Friday, September 29, 2017

The Shitty Bank!


சுற்றலில் விடுவது என்பதை கொஞ்சகாலமாக ஸிட்டி வங்கியிடம் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். அந்த வங்கியில் நான் கணக்கு துவங்கியது 90களில் பங்களூரில் இருந்த காலகட்டத்தில். புலம்பெயர்ந்ததும் அதை வெளிநாட்டுவாழ் இந்தியர் கணக்காக மாற்றிக்கொண்டு தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள். பாஸ்டனிலிருந்து கலிஃபோர்னியாவுக்கு இடம்பெயர்ந்து முதலில் ஒரு அபார்ட்மெண்ட்டில் குடியிருந்தோம். எனது வங்கிக்கணக்கு விவரங்களில் முகவரியை மாற்றி அதற்குரித்தான சான்றிதழ்களையும் (கலிஃபோர்னியா ஓட்டுநர் உரிமம்) கொடுத்து முடித்தாகிவிட்டது.
சென்ற வருடம் உள்ளூரிலேயே இன்னொரு வாடகை வீட்டுக்குக் குடிபெயர்ந்தோம். கடமையே கண்ணாயிரமாக ஸிட்டி இணையத்துக்குச் சென்று எனது முகவரியை மாற்றினேன். அப்போது ஆரம்பித்தது சனி. RBI யின் KYC விதிகளின்படி எனது புதிய முகவரிக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவேண்டும் என்று ஸிட்டியிடமிருந்து கடிதம், மின்னஞ்சல் வந்தது. அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை என்னவென்றால் அவர்கள் கேட்ட ஆதாரங்களில் ஒன்றைக்கூட என்னால் சமர்ப்பிக்கமுடியாது என்பது. நானும் விளக்கம் சொல்லிக் கெஞ்சிக் கதறிக் கூத்தாடிப் பார்த்துவிட்டேன் (ஒற்றெழுத்துகளைச் சரியாகப் போட்டிருக்கிறேனா?). கடைசியாக உங்கள் கணக்கை முடக்கிவைத்திருக்கிறோம் என்று நேற்றுக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.
ஃபோன் செய்தேன். ஒரு அம்மணி எடுத்தார்கள்.
‘நீங்கள்தான் நீங்கள் என்பதற்குச் சில கேள்விகளைக் கேட்போம்’
‘சரி’
‘உங்கள் பிறந்த தேதி’
உண்மையான தேதியைச் சொல்வதா, ‘பள்ளியில் கொடுத்த தேதி’யைச் சொல்வதா என்று வினாடி நேரக் குழப்பம். பள்ளித் தேதியைச் சொன்னேன்.
‘கடைசியாக நீங்கள் உங்கள் வங்கிக்கணக்கில் செய்த இரண்டு பரிவர்த்தனைகளைக் குறிப்பிடுங்கள்?’
யோசித்து ‘ஆமஸானில் முண்டா பனியன் வாங்கியதற்கு இரண்டாயிரம் ரூபாய். எல் ஐ சிக்கு அனுப்பியது அறுநூற்று நாற்பத்தேழு ரூபாய்’
‘உங்களை நீங்கள்தான் என்று நிரூபித்தமைக்கு நன்றி. ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?’
‘மேம்’ என்று ஆரம்பித்து நான் கொடுத்த விளக்கத்தின் சாரம் இது.
1. கலிஃபோர்னியா ஓட்டுநர் உரிமத்தில் முதன்முறை எடுத்த முகவரி பதிவாகியிருக்கும். உரிமத்தின் காலம் முடிவடையுமுன் முகவரியை மாற்றினால் அவர்களது இணையத்தில் மாற்றலாம். ஆனால் புதிய முகவரியுடன் உரிமத்தை அவர்கள் வழங்குவதில்லை. எனது உரிமம் 2019 வரை செல்லுபடியாகும். அதற்குமுன் அதை புதுப்பிக்க முடியாது. பழைய முகவரியுடன்தான் உபயோகிக்கவேண்டும். உரிமத்தைப் புதுப்பிக்கும்போதுதான் அப்போதைய முகவரியுடன் புதிய உரிமத்தை வழங்குவார்கள்.
2. அமெரிக்க பாஸ்போர்ட்டில் முகவரியை அச்சிடும் வழக்கம் இல்லை.
3. எனக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, இந்திய ஓட்டுநர் உரிமம் கிடையாது.
4. இது தவிர எனது புதிய முகவரியுடன் வாகனப் பதிவுச் சான்றிதழ், வங்கிக்கணக்கு, மின்சாரக்கணக்கு, வீட்டு வாடகை ஒப்பந்தம், எனது வருமானவரிப் படிவம், சம்பள ரசீது, எனது முதலாளியின் கடிதம், நூலக உறுப்பினர் அட்டை என்று மற்ற ஆவணங்கள் இருக்கின்றன. பாஸ்டன் வீட்டுப் பத்திரமும், அதன் சொத்துவரி ரசீதும் இருக்கின்றன.
"இவற்றைத் தவிர வீடு மாற்றிய கலிஃபோர்னிய வாசியால் வேறு ஒன்றையும் கொடுக்க இயலாது. இது உங்களுக்குப் புரியாவிட்டால் உங்களது மேலதிகாரியிடம் கொடுங்கள். நான் பேசுகிறேன்.”
சற்று மெளனத்திற்குப் பின் ஒரு நபர் வந்தார். நான் ‘தோழர்’ என்று துவங்கி மறுபடியும் 1 லிருந்து 4 வரை ஒப்பித்தேன்.
‘ஸார். இட்ஸ் நத்திங் டு டு வித் அஸ். ஆஸ் பெர் ஆர்பிஐ ரெகுலேஷன்ஸ்…’ என்று அவர் மறுபடியும் மேம் சொன்னதை ஒப்பித்தார்.
எனக்கு திடீர் ஐடியா வந்தது.
‘ஒண்ணு பண்றேன். மறுபடி முகவரியை எனது முந்தைய கலிஃபோர்னியா முகவரிக்கே மாத்திர்ரேன். அதே முகவரியோட என்னோட ஓட்டுநர் உரிமம் இருக்கறதால பிரச்சினை இல்லை - இல்லியா?’
‘ஸாரி சார். முதலில் இப்போது இருக்கும் முகவரியை நிரூபித்துவிட்டுத்தான் நீங்கள் எதையும் மாற்றமுடியும்’
"எனக்கு டிடிவி தினகரனைத் தெரியும்”
‘ஸாரி சார். எங்களுக்கு அவரைத் தெரியாது”
‘அடேய். நீ கேட்கும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் அதே போக்குவரத்துத்துறைதான் வாகனப் பதிவுச் சான்றிதழ்களையும் வழங்குகிறது. ஆனால் உங்களுக்கு பெட்ரூமாக்ஸ் லைட்டேதான் வேண்டுமா?'
‘ஸாரி சார். அம்மாவின் ஆணைக்கிணங்க… ஸாரி… RBI ஆணைக்கிணங்க ஸிட்டி ஏற்றுக்கொள்ளாது’
எனக்கு வந்த கோபத்தில் 'ஒரு இருபது வருட வாடிக்கையாளரை இப்படித்தான் படுத்துவீர்களா? உங்கள் சகவாசமே வேண்டாம். நான் வேறு வங்கியைத் தேடிக்கொள்கிறேன். உடனடியாகக் கணக்கை முடித்து டிமாண்ட் டிராப்டை அனுப்பவும்’ என்று கத்தினேன்.
‘சார். உங்கள் கணக்கில் மினிமம் பேலன்சுக்குக் கொஞ்சம் குறைகிறது. அதற்கு மாசம் ரூ.400 ஃபைன் போடுவோம். நீங்கள் நீண்டகால வாடிக்கையாளர் என்பதால் அதை வைவ் செய்திருக்கிறோம்’.
‘சரி இருப்பதை அனுப்பித் தொலைங்களப்பா’
‘அதை அனுப்புவதற்கு உங்கள் முகவரி ஆதாரம் வேண்டும்’
அடப்போங்கய்யா!
***

No comments: