இப்பதிவு தலைவர்கள் கொடியேற்றும் நிகழ்ச்சிக்காக முதல் நாளே வந்து மைதானத்தில் கோலப் பொடியால் கோடு, வட்டங்கள் எல்லாம் போட்டு, கயிறை கம்பத்தின் உச்சி வளையத்துக்குள் நுழைத்து, இழுத்துச் சரிபார்த்து, தேசியக் கொடிக்குள் பூக்களையும் நிரப்பி, உச்சிக்குச் சென்றதும் சரியாக அவிழும்படி முடிந்து வைக்கும் முகம் தெரியாத சக குடிமகன்களுக்காக!
***
"இப்ப என்ன? தீவாளிக்கு வரலைன்னா பொங்கலுக்கு வந்துருவான்" என்று கமல் சொன்னதும் கல்பனா "பண்டிகைக்குப் பண்டிகை வர்றதுக்கு அவர் என்ன பண்டிகை புருஷனா?" என்று கேட்பார் சதிலீலாவதியில்.
தேசியக் கொடியையும் இப்படி குடியரசு தினம், சுதந்திர தினம் என்று வெகுசில தினங்களில் மற்றுமே ஏற்றுவதால் "பண்டிகைக் கொடி"யாகி, ஒவ்வொரு தடவையும் யாராவது மகானுபாவர்கள் தலைகீழாக ஏற்றித் தொலைத்து செய்தித்தாள்களிலும் வந்துவிடும்.
அது சரி. கொடியேற்ற அழைக்கும்போது முடிந்து வைத்திருக்கும் கொடி தலைகீழாக இருக்கிறதா அல்லது நேராக இருக்கிறதா என்பது முடிந்துவைத்த ஆளுக்குத்தான் வெளிச்சம். கொடியேற்ற வந்த தலைவருக்கு அது புதிரான விஷயம்தான்.
ஏற்கெனவே முடிச்சு மேலே போய் உச்சியில் விரிந்ததும் தலைமேல் என்ன விழுமோ என்று அவர் திகிலில் இருப்பார். யாராவது விஷமிகள் பூவுக்குப் பதிலாக கொப்பரைத் தேங்காயையோ, வெங்காய வெடியையோ, அல்லது கொக்கி கழன்றுகொண்டு விழுமாறு கையெறி குண்டையோ வைத்திருந்தால்! ஆக கொடியேற்ற வருபவர்களின் மனநிலையையும் சற்று எண்ணிப் பார்க்கவேண்டும்.
கொடியை முடிந்து வைக்கும் ஆசாமிகள் தலைகீழாகக் கட்டிவிடாமலிருக்க எனது அனுபவத்திலிருந்து ஒரு யோசனை!
பள்ளியில் படிக்கும்போது ஒரு சுதந்திர தினத்தன்று கொடியை சட்டையில் தலைகீழாகக் குத்திக்கொண்டு வந்த சக மாணவனை ஆசிரியர் கண்டித்து, சரியாகக் குத்திக் கொள்ளச் செய்தார்.
'மன்னிச்சுக்கங்க சார். கலர் சீக்குவன்ஸ் அடிக்கடி மறந்துடுது'
'ஓஹோ.. பெரிய மனுஷனுக்கு மறதியாயிடுச்சோ?' என்றவர் 'ஒங்க வூட்ல விசேஷம் எதாச்சும் சமீபத்துல நடந்துச்சா?' என்று கேட்டார்.
'ஆமாங்க சார். அக்காவுக்கு கல்யாணம் நடந்துச்சு'
'சாப்பாடெல்லாம் போட்டாங்கள்ல?'
'ஆமா சார். சொந்தக்காரவுக நெறய பேரு வந்துருந்தாஹ'
'சரிதான். பந்தி ஆரம்பிக்கறப்போ மொதல்ல என்ன வப்பாங்க?'
'எல'
'அப்றம்?'
'சோறு'
'அப்றம்?'
'கொழம்பு'
'சரி. எல என்ன கலர்?'
'பச்ச சார்'
'சோறு?'
'வெள்ள சார்'
'குழம்பு?'
பையன் இப்போது பதில் சொல்லாமல் ஈயென்று இளித்து, 'புரியுது சார்' என்றான்.
'சோறு திங்க மறக்காதுல்ல? அது மாரி கொடி கலர் சீக்குவன்ஸும் மறக்கக் கூடாது. சரியா?' என்றார்.
இன்று வரை மறக்கவில்லை. என்றும் மறக்காது.
மனசுல வச்சிக்கிட்டீங்களா அண்ணே?
குடியரசு தின நல்வாழ்த்துகள்.
***
10 comments:
சுந்தர்,
எளிமையான நினைவில் வைத்துக் கொள்ளும்படியான தகவல் தான்.
கொடியேற்றுவதிலுள்ள ஆபத்துகளை எடுத்துச் சொன்னதைக் கேட்டு இனி கொடியேற்ற தலைவர்கள் சம்மதிப்பார்களா என்பது சந்தேகம் தான், இல்லை?
//கொடியேற்றுவதிலுள்ள ஆபத்துகளை எடுத்துச் சொன்னதைக் கேட்டு இனி கொடியேற்ற தலைவர்கள் சம்மதிப்பார்களா//
நியாயமான சந்தேகம்தான் நண்பன். சமீபத்தில் மற்ற (குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா) நாடுகளில் கொடியை அனைத்துப் பொதுமக்களும் எளிதாக உபயோகிப்பது போன்று நம் நாட்டிலும் கொடியைக் கையாள்வது குறித்த விதிமுறைகளை எளிமைப் படுத்துவதற்காகப் பாராளுமன்றத்தில் மசோதா ஒன்றைக் கொண்டுவருவதாகச் செய்தி வந்திருந்தது. என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. தேசியக்கொடி என்பதை குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே பார்த்து சட்டையில் குத்திக்கொள்ளும் மாணவர்களுக்கு - அதை அவமரியாதை செய்யாமல் - சாதாரண தினங்களிலும் கையாள்வது மாதிரி ஏதாவது ஒரு விதத்தில் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி விதிமுறைகளை எளிமைப் படுத்தினால் இன்னும் நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது.
நல்லா இருந்துச்சு. :-) எனக்கும் இனி மறக்காது. அப்புறம் நடுவுல ஒரு சக்கரம் இருக்குமே. அது என்ன? குழம்புல வர்ற காய் கறியா? :-)
//அப்புறம் நடுவுல ஒரு சக்கரம் இருக்குமே. அது என்ன? குழம்புல வர்ற காய் கறியா?//
தலைகீழ் பிரச்சினை பச்சைக்கும் காவிக்கும்தானேயொழிய சக்கரத்துக்கில்லையே குமரன்! :) எப்படிப் பாத்தாலும் சக்கரம் சக்கரம்தானே!
இனி மறக்கவே மறக்காது.
சுந்தர்! ரொம்ப சுவாரஸ்யமா சொல்லிருக்கீங்க இந்த பிரச்சினைய. நமக்கு தேசிய கொடிய எப்போவாவது தான் கண்ணுல காட்டறாங்க. குழப்பம் வர தான் செய்யும். ரொம்ப மரியாதை கொடுக்கிறோம் என்று அதை பெட்டிக்குள்ளேயே வச்சி பூட்டிட்டோமோன்னு தோனுது.
//**ஏற்கெனவே முடிச்சு மேலே போய் உச்சியில் விரிந்ததும் தலைமேல் என்ன விழுமோ என்று அவர் திகிலில் இருப்பார். யாராவது விஷமிகள் பூவுக்குப் பதிலாக கொப்பரைத் தேங்காயையோ, வெங்காய வெடியையோ, அல்லது கொக்கி கழன்றுகொண்டு விழுமாறு கையெறி குண்டையோ வைத்திருந்தால் **// இதுக்கு சிரிச்சி வயிறு வலிக்குது போங்க. ரொம்ப நன்றாக எழுதியிருக்கீங்க
சிவா, கீதா, பின்னூட்டங்களுக்கு நன்றி.
மிஸ்டர் எக்ஸின் கேள்வி:
முதலில் இலை என்பதால் பச்சை முதலிலா அல்லது சாம்பார் மேல் என்பதால் சிவப்பு கொடியின் மேல் வண்ணமா?
குழப்பம் தீரவில்லையே ?
மிஸ்டர் எக்ஸ்,
//முதலில் இலை என்பதால் பச்சை முதலிலா அல்லது சாம்பார் மேல் என்பதால் சிவப்பு கொடியின் மேல் வண்ணமா?
//
நல்ல கேள்வி.
பிரச்சினையே "எது மேலே எது கீழே" என்பதுதானேயொழிய, "எது முதலில்; எது கடைசியில்" அல்ல. சரியா?
ஆக, சாம்பாருக்குக் கீழே இலையா, அல்லது இலைக்குக் கீழே சாம்பாரா?
சந்தேகம் தீர்ந்ததா?
//பாராளுமன்றத்தில் மசோதா ஒன்றைக் கொண்டுவருவதாகச் செய்தி வந்திருந்தது.//
தலையைச் சுற்றிக் கட்டிக் கொள்ளலாம். மேலாடையாக அணிந்து கொள்ளலாம் - இடுப்பிற்கு மேலாகத் தான். உள்ளாடையாக அணியக் கூடாது. இவ்வாறாக அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது என்றே நினைக்கிறேன்.
Post a Comment