Wednesday, March 16, 2005

ஸீல்

எங்கும் பனிக்குவியல்; நீர் உறைந்து பனிக்கட்டியாக இருக்கிறது. ஆங்காங்கே பனித்தரையின் பிளவுகளில் நீர் தெரிகிறது. கண்களைக் கூசச் செய்யும் வெண்மையோ வெண்மை.

அதன் முகம் அச்சாக நாய்க்குட்டியையும் கரடியையும் கலந்த கலவைபோல, குறுகுறுவென கருத்த விழிகளுடன் கொள்ளை அழகாக இருக்கிறது. உடல் பெரிய மீன் போலப் பருத்து, பட்டையான பெரிய செதிள்கள் போன்ற பின்கால்கள் பெயருக்கு தேய்த்துக்கொண்டு வர, முன் கால்களால் நெம்பி நெம்பி முன்னேறுகிறது அந்தக் கருப்புவெள்ளை ஸீல். பசுவைவிட சாதுவாக இருப்பது போன்ற தோற்றம். வெண்பனிக்குவியலில் கருப்பு ஸீல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அலைந்து கொண்டிருக்கின்றன.

கனத்த ஆடைகளால் தலையிலிருந்து கால்வரை மூடி, பூட்ஸ¤களணிந்த அந்த மனிதன் மெதுவாக நடந்து ஒரு ஸீலை நெருங்க அது சமர்த்தாய்த் தலையைத் தூக்கிப் பார்க்கிறது. அவன் கையில் நீண்ட வலுவான தடியொன்று முனையில் துருத்திக்கொண்டிருக்கும் கூரான கம்பியுடன். கைகளை உயர்த்தி அவனைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஸீலின் தலையில் தடியை வலுவாக இறக்க 'ம்க்'கென்ற ஒலியுடன் தரையை இடித்து மறுபடியும் முகத்தை உயர்த்த முயற்சிக்கிறது ஸீல். இம்முறை இன்னொரு வலுவான அடி. தலை தரையில் படர, மெதுவாக சிவப்பு ரத்தம் வெண்பனிக்கட்டித் தரையில் பரவுகிறது. மேலும் சில அடிகள். ஸீல் அசைந்து அடங்க அதைச்சுற்றிச் சிவப்புக் குட்டை.

அவன் சில அடி தூரத்தில் ஊர்ந்துகொண்டிருக்கும் அடுத்த ஸீலை நோக்கி நடக்கிறான்.
Image hosted by TinyPic.com
மேற்குறிப்பிடப்பட்ட 'படுகொலை'யைத் தொலைக்காட்சியில் பார்க்க நேரிட்டபோது அந்தச் சில நொடிகள் இயக்கம் ஸ்தம்பித்து அதீத அதிர்ச்சியுடனும், வேதனையுடனும் நொறுங்கிப்போனேன்.

இப்படிக் கொல்லப்படும் ஸீல்கள் ஒன்றல்ல இரண்டல்ல - ஆயிரக்கணக்கில் - ஒவ்வொரு வருடமும் - அவற்றில் 95% ஸீல்களின் வயது மூன்று மாதங்களுக்கும் குறைவாம்.

அந்த ஸீலின் முகம் தோன்றி இறைஞ்சுகிறது. உறங்க இயலவில்லை.

சுந்தர்

3 comments:

வானம்பாடி said...

எதற்காக இந்தக் கொலைகள்? அந்த சீல்களின் தோலுக்கா, இறைச்சிக்கா அல்லது இரண்டிற்குமா?

துளசி கோபால் said...

படிச்சிட்டு மனசுக்கு 'பேஜாராப்' போச்சு!

இங்கே எங்க ஊருலே ஒரு 'ஸீல் காலனி'யே இருக்கு!
யாரும் அதுங்களை ஒண்ணும் செய்யரதில்லை!
பாவம்!! அதுங்க இங்கேவந்து பிறக்கக்கூடாதா?

மனவருத்தத்துடன்,
துளசி.

Sundar Padmanaban said...

இரண்டிற்கும்தான் சுதர்சன். அதிலும் அரைகுறை உயிருடன் இருக்கும்போதே தோலை உரித்துவிடுவார்களாம்.

துளசி. கனடாவில் இதற்கு அரசாங்கமே மானியமளிக்கிறதாம்! :((

ஸீல் என்றில்லை. எந்த உயிரையும் - எறும்பாக இருந்தாலும் - இப்படி ஈவிரக்கமின்றிக் கொல்வது கொடூரம் - மனிதனின் ஜீனில் தொடர்ந்துவரும் வேட்டையாடும், காட்டுமிராண்டித்தனம் என்று நினைக்கிறேன் - கொல்வதில் அவனடையும் குரூர திருப்தி.

அந்தக்கால பெரும் பங்களாக்களில் சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் காட்டெருமைத் தலை, யானையின் தந்தங்கள், சிறுத்தை, புலி - வேட்டையாடுதல் ஆதிமனிதனிலிருந்து இன்றுவரை தொடர்கிறது.

கிராமங்களில் பன்றிகளைக் கொடூரமான முறையில் ஆண்மை நீக்கம் செய்வார்கள். நாய்களுக்கும் தான்.

ஸீல்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கொண்டாலும், இப்படிக் குரூரமாகக் கொல்லவேண்டியதில்லை. தற்கால மருத்துவ, விஞ்ஞான வசதிகளைக் கொண்டு கொல்லுவதையும் அதிக ஹிம்சையில்லாமல் செய்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது.

சுந்தர்