ஸங்கின் VR கண்ணாடி ஆறாயிரம் ரூபாய்க்குக் கிடைக்கிறது. 

குஞ்சு குளுவான்களெல்லாம் ஆட்டத்திலிருக்க, ஒரு நாளைக்கு நூறுகோடி பேருக்கு மேல் பயனாளர்களாக இருக்கும் முகநூல் காரர்கள் சும்மா இருப்பார்களா? சோஷியல் மீடியாவின் முடிசூடா மன்னர் மார்க் ஸக்கர்பெர்க் பார்த்தார். கிட்டத்தட்ட நானூறு வல்லுனர்கள் கொண்ட குழு அமைத்து அல்லும் பகலும் நேரடி மேற்பார்வையில் ஆக்குலஸ் (Oculus Rift) என்ற மெய்நிகர்சனக் கண்ணாடிக் கருவியை உருவாக்கி சமீபத்தில் சந்தையில் விட்டிருக்கிறார் மார்க். இன்றைய தேதிக்கு சந்தையில் இருப்பதில் அதி நவீனமானது ஆக்குலஸ் ரிஃப்ட். 

VR கண்ணாடியில்லாமல் அதற்கான வீடியோவைப் பார்த்தால் எப்படி இருக்கும்? இப்படித்தான்:


கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்த்தால் ‘இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது’ என்று பாடிக்கொண்டே ஒரே காட்சியாகப் பார்க்கலாம். 
Virtual Reality (VR) ஒரு பக்கம் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது என்றால் இன்னொரு பக்கம் புயலடிப்பது  Augmented Reality (AR)-இல். ‘Augmented’ என்றால் ஏற்கெனவே இருப்பதை மேம்படுத்தி, உபரியாகச் சேர்த்து புதிய அனுபவத்தைத் தருவது. இது என்னப் புதுக்கதை என்கிறீர்களா? VR-க்கும்  AR-க்கும் என்ன வித்தியாசம் என்பதை முதலில் பார்த்துவிடுவோம். VR என்றால் என்னவென்று இந்நேரம் உங்களுக்கு குன்சாகப் புரிந்திருக்கும். VR என்பது இல்லாத மாயத்தோற்றத்தை உள்ளதுபோல் காட்டுவது, உணரவைப்பது. நிஜ ஜெயில் போல க்ராபிக்ஸ் பண்ணி உங்களை உள்ளே உக்கார வைப்பது VR. AR நிஜ உலகில் இல்லாத ஒன்றைப் புகுத்தி உங்களது அனுபவத்தை மேம்படுத்துவது. மிகவும் எளிமையான உதாரணம் 20:20 கிரிக்கெட் விளையாட்டுகளைத் தொலைக்காட்சியில் காணும்போது நிஜ மைதானத்தின் விளையாட்டைக் காட்டி அதன்மேலேயே ஸ்கோரையும் படரவிட்டுக் காட்டுகிறார்களே. ஒருவர் பாயிண்ட்டிலிருந்து மிட்-ஆனுக்கு நகர்கிறார் என்பதைக் கோடுபோட்டு அவர் நடந்துபோகும்போதே காட்டுகிறார்களே. அதுதான் AR. ராஜா சின்ன ரோஜாவோடு பாட்டில் ரஜினியோடு லூட்டி அடிக்கும் கார்ட்டூன்களை ஒரு எளிய உதாரணத்துக்காகச் சொல்லலாம். 



நிஜக்காட்சியின் மீதே பொய்க்காட்சியையோ இன்னொரு நிஜக்காட்சியையோ இரண்டாம் அடுக்காகச் சேர்த்து ஒரே காட்சியாகக் காட்டுவதுதான் AR. இப்போதைக்குக் கண்ணாடி போன்றிருப்பதை கண்ணுக்கு மேலேயே பொருத்தும் காண்டாக்ட் லென்ஸ் வடிவில் கொண்டுவரமுடியுமா என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 

ஈலான் மஸ்க் (Elon Musk) என்று ஒருவர் இங்கிட்டு இருக்கிறார். லேசான கூகுள் தேடலில் அவரைப்பற்றி அறிந்துகொள்ளலாம். டெஸ்லா, ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களின் சி.இ.ஓ.! ஸோலர் ஸிடி நிறுவனத்திலும் அவருக்குப் பெரும்பங்கு இருக்கிறது. ‘சாத்தியம் என்பது சொல் (மட்டும்) அல்ல - செயல்!’ என்ற கமல்ஹாஸனின் கூற்றுக்கு மிகச் சரியான உதாரணம் இந்த மனிதர். மிகச் சமீபத்தில் நடந்த Code Conference 2016 மாநாட்டில் தொழில்நுட்பப் பெருந்தலைகளையெல்லாம் அழைத்திருந்தனர். ஈலானும் அதில் ஒருவர். அசுவாரஸ்யமான நேர்முகமாளர்களுடனுடனான ஈலானின் சுவாரஸ்ய உரையாடல் முழுவதுமாக யூட்யூபில் கிடைக்கிறது. VR குறித்தான பார்வையாளரின் கேள்விக்கு ஈலான் மஸ்க் அளித்த பதில் மிக முக்கியமானது. சுருக்கமாகச் சொன்னால் ‘நிஜத்திற்கும், மாயைக்கும் வித்தியாசம் காணமுடியாத தொழில்நுட்பத்தை மனிதர்கள் விரைவில் எட்டிவிடுவார்கள். இப்போதிருக்கும் தொழில்நுட்பத்தைவிட ஆயிரம் மடங்கு சிறப்பானதொரு தொழில் நுட்பம் அந்தச் சூழலை ஏற்படுத்தும். அதற்கு எத்தனை ஆண்டுகளானாலும் அது மனிதனின் பரிணாம வளர்ச்சியின் கால அளவு கோலில் சிறுதுளியாகவே இருக்கும்’. விரிவான பதிலை இச்சுட்டியில் பார்க்கலாம்.


இன்னும் சுருக்கமாக ரெண்டே வார்த்தைகளில் சொல்வதானால் “வாழ்வே மாயம்”! 
MR-இன் சாத்தியங்கள் எல்லையில்லாதவை. கடந்த பதினைந்து வருடங்களில் நாம் கண்ட முன்னேற்றங்களையெல்லாம் இன்னும் ஓரிரண்டு வருடங்களிலேயே புலிப்பாய்ச்சலால் தாண்டிக் கடக்கும் அது. வீடியோ கான்ஃபரன்ஸ் என்று இப்போதிருப்பதெல்லாம் MR தயவில் உருமாறி நீங்களே கலிஃபோர்னியாவிலிருந்துகொண்டு பங்களூருக்குப் போய் அந்த அறையில் உட்கார்ந்துகொண்டு சக ஊழியர்களை முப்பரிமாணத்தில் பார்த்து உரையாடலாம். அவர்கள் குடிக்கும் தேனீர் கோப்பையிலிருந்து எழும் ஆவியை முப்பரிமாணத்தில் நிஜம்போலப் பார்க்கலாம். உங்கள் பாஸின் முன்னெற்றி வழுக்கையில் உங்கள் முகம் பார்க்கலாம். என்ன..காய்கறி வாங்க வந்துவிட்டு அயாம் ஒர்க்கிங் ஃப்ரம் ஹோம் என்று ஜல்லியடிக்கமுடியாது. மருத்துவ துறையிலும் இந்த நுட்பம் அபார வித்தைகளைச் செய்து நிறைய உயிர்களைக் காக்கவிருக்கிறது. உலகம் இன்னும் சுருங்கும். 

VR-ம் AR-ம் சேர்ந்தால் என்னாகும்? MR - Mixed Reality!  VR நீங்களே களத்திலிறங்கி விளையாடும் மாய உலகம். AR-இல் நிஜத்தின்மீது காட்டப்படும் நிஜம்போன்ற பொய்யுடன் உங்களால் உரையாடமுடியாது (non-interactive). இரண்டையும் இணைக்கும் MR-இல் உங்களால் இயக்கமுடிகிற நிஜம்போன்ற பொய்யுலகை நிஜ உலகில் காணலாம். ஆஹா! கை அரித்து கவிதை எழுதவேண்டும் போல இருக்கிறது! 
இல்லாததை இருப்பதுபோலவும்
இருப்பதின் மேல் இல்லாததையும்
இணைத்துக்காட்டியதுபோதும் 
ஈசா
எல்லாவற்றையும் இணைத்துக் காட்டி
என்னைக் குழப்புவதேன் 
எம்பெருமானே!

அடிக்க வேண்டும் போலிருக்கிறதா. கொஞ்சம் பொறுத்தால் MR-இல் வருவேன். கை வலிக்க அடிக்கலாம்!  எனக்கும் வலிக்கும்!


சம்பவம் - 3

கென்னியின் நிறுவனம் டெஸ்லா கார்களுக்குத் தேவையான சில உணரிகளைத் (sensor) தயாரித்துத் தருகிறது. அவ்வுணரிகள்தான் டெஸ்லாவின் மாடல் எக்ஸை நீங்கள் நெருங்கும்போது கதவைத் திறந்து விடுகிறது. டெஸ்லா என்றால் என்னவென்று கேட்கும் ஆத்மாக்கள் ஐம்பது பைசா தபால்தலை ஒட்டிய சுய விலாசமிட்ட அஞ்சலை என் விலாசத்துக்கு அனுப்பவும்!

கென்னியைச் சந்தித்துவிட்டுத் திரும்பும்போது அவரது அறைக்கு வெளியே ஓரத்தில் உட்கார்ந்திருந்த நபரை எங்கேயோ பார்த்ததுபோலிருந்தது. அருகில் நெருங்கி ‘அடப்பாவி ராம்பிரசாத்!’ என்று அவன் முதுகில் அறைந்தேன். அந்தக் கடன்காரனைத்தான் இவ்வளவு வருடங்களாக கூகுள், முகநூல், லிங்க்ட் இன் என்று ஒரு இணையச்சந்து பாக்கியில்லாமல் எல்லாவிடங்களிலும் தேடி ஓய்ந்து போயிருந்தேன். பழைய நட்பு வட்டத்தில் காணக்கிடைக்காத ஒரே ஆளாக இருந்தது அவன்தான். திடுக்கிட்டுச் சில நொடிகள் என்னை உற்றுப் பார்த்துவிட்டு சதிலீலாவதியில் கமலைப் பனிரெண்டு வருடங்கள் கழித்துப் பார்க்கும் ரமேஷ் அரவிந்த் போலவே மொத்த அலுவலகமும் ஸ்தம்பிக்கும்படியாக ‘டேஏஏஏஏஏஏய். அருணு….. இங்கிட்டு என்னடா பண்ணிக்கிட்டு இருக்கே!’ என்று அலறினான். அவன் கழுத்துப்பட்டையில் தொங்கிய அடையாள அட்டை ‘Ram Prasad - Director of Mixed Reality’ என்றது. கடைவாயில் எச்சில் வழிய கண்கள் ஒளிர்ந்து விரிய அவன் பேசத்துவங்கிய இரண்டாவது நிமிடத்தில் கென்னி வந்து ‘Can you guys get a room and continue with your conversation?’

***
புதியதோர் உலகம் செய்வோம் என்று என்றோ பாவேந்தர் திருவாய் மலர்ந்தது இன்று நனவாகிக்கொண்டிருக்கிறது. நாளைய உலகம் இன்றுபோலிராது. மனிதன் நிஜ உலகின் பரிமாணத்தையும் எல்லையையும் சாத்தியங்களையும் தனது அயராத அறிவியல், தொழில்நுட்ப முயற்சிகளினால் அபாரவேகத்தில் விரித்துக்கொண்டே போகிறான். VR, AR, MR போன்றவையெல்லாம் அதற்கான படிகளே. என்ன, இவை வேகமாக நகர்ந்து நம்மையும் அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் மின்படிகள். 

செல்வோம்!

*** 

நன்றி: சொல்வனம்.காம் (www.solvanam.com)

No comments: