Monday, April 18, 2005

ஓமானே மானே! - ஸலாலா

*** ஓமானே மானே! - ஸலாலா ***

ஸலாலா (Salalah) மஸ்கட்டிலிருந்து 1200 கிலோமீட்டர்கள் தூரம். ஓமானின் 1700 கி.மீ.க்கள் நீண்டிருக்கும் கடற்கரைப் பகுதியில் தென்கோடியில் இருக்கிறது சலாலா. ஓமான் ஏரின் போயிங் எழுநூத்தி முப்பத்தேழில் சினேகமில்லாச் சிப்பந்திகளும், தோல்/ரெக்ஸின் குறுகிய இருக்கைகளுமாய் அந்த ஒன்றரை மணி நேரப் பயணம் ஒரு அவஸ்தை! வரவர அநியாயத்துக்கு சொகுசாக வாழ்கிறோமோ? விமானப் பயணமே வலிக்கிறதே? என்று யோசித்துக் கொண்டே இறங்கினேன். 'ஓமானிகள் வருவர் பின்னே. வாசனை வரும் முன்னே' என்ற பழமொழி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஓமானிகள் வாசனைத் திரவியங்களை அபரிமிதமாக உபயோகிப்பவர்கள். சாப்பிடாமலிருந்தாலும் வாசனையில்லாமல் இருக்க மாட்டார்கள். மிக மிக அன்பான மக்கள். விமானம் மிக வாசனையாக இருந்தது. Image hosted by TinyPic.com

என் பக்கத்து சீட்டுக்காரரைப் பார்த்துக்கொண்டே எனக்கும், என்னைப் பார்த்துக்கொண்டே அவருக்கும் சிப்பந்தி கொடுத்த உணவுத்தட்டிலிருந்து பழரசம்/தண்ணீர் மட்டும் எடுத்துக்கொண்டு, சாளரம் வழியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். இயற்கை அமைப்பில் ஓமான் ஒரு வினோதம். எங்கு பார்த்தாலும் மலைத்தொடர்கள் - ஒரு மரம், செடி, கொடி, பூச்சி பொட்டு இல்லாத மொட்டை மலைத் தொடர்கள். உயரத்திலிருந்து பார்க்கையில் இடைவெளியில்லாமல் பரந்திருக்கும் செம்பழுப்புக் குன்றுத் தொடர்கள், செவ்வாய் கிரக புகைப் படங்களை நினைவு படுத்துகிறது. ஆங்காங்கே கட்டிடங்கள் தென்படுகின்றன. நூலிழை அளவுக்குச் சீரான தார்ச்சாலைகள் குன்றுகளூடே நெளிந்து வளைந்து நீளுகின்றன. இங்கே சாலைகள் ஒரு ஏங்க வைக்கும் அற்புதம்.

ஸலாலாவின் கையடக்கமான விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் ஜனகராஜ் 'வெல்கம் டு சலாமியா' என்று வரவேற்பது போல் ஒரு பிரமை. Image hosted by TinyPic.comகாற்றில் ஈரப் பதம் அதிகம் என்பதால் உடனடியாக வேர்க்கிறது. கூடவே காற்றும் அடிப்பதால், கொஞ்சம் ஆறுதல். நிலையத்திற்கு எதிரே நேர் கோட்டில் இருபுறமும் புல்வெளியுடனும், தென்னை மரங்களுடனும் ஒரு அழகான சாலை ஊருக்குள் செல்கிறது. எங்கெங்கும் ஈச்ச மரமிருக்கும் நாட்டினிலே ஒரு மாற்றத்திற்குத் தென்னை மரங்கள்! ஆங்காங்கே ஆறுகளும் நீரோடைகளும் இருந்திருந்தால், மலையாளிகள் எர்ணாகுளத்தைப் பெயர்த்தெடுத்து இங்கு வைத்திருக்கிறார்களா என்று தோன்றியிருக்கும்.

புல்வெளிகளில் வயதானவர்கள் இளைப்பாற, இளைஞர்கள் வர்ண விளையாட்டு உடைகளில் (கால்பந்து) ஓடி பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். நிறைய இடைவெளி விட்டு கட்டிடங்கள் அமைக்கப் பட்டிருப்பதால் காற்று தடையில்லாமல் பயணிக்கிறது. கார்களில் தூசி அதிகம். மஸ்கட்டில் தூசியுடன் கார்கள் அரிது.

ஸலாலா அரேபியாவின் வாசனைத் திரவிய நகரம் (Perfume City of Arabia). என்னைக் கேட்டால் அது அரேபியாவின் கேரளா என்பேன். நம் நாட்டில் மாநிலங்கள் போல இங்கே Regions (மாவட்டம் என்று வைத்துக் கொள்வோமே!). சலாலா தோ•பார் மாவட்டத்தின் (Dhofar Region) தலை நகரம். ஒருபுறம் மலைத் தொடர்களும், மறுபுறம் மனதை மயக்கும் அழகு கடற்கரையும், இன்னொருபுறம் பாலைவனமும் - ஒரு வினோத கலவை. Frankincense (தமிழில் என்னவென்று தெரியவில்லை!) மரங்களும் அதில் கிடைக்கும் பிசின் போன்ற திரவியமும் மிகப் பிரசித்தம். ஊரெல்லாம் வாசனையடிப்பது போன்ற ஒரு பிரமை!
Image hosted by TinyPic.com

மழைக்காலத்தில் திடீரென்று மொத்த பரப்பும் பச்சையாக மாறும் அதிசயமும் இங்கு நடக்கிறது. மழைப் பருவத்தின் Khareef Festival இங்கு பிரசித்தம். ஜூன் முதல் செப்டம்பர் வரை நாங்கள் மஸ்கட்டில் கொதிக்கும் வெயிலில் வறுபடுகையில், ஸலாலாவில் ரஜினி பச்சை மரங்களின் நடுவே 'ஸலாலாவின் கரையோரம் தமிழ் பாடும் குருவி' என்று பாடிக் கொண்டிருப்பார். Wadi என்றழைக்கப்படும் நீரோடைகளில் நீர் நிசமாகவே ஓடும். நம்ம ஊராக இருந்தால் 'அடி வாடி.. வாடிக்கு வாடி, என் கப்ப கெழங்கே' என்று பாடுவார்கள். இங்கு இசைக்கப்படும் அரபி பாடல்களின் பின்னணி இசையைக் கேட்கும் போது, நடனமாடாமல் இருக்க மிகுந்த மனக்கட்டுப்பாடு வேண்டும். குதித்தெழுந்து வரும் அருவியைப் போன்று துள்ளும் இசை அது.

கடற்கரை என்றதும் நம் நினைவுக்கு வருவது மணல் பரந்த கரை பரப்பு. இங்கு பெரும்பாலும் படிவுப் பாறைகள் (limestone rocks)தான் ஸலாலாவின் மக்ஸேல் (Mughsayl) கடற்கரைப் பகுதி கொஞ்சூண்டு மணலும் நிறைய பாறைகளும் உள்ள கடற்கரை. கடல் நீர் பாறைகளுக்கு அடியே ஓடி அரித்திருப்பதால் ஆங்காங்கே பாறைபரப்பில் ஓட்டைகள் உண்டு. அலை (பாறைக்கடியில்) அடிக்கும்போது அந்த ஓட்டைகள் வழியே நீரூற்று பீய்ச்சியடிக்கும் பாருங்கள். கொஞ்ச நஞ்ச உயரம் அல்ல - நூறு அடி உயரம் வரை! Image hosted by TinyPic.com

புவி ஈர்ப்பு விசை பற்றி நம் எல்லோருக்கும் தெரியும் (காதல் மயக்கத்தில் இருப்பவர்கள் இதில் சேர்த்தி இல்லை. அவர்கள் எப்போதும் மேகங்களில் மிதந்து கொண்டு இருப்பார்கள்!). சலாலாவிலிருந்து கிழக்கே அறுபது கி.மீட்டர்கள் தூரம் பயணித்தால், மிர்பாத் (Mirbat) சாலையை அடைவோம். சாலை அந்த இடத்தில் மேல் நோக்கிச் செல்லும் ஒரு மேட்டுப்பாங்கான பகுதி அது. ஏற்றத்தில் ஏறும் முன் காரை நிறுத்தி நிறுத்தானை (Brake!) உபயோகிக்காமல், எந்த கியரிலும் போடாமல் நியூட்ரலில் வைத்துக் கொண்டால், கார் தானாகவே மேட்டின் உச்சிக்குச் செல்கிறது - அறுபது கி.மீ. வேகத்தில்!!! காரைத் திருப்பி இறக்கத்தை நோக்கி நிறுத்தினாலும், தானாக இறங்குவதில்லை. ஆக்ஸிலேட்டரை மிதித்தால்தான் இறங்கும்! அனுபவித்தால் மட்டுமே இந்த அற்புதத்தை உணரமுடியும். புவி இங்கே அவ்வளவாக ஈர்ப்பதில்லையால் இந்த அதிசயம். "சே! இந்த மாதிரி ஊர் முழுக்க இருந்தா பெட்ரோல் போடாம சுத்தலாமே" என்று அல்பத்தனமாகவும் தோன்றியது. 'கல்•ப்புக்கே ஆயிலா?' என்று ஏளனிப்பார்கள்.

மதுரையில் வீட்டில் புறப்பட்டால் பேருந்தில் உடல் அதிர, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயணித்து திருச்சி சென்று வாசலில் செருப்பைக் கழட்டி வைக்கையில் நான்கு மணி நேரம் தொலைந்திருக்கும். மஸ்கட்டிலிருந்து ஸலாலாவுக்கு பேருந்தில் பனிரெண்டு மணி நேரத்தில் செல்கிறார்கள் - சாலையோர உணவகத்தில் செலவழிக்கும் அரைமணியையும் சேர்த்து! - 1200 கிலோமீட்டர்கள்! ஹூம்ம்ம்ம்ம்..!

மான் இன்னும் ஓடும்..

Sunday, April 17, 2005

*** முசிறி ***

*** முசிறி ***

இருள் கவியத் தொடங்கிய ஓர் அந்தி வேளையில் முசிறி கைகாட்டியில் பேருந்து நிற்க, என் தந்தையைத் தொடந்து நானும் இறங்கினேன். நெடுந்தூரம் பயணம் செய்த அயற்சி கால்களைத் தொய்வடையச் செய்தது. தெரு விளக்குகள் இன்னும் எரியத் தொடங்கவில்லை. தாமதமான சில காகங்கள் சற்று அவசரமாகத் தங்கள் இருப்பிடத்தை நோக்கிக் கரைந்து கொண்டு சென்றன.

கைகாட்டி என்பது முசிறியில் அனைத்துப் பேருந்துகளும் பிரதான நெடுஞ்சாலையில் நின்று செல்லக் கூடிய நான்கு சாலைகள் சந்திக்கும் இடம். முசிறிக்குத் திருச்சி வழியாகவும் வரலாம், சேலத்திலிருந்து தொட்டியம் வழியாகவும் வரலாம். குளித்தலை வழியாகக் காவேரியைக் கடந்தும் வரலாம். நாங்கள் மதுரையிலிருந்து சேலம் செல்லும் பேருந்தில் ஏறி குளித்தலை வழியாக முசிறிக்கு வந்திறங்கினோம். வண்டி முசிறியிலிருந்து வந்த வழியாகத் திரும்பி, காவேரியை ஒட்டிய சாலையில் (அக்கரையில் குளித்தலை) சேலம் செல்லும்.

கைகாட்டியிலிருந்து சற்றே சரிவாகச் செல்லும் சிறிய தெருவில் சென்றோம். இருட்டு சற்று கூடியிருக்க, மின்சாரம் இல்லை என்று கவனித்தேன். நிறைய நாய்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தன. பெரும்பாலும் சைக்கிள்களும், பாதசாரிகளும் பரவியிருந்தனர். ஒரு கசாப்புக்கடை வாசலில் பெரிய மரத்துண்டு மேல் ஆட்டுக்கால் ஒன்று துண்டு போடப்பட்டுக் கொண்டிருக்க, கடைக்கு முன்பு 'முனியான்டி மட்டண் ஸ்டால்’ என்று எழுதியிருந்து. எனக்கு என்னவோ பெயர்ப் பலகையை மரத்துண்டின் மேல் வைத்து கடைக்காரன் கத்தியால் தமிழ் எழுத்துகளைத் துண்டாக்குவது போல் ஒரு பிரமை.

இருசக்கர வண்டியில் பயணிக்கும் போது எதிரே வரும் வாகனத்தின் எண்ணைக் கவனித்து மனனம் செய்ய முயற்சிப்பது என் பழக்கம். கடைசியாக என்னைக் கடந்த வாகனத்தின் எண்ணைப் பெரும்பாலும் ஞாபகத்தில் வைத்திருப்பேன் - அடுத்த வாகனம் கடக்கும் வரை. விளையாட்டுப் போல் தொடங்கியது இப்போது பழக்கமாகவே ஆகிவிட்டது. இதேபோல் கடைகளின் பெயர்ப் பலகைகளையும் தொலைகாட்சிகளின் தலைப்புச் செய்திகளின் எழுத்துக்களையும் படிப்பது வழக்கமாகி விட்டது. தமிழ்த் தொலைக்காட்சிகளில் வரும் தப்பும் தவறுமான அறிவிப்புக்களைப் பார்க்கும் போது கோபம் கோபமாக வரும்.

மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்தின் முன்புறம் 'நல்லூழ் உணவகம்’ என்ற பெயர்ப் பலகை தாங்கிய சிற்றுண்டிக் கடையைப் பார்த்திருக்கிறீர்களா? பேருந்தில் அந்தக் கடையைக் கடக்கும் போதெல்லாம் சட்டென்று இறங்கி அந்த கடை உரிமையாளரைப் பாராட்டி நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றும். அடுத்த முறை விடுமுறையில் மதுரை செல்லும்போது கட்டாயம் சொல்வேன்.

இன்னும் சில வருடங்களில் தமிழ் நாட்டில் தமிழில் பேசுபவர்களைப் பார்த்தாலே நன்றி சொல்வோம் போலிருக்கிறது.

'Morning late-ஆ எலுந்து Fast-ஆ Ready-ஆயி, dress பன்னி, tiffin சாப்ட்டு, bus stop-ல wait பன்னி, full crowd-ஆ வர்ர bus-ல ஏறி dress-ஸெல்லாம் spoil-யிலாயி, conductorகிட்ட ticket வாங்க change இல்லாம திட்டு வாங்கி, stop வந்ததும் office-க்கு ஓடி G.M.கிட்ட late-ஆ வந்ததுக்கு memo வாங்கி, pending files-ஸ clear செஞ்சு work-க finish பன்னி முடிக்கறதுக்குள்ள exhaust ஆயிடறேன்’ என்ற ரீதியில் தமிழ் ஓடிக் கொண்டிருக்கிறது. ஓரளவு ஆங்கிலக் கலப்பின்றித் தமிழ் கேட்க வேண்டுமென்றால் தென் மாவட்டங்களுக்குத் தான் ஓடவேண்டும்.

எப்போதோ ஒருமுறை டெல்லியில் குண்டு வெடித்த போது எல்லா நாளிதழ்களிலும் அது தலைப்புச் செய்தியாக வர, ஒரு பிரபல நாளிதழில் 'டெல்லியில் குண்டு வெடித்தது’என்று அச்சு செய்யும் போது 'டு'வுக்கு பதிலாகத் தவறுதலாக 'டி’ போட்டு விட்டார்கள் என்று தினமலர் அந்து மணி ஒரு முறை எழுதியிருந்தார். சிரிக்காதீர்கள்.

இன்னுமொரு விஷயம். நாட்டிலிருக்கும் அனைத்து கசாப்புக் கடைகளையும் அவற்றில் உபயோகப் படுத்தப்படும் மரங்களையும் (எத்தனை பெரிய மரத் துண்டு! எவ்வளவு வயதான மரமாக இருக்க வேண்டும்!) கணக்கெடுத்துப் பார்த்தால், எவ்வளவு மரங்களையும், அதை நம்பியிருக்கும் சிறிய எளிய பிராணிகளையும் மனிதன் வதம் செய்கிறான் என்பது தெரியவரும். இந்த பூமியில் நாம் வாழ அனைத்தையும் பதம் பார்க்கும் நம்மை நினைத்தால் விரக்தி மிஞ்சுகிறது. சில மனிதர்கள் ஒரு படி மேலேபோய் சக மனிதர்களையே பதம் பார்க்கிறார்கள். ஒரு விதத்தில் கண்ணைப் பாதுகாக்கக் கையை வெட்டுவது போல் தோன்றுகிறது.

ஓரிரு மைல் நடந்ததும் சட்டென்று தெரு இடது பக்கம் திரும்ப 'நேரப் போனா கொஞ்ச தூரத்துல காவேரி’ 'நம்ம வந்தது வடதென் அக்ரஹாரம்.. இப்ப திரும்புனது கிழமேல்(கிழக்கு மேற்கு) அக்ரஹாரம்.. இங்கதான் நம்ம வீடு இருக்கு’ என்றார் அப்பா.

எனக்கு எல்லாமே புதியதாக இருந்தது. காற்றின் வாசனை, அடுக்கடுக்காக இருந்த நெரிசலான வீடுகள், மனித முகங்கள், எல்லாமே புதியவை. வத்றாப்பிற்கும் இந்த ஊருக்கும் எத்தனை வித்தியாசம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். வரலாறு படித்தபோது தொண்டி, முசிறி என்ற ஊர்களைப் பற்றிப் படித்தது நினைவுக்கு வந்தது. அது இந்த முசிறிதானா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

தெருவில் பையன்கள் குழுக்களாக ஆடிக் கொண்டிருந்தனர். ஒரு குழு கிட்டிப்புள் விளையாட, இன்னொரு குழு தெரு ஓரத்தில் குச்சி நட்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது தான் கிரிக்கெட் என்ற விளையாட்டை நேரிடையாகப் பார்த்தேன். மஞ்சள் நிற டென்னிஸ் பந்தை குள்ளமான சிறுவன் ஓடி வந்து வீசியதையும் கிரிக்கெட் மட்டையை வைத்து நின்று கொண்டிருந்த இன்னொரு பையன் அதை கண்ணிமைக்கும் நேரத்தில் அடித்ததையும் ஆச்சரியத்துடன் பார்த்தேன். பந்து வீசிய குள்ளமான பையனின் பெயர் கார்த்திக் என்பதையும் மட்டை வீரனின் பெயர் பிரகலாதன் என்றையும் இரண்டாம் நாள் தெரிந்து கொண்டேன்.

கிரிக்கெட்டைத் தாண்டி வந்ததும் கிடிட்டிப்புள் குழுவில் ஒரு பையன் புள்ளைச் சுண்டி அடிக்கவும், அப்பா என்னை அவர் பக்கம் இழுத்துக் கொண்டு "பாத்து வா.. கண்ல பட்டுறப் போறது” என்றார். நான் எச்சரிக்கையாக நடந்தேன்.

மின்சாரம் இல்லாததால் பெண்மணிகள் வீட்டு வாசலில் நின்று கதைத்துக் கொண்டிருக்க ஆண்கள் விசிறியால் வீசிக் கொண்டு கொசுவைத் துரத்த முயன்று கொண்டிருந்தனர். தெருவில் போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் சில வயசாளிகள் அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டிருந்தனர். வீட்டு வாசல்களில் சிறிய அகல் விளக்குகளும் ஹரிக்கேன் விளக்குகளும் சோகையாக மஞ்சள் ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தன.

தெருவில் மையமாக இருந்த வலது புற வரிசை வீட்டு ஒன்றை நெருங்கியதும் அப்பா 'இது மாடிலதான் வீடு’ என்றார். வீட்டு உரிமையாளர் வெளியில் கயிற்றுக் கட்டிலில் வெற்று மார்புடன் அமர்ந்திருந்திருந்தார். அப்பாவைப் பார்த்ததும் எழுந்து 'வாங்க.. யாரு பையனா?என்னப்பா பேரென்ன?’ என வினவ, நான் அப்பா பின்னே லேசாக ஒளிந்து கொண்டேன் சற்று வெட்கத்துடன். அப்பா 'இது என் ரெண்டாவது பையன். பேரு ரவி. ஸ்கூல்ல சுந்தர்ராஐன்’ என்றார்.

திண்ணையைத் தாண்டி குறுகிய நடைபாதையின் முடிவில் முத்தம் இருக்க, அருகில் இருந்த மாடிப்படிகளில் ஏறினோம். மாடியில் ஒண்டுக் குடித்தனம். ஓர் அறை இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஓடு வேய்ந்திருந்தது. அறையின் முன்புறம் சற்று இடம் விட்டு கைப்பிடிச்சுவர் இருக்க அங்கே நின்றால் முழுத் தெருவையும் இடவலம் திரும்பிப் பார்க்கலாம். தெருவில் வீட்டுக்காரர் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.இருட்டினாலும் விடாப்பிடியாக விளையாடிக் கொண்டிருந்த பையன்களை யாரோ உரத்த குரலில் விரட்ட, விருப்பமில்லாமல் அவரவர் வீடுகளுக்குத் திரும்பினார்கள்.

வீட்டின் உள்ளேயே சேந்தி இருந்தது. அதில் ஆண்டாண்டு காலமாக வத்றாப் வீட்டில் சேந்தியில் இருந்த பொருட்களில் ஒரு பகுதியைக் காண முடிந்தது. அம்மா கல்யாணத்திற்கு வந்த பாத்திரங்களும் மற்றும் சில வீட்டு உபயோகப் பொருட்களையும் கட்டி வைத்திருந்தார்கள். எனக்குத் தெரிந்து யாரும் அதை ஒரு முறையாவது இறக்கி உபயோகப் படுத்தியதாக ஞாபகம் இல்லை. எப்போதும் நூலாம்படை (ஒட்டடை?)யும் தூசியும் படிந்து இருக்கும். இதை ஏன் தூக்கிக்கொண்டு ஊர் ஊராக அலைகிறீர்கள் என்று கேட்டுச் சோர்ந்து போய்விட்டேன். ஸ்ரீரங்கத்தில் போன வருடம் விடுமுறையில் சென்றிருந்தபோது ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீடு வாங்கி, மதுரை வாடகை வீட்டைக் காலிசெய்து பொருட்களை இடம் மாற்றியதில் மதுரை வீட்டு சேந்தியிலிருந்தவை ஸ்ரீரங்கம் வீட்டுச் சேந்திக்கு இடம் மாறிவிட்டன. உண்மையைச் சொல்லப்போனால் உபயோகப்படுத்தும் பொருட்களை விட சேந்தியிலிருக்கும் பொருட்கள் அதிகம். வண்டியில் சாமான்கள் ஏற்றும் போது கோபம் கோபமாக வரும். என்னதான் ஒவ்வொரு முறை வீடு மாற்றும் போதும் கழித்துக் கட்டினாலும் சேந்தி ஒரு வற்றாத அமுத சுரபி போல் எப்போதும் அடைந்தே இருக்கும். முசிறியிலும் சேந்தியில் சாமான்கள் அடைந்து கிடந்தது.

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து அம்மாவைப் பார்த்ததில் ஆனந்தம். பசிக்குதும்மா என்றதும் உடனே தட்டை வைத்து சோறிட்டார்கள். மின்சாரம் வந்துவிட வெளியே அக்கம் பக்க தெருவாசிகளின் ஆசுவாசமான ஆரவாரம் கேட்டது. சாப்பிட்டுவிட்டு அசதியில்தூங்கிப் போனேன்.

காற்றின் சில்லிப்பு தாங்காமல் காலை ஆறு மணிக்கு எழுந்து விட்டேன். இந்த சில்லிப்பும் புதியது. வீட்டின் பின்புற சன்னல் வழியாக நோக்கியபோது, கீழ் வீட்டுக் கொல்லைப்புறமும் அதையடுத்து நிறைய செடிகளும் மரங்களும் பின்பு அடர்ந்த தென்னந்தோப்புக்களும் தென்பட்டன. சன்னலில் வலை போடப்பட்டிருக்க 'கொசுவுக்கா?’ என்று கேட்டேன். அம்மா 'குரங்குக்கும்’ என்றார்.

காவேரி ஓரங்களில் நிறைய தென்னந்தோப்புக்கள் உண்டு. குரங்குகள் அதிகம். அவை வீடுபுகுந்தும் வழிப்பறி செய்தும் தின்பண்டங்களைத் திருடும். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கோபுரங்களில் நிறைய குரங்குகளைப் பார்த்திருக்கிறேன். அவை கோயிலுக்கு வருபவர்கள் கொடுக்கும் வாழைப் பழங்களையும், பொரியையும் தின்னும். வன்முறை செய்து நான் பார்த்ததில்லை. ஆனால் அழகர் கோயிலுக்குச் செல்லும் போது கையில் ஒரு குச்சியுடன் தான் கோயிலில் நுழையவேண்டும். குரங்குகளின் அட்டகாசங்களைப் பற்றி ஒரு தனிப் புத்தகமே எழுதலாம்.

முசிறியில் காவிரிக் கரையை ஒட்டியிருந்த அக்ரஹாரத் தெருவில் அனைத்து வீடுகளிலும் பின்புற சன்னல்களையும் கதவுகளையும் மூடியே வைத்திருப்பார்கள், குரங்குகளுக்குப் பயந்து. தின்பண்டங்கள் போனால் பரவாயில்லை. பாத்திரங்களையும் சேர்த்து தூக்கிக்கொண்டு தென்னந்தோப்புக்குள் ஓடி விடுவதால் வீட்டுப் பெண்மணிகள் கவனமாக இருப்பார்கள். அவர்கள் சமையல் பாத்திரங்களை நகைகளைவிட நேசிப்பவர்கள். அம்மா 'தென்னந்தோப்பு தெரியுதில்ல.. அதுக்கு முன்னாடி வாய்க்கால் இருக்கு.. தோப்புக்குப் பின்னால காவேரி.. இப்போ போய் வாய்க்கால்ல பல் தேய்ச்சுட்டு குளிச்சுட்டு வா.. குமார்(என் அண்ணன்) பசு (பசுபதி) வீட்டுக்கு நேத்திக்கு படிக்கப் போனான். இப்பவந்துருவான். அவனோட வேணா காவேரிக்குப் போய்ட்டு வா’ என்றார்கள்.

முதல்நாள் குளித்தலையிலிருந்து காவேரிப் பாலத்தைக் கடந்து வருகையில் அதில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரைப் பார்த்து நான் நதியின் மேல் பாசமாகியிருந்தேன். ஆதலால் 'குமார் வரட்டும்மா’ என்று சொல்லிவிட்டு வீட்டு முன்புறம் மாடியின் கைப்பிடிச் சுவரின் அருகே நின்று தெருவைக் கவனித்தேன்.

ஈர உடையுடனும் துவைத்துப் பிழிந்த ஆடைகளுடனும், கையில் நதி நீர் நிரப்பிய குடங்களுடனும் பெண்களும் ஆண்களும் தெருக்கோடியிலிருந்து வந்து கொண்டிருக்க, தாமதமாக எழுந்திருந்த சிலர் தோளில் துண்டு,சோப்புப் பெட்டி மற்றும் வாயில் பல் தேய்ப்பானுடன் (பிரஷ்-தமிழில்!) சோம்பலுடன் போய்க்கொண்டிருந்தனர். கீழ் வீட்டு முன் பால்காரன் சைக்கிளுடன் நின்று கொண்டிருக்க, வீட்டுக்கார அம்மாள் தாமதமாக வந்ததற்காக அவனைக் கடிந்து கொண்டிருந்தார். நாய் ஒன்று இலக்கின்றி மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது.

தெருவின் அந்தக் கோடியில் மையமாக இருந்த பொதுக் கிணறு ஒன்றில் பெண்கள் நீரிறைத்து குடங்களை நிரப்பிக்கொண்டிருந்தனர். கை நீட்டினால் தொட்டு விடும் தூரத்தில் தெருவிளக்குகளின் மின்கம்பிகள் இருக்க அதில் அமர்ந்திருந்த காக்கையொன்று நெடு நேரம் என்னையே சந்தேகமாகப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு நான் பார்த்ததும் சட்டென்று பறந்தோடிப் போனது. 'நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். ஏன் ஓடுகிறாய்?’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு திரும்பினால் குமார் நின்றிருந்தான். 'வாடா’ என்று ஒற்றை வார்த்தையில் என்னை வரவேற்று வத்றாப் நிலவரங்களையும், அவன் நண்பர்களைப் பற்றியும் விசாரித்து விட்டு 'குளிக்கப் போவமா?’ என்று கேட்க, அதற்காகவே காத்திருந்த நான் உடனே கொடியில் தொங்கிக் கொண்டிருந்த துண்டை உருவி தோளில் போட்டுக்கொண்டு கிளம்பினேன். காற்றில் இன்னும் குளிர் மிச்சமிருக்க கதிரவன் உற்சாகமாக வானில் ஏறிக் கொண்டிருந்தான்.

தெரு முக்கை அடையும் வரை ஆங்காங்கே வீடுகளிலிருந்து குமாரின் நண்பர்கள் பிரகலாத், கார்த்திக், பிரகாஷ், ராம்கி, மற்றும் பசுபதி எங்களுடன் சேர்ந்து கொள்ள, சிறிய கூட்டமாகக் காவேரி நோக்கி நடந்தோம். பசுபதி வளர்க்கும் செல்ல நாய் ஜுலியும் எங்களுடன் சேர்ந்து கொண்டது (பசு அதைப் பார்த்து 'குப்பாட்ட போலாமா?’ என்று கேட்டதுதான் தாமதம். அது குதூகலத்துடன் சிணுங்கிக் கொண்டு புறப்பட்டு விட்டது! குப்பாட்ட – குளிப்பாட்ட)

செம்மண் பாதையில் இருநூறு மீட்டர் நடந்ததும் சாலை சட்டென்று மேடேற, மேட்டுக்கு அப்பால் நீல வானம் தெரிந்தது. மெதுவாக மேட்டின் உச்சியை அடைந்ததும் உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது. காவிரித்தாய் பிரவாகமாக ஓடிக் கொண்டிருந்தாள். ஆடிப்பெருக்கு சமயம். அவ்வளவு தண்ணீரை நான் வாழ்நாளில் பார்த்ததில்லை. எனக்குத் தெரிந்திருந்தது வத்றாப்பின் குளமும் விவசாயக் கிணறுகளும் தான். அர்ச்சுனா நதி காவேரியில் நூறில் ஒரு பங்கு இருந்தாலே அதிகம்.
மேடு சரேலென்று கீழிறங்கி படித்துறையில் முடிந்தது.

அது பெண்கள் படித்துறை. பலவயதுகளில் பல நிறங்களில் பெண்கள் குளித்தும் துவைத்துக் கொண்டும் சிறுவர் சிறுமியர்களைக் குளிப்பாட்டிக் கொண்டும் இருந்தனர். 'நம்ம படித்துறை அந்த பக்கம்இருக்கு’ என்று குமார் சற்றே எட்டி நடக்க பெண்கள் படித்துறையை ஒட்டியே ஆண்கள் படித்துறையும் இருந்தது. பெண்களைப் போன்றே ஆண்களும் பலவித காரியங்களில் ஈடுபட்டிருக்க, கூடுதலாக சில எருமைகளும் குளித்துக் கொண்டிருந்தன.

இரண்டு படித்துறைகளையும் சதுரக் கற்கள் அடுக்கிக் கட்டப்பட்ட தடுப்பு பிரித்தது. சிறுவர்களும்சில இளைஞர்களும் அதன் மீது ஓடி நீரில் குதித்துக் கொண்டிருந்தனர். சில இளைஞர்களும் முதியவர்களும் பல் தேய்ப்பது போல நடித்துக் கொண்டு பெண்கள் படித்துறையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர்.

படிகளில் இறங்கி நீரில் கால் வைத்ததும் சில்லென்ற நீர் பட்டு உடல் மட்டுமல்ல, உள்ளமும் குளிர்ந்தது. என்னதான் நீச்சல் அடிக்கத் தெரிந்திருந்தாலும் ஓடும் ஆற்றில் நீச்சல் அடித்ததில்லையாதலால் சற்று தயக்கமாக இருந்தது. சுழித்துச் செல்லும் ஆற்றின் வேகம் வேறு பயமுறுத்தியது. நான் நிச்சயமின்றி படியிலேயே நெஞ்சளவு நீரில் நின்று கொண்டிருந்தேன்.

நதியின் அன்பு விலை மதிக்க முடியாதது. உடலைத் தழுவிச்செல்லும் நீர் தாயின் அணைப்புக்குச் சமானம். கைகளை லேசாக விரித்துக் கொண்டு தாயை அணைத்துக் கொண்டேன்.

சற்று நேரத்தில் நீரின் சில்லிப்புக்கு உடல் பழகிக்கொண்டு விட, கதகதப்பு உணர்ச்சி பரவியது. இது ஆனந்தம். அனுபவித்திருந்தால் மட்டுமே புரியும். அவ்வப்போது வெங்காயத்தாமரைக் கூட்டம் நீரில் அடைஅடையாக மிதந்து சென்றது. அதன் மேல் சிறு பறவைகள் அமர்ந்தும் எழும்பியும், ஆஹா என்னவொரு காட்சி.

'நம்ம ஊர் நீச்சலெல்லாம் இங்கு சரிப்பட்டு வராதுடா.. தண்ணி வேகத்துக்கு நீ என்னதான் கடப்பாரை நீச்சல் அடிச்சாலும் அங்கேயே நகராமல் நிற்பாய். சரி. படிக்குத் திரும்பிடலாம்னு திரும்பி நீஞ்சினா நீரின் வேகத்துக்கு படித்துறையைத் தாண்டிதான் உன்னால் ஒதுங்க முடியும்’ என்றான் குமார்.

அவன் சொன்னது உண்மையென்று நீந்திப் பார்க்காமலே உணர்ந்து கொண்டேன். 'படிக்குத் திரும்பணும்னா கிழக்காகவும் (தண்ணீரைஎதிர்த்து) நீந்தாமல், வடக்காகவும் (படியை நோக்கி) நீந்தாமல் வடகிழக்காக நீந்து. தானாக படியை அடைந்து விடுவாய்’ என்று நீந்தும் உபாயத்தையும் சொல்லிக் கொடுத்தான். நீந்திப் பழகியவனுக்கு அதைக் கற்றுக் கொள்வதில் பெரிய சிரமமில்லை. சில நிமிடங்களில் கற்றுக் கொண்டு நீந்த ஆரம்பித்து விட்டேன். படித்துறைகளைப் பிரிக்கும் பாறைச் சுவர் மேலிருந்தும் குதித்துப் பார்த்தேன். காவிரித்தாய் என்னை அன்போடு ஏற்றுக் கொண்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு வழியாக குளித்து முடித்து எழுந்தோம்.

ஆண்கள் படித்துறைக்கு அப்பால் சிறிய புதர்ச் செடிகள் அடர்ந்திருக்க, நெடிது சென்ற ஒற்றையடிப் பாதையில் சில ஆண்களும் சிறுவர்களும் ஆங்காங்கே லேசாக தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தனர். அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று நான் சொல்ல வேண்டியதில்லையென்று நினைக்கிறேன். என்னை மிகுந்த வருத்தத்திற்குள்ளாக்குவது இது. இதற்கு எந்த நதிக்கரையும் குளக்கரையும் விலக்கல்ல என்று நினைக்கிறேன். ஏழைகளுக்கு உணவு, உடை, உறையுள் மூன்றுக்கும் திண்டாட்டம். சரி. இயற்கைக் கடன்களைக் கழிப்பதற்குக் கூட இடமின்றி ஆற்றங் கரையை நாடும் நிலையில் அவர்களை வைத்திருப்பது யார் குற்றம்?

ஒரு பக்கம் வெளிநாட்டுத் தலைவர் வருகைக்கு இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சிவப்பு ரத்தினக் கம்பளம் விமானத்திலிருந்து விமான நிலைய வரவேற்பறை வரை விரிக்கப்பட இன்னொரு பக்கம் ஏழை மக்கள் ஆற்றங்கரையில் அமர்ந்திருக்கிறார்கள். என்னதான் காரணங்கள் கூறப்பட்டாலும் மனது இந்த பாரபட்சத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

திருமணங்களில் சாப்பாட்டுப் பந்திகளில் பெயருக்குச் சாப்பிட்டு விட்டு எழுபத்தைந்து சதவீத உணவை மிச்சம் வைத்து விட்டு ஏப்பம் விட்டவாறே எழுந்து செல்லும் மக்கள் ஒரு பக்கம். அந்த மிச்ச உணவு இலையுடன் சுருட்டி தெருவில் எறியப்படும் தருணத்தை எதிர் நோக்கி நாய்கள், ஒட்டிய வயிறு மற்றும் பஞ்சடைந்த கண்களுடன் காத்திருக்கும் மக்கள் மறுபக்கம். அவர்களும் நம் மக்கள் அல்லவா? அவர்களை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் பந்தி மறுபடியும் களைகட்டும். சாப்பிட்டு முடித்தவர்கள் வெற்றிலைபாக்கை மென்று விட்டு அவரவர் வேலையைத் தொடர மண்டபத்திலிருந்து செல்கிறார்கள். நம் மக்கள் மண்டபத்து வாசலில் காத்திருக்கிறார்கள் - அடுத்த திருமணத்தை எதிர்நோக்கி.

அன்று என்னைப் பள்ளியில் சேர்ப்பதாக முடிவு செய்து என் தந்தை என்னை அழைத்துச் சென்றார். முசிறி அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று, தலைமையாசிரியரைச் சந்தித்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினைக் கொடுத்து ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கப் பட்டேன். ஊர், இடம், பள்ளி, சக மாணவர்கள் எல்லாம் புதிது. பள்ளி பெரியதாக இருந்தது. விளையாட்டு மைதானம் மிகப் பெரியதாக இருந்தது.

வகுப்பில் சென்று மையமாக ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டேன். என்னைத் தவிர அனைத்து மாணவர்களும் அதே பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து படித்து வருவதால், ஒருவருக்கொருவர் கதைத்துக் கொண்டிருந்தனர். பள்ளியே இரைச்சலாக இருந்தது. நான் மிகவும் அந்நியனாக உணர்ந்தேன். வகுப்பின் தலைவனாகப் பட்டவன் கரும்பலகைக்குச் சென்று அவன் உயரத்திற்கு எட்டிய இடத்தில் 'தமிழ்’ என்று எழுதி அடிக்கோடிட, முதல் வகுப்பு தமிழ் என்று புரிந்து போனது.

என்னருகே அமர்ந்திருந்த சற்றே புஷ்டியான மாணவன் தன்னை ராமகிருஷ்டிணன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டு, 'ராம்கி’ என்று அழைக்கப் படுவதாகச் சொன்னான். முதல் நண்பன்.

சற்று நேரத்தில் நெடிய கரிய உருவம் தூய கதராடையில் வகுப்பறை உள்ளே நுழைய மாணவர்கள் அனைவரும் எழுந்து கொண்டு 'வணக்கம்ம்ம்ம்.... ஐயாஆஆஆஆ’ என்று ராகமாகச் சொன்னார்கள். அவர் தமிழாசிரியர் 'மா.இ.’ (மா. இராமசாமி) ஐயா அவர்கள். சில நாட்கள் வரை 'மாயி’ ஐயா என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு கையில் சிறிய தடியும், மறு கையில் தமிழ்ப் பாடப்புத்தகத்துடனும் இருக்கையில் அமர்ந்து எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுப் புதியவனான என்னைக் கண்டு கொண்டார். எனக்கு நடுக்கமாக இருந்தது. 'ராம்கி’ என்தொடையைத் தட்டி 'எந்திர்றா’ என்று கீழ்க் குரலில் முனக, உடனே எழுந்துகொண்டேன். எழுந்திரா விட்டால் தடி பறந்து வந்திருக்கும் என்று வகுப்பு முடிந்ததும் சொன்னான். ஐயாவிடம் பெயர், ஊர் எல்லாவற்றையும் நடுங்கிக் கொண்டே ஒரு வழியாகச் சொல்லி முடித்தேன்.

எனக்குத் தெரிந்த தமிழ் மா.இ. ஐயா சொல்லிக் கொடுத்தது. வெளியில் சற்றுக் கடுமையாகக் காட்டிக் கொண்டாலும், உள்ளே அவர் மிகவும் மென்மையானவர். தமிழில் ஒரு வாக்கியத்தைச் சொல்லி அனைவரையும் எழுதச் சொல்லி எழுதிய புத்தகங்களை அவர் மேசையின் மேல் அடுக்கி வைக்கச் சொல்வார். பின்பு ஒவ்வொன்றாக எடுத்து எழுதியதைப் பார்த்து விட்டு, எழுதிய மாணவனை கையிலிருக்கும் தடியை ஆட்டி அழைத்து அவர் அருகே வரச் சொல்வார். அழைக்கப் பட்ட மாணவன் கை கால்களைஆட்டிக் கொண்டே, கலவர முகத்துடன், 'வேணாங்கய்யா..வேணாங்கய்யா’ என்று கெஞ்சிக்கொண்டே சிங்கத்தை நெருங்குவது போல் அவரருகே வர, அவர் சற்று வசதியாக மாணவனை எதிர் கொள்வதற்காக இருக்கையை விட்டு எழுந்து சற்று தள்ளி நின்று கொள்வார். எந்தத் திசையிலிருந்து எந்த பாகத்தில் அடி விழும் என்று அனுமானிக்க முடியாமல், பையன் நின்று கொண்டே நர்த்தனமாடி, கைகளை எல்லாத் திசையிலும் சுழற்றி, காற்றில் கேடயம் அமைக்க முயல, எதிர்பாரா விதமாக அடி இறங்கும். இடது கையால் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்துக் கொண்டு, வலது கையிலிருக்கும் தடியால் பையனின் உடலில் சில வினாடிகள் விளையாடுவார் ஐயா. காவல் காரர்கள் தோற்றார்கள் போங்கள்.

ஏன் இப்படிக் கொடுமை செய்கிறார் என்று ஆரம்பத்தில் நினைத்ததுண்டு. தமிழ் சிதைக்கப்படுவதைச் சகித்து கொள்ள முடியவில்லை அவரால். எழுதுவதில் சிறிய தவறு செய்தாலும் பொறுத்துக்கொள்ள மாட்டார். ஒரு வேளை அப்படி அவர் இருந்திரா விட்டால் நானும் 'டைப் பன்னி, போன் பன்னி, வேல பன்னி,திங்க் பன்னி, மீட் பன்னி, பன்னிப் பன்னி’ பன்னியாகியிருப்பேன் என்று நினைக்கிறேன்.

நான் தவறேதும் செய்யவில்லை என்று அசாத்திய நம்பிக்கையுடன் சென்ற எனக்குப் பேரிடி.. மன்னிக்க... பேரடி. ஆனால் மற்ற மாணவர்கள் போல் இல்லை. கையை நீட்டச் சொல்லி சுள்ளென்று ஒரு முறை அடித்தார். வலியை விட அடி வாங்கிய அவமானம் தாங்காமல் கண்ணிலிருந்து நீர் சிதறியது. ஏன் அடித்தீர்கள் என்று கேட்கவில்லை. அவரே நான் எழுதியதைக் காட்டிச் சொன்னார். வார்த்தைகளுக்கு நடுவே விட்டிருக்கும் இடைவெளி போதுமானதாகவும், சீரானதாகவும் இல்லை என்று குற்றஞ்சாட்டினார். இதுவுமா தவறு என்று எனக்குக் கோபம் வந்தாலும் வெளிக்காட்ட முடியவில்லை. இரண்டு வார்த்தைகளுக்கு நடுவே அவர் தன் விரலை (தடிமனான விரல்) வைத்து, 'இவ்வளவு இடைவெளி இருக்கணும்’ என்று சொன்னார். எனக்கு அது அதிகப்படியாகத் தோன்றினாலும், அப்படியே பின்பற்றி எழுதினேன். இந்த பயிற்சி பத்தாவது தேர்வில் தமிழில் 87 மதிப்பெண்கள் வாங்க உதவியது. அந்தப் பள்ளியில் தமிழில் யாரும் அவ்வளவு மதிப்பெண்கள் வாங்கியது இல்லையாம். என் மதிப்பெண் சான்றிதழை எடுத்துக்கொண்டு தலைமையாசிரியரிடம் சென்று காட்டி மா.இ. ஐயா பெருமை பட்டுக்கொண்டார். அவர் கண்களில் தெரிந்த ஆனந்தத்தைக் கண்டு நான் நெகிழ்ந்தேன். அந்த ஆனந்தம் வேறு எதற்காகவும் அல்ல, தமிழில் மாணவர்கள் கவனம் செலுத்தாமல் சோபிப்பதில்லையே என்று ஆதங்கம் நீங்கியதனால் என்று புரிந்தது. ஐயாவுக்கு நான் நிரம்பவும் கடமைப் பட்டிருக்கிறேன்.

முசிறியில் இருந்த இரண்டு வருடங்கள் என் வாழ்வின் மகத்தான காலகட்டங்கள். காவிரித் தாயின் அன்பில் (நிசமாகவே) மூழ்கித் திளைத்த அனுபவங்கள் என்றும் மறக்க முடியாதவை. இன்றைக்கும் சென்னையிலிருந்து திருச்சிக்குச் செல்கையில் காவிரிப் பாலத்தைக் கடந்து செல்லும் போது நதியைப் பார்த்து 'அம்மா’ என்று வாய்விட்டு அழைக்கத் தோன்றும். கண்ணில் என்னையறியாது கண்ணீர் துளிக்கும். அங்கே இருக்கும் போது காவிரியில் நீராடத் தவற மாட்டேன்.

மகாநதியில் "ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்.." பாடல் கேட்கையில் அடிவயிறு நெகிழும். உடனே ஓடிச் சென்று காவிரியைப் பார்க்க மாட்டோமா என்று ஏங்குவேன்.

திரைகளிட்டாலும் மறைந்து கொள்ளாது..

அணைகளிட்டாலும் வழியில் நில்லாது..

பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி..’...

***

*** வீடு ***

*** வீடு ***

மதுரைவாசிகள் என்ன தான் 'அண்ணே, அண்ணே' என்று மிகவும் 'மருவாதையுடன்' அரிவாளால் வெட்டிக்கொண்டாலும், அவர்களின் நகைச்சுவை உணர்வுக்குப் பஞ்சமில்லை என்பது என் அபிப்ராயம். அது எல்லாவிடத்திலும் வெளிப்படும்.

அங்கிருந்தது கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள். வாடகை வீட்டிலிருந்ததால், மதுரைக்குள்ளேயே இடம் மாறிக் கொண்டிருந்தோம். இரண்டு வருடத்திற்கு மேல் தங்க விட மாட்டார்கள். விட்டால் வீடு திரும்பக் கிடைக்காது என்று பயம்.

முதலில் இருந்தது ஜெய்ஹிந்த்புரத்தில் பாரதியார் தெருக்கோடியில் இருந்த நாடார் காம்பவுண்ட்டில். காம்பவுண்ட் என்று பெயர்தானே தவிர காம்பவுண்ட் கிடையாது. இருவரிசையில் பத்து வீடுகள். கடைசியில் வரிசையாக நான்கு (பொது) குளியலறைகளும், கழிப்பறைகளும். பதினைந்துக்குப் பத்தடி இடத்தை இரண்டாகப் பிரித்து ஒன்று சமையலறையாகவும், இன்னொன்றை மற்ற எல்லாவற்றுக்கும் புழங்கிக்கொண்டோம்.

இப்படியெல்லாம் வாழ்வார்கள் என்பதையே அப்போதுதான் தெரிந்து கொண்டேன். வத்திராயிருப்பில் தனி வீடு. முசிறியிலும் தான். கிராமங்களிலும் சற்று பெரிய கிராமங்களிலும் வீடுகள் அகலம் குறைவாகவும், அநியாயத்திற்கு நீளமாகவும் கட்டியிருப்பார்கள். வாசலில் யார் வந்தாலும், வீட்டின் எந்தப் பகுதியிலிருந்தாலும் லேசாகத் தலையை நீட்டிப் பார்த்துவிடலாம். தேடவேண்டியதில்லை. தெருவில் நின்று கொண்டு பார்த்தால், அரைக் கிலோமீட்டர் தள்ளி வீட்டுப் பெண்மணி கொல்லைப்புறக் கிணற்றில் துணி துவைப்பதைப் பார்க்கலாம். வாசல் கதவுகள் பெரும்பாலும் திறந்து வைக்கப்பட்டிருக்கும். இந்த நீள அமைப்பின் லாஜிக் என்னவென்று யாராவது சொன்னால் தேவலை.

இன்னொரு விஷயம் வீடுகள் அடுத்தடுத்து இடைவெளியில்லாமல் வரிசையாக இருக்கும். வீட்டின் இடது அல்லது வலது பக்கச் சுவர் பக்கத்து வீட்டுக்காரருடையதாக இருக்கும். தெரு முழுவதும் அப்படித்தான். அபூர்வமாக வரும் வெளியூர் திருடர்கள் மொட்டை மாடிகளில் வீடு விட்டு வீடு தாண்டி எளிதாகத் தப்பிச் சென்று விடுவார்கள் என்பதுதான் இதில் உள்ள ஒரே அசெளகர்யம். உள்ளூர் திருடர்களாகிய நாங்கள், அவ்வப்போது மொட்டை மாடியில் காயப்போட்டிருக்கும் வடாமை பிய்த்துத் தின்றுவிட்டுக் காகங்களின் மீது பழிபோட்டுவிடுவோம். காய்ந்த வடாமைவிட, மாவுதான் ரொம்ப ருசி. இன்றும் அம்மா வடாமிற்கு மாவு தயாரானவுடன், ஒரு கையளவு உருட்டிக் கொடுத்துவிட்டுக் காயப் போடச் செல்வார்கள். வேகவைத்த அரிசிமாவின் மிதவெப்பத்துடன், பச்சை மிளகாய் மற்றும் உப்புக் காரத்துடன் வடாம் மாவின் ருசி இருக்கிறதே, அடடா..

பாரதியார் தெரு அடைசலாக, இரைச்சலாக இருக்கும். ஒரு பக்கம் வெல்டிங் ஒர்க்ஷாப்பிலிருந்து தீபாவளி ரேஞ்சுக்கு மத்தாப்புப் பொறிகளுடன் வெல்டிங் நடந்து கொண்டே இருக்க, அடுத்த பக்கம் நியாய விலைக் கடையில் வருடம் முழுவதும் நிரந்தர மண்ணெண்ணை டின்களின் வரிசை நெளி நெளியாக நீண்டு இருக்கும். சைக்கிள் ரிக்க்ஷாக்களில் குழந்தைகளும் அவர்களின் பள்ளிப் பைக்கட்டுகளும் பிதுங்கி வழிய, திறந்த சாக்கடையில் தாரை விட கரிய நிறத்தில் கழிவு ஓடாமல் தேங்கியிருக்கும். அதன் மேல் லேயரில் கொசுக்கள் கால் நனையாமல் அமர்ந்து அவ்வப்போது பறந்து வந்து ரத்த முத்தமிட்டுப் போகும். ஒரு ஆட்டோ தெருவில் வந்தால் இருசக்கர வண்டிகள் நிறுத்தப்பட்டு இடதோ வலதோ சாய்ந்து கால் ஊன்றிக்கொண்டு வழிவிட வேண்டியிருக்கும். இத்தகைய ஒரு தெருவில் இருந்து கொண்டு டி.வி.எஸ். பள்ளிக்கு முழுவெள்ளைச் சீருடையில் சென்று வருவதென்பது நரகம்.

தெரு தாண்டி சில நூறு கஜங்கள் கழித்து சுப்பிரமணியபுரம் ஆரம்பிக்கும். ஜெ.ஹி.புரத்திலிருந்து, சு.ம.புரம் செல்வது என்பது, துபாயிலிருந்து செல்லும்போது திடீரென்று ஷார்ஜாவுக்குள் இருப்பதை உணர்வது போல - எல்லை எங்கே என்று கண்டே பிடிக்க முடியாது. ரோடிலேயே இருபுறமும் காய்கறிக்கடைகளும், நடுப்புறத்தில் காய்கறிக் கழிவுகளும். சீருடை முழுவெள்ளையாக இருந்ததே இல்லை. கால்சராயின் கடைசி அங்குலம் எப்போதும் செம்மண் கலரில் இருக்கும். மழை பெய்தால் அவ்ளோதான்.

சு.ம.புரத்தின் முடிவில் டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியும் அதைத் தொடர்ந்து டி.வி.எஸ். நகருக்குள் லக்ஷ்மி மெட்ரிக்குலேஷன் பள்ளியும். பத்தாவது வரை 'உயர் நிலைப் பள்ளி', +1 மற்றும் +2 இருப்பது 'மேல்நிலைப் பள்ளி' என்பதை, முசிறியில் ஒன்பதாவது சேர்ந்தபோது கற்றுக்கொண்டு மனனம் செய்து கொண்டேன்.

பாரதியார் தெரு நாடார் காம்பவுண்ட்டில் சில மாதங்கள் மட்டும் நின்றுகொண்டே வாழ்ந்து விட்டு, பின்பு சுப்பிரமணியபுரத்திற்குக் குடிபெயர்ந்தோம். வீட்டுக்காரர் வத்திராயிருப்பில் இருந்தார். அவர் என் அம்மாவிற்கு தூரத்து அண்ணன் உறவுமுறையாம். பேசும்போது சில நொடிகளுக்கு ஒரு முறை தலையை பரத நாட்டிய அபிநயம் போல ஒரு சிறு வட்டமடித்துக் கொள்வார். மானரிஸம் என்று நினைத்தேன். ஏதோ நரம்புப் பிரச்சனை போல. அவர் வீடும் ஒரு காம்பவுண்ட் தான். ஆனால் நான்கே வீடுகள் - இடம் இரண்டு, வலம் இரண்டு. வீட்டுக் கொனேயில் நான்கு கழிவறைகளும், நான்கு குளியலறைகளும் - ஒவ்வொருவீட்டுக்கும் ஒவ்வொன்று ஒதுக்கியிருந்தார். நாடார் காம்பவுண்ட் போல, பொதுக் கழிவறை/குளியலறை பிரச்சனை அங்கு இல்லை.

வீட்டின் பக்கவாட்டிலும் பின்புறத்திலும் பரந்திருந்தது குருகுலம் பள்ளி. முன்புறம் இரு கடைகள். ஒன்று சைக்கிள் உதிரி பாகங்கள் விற்கும் கடை. கடைமுன் தரையில் பாய் ஒருவர் அமர்ந்து எப்போதும் ஏதாவது சைக்கிளைப் பிரித்து சரிபார்த்துக்கொண்டு, எண்ணை, க்ரீஸ் அப்பிய ஆடையுடனும், கை, கால்களுடனும் இருப்பார். இன்னொன்று டெய்லர் கடை. 'ஸ்டார் ஆ·ப் ஸ்டார்ஸ்' என்று பெயர் பொறித்த பழைய பலகை தாங்கியிருக்கும். டேபிளுக்குப் பின், முதலாளி பெல்ஸ் அல்லது பெல்பாட்டம் பேன்ட் மற்றும் கட்டம் போட்ட சட்டை அணிந்து, கழுத்தில் இஞ்ச் டேப் மாலையுடன் கோணலான ஸ்கேலில் ஏதாவது துணியில் க்ரேயானால் கோடிட்டுக் கொண்டும் வாடிக்கையாளர்களை எதிர்பார்த்துக் கொண்டும் இருப்பார். உள்ளே குறை வெளிச்சத்தில் இரண்டு தையல் கலைஞர்கள் ஓயாது தைத்துக்கொண்டு இருப்பார்கள். அப்போது டைட்ஸ் பேன்ட் தான் பிரபலமாக இருந்தது. முதலாளி சற்று பழைய ஆசாமி. அவர் இளமையில் பிரபலமாக இருந்த அதே ஆடை வடிவத்தை அன்றும் பின்பற்றிக்கொண்டு அணிந்து வந்தார். பேன் ட்டின் கடைசிப் பட்டியின் விளிம்பில், அரை வட்ட வடிவிற்கு உலோக ஜிப் வைத்து தைத்திருக்கும். அலமாரியில் தைத்த ஆடைகள் அடுக்கியும் தொங்கிக்கொண்டும் இருக்கும். சில ஆடைகள் வெகு நாட்களாக அங்கேயே இருந்ததாக ஞாபகம். வாராக் கடன் போல, வாரா வாடிக்கையாளர்களாக இருக்கும். அல்லது சும்மா படம் காட்டுவதற்காக, முதலாளியே சொந்தத்தில் துணி வாங்கித் தைத்து அடுக்கியிருந்திருப்பாரோ என்னவோ.. அவருக்குத் தான் தெரியும். இந்த இரு கடைகளும் வீடு கட்டிய நாள் முதல் இருக்கின்றன. ஐம்பது ரூபாய் வாடகைக்கு ந்த்தவர்கள் அப்போது இரு நூறு ரூபாய் வாடகை கொடுத்துக்கொண்டிருந்தனர். பக்கத்திலிருந்த அதைவிட சிறிய புதிதாக கட்டிய கடைக்கு ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் வாடகையாம் என்று எங்கள் வீட்டுச் சொந்தக் காரர் புலம்புவார். இவர்கள் வந்து இருபது வருடங்களாகி விட்டதால் அவ்வளவு எளிதாகக் காலிசெய்ய முடியாது என்பார்.

தீபாவளி நேரங்களில் படுபயங்கர பிஸியாகிவிடுவார்கள் அனைத்து தையல் கலைஞர்களும். வருட சம்பாத்தியத்தின் பெரும்பகுதியை அந்த ஓரிரு மாதங்களில் சம்பாதித்துவிடுவர். அவர்களின் உழைப்பு பிரமிக்க வைப்பது. மதுரையில் சில தையல் கடைகள் கல்லூரி வட்டாரங்களில் மிகவும் பிரபலம். திண்டுக்கல் ரோடின் முடிவில் மீனாட்சி கோயிலுக்கு அருகே இருக்கும் 'சமத்' கடை. இன்னொரு கிளை அமெரிக்கன் கல்லூரிக்கு எதிரே இருக்கும் - ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட கடைகள். ஆதலால் கூலி அதிகம். அவர்கள் ஏஸியில் அமர்ந்து தைப்பதற்கு நாம் ஏன் அதிகம் கூலி கொடுக்கவேண்டும் என்று முணுமுணுத்துக் கொண்டாலும், வேறு எங்கும் தைக்கக் கொடுக்க மாட்டோம். அவ்வளவு தரமான வேலை அவர்களது.

இரவில் மொட்டை மாடியில் படுத்துக்கொள்வோம். வீடு இருந்தது மதுரை-திருப்பரங்குன்றம் சாலையில் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து முதல் பாலத்தின் கடைசிச் சரிவின் இடது பக்கத்தில். எங்கள் வீட்டை அடுத்து கூட்டுறவு சங்கக் கட்டிடமும் (அங்கும் நியாயவிலைக் கடை இருந்தது), அதற்கடுத்து அம்பி மாமாவின் சிறிய பெட்டிக்கடையும் இருந்தது. அம்பிமாமாவும் ஏதோ ஒரு வகையில் தூரத்து உறவு. எப்போது போனாலும் கடலை மிட்டாய் ஒன்றை கேட்காமலே எடுத்துக் கொடுப்பார். 'டெய்லி ஒண்ணாவது சாப்பிடு' என்பார். ஏன் என்று கேட்டதற்கு அவர் கொடுத்த விளக்கம் இது. 'கடலையை மட்டும் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும். வெல்லம் மட்டும் சாப்பிட்டால் வயித்தால போகும்; ரெண்டையும் சேத்து சாப்பிட்டா சமாதானம் ஆயிரும். ஒடம்புக்கு ரொம்ப நல்லது' - இது எப்படி இருக்கு? அதையெல்லாம் இடித்து பெரிய கட்டிடம் எழுப்பி, பங்குச் சந்தை அலுவலகம் ஏதோ ஒன்று வந்துவிட்டது என்று கேள்விபட்டேன்.

அவர் கடைக்கு அடுத்து தமிழ்நாடு பாலிடெக்னிக். அதற்கு எதிர்புறம், மதுரைக் கல்லூரி. எங்கள் வீட்டு மொட்டைமாடியிலிருந்து பார்த்தால், பாலத்தில் வரும் வாகனங்களையும், அதற்கடுத்தாற்போல் இருக்கும் மதுரைக் கல்லூரியின் விசாலமான (இதை அடிக்கடி 'விலாசமான' என்று தப்பாக எழுதுவேன்) விளையாட்டு மைதானமும்.

பெரியார் நிலையத்தில் இருந்து வெளியில் வந்ததும் இருநூறு மீட்டரில் 'திடீர் நகர்' (பெயர்க்காரணம் தேடவே தேவையில்லாத பெயர்!). அடுத்து 'மெஜூரா காலேஜ்'. அடுத்து 'ஆண்டாள்புரம்', 'வசந்த நகர்', பழங்காநத்தம் (பழம்,காய் நாற்றம் மருவி இப்படி ஆயிருக்குமோ?) அப்புறம் அழகப்பன் நகர் வந்து, பைக்காரா வரும். அந்தப்பக்கம் வைகை முட்காட்டை (ஆறு எங்கே ஐயா இருக்கிறது!) கடந்தால் இன்னொரு குறு மதுரை நகரம் பரந்து விரிந்து அழகர் கோயில் வரை இருக்கிறது. 'ஐயர் பங்களா' என்றொரு நிறுத்தம். அந்த காலத்தில் ஆளில்லா அத்துவானக் காட்டில் முதன் முதலில் பங்களா கட்டி ஐயர் குடியேறியிருக்கலாம்!. இதைச் சொல்லும்போதே எஸ்.வி.சேகரின் Crazy thieves in palavakkam நாடகம் நினைவுக்கு வருகிறது. :)

சு.ம.புரம் வீட்டிலிருந்து பழங்கா நத்தத்தில் உள்ள ஒரு சந்தில் இருந்த வீட்டில் சில மாதங்கள் இருந்து விட்டு, என் யெஸ்டி பைக்கின் கனத்தை (மேல்மாடி) வீட்டுக்காரம்மா பார்த்து பயந்து, வண்டியை உள்ளே நிறுத்த அனுமதிக்காததால் (தரை உடைந்து விடும்), டிவிஎஸ் நகருக்குக் குடி பெயர்ந்தோம். அங்கு கீழ் வீட்டில் வீட்டுக்காரர் இருக்க, நாங்கள் மாடிவீட்டில். வீட்டுக்காரருக்கு ஒரு பைபாஸ் ஆகியிருந்ததால், அதிர்ச்சி தரும் விதமாக ஏதும் நடக்கக் கூடாது என்று சொன்னார்கள். பால் காய்ச்சி குடிவந்த முதல்நாளே, வண்டியை வீட்டின் முன் கொண்டு வந்த நிறுத்த, இடி இடித்த அதிர்ச்சியுடன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வந்த வீட்டுக்காரர் 'கொஞ்சம் சவுண்டை குறைக்கக் கூடாதா?' என்று கேட்க, அந்த வயதின் ஆணவத்தில் 'வண்டில வால்யூம் கன்ட்ரோல் இல்லையே மாமா?' என்றிருக்கிறேன்.

வீட்டில் சற்று வேகமாக நடந்தால், கீழே இருந்து குரல் வரும் 'ஓடாதீங்க. திம்மு திம்முன்னு சத்தம் வருது' என்று. தண்ணீர்த் தொட்டி காலியாகி குழாயில் நீர் வராவிட்டாலும் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட கால அளவுக்கு மட்டுமே நீர் ஏற்றுவார்கள்.

வத்திராயிருப்பிலும், முசிறியிலும், தண்ணீரிலேயே கிட்டத்தட்ட வாழ்ந்துவிட்டு, மதுரை நகர வாழ்க்கை நரகமாக இருந்தது என்றால் மிகையாகாது. அந்த வீட்டிலும் இரு வருடங்களுக்கு மேல் இருக்கவில்லை. காலி செய்யக் காரணம் எனது வண்டியின் சத்தமும், வீட்டுக்காரரின் நெஞ்சுவலியும்.

எதிர்வீட்டில் பள்ளித்தோழன் முரளி இருந்தான். அவன் வீட்டில் இரண்டு பசுக்கள் இருந்தன. அவன் ராசி ரிஷபம். இன்னொரு நண்பன் ராஜாங்கம் (First Blood புகழ்) அவர்கள் ரைஸ் மில்லில் நிறைய ஆடுகள் வளர்த்தான். அவன் ராசி மேஷம்.

என் அண்ணன் குமார் பிறந்த தினம் அக்டோபர் இரண்டு. நண்பன் பசுபதி (முசிறி) ஜனவரி 26. இன்னொரு நண்பன் செல்வா (முசிறி-மதுரை) ஆகஸ்ட் 15. மூன்று பேர் பிறந்த நாட்களன்று நாட்டுக்கே விடுமுறை என்று முன்பு பெருமையடித்துக் கொண்டிருந்தார்கள். குறைந்த பட்சம் எனக்கு அவர்கள் பிறந்த தினங்கள் மறக்காமலிருக்கிறது!

முரளியின் அண்ணன் சுந்தா (சுந்தரராமன்) அப்போது சி.ஏ. படித்துக்கொண்டு இருந்தார். ஆள் பார்க்க மெளனராகம் கார்த்திக் மாதிரி இருப்பார். சி.ஏ. என்றதும் ஞாபகம் வருகிறது. பி.காம். படித்துவிட்டு சி.ஏ. 'பண்ணுவது' அப்போது பிரபலம். யாரைக்கேட்டாலும் 'சி.ஏ. பண்ணுகிறேன்' என்பார்கள். எனக்குத் தெரிந்து கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடங்களாக அதையே சொல்லிக்கொண்டு இருந்தவர்கள் நிறைய பேர்.

நான், ராஜாங்கம், செல்வா மற்றும் பசுபதி ஆளுக்கொரு யெஸ்டி வைத்திருக்கிறோம். கொடைக்கானலுக்கு எப்போதும் அதில் தான் போவோம். இதுவரை கொடைக்கானலுக்கு நான்கு சக்கர ஊர்தியில் சென்றதில்லை. யெஸ்டியின் 250 ஸிஸி வலிமை மலைகளில் பயணிக்கும்போது தெரியும். மற்ற 100 ஸி.ஸி.க்கள் திணறும்போது, நாங்கள் மூன்று பேர் ஒரு வண்டியில் அனாயசமாகச் செல்வோம். எங்கள் அனைத்து வண்டிகளின் எரிபொருள் டாங்க்கில் Bad Guys என்று எழுதி வைத்திருந்தோம் (மைக்கேல் ஜாக்ஸனின் பரம விசிறிகள் நாங்கள்). பெட்ரோல் குடிப்பது ஒன்று தான் யெஸ்டியின் ஒரே குறை. ஒரு லிட்டருக்கு அதிக பட்சம் 30 கி.மீ. தான் வரும். ஆனால் நீங்கள் உடற்பயிற்சி செய்யவே தேவையில்லை. அதை வண்டியின் தாங்கியில் இழுத்து நிறுத்தவும், வண்டியை ஸ்டார்ட் செய்யவும் வலிமை வேண்டும் - 150 கிலோவுக்கு மேல் எடை. மிகப் பெரிய பயன் என்னவென்றால் யாரும் ஓஸி கேட்க மாட்டார்கள்! உதைத்துத் துவக்கும்போது தவறு செய்தால் கணுக்கால் காலி! திடீரென்று அணைந்து விட்டால் ஒரு நாள் முழுவதும் உதைத்தாலும் மீண்டும் கிளப்ப முடியாது. மெக்கானிக் வந்து, அதைத் தடவிக்கொடுத்துவிட்டு, சில நொடிகள் கழித்து, ஒரே உதையில் அதைக் கிளப்ப, நமக்கு ஆத்திரமாக வரும். ஒருமுறை சக அலுவலர் ஒருவர் எவ்வளவோ அறிவுரை சொல்லியும் கேட்காமல் அதை இரவல் வாங்கிக்கொண்டு (நான் கிளப்பிக் கொடுத்து) போனவர் மாலைப் பொழுதில், வியர்த்து விறுவிறுத்துப் போய் தள்ளிக்கொண்டு திரும்பி வந்தார்.

பெப்ஸியில் பணிபுரிந்ததாலும், தங்கை பாத்திமா கல்லூரியில் படித்ததாலும், அங்கிருந்து விளாங்குடிக்கு தனிவீடு காம்பவுண்ட் சுவருடன் பார்த்துச் சென்றோம். அந்த இடம், விவசாய நிலமாக இருந்து, பின்பு ப்ளாட் போட்டு விற்றதில், வங்கியில் பணிபுரிந்த ஊழியர் குழுமம் ப்ளாட்டுகள் வாங்கி தனித்தனி வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தனர். சிலர் அவரவர் வீடுகளில் குடியிருந்தனர். அங்கே தான் நிறைய வருடங்கள் இருந்தோம்.

2001-ல் ஸ்ரீரங்கத்தில் ஒரு சிறிய ·ப்ளாட் ஒன்றை எல்.ஐ.ஸி.யில் கடன் வாங்கி, வாங்கி இப்போது பெற்றோர்கள் குடிபெயர்ந்து விட்டார்கள்.

என் வண்டி ஸ்ரீரங்கத்தில் இன்னும் நிற்கிறது. விடுமுறையில் செல்லும்போது (மனைவியின் ஆட்சேபத்தைப் புறக்கணித்து) அதில் வலம் வருவேன். அடுத்த விடுமுறைக்குச் ஸ்ரீரங்கம் செல்லும்போது வண்டியின் க்ளட்ச் மற்றும் ஸ்பார்க் ப்ளக் மாற்ற வேண்டும். சீட்டில் பறவைகள் எச்சமிட்டுக் காய்ந்து அதுவே ஒரு புதிய டிசைன் போன்று இருக்கிறது.

இனிமேல் வீடு காலி செய்யத் தேவையிருக்காது.

***

Tuesday, April 12, 2005

*** பலூன் ***

*** பலூன் ***
Image hosted by TinyPic.com
எங்க ஊர்ல முத்தாலம்மன் சாவடி இருக்கு. வருஷா வருஷம் திருவிழா நடக்கும். சொக்கப்பனை கொளுத்துவாங்க (அவர்: "இன்னிக்கு சொக்கப்பனைக் கொளுத்தும் நாள்" இவர் : "அவரு என்ன தப்பு பண்ணாருங்க?" என்று ஒரு ஜோக் விகடனில் வந்ததாக ஞாபகம்). அது எரியும்போதே சில பேரு கட்டய புடுங்கப் பாப்பாங்க. பொறிபொறியா செதறும். பக்கத்து கடைகள்ல விழுந்துருமோன்னு பயமா இருக்கும். சொக்கப்பனை எரிஞ்சி முடிஞ்சதும், எல்லாரும் கரிக்கட்டை ஒண்ணை சுடச்சுட எடுத்து அவங்கவங்க வீட்டுக்கு கொண்டு போவாங்க. எல்லாரும் போனதும் நானும் தேடிப்பார்த்து சின்ன துண்டு கிடைச்சா வீட்டுக்கு எடுத்துப்போயி கூரைல செருகி வச்சுருவேன். சாம்பல வீபூதியா பூசிக்குவேன். ரொம்ப நல்லதுன்னு அம்மா சொல்லுவாங்க.

முத்தாலம்மன் திருவிழா நடக்கும்போது, அம்மன் சாமிய அழகா அலங்காரம் செஞ்சு வச்சுருப்பாங்க. கண்ணுதான் பாக்க பயமாஇருக்கும். நெறய அபிஷேகம் செய்வாங்க. எளநி, பாலு, தேனு அபிஷேகம் செய்யும்போது மட்டும் நானு, என் பிரெண்ட்ஸ் எல்லாம் சைடுல போயி எல்லாத்தையும் பாட்டில்ல பிடிச்சு குடிப்போம். இனிப்பா இருக்கும். தீர்த்தமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். தண்ணில தொளசி போட்டு சூட வாசனையோட தீர்த்தம் ரொம்ப நல்லா இருக்கும்.

நெறய புதுக்கடை போட்ருப்பாங்க. பொம்மை, டிரஸ்சு, பந்து, பலூன், அப்றம் பூஜை சாமான் கடையெல்லாம் நெறய இருக்கும். நீலக்கலர்ல கோடுகோடா போட்டு பந்துங்கள குமிச்சி வச்சிருப்பாங்க. அம்பது பைசா ஒரு பந்து. அதுல ஊசியால ஓட்டை போட்டு ரப்பர்நூல் நுனில ஈர்க்குச்சி துண்டு ஒண்ண கட்டி ஈர்க்குச்சிய பந்து ஒட்டைல சொருகி உள்ள போட்டுட்டா, குச்சி குறுக்கால விழுந்துகிட்டு ரப்பர் நூல் நல்லா மாட்டிக்கும். நூலோட இன்னொரு நுனிய விரல்ல மாட்டிக்கிட்டு பந்த பிடிச்சி எறிஞ்சா, சொய்ங்ங்னு போயிட்டு திருப்பி கைக்கே வந்துடும். ரொம்ப சூப்பரா இருக்கும். பந்து ரொம்ப கனமா இருந்தா இல்ல ஓங்கி ரொம்ப தூரத்துக்கு எறிஞ்சுட்டா ரப்பர் நூல் அந்துடும். சுள்ளுனு வெரல்ல நூல் அடிச்சி வலிக்கும். பக்கத்து வீட்டு தடியன் கோவிந்து, ரப்பர் நூல இழுத்து விட்டு சுள்ளுன்னு அடிப்பான். எனக்கு கோவமா வரும்.

அன்னிக்கு ராத்திரி சாமிய தூக்கிட்டு மூணு தெருலயும் ஊர்வலம் போவாங்க. சாமி முன்னாடி கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால்குதிரை எல்லாம் ஆடுவாங்க. எனக்கு அதே மாதிரி ஒரு குதிரை பொம்மை வேணும்னு தோணும். ஸ்கூலுக்கு குதிரைல இன்னும் வேகமா போலாம்ல? கரகாட்டம் ஆடுறவங்க மொகத்துல நெறய பவுடர் போட்டு பளபளன்னு ஜிகினால்லாம் தடவிக்கிட்டு இருப்பாங்க.

அப்றமா சறுக்கு மரம். காலைலேயே பெருமாள் கோயில்ல இருந்து சறுக்கு மரத்த கொண்டு வந்துருவாங்க. அடேயப்பா எவ்ளோ நீளமா இருக்கும் தெரியுமா? ரோட்ல குழி தோண்டி அதுல நெட்டுக் குத்தலா நிக்க வச்சுடுவாங்க. ரொம்ப பெருசா இருக்கும். நான் கட்டிப் பிடிச்சி பார்ப்பேன். ரெண்டு கையையும் சேக்கக்கூட முடியாது. அவ்ளோ பெருசு. ஒரு தடவ கஷ்டப்பட்டு ஒரு அஞ்சடிக்கு ஏறிட்டேன்.கோவிந்து வந்து திடீர்னு என் காலப் பிடிச்சு இழுத்துட்டானா. நான் சறுக்கிக்கிட்டு தொம்முன்னு விழுந்தேன். ஒண்ணுக்குப் போற எடத்துல பயங்கரமா வலிச்சு எனக்கு அழுகை வந்துருச்சு. சாயங்காலம் வரைக்கும் எல்லா பசங்களும் அதுல ஏறி ஏறி வெளையாடுவாங்க. அஞ்சு மணி போல ஒரு ஆளு வந்து மஞ்சத் துணில காசுபோட்டு முடிஞ்சி, கிடுகிடுன்னு சறுக்கு மரத்து மேல ஏறி உச்சில கட்டிட்டு, சர்ருன்னு எறங்கினாரு. அவருக்கு வலிக்கவேயில்லை போல. சிரிச்சிக்கிட்டே போனாரு. என் பிரண்டு மணிகிட்ட கேட்டப்ப, பெரிய ஆளுங்க சறுக்கு மரத்துல ஏறும்போது, இரும்புல ஜட்டி போட்டுகிட்டுதான் ஏறுவாங்கன்னு சொன்னான். நான் டிராயரு மட்டும் தான் போடுவேன். ஜட்டியெல்லாம் இன்னும் பெரியவனா ஆனப்புறம் போடலாம்னு அம்மா சொன்னாங்க. இரும்பு ஜட்டிய பாத்ததே இல்ல. மதுரை டவுன்ல தான் கெடைக்குமாம்.

ஆறு மணி போல அதே ஆளு ஒரு பெரிய வாளி நெறய கஞ்சி பசையோட வருவாரு. இன்னொரு டப்பால ஏதோ எண்ணை இருக்கும். வாளில கயிறு கட்டி, கயிற மட்டும் பிடிச்சுக்கிட்டு மேல ஏறி உச்சில போயி ஒரு குறுக்குக் கட்டயில வசதியா உக்காந்துகிட்டு, கயிற மேல இழுப்பாரு. வாளி கைக்கு வந்ததும், அதுல இருந்து கொழகொழ கஞ்சி பசைய எடுத்து மரத்து மேல இருந்து தடவிக்கிட்டே கீழ எறங்குவாரு. மொதல்ல எண்ண. அப்றம் கோந்து. எவ்ளோ கோந்து தெரியுமா? அப்படியே கீழ வரைக்கும் புல்லா தடவி முடிச்சுருவாரு. அப்றம் எங்களை மரத்து பக்கத்துல விட மாட்டாங்க. ஏழு மணிக்கு நெறய ஆம்பளையாளுங்க ஜட்டி மட்டும் போட்டுக்கிட்டு வந்து ஏற ஆரம்பிப்பாங்க. சாதா துணி ஜட்டிதான். இரும்பெல்லாம் இல்ல. தொம்மு தொம்முன்னு விழுவாங்க. அப்றம் நெறய சக்தியோட இருக்கற ஒரு ஆளு கீழ நின்னுக்கிட்டு மரத்த கட்டி புடிச்சுக்குவாரு. அவரு தோள் மேல இன்னொரு ஆளு ஏறி, கோந்தெல்லாம் வழிச்சு வழிச்சு கூட்டத்து மேல எறிவாரு. அப்டியே ஒருத்தரு மேல ஒருத்தரா ஏறி மேல போவாங்க. எல்லார் மேலயும் தண்ணிய ஊத்துவாங்க. வீட்டு மாடில நின்னுக்கிட்டு ட்யூப் மூலமா தண்ணீய பீச்சி அடிப்பாங்க. கீழ இருக்கற ஆளு சில சமயம் வலி தாங்காம வெலகிடுவாரு. எல்லாரும் தொம்முன்னு வழுக்கி விடுவாங்க. இப்படியே ஒருமணி நேரத்துக்கு மேல ஆயிடும். கடைசியா ஒருவழியா ஏறி மஞ்சத் துணி முடிச்ச எடுத்து எறங்கிடுவாங்க. எல்லாத்துக்கும் மாலை போடுவாங்க. முடிச்சுக்குள்ள இருக்கற பணத்த பிரிச்சுக்குவாங்க.

அதுக்கு அப்றமா உரியடி நடக்கும். கண்ணுல துணிய கட்டிக்கிட்டு கைல கம்பு ஒண்ண கொடுத்து சர்ருன்னு சுத்திவிட்டு உரிய அடிக்கச் சொல்வாங்க. உரிய விட்டுட்டு சிலபேரு எங்கேயோ போயி கம்ப வீசிப் பாப்பாங்க. எனக்கு சிரிப்பா வரும். ஒரு ஆளு கோவிந்து தலைல நங்குன்னு அடிச்சார் பாருங்க. நல்லா வேணும்னு நினைச்சிக்கிட்டேன். சுத்தி நின்னு வேடிக்க பாக்குறவங்க சும்மா இருக்காம அங்க போ இங்க போன்னு கண்ணு கட்டுன ஆள இழுத்தடிப்பாங்க. உரியடி ரொம்ப சிரிப்பா இருக்கும்.

எனக்கு பலூன்னா ரொம்ப பிடிக்கும். ஆனா கைல காசில்லயே என்ன பண்றது? நெறய பசங்க பலூன் வாங்கிக்கிட்டு போவாங்க. விதவிதமா பலூன் இருக்கும். ரொம்ப நல்லா இருக்கும். பலூன் விக்கற ஆளு உஸ்ஸ¤ன்னு ஊதி ஊதி டக்குன்னு நூல் கட்டி கொடுப்பான். ஊதும்போது வெடிச்சிரும்னு பயமா இருக்கும். நான் பாத்தவரைக்கும் ஒரு பலூன் கூட வெடிக்கலை. கையில தடி மாதிரி ஒரு பலூன வச்சுக்கிட்டு கிர்ரக் கிர்ரக்னு சவுண்டு விட்டுக்கிட்டே இருப்பான். அதையே முறுக்கி முறுக்கி பொம்மையா செய்வான். எனக்கு ரொம்பஆச்சரியமா இருக்கும்.

ஒரு பலூன் கூட வாங்க முடியலைன்னு சோகமா இருந்தப்பதான் மணி வந்தான்.

'டேய் ராஜா. என்ன இங்க நின்னுகிட்டு இருக்க? ஒன்னோட அப்பத்தா தேடுச்சு'

'போடா. அதுக்கு வேற வேலையில்ல. சாப்பிட கூப்பிடும்'

'வரயா இல்லயா'

'நான் வர்லை. நீ போ'

மணி பலூன் வாங்கிட்டுப் போனத பாத்து எனக்கு ஏக்கமா இருந்துச்சு. அழகா நீலக்கலர் பலூன் அது. எனக்கு நீலக்கலர் ரொம்ப பிடிக்கும். மணி போனதும் இன்னொரு பையன் பலூன் வாங்கி அவனே ஊதறேன்னு ஊதினானா; அது டம்முன்னு வெடிச்சிருச்சி. அவன் அத கீழப் போட்டுட்டு ஓடிப் போயிட்டான். அந்த ஒடஞ்ச பலூன எடுத்து ஒடஞ்ச எடத்துல இன்னொரு முடிச்சு போட்டு ஊதிப் பாத்தேன். குட்டி பலூன் மாதிரி இருந்திச்சு. சரி நமக்கு கிடச்சது அவ்ளவுதான்னு மனச தேத்திக்கிட்டேன்.

பசிக்க ஆரம்பிச்சதால மெதுவா வீட்டுக்கு நடந்தேன். வழக்கம்போல கீழ பாத்துக்கிட்டே. கொஞ்ச தூரம் நடந்ததும் கீழ லைட் ப்ளூ கலர்ல ஒரு பலூன் காத்து போயி கெடந்துச்சு. மணி பலூன வெடிச்சி கீழ போட்டுட்டு போயிட்டானான்னு எடுத்துப் பாத்தா முழுசா ஒடயாம ஆனா கொஞ்சம் மண் ஒட்டிகிட்டு இருந்துச்சி. கலர் கொஞ்சம் வேற மாதிரி புளு கலர். ஆஹா. எனக்கு ரொம்ப சந்தோஷம். சாமி தான் நான் ஆசைப்படறத பாத்துட்டு கொடுத்துருகாருன்னு நினைச்சிக்கிட்டேன். டக்குன்னு எடுத்து மண்ண தட்டி விட்டு பார்த்தேன். ஒரு ஓட்டை கூட இல்லை. நல்ல ஸ்ட்ராங்கா குவாலிட்டியா இருந்துச்சு. பக்கத்துல இருந்த நல்ல தண்ணிக் குழாய்ல கழுவிட்டு சட்டைல தொடச்சிப்பாத்தா புதுசுமாதிரி ஆயிருச்சி. தம் கட்டி ஊதினா எவ்ளோ பெருசா வந்துச்சு தெரியுமா. எனக்கு பயங்கர சந்தோஷமா இருந்துச்சு. கைல நூல் இல்லாததால பலூன் வாய முறுக்கி பிடிச்சிக்கிட்டு குடுகுடுன்னு வீட்டுக்கு ஓடினேன். கோவிந்து பாத்தா புடுங்கிருவான்னு பயமா இருந்துச்சு. நல்ல வேளை அவன் பாக்கல. எதுத்த வீட்டு குமார் அண்ணன் பாத்துட்டு 'எங்க கெடைச்சதுடா?'ன்னு கேட்டாரு.

'தெருவுல கீழ கெடந்துச்சுண்ணே'

'எங்க?'

'சுப்புணி டாக்டரு வீட்டு முன்னாடி'

'அப்பிடியா?'ன்னு கேட்டுட்டு சிரிச்சுக்கிட்டே உள்ள போயிட்டாரு.

எங்க வீட்டு வாசல்ல தோல் செருப்ப பாத்ததும் அப்பா ஊர்ல இருந்து வந்திருக்காருன்னு தெரிஞ்சு போச்சு. அய்யோ. லேட்டா வந்ததுக்கு திட்டுவாரேன்னு யோசிச்சேன். பலூன பின்னாடி மறச்சுகிட்டு உள்ள போனேன். அப்பா பாத்ததும் சிரிச்சாரு. எனக்கு சந்தோஷமா இருந்துச்சு. 'ராஜா.. வாடா இங்க'ன்னு கூப்பிட்டு கைல ஒரு பொட்டலத்த கொடுத்தாரு. பக்கோடா வாசனை. ஹை. எனக்கு பக்கோடான்னா ரொம்ப பிடிக்கும். பொட்டலத்த வாங்கறதுக்கு கைய நீட்டுனேனா, பலூன் லூசாயி சர் புர்ருன்னு வீட்டுக்குள்ள சுத்திசுத்தி பறந்து அப்பா மடில போயி விழுந்துச்சு. அப்பா அத எடுத்து பாத்ததும் அவரு மூஞ்சி மாறிச்சு. 'எங்கருந்து எடுத்தே இத?'

'தெருவுல கெடந்துச்சுப்பா'

சடால்னு எழுந்து என் தலை முடிய பிடிச்சு சப்சப்னு நாலு அறை விட்டார். எனக்கு சுள்ளுன்னு வலிச்சி அழுதேன். 'அடியே இந்த எச்சக்கலப்பய எத எடுத்து வந்துருக்கான் பாரு'ன்னு கத்தினார். அம்மா சமயல் கட்டுல இருந்து வந்து பாத்துட்டு 'அய்யய்யோ'ன்னாங்க. கீழ கெடக்குற சாமானையெல்லாம் எடுக்கக்கூடாதுன்னு அம்மா சொல்லிருக்காங்கதான். ஆனா எனக்கு பலூன் வாங்க காசு கொடுத்தாங்கன்னா நான் ஏன் கீழ கெடந்த பலூன எடுக்கப் போறேன்.? 'அப்பா நல்லா கழுவிட்டு தான் ஊதினேன்'ன்னு சொன்னேன். 'நாயே.. இனிமே கண்டகண்டதையும் தெருவுல கிடந்தா தொடுவியா?'ன்னு அப்பா மறுபடியும் பளார்னு அடிச்சார். 'கருமம் கருமம். இந்த எழவையெல்லாம் எந்த மடையன் தெருவுல போட்டான்?.'ன்னு அத வீட்டுக் கொல்லப்புறத்துல இருக்கற சாக்கடைல தூக்கிப் போட்டார்.

அவரு ஏன் தலைல அடிச்சிக்கிட்டார்னு எனக்கு புரியலைங்க. நீங்க சொல்லுங்களேன். பலூன் கீழ கெடந்தா எடுக்கக் கூடாதா?

***

நன்றி : மரத்தடி.காம் (இக்கதை திண்ணையிலும் வெளிவந்தது)

Monday, April 04, 2005

*** அம்மாயி ***

*** அம்மாயி *** - சிறுகதை

வீட்டு வாசல்ல ட்ரை சைக்கிள் வந்து நின்னுச்சின்னு பாத்தாக்கா வேலு அண்ணன் வந்துருக்கு. வண்டில ரெண்டு மூட்டை. 'அம்மாயீஈஈ. வேலண்ண வந்துருக்காரு அம்மாயி'ன்னு கத்துனேன். 'வந்துட்டானா? மூட்டைய திண்ணைல இறக்கிப் போடச் சொல்லு'ன்னுச்சு அம்மாயி.

வேலண்ண மூட்டைய திண்ணைல இறக்கிப் போட்டுட்டுப் போயிடுச்சு. மூட்டைய அமுக்கிப் பாத்தா அட.. புளியம்பழம்.. ஐ.. அப்ப சாயங்காலம் பள்ளிக்கோடத்துலருந்து வந்ததும் உரிக்க வேண்டியதுதான். நா சந்தோஷத்தோட பள்ளிக்கோடத்துக்குப் போனேன். மதியம் பூரா புளியம்பழத்தை நெனச்சு கடைவாய்ல புளிச்சுக்கிட்டே இருந்துச்சு. ஒரு வழியா மணியடிச்சதும் வீட்டுக்கு வேகமா ஓடிப்போய் திண்ணைல பாத்தா, அம்மாயி புளியம்பழத்தை உரிச்சிக்கிட்டு இருந்துச்சு. 'வாடா.. வந்து உரி'ன்னதும் கிடுகிடுன்னு ஓட்ட ஒடச்சு புளியம்பழத்தை மொறத்துல அடுக்க ஆரம்பிச்சுட்டேன். ஓடு ரொம்ப ஈஸியா ஒடயும். பழம் வளைவு வளைவா நரம்பு ஓடி பிசுபிசுன்னு ஒட்டும். ஓட்டை மொதல்ல ஒடச்சு முடிச்சதும், அப்றம் கொட்டை எடுக்கணும். இன்னிக்கு எப்படியும் ரெண்டுகிலோவாவது முடிக்கணும்னுச்சி அம்மாயி. 'முடிச்சுக் காட்டறேன்'ன்னு வேகமா சோலியப் பாத்தேன். புளியங்கொட்டையெல்லாம் எனக்குத்தான். கொட்டைய வச்சு எவ்ளோ வெளையாட்டு வெளையாடலாம் தெரியுமா? இருங்க. அப்றம் சொல்றேன்.

நைட்டு ஒம்பொது மணிவரைக்கும் ஓட்ட ஒடச்சு முடிச்சதுல மொறம் ரொம்பிருச்சு. அம்மாயி காலைல கொட்டையெடுத்துக்கலாம்னு சொல்லிடுச்சு. நாளைக்கு நாயித்துக்கெழம தானே. பள்ளிக்கோடம் கெடயாதுல்ல.

மறுநா காலைல நான் மொறத்த எடுத்துக்கிட்டு கொல்லைப் பக்கம் கெணத்துக்கல்லுல ஒக்காந்துக்கிட்டேன். அம்மாயி ஓட்ட ஒடைக்கும். நான் கொட்டை எடுக்கணும். நாங்கள்ளாம் அதை புளியமுத்துன்னுதான் சொல்லுவோம். புளியம்பழத்த நசுக்கி முத்து எடுக்க ஆரம்பிச்சேன். புளியமுத்து என்ன பளபளன்னு இருக்குங்கறீங்க? ஆனா கொஞ்சங்கூட ஒட்டவே ஒட்டாது. தெரியுமா? ரெண்டுமணி நேரத்துல மொறத்துல இருந்த பழத்தையெல்லாம் நசுக்கி புளியமுத்து எடுத்தாச்சு. எப்படியும் ஒரு படி இருக்கும். புளிய அம்மாயிகிட்ட கொடுத்துட்டு புளியமுத்தையெல்லாம் எடுத்துக்கிட்டு கெளம்பிட்டேன். நெறய வேலை இருக்குல்ல.

வீட்ல இருந்த பெரிய டம்ளர எடுத்து அதுல கால்வாசி புளியமுத்த போட்டு, தண்ணி ரொப்பி, அலமாரி மேல எடுத்து வச்சிட்டேன். நாளைக்கு காலைல பாத்தாக்கா முத்தெல்லாம் நல்லா ஊறிப்போய் டம்ளர் ரொம்பிரும். அப்றம் அத வேகவச்சு கொஞ்சமா உப்பு சேத்து சாப்ட்டாக்கா..ஆஹா. எவ்ளோ ருசியா இருக்கும் தெரியுமா?

மிச்ச முத்துல இருந்து ரெண்டு கைப்பிடி எடுத்து முடிஞ்சு வச்சுக்கிட்டு, மத்தத ஒரு டப்பால போட்டு வச்சுக்கிட்டேன். முத்து தேய்க்கணும். எங்கூடப் படிக்கற ராஜாமணி அடுத்த தெருல இருக்கான். அவன் வீட்டுக்குப் போனேன். திண்ணைல கோலிய உருட்டிக்கிட்டு இருந்தானா? புளியமுத்த காட்டினதும் அவனுக்கு வாயெல்லாம் பல்லு. ரெண்டுபேரும் திண்ணைல ஒக்காந்துக்கிட்டு ஒவ்வொரு முத்தா தேய்க்க ஆரம்பிச்சோம். புளிய முத்த புடிச்சு தரைல தேய்ச்சா என்னா சூடு வரும் தெரியுமா? ரெண்டு இழுப்பு இழுத்துட்டு பாத்தாக்கா, கரும்பழுப்பு தோலு உரிஞ்சி வெள்ளையா ஆயிரும். தேய்ச்ச பக்கம் வெள்ளை. தேய்க்காத பக்கம் கரும்பழுப்பு. தேய்ச்ச முத்த வச்சு ஆடு புல்¢ ஆட்டம், அப்றம் இன்னும் நெறய வெளையாட்டு வெளையாடுவோம்.

பக்கத்துவீட்டு கோமதி அக்கா ரொம்ப நாளா புளியமுத்து கேட்டுக்கிட்டு இருந்துச்சு. அவங்களுக்கு மிச்ச எல்லா முத்தையும் கொடுத்துட்டேன். அவங்க அப்றம் அவங்க ப்ரெண்டு எல்லாம் சேந்து புளியமுத்த வச்சி பல்லாங்குழி ஆடுவாங்க.

தெருல நெறய பசங்க வெளையாடிக்கிட்டு இருந்தாங்க. ஒரு செட்டு பேந்தா வெளையாடிக்கிட்டு இருக்கு. தெருக்கோடி கோஷ்டி கிட்டிபுள் வெளையாடிக்கிட்டு இருந்துச்சு. அந்த பக்கம் எறிபந்து வெளையாடுறாய்ங்க. ராஜாமணி வீட்டு பக்கம் இன்னொரு செட்டு செதுக்கு முத்து வெளையாடிக்கிட்டு இருந்துச்சு. அதான் எங்க செட்டு. எனக்கு செதுக்கு முத்து வெளையாடணும்போல இருந்துச்சு. ஆனா ஜீவா வெளையாடிக்கிட்டு இருக்கான். அதான் பயம். அவன் இருக்கும்போது போய் வெளையாண்டோம்னா ஒரே ரவுண்டுல மொத்த முத்தையும் தொடச்சு எடுத்துக்கிட்டு போய்டுவான். என் நல்ல நேரம். ஜீவாவ யாரோ வந்து கூப்டதும் அவன் கெளம்பிட்டான். நானும் ராஜாமணியும் ஆளுக்கு பை நெறைய முத்து எடுத்துக்கிட்டு போய் ஆட்டத்துல சேந்துக்கிட்டோம். நாங்க வந்ததும் வட்டத்த பெரிசா போட்டானுங்க. எல்லாரும் ஆளுக்கு அம்பது முத்து வட்டத்துக்குள்ள வச்சு பரப்பிக்கிட்டு ஒரு முப்பத்தடி தள்ளி வரிசையா நின்னுக்கிட்டோம். முத்த செதுக்கறதுக்காக ஒவ்வொத்தணும் விதவிதமா கைல சிப்பி வச்சுருக்கான். சிப்பின்னா கடல் சிப்பி இல்லை. ஒடஞ்ச செங்கல், சிமிண்ட் ஸ்லாபு, அப்றம் ஒடஞ்ச ஓடுன்னு ஆளுக்கு ஒண்ணு வச்சுருப்போம். அதான் சிப்பி. தூரத்துல நின்னுக்கிட்டு விர்ருன்னு சிப்பிய வட்டத்துக்குள்ள செதுக்கற மாரி படுக்க வசத்துல எறியணும். நாம எறிஞ்ச சிப்பி எம்புட்டு முத்த வட்டத்துக்கு வெளில தள்ளுதோ அம்புட்டும் நமக்கு. ஆனா சிப்பி வட்டத்துக்குள்ள இருக்கணும். வட்டத்துக்கு வெளில போச்சுன்னா வெளிய செதறுன முத்த திரும்ப உள்ள வச்சுருவோம். ஜீவா தோசக்கல்லு சைஸ¤க்கு பெரிய சிமிண்டு ஸ்லாப எப்பவும் எடுத்துக்கிட்டு வருவான். அவன் எறிஞ்சான்னா ஒரே செதுக்குதான். மொத்த முத்தும் வெளில போயிரும். சிப்பி மட்டும் கரெக்கிட்டா வட்டத்துக்குள்ள இருக்கும். அதான் அவன் இருக்கும்போது நா வெளையாட மாட்டேன்னு சொன்னேன். இருட்டற வரைக்கும் செதுக்கு முத்து வெளையாண்டுட்டு வீட்டுக்குப் போனேன்.

அப்பத்தான் அம்மா கவெருமெண்ட்டு ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வந்துருக்கு போல. ஒரு வாரமா ஒரே வாந்தி.. என்னென்னு தெரியலை. அம்மாயிகிட்ட கேட்டப்போ 'ஒங்க அம்மா உண்டாயிருக்குடா. கொஞ்ச நாள்ல ஒனக்கு ஒரு தம்பிப் பாப்பா வந்துடும்'னு சொல்லிச்சு. ரொம்ப நாளா எனக்கு சந்தேகம். பாப்பா எப்படி வயித்துக்குள்ள வருதுன்னு. ஊசி வழியா வயித்துக்குள்ள விட்ருப்பாங்களான்னு கேட்டப்போ அம்மாயி 'ஆமாடா'ன்னுச்சு. 'டாக்டரா?'ன்னு கேட்டேன். 'இல்லை; ஒங்கப்பன்'ன்னுச்சு. ஒண்ணும் புரியலை. ஆனாலும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. எனக்கு தம்பியெல்லாம் வேணாம். தங்கச்சிதான் வேணும்னேன். 'போடா போக்கத்த பயலே. ஒங்கப்பன் கேட்டான்ன ஒதைப்பான்'ன்னுச்சு அம்மாயி. அப்றம் நா யார்கிட்டயும் கேக்கல. ஆனா சாமிகிட்ட மட்டும் எனக்கு தங்கச்சி பாப்பா கொடுன்னு கேட்டுக்கிட்டேன். தங்கச்சின்னா எம்புட்டு நல்லா இருக்கும்! பாவாட சட்ட போட்டுக்கிட்டு சடை போட்டுக்கிட்டு எம்புட்டு அளகா இருக்கும்

அம்மா சாயங்காலம் வீட்டுக்கு வந்து படுத்துடுச்சி என்னய கிட்டக்கவே விடமாட்டேங்கறாங்க. நெதமும் அம்மா மேல கால் போட்டுக்கிட்டுதான் தூங்குவேன். கொஞ்ச நாளா அம்மாயி பக்கத்துல படுத்துக்கிட்டு அவங்க மேல கால் போட்டுக்கிட்டு தூங்கறேன். கனவுல பள்ளிக்கோடம்தான் வருது. நெசத்துல நடக்கறமாரியே கனவுலயும் இண்ட்ரவெல் விட்டு எல்லாப் பயல்களும் காம்பவுண்டு மூலைல இருக்கற கக்கூஸ¤ல போய் ஒண்ணுக்கடிச்சுட்டு வருவோம். கனவுலதானன்னு நானும் ஒண்ணுக்கடிச்சா திடீர்னு அம்மா என்னை எழுப்பும். கண்ணு தொறந்து பாத்தா நெசமாவே ஒண்ணுக்கடிச்சிருப்பேன். கருமம். ஆனா அம்மா திட்டவே திட்டாது. அம்மாயிதான் திட்டும். என்ன பண்றது. முழிச்சுருந்தா நான் ஏன் அவங்க மேல ஒண்ணுக்கடிக்கறேன்?

வெயிலு காலமும் ஆரம்பிச்சிருச்சு. பள்ளிக்கோடம் ரெண்டுமாசம் லீவுன்னாங்க. செட்டியார் கெணத்துல தண்ணியும் படிய விட்டுக் கீழ போயிருச்சு. முந்தி மாதிரி கெணத்துல குளிக்க முடியாது. கொளத்துக்குத்தேன் போகணும். கொளம் ஊர்க்கோடில இருக்கு. கெணறு மாரி தண்ணி அம்புட்டு தெளுவா இருக்காது. ஆனா பரவால்லை. குளிக்கலாம். நானும் ராஜாமணியும் கொளத்துக்குப் போனோம். வேலு அண்ணன் கொளத்தங்கரைல நின்னுக்கிட்டு இருந்தாரு. நெறைய வயக்காட்டு ஆளுங்க. ஓஹோ. கதிரறுத்துருக்காங்களா? சரிதான். அப்ப வேலை கெடைக்கும். முந்தியெல்லாம் நெல்லுக் கதிரை மொத்தமா கட்டி அடிபபாங்க. போன வருசம் செட்டியாரு ட்ராக்டரு வண்டி வாங்கிட்டாருல்ல. ட்ராக்ட்டரு இருக்கறதால கதிரு எல்லாத்தையும் தரைல பரப்பி வச்சுருக்காங்க. ட்ராக்டரு துள்ளித் துள்ளி ஓடுது. ட்ராக்டரு அடிச்சு முடிச்சதும் கதிரு எல்லாத்தையும் அள்ளுனாங்க. கதிரு என்ன கதிரு. அது வக்க்யல் தான். நெல்லு எல்லாம் பிரிஞ்சு தரைல கெடக்கு. வேலை எவ்ளோ சுளுவா முடிஞ்சு போச்சு பாருங்க. ஆளுங்க வக்க்யலு எல்லாத்தையும் அள்ளி குமிச்சிட்டாங்க். மூணு வக்க்யப் போரு. நெல்லு எல்லாத்தையும் வெளக்கமாறு வச்சு கூட்டி குமிச்சிட்டாங்க. இனிமே எண்ண வேண்டியதுதான். வேலு அண்ணன் எங்களக் கூப்ட்டு மரக்கா எண்ணனும்னாரு. அவங்களுக்கு அம்பதுக்கு மேல ஒழுங்காவே எண்ணத்தெரியாதுல்ல. நானும் ராஜாமணியும் அளகா எண்ணுவோம். வேலு அண்ணன் மரக்கா கொண்டுவந்து ரொப்பி ரொப்பிக் கொடுக்க நானும் ராஜாமணியும் எண்ணினோம். எண்ணுனத எல்லாத்தையும் இன்னொரு எடத்துல் அம்பாரமா குமிச்சாங்க. அம்பது மரக்கா ஒரு அம்பாரம். மொத்தம் எண்ணி முடிக்கும்போது ஐநூத்தி எழுவத்தஞ்சு மரக்கா இருந்துச்சு. செட்டியாருக்கு சந்தோஷம். நல்ல அறுவடைன்னு சொன்னாரு. அம்பாரம் முடிச்சதும் ஒவ்வொண்ணு மேலயும் சாணித் தண்ணில கோடு போட்டுட்டு, அச்சு வச்சிட்டாங்க. மறுநா காலைல வந்து பாக்கும்போது அது கலையாம இருக்கணும். கலைஞ்சிருந்தா திருட்டு நடந்திருக்குன்னு அர்த்தம்.

சொச்ச நெல்லை கூலியாளுக எல்லாத்துக்கும் அளந்து கொடுத்திச்சு வேலு அண்ணன். எனக்கும் ராஜாமணிக்கும் ஆளுக்கு ஒண்ட்ரை மரக்கா நெல்லு. குளிச்சுட்டு தொடைக்கறதுக்கு எடுத்துட்டுப்போன துண்டுல நெல்ல வாங்கிக்கிட்டோம். வீட்டுக்கு வர்ற வழில இருக்கற பேச்சி கடைல ஒரு மரக்கா நெல்ல எடைக்குப் போட்டோம். கடை வெளில வரிசைய எண்ண டின்னு அடுக்கி ஒரே எண்ணை வாசனையா இருக்கும். ஆளுக்கு அஞ்சு ரூவா கொடுத்திச்சு பேச்சி. பெரிய தொங்கட்டானும் மூக்குத்தியும் போட்ருக்கும் அது. பேச்சிக்கு ஒரு பொண்ணு இருக்கு. என்னய விட ஒண்ணு ரெண்டு வயசு கம்மின்னு நெனைக்கிறேன். எனக்கு பேச்சின்னா இப்பல்லாம் பிடிக்கறதுல்ல. ஏன்னு கேக்கறீங்களா? எப்பயும் மாமாதான் பேச்சி கடைல பலசரக்கு வாங்குவாரு. அவர்கூட நானும் போவேன். எல்லா சாமானும் வாங்கிமுடிச்சதும் எனக்கு பொரிகடலை பொட்டணம் ஒண்ணு வாங்கிக் கொடுப்பாரு. போன வாரம் மாமா சுந்தரபாண்டியத்துக்கு ஏதோ சோலியா போயிட்டாருன்னு அம்மாயி என்ன சாமான் வாங்கிட்டு வரச் சொல்லிச்சு. லிஸ்ட்ட எடுத்துக்கிட்டு பேச்சி கடைக்குப் போனேன். பேச்சி கடைக்குள்ள எண்ணைய அளந்துக்கிட்டு இருந்துச்சு. பேச்சியோட பொண்ணு கல்லால ஒக்காந்துக்கிட்டு பொஸ்தகம் படிச்சிக்கிட்டு இருந்துச்சு. நான் அதை எப்படிக் கூப்பிடறதுன்னு தெரியாம முழிச்சேன். 'இந்தா..'ன்னேன். அது நிமிந்து பாக்கவே இல்லை. கொஞ்சம் சவுண்டா 'இந்தா புள்ள...'ன்னேனா. கடைக்கு உள்ள இருந்து பேச்சி வெளிய வந்து 'அடி வெளக்குமாத்தால. அவ என்ன ஒம் பொண்டாட்டியா? புள்ள-ன்னு கூப்பிடறே? சாமான அத்துருவேன்'ன்னு கத்திச்சு. அவங்க தேவமாருங்க. அவங்க இதுல பொண்டாட்டிய 'புள்ள'ன்னு கூப்பிடுவாங்கன்னு அப்பத்தான் எனக்குத் தெரியும். நான் என்ன வேணும்னா கூப்பிட்டேன்? அப்படியே தெரிஞ்சிருந்தாலும் போயும் போயும் பேச்சிப் பொண்ணையா புள்ள-ன்னு கூப்பிடுவேன்? அதும் அது மூச்சியும்.. அன்னிலருந்து நா பேச்சி கடைக்கு தனியா போமாட்டேன்னு சொல்லிட்டேன். ஆனா இன்னிக்கு ராஜாமணியும் கூட இருந்தான்ல. அதான் தைரியமா போய் நெல்லு போட்டேச்சு.

மிச்ச அரை மரக்கா நெல்ல எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போய் அம்மாயிகிட்ட கொடுத்தேன். அவங்க அத குத்தி அரிசியாக்கிக்குவாங்கன்னு தெரியும். நா ஒரு கை அள்ளி வாய்ல போட்டுக்கிட்டேன். 'கூரா இருக்கும்டா. தொண்டைல சிக்கிச்சுன்னா கிழிச்சிரும். மூச்சுத் தெணறி செத்துப் போய்டுவே'ன்னு அம்மாயி கத்துச்சு. அதுக்கு வாய்ல பல்லே கெடயாது. எல்லாத்தையும் இடிச்சு இடிச்சுத்தான் திங்கணும். எனக்கு என்ன அப்படியா? நுப்பது பல்லு இருக்குல்ல. இன்னும் ரெண்டு பல்லு தான் பாக்கி. எப்ப வரும்னு தெரியலை. அதை விடுங்க. 'அதெல்லாம் ஒண்ணும் ஆவாது. இங்க பாரு நல்லா கடிச்சு அரைச்சுத்தான் திங்கறேன்'ன்னு ஈன்னு பல்லைக் காட்டினேன். நெல்லுப் பாலு வாயோரத்துல வழிஞ்சிச்சு. 'சொன்னா கேக்கமாட்டான் எடுபட்ட பய'ன்னு திட்டிட்டு அம்மாயி உள்ள போயிருச்சு. நான் ராஜா மணி வீட்டுக்குப் போலாம்னு கெளம்பினேனா. உள்ள இருந்து அம்மா கத்துற சத்தம் கேட்டுச்சு. என்னன்னு பாக்கலாம்னு வீட்டுக்குள்ளப் போனா வீட்ல இருந்த அக்கம்பக்கத்து பொம்பளைங்க 'ஒனக்கு ஒண்ணும் இல்லை போடா'ன்னு சத்தம் போட்டு என்னய வெரட்டி விட்டுட்டாளுங்க. அம்மாவுக்கு வலிஎடுத்து புள்ள பொறக்கப் போவுதுன்னு தோணிச்சு. தங்கச்சிப் பாப்பாதான் வேணும்னு சாமிக்கிட்ட இன்னொரு தடக்கா வேண்டிக்கிட்டேன். திண்ணைல தங்கச்சிப் பாப்பாவுக்காக நடை-வண்டி நானே செஞ்சது; அப்றம் பனம்பழ செரட்டைல சின்ன வண்டி எல்லாம் வச்சுருக்கேன். ரொம்ப கவலையா இருந்துச்சு. ராஜாமணி வீட்டுக்குப் போனேன்.

ராஜாமணிட்ட 'எப்படிடா கொழந்த பொறக்கும்?'னு கேட்டேன். எனக்கு எங்க இருந்து கொழந்த வரும்னு ஒரே சந்தேகம்.

'ஒண்ணுக்குப் போற எடத்துல இருந்துடா'ன்னான் அவன்.

எனக்கு பயங்கர ஆச்சரியமா இருந்துச்சு. 'அது ரொம்ப சின்ன எடமாச்சேடா. அதுல இருந்தா அம்புட்டுப் பெரிய கொழந்த பெறக்கும்?'ன்னு கேட்டேன்.

'ஆமாண்டா. அது கிழிஞ்சு அதுல இருந்துதான் பாப்பா வரும். இல்லாட்டி பொம்பளையாளுங்களே கிழிச்சு வெளில எடுத்துடுவாங்க'ன்னான். இவனுக்கு எப்படி இந்த வெவரமெல்லாம் தெரியும்னு நெனச்சுக்கிட்டேன். சே.. எங்கியாவது ஒடம்புல பெரிய ஓட்டையா இருந்தா கஷ்டப்படாம கொழந்தை வெளில வந்துருமேன்னு தோணிச்சு. என்னவோ போங்க. எனக்கு அம்மாவைப் பாக்கணும்போல இருந்துச்சு. ஆனா விடமாட்டாங்க. அப்படியே தூங்கிப்போய்ட்டேன்.

மறுநா காலைல வீட்டுக்குப்போனா ஒரே கூட்டம். அம்மாயி கொடுத்த துணிமூட்டைய அப்பா கைல தூக்கிட்டு வெளில வர ஒரு கூட்டம் பின்னாடி வருது. என்னயப் பாத்ததும் 'ஒம்பையன் வந்துட்டான் குருசாமி'ன்னு யாரோ சொல்ல அப்பா என்னய ஒருதடவை பாத்தாரு. மொகத்துல களையே இல்லை. அது என்ன கைலன்னு தெரியலை. பொம்பளையாளுங்க அழுவுறாங்க. அம்மாவைக் காங்கலை. அம்மாயி என்னைக் கட்டிப்புடிச்சிக்கிட்டு 'ஒங்கப்பன் பின்னாடி போடா.. பாப்பா செத்துப்போச்சு'ன்னு அழுதுச்சு. எனக்கு ஒண்ணும் ஓடலை. கண்ல தண்ணி மடமடன்னு வருது. 'எப்படி?'ன்னு யார்ட்டயும் கேக்கமுடியலை. ஒண்ணும் பேசாம நடந்தேன். அப்பா கைல வச்சுருந்தது பாப்பாவா. அய்யோ. துணிமூடியிருக்கறதால அதும்மொகத்தக்கூட பாக்க முடியலை. அது எப்படி இருக்கும்னு பாக்கணும்போல இருந்துச்சு. அழுதுகிட்டே அப்பா பின்னாடி போனேன். அப்பா என்ன நெனச்சாருன்னு தெரியலை. துணிய எடுத்துட்டுக் காட்டுனாரு. பாப்பா அப்படியே பூப்போல கண்மூடிக்கிட்டு தூங்கறமாரியே இருந்துச்சு. ஒரு பொம்பளையாளு பாப்பாவோட வாய தொடச்சு விட்டுச்சு. கரும்பழுப்பு கலர்ல.. அது என்ன ரத்தமா தெரியல. திரும்பவும் துணியப் போட்டு மறைச்சுட்டாங்க. சுடுகாட்டுக்குப் போய் சின்னதா குழிதோண்டி அதுல துணிமூட்டைய வச்சு, பூவு மஞ்சத்தண்ணி தெளிச்சு மூடிட்டாங்க.

திரும்ப வந்து அம்மாயி மடில படுத்துக்கிட்டு அழுதேன். அவங்க என்னவோ ராகமா ஒப்பாரி வச்சுக்கிட்டு இருந்தாங்க. அம்மா உள்ள படுத்திருக்காங்க போல. 'என்ன பாப்பா அம்மாயி?'ன்னேன். 'பொட்டப்புள்ளடா'ன்னு நெஞ்சுல குத்திக்கிட்டு அழுதாங்க. அய்யோ. சாமி நா கேட்ட மாரியே தங்கச்சிதான் கொடுத்துருக்கு. அப்றம் எதுக்கு பாப்பா செத்துப் போச்சுன்னு எனக்கு பயங்கர அழுகை அழுகையா வந்து ஓன்னு அழுதேன். அம்மாயி எம்மொகத்தை தடவிக்கொடுத்து 'அழுவாதடா'ன்னுச்சு. அவங்க கை எப்பயும் நடுங்கிட்டு இருக்கும்.

இப்பவும் நடுங்கிக்கிட்டு இருந்துச்சு.

***

அன்புடன்
சுந்தர்

Thanks to : www.maraththadi.com