*** "Eternal Sunshine" of the spotless mind! ***
ஜிம் கேரியின் கோணங்கித்தன முகபாவனைகளையே பார்த்துப் பழகியிருக்கும் எனக்கு இப்படம் ஒரு இன்ப அதிர்ச்சி. தாழ்வு மனப்பான்மையும் தன்னிரக்கமும் சிந்தும் அவரது கண்களுக்கு அபாரமாக வாய்ப்பளிக்கப் பட்டிருக்கிறது இந்தப் படத்தில். வயதாகியிருப்பது முகத்தில் நன்றாகவே தெரிகிறது.
புதினம், புனைவு, Sci-Fi, என்ற வகைப்பாடுகளுக்குள் போகாமல் சாமான்யப் பார்வையில் படத்தைப் பார்த்தாலும் (Sub-title களுடன்) படம் புரியும்.
ஒரு விதத்தில் பார்த்தால் ஒரு பத்தியில் அடங்கிவிடக் கூடிய எளிய கதை என்று சொல்ல முடியும். ஆனாலும் அவ்வளவு எளிதாகச் சொல்லிவிடவும் முடியாது.
ஜோயல் (Joel) என்ற பாத்திரத்தில் ஜிம் கேரி. க்ளெமண்டைன் Kruczynski (நீங்களே உச்சரிச்சுக்கோங்கப்பா) என்ற பாத்திரத்தில் கேட் வின்ஸ்லெட்.
காதலர் தினத்தன்று காலையில் தூங்கியெழும் ஜோயல் ஏதோ உள்ளுணர்வு உந்த வேலைக்குப் போகாமல் Montauk என்ற இடத்திற்குப் போகிறார். கடுங்குளிரில் கடற்கரையில் நாள் முழுவதையும் கழிக்கும் அவர், அங்கு பார்த்து, திரும்ப வருகையில் ரயில் நிலையத்திலும் பார்த்து, பிறகு வண்டியில் சந்திக்கும் பெண் க்ளெமண்டைன். படபடவென்று பேசி அறிமுகம் செய்துகொள்ளும் க்ளெம்முடன் பச்சக்கென்று நட்பு உருவாகிவிட, மறுநாளும் சந்திக்கின்றனர். இரவில் பனிக்கட்டியாய் உறைந்திருக்கும் சார்ல்ஸ் நதிக்குப் போய் படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை ரசிக்கின்றனர். மறுநாள் காலையில் காரிலிருந்து உறங்கிக் கொண்டிருக்கும் க்ளெம்மை எழுப்பி இறக்கி விடுகையில் "நான் உன் வீட்டுக்கு வந்து இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேனே?" என்று அவள் கேட்க, ஜோயல் சரி என்கிறான். டூத் ப்ரஷை எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறேன் என்று வீட்டுக்குள் போகிறாள் க்ளெம். காரில் ஜோயல் காத்திருக்கும்போது ஜன்னலைத் தட்டி "ஏதாவது வேணுமா? உதவி தேவையா?" என்று அந்த இளைஞன் கேட்பது ஜோயலுக்கு வினோதமாக இருக்கிறது. "நீங்கள் கேட்பது எனக்குப் புரியவில்லை" என்று பதில் சொல்லவும், அவன் விலகி க்ளெம்மின் வீட்டுக்குள் செல்ல, காட்சி மாறுகிறது.
பரிசுப் பொருள் ஒன்றை வாங்கிக்கொண்டு க்ளெமண்டைனைப் பார்க்க அவள் வேலை செய்யும் இடத்திற்குச் செல்லும் ஜோயலிடம் "உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று புதிதான வாடிக்கையாளரிடம் வினவுவதைப் போல வினவிவிட்டு அருகில் இருக்கும் இளைஞனிடம் முத்தம் கொடுத்துக் கொள்ளும் க்ளெம்மைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைகிறார் ஜோயல். ஏமாற்றப்பட்டோம் என்ற விரக்தியுடனும், வேதனையுடனும், வீட்டில் வந்து நண்பனிடமும் அவன் மனைவி/சினேகிதியிடமும் புலம்பித் தள்ளும் ஜோயலுக்கு வரும் கடிதத்தில் "உங்கள் சம்பந்தமான நினைவுகள் அனைத்தையும் க்ளெமண்டைன் அழித்துவிட்டாள்" என்ற செய்தி இருக்கிறது.
வாயடைத்துப் போய் அக்கடிதம் வந்த மருத்துவமனைக்குச் சென்று டாக்டரைப் பார்க்க, "நினைவுப் பதிவுகளை மூளையிலிருந்து அழித்துவிடும்" சிகிச்சையைப் பற்றிச் சொல்லி, க்ளெமண்டைன் ஜோயலின் நினைவுகளை அழிப்பதற்காக அச்சிகிச்சையை எடுத்துக்கொண்டாள் என்பதையும் டாக்டர் குறிப்பிட, கடுப்புடன் தானும் அச்சிகிச்சைக்கு உட்பட விரும்புவதாக ஜோயல் சொல்கிறான். அன்றிரவு ஜோயல் உறங்குகையில் சிகிச்சையைத் துவங்குகிறார்கள் டாக்டரின் உதவியாளர்கள். க்ளெமண்டைன் தொடர்பான நினைவுகள் அனைத்தையும் - அவளை நினைவூட்டும் அனைத்துப் பொருள்களையும் ஜோயல் டாக்டரிடம் விளக்கிவிட்டுக் கொடுக்கிறான். ஜோயலைத் தூங்கப் பண்ணிவிட்டு சிகிச்சையைத் தொடங்குகிறார்கள். ஜோயலின் மூளையில் க்ளெமண்டைனின் நினைவுப் பதிவுகளைத் தேடிப்பிடித்து ஒவ்வொன்றாக அழிக்கத் துவங்க, அவற்றைப் "பார்த்துக் கொண்டிருக்கும்" ஜோயல் ஆரம்பத்தில் சாதாரணமாக அதைக் கவனித்துக்கொண்டிருக்கிறான். ஆனால் நினைவுகள் ஒவ்வொன்றாக அழிந்து போகையில், க்ளெமண்டைனை எந்த அளவு நேசித்திருக்கிறோம் என்று ஜோயல் உணர்ந்து, அவளே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; அவளது நினைவுகளையாவது தக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறான். அவளது நினைவுகள் அழிந்து போகாமல் தடுக்கப் போராடுகிறான். அதாவது ஜோயலின் மூளைக்குள் ஏதோ ஒரு உணர்வு விழித்துக்கொண்டு அந்தச் சிகிச்சையைத் தடுக்கப் போராடுகிறது. ஜோயல் ஆழ்ந்த நித்திரையில் இருக்க அவனால் உடல்ரீதியாக ஒன்றும் செய்யமுடியாது. ஆக அவனது மனம் தான் இப்பிரச்சினையைக் கையாள வேண்டும்.
சிகிச்சையிலிருந்து தப்பிப்பதற்காக டாக்டரிடம் சொல்லாத க்ளெமண்டைன் சம்பந்தப்படாத நினைவுகளுக்குள் க்ளெமண்டைனின் நினைவுகளை இடம்பெயர்த்துக்கொண்டு பொருத்திப் பார்க்கிறது - உதாரணம் பள்ளியில் நண்பர்களோடு செத்த பறவையைப் பார்த்துக்கொண்டிருக்க, அருகிலிருக்கும் சினேகிதியாக க்ளெமண்டைனைப் பொருத்திக் கொள்வது - இங்கு மானிட்டரில் பார்த்துக்கொண்டே நினைவுகளை அழிக்கும் டாக்டரின் உதவியாளர் சட்டென்று சங்கிலித் தொடர்பு அறுந்தது போல திரையிலிருந்து ஜோயலில் நினைவுத் தொடர் காணாமல் போக, டாக்டருக்குத் தொலைபேசித் தெரிவிக்க அவரும் வந்து மூளையை நிரடிப் பிடித்து நினைவழிப்பைத் தொடர்வதும், ஜோயலின் மனம் மறுபடியும் தப்பித்து க்ளெமண்டைனோடு - அவள் நினைவுகளோடு - வேறு நினைவுப் பதிவுகளுக்கு ஓடுவதும் என்று சரியான துரத்தல்கள்.
சுலபமாகக் கதையைச் சொல்லிவிட்டாலும் இப்படி நிகழ்வதைக் காட்சிகளாகக் காண்பிப்பது அவ்வளவு எளிதல்ல. பார்க்கும் நமக்கே "மண்டை காய்கிறது". எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்று ஊகித்துக் கொள்ளுங்கள்.
அட்டகாசமாக எடுத்துச் சாதித்திருக்கிறார்கள் - கடற்கரை வீட்டுக்குள் க்ளெமண்டனும் ஜோயலும் இருக்க, வீடு கரைந்துகொண்டே வருவது; முகமற்ற மனிதர்கள், காரிலிருந்து இறங்கி வேகமாக நடந்து போகும் க்ளெமண்டைனைப் பின்பற்றி வேகமாகச் செல்லும் ஜோயல் சற்று தூரம் நடந்ததும் அதே காருக்கே வந்து சேர்வது - ஒரு loop மாதிரி - ஆரம்பமும் முடிவுமற்ற வட்டம் போன்று - திகிலுடன் காட்சிகளைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.
இப்படத்தைப் பார்க்கும்போது சுஜாதாவின் தூண்டில் கதைகள் நினைவுக்கு வந்தது. சங்கிலித் தொடர்போல ஆதியே அந்தமாகவும், அந்தம் ஆதியாகவும், காட்சிகள் மாறி மாறி வர, அசந்தால் ரங்கராட்டினத்தில் வேகமாகச் சுற்றி, தலைசுற்றி, பொருட்காட்சியில் தொலைந்து போவதுபோலத் தொலைந்துவிடக் கூடிய அபாயம் நிறையவே இருக்கிறது.
சு.ரா.வின் ஜே.ஜே. சில குறிப்புகளை வாசித்துக்கொண்டு போகும்போது, நடுவே நினைவுத் தொடர்கள் தடுக்கி, திரும்ப வந்து ஆரம்பத்திலிருந்து வாசித்துக்கொண்டு போகவேண்டியிருப்பது போல நிகழவும் இப்படத்தில் சாத்தியங்கள் உண்டு. ஆனாலும் Eternal Sunshine நாவலாக இல்லாமல் காட்சியாக, திரையில் வந்திருப்பது ஜேஜே சில குறிப்புகள் மாதிரியான வாசிப்புச் சிக்கல்கள் இல்லாமல் எளிதாகப் புரிந்துகொள்ள வழி செய்கிறது.
மனித மனதின் விசித்திரங்களை அறிந்துகொள்ளும் முடிவிலா(ததாகத் தோன்றும்) முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கின்றனர். நிறைய ஆய்வுகள் நடக்கின்றன. தற்காலிக முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. மூளை என்ற மர்ம முடிச்சு இன்னும் மருத்துவ, அறிவியல் ரீதியாக முழுதாக அவிழவில்லை. Evolving process-ஆக ஓடிக்கொண்டேயிருக்கிறது. அதில் ஒரு துளிக்கும் துளியாக Eternal Sunshine என்ற இப்பட முயற்சியைச் சொல்லலாம். படம் காலம், உணர்வுகள், புரிந்துகொள்ளல்கள், நிஜங்கள், உறவுகள், உண்மையான காதலின் தீவிரம், என்று எல்லாப் பரிமாணங்களிலும் விரிகிறது.
ஜிம் கேரியின் மிகச்சிறந்த படம் என்று எல்லாரும் குறிப்பிட்டிருக்கிறார்கள். சிறந்த படம்தான். ஆனாலும் மிகச்சிறந்த படம் என்று சொல்லமுடியவில்லை. ஜிம் கேரிக்குப் பதிலாக இப்பாத்திரத்தைச் செய்யக்கூடிய நடிகர்கள் நிறையவே இருக்கிறார்கள் (Al Pacino-வைக் கற்பனை செய்து பார்த்தேன். பயமாக இருந்தது). எனக்கென்னவோ The Mask தான் அவர் சிறப்பாக எல்லாவகையிலும் பொருந்திய நடிப்பைத் தந்த படம் என்று தோன்றுகிறது (The Truman Show, Liar Liar, Ace Ventura, Dumb and Dumber, Cable Guy, அன்னியன் ஸ்டைல் Split Personality-யை வைத்து வந்த Me, myself and Irene - எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஏற்ற கதை - அவர் தமிழில் எடுத்தால் நிறைய பேருக்குத் தீனி கிடைக்கும்- என்ற அநியாயமான படம், என்று நிறைய படங்கள் இருந்தாலும்).
மண்டைக்குள் நடக்கும் போராட்டத்தை நாம் வெளியில் இருந்து பார்க்கும் வினோத அனுபவத்தை இப்படம் தருகிறது. கனவுகளில் வரும் தொடர்பற்ற காட்சிகளுக்கு ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு இருக்கும். ஆழ்மன ரகசியம் அது. தேடிப்பிடித்து அழிக்கும் அறிவியலுக்கும், புதுப்புது வழிகளைக் கண்டுபிடித்து ஓடித் தப்பிக்கும் மனதுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தைக் காட்சிகளாக வடித்திருக்கிறார்கள். கடைசியில் மனம் வெல்கிறது.
கேட் வின்ஸ்லெட் பரபரப்பாக இருக்கிறார். அழகாக இருக்கிறார். பனிக்கட்டியாக உறைந்திருக்கும் நீர்நிலையின் மீது இருவரும் படுத்துக்கொண்டு ஆகாயத்து நட்சத்திரங்களை ரசிப்பது கவிதையான காட்சி - எனது மொட்டைமாடி இரவுகளை நினைவுபடுத்தியது.
அழகிய தீயே-யில் சொல்வதுபோல "கமர்ஷியலுக்காக" Kirsten Dunst (சிலந்திமனிதன் பட நாயகியேதான்) - வீண். நினைவுகளை அழிப்பது போன்ற சிகிச்சையைச் செய்யும் உதவியாளர்கள் ஏதோ கல்லூரி மாணவர்களைப் போன்று ஒழுங்கற்று அமெச்சூர்தனமாக இருக்கிறார்கள்.
சம்பந்தமில்லாமல் "சிந்தனை செய் மனமே" பாடல் நினைவுக்கு வருகிறது :0) நன்றாகவே சிந்தனை செய்யத் தூண்டும் படம். சில புத்தகங்களைக் கீழே வைக்கவே மனம் வராமல் ஒரே வாசிப்பில் முடிப்பதுபோல, ஒரு காட்சியைக் கூடத் தவறவிடாது முழுவதையும் சிலையாக அமர்ந்து பார்க்க வைத்தது இப்படம்.
திரைக்கு முன்னால் இருப்பவர்களைவிட, பின்னணியில் வேலை பார்த்தவர்களே படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.
இயக்கம் : Michel Gondry
திரைக்கதை: Charlie Kaufman
ஒளிப்பதிவு : Ellen Kuras
எடிட்டிங் : Valdís Óskarsdóttir
"பார்க்கலாமா?" என்று நீங்கள் கேட்டால் என் பதில்: "இன்னும் பார்க்கவில்லையா?"
***
5 comments:
எப்படி இருக்கீங்க சுந்தர்? இப்ப எல்லாம் அவ்வளவா பாக்கவே முடியறதில்லை. இல்லை நான் தூங்கிகிட்டு இருக்கிறப்ப எல்லாப் பதிவையும் போட்டுடறீங்களா? :-)
சுந்தர்,
//சு.ரா.வின் ஜே.ஜே. சில குறிப்புகளை வாசித்துக்கொண்டு போகும்போது, நடுவே நினைவுத் தொடர்கள் தடுக்கி, திரும்ப //
இதெல்லாம் என்னைப் பொருத்தவரை டூ மச் என்றாலும் ESOSM மிகவும் ரசித்தென்.ஜிம் காரியைவிடவும் முக்கியமானவர்களென்றால் எழுத்தாளர் Charlie Kaufman -ஐ கூறுவேன். அவரின் Adaptation, Confessions of a Dangerous Mind மற்றும் Being John Malkovich பார்த்தீகளென்றால் மாஜிக் காரியிடத்திலில்லை, காப்மேன் இடத்தே என்று புரியும்!!
நன்றி
குமரன், கொஞ்சம் வேலை அழுத்துது! அதான் ரெண்டு மூணு வாரமா தமிழ்மணம் பக்கம் அடிக்கடி வரமுடியலை. நட்சத்திர வாரம் ஜெகஜ்ஜோதியாப் போகுது! பதிவுகளைத் தான் முழுக்க படிக்க முடியலைன்னு வருத்தமா இருக்கு!
நன்றி.
//இதெல்லாம் என்னைப் பொருத்தவரை டூ மச் என்றாலும்//
அட ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன். ஜே.ஜே. படிச்சு முடிக்க எனக்கு பத்து வருஷம் ஆச்சு!!!
விஷுவல் மீடியம் என்கிறதை நல்லபடியா ESOSM- ல பயன்படுத்தியிருக்காங்க.
kaufman கில்லாடிதான். எழுத்தைப் படித்து மனதில் பிம்பங்களை உருவாக்கிக்கொள்வதைவிட, அதை விஷுவலாகப் பார்க்கும்போது இன்னும் சிறப்பாக இருக்கிறதில்லையா? அதான் இப்படத்தை ரசிக்க வைத்தது. இதையே வெறும் கதையாகப் படித்திருந்தால் இவ்வளவு சுவாரஸ்யமாக இருந்திருக்குமா என்பது சந்தேகமே!
நன்றி. (அதான் மூணெழுத்துங்க! :))
//நன்றி. (அதான் மூணெழுத்துங்க! :))
//
நக்கலா??? :))
இதையே.... தமிழுணர்வுள்ள நம் பதிவில் வந்து பதிக்குமாறு வேண்டுகிறேன்!!!
Post a Comment