Saturday, March 19, 2005

***'அ' ***

***'அ' ***

முதல் நாள் பள்ளிக்குச் செல்கையில் தாத்தாதான் கூட வந்தார். புதிய சிலேட்டும் புத்தம் புதிய குச்சியும் (இது பலப்பம் என்றும் அழைக்கப் படுகிறது என்று பின்னாளில் தெரிந்துகொண்டேன். ஆனால் எங்கள் ஊரில் குச்சிதான்) துவைத்த ஆடையும் அணிந்து கொண்டு தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு சற்றே நிச்சயமில்லாமல் வகுப்பறை வாசலில் நின்றது பசுமையாக நினைவிருக்கிறது. வகுப்பறைக்கு வாசல் என்று எதுவும் தனியாகக் கிடையாது. பள்ளியின் பிரதான சுற்றுச் சுவரைத் தாண்டினால் நீளமான சிமிண்ட் கூரை வேயப்பட்ட, இடப்புறம், வலப்புறம் மற்றும் பின்புறங்களில் மட்டும் சுவர்கள் இருக்கும் ஒரு கட்டிடத்துக்குள் `தட்டி'கள் போடப்பட்டு வகுப்பறைகள் பிரிக்கப் பட்டிருந்த ஆரம்பப் பள்ளி அது. ஆகவே வகுப்பறை முழுவதையும் பார்த்துக்கொண்டே உள்ளே நுழையலாம்.

நல்ல நேரம் பார்த்துவிட்டு பத்து மணிக்கு மேல் சென்றதால், பள்ளி ஏற்கெனவே இரைச்சலாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆசிரியர் தாத்தாவைப் பார்த்து `நம்ம பேரனா?' என்று கேட்டுவிட்டு `நாளைக்குக் காலைல ஒம்பது மணிக்கு வந்திரணும், சரியா?' என்று என்னிடம் கேட்டார். அவர் முகமும் பெயரும் ஞாபகத்திலில்லை. தாத்தா ஊரில் மிகப் பிரபலம். எனக்கு அவர் பெயரைத் தான் வைத்திருக்கிறார்கள்.

நனைந்த கோழிக்குஞ்சு போல அமர்ந்த ஐந்தாவது நிமிடத்தில் தொடர்ச்சியான மணி ஒலிக்க (இடைவேளையாம்), அனைத்துச் சிறுவர்களும், சிறுமிகளும் எழுந்து `ஒண்ணுக்குத் தொண்ணி விட்டாச்சு ஊரையெல்லாம் சுத்தியாச்சு.....ஒண்ணுக்குத் தொண்ணி......' என்று இடைவிடாது இரைச்சலாகப் பாடிக்கொண்டே சிதறி பள்ளிக்கு வெளியே ஓடிவிட, நான் மணி ஒலித்த காரணமும், பாடல்களின் வரிகளும் புரியாமல் வகுப்புத் தரையில் அமர்ந்திருந்தேன். பத்து நிமிடம் கழித்து மறுபடியும் மணி ஒலித்ததும் அனைவரும் `கம்பாக'த் திரும்பி வந்து அமர்ந்தார்கள். எனக்கு முன்பாக மஞ்சள் நிறத்தில் பூப்போட்ட சட்டை அணிந்திருந்த சிறுவனைக் காணாமல் ஆசிரியர் `எங்கடா?' என்று கேட்க, `பாண்டி வீட்டுக்குப் போய்ட்டான் சார்' என்ற பதில் இன்னொரு சிறுவனிடமிருந்து.

பாண்டி வீடு பள்ளிக்கு அடுத்துதான் இருந்தது என்று தெரிந்து கொண்டேன். பின்புறம் இருந்து `சார் இவனைக் கட்டிப் போட்ருங்க' என்று குரல் வந்து திரும்பிப் பார்த்தால் கலங்கிய கண்களுடன் பாண்டியும் அவன் கழுத்தைப் பிடித்துக் கொண்டு, மேல் சட்டை இல்லாத தோளில் துண்டுடன் அவன் அப்பாவும். பாண்டி சத்தமில்லாமல் வந்து உட்கார்ந்து கொண்டான்.
ஆசிரியர் கறுப்புப் பலகையில் பெரியதாக `அ' வை எழுதி எங்களையும் எழுதச் சொல்ல, நான் ஏற்கெனவே எழுதிப் பழகியிருந்ததால் சுலபமாக எழுதிவிட்டு அவர் கவனத்துக்காக காத்துக்கொண்டிருந்தேன். கையில் ஒன்றரையடி நீளமுள்ள சிறிய குச்சியுடன் (ஆனால் அதன் கீர்த்தி பெரியது), ஒவ்வொரு வரிசை சிலேட்டுக்களையும் புரட்டிப் பார்த்துக்கொண்டே வந்தார். என் பக்கம் அமர்ந்திருந்த கண்ணன் எழுதியிருந்ததை எட்டிப் பார்த்ததும் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது. மண்புழுவை வரைந்தது போல் ஏதோ எழுதியிருந்தான். அதைப் பார்த்ததும் ஆசிரியர் புருவம் (மற்றும் குச்சியை) உயர்த்தி `என்னடா' என்று கேட்க, கண்ணன் அவசரமாக `புளிச்'சென்று மண்புழுவின் மேல் எச்சில் துப்பி அழிக்கத் துவங்கி, முதுகில் பொளேரென்று அறை வாங்கினான். எனக்கு நாக்கு மேலெண்ணத்தில் ஒட்டிக்கொண்டு விட, சந்தேகத்துடன் கறுப்புப் பலகையில் எழுதியிருந்ததையும் என் சிலேட்டில் எழுதியிருந்ததையும் மறுபடி ஒருமுறை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டேன். என் முறை வந்ததும் ஆசிரியர் என் சிலேட்டை வாங்கிப் பார்க்க நான் அவர் முகத்தை பயத்துடன் படித்துக் கொண்டிருந்தேன். அவர் ஒன்றும் சொல்லாமல் சிலேட்டை எடுத்துக் கொண்டு அவரிடத்திற்குத் திரும்பிச் சென்று அதை அனைவருக்கும் உயர்த்திப் பிடித்துக் காண்பித்து `இங்க பாருங்கப்பா இப்படி எழுதணும்' என்று முறைத்துக் கொண்டே சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.

சற்று நேரத்தில் மறுபடி நீளமாக மணி அடிக்க, பொன்னு சாமி வந்து `சார்.. இன்னிக்கு மொத நாளுங்கறதால, அரை நாள் லீவு விடச் சொல்லி எட்மாஸ்டர் ஐயா சொல்லிட்டாருங்க'என்று சொல்ல, அனைவரும் சந்தோஷமாகப் பறந்தோடிப் போனோம்.

நான் அன்று இரவு சிலேட்டின் `அ' அருகில் படுத்துக்கொண்டுத் தூங்கினேன். மறுநாள் `1' எழுதுவதற்காக `அ'வை அழிக்க வேண்டிவந்த போது சோகமாக இருந்தது.

மதிய உணவு இடைவேளையில் பள்ளிக்கு வெளியே வியாபாரம் சூடு பிடிக்கும். எனக்கு பள்ளிக்கூட வாசலில் பாட்டி விற்கும் எலந்த வடை, முறுக்கு, கொடிக்காப்புளி, ஆகியவற்றை ஒருநாளாவது தின்ன வேண்டும் என்று அளவிலாத ஆசை இருந்தது. பள்ளிக்கு முன்பாக ஒருவன் உயர்ந்த மூங்கில் கம்பின் உச்சியில் பொம்மை ஒன்று பெரிய கண்கள், சிரித்த வாய், பளபளக்கும் ஆடைகள் மற்றும் இரண்டு கைகளிலும் `ஜிஞ்சா' மூடிகளுடன் பொருத்தப்பட்டு, பொம்மையின் இடுப்புக் கீழே மூன்று நிறங்களில் (பச்சை, மஞ்சள் மற்றும் சிகப்பு என்று நினைக்கிறேன்) கோடுகள் போட்ட ஜவ்வு போன்ற மிட்டாயைச் சுற்றி வைத்து விற்றுக் கொண்டிருப்பான். கேலிச் சித்திரங்களில் வரையப்படும் பேய் போல, கால்களில்லாமல், மிட்டாயின் வால் உருட்டப்பட்டு மூங்கில் கம்பில் ஒட்டிக்கொண்டிருக்கும். பத்து காசு கொடுக்கும் சிறுவர்களுக்கு மிட்டாய்க் காரன் மிட்டாயின் வாலை இழுத்துப் பிய்த்து மின்னல் வேகத்தில் கைக்கடிகாரம் செய்து கட்டிவிட்டு, `கொசுறு'வை கன்னத்தில் ஒட்டி விடுவான். சிறுவர்களின் முகத்தில் சூரியன் பிரகாசிக்கும். மிட்டாய்க்காரன் பேசவே மாட்டான். பொம்மை மட்டும் `ஜிங் ஜிங்'கென்று தட்டிக்கொண்டே இருக்கும். வாலைப் பிய்க்கும் போது மட்டும் தட்டுவதை நிறுத்திவிடும். இந்த ரகசியத்தை அவன் முங்கிலின் கீழ் முனையில் நீட்டிக்கொண்டிருந்த கம்பி வளையத்தை தன் கால் கட்டை விரலால் இழுத்து இழுத்து விடுவதைப் பார்த்துக் கண்டுபிடித்து விட்டேன். வளையத்தை இழுக்கும் போது `ஜிங்'.

பள்ளியில் முக்கால் வாசிப் பேர் சிலேட்டும் அலுமினியத் தட்டுக்களுடன் தான் வருவார்கள். எல்லாரும் மதியம் பெரிய பாத்திரங்களில் சமைக்கப்பட்ட புழுங்கலரிசிச் சோறும் பருப்பையும் வரிசையில் நின்று வாங்கிச் சாப்பிட என் நாக்கில் எச்சில் ஊறும். மேல்பத்தியில் எழுதப்பட்டிருந்த தின்பண்டங்கள் அனைத்தும் என் வீட்டவர்களால் தடைசெய்யப் பட்டவை. மதிய உணவு எனக்குக் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். பாட்டியிடம் கேட்டபோது `நாமெல்லாம் யாரு.. அந்த சாதம் சாப்பிடப்படாது' என்று சொல்லி விட்டார்கள். புழுங்கல் சோறின் மணமும் அதன் பெரிய அளவும் என்னை ஈர்த்துக் கொண்டே இருந்தன. ஆனால் வத்திராயிருப்பில் இருந்த வரை அதைச் சாப்பிடும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை.

மதுரையில் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்ததும் என் உற்ற தோழர்களான ராஜாங்கம் மற்றும் சுப்புணியின் வீட்டில் தான் பெரும்பாலும் தவம் கிடப்பேன் - புழுங்கல் சோறுக்காக. வத்திராயிருப்பில் எங்கே இருந்தாலும் கண்டுபிடித்து விடுவார்கள். தாத்தாவை அனைவருக்கும் தெரியும் என்பதால் எங்கேயும் ரகசியமாகச் செல்ல முடியாது. கிராமங்களில் எல்லோரையும் எல்லோருக்கும் தனிப்பட்ட முறையில் தெரியும் - அல்லவா? ஆனால் மதுரை பெரிய ஊர். அடுத்தத் தெருவில் இருப்பவர்கள் கூட யாரென்று தெரியாது. இன்னும் பெரிய ஊர்களில் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் கூட யாரென்று தெரியாமலிருப்பார்கள் என்று பின்பு தெரிந்து கொண்டேன். இன்னும் கொஞ்ச நாளில், நம் குடும்பத்திலேயே யார் இருக்கிறோம் யார் இல்லை என்று தெரிந்து கொள்ளாமல் சோபாவில் உடலைப் புதைத்துக்கொண்டு கையில் தொலை இயக்கியுடனும், அரைக்கண்களுடனும் சாட்டிலைட் சானல்களில் முழுவதும் மூழ்கி விடுவோம் என்று நினைக்கிறேன். நினைக்கையில் பயமாக இருக்கிறது.

கல்லூரி சேர்ந்ததும் வருடத்திற்கு ஓரிரு நாள் வத்திராயிருப்புக்கு வருவதுண்டு. அப்போதெல்லாம் தைரியமாக எலந்த வடையும், கொடிக்காப் புளியும் வாங்கித் தின்றபோது வீட்டில் யாரும் எதுவும் சொல்லவில்லை.
மதுரையில் அம்மாவழி உறவினர்கள் எல்லோரும் இருக்கிறார்கள். வத்திராயிருப்பிலிருந்து அடிக்கடி மதுரைக்கு வருவேன் அப்பாவுடன். மதுரைக்கல்லூரி மேம்பாலம் தாண்டியதும் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தை ஒட்டியவாறு மத்திய பேருந்து நிலையம் (பின்பு பெரியார் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டது). அங்கே கடைசி சில வரிசைகளில் நீண்ட தூரப் பேருந்துகளும் (மொபசல்) முதல் சில வரிசைகளில் அலுமினிய நிறத்தில் நகரப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டிருக்கும். பேருந்து வெளியேறும் வாசலில் தான் பெரும்பாலான பயணிகள் நின்று கொண்டிருப்பார்கள் (எந்த பேருந்து முதலில் கிளம்பும் என்பது தெரியாததால்). ஆதலால் எல்லாப் பேருந்துகளும் நிலையத்தை விட்டு வெளியேறும் முன்பாக ஒரு சில நிமிடங்கள் அங்கே நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டுவிட்டுக் கிளம்பும். அங்கே இனிப்புக் கடைகளும் கே.ஏ.ஏஸ். சேகரின் பரிசுச் சீட்டுக் கடைகளும் நிறைந்திருக்கும். வரிசையாக பரிசுச் சீட்டுக்கள் அட்டையில் அடுக்கி மஞ்சள் பல்பின் ஒளியில் வைக்கப் பட்டிருக்கும் (அவ்வளவு பெரிய மஞ்சள் பல்பை அங்கே தான் முதன் முதலில் பார்த்தேன்). ஒலிபெருக்கியில்அனைவரையும் கோடீஸ்வரர்களாக்க இடைவிடாது அழைத்துக் கொண்டே இருப்பார்கள்.

நான் மதுரையில் சிதறியிருக்கும் அனைத்து உறவினர்களின் இல்லங்களுக்கு நடந்தேதான் செல்வேன். தனியாக. எனக்கு மீனாட்சியம்மன் கோயிலின் கோபுரங்கள் தான் திசைகாட்டிகள். சிம்மக்கல்லின் அந்தப் பக்கம் வைகையாற்றின் கரையில் இருந்த ஆதிமூலம்பிள்ளை அக்ரஹாரத்தில் என் பெரியப்பா வீடு இருக்கிறது. அதற்கும் ஜெய்ஹிந்த்புரத்திலிருந்த என் பாட்டி (அம்மாவின் அம்மா) வீட்டிற்கும் மீனாட்சியம்மன் கோயில் வழியாக நடந்தே செல்வேன். இப்போது கோபுரங்களை மறைத்து நிறைய கட்டிடங்கள் வந்து விட்டன.

என் சித்தப்பா வடக்கு கோபுரத்தை நோக்கியிருக்கும் ஒரு குறுகிய சந்திலிருந்த ஒரு `பேச்சிலர்' அறையில் நிறைய வருடங்கள் தங்கியிருந்தார். அவர் கதைப் புத்தகத்திற்கும் தினசரிக் காலண்டரின் அட்டைக்கும் ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்தார். அவர் அறையில் அடுக்கடுக்காக படக் கதைப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு முறையும் குறைந்தது பத்து புத்தகங்களாவது தருவார். அனைத்து காமிக்ஸ் புத்தகங்களையும் படித்துக் கொண்டேயிருப்போம் நானும் என் அண்ணனும். படிக்கும் ஆர்வம் வளர்ந்தது என் சித்தப்பாவால் தான். எங்காவது பழைய தேதியிட்ட காமிக்ஸ் அட்டைப் படங்களில் `krishna' என்ற கையெழுத்தைப் பார்த்தீர்களானால் அது என் சித்தப்பா தான். அவர் நான்கு வருடங்களுக்கு முன்பு இறந்து போனார் சர்க்கரை வியாதியில்.

அனைத்துக் காமிக்ஸகளும் அதன் கதாநாயகன்களும் எங்களால் மிக விரும்பப்பட்ட அம்சங்கள். அதிலும் மந்திரவாதி மாண்ட்ரேக்கின் ஜாலங்களும், இரும்புக் கை மாயாவியின் சாகசங்களும், வேதாளத்தின் வெள்ளைக் குதிரையும், நாயும், மனைவி டயானாவும் அந்த பிக்மி குள்ளர்களும், மண்டையோட்டு வடிவ குகையும் எப்போதும் நினைவில் நிற்பவை.

குண்டான இளவரசரை வேதாளம் காட்டுக்குக் கடத்திக்கொண்டு போய் பெண்டைக் கழட்டி, தினமும் `இன்னும் பத்தே மைல்தான்' என்று ஜாகிங் ஓடச் செய்து, ஒருமாதம் கழித்து இளவரசன் தன் இளைத்துப் போன உடலை ஓடைத் தண்ணீரில் பார்த்து அசந்து போய் வேதாளத்திற்கு நன்றி சொல்லும் காட்சிகள் நினைவிலிருந்து அகலவில்லை.

வேதாளத்திற்கும் டயானாவிற்கும் பிறக்கும் வேதாளக் குட்டிக் குழந்தைகள் அவர் இரு கைகளிலும் அணைத்து நிற்கும் காட்சியும் தான். குழந்தைகளும் அப்பாவைப் போலவே ஆடையணிந்திருக்கும்!

ஒரு கதையில் மாண்ட்ரேக் அவரது சகோதரரின் மந்திர சக்தியை, சகோதரர் அநியாயங்களுக்கு அதை பயன்படுத்தியதால், பறித்துக்கொள்ள, சகோதரர் தனிமையில் அமர்ந்து கொண்டு கண்ணாடிக் குவளையைப் பார்த்து `குவளையே! உடைந்து போ' என்று சொல்ல, குவளை உடையாமல் அப்படியே இருக்கவும், சக்தியனைத்தும் போய்விட்டதை உணர்ந்து வெதும்பும் காட்சிகளெல்லாம் இன்னும் கண்ணில் நிற்கின்றன.

நானும் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் வீட்டில் கண்ணில் படும் சாமான்களையெல்லாம் `உடைந்து போ, நெளிந்து போ, அங்கேயிருந்து கீழே விழு' என்றெல்லாம் முறைத்துக் கொண்டே சொல்லிப் பார்த்திருக்கிறேன். என்றாவது ஒருநாள் அது நிகழாதா என்று. அப்படிப் பட்ட சக்தி வந்தால் என்னென்னவெல்லாம் செய்யலாம் என்று என் கற்பனைக் குதிரை சிறகடித்துப் பறக்கும். இந்த கதாநாயகர்களின் சக்தி வந்தால் கீழ்க்கண்டவற்றினைச் செய்வது என்று திட்டம் போட்டு வைத்திருந்தேன்:

- பள்ளி இடைவேளையில் சிறுநீர்க் கழிக்கும் போது, பின்னாலிருந்து என்னையும் மற்ற சாதுப் பையன்களையும் அடிக்கடி பிருட்டத்தில் உதைத்து, நாங்கள் தடுமாறி நனைத்துக்கொள்வதைப் பார்த்து சிரிக்கும் முரட்டுப் பையன் முத்துலிங்கத்தை இரும்புக்கையைக் கொண்டு ஓங்கி அவன் பிருட்டத்தில் குத்தி லேசாக மின்சாரம் பாய்ச்ச வேண்டும்.

- கடைத்தெருவில் இருக்கும் ஐயர் கடையில் நன்றாக சாப்பிட்டு விட்டு, வெறும் தாளை கல்லாவில் நீட்டி விரலைச் சொடுக்கினால், அது ஐயருக்கு நூறு ரூபாய்த்தாளாகத் தெரிய, அவர் கொடுக்கும் மீதி 95 ரூபாயை வாங்கிக்கொண்டு அசால்ட்டாக நடையைக் கட்டவேண்டும்.

- குற்றம் செய்யும் அனைவரையும் இடது கையால் குமட்டில் குத்தி மண்டையோட்டு மோதிர முத்திரையை பதிக்க வேண்டும்.

- குதிரையில் காட்டழகர் கோயிலுக்குச் செல்ல வேண்டும்

செப்டம்பர் 26, 2002

7 comments:

ilavanji said...

பழைய நினைவுகளை அசைபோடுவதில் எப்போதும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது :)

பள்ளி வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் போல. நான்கூட ஒன்று எழுதியிருக்கிறேன். நேரம் கிடைத்தால் பாருங்கள்

http://ilavanji.blogspot.com/2005/01/blog-post_26.html

Muthu said...

எனது பள்ளி நினைவுகள் நினைவுக்கு வருகிறது .. சந்தேகமில்லாமல் "..அது ஒரு பொற்காலம்.. " :-) . விபரம் தெரிந்தபின் எத்தனையோவற்றை இழக்கிறோம்.

Muthu said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

கலக்கல்..சூப்பரா எழுதி இருக்கீங்க....

Thangamani said...

எளிமையான நடையில் அருமையான பதிவு! நன்றிகள் சுந்தர்!

jeevagv said...

பொறுமையுடன் அகரத்திலிருந்து தொடங்கியிருக்கிறிறீர்கள். வியக்கிறேன்.

Anonymous said...

மதுரை அதுவும் ஜெய்கிந்துபுரம் என்று எண்ண அலைகளைத் தூண்டி விட்டு விட்டீர்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்..படிக்க ஆவலாய் காத்திருக்கும் ஒரு வளைகுடா வாசி