Thursday, February 02, 2006

தீவிரவாதத்தை நிறுத்த முப்பரிமாணத் திட்டம்!

courtesy : www.google.com

நமது முதற் குடிமகன் உலகளவில் தீவிரவாதத்தின் வேர் எது என்றும், அதை தடுத்து நிறுத்துவது எப்படி என்பதைப் பற்றியும் தெரிவித்த கருத்துகள்:



"நீண்ட வரலாறு கொண்ட சில குறிப்பிட்ட பிரச்னைகளில் இருந்து தான் தீவிரவாதம் உருவெடுப்பதாக நினைக்கிறேன். இதில் வறுமையும் அடக்கம். வறுமை இருக்கும் வரை, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் காரணிகளும் இருப்பதை உணரலாம்.

உலகளவில் படர்ந்து அச்சுறுத்தும் இந்த தீவிரவாதத்தை சமாளிக்க மூன்று பரிமாணங்கள் கொண்ட முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

  • முதலாவது, அனைவருக்கும் தரமான கல்வி வழங்குதல்;
  • இரண்டாவது, மத அமைப்புகளின் செயல்பாடுகளை ஆன்மிக சக்தியாக மாற்றுவது;
  • மூன்றாவது, வறுமை ஒழிப்பு.

ஒருங்கிணைந்த முறையில் இவற்றை மேற்கொண்டால் நீண்ட காலத்துக்கான தீர்வு நிச்சயம் கிடைக்கும்."

நன்றி: தினமலர்.காம்

கருத்து நன்றாகத்தான் இருக்கிறது. இதைப் "பெரியண்ண"னுக்கும் யாராவது சொன்னால் நன்றாக இருக்கும்.

ஒருவன் செய்தால் குற்றம் அல்லது பழிக்குப் பழி!

ஒரு கும்பல் செய்தால் அது தீவிரவாதம்!

ஒரு இனமே செய்தால் அது புரட்சி; போராட்டம்!

ஒரு நாடே கிளர்ந்தெழுந்தால் அது யுத்தம். போர்!

பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்தான். ஆனாலும் தீவிரவாதத்தைக் கல்வியின்மை, வறுமை, அடிப்படை வாதம் போன்ற பரிமாணங்களுக்குள் மட்டும் அடக்கிவிட முடியுமா என்று தெரியவில்லை. அதன் வேர்கள் ஏகத்துக்கும் எல்லாவிடங்களிலும் ஊடுருவியிருக்கின்றன. நன்கு படித்த, வறுமையில்லாத தீவிரவாதிகளும் எங்கெங்கும் இருக்கின்றனர்.

சிலர் கோட் சூட் மாட்டிக்கொண்டு தற்காப்பு நடவடிக்கை என்ற போர்வையில் பண, படை பலங்களை வைத்துச் செய்யும் Official Terrorism-யும், செயற்கைக்கோள் தொலைபேசியிலிருந்து எல்லாவித நவீனங்களையும் கையில் வைத்துக்கொண்டு உலகளாவிய அமைப்பாக இயங்கும் கும்பல்களையும் எந்த வகையில் சேர்ப்பது? எது இவர்களைத் தூண்டுகிறது?

சுலபத்தில் தீர்வு கண்டுவிடமுடியாத பிரச்சினை இது. இருந்தாலும் திரு. கலாம் அவர்கள் மொழிந்துள்ள இந்த முப்பரிமாணங்கள் நல்ல தொடக்கமாக இருக்கும்.

அதுவரை உயரமான கட்டிடங்களில் வேலைசெய்ய நேரும்போது ஜன்னல் வழியாக விமானம் எதுவும் வருகிறதா என்று பார்த்துக்கொள்ளலாம். வீட்டில் அணு உலை வைத்துச் சமையல் செய்யாதிருக்கலாம்.

***

2 comments:

Boston Bala said...

---அணு உலை வைத்துச் சமையல் செய்யாதிருக்கலாம்---

Microwave?

Sundar Padmanaban said...

//Microwave? //

பாலா. ஈரானின் அணுசக்தித் திட்டங்களைப் பற்றி "பற்ற" வைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா அடுத்து என்ன "செய்யப்" போகிறது என்று பூடகமாக இருக்கிறது. அதைக் குறிப்பாகச் சொல்ல முயன்றேன். வேறு ஒன்றுமில்லை.