Sunday, April 17, 2005

*** முசிறி ***

*** முசிறி ***

இருள் கவியத் தொடங்கிய ஓர் அந்தி வேளையில் முசிறி கைகாட்டியில் பேருந்து நிற்க, என் தந்தையைத் தொடந்து நானும் இறங்கினேன். நெடுந்தூரம் பயணம் செய்த அயற்சி கால்களைத் தொய்வடையச் செய்தது. தெரு விளக்குகள் இன்னும் எரியத் தொடங்கவில்லை. தாமதமான சில காகங்கள் சற்று அவசரமாகத் தங்கள் இருப்பிடத்தை நோக்கிக் கரைந்து கொண்டு சென்றன.

கைகாட்டி என்பது முசிறியில் அனைத்துப் பேருந்துகளும் பிரதான நெடுஞ்சாலையில் நின்று செல்லக் கூடிய நான்கு சாலைகள் சந்திக்கும் இடம். முசிறிக்குத் திருச்சி வழியாகவும் வரலாம், சேலத்திலிருந்து தொட்டியம் வழியாகவும் வரலாம். குளித்தலை வழியாகக் காவேரியைக் கடந்தும் வரலாம். நாங்கள் மதுரையிலிருந்து சேலம் செல்லும் பேருந்தில் ஏறி குளித்தலை வழியாக முசிறிக்கு வந்திறங்கினோம். வண்டி முசிறியிலிருந்து வந்த வழியாகத் திரும்பி, காவேரியை ஒட்டிய சாலையில் (அக்கரையில் குளித்தலை) சேலம் செல்லும்.

கைகாட்டியிலிருந்து சற்றே சரிவாகச் செல்லும் சிறிய தெருவில் சென்றோம். இருட்டு சற்று கூடியிருக்க, மின்சாரம் இல்லை என்று கவனித்தேன். நிறைய நாய்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தன. பெரும்பாலும் சைக்கிள்களும், பாதசாரிகளும் பரவியிருந்தனர். ஒரு கசாப்புக்கடை வாசலில் பெரிய மரத்துண்டு மேல் ஆட்டுக்கால் ஒன்று துண்டு போடப்பட்டுக் கொண்டிருக்க, கடைக்கு முன்பு 'முனியான்டி மட்டண் ஸ்டால்’ என்று எழுதியிருந்து. எனக்கு என்னவோ பெயர்ப் பலகையை மரத்துண்டின் மேல் வைத்து கடைக்காரன் கத்தியால் தமிழ் எழுத்துகளைத் துண்டாக்குவது போல் ஒரு பிரமை.

இருசக்கர வண்டியில் பயணிக்கும் போது எதிரே வரும் வாகனத்தின் எண்ணைக் கவனித்து மனனம் செய்ய முயற்சிப்பது என் பழக்கம். கடைசியாக என்னைக் கடந்த வாகனத்தின் எண்ணைப் பெரும்பாலும் ஞாபகத்தில் வைத்திருப்பேன் - அடுத்த வாகனம் கடக்கும் வரை. விளையாட்டுப் போல் தொடங்கியது இப்போது பழக்கமாகவே ஆகிவிட்டது. இதேபோல் கடைகளின் பெயர்ப் பலகைகளையும் தொலைகாட்சிகளின் தலைப்புச் செய்திகளின் எழுத்துக்களையும் படிப்பது வழக்கமாகி விட்டது. தமிழ்த் தொலைக்காட்சிகளில் வரும் தப்பும் தவறுமான அறிவிப்புக்களைப் பார்க்கும் போது கோபம் கோபமாக வரும்.

மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்தின் முன்புறம் 'நல்லூழ் உணவகம்’ என்ற பெயர்ப் பலகை தாங்கிய சிற்றுண்டிக் கடையைப் பார்த்திருக்கிறீர்களா? பேருந்தில் அந்தக் கடையைக் கடக்கும் போதெல்லாம் சட்டென்று இறங்கி அந்த கடை உரிமையாளரைப் பாராட்டி நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றும். அடுத்த முறை விடுமுறையில் மதுரை செல்லும்போது கட்டாயம் சொல்வேன்.

இன்னும் சில வருடங்களில் தமிழ் நாட்டில் தமிழில் பேசுபவர்களைப் பார்த்தாலே நன்றி சொல்வோம் போலிருக்கிறது.

'Morning late-ஆ எலுந்து Fast-ஆ Ready-ஆயி, dress பன்னி, tiffin சாப்ட்டு, bus stop-ல wait பன்னி, full crowd-ஆ வர்ர bus-ல ஏறி dress-ஸெல்லாம் spoil-யிலாயி, conductorகிட்ட ticket வாங்க change இல்லாம திட்டு வாங்கி, stop வந்ததும் office-க்கு ஓடி G.M.கிட்ட late-ஆ வந்ததுக்கு memo வாங்கி, pending files-ஸ clear செஞ்சு work-க finish பன்னி முடிக்கறதுக்குள்ள exhaust ஆயிடறேன்’ என்ற ரீதியில் தமிழ் ஓடிக் கொண்டிருக்கிறது. ஓரளவு ஆங்கிலக் கலப்பின்றித் தமிழ் கேட்க வேண்டுமென்றால் தென் மாவட்டங்களுக்குத் தான் ஓடவேண்டும்.

எப்போதோ ஒருமுறை டெல்லியில் குண்டு வெடித்த போது எல்லா நாளிதழ்களிலும் அது தலைப்புச் செய்தியாக வர, ஒரு பிரபல நாளிதழில் 'டெல்லியில் குண்டு வெடித்தது’என்று அச்சு செய்யும் போது 'டு'வுக்கு பதிலாகத் தவறுதலாக 'டி’ போட்டு விட்டார்கள் என்று தினமலர் அந்து மணி ஒரு முறை எழுதியிருந்தார். சிரிக்காதீர்கள்.

இன்னுமொரு விஷயம். நாட்டிலிருக்கும் அனைத்து கசாப்புக் கடைகளையும் அவற்றில் உபயோகப் படுத்தப்படும் மரங்களையும் (எத்தனை பெரிய மரத் துண்டு! எவ்வளவு வயதான மரமாக இருக்க வேண்டும்!) கணக்கெடுத்துப் பார்த்தால், எவ்வளவு மரங்களையும், அதை நம்பியிருக்கும் சிறிய எளிய பிராணிகளையும் மனிதன் வதம் செய்கிறான் என்பது தெரியவரும். இந்த பூமியில் நாம் வாழ அனைத்தையும் பதம் பார்க்கும் நம்மை நினைத்தால் விரக்தி மிஞ்சுகிறது. சில மனிதர்கள் ஒரு படி மேலேபோய் சக மனிதர்களையே பதம் பார்க்கிறார்கள். ஒரு விதத்தில் கண்ணைப் பாதுகாக்கக் கையை வெட்டுவது போல் தோன்றுகிறது.

ஓரிரு மைல் நடந்ததும் சட்டென்று தெரு இடது பக்கம் திரும்ப 'நேரப் போனா கொஞ்ச தூரத்துல காவேரி’ 'நம்ம வந்தது வடதென் அக்ரஹாரம்.. இப்ப திரும்புனது கிழமேல்(கிழக்கு மேற்கு) அக்ரஹாரம்.. இங்கதான் நம்ம வீடு இருக்கு’ என்றார் அப்பா.

எனக்கு எல்லாமே புதியதாக இருந்தது. காற்றின் வாசனை, அடுக்கடுக்காக இருந்த நெரிசலான வீடுகள், மனித முகங்கள், எல்லாமே புதியவை. வத்றாப்பிற்கும் இந்த ஊருக்கும் எத்தனை வித்தியாசம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். வரலாறு படித்தபோது தொண்டி, முசிறி என்ற ஊர்களைப் பற்றிப் படித்தது நினைவுக்கு வந்தது. அது இந்த முசிறிதானா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

தெருவில் பையன்கள் குழுக்களாக ஆடிக் கொண்டிருந்தனர். ஒரு குழு கிட்டிப்புள் விளையாட, இன்னொரு குழு தெரு ஓரத்தில் குச்சி நட்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது தான் கிரிக்கெட் என்ற விளையாட்டை நேரிடையாகப் பார்த்தேன். மஞ்சள் நிற டென்னிஸ் பந்தை குள்ளமான சிறுவன் ஓடி வந்து வீசியதையும் கிரிக்கெட் மட்டையை வைத்து நின்று கொண்டிருந்த இன்னொரு பையன் அதை கண்ணிமைக்கும் நேரத்தில் அடித்ததையும் ஆச்சரியத்துடன் பார்த்தேன். பந்து வீசிய குள்ளமான பையனின் பெயர் கார்த்திக் என்பதையும் மட்டை வீரனின் பெயர் பிரகலாதன் என்றையும் இரண்டாம் நாள் தெரிந்து கொண்டேன்.

கிரிக்கெட்டைத் தாண்டி வந்ததும் கிடிட்டிப்புள் குழுவில் ஒரு பையன் புள்ளைச் சுண்டி அடிக்கவும், அப்பா என்னை அவர் பக்கம் இழுத்துக் கொண்டு "பாத்து வா.. கண்ல பட்டுறப் போறது” என்றார். நான் எச்சரிக்கையாக நடந்தேன்.

மின்சாரம் இல்லாததால் பெண்மணிகள் வீட்டு வாசலில் நின்று கதைத்துக் கொண்டிருக்க ஆண்கள் விசிறியால் வீசிக் கொண்டு கொசுவைத் துரத்த முயன்று கொண்டிருந்தனர். தெருவில் போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் சில வயசாளிகள் அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டிருந்தனர். வீட்டு வாசல்களில் சிறிய அகல் விளக்குகளும் ஹரிக்கேன் விளக்குகளும் சோகையாக மஞ்சள் ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தன.

தெருவில் மையமாக இருந்த வலது புற வரிசை வீட்டு ஒன்றை நெருங்கியதும் அப்பா 'இது மாடிலதான் வீடு’ என்றார். வீட்டு உரிமையாளர் வெளியில் கயிற்றுக் கட்டிலில் வெற்று மார்புடன் அமர்ந்திருந்திருந்தார். அப்பாவைப் பார்த்ததும் எழுந்து 'வாங்க.. யாரு பையனா?என்னப்பா பேரென்ன?’ என வினவ, நான் அப்பா பின்னே லேசாக ஒளிந்து கொண்டேன் சற்று வெட்கத்துடன். அப்பா 'இது என் ரெண்டாவது பையன். பேரு ரவி. ஸ்கூல்ல சுந்தர்ராஐன்’ என்றார்.

திண்ணையைத் தாண்டி குறுகிய நடைபாதையின் முடிவில் முத்தம் இருக்க, அருகில் இருந்த மாடிப்படிகளில் ஏறினோம். மாடியில் ஒண்டுக் குடித்தனம். ஓர் அறை இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஓடு வேய்ந்திருந்தது. அறையின் முன்புறம் சற்று இடம் விட்டு கைப்பிடிச்சுவர் இருக்க அங்கே நின்றால் முழுத் தெருவையும் இடவலம் திரும்பிப் பார்க்கலாம். தெருவில் வீட்டுக்காரர் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.இருட்டினாலும் விடாப்பிடியாக விளையாடிக் கொண்டிருந்த பையன்களை யாரோ உரத்த குரலில் விரட்ட, விருப்பமில்லாமல் அவரவர் வீடுகளுக்குத் திரும்பினார்கள்.

வீட்டின் உள்ளேயே சேந்தி இருந்தது. அதில் ஆண்டாண்டு காலமாக வத்றாப் வீட்டில் சேந்தியில் இருந்த பொருட்களில் ஒரு பகுதியைக் காண முடிந்தது. அம்மா கல்யாணத்திற்கு வந்த பாத்திரங்களும் மற்றும் சில வீட்டு உபயோகப் பொருட்களையும் கட்டி வைத்திருந்தார்கள். எனக்குத் தெரிந்து யாரும் அதை ஒரு முறையாவது இறக்கி உபயோகப் படுத்தியதாக ஞாபகம் இல்லை. எப்போதும் நூலாம்படை (ஒட்டடை?)யும் தூசியும் படிந்து இருக்கும். இதை ஏன் தூக்கிக்கொண்டு ஊர் ஊராக அலைகிறீர்கள் என்று கேட்டுச் சோர்ந்து போய்விட்டேன். ஸ்ரீரங்கத்தில் போன வருடம் விடுமுறையில் சென்றிருந்தபோது ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீடு வாங்கி, மதுரை வாடகை வீட்டைக் காலிசெய்து பொருட்களை இடம் மாற்றியதில் மதுரை வீட்டு சேந்தியிலிருந்தவை ஸ்ரீரங்கம் வீட்டுச் சேந்திக்கு இடம் மாறிவிட்டன. உண்மையைச் சொல்லப்போனால் உபயோகப்படுத்தும் பொருட்களை விட சேந்தியிலிருக்கும் பொருட்கள் அதிகம். வண்டியில் சாமான்கள் ஏற்றும் போது கோபம் கோபமாக வரும். என்னதான் ஒவ்வொரு முறை வீடு மாற்றும் போதும் கழித்துக் கட்டினாலும் சேந்தி ஒரு வற்றாத அமுத சுரபி போல் எப்போதும் அடைந்தே இருக்கும். முசிறியிலும் சேந்தியில் சாமான்கள் அடைந்து கிடந்தது.

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து அம்மாவைப் பார்த்ததில் ஆனந்தம். பசிக்குதும்மா என்றதும் உடனே தட்டை வைத்து சோறிட்டார்கள். மின்சாரம் வந்துவிட வெளியே அக்கம் பக்க தெருவாசிகளின் ஆசுவாசமான ஆரவாரம் கேட்டது. சாப்பிட்டுவிட்டு அசதியில்தூங்கிப் போனேன்.

காற்றின் சில்லிப்பு தாங்காமல் காலை ஆறு மணிக்கு எழுந்து விட்டேன். இந்த சில்லிப்பும் புதியது. வீட்டின் பின்புற சன்னல் வழியாக நோக்கியபோது, கீழ் வீட்டுக் கொல்லைப்புறமும் அதையடுத்து நிறைய செடிகளும் மரங்களும் பின்பு அடர்ந்த தென்னந்தோப்புக்களும் தென்பட்டன. சன்னலில் வலை போடப்பட்டிருக்க 'கொசுவுக்கா?’ என்று கேட்டேன். அம்மா 'குரங்குக்கும்’ என்றார்.

காவேரி ஓரங்களில் நிறைய தென்னந்தோப்புக்கள் உண்டு. குரங்குகள் அதிகம். அவை வீடுபுகுந்தும் வழிப்பறி செய்தும் தின்பண்டங்களைத் திருடும். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கோபுரங்களில் நிறைய குரங்குகளைப் பார்த்திருக்கிறேன். அவை கோயிலுக்கு வருபவர்கள் கொடுக்கும் வாழைப் பழங்களையும், பொரியையும் தின்னும். வன்முறை செய்து நான் பார்த்ததில்லை. ஆனால் அழகர் கோயிலுக்குச் செல்லும் போது கையில் ஒரு குச்சியுடன் தான் கோயிலில் நுழையவேண்டும். குரங்குகளின் அட்டகாசங்களைப் பற்றி ஒரு தனிப் புத்தகமே எழுதலாம்.

முசிறியில் காவிரிக் கரையை ஒட்டியிருந்த அக்ரஹாரத் தெருவில் அனைத்து வீடுகளிலும் பின்புற சன்னல்களையும் கதவுகளையும் மூடியே வைத்திருப்பார்கள், குரங்குகளுக்குப் பயந்து. தின்பண்டங்கள் போனால் பரவாயில்லை. பாத்திரங்களையும் சேர்த்து தூக்கிக்கொண்டு தென்னந்தோப்புக்குள் ஓடி விடுவதால் வீட்டுப் பெண்மணிகள் கவனமாக இருப்பார்கள். அவர்கள் சமையல் பாத்திரங்களை நகைகளைவிட நேசிப்பவர்கள். அம்மா 'தென்னந்தோப்பு தெரியுதில்ல.. அதுக்கு முன்னாடி வாய்க்கால் இருக்கு.. தோப்புக்குப் பின்னால காவேரி.. இப்போ போய் வாய்க்கால்ல பல் தேய்ச்சுட்டு குளிச்சுட்டு வா.. குமார்(என் அண்ணன்) பசு (பசுபதி) வீட்டுக்கு நேத்திக்கு படிக்கப் போனான். இப்பவந்துருவான். அவனோட வேணா காவேரிக்குப் போய்ட்டு வா’ என்றார்கள்.

முதல்நாள் குளித்தலையிலிருந்து காவேரிப் பாலத்தைக் கடந்து வருகையில் அதில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரைப் பார்த்து நான் நதியின் மேல் பாசமாகியிருந்தேன். ஆதலால் 'குமார் வரட்டும்மா’ என்று சொல்லிவிட்டு வீட்டு முன்புறம் மாடியின் கைப்பிடிச் சுவரின் அருகே நின்று தெருவைக் கவனித்தேன்.

ஈர உடையுடனும் துவைத்துப் பிழிந்த ஆடைகளுடனும், கையில் நதி நீர் நிரப்பிய குடங்களுடனும் பெண்களும் ஆண்களும் தெருக்கோடியிலிருந்து வந்து கொண்டிருக்க, தாமதமாக எழுந்திருந்த சிலர் தோளில் துண்டு,சோப்புப் பெட்டி மற்றும் வாயில் பல் தேய்ப்பானுடன் (பிரஷ்-தமிழில்!) சோம்பலுடன் போய்க்கொண்டிருந்தனர். கீழ் வீட்டு முன் பால்காரன் சைக்கிளுடன் நின்று கொண்டிருக்க, வீட்டுக்கார அம்மாள் தாமதமாக வந்ததற்காக அவனைக் கடிந்து கொண்டிருந்தார். நாய் ஒன்று இலக்கின்றி மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது.

தெருவின் அந்தக் கோடியில் மையமாக இருந்த பொதுக் கிணறு ஒன்றில் பெண்கள் நீரிறைத்து குடங்களை நிரப்பிக்கொண்டிருந்தனர். கை நீட்டினால் தொட்டு விடும் தூரத்தில் தெருவிளக்குகளின் மின்கம்பிகள் இருக்க அதில் அமர்ந்திருந்த காக்கையொன்று நெடு நேரம் என்னையே சந்தேகமாகப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு நான் பார்த்ததும் சட்டென்று பறந்தோடிப் போனது. 'நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். ஏன் ஓடுகிறாய்?’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு திரும்பினால் குமார் நின்றிருந்தான். 'வாடா’ என்று ஒற்றை வார்த்தையில் என்னை வரவேற்று வத்றாப் நிலவரங்களையும், அவன் நண்பர்களைப் பற்றியும் விசாரித்து விட்டு 'குளிக்கப் போவமா?’ என்று கேட்க, அதற்காகவே காத்திருந்த நான் உடனே கொடியில் தொங்கிக் கொண்டிருந்த துண்டை உருவி தோளில் போட்டுக்கொண்டு கிளம்பினேன். காற்றில் இன்னும் குளிர் மிச்சமிருக்க கதிரவன் உற்சாகமாக வானில் ஏறிக் கொண்டிருந்தான்.

தெரு முக்கை அடையும் வரை ஆங்காங்கே வீடுகளிலிருந்து குமாரின் நண்பர்கள் பிரகலாத், கார்த்திக், பிரகாஷ், ராம்கி, மற்றும் பசுபதி எங்களுடன் சேர்ந்து கொள்ள, சிறிய கூட்டமாகக் காவேரி நோக்கி நடந்தோம். பசுபதி வளர்க்கும் செல்ல நாய் ஜுலியும் எங்களுடன் சேர்ந்து கொண்டது (பசு அதைப் பார்த்து 'குப்பாட்ட போலாமா?’ என்று கேட்டதுதான் தாமதம். அது குதூகலத்துடன் சிணுங்கிக் கொண்டு புறப்பட்டு விட்டது! குப்பாட்ட – குளிப்பாட்ட)

செம்மண் பாதையில் இருநூறு மீட்டர் நடந்ததும் சாலை சட்டென்று மேடேற, மேட்டுக்கு அப்பால் நீல வானம் தெரிந்தது. மெதுவாக மேட்டின் உச்சியை அடைந்ததும் உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது. காவிரித்தாய் பிரவாகமாக ஓடிக் கொண்டிருந்தாள். ஆடிப்பெருக்கு சமயம். அவ்வளவு தண்ணீரை நான் வாழ்நாளில் பார்த்ததில்லை. எனக்குத் தெரிந்திருந்தது வத்றாப்பின் குளமும் விவசாயக் கிணறுகளும் தான். அர்ச்சுனா நதி காவேரியில் நூறில் ஒரு பங்கு இருந்தாலே அதிகம்.
மேடு சரேலென்று கீழிறங்கி படித்துறையில் முடிந்தது.

அது பெண்கள் படித்துறை. பலவயதுகளில் பல நிறங்களில் பெண்கள் குளித்தும் துவைத்துக் கொண்டும் சிறுவர் சிறுமியர்களைக் குளிப்பாட்டிக் கொண்டும் இருந்தனர். 'நம்ம படித்துறை அந்த பக்கம்இருக்கு’ என்று குமார் சற்றே எட்டி நடக்க பெண்கள் படித்துறையை ஒட்டியே ஆண்கள் படித்துறையும் இருந்தது. பெண்களைப் போன்றே ஆண்களும் பலவித காரியங்களில் ஈடுபட்டிருக்க, கூடுதலாக சில எருமைகளும் குளித்துக் கொண்டிருந்தன.

இரண்டு படித்துறைகளையும் சதுரக் கற்கள் அடுக்கிக் கட்டப்பட்ட தடுப்பு பிரித்தது. சிறுவர்களும்சில இளைஞர்களும் அதன் மீது ஓடி நீரில் குதித்துக் கொண்டிருந்தனர். சில இளைஞர்களும் முதியவர்களும் பல் தேய்ப்பது போல நடித்துக் கொண்டு பெண்கள் படித்துறையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர்.

படிகளில் இறங்கி நீரில் கால் வைத்ததும் சில்லென்ற நீர் பட்டு உடல் மட்டுமல்ல, உள்ளமும் குளிர்ந்தது. என்னதான் நீச்சல் அடிக்கத் தெரிந்திருந்தாலும் ஓடும் ஆற்றில் நீச்சல் அடித்ததில்லையாதலால் சற்று தயக்கமாக இருந்தது. சுழித்துச் செல்லும் ஆற்றின் வேகம் வேறு பயமுறுத்தியது. நான் நிச்சயமின்றி படியிலேயே நெஞ்சளவு நீரில் நின்று கொண்டிருந்தேன்.

நதியின் அன்பு விலை மதிக்க முடியாதது. உடலைத் தழுவிச்செல்லும் நீர் தாயின் அணைப்புக்குச் சமானம். கைகளை லேசாக விரித்துக் கொண்டு தாயை அணைத்துக் கொண்டேன்.

சற்று நேரத்தில் நீரின் சில்லிப்புக்கு உடல் பழகிக்கொண்டு விட, கதகதப்பு உணர்ச்சி பரவியது. இது ஆனந்தம். அனுபவித்திருந்தால் மட்டுமே புரியும். அவ்வப்போது வெங்காயத்தாமரைக் கூட்டம் நீரில் அடைஅடையாக மிதந்து சென்றது. அதன் மேல் சிறு பறவைகள் அமர்ந்தும் எழும்பியும், ஆஹா என்னவொரு காட்சி.

'நம்ம ஊர் நீச்சலெல்லாம் இங்கு சரிப்பட்டு வராதுடா.. தண்ணி வேகத்துக்கு நீ என்னதான் கடப்பாரை நீச்சல் அடிச்சாலும் அங்கேயே நகராமல் நிற்பாய். சரி. படிக்குத் திரும்பிடலாம்னு திரும்பி நீஞ்சினா நீரின் வேகத்துக்கு படித்துறையைத் தாண்டிதான் உன்னால் ஒதுங்க முடியும்’ என்றான் குமார்.

அவன் சொன்னது உண்மையென்று நீந்திப் பார்க்காமலே உணர்ந்து கொண்டேன். 'படிக்குத் திரும்பணும்னா கிழக்காகவும் (தண்ணீரைஎதிர்த்து) நீந்தாமல், வடக்காகவும் (படியை நோக்கி) நீந்தாமல் வடகிழக்காக நீந்து. தானாக படியை அடைந்து விடுவாய்’ என்று நீந்தும் உபாயத்தையும் சொல்லிக் கொடுத்தான். நீந்திப் பழகியவனுக்கு அதைக் கற்றுக் கொள்வதில் பெரிய சிரமமில்லை. சில நிமிடங்களில் கற்றுக் கொண்டு நீந்த ஆரம்பித்து விட்டேன். படித்துறைகளைப் பிரிக்கும் பாறைச் சுவர் மேலிருந்தும் குதித்துப் பார்த்தேன். காவிரித்தாய் என்னை அன்போடு ஏற்றுக் கொண்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு வழியாக குளித்து முடித்து எழுந்தோம்.

ஆண்கள் படித்துறைக்கு அப்பால் சிறிய புதர்ச் செடிகள் அடர்ந்திருக்க, நெடிது சென்ற ஒற்றையடிப் பாதையில் சில ஆண்களும் சிறுவர்களும் ஆங்காங்கே லேசாக தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தனர். அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று நான் சொல்ல வேண்டியதில்லையென்று நினைக்கிறேன். என்னை மிகுந்த வருத்தத்திற்குள்ளாக்குவது இது. இதற்கு எந்த நதிக்கரையும் குளக்கரையும் விலக்கல்ல என்று நினைக்கிறேன். ஏழைகளுக்கு உணவு, உடை, உறையுள் மூன்றுக்கும் திண்டாட்டம். சரி. இயற்கைக் கடன்களைக் கழிப்பதற்குக் கூட இடமின்றி ஆற்றங் கரையை நாடும் நிலையில் அவர்களை வைத்திருப்பது யார் குற்றம்?

ஒரு பக்கம் வெளிநாட்டுத் தலைவர் வருகைக்கு இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சிவப்பு ரத்தினக் கம்பளம் விமானத்திலிருந்து விமான நிலைய வரவேற்பறை வரை விரிக்கப்பட இன்னொரு பக்கம் ஏழை மக்கள் ஆற்றங்கரையில் அமர்ந்திருக்கிறார்கள். என்னதான் காரணங்கள் கூறப்பட்டாலும் மனது இந்த பாரபட்சத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

திருமணங்களில் சாப்பாட்டுப் பந்திகளில் பெயருக்குச் சாப்பிட்டு விட்டு எழுபத்தைந்து சதவீத உணவை மிச்சம் வைத்து விட்டு ஏப்பம் விட்டவாறே எழுந்து செல்லும் மக்கள் ஒரு பக்கம். அந்த மிச்ச உணவு இலையுடன் சுருட்டி தெருவில் எறியப்படும் தருணத்தை எதிர் நோக்கி நாய்கள், ஒட்டிய வயிறு மற்றும் பஞ்சடைந்த கண்களுடன் காத்திருக்கும் மக்கள் மறுபக்கம். அவர்களும் நம் மக்கள் அல்லவா? அவர்களை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் பந்தி மறுபடியும் களைகட்டும். சாப்பிட்டு முடித்தவர்கள் வெற்றிலைபாக்கை மென்று விட்டு அவரவர் வேலையைத் தொடர மண்டபத்திலிருந்து செல்கிறார்கள். நம் மக்கள் மண்டபத்து வாசலில் காத்திருக்கிறார்கள் - அடுத்த திருமணத்தை எதிர்நோக்கி.

அன்று என்னைப் பள்ளியில் சேர்ப்பதாக முடிவு செய்து என் தந்தை என்னை அழைத்துச் சென்றார். முசிறி அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று, தலைமையாசிரியரைச் சந்தித்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினைக் கொடுத்து ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கப் பட்டேன். ஊர், இடம், பள்ளி, சக மாணவர்கள் எல்லாம் புதிது. பள்ளி பெரியதாக இருந்தது. விளையாட்டு மைதானம் மிகப் பெரியதாக இருந்தது.

வகுப்பில் சென்று மையமாக ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டேன். என்னைத் தவிர அனைத்து மாணவர்களும் அதே பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து படித்து வருவதால், ஒருவருக்கொருவர் கதைத்துக் கொண்டிருந்தனர். பள்ளியே இரைச்சலாக இருந்தது. நான் மிகவும் அந்நியனாக உணர்ந்தேன். வகுப்பின் தலைவனாகப் பட்டவன் கரும்பலகைக்குச் சென்று அவன் உயரத்திற்கு எட்டிய இடத்தில் 'தமிழ்’ என்று எழுதி அடிக்கோடிட, முதல் வகுப்பு தமிழ் என்று புரிந்து போனது.

என்னருகே அமர்ந்திருந்த சற்றே புஷ்டியான மாணவன் தன்னை ராமகிருஷ்டிணன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டு, 'ராம்கி’ என்று அழைக்கப் படுவதாகச் சொன்னான். முதல் நண்பன்.

சற்று நேரத்தில் நெடிய கரிய உருவம் தூய கதராடையில் வகுப்பறை உள்ளே நுழைய மாணவர்கள் அனைவரும் எழுந்து கொண்டு 'வணக்கம்ம்ம்ம்.... ஐயாஆஆஆஆ’ என்று ராகமாகச் சொன்னார்கள். அவர் தமிழாசிரியர் 'மா.இ.’ (மா. இராமசாமி) ஐயா அவர்கள். சில நாட்கள் வரை 'மாயி’ ஐயா என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு கையில் சிறிய தடியும், மறு கையில் தமிழ்ப் பாடப்புத்தகத்துடனும் இருக்கையில் அமர்ந்து எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுப் புதியவனான என்னைக் கண்டு கொண்டார். எனக்கு நடுக்கமாக இருந்தது. 'ராம்கி’ என்தொடையைத் தட்டி 'எந்திர்றா’ என்று கீழ்க் குரலில் முனக, உடனே எழுந்துகொண்டேன். எழுந்திரா விட்டால் தடி பறந்து வந்திருக்கும் என்று வகுப்பு முடிந்ததும் சொன்னான். ஐயாவிடம் பெயர், ஊர் எல்லாவற்றையும் நடுங்கிக் கொண்டே ஒரு வழியாகச் சொல்லி முடித்தேன்.

எனக்குத் தெரிந்த தமிழ் மா.இ. ஐயா சொல்லிக் கொடுத்தது. வெளியில் சற்றுக் கடுமையாகக் காட்டிக் கொண்டாலும், உள்ளே அவர் மிகவும் மென்மையானவர். தமிழில் ஒரு வாக்கியத்தைச் சொல்லி அனைவரையும் எழுதச் சொல்லி எழுதிய புத்தகங்களை அவர் மேசையின் மேல் அடுக்கி வைக்கச் சொல்வார். பின்பு ஒவ்வொன்றாக எடுத்து எழுதியதைப் பார்த்து விட்டு, எழுதிய மாணவனை கையிலிருக்கும் தடியை ஆட்டி அழைத்து அவர் அருகே வரச் சொல்வார். அழைக்கப் பட்ட மாணவன் கை கால்களைஆட்டிக் கொண்டே, கலவர முகத்துடன், 'வேணாங்கய்யா..வேணாங்கய்யா’ என்று கெஞ்சிக்கொண்டே சிங்கத்தை நெருங்குவது போல் அவரருகே வர, அவர் சற்று வசதியாக மாணவனை எதிர் கொள்வதற்காக இருக்கையை விட்டு எழுந்து சற்று தள்ளி நின்று கொள்வார். எந்தத் திசையிலிருந்து எந்த பாகத்தில் அடி விழும் என்று அனுமானிக்க முடியாமல், பையன் நின்று கொண்டே நர்த்தனமாடி, கைகளை எல்லாத் திசையிலும் சுழற்றி, காற்றில் கேடயம் அமைக்க முயல, எதிர்பாரா விதமாக அடி இறங்கும். இடது கையால் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்துக் கொண்டு, வலது கையிலிருக்கும் தடியால் பையனின் உடலில் சில வினாடிகள் விளையாடுவார் ஐயா. காவல் காரர்கள் தோற்றார்கள் போங்கள்.

ஏன் இப்படிக் கொடுமை செய்கிறார் என்று ஆரம்பத்தில் நினைத்ததுண்டு. தமிழ் சிதைக்கப்படுவதைச் சகித்து கொள்ள முடியவில்லை அவரால். எழுதுவதில் சிறிய தவறு செய்தாலும் பொறுத்துக்கொள்ள மாட்டார். ஒரு வேளை அப்படி அவர் இருந்திரா விட்டால் நானும் 'டைப் பன்னி, போன் பன்னி, வேல பன்னி,திங்க் பன்னி, மீட் பன்னி, பன்னிப் பன்னி’ பன்னியாகியிருப்பேன் என்று நினைக்கிறேன்.

நான் தவறேதும் செய்யவில்லை என்று அசாத்திய நம்பிக்கையுடன் சென்ற எனக்குப் பேரிடி.. மன்னிக்க... பேரடி. ஆனால் மற்ற மாணவர்கள் போல் இல்லை. கையை நீட்டச் சொல்லி சுள்ளென்று ஒரு முறை அடித்தார். வலியை விட அடி வாங்கிய அவமானம் தாங்காமல் கண்ணிலிருந்து நீர் சிதறியது. ஏன் அடித்தீர்கள் என்று கேட்கவில்லை. அவரே நான் எழுதியதைக் காட்டிச் சொன்னார். வார்த்தைகளுக்கு நடுவே விட்டிருக்கும் இடைவெளி போதுமானதாகவும், சீரானதாகவும் இல்லை என்று குற்றஞ்சாட்டினார். இதுவுமா தவறு என்று எனக்குக் கோபம் வந்தாலும் வெளிக்காட்ட முடியவில்லை. இரண்டு வார்த்தைகளுக்கு நடுவே அவர் தன் விரலை (தடிமனான விரல்) வைத்து, 'இவ்வளவு இடைவெளி இருக்கணும்’ என்று சொன்னார். எனக்கு அது அதிகப்படியாகத் தோன்றினாலும், அப்படியே பின்பற்றி எழுதினேன். இந்த பயிற்சி பத்தாவது தேர்வில் தமிழில் 87 மதிப்பெண்கள் வாங்க உதவியது. அந்தப் பள்ளியில் தமிழில் யாரும் அவ்வளவு மதிப்பெண்கள் வாங்கியது இல்லையாம். என் மதிப்பெண் சான்றிதழை எடுத்துக்கொண்டு தலைமையாசிரியரிடம் சென்று காட்டி மா.இ. ஐயா பெருமை பட்டுக்கொண்டார். அவர் கண்களில் தெரிந்த ஆனந்தத்தைக் கண்டு நான் நெகிழ்ந்தேன். அந்த ஆனந்தம் வேறு எதற்காகவும் அல்ல, தமிழில் மாணவர்கள் கவனம் செலுத்தாமல் சோபிப்பதில்லையே என்று ஆதங்கம் நீங்கியதனால் என்று புரிந்தது. ஐயாவுக்கு நான் நிரம்பவும் கடமைப் பட்டிருக்கிறேன்.

முசிறியில் இருந்த இரண்டு வருடங்கள் என் வாழ்வின் மகத்தான காலகட்டங்கள். காவிரித் தாயின் அன்பில் (நிசமாகவே) மூழ்கித் திளைத்த அனுபவங்கள் என்றும் மறக்க முடியாதவை. இன்றைக்கும் சென்னையிலிருந்து திருச்சிக்குச் செல்கையில் காவிரிப் பாலத்தைக் கடந்து செல்லும் போது நதியைப் பார்த்து 'அம்மா’ என்று வாய்விட்டு அழைக்கத் தோன்றும். கண்ணில் என்னையறியாது கண்ணீர் துளிக்கும். அங்கே இருக்கும் போது காவிரியில் நீராடத் தவற மாட்டேன்.

மகாநதியில் "ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்.." பாடல் கேட்கையில் அடிவயிறு நெகிழும். உடனே ஓடிச் சென்று காவிரியைப் பார்க்க மாட்டோமா என்று ஏங்குவேன்.

திரைகளிட்டாலும் மறைந்து கொள்ளாது..

அணைகளிட்டாலும் வழியில் நில்லாது..

பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி..’...

***

1 comment:

Sundar Padmanaban said...

அன்பின் காருண்யன்

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள்.

'முத்தம்' அல்லது 'முற்றம்'

ஓமானில் கிடைத்த ரம்பத்தையும் படிக்கும் உங்களது பொறுமையைப் பாராட்டுகிறேன்.

நன்றி.

அன்புடன்
சுந்தர்.