Wednesday, September 15, 2004

சுஜாதா - வலைப்பூ - கற்றதும் பெறாததும்

*** சுஜாதா - வலைப்பூ - கற்றதும் பெறாததும் ***
ஆறிப்போன கஞ்சிதான். இருந்தாலும் கண்ணில் பட்ட தகவலைப் பகிர்ந்து கொள்ளலாமென்ற எண்ணத்தில் இக்குறிப்பு.
Blogger வலைத்தளத்தில் கண்ட தகவல் இது.
***
What's a Blog?
"Blog" is short for Web log, which can be anything from a news site to an online journal. Blogs allow you to instantly publish your thoughts and ideas from anywhere.
People all over the world have blogs. It's a fun and easy way to keep in touch with your friends, post links to interesting webpages, or just record your thoughts.
***
For your information please.
***

Sunday, September 12, 2004

புதுக் கவிதை ** துள்ளித் துள்ளி **

** துள்ளித் துள்ளி **

வில்லாய் வளைந்தெழும்பிய வாலுடன்
விரைவாய்ச் சிறுநீர் கழித்து
வழுக்கும் தரையில் கால்பரப்பி
கருகருவென ஒளிரும் கண்களுடனும்
தொழுவத்திலிருந்து தடுமாறி வெளிவந்து
தெருவில் துள்ளிய கன்றுக் குட்டி

கனத்த மடிகளுடன் உச்சி முகர்ந்து
கன்றினைச் சுத்தமாக்கிய தாய்ப்பசு

அருகில் நெருங்கித் தலையை வருட
நடுங்கும் உடலுடன் இளங்குளம்புகளில்
என் பாதம் ஏறி நின்ற அவ்விளம் கன்று

கால்களுக்கிடையே தலைகொடுத்துத்
தூக்கிடத் துள்ளிய கன்றுக் குட்டி
ம்மாவென ஆமோதித்துக் கத்திப்
பதறும் கன்றினைக் கேலிசெய்த தாய்ப்பசு
தரையில் இறக்கிட தறிகெட்டு ஓடித்
தெருமுனைக்குச் சென்றது கன்று

புதிய வரவினைக் கண்டதும்
உற்சாகத்துடன் குலைத்த நாயை
அதட்டிவிட்டு உள்ளே வந்தேன்
துள்ளித் துள்ளி ஓயட்டும் பின்பு
கட்டிப் போட்டுக் கொள்ளலாமென்று

*

கண்களிலிருந்து கீழ் பாய்கின்றன
வற்றிய ஓடைகளாய் கருங்கோடுகள்
ஆதரவாய் கன்றினை நக்கும் தாய்ப்பசு
ஆனாலும் தொலைந்திட்ட உற்சாகம்

கனத்த மடிகளை வருடியே யாதவன்
கறக்கின்றான் பாலை வழக்கம்போலவே
நீட்டிய முன்கால்களில் தலைசாய்த்து
அமர்ந்து கொண்டு வாலாட்டாது
விழியுருட்டி நோக்கும் நாய்

வைக்கோலைச் சுவைத்திராத அக்கன்று
இப்பொழுதுதன் உடலெங்கும்
வைக்கோல் அடைத்தங்கே நிற்கிறது
அசைவில்லாமல்.


ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி - "அப்பாவியின் கனவு"

*** ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி -அப்பாவியின் கனவு ***

முன்னுரை:

சிறு வயதில் மாஸ்கோ பதிப்பகம் பால் வெண்மைக் காகிதங்களை வாசனை பிடித்துக் கொண்டு நிறைய கதைகள் படித்திருக்கிறேன். அவ்வயதிலிருந்தே ரஷ்ய மொழிபெயர்ப்புக் கதைகள் மீது பெரும் ஈர்ப்பு எனக்கு உண்டு. கதைகளை வாசித்து இன்புறுவது தவிர அதை இலக்கியம், உலக்கியம் என்றோ அவர் இலக்கியவாதி இவர் இலக்கிய வியாதி என்றோ எந்த வகைப் படுத்துதல்களும் இல்லாத வாசிப்பு மட்டும் நோக்கமாய்க் கொண்ட எளிமையான வாசகனாகவே இருந்தேன். இருக்கிறேன். ரஷ்யா என்றாலே கடும் பனிப் பொழிவுக் காலங்களும், ஸ்லெட் வண்டிகளும், பைன் மரங்களும், தோல் ஆடை, தொப்பியணிந்த மனிதர்களும், புசுபுசுவென்ற நாய்களும் பூரிக் கன்னங்களுடன் குழந்தைகளும், கருப்பு வெள்ளை ஓவியப் புகைப்படங்களும் நினைவுக்கு வரும் வகையில் இக்கதைகளின் பாதிப்பு சிறுவயதிலிருந்தே என்னில் உண்டு. தமிழில் வெளிவந்துள்ள தலைப்புகள் நினைவில்லாத பல ரஷ்ய கதைகளைப் படித்திருக்கிறேன். அவற்றை எழுதிய எழுத்தாளர் பெயர் எதுவும் நினைவிலில்லை. ஆனால் கதைகள் நினைவிலிருக்கின்றன. மாறுதலாக எழுத்தாளர் பெயர் நினைவிலிருந்து அவர் எழுத்துகளை நினைவு வைத்துக் கொள்ள முடியாத தவித்ததும் உண்டு. அதில் முதன்மையானவர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி. அவர் ருஷ்ய இலக்கிய உலகின் மாபெரும் எழுத்தாளர் என்று பின்னாளில்தான் தெரிந்துகொண்டேன். அவர் எழுத்துகளை நினைவுறுத்திக் கொள்ள முடியவில்லை என்று சொன்னேன். உண்மைதான். அவரது புத்தகங்களை - ரஷ்யக் கதை என்ற ஒரே காரணத்திற்காகவே - படித்தது மிகச்சிறு வயதில் - பதிமூன்று அல்லது பதினான்கு வயதிருக்கலாம். அவ்வயதுச் சிறுவர்கள் படிக்கும் எழுத்துகள் அவரது எழுத்துகளில்லை என்று இப்போது மறுவாசிப்பின் போது தெரிகிறது. அப்படியே படித்தாலும், அவ்வெழுத்துகளின் முழு வீச்சையும் உணர்ந்து கொண்டிருக்க முடியாது என்றே நான் இன்றும் கருதுகிறேன். தீவிர இலக்கியங்களை குமுதம், விகடன் மாதிரி போகிற போக்கில் படித்துக் கொள்ள என்னால் முடியவில்லை. என்னைப் பொருத்தவரை நான் இவ்வகைப் படைப்புகளைப் படித்து உணர்ந்து கொள்ள மிகவும் மெனக்கெட வேண்டியிருக்கிறது. சடசடவென்று படித்துக் கொண்டு பக்கங்களை என்னால் புரட்டிக் கொண்டு செல்ல முடியவில்லை. மிகுந்த பொறுமையுடன், இடையூறுகெளெதுவும் இன்றி, ஒவ்வொரு வார்த்தையும் படித்து, பலமுறை மறுபடியும் மறுபடியும் படித்து உள்வாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இம்மாதிரியான தீவிர எழுத்துகளில் வரும் ஒரு கதையை படிக்கும் நேரத்தில் ஒரு பத்து ஜனரஞ்சகக் கதைகளை வாசித்துவிடுவேன். இல்லாவிட்டால், விடுமுறைக்காக ஊருக்குச் சென்று மஸ்கட் திரும்பும் போது பெட்டியில் பாதியிடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் பழைய குமுதம், விகடன் புத்தகங்களில் பாதியை படித்து முடித்து விடுவேன் (சமீப காலமாக இம்மாதிரி பழைய இதழ்களை அள்ளி வரும் வினோத பழக்கத்தின் காரணமாக என்னை 'பழைய பேப்பர்க் காரன் வந்துட்டான்யா' என்று ஊரில் கேலி செய்கிறார்கள்). "ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் சிறுகதைகளும் குறுநாவல்களும்" என்ற - இருபது வருடங்களுக்கு முன்பு வாங்கிய - புத்தகம் கண்ணில் பட்டது. 'ஆஹா. பள்ளியில் படிக்கும் போது வாசித்ததாயிற்றே. என்ன படித்தோம் என்று மறந்து விட்டதே" என்று எடுத்து வாசித்ததில் முந்தைய வாசிப்பில் புரியாத பல பரிமாணங்களை விளங்கிக் கொள்ள முடிந்தது. எழுத்திலும் நடையிலும் உள்ள வித்தியாசங்களை இனம் கண்டு கொள்ள முடிந்தது. இந்த வாசிப்பனுபவத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ·ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் சிறுகதைகளையும், குறு நாவல்களையும் குறித்து ஒரு சிறு வரைவுக் கட்டுரை - உங்கள் பார்வைக்கு.
"அப்பாவியின் கனவு"
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல, மேட்ரிக்ஸ் திரைப்படத்தை இப்போது உங்களுக்கு நினைவூட்டிக் கொள்கிறென். தாவிக் குதிக்கையில் அந்தக் காட்சியை உறையச் செய்து, பலப்பல கோணங்களில் காட்டுவார்கள். அந்த ஒரு மைக்ரோ வினாடியில் அந்த இயக்கத்தின் நிலையைக் காட்டுவார்கள். பிரதான பாத்திரத்தோடு அதைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும் பல பாத்திரங்கள், பொருள்கள் என பலவற்றின் இயக்கத்தையும் நிறுத்தி மொத்த உலகத்தையும் அந்த ஒரு மைக்ரோ வினாடி நிறுத்திக் காட்டுவார்கள். நாமும் சற்று கடிகாரத்தை நிறுத்திவிட்டு திரையில் நிலைபெற்றிருக்கும் ஒவ்வொன்றையும் ஆற அமர கவனித்துப் பார்த்து உள் வாங்கிக் கொள்ளலாம். 'அப்பாவியின் கனவு' படிக்கும் போது பல முறை மாட்ரிக்ஸ்ஸில் வரும் உறைந்த காட்சிகளைப் போன்று, உறைந்த காட்சிகளை நிதானமாகப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. 'கவனிப்புத் திறமை'க்குச் சவால் விடும் புற இயக்கங்களின் எண்ணிக்கைக்கு ஈடுகொடுத்து ஒரு எழுத்தாளனானவன் எந்த அளவிற்கு உள்ளும் புறமும் இயக்கங்களைக் கவனித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பதை ஜே.ஜே. சில குறிப்புகள் படித்தபோது விளங்கிக்கொண்டேன். ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்துகளைப் படித்தபோது உறுதிப்படுத்திக் கொண்டேன். இரண்டும் வேறுவிதமான எழுத்துகள் - வேறுவித பின்புலன்களில் எழுதப்பட்டவை. இப்போது 'அப்பாவியின் கனவு'க்கு வருவோம். அப்பாவியின் கனவு ஒரு புனைகதை. என்ன கதை என்று சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் 'இவ்வுலகத்தின் துயரங்களையும், துன்பங்களையும் பார்த்து மனம் வெறுத்த ஒருவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து மேசை மீது தோட்டா நிரப்பிய கைத் துப்பாக்கியைத் தயாராய் வைத்துக்கொண்டு, நாற்காலியில் அமர்ந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதையும், அதற்கு முன்பாக அவன் வாழ்ந்திருக்கும் வாழ்க்கையைப் பற்றியும் நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கையில் உறங்கி, ஒரு கனவு காண்கிறான். அது ஒரு அற்புதக் கனவு. அதில் அவன் இன்னொரு உலகைக் காண்கிறான். துயரங்களில்லாத, துன்பங்களில்லாத மகிழ்ச்சியான உலகு அது. இருங்கள். சொர்க்கத்தைச் சொல்லவில்லை. அதுவும் ஒரு பூமிதான். அதிலும் அவன் இருக்கிறான். இவ்வுலகில் இருப்பது போன்றே அவ்வுலகிலும் மனிதர்களும், விலங்கினங்களும், பறவையினங்களும், செடிகொடிகளும், மலைகளும் பள்ளத்தாககுகளும், கடல்களும், நதிகளும் நிரம்பியுள்ளன. ஆனால் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கும் உலகம் அது. ஒருவருக்கொருவர் அன்பு காட்டிக் கொண்டு ஆதரவாக இருக்கும் உலகம் அது. கவலை என்றால் என்னவென்றே தெரியாத உலகம் அது. அக்கனவு கலைந்து விழிக்கும் அவன் திடுக்கிட்டு, வாழ வேண்டிய, வாழ்ந்து மற்றவர்களிடம் அன்பு காட்ட வேண்டிய அவசியத்தை, அப்படி வாழ்வதன் மூலம், கனவில் கண்ட பொற்காலத்தை இந்த உலகமும் அடைந்து விடும் என்ற நிதர்சனத்தை, தீர்க்க தரிசனத்தை, உணர்ந்து, மேசை மீதிருக்கும் துப்பாக்கியைத் தட்டிவிட்டு, கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு, வாழும் உத்வேகத்துடன் எழுகிறான்'. இதுதான் அப்பாவியின் கனவு என்ற கதை. ஆனால் இதை இப்படிச் சாதாரணமாகக் குறிப்பிட்டுவிடமுடியவில்லை. இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டும்.
கதை முழுதும் தற்கொலை செய்ய முடிவெடுத்த அம்மனிதனின் சிந்தனைகளே வியாபித்திருக்கின்றன.
"இந்தப் பூமியில் வாழ்கின்ற திறமையை இழந்துவிடாமலேயே மனிதர்கள் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும் என்பதை நான் அறிந்திருக்கிறேன். தீமையே மனிதனின் இயற்கையான நிலைமை என்பதை நம்ப முடியாது, அதை நான் நம்ப மாட்டேன்" என்ற வரிகளில் எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வியல் நடைமுறைகள் குறித்த அவரது அதீத நம்பிக்கை பிரதிபலிக்கிறது. தன்மை ஒருமையில் எழுதும்போது இது ஒரு வசதி. புனைக் கதையாகவே இருந்தாலும், முற்றிலும் புனையப் பட்டதாக இல்லாமல், நெடுகிலும், எழுத்தாளனது அனுபவங்களையும், சித்தாந்தங்களையும், நம்பிக்கைகளையும் கதையின் பாத்திரங்கள் மூலமாக வாசகர்களிடம் சேர்ப்பித்து விடுவதோடு அல்லாமல், வாசிப்பவனையும், அதிலும் எழுத்தாளரது அலைவரிசையை ஒத்த அலைவரிசை கொண்டவனாக இருக்கும் பட்சத்தில், அதில் அமிழச் செய்து விடுவது சுலபமாகி விடுகிறது.
ஆரம்பத்தில் ஏகப்பட்ட கழிவிரக்கச் சிந்தனைகளுடன் கதை துவங்குகிறது. "நான் ஒரு அப்பாவி. அவர்கள் இப்பொழுது என்னைப் பைத்தியக்காரன் என்று கூறுகிறார்கள். நான் எப்பொழுதும் போல் அவர்களுக்குக் கோமாளித் தனமாகத் தோன்றாமலிருந்தால் அது எனக்குப் பதவி உயர்வாக இருக்கும் - ஆனால் நான் இனிமேல் அதைப் பொருட்படுத்துவதில்லை - அவர்கள் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தால் கூட இப்பொழுது அவர்கள் எல்லோருமே எனக்கு மிகவும் வேண்டியவர்க்ள் - ஏதோ ஒன்று அப்பொழுது தான் அவர்களை எனக்கு மிகவும் நெருக்கமாகச் செய்கிறது என்பது உண்மையே. நான் அவர்களோடு சேர்ந்து சிரிப்பேன் - என்னைப் பார்த்து அல்ல, அதாவது அவர்களை நான் நேசிப்பதால் - அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நான் மிகவும் வருத்தமடையாதிருந்தால் நானும் சிரிப்பேன். உண்மை என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை, ஆனால் அது எனக்குத் தெரிகிறது. ஓ! உண்மையைத் தெரிந்த ஒரே ஒரு நபராக இருப்பது எவ்வளவு கஷ்டமானது! ஆனால் அவர்கள் இதைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். இல்லை, அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். நான் ஒரு அப்பாவி மாதிரி தோன்றுவது எனக்கு அதிகமான வருத்தத்தைக் கொடுப்பதுண்டு. அப்பாவி மாதிரியல்ல, நான் அப்பாவிதான். நான் எப்பொழுதுமே அப்பாவியாகத்தான் இருந்து வந்திருக்கிறேன், நான் பிறந்த நாளிலிருந்தே அது எனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்"
"நான் எப்படிப்பட்ட அப்பாவி என்பது உலகத்துலுள்ள எல்லாரையும் காட்டிலும் எனக்குத்தான் மிகவும் நன்றாகத் தெரியும் என்பதை அவர்களில் எவரும் அறிந்திருக்கவோ, ஊகித்திருக்கவோ மாட்டார்கள். அவர்களுக்கு இது தெரியாது என்ற உண்மைதான் என்னை மிகவும் அதிகமாகப் புண் படுத்தியது. ஆனால் அதற்கு நானே முற்றிலும் பொறுப்பு. நான் எப்பொழுதுமே மிகவும் ஆணவத்தோடியிருந்தபடியால் இந்த உண்மையை நான் எவரிடத்திலும் ஒத்துக் கொள்வதில்லை. வருடங்கள் உருண்டோடியபோது என்னிடத்தில் ஆணவமும் பெருகியது. நான் ஒரு அப்பாவி என்பதை எவரிடமாவது ஒத்துக் கொள்வதற்கு நான் என்னை அனுமதித்திருந்தால் அந்த இரவிலேயே என் தலையில் சுட்டுக் கொண்டு செத்துப் போயிருப்பேன் என்று நம்புகிறேன்."
தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தவனின் மனத்தில் அலைபாயும் எண்ணங்களை அற்புதமாக எழுதியிருக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. கடலின் கொந்தளிப்பைப் போல கொந்தளித்துக் கொண்டிருக்கும் மனத்தின் சீரற்ற சிந்தனைப் படலங்களை, பல பரிமாணங்களில் சொல்கிறார். ஒவ்வொரு வாக்கியத்தையும் சில முறை இரண்டு தடவை படிக்க நேர்ந்ததற்கும் இதுவே காரணம். வாசித்து வரும் போது நம்முள் கோர்வையாக விரிந்து படரும் புரிந்து கொள்ளலுக்குச் சவாலாக சட் சட்டென்று சிந்தனை மாறுகிறது - கிளைகிளையாகத் தாவிச்செல்லும் குரங்கைப் போல, வழித்தடத்தை, திசையை சட்டென மாற்றிப் பறக்கும் தட்டானைப் போல, பறக்கும் பாதையைத் தொடர்ந்தால் கண் வலிக்கச் செய்யும் வெளவாலின் பறக்கும் தடம் போல. அதைப் பிடித்துக் கொண்டு கூடவே தொங்கிச் செல்வது சவாலே. அவன் கண்ட கனவு சிறிய அளவில் துவங்கிப் பெரிதாக விரிந்து செல்கிறது. கனவுகளில் நனவுகளில் நாம் பயன்படுத்தும் நேர அளவுகோல்கள் பயனற்றவை; அர்த்தமற்றவை என்ற உண்மையை எவ்வளவு சிறப்பாகக் கையாண்டு அவன் கண்ட அந்த பொற்காலம் பற்றிய கனவை தஸ்தயேவ்ஸ்கி எழுதியிருக்கிறார்! கனவுகளில் பல லோகங்களுக்கு அவன் சஞ்சாரம் செய்து அண்டப்பெருவெளியில் பறந்து சென்று அந்த இன்னொரு பூமியை அடைகிறான். அப்பயணத்தை விளக்குகையில் கால நேரங்களுக்கு அப்பாற்பட்டு அது செல்வதை அற்புதமாகச் சொல்லியிருக்கிறார். கனவைப் பற்றிச் சொல்லுமுன் ஒரு முன்னுரையாக, நாம் சாதாரணமாகக் காணும் கனவுகளின் தன்மையைத் தொட்டு, நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறார் தஸ்தயேவ்ஸ்கி.
"கனவுகளில் சில சமயங்களில் நீங்கள் பெரும் உயரத்திலிருந்து கீழே விழுகிறீர்கள் அல்லது கத்தியால் குத்தப்படுகிறீர்கள் அல்லது அடிக்கப்படுகிறீர்கள். ஆனால் நீங்கள் துள்ளிக்குதித்து கட்டில் கம்பின் மீது மோதிக் கொண்டால் தவிர வலியை ஒரு போது உணர்வதில்லை. அப்படி மோதிக்கொள்கின்ற பொழுது நீங்கள் வலியை உணர்வீர்கள். அது உங்களை நிச்சயமாக உறக்கத்திலிருந்து எழுப்பிவிடும்" என்று தொடங்கிவிட்டு பின்பு அவன் கனவு காணத்துவங்குவதை இப்படி விவரிக்கிறார்
"நான் இறந்துவிட்டேன், முற்றிலும் இறந்துவிட்டேன் என்ற எண்ணம் திடீரென்று முதல் தடவையாக எனக்குத் தோன்றியது. சிறிதும் சந்தேகமில்லாதபடி அதை அறிந்தேன். என்னால் பார்க்க முடியவில்லை, அசைய முடியவில்லை; ஆனால் என்னால் உணர முடிந்தது, சிந்திக்க முடிந்தது. சீக்கிரத்திலேயே இதற்கு என்னைச் சரிபடுத்திக் கொண்டேன். வழக்கமாகக் கனவுகளில் நடப்பதைப் போல அந்த உண்மையை மறுக்காமல் ஒத்துக் கொண்டேன்".
பின்பு அந்தப் புதிய உலகிற்குப் பறந்து செல்கிறான் அவன். அங்குப் பாவம் செய்யாத மனிதர்களைச் சந்தித்து அவர்களுடன் சஞ்சரிக்கிறான். சில ஆயிரம் ஆண்டுகள் கழித்து அம்மக்கள் வீழ்ச்சியடைந்தார்கள்! அந்தப் பூமியில் அவன் பாவத்தைப் பரப்பி அதன் விழைவாக, பொய்மையும், சூதும் பெருகி, அவர்கள் சண்டையிட்டுக் கொண்டார்கள். இரத்தம் சிந்தினார்கள். பிரிவுகள் ஏற்பட்டன. அவமானம் என்ற ஒன்றை அறிந்து அதை நற்பண்பாக ஆக்கிக்கொண்டார்கள். கெளரவம் என்று ஒன்றை உருவாக்கிக்கொண்டார்கள். பல மொழிகள் பேசத் துவங்கினார்கள். துயரமடைந்தார்கள். முந்தைய மகிழ்ச்சியான காலகட்டங்கள் எல்லாமே கட்டுக்கதை என்று சொன்னார்கள், அதில் எல்லா நம்பிக்கையையும் இழந்து விட்டார்கள். இப்படி மாறிப்போன அந்த நல்லுலகத்திற்கு அவனே காரணம் என்று நினைத்து துன்பப்பட்டு அவர்களாலும் அவன் துன்பப்பட விரும்புகிறான். அவனை அவர்கள் பைத்தியக்கார விடுதியில் பூட்டிவைப்பதாக அறிவித்ததும் அவன் அந்த நீண்ட கனவிலிருந்து விழித்துக் கொள்கிறான். தற்கொலை எண்ணத்தை உடனடியாகக் கைவிட்டு அவன் வாழ விரும்புகிறான். பாவமறியாத, துன்பங்களறியாத சமூகம் என்பது முன்பு எப்போது ஒரு காலகட்டத்தில் இருந்து பின்பு எல்லாவற்றையும் மனிதர்கள் ஏற்படுத்திக்கொண்டு, பிரிவுகள் ஏற்பட்டு, பல பரிணாம வளர்ச்சிகளைக் கடந்து இப்போதைய நிலையில் இருக்கிறான் என்று சொல்லாமல், மனிதர்கள் ஒத்த மனத்துடன் முயன்றால், முனைந்தால் கனவில் கண்ட நல்லுலகத்தை இவ்வுலகத்திலேயே ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்ற அவரது சித்தாந்தமே 'அப்பாவியின் கனவு'-ஆக விரிகிறது.
***

Tuesday, September 07, 2004

மனதுக்குள் ஒரு பயணம் # 2

மனதுக்குள் ஒரு பயணம் # 2

தடித்த சிந்தனைகளின் வசப்படும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? நாக்கு தடித்து வார்த்தைகள் குழறுவதுபோல், மனம் தடித்த தருணங்கள் உங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருந்திருக்கும். அதென்ன தடித்துப் போன மனம்? ஆமாம். மனம் தடித்துத்தான் போகிறது சில சந்தர்ப்பங்களில். சாலை நிறுத்தத்தில் கையேந்தும் மழலையைப் பாராது புறக்கணித்துச் செல்கையிலும், பளீரிடும் கண்களுடன் நம்மையே குறுகுறுப்பாகப் பார்த்து, காதுகளை அசைத்து, துடிப்பாக வாலாட்டிக் காத்திருக்கும் நோஞ்சான் நாயைப் பார்த்துக்கொண்டே முழு வடையையும் தின்று, டீ குடித்துச் சாவதானமாகச் செல்கையிலும், செருப்பின்றி வயிறொட்டி பலவீனமான ரிக்க்ஷாக் காரனை அதட்டி அவனுடைய பலவீனமான ரிக்ஷா வண்டியில் அமர்ந்து கொண்டு செல்கையிலும், சாலையைக் கடக்கக் காத்துக் கொண்டிருக்கும் குருடரை முந்திக் கொண்டுச் சாலையைக் கடக்கையிலும், நமக்குக் காய்கறி விற்றுவிட்டு, கனமான கூடையை முயன்று, தடுமாறி, தலையில் ஏந்திச் செல்லும் வயதான பெண்மணியை கைகட்டி வேடிக்கை பார்க்கையிலும், ஆத்திரம் கண்ணை மறைக்க, சிறு தவறு செய்துவிட்ட குழந்தையைக் கன்னத்தில் அறைந்து, கனத்த விழிகளுடன் நம்மையே உதடு துடிக்க அது பார்க்கையில், ஆத்திரத்தை நியாயப்படுத்த தொடர்ந்து அதை முறைத்துப் பார்க்கையிலும், கையும் களவுமாகப் பிடிபட்ட தருணங்களில் பொய் சொல்லி சக மனிதனுக்கு அப்பொய் ஏற்படுத்தும் விளைவுகளைச் சற்றும் சிந்திக்காமல் தப்பிப்பதொன்றே குறிக்கோளாகச் செயல்பட்டு, அவன் விழிகளில் தெறிக்கும் உண்மையின் உஷ்ணத்தைச் சந்திக்கத் திராணியின்றி நிலம் பார்க்கையிலும் - இப்படி எத்தனை எத்தனை சந்தர்ப்பங்கள் -மனம் தடித்துத்தான் போய்விடுகிறது - நாம் அறிந்தே. அதன் மென்மையைச் சிறுகச் சிறுகக் கொன்று விடுகிறோம். மனத்தைக் கீழே தள்ளி மிதித்து மிதித்து உணர்வற்றதாக்கச் செய்யும் ஆணவமும், அகங்காரமும் நமக்குள்ளே எக்களித்துச் சிரிப்பதை நமது முகம் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறோம். நம்மீது மண்டும் வெறுப்பை சுண்டுவிரலால் சுட்டி எறிந்துவிட நமக்கு இலகுவாக முடிகிறது.

அவன் எனது நண்பன். நடந்து செல்லும் யானையைச் சுற்றி அதன் அணிகலன்கள் எழுப்பும் ஓசைச் சத்தம் போன்று, அவனை நாங்கள் சுற்றிக் கொண்டு ஓசையெழுப்பிக் கொண்டிருப்போம். ஆனால் கவனம் பெறுவதென்னவோ அவன் தான். நாங்களில்லாவிட்டாலும் அவன் கவனம் பெறுவான் என்பது எங்களுக்குத் தெரிந்தேயிருந்தது. ஆகையால் எங்களால் அவனின்ல்லாமல் ஓசையெழுப்ப முடிந்ததில்லை. நாங்கள் ஓசை எழுப்பினால் ஆரம்பத்தில் கவனம் பெற்றாலும், அவனில்லை என்பதை கவனிப்பாளர்கள் உணர்ந்துகொண்ட அடுத்த வினாடியில் நாங்கள் பெற்ற கவனம் காற்றில் கரைந்துவிடும். இது இன்னும் அபாயம். அடுத்தமுறை நாங்கள் என்னதான் சத்தமாக ஓசையெழுப்பினாலும், அவர்கள் அவனில்லை என்று அனுமானித்துக்கொண்டு ஒரேயடியாக எங்கள் ஓசையைப் புறக்கணித்துவிடுவார்கள். அவர்களின் அப்புறக்கணிப்பு அவனுக்குரியதல்ல என்பதை அவன் உணர்ந்தேயிருப்பதால், அது அவனை வருந்தச் செய்வதில்லை என்பது இன்னும் கூடுதல் சோகம் எங்களுக்கு.

யானையின் உள்ளங்கால்களை நீங்கள் யாராவது வருடிப் பார்த்ததுண்டா? யானையின் மேல் கால்களைப் பரப்பி அமர்கையில் அதன் கூரிய முடிகள் உங்கள் தொடைகளைப் பதம் பார்த்ததுண்டா? அழகிய சிவந்த நாசித் துவாரத்திற்கப்பால் பாதாளமாய் ஓடும் தும்பிக்கையிலிருந்து வினாடிக்கும் குறைவான நேரத்தில் குபீரென்று பீறிட்டு அடிக்கும் தண்ணீரை முகத்தில் வாங்கிக்கொண்டதுண்டா? கால் பந்து அளவிலிருக்கும் சோற்றுருண்டையைக் கீழே விழுந்து விடாமல் கவனமாய் ஏந்தி அதன் செவ்வாய்க்குள் ஊட்டியதுண்டா? அதன் வாய்க்குள் சட்டெனத் தோன்றி மறையும் பெருங் கல்லின் அளவான பற்களைப் பார்த்ததுண்டா?

அதன் சீரற்ற கோடுகள் நிறைந்த தடித்த தோல் மடிப்புகளில் வழி தொலைந்து அலைந்து கொண்டிருக்கும் எறும்பினைப் பார்க்கிறேன். கட்டெறும்பு யானையை மிரண்டு ஓடச்செய்யும் என்பார்கள். இது மெல்லிய, கடிக்காத கருமையான சிற்றெறும்பு.

பூக்கூட்டம் போல ஓடிக்கொண்டிருக்கும் 'பிள்ளையார் எறும்பு'. சாரைசாரையாக ஓடிக்கொண்டிருக்கின்றன. என்னே சுறுசுறுப்பு! நான் அதைக் கூர்ந்து கவனிக்கிறேன். சில எறும்புகளின் முகத்தில் வெண்மை நிறத்தில் துருத்திக்கொண்டிருக்கும் உணவுத் துகள். சீரான, சுறுசுறுப்பான இயக்கத்தை அவை தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றன. என் வீட்டில் வாசலிலிருந்து கிளம்பி நேராக எதிரே இருக்கும் பெருமாள் கோயில் வெளியே பந்தலைத் தாங்கி நிற்கும் அந்த மூங்கிலின் பாதத்தில் சரணடைந்து கொண்டிருக்கின்றன. மாவிலைத் தோரணத்திலும், வாழை மரத்திலும் சாரிசாரியாக எறும்பு வரிசைகள். தெருவில் ஆள் நடமாட்டமில்லை. என் மனதில் இப்போது திடீரென்று பெருங்கவலை குடிகொண்டுவிட்டது. தெருவில் நடமாட்டம் நிகழும்போது இவை மிதிபட்டு, அறைபட்டுச் சாகும். கூட்டம் கூட்டமாக நசுக்கப்படும். தெருவில் கடந்துபோகும், மனிதர்களின், பிராணிகளின், வாகனங்களின் அடியில் நசுங்கிச் சாகும். எறும்பின் ஆயுசு எவ்வளவு நாள்கள் என்று யாரிடமாவது கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். தெரு இன்னும் பரபரப்பாக இயங்கத் தொடங்கவில்லை. சாலையின் குறுக்கே ஓடும் அவற்றின் வழித்தடத்தை எப்படி மாற்றுவது என்று யோசித்தேன். நேரம் கடந்துகொண்டிருந்தது. தெருவில் சென்ற ஒருவனது கால்கள் வரிசையைக் கடந்த போது நான் மூச்சை இறுகப் பிடித்துக் கொண்டேன். அவை எறும்புகளைத் தொடாமல் தாண்டியபோது நிம்மதி பெருமூச்சுவிட்டேன். அடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் தெரு முக்கில் தோன்றிய சைக்கிள் என் வீட்டைத்தாண்டிச் சென்றபோது வரிசையில் சலசலப்பு. நான் மெதுவாக எழுந்து சைக்கிள் சக்கரத்தின் பதிவை கவனித்தேன். சில எறும்புகள் அசைவற்றுப் புதையுண்டிருக்க, சில பாதியுடல்கள் புதைந்திருக்க மீதி உடல்களுடன் அல்லாடிக் கொண்டிருந்தன. இரு புறமும் அலைபாய்ந்தன எறும்புக்கூட்டம். சில வினாடிகள்தான். வரிசை மீண்டும் சேர்ந்து இயக்கம் பெற்றுவிட்டது. திரும்ப வந்து அமர்ந்தேன். இம்முறை கடந்தது ஒரு நான்குசக்கர வாகனம். இப்போது எனக்கு வரிசையே தெரியவில்லை. படுகொலை நிகழ்ந்த மைதானம் போன்ற அமைதி. சற்றே கூர்ந்து பார்க்கையில் கூட்டம் கூட்டமாக உடல்கள். ஆங்காங்கே படுகாயங்களுடன் அசைய இயலாது, ஒலியெழுப்பாது அல்லாடும் எறும்புகள். சக்கரங்களுக்கு மாட்டாது தப்பிப் பிழைத்தவை நகராமல் திகைத்து நிற்கின்றன. அதன் தலைகள் அங்குமிங்கும் தேடியலைய எனக்கு ஆயாசமாக இருந்தது. கையாலாகாத நிலையை எண்ணிச் சினம் எழுந்தது. அடுத்த பத்து நிமிடங்களில் சோகையானதொரு வரிசை உருவாகி மெதுவான இயக்கம் நிகழ நான் கவனத்தைத் திசை திருப்பினேன். இப்படி எத்தனை எத்தனை ஆயிரம் உயிர்கள் சத்தமின்றிப் பிரிகின்றன ஒவ்வொரு நொடியும் என்று நினைத்துப் பார்க்கிறேன். சிந்தனையிலாழ்கிறது என் மனம். நேரம் போனதே தெரியவில்லை. எறும்பு வரிசையைக் கவனித்த அடுத்த வினாடி திண்ணையிலிருந்து எழுந்து வீதிக்குச் சென்று கைகளை இருபுறமும் வீசி, அங்கு போக்குவரத்தைத் தடை செய்ய உரத்து என்னை அலற விடாமல் செய்தது எது என்று கேள்வி எழுப்பிக் கொண்டேன். அதைச் செய்வதால் அவர்கள் கேலி செய்வார்கள் என்ற வெட்கமா? அல்லது எனக்கு எதுவும் பேரிழப்பு நிகழ்ந்திருக்குமா? அந்த எச்சரிக்கையை எழுப்ப எனக்கு அதிக நேரமோ முயற்சியோ வேண்டியிருந்திருக்காது. நூற்றுக்கணக்கில் உயிர் நீத்துவிட்ட எறும்புகளைக் கட்டாயமாகக் காப்பாற்றியிருக்க முடியும். ஏன் செய்யவில்லை என்ற என் கேள்விக்கு பதிலளிக்காமல் அமைதி காக்கிறது என் மனம். இல்லையில்லை. நான் கேட்ட கேள்வியையே அது காதில் வாங்கிக்கொள்ளாமல் தடித்துப் போய் சுரணையற்றிருக்கிறது.

தெருவில் பையன்கள் குதித்து குதித்து விளையாடுகிறார்கள். என் கவனம் எறும்புகளிலிருந்து விலகி அவர்கள் மீது திரும்புகிறது. பையன்கள் குதூகலமாகவும், சுறுசுறுப்பாகவும் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். தெருவில் ஆங்காங்கே புதைந்திருக்கும் சிறு கற்களை அடிப்படையாக வைத்து அவர்கள் விளையாடுகிறார்கள். ஒவ்வொருவர் கையிலும் ஒரு குச்சி. பத்துப் பேர் கொண்ட அந்தக் குழுவில் ஒவ்வொருவனுக்கும் ஒரு முறை வைத்துக்கொண்டு மற்ற ஒன்பது பேரும் தெருவில் ஆங்காங்கே தென்படும் கல்லின் மீது குச்சியை வைத்துப் பரவி நிற்கிறார்கள். சட்டென்று இடம் மாற்றி வேகமாக ஓடி, பிடிக்கப்படும் முன் இன்னொரு கல்லின் மீது குச்சியை ஊன்றிக் கொள்கிறார்கள். அதற்குமுன் பிடிபட்டுவிட்டால், பிடித்தவன் கையில் குச்சியைக் கொடுத்துவிட்டு பிடிபட்டவன் மற்றவர்களைத் துரத்தவேண்டும். விளையாட்டு சூடு பிடித்துவிட்டிருந்தது. யானை வந்து கொண்டிருக்கிறது மணியோசையுடன். பாகன் யானையைக் கண்டுகொள்ளவே இல்லை. அதன் காதில் அங்குசத்தை மாட்டி வைத்துவிட்டு மூன்றாம் வீட்டுப் பண்ணையாரிடம் இறைஞ்சி பேசிக்கொண்டிருந்தான். அவன் முதுகும் யானையைப் போலவே வளைந்திருந்தது. அவன் இன்னும் வளைந்து கைகளைக் குவித்து வணக்கம் சொல்லிக்கொண்டிருக்க, பண்ணையார் பெரும் வயிற்றைச் சிரமப்பட்டுச் சுமந்துகொண்டு அவனை ஏறிட்டும் பார்க்காது எதிரே எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார். அவர் நீலம் கலந்து துவைத்த வேட்டியை அணிந்து மேலே துண்டு மட்டும் போர்த்தியிருந்தார். விரல்களிலும்,கழுத்திலும் தங்கம் மின்ன நெற்றியை திருநீறு ஆக்கிரமித்திருந்தது. பாகன் இப்போது கொஞ்சம் நம்பிக்கை இழந்திருந்தான் போல. திரும்ப எத்தனித்தவன் பண்ணையார் பின்புறம் இருந்து வெளிப்பட்ட அவர் மனைவியைக் கண்டு நின்றான். அப்பெண்மணி கையில் மரக்காலும் அதில் நெல்லும் இருக்க, துண்டை விரித்து நீட்டி அதை வாங்கிக்கொண்டு, இன்னும் குனிந்து பின்னால் நகர்ந்து வெளிவந்தான்.யானை இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தா என்று தெரியவில்லை. அதற்கு அதன் கண்ணில் மொய்த்துக்கொண்டிருந்த ஈக்களையும் கொசுக்களையும் விரட்டுவதே பிரதானமான வேலையாக இருந்தது. இப்போது பையன்களில் சிலர் அதன் பக்கவாட்டிலும் பின்புறமாகவும் வந்து தைரியமில்லாமல் குச்சிகளால் அதைத் தொட்டுத்தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். யானையின் வாலசைவிலும் தும்பிக்கை அசைப்பிலும், தலையின் குலுக்கல்களிலும் அவர்கள் பயந்து சிதறி, திரும்பக் கூடினார்கள். பாகன் அடுத்த வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்தான். அழுத்திக் குத்திய பையனது கையிலிருந்து சட்டென்று யானை குச்சியைப் பிடுங்கிச் சுழற்ற அவன் அதிர்ச்சியின் உச்சத்தில் அலறிக் கீழே விழுந்து புரண்டு முழங்கால்களிலும் கைகளிலும் சிராய்ப்புகளைப் பெற்றுக்கொண்டு எழுந்து தலைதெறிக்க ஓட அவனைத் தொடர்ந்து மற்ற பையன்களும் ஏக இரைச்சலுடன் ஓட, அந்தக் களேபரத்தில் யானை 'ப்ர்' என்று ஒரு முறை பிளிற பாகன் திடுக்கிட்டுத் திரும்பினான். ஆங்காங்கே வீடுகளிலிருந்து தலைகள் வெளியே நீண்டு வேடிக்கை பார்த்தன. அவன் கண்களுக்கு ஓடிக்கொண்டிருந்த பையன்களும், யானையின் தும்பிக்கையில் ஊசலாடிக் கொண்டிருந்த குச்சியும் தென்பட, ஆத்திரமடைந்தான். விடுவிடுவென்று யானையை நெருங்கி, அக்குச்சியைச் சுலபமாக கையில் வாங்கி, அதன் தும்பிக்கையில் கடுமையாக அடித்தான். தும்பிக்கையைச் சுழற்றிக் கொண்டிருந்த யானை, அதன் உள்புறத்தில் குச்சியடி ஒரு முறை பட்டதும், உதறிப் பின்னால் நகர்ந்தது. பாகன் இன்னும் கடுமையாக அதை அடித்து, அங்குசத்தைக் கீழ் நோக்கி இழுத்தான். யானை இயக்கங்களை நிறுத்திச் சிலையாக நிற்க, பாகன் இன்னும் ஆத்திரம் தீராமல் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தான். பின்பு பயணத்தைத் தொடர்ந்து தெருவைக் கடக்கும்வரை பையன்களில் ஒருவரும் அவரவர் வீட்டிலிருந்து வெளியே வராமல் இருக்க பாகனுக்கும் யானைக்கும் காசோ நெல்லோ பழங்களோ பின்பு கிட்டவில்லை. யானையின் உள்ளங்காலைப் போன்று தடித்துப் போய் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த என் மனதை வெறுத்தேன்

வீட்டினுள்ளிருந்து அழைப்புக் குரல் கேட்க, சிந்தனை கலைந்து சட்டென எழுந்து உள்ளே சென்றேன், உள்ளங்கைகளில் ஒட்டிக் கொண்டிருந்த எறும்புகளின் நசுங்கிய உடல்களை ஊதிவிட்டுக்கொண்டு.

என்றாவது யாரிடமாவது இம்மாதிரி மனம் தடித்தத் தருணங்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள தைரியம் இருக்கிறதா எனக்கு என்று என்னை நானே ஒருமுறை, வாழ்நாளில் ஒருமுறையாவது கேட்டுக்கொள்ள வேண்டும் - நம் மனம் தடித்ததாக இல்லாதிருக்கும் ஏதாவதொரு சமயத்தில் - என்று நினைத்துக் கொள்வேன்.

மனதுக்குள் ஒரு பயணம் # 1

மனதுக்குள் ஒரு பயணம் # 1

நடந்து சென்று கொண்டிருக்கிறேன். நல்ல மதியவெயில். என் நெடிய நிழல் காலடியில் ஒளிந்து கொண்டிருப்பதைக் குனிந்து பார்க்கிறேன். நிழலும் காலடியிலிருந்து எட்டி என்னைப் பார்க்கிறது. எங்கும் நிசப்தம். என்னைச் சுற்றி நிகழும் இயக்கங்களின் சத்தங்கள் என் காதுகளில் ஒலிக்கவில்லை. என்னுடைய இச்சிந்தனையை மட்டும் உள்குரலாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நெற்றியில் எண்ணையில் பட்டையிட்டது போன்று வியர்வை. ஒரு துளி மட்டும் விடுவித்துக்கொண்டு நிலத்தில் விழுந்து உலர்ந்து காணாமல் போவதைப் பார்க்கிறேன்.

நிர்மலமான நீல வானம். எதிரே நண்பன். என் மனத்தின் குரல் அவனுக்குக் கேட்கிறதா என்று தெரியவில்லை. நான் அவன் கண்களைக் கூர்ந்து கவனிக்கிறேன். அவன் என் கண்களைச் சந்தித்த வினாடி தலையைக் கவிழ்ந்து கொண்டான். அவனது நிழல் மூலமாக என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது எனக்குத் தெரிகிறது. இப்படி இருளில் நின்று கொண்டு, வெளிச்சத்திலிருப்பவர்களைப் பார்த்துக் கொள்ளும் பழக்கம் என்றிலிருந்து மனிதனுக்கு வந்திருக்கும் என்று யோசிக்கிறேன்.

இவ்வுலகத்திற்கான எனது பங்களிப்பை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. அவை இதோ தெரு ஓரத்தில் அனாதரவாக நிற்கும் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு கவனிப்பாரற்று கிடக்கிறது. இதில் எனக்கு வருத்தமில்லை. நான் குப்பையை எனது பங்களிப்பாகக் கொடுக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். அதை 'குப்பை'யாகப் பார்ப்பது அவர்கள் பார்வையில் உள்ள கோளாறு.

மற்ற நேரங்களில் என் மனதைப் பெருக்கி வெளியே தள்ளும் குப்பைகளை இவர்கள் கோபுரத்தில் வைத்துக்கொண்டு கொண்டாடுவது எனக்கு வினோதமாக, ஆரம்பத்தில் வியப்பளித்து கொண்டிருந்தது. பின்பு இதை நான் பழகிக் கொண்டுவிட்டேன் என்று சொல்வதில் எனக்குள் ஒரு குற்றவுணர்வு இன்னும் இருக்கிறது.

இவர்களுடைய எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்யமுடியாது என்பது தெரியும். எனக்குத் தெரியும் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள முற்படாமல் என்னைத் துரத்துகிறார்கள். அவர்களின் பசிக்கு என்னைத் தின்னச் சொல்வது என்ன் நியாயம் என்று யாரிடம் கேட்பது? நான் தனியனாக இவ்வுலகில் இருக்கும் பட்சத்தில் இம்மனிதர்கள் எவரிடமும் என் மனத்தின் நம்பிக்கைகளையும், சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்வது என்பது சாத்தியமேயில்லை.

என்னைப் போலவே இதோ இந்த நாய் சாலையின் ஓரத்தில் மெதுவாக நடந்து சென்று கொண்டிருக்கிறது. உடலெங்கும் பொட்டுபொட்டாக முடி உதிர்ந்து, விலா எலும்புகள் துருத்திக்கொண்டு, வாயைத் திறந்து நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு, மெல்லிய வால் இன்னும் மெலிந்துபோய் பின்னங் கால்களிடையே விட்டுக்கொண்டு, வளைந்த கால்களுடன் மெதுவாய் நடந்து சென்று கொண்டிருப்பதை கவனிக்கிறேன். அது அதன் நிழலைப் பார்த்துக் கொண்டு செல்வது போல் தோன்றுகிறது. நிழல் அதைச் செலுத்துகிறதா அல்லது அது நிழலைச் செலுத்திக் கொண்டு போகிறதா என்று தெரியவில்லை. அது தலையைச் சற்றுகூட தூக்கி எதிரே உள்ளவற்றைப் பார்க்காமல், ஆயிரமாயிரமாண்டுகள் இச்சாலையில் நடந்து பழகியதுபோல் மெதுவாய் நடந்து போகிறது. மனிதர்கள் சாலைகளில் விரைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் புறப்படுமிடமும் சேருமிடமும் தெரிந்திருக்கிறது. தீர்மானமாய்ச் சென்று கொண்டிருக்கிறார்கள். அன்றாட புறவாழ்க்கை அலைச்சல்களை அலைந்து திரிந்து முடித்துக் கொண்டு தங்குமிடத்திற்கு விரைந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களாக அவர்களுக்குக் கட்டிக்கொண்ட தங்குமிடங்கள். நானும் இந்த நாயும் புறப்படுவது சேருவது என்று ஒன்றுமில்லாமல், திரும்பச் செல்கிறோமா அல்லது போய்க் கொண்டிருக்கிறோமா என்று புரிந்து கொள்ள முடியாமல், இலக்கின்றி, முடிவும் ஆரம்பமும் இன்றி, தங்குமிடங்கள் என்று எந்தத் தற்காலிகப் பெட்டிகளிலும் அடைந்துகொள்ளும் உத்தேசங்களின்றி நடந்துகொண்டிருக்கிறோம்.

எங்கள் சிந்தனைகளின் ஆதாரம் ஒன்றுதான். எங்களுக்கு இந்தப் புற இயக்கங்களில் நாட்டமில்லை. நான் துருத்திக்கொண்டிருக்கும் என் விலா எலும்புகளை வருடிவிட்டுக்கொண்டேன்.

அனுமானங்களில் வாழும் வாழ்க்கை எவ்வளவு ஆபத்தானது என்பது இவர்களுக்குப் புரிந்திருக்கிறதா என்று எனக்குச் சந்தேகமாயிருக்கிறது. நண்பன் என்னைக் கடந்து சென்றுவிட்டான் என்பதை என் முன்னே என்னை முறைத்துக்கொண்டிருந்த நிழல் இல்லாததிலிருந்து உணரமுடிகிறது. இவர்கள் அபாயங்களின் கடைவாயில் எப்போதும் விழுந்து கொண்டிருக்கிறார்கள். அனுமானங்கள் இவர்களை விழுங்கி ஒவ்வொரு கணமும் ஏப்பம் விட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து என்னால் விரக்தியாகச் சிரிக்கத்தான் முடிகிறது. நான் சிரிப்பதைப் பார்த்து இவர்கள் தங்களது அனுமானங்களை இன்னும் விரிவுபடுத்திக்கொண்டு அவற்றுள் இன்னமும் ஆழத்தில் விழுகிறார்கள். அவற்றுள் மூழ்கிக் காணாமலேயே போய் விடுகிறார்கள். அவர்களைத் தேடி வெளியிலெடுப்பது என் வேலையில்லை.

இவர்கள் ஒவ்வொருவரைச் சந்திக்கும்போது இவர்கள் கண்களிலிருந்து விகாரமாய்ப் பிளந்துகொண்டு காத்திருக்கும் அனுமானங்களை நான் புறக்கணித்துப் போவதில் இவர்களுக்கு அதீத சினம். இச்சினத்தின் வெம்மை என்னைத் தீண்டாது என்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள் இன்னும் சினமடைகிறார்கள். உரக்கக் கத்துகிறார்கள். ஆனால் நான் தான் புறச் சத்தங்கள் கேட்பதிலிருந்து எனது செவிகளைத் தப்புவித்து விட்டேனே? இவர்கள் எவ்வளவு உரக்கக் கத்தினாலும் மூடிக்கொண்டிருக்கும் என் செவிகளைத் தாண்டி என்னைச் சேரப்போவதில்லை. இதை நினைக்கையில் என்னையறியாமல் என் உதடுகளில் நெளியும் ஏளனப் புன்னகை அவர்களைச் சுட்டெரிக்கிறது. அவர்களின் அனுமானங்களின் வெம்மையை எனது ஏளனப் புன்னகை எரித்துக் கொன்று விடுகிறது. இதன் காரணமாகவே என் முன்னால் அவர்கள் நிற்பதே இல்லை. எனது நண்பர்கள் உள்பட.

விரல்கள் ஒருபோது ஒரே அளவில் யாருக்கும் அமைந்திருப்பதில்லை என்பதை இவர்கள் உணர மறுக்கிறார்கள். நான் எனது விரல் நகங்களை ஆரம்பத்தில் வெட்டிச் சீராக்கிக்கொண்டிருந்தேன். அதற்காகச் செலவிட்ட நேரம் அதிகம் என்பதை உணர்ந்ததிலிருந்து நகங்களைச் சீந்துவதில்லை. அவை கோபித்துக்கொண்டு வளருகின்றன. வெகுவேகமாக வளர்ந்து என்னைப் பயமுறுத்த முயற்சிக்கின்றன. இம்முயற்சிகளை கீறல்களில் கசியும் இரத்தத்திலிருந்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். நான் இன்னமும் அவற்றைக் கண்டுகொள்வதில்லை. இரத்தம் என்னை பயமுறுத்துவதில்லை. நான் நிறைய கீறல்கள் பட்டாகிவிட்டது. நிறைய இரத்தம் பார்த்தாகிவிட்டது. என் உடலிலிருந்து இரத்தம் முழுவதும் வெளியேறிவிட்டாலும்கூட நான் பயப்படப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். என் சிந்தனைகளுக்கு இரத்தம் தேவையில்லை. கீறல்கள் ஒன்றும் செய்துவிடமுடியாது. கோபித்துக் கொண்டு வளர்ந்த நகங்கள் பயந்தன. அவை என்னிலிருது விலகிச் செல்லச் செல்ல பலவீனமடையத் தொடங்கியதை உணர்ந்தன. அவையே நான் கவனிக்காத பல சந்தர்ப்பங்களில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உடைந்து கொண்டு விழுந்துவிடுகின்றன. என் நகக்கண்களுக்குள் அடங்கி ஒடுங்கி விடுகின்றன. அப்போதாவது என்னிடம் நல்லபெயர் கிட்டும் என்ற நப்பாசையில் அவை இப்படி நடந்து கொள்வதை நான் பரிபூரணமாக உணர்ந்திருக்கிறேன். அதனால்தான் அவற்றின் ஜாலங்களை நான் ஒரு போதும் கண்டுகொள்வதில்லை. அவை இன்னும் சீற்றமடைந்து நகக் கண்களைக் குத்தி இரத்தம் வரச்செய்கின்றன. யாருக்கு வேண்டும் இந்த இரத்தம்?

இரைச்சலுடன் விழுகிறது அருவி. நீரின் ஆவேச நர்த்தனங்கள். சீராக நடனமாடுவது போன்ற ஓசை எழுப்பிக்கொண்டு விழும் அருவியின் தாரைகளை நன்கு கவனித்தீர்களென்றால் அதன் ஒழுங்கீனம் உங்கள் கண்களுக்கு ஒருவேளை புலப்படலாம். ஒழுங்கான ஓசையை எழுப்பி உங்கள் காதுகளை அடைப்பதோடு, அதன் ஒழுங்கற்ற தன்மையை, நீங்கள் கவனிக்கவொட்டாமல் உங்கள் மனதுகளையும் அடைத்துவிடுகிறது இப்பொல்லாத அருவி. நீங்கள் அருவிகளைப் பார்ப்பதே இல்லை அவற்றை தூரத்திலிருந்து பார்த்ததும், ஓசையில் மயங்கி, ஓடிப்போய் சரணாகதி அடைந்துவிடுகிறீர்கள். அருவிகளின் பிரம்மாண்ட வாய்களுக்குள் புகுந்து அடைக்கலம் தேடிக்கொள்ளும் உங்களால் அதன் ஒழுங்கீனத்தை உணரவே முடியாது. நான் அதன் பிரம்மாண்டத்திலும், ஓசையிலும் மயங்கி விழுந்து விடுவதில்லை. தூரத்தில் அதன் அழகு என்னைப் பரவசம் கொள்ளச் செய்தாலும், அதை நெருங்க நெருங்க பரவசம் விலகி, ஒரு ஜாக்கிரதை உணர்வை நான் மனத்துள் நிரப்பிக் கொள்கிறேன். அதை மிகவும் அருகிலும் நெருங்கி விட மாட்டேன். அப்படி ஒருவேளை தவறுதலாக நெருங்கி விட்டேனென்றால் என்னை உள்ளிழுத்து மயக்கிவிடும் என்பதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். வெகுதூரத்திலும் இல்லாமல், அதனிடம் சரணடையும் அருகாமையிலும் இல்லாமல் இந்த இடத்தில் நின்று கொண்டு அதைப் பார்ப்பது எவ்வளவு நன்மை பயத்திருக்கிறது என்பதை நான் உணர்ந்துகொண்டேன். எனது கவனிப்பைத் தாங்கமுடியாமல் அருவி இன்னும் ஓசை எழுப்புகிறது. எம்பித் தெளிக்கும் துளிகளிலிருது அதன் இயலாமையையும் ஆவேசத்தையும் நான் கண்டுகொள்கிறேன். எனது தீவிரப் பார்வையில் அது தடுமாறுகிறது. இந்தத் தடுமாற்றம் அதன் ஒழுங்கீனத்தை இன்னும் அதிகப் படுத்துகிறது. என்னுள் எழும் பரிதாப உணர்வை எதிர்பார்த்தே அது இப்படி அடங்காமல் விழுகிறதோ என்று எண்ணி நான் சுதாரித்துக் கொள்கிறேன். அருவி மீது குற்றமில்லை. அது படர்ந்து விழுந்து கொண்டிருக்கும், யாரும் பார்க்க முடியாத ஒழுங்கற்ற பாறைகள் முழுக் காரணம். இதை நான் சொன்னால் எள்ளி நகையாடுவார்கள். அவர்கள் அருவிகளின் திரைக்குப் பின்னே ஒளிந்து கொண்டு ஓலமிடுகிறார்கள். அவர்களது ஓலத்தினை அருவியின் ஒழுங்கான ஓசை மறைத்துவிடும். ஒழுங்கற்ற பாறைகளுடன் சேர்ந்த ஒழுங்கற்ற இவர்களை மறைத்து ஓசையிடும் இந்த அருவியின் பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது.

அனுமானங்களில் அரித்துக்கொண்டிருக்கும் மனங்களுடன் ஒரு கூட்டமென்றால், எதிர்பார்ப்புகளுடன் எதிர்காலத்தை எதிர்நோக்கிக் கொண்டு, நிகழ்காலத்தை இகழ்ந்து கொண்டிருக்கும் கூட்டம் இன்னொரு பக்கம்.

இறந்த காலத்தில் வாழப்போகும் நான் நிகழ்காலத்தைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், எப்போதோ பிறந்த எதிர்காலத்தை ஏன் பார்க்கவேண்டும்? இதிலிருந்து தெரிகிறதா நான் ஏன் தனியனானேன் என்று?

Monday, September 06, 2004

துபாய்

துபாய்க்குச் செல்லவேண்டுமென்றாலே ஒரே சமயத்தில் சலிப்பும் சந்தோஷமும் சேர்ந்து வரும். சலிப்பு - சாலையில் வாகனக் குவியல்களின் மெதுவான ஊர்வலம். எந்நேரமும் போக்குவரத்து நெருக்கடி என்பது இப்போதெல்லாம் மிகவும் சகஜமாகிவிட்டது. சந்தோஷம் துபாயின் முடிவற்ற அசுர வளர்ச்சி கண்டு ஒவ்வொரு முறையும் பிரமிப்பது. வருடம் முழுக்க எதையாவது கட்டிக்கொண்டே இருக்கிறார்கள். உலகத்தின் உயரமான கட்டிடம், வெளிநாட்டவர்களும் சொத்து வாங்கும் வசதி, சாலைகள், ரயில் போக்குவரத்துத் திட்டம்என்று அவர்களது அடுத்த பத்தாண்டு திட்டங்களைப் பார்த்தால் அதிலுள்ள தொலை நோக்கும் தெளிவும் ஆச்சரியப்பட வைக்கும். புதிதாக குடியிருப்புகள், அதற்குத் தேவையான சாலை, மின்சாரம், தண்ணீர் என்று அனைத்தையும் கச்சிதமாகத் திட்டமிட்டு ஒரே சமயத்தில் பல வேலைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. வீடுகள் விற்றுத் தீர்கின்றன. எங்கிருந்துதான் அவர்களுக்கு பணம் கிடைக்கிறதோ என்று வழக்கம் போலவே யோசித்தேன்.

பர்ஜுமான் ஷாப்பிங் மால்-ஐ அதன் அளவைவிட பன்மடங்கு விரிவாக்கியிருக்கிறார்கள். ஒரு கிலோ மீட்டர் நீளம் இருக்கும் போல. ஜனங்கள் ஷாப்பிங் செய்துகொண்டே இருக்கிறார்கள். பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாகப் பெருகி; ஆடைகள் குறைந்திருப்பது கண்கூடாகத் தெரிகிறது. கிட்டத்தட்ட நூற்றைம்பது நாட்டைச் சேர்ந்த மக்கள் துபாயில் குடியிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. உடை விஷயத்தில் எவ்வித சட்ட திட்டமும் பின்பற்றப்படுவதாகத் தெரியவில்லை. சுதந்திரமாக உடையணிந்து காற்றோட்டமாக இருக்கிறார்கள். அவர்கள் பாணியில் உடையணிகிறார்களா அல்லது அழைப்பு விடுப்பவர்களா என்று இனங்கண்டு கொள்வது மிகவும் கடினம்.

பர்ஜுமானில் சிறிது நேரம் அலைந்து திரிந்துவிட்டு, வழக்கம்போல் அங்கு டாக்ஸி ஓட்டிக்கொண்டிருக்கும் நண்பர் எட்வினை அழைத்து அவருடன் சிறிது தமிழ் விஸிடிக்களைத் தேடி அலைந்தேன். முன்பு தெருக்குத் தெரு பரப்பி வைத்து பகிரங்கமாக விற்றுக் கொண்டிருந்தவர்களைக் காண முடியவில்லை. கெடுபிடி செய்திருக்கிறார்கள் போல. எட்வின் என்னை அழைத்துச் சென்றது முடிதிருத்தும் தொழிலகங்கள்! அங்கு கத்திரிக் கோலுடனும் வாடிக்கையாளருடனும் மும்முரமாக இருந்த அன்பர் வேலையைச் சற்று நிறுத்திவிட்டு, அலமாரியைத் திறந்து சில காகிதங்களைக் கொடுத்து 'எது வேணுமோ டிக் பண்ணிக் கொடுங்க' என்றார். அது ஒரு கையெழுத்துப் பிரதி கேட்டலாக். 'சிவாஜி, எம்ஜியார், ரஜினி, கமல்' என்று வகைப்படுத்தி அவர்களது திரைப்படங்களின் பெயர்கள் வரிசைப் படுத்தப்பட்டிருந்தன. கமல்-இன் வசூல்ராஜாவும் இருந்தது. 'விஸிடின்னா அஞ்சு திர்ஹாம். டிவிடின்னா பத்து. எது வேணுமோ குறிச்சுக் கொடுத்துட்டு, ஒங்க மொபைல் நம்பர் தாங்க. நாளைக்கு ரெடிபண்ணிட்டு கூப்பிடறோம். வந்து வாங்கிக்குங்க' என்றார் அவர். நான் அன்றே கிளம்ப வேண்டியிருந்ததால் மறுநாள் வந்து வாங்கிக் கொள்வது சாத்தியமில்லை; அடுத்தமுறை வந்து பார்க்கிறேன் என்று தெரிவித்துவிட்டுக் கிளம்பினேன். இன்னொரு மு.தி.கடையில் 'மதுரெ-யும், அளகேசனும் இருக்கு வேணுமா?' என்று கேட்டு அதிர்ச்சியளித்தார்கள்.

திருட்டு விஸிடிக்களை ஒழிப்பது சாத்தியமேயில்லை என்று தோன்றுகிறது. இப்போது டிஜிட்டல் சினிமா வரப்போகிறது என்று பேசிக்கொள்கிறார்கள். தொழில் நுட்ப எத்தர்கள் முன்பு எந்த நுட்பமும் பயனளிக்காது என்று தோன்றுகிறது. திரையரங்குகளில் திரையிடும் நேரத்திலேயே அதிகாரப்பூர்வ விஸிடிக்களையும், டிவிடிக்களையும் சகாய விலையில் வெளியிட்டு விடுவது நல்லது என்றே தோன்றுகிறது. தியேட்டருக்குச் சென்று எல்லாராலும் பார்க்கமுடியாது. அதே நேரத்தில் வரிசையில் நிற்பவர்கள் தோள் மீது ஏறிச் சென்று முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்கும் ரசிகர் கூட்டமும் என்றும் இருக்கும். காகிதங்களைக் கத்தரித்து மழை பொழிவதும், பட்டாசு வெடிப்பதும், தீபாராதனை காட்டுவதும், கட்-அவுட், கொடி தோரணங்கள் எல்லாம் திரையரங்குகளில் மட்டுமே சாத்தியம். இரு தரப்பு ரசிகர்களையும் திருப்திப் படுத்துவதே திரையுலகினர் செய்யும் நல்ல காரியமாக இருக்கும். இது திருட்டைத் தடுக்க உதவாது; குறைக்க உதவும் என்பது என் சொந்தக் கருத்து. டிவி சானல்களிலும் திரை விமர்சனம் என்ற பெயரில் முக்கால் படத்தையும் துண்டுதுண்டாகக் காட்டி விடுகிறார்கள். அப்படியிருக்க திருட்டு விஸிடி என்று அழாமல், மரியாதையாக நல்ல விஸிடியையே வெளியிட்டுவிடுவது நல்லது.

கம்ப்யூட்டர் ப்ளாசாவிலும், கலீஜ் ஷாப்பிங் செண்ட்டரிலும் அனைத்தும் கிடைக்கிறது. ஐ-மேட் என்ற கைப்பேசி/கைக்கணினி என்று எல்லாம் சேர்ந்த ஒரு புதிய வஸ்துவைப் பற்றி விசாரித்து விவரங்கள் கேட்டுக் கொண்டிருக்கையில் கடைக்காரர் (மலையாளி என்று சொல்லத் தேவையில்லை), 'எதாவது சினிமா வேணும்னா சொல்லுங்க. ஒரு டிவிடி மூவியை 256 எம்பி இருக்கற ஐமேட்-ல ஓடற மாதிரி மாத்தித் தர்றேன்'என்று திடுக்கிட வைத்தார். 'எப்படி?' என்று கேட்டால் 'எல்லாம் டெக்னாலஜிதான்' என்றுவிட்டுக் கண்ணடித்தார். தொலைக்காட்சிப் பெட்டிகளை ஒழித்து, தட்டையான திரைகளிலேயே டிவியும் பார்த்துக் கொள்கிற மாதிரி (எல்ஸிடி) நிறைய குவித்து வைத்து விற்கிறார்கள். ஐ-மேட் போன்றே, க்யூ-டெக், டங்க்ஸ்டன், ஐ-பேக் என்று கால்குலேட்டர் அளவிற்கு அனைத்தையும் உள்ளடக்கிய எலெக்ட்ரானிக் வஸ்துகள் மலிந்து கிடக்கின்றன. இன்னும் கொஞ்சம் விலை குறையக் காத்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் சிபியூவில் முன்பெல்லாம் ஒரு ·ப்ளாப்பி ட்ரைவ்; ஒரு ஸிடி/டிவிடி ட்ரைவ் மட்டும் இருக்கும். இப்போது சிபியூவில் இடமே இல்லாமல் பத்து பதினைந்து டிவிடி ரைட்டர்களை அடைத்து விற்கிறார்கள். எதாவது ஒரு ட்ரைவில் ஒரு டிவிடியைப் போட்டு மற்ற ரைட்டர்களில் ஒரே சமயத்தில் பத்துப் பிரதிகள் எடுக்கலாம். ஒருபுறம் புதிது புதிதாக டிவிடி ரைட்டர், விஸிடி-ட்டு-டிவிடி கன்வர்ட்டர் என்று தொழில்நுட்ப வசதிகள் பெருகி, டிவிடி ப்ளேயர், டிஸ்க்குளைக் கிலோக் கணக்கில் சல்லிசாக விற்றுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் திருட்டு விஸிடியை ஒழிக்க வேண்டும் என்று கோஷமிட்டும் ஊர்வலம் போயும் உண்ணா விரதமிருந்தும், குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுபவர்களை நினைத்துப் பார்க்கையில் பரிதாபமாக இருக்கிறது.

பிரசன்னாவிடம் தொலைபேசியில் பேசி வழக்கமாகச் சந்திக்கும் கடற்சிப்பி (Sea Shell) ஹோட்டல் முன்பு டாக்ஸியிலிருந்து இறங்கிக்கொண்டு அவர் வந்ததும் அளவளாவிக்கொண்டே பர்-துபாயின் நெருக்கடித் தெருக்களில் நடந்தோம். ப்ரெளசிங் செண்ட்டருக்குச் சென்று மரத்தடி ஆண்டுவிழாக் கொண்டாட்ட நிறைவு நாள் மாலையில் அருளின் அரட்டை அரங்கத்தில் சு.ரா. என்ற பெயரில் அரட்டையடித்து (கணேஷ் கடைசிவரை நான் பிரசன்னா என்று நம்பினார். உஷா முதலில் கண்டுபிடித்துச் சொன்னார்) விட்டு, பின்பு வசந்த பவனுக்கு நடந்தோம்.

நடுவில் பலமுறை ஆசி·ப்-ஐ தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. அவர் வேலையில் மும்முரமாக இருந்திருப்பார் போல.

வசந்த பவனுக்குக் குறுகிய சந்து ஒன்றைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. கடைகளெங்கும் ஓடிக் கொண்டிருக்கும் குளிர்சாதன இயந்திரங்களின் வெப்பம் தெருக்களில் வியாபித்து, ஈரப்பதமும், வெப்பமும் சேர்ந்து வியர்க்கவைத்துக் கொண்டிருந்தது. அச்சந்தில் - எதிரெதிரே இரண்டு நபர்கள் மட்டுமே கடக்குமளவு குறுகிய சந்து - இருளில் மெதுவாய் நடந்து கொண்டிருக்கையில் சற்று தூரத்தில் கீழே யாரோ அமர்ந்திருப்பது புலப்பட்டது. முதலில் இருளில் சரியாகத் தெரியவில்லை. அருகில் நெருங்கியதும் அது பெண் என்று தெரிந்தது. இன்னும் அருகே சென்றதும் அப்பெண் அரைகுறை ஆடையுடன் கீழே குத்துக்காலிட்டு அமர்ந்துகொண்டு ஒரு தெருப்பூனையின் தலையைக் கோதிவிட்டுக் கொண்டிருந்தது தெரிந்தது. அது ஒரு அழுக்கான வெள்ளைப் பூனை. முக அமைப்பை வைத்து அவள் ஒரு ·பிலிப்பினோவாக இருக்கலாம் என்று நினைத்தேன். அந்தத் தெருவின் அழுக்கிற்கும், இருளிற்கும், அந்நேரத்திற்கும், அந்த அழகான பெண் பொருத்தமற்று இருந்தாள். அவள் அங்கிருக்க எந்த முகாந்திரமும் இல்லை. துபாய் எங்கும் நிறைந்திருக்கும் விலைமாதுகளில் அவளும் ஒருவளாய் இருக்கலாம். வாடிக்கையாளர்கள் யாராவது அழைப்பார்களா என்று எதிர்பார்த்து அங்கு இருக்கலாம். சமூகத்தின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையொட்டி, பல தரப்பட்ட விலைமாதுகள் எங்கும் மலிந்து கிடக்கின்றனர் என்று எட்வின் ஒருமுறை சொல்லியிருக்கிறார். அப்பெண் கடந்து போய்க் கொண்டிருந்தவர்கள் யாரையும் ஏறிட்டும் பார்க்கவில்லை - அவளை எல்லோரும் பார்க்கிறார்கள் என்பதை நிச்சயமாய் அவள் உணர்ந்திருந்தாள். பூனையும் அவளுடைய வருடலில் சுகமாய் அரைக்கண் மூடி தலையைச் சாய்த்துக் காட்டிக்கொண்டிருந்தது. அவள் மனதில் என்ன எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும் என்று கற்பனை செய்ய முனைந்தேன். அப்பெண்ணின் முகத்தில் உணர்ச்சிகளெதுவும் தென்படவில்லை. பூனையையே பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தத் தருணத்தில் அவளும் அப்பூனையும் மட்டுமே அவள் உலகமாய் இருந்திருக்க வேண்டும். இருவரும் அனாதைகள். அவளின் அவ்வருடலில் அப்பூனை கிறங்கிக் கொண்டு அமர்ந்திருந்தது. அப்பூனையின் ஆமோதிப்பே அவளுக்கும் ஒரு வடிகாலாக, ஒருவித ஆதரவாக இருந்திருக்க வேண்டும். அதீத முகப்பூச்சுடன், உதட்டுச் சாயத்துடன், தெருக்களென்றும் அலைந்துகொண்டு கண்களால் அழைப்புவிட்டு உயர் வகைக் கார்களில் தொற்றிக்கொண்டு செல்லும் பெண்களின் மத்தியில் இப்படி இருளில் ஒரு அழுக்குச் சந்தின் தரையில் அமர்ந்து கொண்டிருந்த அப்பெண்ணைப் பார்க்க மனம் வல்லித்தது. பிரசன்னாவுடன் பேசிக்கொண்டு, அவளையும் கவனித்துக்கொண்டே சற்றே ஒதுங்கி அவளைக் கடக்கையில் ஒரு கணம் கையை நீட்டி அவளின் கூந்தலைக் கோதிவிடத் தோன்றியது. நின்று அவளைப் பற்றி விசாரிக்கவேண்டும் என்று தோன்றியது. இவையனைத்தும் நடந்தது ஒரு சில வினாடிகளே. மனம் அங்கேயே நிற்க, தொடர்ந்து நடந்து வசந்த பவனில் இரவு உணவைச் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் பின் என் இருப்பிடத்திற்குச் சென்றேன்.

மறுநாள் காலையில் துபாயிலிருந்து கிளம்பினேன். மேலெழுந்த விமானத்தின் சன்னல் வழியே தூசுப் படலம் மூடி ஆங்காங்கே தலைநீட்டிக் கொண்டிருந்த காங்க்ரீட் கட்டிடங்கள் நிறைந்திருக்கும் துபாய் நகரத்தைப் பார்த்துவிட்டுக் கண்மூடி இருக்கையில் சாய்கையில், முந்தைய இரவு பார்த்த அப்பெண்ணின் அந்த உணர்ச்சியற்ற முகமும் அரைக்கண் மூடிய பூனையின் முகமும் நீண்ட நேரம் மனதில் நிழலாடின.