Sunday, August 01, 2004

*** ஜே.ஜே. சில குறிப்புகள் பற்றிச் சில குறிப்புகள் - 5 ***

வாசித்துச் செல்லும்போது சில விவரிப்புகளில் ஒளிந்திருக்கும் நுட்பங்களைக் கிட்டத்தட்டத் தவற விட்டுவிட்டேன். கடைசி வினாடிகளில் சுதாரித்துப் பிடித்துக்கொண்ட நுட்பங்கள் அநேகம். அவை ஜே.ஜே.சில குறிப்புகளில் எங்கெங்கும் விரவியிருக்கின்றன. ஒவ்வொரு வாசிப்பிலும், தூண்டிலைச் சளைக்காமல் வீசிக் குளத்தைக் காலி செய்துவிடும் உத்தேசத்துடன் மீன் பிடிப்பவனைப் போன்ற மனோ நிலையில், புதிய மீன்களைப் பிடிக்கிறேன். மீன்கள் வந்துகொண்டேயிருக்கின்றன ஒவ்வொருமுறை தூண்டில் வீசுகையிலும். குளத்தில் இருப்பது தெளிவாக அலையும் மீன்கள் மட்டுமல்ல. இம்மீன்கள் உற்பத்தி செய்யும் மீன்குஞ்சுகளை எண்ணி மாளாது. பெரிய மீனைப் பிடித்து ஆசுவாசப்படுத்திக் கொள்கையிலேயே இன்னும் எத்தனை நூறு மீன்குஞ்சுகள் பொரிந்திருக்குமோ என்ற நினைப்பு சில சமயங்களில் ஆயாசத்தைத் தருகிறது. ஆனாலும் மீன்பிடிக்கக் கசக்குமா என்ன? குளம் காலியாகாது என்ற நினைப்பே அலாதியானது.

இவ்வகையான சில மீன் குஞ்சுகள் உங்கள் பார்வைக்கு:

"இன்று ஒரு செய்தி காலையில். பொதுக்கிணற்றில் விஷம் கலக்கப் பட்டிருக்கிறதாம். .மயக்கம், தலைசுற்றல், வாந்தி, தொடர்ந்து என்னற்ற ஹேஷ்யங்கள், எண்ணற்ற சந்தேகங்கள், வேறுபட்ட உரைகள், முன் விரோதங்கள், மதச்சண்டை, ஜாதிச்சண்டை, என்னென்னவோ. காலையில் அங்கு போனேன். அந்தக் கிணறு அமைதியாகச் செய்துகொண்டிருந்த காரியத்தை தண்ணீர் சப்ளை செய்யப் புறப்பட்ட முனிசிபாலிட்டி அலங்கோலமாகவும், அநாகரிகமாகவும், ஆபாசமாகவும் செய்ய முற்பட்டு, தத்தளித்து, மனித வாய்களில் மிக மோசமான வசைகளையும் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறது. பொதுக்கிணற்றில் விஷம் கலந்தபோது ஜனங்கள் பளிச்சென்று தெரிந்துகொண்டுவிட்டார்கள். குடல் காட்டிக்கொடுத்துவிட்டது. உடல் எதிரியைத் தெரிந்துகொள்வது போல், மன எதிரியை இனங்காணத் தெரிவதில்லை. பழைய நார்க்கட்டிலில் படுத்தபடி கீழ்த்தரமான ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கும் தோமா எப்போதும் மூட்டைகளைப் பற்றிப் புகார் சொல்கிறான். புத்தகத்தின் பக்கங்களிலிருந்து கண்ணுக்குத் தெரியாத மூட்டைகள் அவன் ரத்தத்தை உறிஞ்சுவதைப் பற்றி அவனுக்குக் கவலை இல்லை".

"சம்பார மடம் நாராயண அய்யர் இறந்துவிட்டார் என்ற செய்தி தெருவில் காதில் விழ, பேசிக்கொண்டு போனவர்கள் அளித்த முக்கியத்துவத்திலிருந்து ஏதேதோ கற்பனைகள் மனதில் விரிய, அவர்கள் பின்னாலேயே சென்றேன். சரியான கூட்டம். 250 ஏக்கர் நஞ்சை ஹரிப்பாடில் இருக்கிறதாம். அப்படியென்றால் சட்டுபுட்டென்று சிதையில் ஏற்ற முடியுமா? காலையில் ஒன்பது மணியிலிருந்து தொடர்ந்து காரியங்கள், மதச்சடங்குகள், மந்திரங்கள், ஹோமப்புகை, தவணை வைத்து அழுகை, ஏழைப் பிராமணர்களின் அட்டகாசம். கொளுத்தும்போது சாயங்காலம் மணி ஆறேகால். அவர்கள் குடும்பத்துக்கென்று தனிச் சுடுகாடு, கற்கோட்டைபோல் சுவர் எழுப்பிப் பெரிய பூட்டுப்போட்டு வைத்திருக்கிறார்கள். அவரைக் குளிப்பாட்டி முடித்ததும், கால் சிரங்கிற்கு என்றும் மருந்து போடும் பேத்தி அன்றும் அழுதுகொண்டே களிம்பு போட்டது எல்லாருடைய மனத்தையும் உருக்கிவிட்டது. பாவம், சம்பார மடம் நாராயண அய்யர்! நான் முதல் தடவையாக அவரைப் பார்த்தபோது இறந்து விட்டிருந்தார். எப்படிப் பேசுவார் என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை".

"உலகச் சிந்தனை வளத்தையும், உலக இலக்கிய வளத்தையும், நம் பின்னணி தெரிந்து, தேவையை உணர்ந்து, வாசகனின் கிரகிக்கும் சக்தியைப்பற்றிய பிரக்ஞையுடன் மொழிபெயர்ப்புகள் கொண்டுவந்தால், நம் கருத்துலகில் ஒரு பெரிய மாற்றத்தைச் சிறுகச் சிறுக நிகழ்த்திவிடலாம்.....பலர் இங்கு மொழிபெயர்ப்பது வேறொரு பாஷையும் தெரியும் என்று பயமுறுத்த"

"மாணவர்கள் கூடி, எதிர்படுபவர்கள் அனைவரையும் நிறுத்தி, வற்புறுத்தி, 'பாரத மாதாவுக்கு ஜே', 'மகாத்மா காந்திக்கு ஜே' என்று குரல் எழுப்பச் செய்தார்கள். சிறு பையன்களின் தலையில் குட்டியும், செவியைத் திருகியும் இதைச் செய்யச் சொன்னார்கள். வற்புறுத்தல் இன்றியே பல சிறுவர்கள் ஆர்வமாகப் புரட்சிவசப்படக் கத்தினார்கள். ஒரு வயதான கிழவி மறுத்துவிட்டாள். 'கொன்றாலும் கத்த மாட்டேன்' என்றாள். கொள்கை காரணம் என்று நான் நினைக்கவில்லை. வற்புறுத்தலுக்கு இணங்கக்கூடாது என்ற வீம்பு அவளுக்கு ஏற்பட்டுவிட்டது. இந்த மனோபாவம்தான் சுதந்திரத்தை எப்போதும் காப்பாற்றி வந்திருக்கிறது'.

"கொஞ்சமாகத் தெரிந்துகொண்டிருக்கும்போது தெரிந்துகொண்டுவிட்டோம் என்றும், அதிகமாகத் தெரிந்துகொள்ள முற்படும்போது தெரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணமும் ஏற்படுகிறது. ஒரு கதவு திறக்கும்போது திறக்காத பல கதவுகள் தெரியும் விசித்திரக்கோட்டை இது. அவற்றையும் திறக்கும்போது மேலும் பல கதவுகள் மூடிக்கிடப்பதைப் பார்க்கிறோம். அப்படியானால் இதற்கு முடிவு என்ன? திறப்பதே திறக்காத கதவுகளைப் பார்க்கத்தானா?"

"நண்பர்களைத் தேடிப்போவதை அவர்களுடைய மனைவிகள் வெறுக்கிறார்கள். மனைவிகளின் பெரிய எதிரி கணவனின் இலக்கிய நண்பனே. கணவர்களைத் தங்கள் கைகளிலிருந்து தட்டிப் பறித்துக்கொண்டு போய்விடுவார்களோ என்று பயப்படுகிறார்கள். ஆழந்த பேச்சும் ஈடுபாடும் அவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. லெளகீகத்தில் பற்றுக் குறைந்து, தங்கள் மீது பற்றுக் குறைந்து, வாழ்க்கையை நிமிர்த்துவதற்குக் கணவன் பயன்படாது போய்விடுவானோ என்று பயப்படுகிறார்கள். நாளாவட்டத்தில் அவர்களுடைய மனோபாவத்தைத்தான் நண்பர்களும் பிரதிபலிப்பார்கள்".

"விமர்சனத்திற்கு ஆளாகும்போது எதிராளியின் முகத்திரையைக் கிழிப்பது அல்ல, என் மனத்திரையைத் தூக்கிப் பார்த்துக்கொள்வதுதான் என் முதல் வேலை என்று நினைக்கிறேன்".

"தன்னுடனேயே இருந்து, தன்னைக் கவனித்துக்கொள்ளும்படி மனிதன் கடவுளிடம் கேட்டுக்கொள்கிறான். ஆனால் தன்னை ஒப்படைத்துக்கொள்ள, மனிதன் மீது கடவுள் காட்டும் அக்கறைகள் அவனுக்குப் போதுமானதாகவும் இல்லை. மன நிறைவைத் தரக்கூடியதாக, முற்றாக நம்பத்தகுந்த, பரவசமூட்டக்கூடிய, பூரணமான ஒன்று மனிதனுக்கு வேண்டும். அது அவனை வழிநடத்திச் செல்லவேண்டும். மனிதனின் மிகப்பெரிய சங்கடம் முடிவுகள் எடுப்பது. வெவ்வேறு சாத்தியக்கூறுகளின் முன்னால் அவன் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும். எது தவறு? எது சரி? அவனுக்குச் சரி இவனுக்குத் தவறாகவும், இவனுக்குச் சரி அவனுக்குத் தவறாகவும் இருக்கின்றன. இப்போது மூன்றாவது ஒருவன் தோன்றி புதிய தவறையோ, ஒரு புதிய சரியையோ முன் வைக்கிறான். குழப்பம் மேலும் வலுக்கிறது. ஆராய்ந்து அறியும் பொறுப்பு மிகப் பயங்கரமானது. கடுமையானது. சிக்கலானது. பின்பற்றலோ மிக எளிமையானது. சரணாகதி நிம்மதியைத் தரக்கூடியது".

இறுதியாக...

**

"செயலின் ஊற்றுக்கண்ணான சிந்தனையைப் பாதிப்பதே என் வேலை. எண்ணங்கள் இன்றிச் செயல்கள் இல்லை. எண்ணங்களைப் பாதிப்பவன் ஒவ்வொருவனும் காரியத்தையே பார்க்கிறான். நம்பிக்கைகளில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் மனித குலத்தையே மாற்ற முடியும். இம்மாற்றம் நிகழ வேண்டுமென்றால் மனிதனுக்கு அவன் கொள்ளும் உறவுகளில் சகல உறவுகளிலும் மெய்மையை ஸ்பரிசிக்கத் தெரியவேண்டும். உறவுகளில் பழக்கத்தையே ஸ்பரிசித்துக்கொண்டிருக்கிறான் மனிதன். இத்தடுப்பு இருக்கும் வரையிலும், போதனைகள் பழக்கத்தின் பாசியில் வழிந்துகொண்டே இருக்கும். இந்தப் பாசி பயங்கரமானது. கலவியை முற்றாக மறந்துவிட்ட சமூகம் காதல் வயப்பட்டு நிற்பதன் மூலம் மட்டும் வம்ச விருத்தி எப்படிக் கூடும்? மெய்மையை ஸ்பரிசிப்பதே படைப்பு. மனத்தைப் படைப்பு நிலைக்குத் திருப்பவேண்டும். அவன் தன்னைக் கற்றுக்கொள்ளத் தவறினால் அவன் காலடி மண்ணைக்கூட அவன் தெரிந்துகொள்ளப் போவதில்லை. மனித மனத்தில் தூர்ந்துபோய்விட்ட படைப்பின் ஊற்றுக் கண்ணைக் கீறி விடுவதுதான் என் வேலை".

**

ஜே.ஜே. என்ற அந்த எழுத்தாளனைப் பார்க்கத் துடிக்கிறது மனம். அவன் முன் நின்று அவன் மனதோடு உரையாடவேண்டும் என்ற எண்ணத்தை - கதைசொல்லியின் மனதில் சதா சர்வ காலமும் ஓடும் அதே எண்ணத்தை- நம்மிடம் கொண்டு வருவதன் மூலம் சு.ரா. வெற்றியடைந்திருக்கிறார். எக்ஸ்டென்ஷியலிசம், போஸ்ட் மாடர்னிஸம், என்று ஏகப்பட்ட இஸங்களில் எழுத்தை வகைப்படுத்துவதாகக் கேள்விப்பட்டேன். எழுத்தை எழுத்தாக வரையறைகளின்றிப் படிக்க விழைவதால், ஜே.ஜே.-ஐ எந்த இஸத்திற்குள்ளும் பார்க்க/படிக்கத் தோன்றவில்லை. முழுப்புத்தகத்தையும் படித்து முடித்ததும் பல்வேறு மனங்களின் வரையறையற்ற, முடிவற்ற சிந்தனைப் போராட்டங்களின் பிரதிபலிப்பாக அதை உணர்ந்தேனேயொழிய, கதாபாத்திரங்களையோ அல்லது அவை பேசிக்கொள்ளும் வசனங்களையோ உணரவில்லை. படித்து முடித்ததும் சில மணிநேரங்கள் ஆழ்ந்த மெளனத்தில் இருக்கவேண்டியிருந்தது. தாவிப்பறக்கும் புரவிகளைக் கடிவாளமிட்டு அடக்கமுயற்சிப்பதுபோல், பேரலைகளை உள்ளங்கையில் அடக்கமுயற்சிப்பதுபோல, எங்கெங்கோ தறிகெட்டுப் பாய்ந்துகொண்டிருந்த சிந்தனைகளை அடக்கிக் கட்டுப்படுத்த போராடவேண்டியிருந்தது. பின்பு முயற்சியைக் கைவிட்டு, அதுவே அடங்கட்டும் என்று விட்டுவிட்டேன். இப்போது இதை எழுதிக்கொண்டிருக்கையில், உலையில் கொதிக்கத்துவங்கும் நிலையிலுள்ள நீரைப்போலிருக்கிறது என் மனம். கொதிப்பதற்குள் இதை எழுதிமுடித்துவிட்டு ஆசுவாசப்படுத்திவிடவேண்டும் என்பதே என் அவா. அந்த மனச்சுழற்சியில் இன்னொருமுறை சிக்க வலுவில்லை என்றே சொல்லவேண்டும்.

சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே.சில குறிப்புகள்' ஒரு நாவலே அல்ல; இலக்கியமும் அல்ல என்று நிறைய குற்றம் சாட்டப் பட்டிருக்கும் ஜே.ஜே.சிலகுறிப்புகளை நான் ஒரு ஓவியமாகக் காண்கிறேன். ஓவியம் என்றால் நவீன ஓவியம் அல்ல. மிகவும் திருத்தமாக வரையப்பட்ட ஓவியம் - தவறு - ஓவியங்கள். ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரக்கணக்கான ஓவியங்கள். ஒவ்வொரு ஓவியமும் திருத்தமான ஒரு பகுதி. இதுபோல திருத்தமான ஆயிரக்கணக்கான ஓவியங்கள் சிதறியிருக்கும் மிகப்பெரிய மைதானமாக ஜே.ஜே.சில குறிப்புகள். ஒவ்வொரு ஓவியத்தைப் பார்க்கும்போதும் 'ஒரு ஓவியமாக' புரிவது, மைதானத்தின் நடுவில் நின்று பார்க்கும்போது கண்கட்டிக் காட்டில் விட்டதைப் போன்று உணர்கிறோம் - ஆரம்பத்தில். இதோ கீழே கிடக்கும் ஓவியம் ஒவ்வொன்றும் ஒரு சிறகுகள். இரண்டை எடுத்து மாட்டிக்கொண்டு பறக்கவேண்டும் என்று நினைத்தாலே போதுமானது; சிறகுகள் நம்மைத் தூக்கிக்கொண்டு உயரே உயரே பறந்து செல்லும். உயர இருந்து மைதானத்தைப் பார்க்கையில் அவ்வாயிரக்கணக்கான ஓவியத் துணுக்குகள் சேர்ந்து ஒருங்கே பிரம்மாண்டமானதொரு ஓவியமாகத் தெரிகையில் நெஞ்சடைக்கிறது. அவ்வுண்மை மிகவும் சுடுகிறது. அதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலத் தோன்றுகிறது. 'இது மட்டுமல்ல. இன்னும் உயரே உயரே உன் மனத்துள் பறந்து செல். இது போன்ற ஆயிரக்கணக்கான மைதானங்களைக் காண்பாய். அவையும் ஒருங்கே இணைந்து இன்னொரு ஓவியமாக - பிரம்மாண்டமான அதிசயமாக உன் மனத்துள் விரியும்' என்று உள்ளுக்குள் குரல் ஒலிக்கிறது. இன்னும் உயரே பறந்து சென்று பார்க்க ஆசைதான். ஆனாலும் பயமாக இருக்கிறது என்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். ஒரு மைதானத்தைப் பார்த்ததற்கே மூச்சடைக்கிறதென்றால் ஆயிரக்கணக்கான மைதானங்களை ஒருங்கே பார்ப்பதென்றால் உயிரை விட்டுவிடுவேன் போல இருக்கிறது.

அதற்கு உயிரை விட்டுவிட்டு அப்புறம் பார்த்துக் கொள்கிறேனே?

வணக்கம்.

அன்புடன்

சுந்தர்.

நன்றிகள் : "ஜே.ஜே.சில குறிப்புகள்" - சுந்தர ராமசாமி


1 comment:

கானகம் said...

அன்புள்ள சுந்தர்,

இன்று மீண்டும் உங்களின் ஜே ஜே சில குறிப்புகள் பற்றிய உங்கள் எண்ணங்களை முழுதும் படித்தேன். மிக மிக அருமையாக என்ன ஓட்டங்களை எழுத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள். நீங்கள் கொடுத்துள்ள புத்த்தகக் குறிப்புகள் அனைத்தும் அருமையாக இருக்கிறது. மிக நன்றாகத் தேர்வு செய்திருக்கிறீர்கள்.

கொந்தளிக்கும் மனதின் என்ன ஓட்டங்களை சன்னதம் வந்த சாமியாடி குறி சொல்வதுபோல சொல்லி கொந்தளிப்பை குறைத்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். :-)

முன்பு போல நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கிறேன்.

அன்புடன்,

ஜெயக்குமார்