Thursday, January 26, 2006

தலைகீழாக தேசியக்கொடி!

Image hosting by TinyPic

இப்பதிவு தலைவர்கள் கொடியேற்றும் நிகழ்ச்சிக்காக முதல் நாளே வந்து மைதானத்தில் கோலப் பொடியால் கோடு, வட்டங்கள் எல்லாம் போட்டு, கயிறை கம்பத்தின் உச்சி வளையத்துக்குள் நுழைத்து, இழுத்துச் சரிபார்த்து, தேசியக் கொடிக்குள் பூக்களையும் நிரப்பி, உச்சிக்குச் சென்றதும் சரியாக அவிழும்படி முடிந்து வைக்கும் முகம் தெரியாத சக குடிமகன்களுக்காக!

***

"இப்ப என்ன? தீவாளிக்கு வரலைன்னா பொங்கலுக்கு வந்துருவான்" என்று கமல் சொன்னதும் கல்பனா "பண்டிகைக்குப் பண்டிகை வர்றதுக்கு அவர் என்ன பண்டிகை புருஷனா?" என்று கேட்பார் சதிலீலாவதியில்.

தேசியக் கொடியையும் இப்படி குடியரசு தினம், சுதந்திர தினம் என்று வெகுசில தினங்களில் மற்றுமே ஏற்றுவதால் "பண்டிகைக் கொடி"யாகி, ஒவ்வொரு தடவையும் யாராவது மகானுபாவர்கள் தலைகீழாக ஏற்றித் தொலைத்து செய்தித்தாள்களிலும் வந்துவிடும்.

அது சரி. கொடியேற்ற அழைக்கும்போது முடிந்து வைத்திருக்கும் கொடி தலைகீழாக இருக்கிறதா அல்லது நேராக இருக்கிறதா என்பது முடிந்துவைத்த ஆளுக்குத்தான் வெளிச்சம். கொடியேற்ற வந்த தலைவருக்கு அது புதிரான விஷயம்தான்.

ஏற்கெனவே முடிச்சு மேலே போய் உச்சியில் விரிந்ததும் தலைமேல் என்ன விழுமோ என்று அவர் திகிலில் இருப்பார். யாராவது விஷமிகள் பூவுக்குப் பதிலாக கொப்பரைத் தேங்காயையோ, வெங்காய வெடியையோ, அல்லது கொக்கி கழன்றுகொண்டு விழுமாறு கையெறி குண்டையோ வைத்திருந்தால்! ஆக கொடியேற்ற வருபவர்களின் மனநிலையையும் சற்று எண்ணிப் பார்க்கவேண்டும்.

கொடியை முடிந்து வைக்கும் ஆசாமிகள் தலைகீழாகக் கட்டிவிடாமலிருக்க எனது அனுபவத்திலிருந்து ஒரு யோசனை!

பள்ளியில் படிக்கும்போது ஒரு சுதந்திர தினத்தன்று கொடியை சட்டையில் தலைகீழாகக் குத்திக்கொண்டு வந்த சக மாணவனை ஆசிரியர் கண்டித்து, சரியாகக் குத்திக் கொள்ளச் செய்தார்.

'மன்னிச்சுக்கங்க சார். கலர் சீக்குவன்ஸ் அடிக்கடி மறந்துடுது'

'ஓஹோ.. பெரிய மனுஷனுக்கு மறதியாயிடுச்சோ?' என்றவர் 'ஒங்க வூட்ல விசேஷம் எதாச்சும் சமீபத்துல நடந்துச்சா?' என்று கேட்டார்.

'ஆமாங்க சார். அக்காவுக்கு கல்யாணம் நடந்துச்சு'

'சாப்பாடெல்லாம் போட்டாங்கள்ல?'

'ஆமா சார். சொந்தக்காரவுக நெறய பேரு வந்துருந்தாஹ'

'சரிதான். பந்தி ஆரம்பிக்கறப்போ மொதல்ல என்ன வப்பாங்க?'

'எல'

'அப்றம்?'

'சோறு'

'அப்றம்?'

'கொழம்பு'

'சரி. எல என்ன கலர்?'

'பச்ச சார்'

'சோறு?'

'வெள்ள சார்'

'குழம்பு?'

பையன் இப்போது பதில் சொல்லாமல் ஈயென்று இளித்து, 'புரியுது சார்' என்றான்.

'சோறு திங்க மறக்காதுல்ல? அது மாரி கொடி கலர் சீக்குவன்ஸும் மறக்கக் கூடாது. சரியா?' என்றார்.

இன்று வரை மறக்கவில்லை. என்றும் மறக்காது.

மனசுல வச்சிக்கிட்டீங்களா அண்ணே?

குடியரசு தின நல்வாழ்த்துகள்.

***

Monday, January 23, 2006

"Eternal Sunshine" of the spotless mind!

*** "Eternal Sunshine" of the spotless mind! ***

ஜிம் கேரியின் கோணங்கித்தன முகபாவனைகளையே பார்த்துப் பழகியிருக்கும் எனக்கு இப்படம் ஒரு இன்ப அதிர்ச்சி. தாழ்வு மனப்பான்மையும் தன்னிரக்கமும் சிந்தும் அவரது கண்களுக்கு அபாரமாக வாய்ப்பளிக்கப் பட்டிருக்கிறது இந்தப் படத்தில். வயதாகியிருப்பது முகத்தில் நன்றாகவே தெரிகிறது.

புதினம், புனைவு, Sci-Fi, என்ற வகைப்பாடுகளுக்குள் போகாமல் சாமான்யப் பார்வையில் படத்தைப் பார்த்தாலும் (Sub-title களுடன்) படம் புரியும்.

ஒரு விதத்தில் பார்த்தால் ஒரு பத்தியில் அடங்கிவிடக் கூடிய எளிய கதை என்று சொல்ல முடியும். ஆனாலும் அவ்வளவு எளிதாகச் சொல்லிவிடவும் முடியாது.

ஜோயல் (Joel) என்ற பாத்திரத்தில் ஜிம் கேரி. க்ளெமண்டைன் Kruczynski (நீங்களே உச்சரிச்சுக்கோங்கப்பா) என்ற பாத்திரத்தில் கேட் வின்ஸ்லெட்.

காதலர் தினத்தன்று காலையில் தூங்கியெழும் ஜோயல் ஏதோ உள்ளுணர்வு உந்த வேலைக்குப் போகாமல் Montauk என்ற இடத்திற்குப் போகிறார். கடுங்குளிரில் கடற்கரையில் நாள் முழுவதையும் கழிக்கும் அவர், அங்கு பார்த்து, திரும்ப வருகையில் ரயில் நிலையத்திலும் பார்த்து, பிறகு வண்டியில் சந்திக்கும் பெண் க்ளெமண்டைன். படபடவென்று பேசி அறிமுகம் செய்துகொள்ளும் க்ளெம்முடன் பச்சக்கென்று நட்பு உருவாகிவிட, மறுநாளும் சந்திக்கின்றனர். இரவில் பனிக்கட்டியாய் உறைந்திருக்கும் சார்ல்ஸ் நதிக்குப் போய் படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை ரசிக்கின்றனர். மறுநாள் காலையில் காரிலிருந்து உறங்கிக் கொண்டிருக்கும் க்ளெம்மை எழுப்பி இறக்கி விடுகையில் "நான் உன் வீட்டுக்கு வந்து இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேனே?" என்று அவள் கேட்க, ஜோயல் சரி என்கிறான். டூத் ப்ரஷை எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறேன் என்று வீட்டுக்குள் போகிறாள் க்ளெம். காரில் ஜோயல் காத்திருக்கும்போது ஜன்னலைத் தட்டி "ஏதாவது வேணுமா? உதவி தேவையா?" என்று அந்த இளைஞன் கேட்பது ஜோயலுக்கு வினோதமாக இருக்கிறது. "நீங்கள் கேட்பது எனக்குப் புரியவில்லை" என்று பதில் சொல்லவும், அவன் விலகி க்ளெம்மின் வீட்டுக்குள் செல்ல, காட்சி மாறுகிறது.

பரிசுப் பொருள் ஒன்றை வாங்கிக்கொண்டு க்ளெமண்டைனைப் பார்க்க அவள் வேலை செய்யும் இடத்திற்குச் செல்லும் ஜோயலிடம் "உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று புதிதான வாடிக்கையாளரிடம் வினவுவதைப் போல வினவிவிட்டு அருகில் இருக்கும் இளைஞனிடம் முத்தம் கொடுத்துக் கொள்ளும் க்ளெம்மைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைகிறார் ஜோயல். ஏமாற்றப்பட்டோம் என்ற விரக்தியுடனும், வேதனையுடனும், வீட்டில் வந்து நண்பனிடமும் அவன் மனைவி/சினேகிதியிடமும் புலம்பித் தள்ளும் ஜோயலுக்கு வரும் கடிதத்தில் "உங்கள் சம்பந்தமான நினைவுகள் அனைத்தையும் க்ளெமண்டைன் அழித்துவிட்டாள்" என்ற செய்தி இருக்கிறது.


வாயடைத்துப் போய் அக்கடிதம் வந்த மருத்துவமனைக்குச் சென்று டாக்டரைப் பார்க்க, "நினைவுப் பதிவுகளை மூளையிலிருந்து அழித்துவிடும்" சிகிச்சையைப் பற்றிச் சொல்லி, க்ளெமண்டைன் ஜோயலின் நினைவுகளை அழிப்பதற்காக அச்சிகிச்சையை எடுத்துக்கொண்டாள் என்பதையும் டாக்டர் குறிப்பிட, கடுப்புடன் தானும் அச்சிகிச்சைக்கு உட்பட விரும்புவதாக ஜோயல் சொல்கிறான். அன்றிரவு ஜோயல் உறங்குகையில் சிகிச்சையைத் துவங்குகிறார்கள் டாக்டரின் உதவியாளர்கள். க்ளெமண்டைன் தொடர்பான நினைவுகள் அனைத்தையும் - அவளை நினைவூட்டும் அனைத்துப் பொருள்களையும் ஜோயல் டாக்டரிடம் விளக்கிவிட்டுக் கொடுக்கிறான். ஜோயலைத் தூங்கப் பண்ணிவிட்டு சிகிச்சையைத் தொடங்குகிறார்கள். ஜோயலின் மூளையில் க்ளெமண்டைனின் நினைவுப் பதிவுகளைத் தேடிப்பிடித்து ஒவ்வொன்றாக அழிக்கத் துவங்க, அவற்றைப் "பார்த்துக் கொண்டிருக்கும்" ஜோயல் ஆரம்பத்தில் சாதாரணமாக அதைக் கவனித்துக்கொண்டிருக்கிறான். ஆனால் நினைவுகள் ஒவ்வொன்றாக அழிந்து போகையில், க்ளெமண்டைனை எந்த அளவு நேசித்திருக்கிறோம் என்று ஜோயல் உணர்ந்து, அவளே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; அவளது நினைவுகளையாவது தக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறான். அவளது நினைவுகள் அழிந்து போகாமல் தடுக்கப் போராடுகிறான். அதாவது ஜோயலின் மூளைக்குள் ஏதோ ஒரு உணர்வு விழித்துக்கொண்டு அந்தச் சிகிச்சையைத் தடுக்கப் போராடுகிறது. ஜோயல் ஆழ்ந்த நித்திரையில் இருக்க அவனால் உடல்ரீதியாக ஒன்றும் செய்யமுடியாது. ஆக அவனது மனம் தான் இப்பிரச்சினையைக் கையாள வேண்டும்.

சிகிச்சையிலிருந்து தப்பிப்பதற்காக டாக்டரிடம் சொல்லாத க்ளெமண்டைன் சம்பந்தப்படாத நினைவுகளுக்குள் க்ளெமண்டைனின் நினைவுகளை இடம்பெயர்த்துக்கொண்டு பொருத்திப் பார்க்கிறது - உதாரணம் பள்ளியில் நண்பர்களோடு செத்த பறவையைப் பார்த்துக்கொண்டிருக்க, அருகிலிருக்கும் சினேகிதியாக க்ளெமண்டைனைப் பொருத்திக் கொள்வது - இங்கு மானிட்டரில் பார்த்துக்கொண்டே நினைவுகளை அழிக்கும் டாக்டரின் உதவியாளர் சட்டென்று சங்கிலித் தொடர்பு அறுந்தது போல திரையிலிருந்து ஜோயலில் நினைவுத் தொடர் காணாமல் போக, டாக்டருக்குத் தொலைபேசித் தெரிவிக்க அவரும் வந்து மூளையை நிரடிப் பிடித்து நினைவழிப்பைத் தொடர்வதும், ஜோயலின் மனம் மறுபடியும் தப்பித்து க்ளெமண்டைனோடு - அவள் நினைவுகளோடு - வேறு நினைவுப் பதிவுகளுக்கு ஓடுவதும் என்று சரியான துரத்தல்கள்.

சுலபமாகக் கதையைச் சொல்லிவிட்டாலும் இப்படி நிகழ்வதைக் காட்சிகளாகக் காண்பிப்பது அவ்வளவு எளிதல்ல. பார்க்கும் நமக்கே "மண்டை காய்கிறது". எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்று ஊகித்துக் கொள்ளுங்கள்.

அட்டகாசமாக எடுத்துச் சாதித்திருக்கிறார்கள் - கடற்கரை வீட்டுக்குள் க்ளெமண்டனும் ஜோயலும் இருக்க, வீடு கரைந்துகொண்டே வருவது; முகமற்ற மனிதர்கள், காரிலிருந்து இறங்கி வேகமாக நடந்து போகும் க்ளெமண்டைனைப் பின்பற்றி வேகமாகச் செல்லும் ஜோயல் சற்று தூரம் நடந்ததும் அதே காருக்கே வந்து சேர்வது - ஒரு loop மாதிரி - ஆரம்பமும் முடிவுமற்ற வட்டம் போன்று - திகிலுடன் காட்சிகளைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.

இப்படத்தைப் பார்க்கும்போது சுஜாதாவின் தூண்டில் கதைகள் நினைவுக்கு வந்தது. சங்கிலித் தொடர்போல ஆதியே அந்தமாகவும், அந்தம் ஆதியாகவும், காட்சிகள் மாறி மாறி வர, அசந்தால் ரங்கராட்டினத்தில் வேகமாகச் சுற்றி, தலைசுற்றி, பொருட்காட்சியில் தொலைந்து போவதுபோலத் தொலைந்துவிடக் கூடிய அபாயம் நிறையவே இருக்கிறது.


சு.ரா.வின் ஜே.ஜே. சில குறிப்புகளை வாசித்துக்கொண்டு போகும்போது, நடுவே நினைவுத் தொடர்கள் தடுக்கி, திரும்ப வந்து ஆரம்பத்திலிருந்து வாசித்துக்கொண்டு போகவேண்டியிருப்பது போல நிகழவும் இப்படத்தில் சாத்தியங்கள் உண்டு. ஆனாலும் Eternal Sunshine நாவலாக இல்லாமல் காட்சியாக, திரையில் வந்திருப்பது ஜேஜே சில குறிப்புகள் மாதிரியான வாசிப்புச் சிக்கல்கள் இல்லாமல் எளிதாகப் புரிந்துகொள்ள வழி செய்கிறது.

மனித மனதின் விசித்திரங்களை அறிந்துகொள்ளும் முடிவிலா(ததாகத் தோன்றும்) முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கின்றனர். நிறைய ஆய்வுகள் நடக்கின்றன. தற்காலிக முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. மூளை என்ற மர்ம முடிச்சு இன்னும் மருத்துவ, அறிவியல் ரீதியாக முழுதாக அவிழவில்லை. Evolving process-ஆக ஓடிக்கொண்டேயிருக்கிறது. அதில் ஒரு துளிக்கும் துளியாக Eternal Sunshine என்ற இப்பட முயற்சியைச் சொல்லலாம். படம் காலம், உணர்வுகள், புரிந்துகொள்ளல்கள், நிஜங்கள், உறவுகள், உண்மையான காதலின் தீவிரம், என்று எல்லாப் பரிமாணங்களிலும் விரிகிறது.

ஜிம் கேரியின் மிகச்சிறந்த படம் என்று எல்லாரும் குறிப்பிட்டிருக்கிறார்கள். சிறந்த படம்தான். ஆனாலும் மிகச்சிறந்த படம் என்று சொல்லமுடியவில்லை. ஜிம் கேரிக்குப் பதிலாக இப்பாத்திரத்தைச் செய்யக்கூடிய நடிகர்கள் நிறையவே இருக்கிறார்கள் (Al Pacino-வைக் கற்பனை செய்து பார்த்தேன். பயமாக இருந்தது). எனக்கென்னவோ The Mask தான் அவர் சிறப்பாக எல்லாவகையிலும் பொருந்திய நடிப்பைத் தந்த படம் என்று தோன்றுகிறது (The Truman Show, Liar Liar, Ace Ventura, Dumb and Dumber, Cable Guy, அன்னியன் ஸ்டைல் Split Personality-யை வைத்து வந்த Me, myself and Irene - எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஏற்ற கதை - அவர் தமிழில் எடுத்தால் நிறைய பேருக்குத் தீனி கிடைக்கும்- என்ற அநியாயமான படம், என்று நிறைய படங்கள் இருந்தாலும்).

மண்டைக்குள் நடக்கும் போராட்டத்தை நாம் வெளியில் இருந்து பார்க்கும் வினோத அனுபவத்தை இப்படம் தருகிறது. கனவுகளில் வரும் தொடர்பற்ற காட்சிகளுக்கு ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு இருக்கும். ஆழ்மன ரகசியம் அது. தேடிப்பிடித்து அழிக்கும் அறிவியலுக்கும், புதுப்புது வழிகளைக் கண்டுபிடித்து ஓடித் தப்பிக்கும் மனதுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தைக் காட்சிகளாக வடித்திருக்கிறார்கள். கடைசியில் மனம் வெல்கிறது.

கேட் வின்ஸ்லெட் பரபரப்பாக இருக்கிறார். அழகாக இருக்கிறார். பனிக்கட்டியாக உறைந்திருக்கும் நீர்நிலையின் மீது இருவரும் படுத்துக்கொண்டு ஆகாயத்து நட்சத்திரங்களை ரசிப்பது கவிதையான காட்சி - எனது மொட்டைமாடி இரவுகளை நினைவுபடுத்தியது.


அழகிய தீயே-யில் சொல்வதுபோல "கமர்ஷியலுக்காக" Kirsten Dunst (சிலந்திமனிதன் பட நாயகியேதான்) - வீண். நினைவுகளை அழிப்பது போன்ற சிகிச்சையைச் செய்யும் உதவியாளர்கள் ஏதோ கல்லூரி மாணவர்களைப் போன்று ஒழுங்கற்று அமெச்சூர்தனமாக இருக்கிறார்கள்.

சம்பந்தமில்லாமல் "சிந்தனை செய் மனமே" பாடல் நினைவுக்கு வருகிறது :0) நன்றாகவே சிந்தனை செய்யத் தூண்டும் படம். சில புத்தகங்களைக் கீழே வைக்கவே மனம் வராமல் ஒரே வாசிப்பில் முடிப்பதுபோல, ஒரு காட்சியைக் கூடத் தவறவிடாது முழுவதையும் சிலையாக அமர்ந்து பார்க்க வைத்தது இப்படம்.

திரைக்கு முன்னால் இருப்பவர்களைவிட, பின்னணியில் வேலை பார்த்தவர்களே படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.

இயக்கம் : Michel Gondry
திரைக்கதை: Charlie Kaufman
ஒளிப்பதிவு : Ellen Kuras
எடிட்டிங் : Valdís Óskarsdóttir

"பார்க்கலாமா?" என்று நீங்கள் கேட்டால் என் பதில்: "இன்னும் பார்க்கவில்லையா?"

***

Sunday, January 15, 2006

கசக்கும் கணுவை விடுத்து இனிக்கும் கரும்பைச் சுவைப்போம்!


உதடோரங்கள் எரிய எரியக் கரும்பு தின்ற நினைவுகள் நிழலாடுகின்றன. வாழ்க்கைப் பயணத்தில் கடந்து போன இனிய நினைவுகளைக் கரும்பு போல அசைபோடுவதுதான் இப்போதைய நிலையில் முடிகிறது. ஸ்ரீரங்கத்தில் இருந்தால் வாசல் படிக்கட்டில் கரும்போடு அமர்ந்து உமிழ்நீர் சுரக்கக் கடித்துத் தின்றிருப்பேன்.

பொங்கல் நினைவுகளை வைத்து நீண்ட நாள் முன்பு எழுதியது.
http://agaramuthala.blogspot.com/2005/01/blog-post.html

மறுபடி படித்துப் பார்த்துக்கொண்டேன் - வயதானால் நினைவுகள் மழுங்கிவிடும் என்கிறார்கள். முடிந்த வரை பதிவு செய்து வைப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

சீராகக் குறுக்கே கோடுகளோடு பகுதி பகுதியாக இருக்கும் கரும்பில் தொக்கிக்கொண்டு தெரியும் கணுக்கள் வலுவானவை. கடித்துத் துப்புவதற்குள் போதும்போதும் என்றாகிவிடும். கசப்பாகவும் இருக்கும். நம் ஒவ்வொருவரின் மனதிலும் வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் சேரும் கசப்பான அனுபவங்கள் இக்கணுக்கள் போல வலுவாகவும் நீக்க முடியாமலும் சேர்ந்து போயிருக்கும். இனியவற்றைக் கிடைக்கச் செய்யாமல் தடுத்து நிறுத்துவன இக்கசப்புக் கணுக்களே.


இம்மாதிரி கணுக்களை பிரயத்தனப்பட்டாவது மனதிலிருந்து தூக்கியெறிந்து இனிய சிந்தனைகளோடு இனியவற்றையே எப்போதும் நினைத்து வாழ்வையும் இனிதாக அமைத்துக் கொள்வோம்.

நண்பர்கள் அனைவருக்கும் உளங்கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். வளம் பெருகட்டும். வாழ்வு உயரட்டும். தீமைகள் விலகி நன்மைகள் நடக்கட்டும்.


வேற்றுமையை மனதிலிருந்து தொலைத்து ஒற்றுமையும் அன்பையும் சக மனிதனிடத்திலும், அனைத்து உயிர்களிடமும் பாராட்டும் மனப்பக்குவத்தை இறைவன் எல்லாருக்கும் அருள்வாராக.


அன்புடன்
சுந்தர்.

Wednesday, January 11, 2006

த டெர்மினல் - திரை விமர்சனம் (The Terminal - Film Review)



எனக்குப் பிடித்த ஹாலிவுட் நடிகர்களில் முக்கியமானவர் டாம் ஹாங்க்ஸ் (Tom Hanks). அசப்பில் ஆரம்பகால கயாமத் ஸே கயாமத் தக் பட அமீர்கான் போல இருக்கும் டாம், அந்தத் துறுதுறு கண்களுடன் அலட்டிக்கொள்ளாமல் நடிக்கும் மெக் ரயானுடன் (Meg Ryan), மென்மையான பாத்திரங்களில் நடித்த You've Got Mail, Sleepless in Seattle படங்களை மறந்திருக்க மாட்டோம்.

ஒரு சிறுகதை முடிச்சை வைத்துக்கொண்டு இயல்பான நிகழ்வுகளைப் பின்னிப் பிணைந்து ஆர்ப்பாட்டம், வெட்டு குத்து தொப்புள் நடனங்கள், பஞ்ச் டயலாக், ஐட்டம் சாங் என்ற குத்துப்பாட்டு, வெளிநாட்டு வழுவழு சாலை சந்திப்புகளில் கும்தலக்கடி கும்மா என்று ஆடுவது - போன்ற மசாலா அம்சங்கள் எதுவுமின்றி நேரடியாகக் கதை சொல்லப்படும் இம்மாதிரி படங்களை அசத்தலாக எடுக்கிறார்கள்.

இதே மாதிரி தமிழில் படங்கள் வராதா என்று நீண்டகாலமாக ஏங்கிக்கொண்டிருக்கிறேன். (பாடல்கள் தவிர்த்த) நம்மவர் படத்தை இவ்வகையில் சேர்க்கலாமா?

அந்த வரிசையில் டாம் ஹாங்ஸ் நடித்து 2004-இல் வந்த இன்னொரு படம் The Terminal. சமீபத்தில் இப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அசந்து போகச் செய்திருந்தார் மனிதர்.

விக்டர் நவோர்ஸ்கி என்ற நபர் சலாமியா மாதிரியான க்ரகோஷியா (Krakhosia) என்ற கற்பனை தேசத்திலிருந்து நியூயார்க்கின் JFK விமான நிலையத்திற்கு வருகிறார். வந்து இறங்கும் அதே சமயத்தில் உள்நாட்டுப் போரின் எதிரொலியாக க்ரகோஷியாவில் ஆட்சி கவிழ்ந்து ஆங்காங்கே கலவரங்கள் வெடித்து அரசியல் ரீதியாக எந்த அமைப்பும் ஆட்சியில் இல்லாமல், அதே ரீதியில் க்ரகோஷியா என்ற தேசமே இல்லாது போகிறது. அதாவது விக்டர் வைத்திருக்கும் கடவுச்சீட்டோ, அமெரிக்காவில் நுழைவதற்கான விசாவோ செல்லாதவை. விக்டர் எதற்காக அமெரிக்காவுக்கு வருகிறார் என்பதும் புரியாத புதிர். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. விமானநிலைய அதிகாரிகளுக்கு விக்டர் பேசும் மொழியின் (பல்கேரியன்) அட்சரம் கூட தெரியாது (இதன் தொடர்ச்சியான விமானநிலைய அதிகாரிகளுக்கும் விக்டருக்குமான உரையாடல்கள் சரியான கலாட்டா). குடியேற்ற அதிகாரிகள் விக்டரை அனுமதிக்க மறுக்கிறார்கள். சரியான விசா இல்லாதவர்களைப் பொதுவாக வெளியேற்றிவிடுவது எல்லா நாடுகளின் வழக்கம். விக்டர் வெளியேறி எங்கே போவார் என்பதில் குழப்பம். ஆட்சி வீழ்ந்த க்ரகோஷியா தேசமே இல்லை. அதாவது ஆதியும் இல்லை; அந்தமும் இல்லை; ஒருமாதிரி திரிசங்கு சொர்க்கத்தில் - மன்னிக்க - நரகத்தில் மாட்டிக்கொண்டு விக்டர் படும் அனைத்து அவஸ்தைகளையும் சுவாரஸ்யமாகச் சொல்கிறார்கள்.

க்ரகோஷியாவில் நிலவரம் சரியாகும்வரை, ஒரு முடிவு கிடைக்கும்வரை, விமானநிலைய வளாகத்திலேயே இருக்க அதிகாரிகளால் அறிவுறுத்தப்படுகிறார் விக்டர். அவரை என்ன செய்வது என்று தெரியாமல் பயங்கரமாக விழிக்கிறார் புதிதாக விமான நிலைய மேலாளராகப் பதவி ஏற்றுள்ள ப்ராங்க் டிக்ஸன் (Stanley Tucci). விக்டருக்கு அவர் கொடுக்கும் தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல. சட்டத்துக்குப் புறம்பாக விக்டரை விமானநிலையத்திலிருந்து வெளியே செல்லத் தூண்டி அவர் அப்படி வெளியேறும் பட்சத்தில் காவல்துறையிடம் சொல்லிக் கைது செய்ய அனைத்து ஏற்பாடுகளும் அவர் செய்ய, கடைசி வினாடியில் விக்டருக்கு மண்டைக்குள் மணியடிக்க வெளியேறாமல் திரும்பிவிடுகிறார். இப்படி ஏகக் களேபரங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன.

தனது அபாரமான இயல்பான நடிப்பால் படத்தைத் தூக்கி நிறுத்துகிறார் விக்டராக நடித்த டாம் ஹாங்க்ஸ். படம் துவங்கிய சில நிமிடங்களில் டாம் ஹாங்க்ஸ் மறைந்துபோய் விக்டர் நம் மனதில் அமர்ந்துகொள்கிறார். தவித்துக்கொண்டிருக்கும் விக்டருக்கு யாராவது உதவ மாட்டார்களா? அவருக்கு நல்லது நடக்காதா என்று நம்மைக் கவலைப்படச் செய்வதே டாம் ஹாங்க்ஸ்ஸின் நடிப்பின் வெற்றி.

கதையில் இடைச்செருகல்களாக சில உபகதைகள்.

தினப்படியாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்துகொண்டு போய் கவுண்ட்டரில் இருக்கும் பெண் அதிகாரி டாரஸ்ஸிடம் கொடுப்பதும் அவர் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்து திருப்பி அனுப்பவதும் நடக்கிறது. டாரஸ் மீது காதல் கொண்டிருக்கும் நிலைய பணியாளர் என்ரிக் க்ரூஸ் விக்டருக்கு உதவ முன்வருகிறார். இருவரும் செய்து கொள்ளும் ஒப்பந்தப்படி விக்டருக்கு என்ரிக் உணவளிக்க, விக்டர் விண்ணப்பத்துடன் என்ரிக் சார்பாக கடிதங்களை டாரஸ்ஸிடம் கொடுக்கவேண்டும்.

சுத்தம் செய்யும் பணியாளராக வரும், பல வருடங்களாக அமெரிக்காவில் இருக்கும், குப்தா ராஜன் என்ற இந்தியரின் தொடர்பும் விக்டருக்குக் கிடைக்கிறது. குப்தா அமெரிக்காவுக்கு வந்த காரணம் சுவாரஸ்யமானது. சென்னையில் பொட்டிக்கடை நடத்தும் குப்தாவிடம் தினமும் லஞ்சம் பெற்றுச் செல்லும் போலீஸ்காரரை ஒரு நாள் குத்திக் கொன்றுவிட்டு அமெரிக்காவுக்கு விமானம் ஏறி வந்தவராம் அவர். வந்ததிலிருந்து விமானநிலையத்தில் துப்புரவுப் பணி! திரும்பப் போனால் பிடித்துக்கொள்வார்கள் என்பதால் போகாமல் இங்கேயே இருக்கிறேன் என்று விக்டரிடம் சொல்கிறார் குப்தா.

இதற்கிடையில் அடிக்கடி வந்து செல்லும் விமான பணிப்பெண் அமெலியா வாரனுடன் (Catherine Zeta Jones) விக்டருக்குக் காதல் மலருகிறது. விக்டரை ஒவ்வொரு முறை வரும்போதும் பார்க்கும் அமெலியா அவர் ஏதோ அலுவல் விஷயமாக அடிக்கடி பறக்கும் நிறுவன அதிகாரி என்று நினைத்துக் கொள்கிறார். காதலில் தடுமாறும் விக்டருக்கு, மொழிப் பிரச்சினையாலும், அமெலியாவிடம் அவரது நிலைமையைச் சொல்லமுடிவதில்லை.

இறுதிக்காட்சியில் நிறையவே சினிமாத்தனம். கிளம்பிக்கொண்டிருக்கும் விமானத்தைத் தடுக்கும் குப்தா, விக்டரை நியூயார்க்குக்குள் நுழைய விடாமல் தடுக்கத் துடிக்கும் மேலாளர், இறுதியில் பாதுகாப்பு அதிகாரி கருணைகொண்டு விக்டரை விமானநிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கிறார். இதெல்லாம் அமெரிக்காவில் நடைமுறையில் எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை.


விமானத்தில் உள்ளிருந்து மனநிலை சரியில்லாத ஒருவர் அவரது பையுடன் நிற்காமல் ஓடினார் என்ற ஒரே காரணத்துக்காகச் சமீபத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். குப்தா மாதிரி விமான மறியல் செய்தால் என்ன ஆகும் என்று சொல்லவேண்டியதில்லை.

கொசுறு தகவல்கள்:

இப்படத்தை எடுக்கத் தூண்டிய உண்மைச் சம்பவம் : மேரன் நஸேரி (
Merhan Nasseri) என்ற ஈரானிய அகதி 1988-இல் ஐ.நா.வால் கொடுக்கப்பட்ட அகதிகளுக்கான சான்றிதழைத் திருட்டுக்கொடுத்ததால் இங்கிலாந்தில் அனுமதி மறுக்கப்பட்டு பிரெஞ்சு தேசத்திற்கு வந்திறங்க அங்கும் அனுமதி மறுக்கப்படுகிறார். அவரை அங்கிருந்து கிளம்பவும் விடாததால் Terminal One-லேயே - தேசமற்ற அகதியாக - தங்க நேரிடுகிறது. பிறகு திரும்பச் செல்லவோ, அல்லது பிரஞ்சு தேசத்துக்குள் நுழையவோ அனுமதி கொடுக்கப்பட்ட போது, அவர் எங்கும் செல்ல மறுத்து விமானநிலையத்துக்குள்ளேயே தங்க முடிவெடுத்துவிட்டாராம். 2004 கோடைக்காலம் வரை அவர் அங்கேயே வசித்துக்கொண்டிருந்ததாகச் செய்தி.

பாதுகாப்பு காரணங்களால் படபிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டு, விமானநிலையத்தின் மொத்த உள்ளமைப்பையும் அட்டகாசமாகக் கட்டமைப்பு செய்து எடுத்திருக்கிறார்கள். செட் என்றால் நம்ப முடியவில்லை. ஆர்ட் டைரக்டரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஈ.ட்டீ., ஜாஸ், ஜுராஸிக் பார்க் போன்று பிரம்மாண்ட படங்களைத் தந்திருக்கும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் த டெர்மினல் போன்ற மென்மையான படத்தை எடுத்திருக்கிறார் என்றால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது.

துபாயில் சரியான விசா இல்லாமல் அந்த பிரம்மாண்ட விமானநிலையத்தின் ஏதாவது ஒரு மூலையில் முடங்கிக்கிடக்கும் சில ரஷ்யர்களைப் பார்த்திருக்கிறேன். ஒரே உடை ஒரு சிறு பையுடன் நான்கைந்து நாட்கள் உள்ளேயே சுற்றித்திரிந்த பிறகு அதிகாரிகள் வந்து அழைத்துச் செல்வதை அருகிலேயே இருந்து பார்த்திருக்கிறேன்.

த டெர்மினலில் விக்டருக்கு ஏற்பட்ட கதி, நிஜத்தில் நடந்திருக்கிறது. நடக்கக்கூடிய சாத்தியங்களும் உண்டு.

மொத்தத்தில் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.

***

Monday, January 09, 2006

நீங்கள் இவ்வுலகின் கடைசி மனிதனாக இருந்தால்?

ரொம்ப நாளுக்கப்புறம் அந்துமணியின் பா.கே.ப. பகுதியில் ஒரு உருப்படியான கட்டுரையை (கட்டுரையின் 80% வேறொருவர் எழுதிய கட்டுரையின் குறிப்புகளாக இருந்தாலும்) படிக்க முடிந்தது. அது சரி. இந்தப் பதிவில் நானும் 90% அந்துமணியின் கட்டுரையிலிருந்து தான் எடுத்துத் தந்திருக்கிறேன். :) இனி பா.கே.ப.விலிருந்து.....

***

"இயற்கைக்கு எதிராக மனிதன் செயல்படும்போது, அது, அவனுக்கு, "பொட்' என்று தலையில் குட்டியது போன்ற பாடம் கற்பிக்கிறது ஒவ்வொரு முறையும்... ஆனாலும், இவன் திருந்துவதில்லை!

இப்படித்தான் நடந்தது இங்கிலாந்தில்... இங்கிலாந்து நாட்டு பசுமாடுகளை "டிவி'களில் பார்த்து இருப்பீர்கள்... கொழு, கொழுவென இருக்கும்; 30-40 லிட்டர் பால் கொடுக்கும். இதற்கும் அதிகமாக பால் வேண்டும் என பேராசைப்பட்டனர். இதற்கென ஆராய்ந்து, விசேஷ உணவு தயாரித்தனர். சாக பட்சிணியான மாட்டுக்கு, மாட்டு எலும்புத் தூள் கலந்த உணவைக் கொடுத்தனர்... பால் மற்றும் இறைச்சி அதிகமாகத்தான் கிடைத்தது. ஆனால், ஒரு கட்டத்தில் மாடுகளுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. இதை "Mad Cow disease" என்றனர். இந்த நோய் பீடித்த மாடுகளை, சில ஆண்டுகளுக்கு முன் லட்சக்கணக்கில் கொன்று எரித்தனர்.

இங்கிலாந்தையும், பிரான்ஸ் நாட்டையும் ஆட்டிப் படைப்பது "காவா' நோய் எனப்படும், "Foot and mouth' நோய். நம் நாட்டில், இந்த நோய் கண்ட மாடுகளை தனியே பிரித்து, விளக்கெண்ணெயும், மஞ்சளும் தடவி வருவர்... இந்த நோய் கண்ட மாடுகள், உணவு எடுத்துக் கொள்ளாது... அதனால், மூங்கிலை வாயில் நுழைத்து, அரிசிக் கஞ்சி ஊற்றுவர். பத்து நாளில் நோய் ஓடிப்போகும். ஆனால், இங்கிலாந்திலோ, இந்நோய் கண்ட, மாடு ஆடுகள், ஒன்றல்ல, இரண்டல்ல... ஏழு லட்சத்தை கொன்று குவித்துள்ளனர். நினைத்தே பார்க்க முடியவில்லை... இதென்ன சோகம்...

இந்த நேரத்தில், கோவை பாரதியார் பல்கலைக் கழக, உளவியல் துறை பேராசிரியர் வேதகிரி கணேசன் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றை படிக்க நேர்ந்தது... அவர் கூறுகிறார்... மதங்கள் சொல்வதெல்லாம் மனித நேயத்துடன் மனிதர்கள் செயல்பட வேண்டும் என்பதே. ஆனால், தங்கள் சுயநலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதையே மனிதர்கள் விரும்புகின்றனர்; அவர்களுக்கு, தங்களது சுயநலத்திற்கு எதிரானதாக மனிதநேயம் தோன்றுகிறது. பெரும்பான்மையினர், பெயருக்கு தங்கள் தாய், தந்தையரின் மதத்தைப் பின்பற்றுவதாகக் கூறுகின்றனர்; இன்னும் சிலர் மதமாற்றம் செய்கின்றனர். ஆனால், அநேகமாக எல்லாருமே மதங்கள் கூறுவதைப் பின்பற்றுவதில்லை... உதாரணமாக, உணவுப் பழக்கத்தை எடுத்துக் கொள்ளலாம்... இந்தியா முழுவதும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் சைவ உணவையே சாப்பிட்டதாக யுவான் சுவாங் என்ற சீன அறிஞர், இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்தபோது பார்த்து எழுதியுள்ளார்.

சமூகத்தால் ஒதுக்கப்பட்ட குற்றவாளிகள் ஊரை விட்டுத் துரத்தப்பட்டு காடுகளில் வாழ்ந்தனர். "சண்டாளர்கள்' என்று கூறப்பட்ட இந்த மதத்தைச் சேர்ந்த இவர்கள் மட்டுமே வேறு வழியின்றி காடுகளில் வாழும்போது புலால் உணவை உண்டு வந்தனர். ஆனால், தற்போது இந்து மதத்தினரில் பெரும்பாலோர் மாமிச உணவு சாப்பிடும் பழக்கத்தில் சிக்கி விட்டனர்; அதை கவுரவமானதாகவும் கருதுகின்றனர்.

"புலால் மறுத்தல்' என்ற ஒரு அதிகாரத்தில் பத்து குறள்கள் மூலம் மாமிச உணவை மறுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார் திருவள்ளுவர். அவர், மாமிச உணவை உண்பவர் உள்ளவரையில் அதை விற்பவர்கள் இருப்பர் என்று கூறியுள்ளார். விற்பவர்கள் உள்ளவரை, வளர்ப்பவர்கள் இருப்பர்; வளர்ப்பவர் உள்ளவரை, மேய்ப்பவர்கள் இருப்பர்; மேய்ப்பவர் உள்ளவரை பூமியின் மேற்பரப்பிலுள்ள பச்சை பசேலென்ற பாதுகாப்புக் கவசம் தேய்வடையும்.

அதனால் சூரிய கதிர்வீச்சுப் பட்டு நிலபரப்பு பாலைவனமாகும். நிலத்தடி நீர் கீழே இறங்கி, நீர்வளம் வற்றிப் போகும்.

ஒரு கிலோ மாமிசம் ஒருவர் உண்ணும்போது, அது பல கிலோ பசுமையான தாவர இலைகளால் ஆனது என்பதை உணர்வதில்லை; பூமியின் பசுமைப் பாதுகாப்பு கேடயம் அரிக்கப்படுவதற்கு தான் காரணமாவதை உணர்வதில்லை.

"உயிர்களைக் கொன்று மாமிச உணவைச் சாப்பிடக் கூடாது' என்று கூறினார் புத்தர். ஆனால், இன்று மாமிச உணவைச் சாப்பிடுகின்றனர் புத்த பிட்சுகள். ஏனென்று கேட்டால், "நாங்கள் மாமிசத்திற்காக உயிர் வதை செய்வதில்லை; மாமிசத்தைக் கடையில் வாங்குகிறோம்...' என்கின்றனர்.

அசைவ உணவை இயேசுநாதர் உண்டதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. சைவ உணவையே உண்டு வந்தார் முகமது நபி. குர்ஆனில், "அல்பகறர் (பசு)' என்ற முதல் அத்தியாயத்தில், "அல்லாஹ் (இறைவன்) மரங்களைப் படைத்தேன். ஏனென்றால், அவை உங்களுக்கு (மக்களுக்கு) நல்ல (ஹலால்) உணவாகும் என்பதற்காக' என்று கூறியதாக குறிப்பிடுகிறார் நபிகள் நாயகம். மேலும், இறைவன், "பசுக்களை (பால் கொடுக்கும் மிருகங்களை ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவை) படைத்தேன். அவற்றில் ரத்தத்திற்கும், சாணத்திற்கும் இடையில் பாலைப் படைத்தேன். ஏனென்றால் அது உங்களுக்கு நல்ல (ஹலால்) உணவாகும் என்பதற்காக' என்று குறிப்பிடுகிறார்.

"உணவாகும்' (மாமிசம்) என்பதற்காக என்று குறிப்பிடவில்லை. சொர்க்கத்தில் பாலும், பழங்களும், தேனும் கிடைக்கும் என்று கூறுகிறார் இறைவன். இதனால் , அவற்றின் சிறப்பை அறியலாம். தடை செய்யப்பட்ட உணவு என்று ரத்தத்தை கூறுகிறார் இறைவன்.
மாமிசத்திலிருந்து ரத்தத்தை முழுமையாக நீக்க முடியுமா? ஜைன மதத்தினரும், உயிர் வதையையும், மாமிச உணவையும் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். புத்த மதத்தைப் பின்பற்றும் சீனர்களும், ஜப்பானியர்களும் சைவ உணவை பின்பற்ற இயலாமல் மதக் கொள்கைகளுக்கு முரணான உணவுப் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். சைவ உணவுப் பழக்கத்தை பின்பற்றாத வரையில், மக்களிடம் பிற உயிரினங்களிடமும் அஹிம்சை முறையைப் பின்பற்றாத வரையில், இந்துக்களோ, பவுத்த மதத்தினரோ, கிறிஸ்தவர்களோ, இஸ்லாமியரோ, யூதர்களோ, ஜைன மதத்தினரோ தங்கள் மதக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதாக ஏற்றுக் கொள்ள முடியாது.

பெரும்பாலும், மாமிச உணவை உண்டு வந்த, இந்த உலகையே ஒரு காலத்தில் ஆண்டு வந்த மேலை நாட்டினர், நுõற்றுக்கு நாற்பது பேர் சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறி விட்டனர். இதற்கு மதம் காரணமல்ல; மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் மூலம், மாமிச உணவு இதய நோயை உருவாக்கும் என்ற காரணத்தால்தான். இதிலிருந்து சிந்தனை பூர்வமாக செயல்படும்போது, தங்கள் செயல்களை மனிதர்கள் மாற்றியமைத்துக் கொள்ள முடியும் என்று உறுதியாகிறது. எந்த மதமும் சிந்திக்காமல் செயல்படச் சொல்லவில்லை. மதங்களைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்பவர்கள், அறிவுபூர்வமாகச் சிந்திக்க மறுக்கின்றனர். ஏனென்றால், தங்களது சொந்த ஆசாபாசங்களுக்கு முதலிடம் கொடுக்கும் போது, மதக் கோட்பாடுகளும், கருத்துகளும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.

— இப்படி எழுதியுள்ளார்.

எந்த மதமுமே, ஒரு உயிரைக் கொன்று தின்னச் சொல்லவில்லை. விஞ்ஞானப் பூர்வமாகவும் அசைவம் நல்லதல்ல என தெரிய வந்துள்ளது. உணவுக்காக கால்நடைகளை வளர்ப்பதும், அதற்கு வியாதிகளை வரவழைத்து, பின்னர் லட்சக்கணக்கில் கொல்வதும் என்று முடிவுக்கு வருமோ?"

என்று அந்துமணி முடித்திருக்கிறார்.

***

ஆக புலால் உண்ணுதலை எந்த மதமும் ஆதரிக்கவில்லை எனும்போது ஏன் இன்னும் புலால் உண்கிறோம்?

பல்வேறு மதங்களின் சடங்குகளில் - சடங்குகள் மதங்கள் நம்பும் இறைவனுக்காக நடத்தப்படுவது என்னும் வகையில் - உயிர்வதை செய்து புலால் உண்ணுவது எப்படி ஆரம்பித்தது?

ஆட்டையும், மாட்டையும், கோழியையும் சாமியாடிவிட்டு கொன்று பலி போடுவதைப் பார்த்திருக்கிறேன் (அந்த உணர்ச்சியற்ற ஆட்டின் கண்கள்!). நண்பர்களின் வீடுகளுக்கு தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமதான் சமயங்களில் செல்லும்போதெல்லாம் தவறாமல் தரப்படும் மாமிச பிரியாணி. கோயில் திருவிழாக்களில் கும்பிடுகிறார்களோ இல்லையோ - கிடாவெட்டு கட்டாயம் இருக்கும். "இன்னிக்கு விசேஷம்ல? கோழியடிச்சுருக்கோம்" என்று ரப்பர் போல வழுவழு உடலில் மஞ்சள் போல் மசாலா பூசுவதைப் பார்த்திருக்கிறேன். அப்போது பிறந்த குழந்தை போல, தலை மட்டும் நில்லாது இங்கும் அங்கும் சாய்ந்து விழும்!

வளைகுடாவில் வாழ்ந்த அனுபவத்திலிருந்து எனக்குத் தோன்றிவது, மனிதன் வாழும் இடங்களைச் சார்ந்து, அங்கு இருக்கும் இயற்கை வளங்களைச் சார்ந்துதான் தனது உணவுமுறையை அமைத்துக்கொள்கிறான் என்பது. பாலைவன வளைகுடா நாடுகளில் விவசாயம் செய்து சைவத்தை மட்டும் உண்டு ஜீவிக்கமுடியாது. மஸ்கட்டிலிருந்தபோது கரடுமுரடான மொட்டை மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரின் பிரதான உணவு பேரீச்சம்பழங்கள். அதைவிட்டால் நெருப்பில் சுட்ட ஆட்டின் மாமிசம். பேரீச்சம்பழங்கள் கிடைக்காத காலங்களில் மாமிசம் உண்பதைத் தவிர வேறு வழியே கிடையாது அவர்களுக்கு. இதைப் போலவே பனிப்பிரதேசங்களில் அல்லது அதிகக்குளிர் நிலவும் இடங்களிலும் விளைநிலங்கள் இல்லாத இடங்களிலும் மனிதனுக்குக் கிடைப்பதை வைத்தே உண்டு உயிர்வாழ்கிறான். கடலோரங்களில் வாழ்பவர்கள் மீன் உண்பதும் (கல்கத்தாவில் பிராமணர்கள் மீன் உண்பது சாதாரணம் என்று எனது பெங்காலி நண்பர் சொல்லியிருக்கிறார்), மலைப்பிரதேசங்களில் இருப்பவர்கள் அங்கு கிடைப்பதை உண்டும் வாழ்வதும் - இப்படி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை - என்று இருக்கும் இடத்திற்கேற்ப உணவுமுறைகளை அமைத்துக்கொண்டிருக்கிறான் மனிதன். இதில் புலாலை மறுத்து சைவமாக இருப்பது அனைவருக்கும் சாத்தியமாக இல்லாமலிருக்கலாம் - போக்குவரத்து, தகவல் தொடர்பு போன்ற எந்த வசதிகளுமில்லாத அக்காலத்தில்.

ஆனால் இப்போது மனிதர்களை இரண்டே வகைகளில் பிரித்துவிடலாம். வறுமையிலிருக்கும் ஏழைகள். வசதி படைத்தவர்கள். வறுமையிலிருக்கும் ஏழைகள் பஞ்சத்தில் எலியைக் கூட தின்ன வேண்டியிருக்கிறது. வசதி படைத்தவர்கள் மினரல் வாட்டரில் கூட கழுவிக்கொள்ளலாம். பாலில் குளிக்கலாம். ஆக பிரச்சினை பொருளாதார ரீதியிலினான ஏற்றத் தாழ்வுகள். இவற்றை அறவே நீக்குவதென்பது முதலாளித்துவ உலகத்தில் எந்த அளவு நடைமுறையில் சாத்தியப்படும்; எத்தனையா (நூற்றா)ண்டுகள் பிடிக்கும் என்றும் தெரியவில்லை. ஆனால் உயிர்வாழக் குறைந்தபட்சத் தேவையான உணவாவது அனைத்து மக்களுக்கும் கிடைக்கவேண்டும்; பட்டினிச் சாவுகள் ஒழியவேண்டும். இது ஒன்றுதான் இப்போதைய நிலையில் வல்லரசுகளிலிருந்து எள்ளரசுகள் வரை அனைவரும் முனைந்து செயலாற்ற வேண்டிய விஷயமாக எனக்குப் படுகிறது. மெனக்கெட்டுச் செயலாற்றினால் சைவர்களாக அனைவரும் மாறுவதும் சாத்தியம்தான் என்று தோன்றுகிறது. சாதி, மதம், எல்லை யுத்தங்கள், பொருளாதாரத் தாக்குதல்கள், கொடுங்கோலாட்சியை அகற்றுவது, செவ்வாய்க்குப் போவது போன்றவை அஜெண்டாவில் கடைசிக்குத் தள்ளப்படவேண்டிய விஷயங்கள்.

"பொருளாதாரம் உயர்ந்தால்தான் வேலைவாய்ப்பு பெருகும்; அரசுக்கும் வருவாய் கிடைக்கும்; அப்போது வறுமைக் கோட்டை எச்சில் தொட்டு அழித்துவிடலாம்" போன்ற அரதப் பழைய வசனத்தைச் சொல்லாமல் உண்மையிலேயே நிறைய அனைத்து அரசாங்கங்களும் மெனக்கெடவேண்டும் என்று நினைக்கிறேன். நம் நாட்டிலேயே ஐம்பது வருடங்களாகத் தலைவர்கள் வாக்குறுதிகளை அள்ளிவீசிக்கொண்டு கடைசியில் நெஞ்சுவலி வந்து குளிரூட்டப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் அரசு செலவில் படுத்துக்கொண்டு விடுகிறார்கள்.

குற்றங்களின் ஆணிவேர் பசி. அது தீர்க்கப்பட்டால் மக்கள் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு நம்மைப் போன்று இலக்கியத் தேடல்களில் கூட ஈடுபட முனைவார்கள் என்று தோன்றுகிறது.

"ஒருவன்/ஒருத்தி எப்படி வாழவேண்டும் என்பதைக் காட்டுவது மதம்" அதாவது "வாழ்வியல் முறை"களைச் சொல்வது மதம். அப்படிப்பட்ட மதங்கள் புலால் உண்ணுவதை ஆதரிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளதாக அந்துமணி குறிப்பிட்டுள்ள வேதகிரி கணேசன் அவர்களது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது எந்த அளவு உண்மை?.

இதை அறிந்தவர்கள், அறிஞர்கள் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் - அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன்.



அது சரி இப்போதைய ஆயுதக்குவிப்பு உலகில் இன்னொரு உலகப்போர் வந்தால், அணுகுண்டுகளைப் போட்டு பூச்சி பொட்டுகள் இல்லாது எல்லாவற்றையும் அழித்து, தின்பதற்கு புல் பூண்டு கூட முளைக்காதபடி செய்துவிடுவான் மனிதன். பிறகு சைவமென்ன அசைவமென்ன? அப்போது இவ்வுலகத்தில் நரமாமிச பட்சிணிகள்தான் இருப்பார்கள் - கடைசி ஆள் தன்னையே கொன்று தின்னும் வரை!

குழம்பு நன்றாக இருக்கிறது என்று ஆள்காட்டி விரலைச் சப்புக்கொட்டி நக்கியதுண்டு. அந்தக் கடைசி மனிதனாக இருந்து, என் ஆள்காட்டி விரலை நானே கடித்துத் தின்பதைக் கற்பனை செய்துகூட பார்க்க பயமாக இருக்கிறது!

***

நன்றி : அந்துமணி பா.கே.ப. வாரமலர்