Thursday, March 13, 2008

சுஜாத்........ஆ!



'எண்ட்டர் த ட்ராகன்' படம் பாத்தியா என்று பசுபதி கேட்டபோது 'இல்லை' என்றேன்.

அது வரை நான் பார்த்த ஆங்கிலப் படங்களெல்லாம் பள்ளியில் மொத்தமாக எல்லாரையும் அழைத்துக்கொண்டு ஆசிரியர்களோடு சென்று புழுங்கித் தள்ளிய மதியக் காட்சி வரிவிலக்கு பெற்ற படங்கள் மட்டும்தான். அவற்றில் மிருகங்கள் மட்டுமே நடித்திருந்தன. ஒரு முறை பாடி பில்டர் படமெல்லாம் போஸ்டரில் அடித்திருந்தார்களே என்று ஆண்கள் மட்டுமே வந்திருந்த - நடுவில் பெண்கள் பகுதியைப் பிரிக்க போட்டிருந்த தட்டிகளைத் தற்காலிகமாக எடுத்திருந்தார்கள் - மாலைக்காட்சி படத்தில் முதற்காட்சியிலேயே அந்தப் பெண் 'புன்னகை மட்டும் அணிந்து வர' அடுத்த ஒரு வாரத்திற்கு ஜன்னி கண்டதால் பிறகு ஆங்கிலப் படங்களைப் பார்க்க முயற்சிக்கவில்லை.

பசு 'வாத்தியார் எண்ட்டர் த டிராகனுக்கு விமர்சனம் எழுதியிருக்கார் படிச்சயா?' என்றான். 'எதுல? இல்லையே' என்றேன். 'கேளு' என்று சொல்லிவிட்டு அவன் லேசான சிரிப்புடன் தொடங்கினான் 'ப்ரூஸ்லி கராத்தே முறையில் எதிரிகளிடம் சண்டை போடுகிறார். கராத்தே முறையில் பறந்து பறந்து எதிரிகளைத் தாக்குகிறார். கராத்தே பாணியில் எதிராளியின் கொட்டையைப் பிடித்து நசுக்குகிறார் நமக்கு வலிக்கிறது' என்று சொல்லி முடித்துவிட்டு கடகடவென்று சில நிடங்கள் தொடர்ச்சியாகச் சிரித்ததும் அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டதும் நினைவில் நிழலாடுகிறது. கிட்டத்தட்ட ஆங்கிலப்படங்களைப் பார்ப்பது போன்ற பிரமிப்பைக் கொடுத்த வாத்தியாரின் எழுத்துகளுக்கு நாங்களெல்லாம் அடிமையாகியிருந்த காலகட்டம் அது. தொடர்கதை, சிறுகதை, கட்டுரை என்று எதைப்படித்தாலும் அதில் ஊடறுத்திருக்கும் நையாண்டிகளைப் பற்றிப் பேசிப்பேசி ஆனந்தப்படுவது வழக்கமான பொழுதுபோக்கு.

ஓவியர் ஜெ.யின் சித்திரக் கவர்ச்சி, சுஜாதாவின் எழுத்துக் கவர்ச்சி என்று போதை தலைக்கேற கிடைத்த சந்து பொந்துகளிலெல்லாம் ஒளிந்துகொண்டு நானும் என் அண்ணனும் குமுதம் விகடன் போன்ற பத்திரிகைகளை யாருக்கும் தெரியாமல் சுஜாதா என்று கட்டையாக அச்சிடப்பட்ட பக்கங்களைப் புரட்டிப் புரட்டி வாசித்தது நினைவுக்கு வருகிறது. எப்போது அவருடைய எழுத்து எனக்கு முதன்முதலாக அறிமுகமானது என்று நினைவிலில்லை. ஆனால் வாசிப்புப் பழக்கம் துவங்கியதிலிருந்து அவருடைய எழுத்துகளையெல்லாம் படித்து வந்தது நினைவிருக்கிறது. நிதானமான, அறிவாளி கணேஷும், உற்சாகம் கொப்பளிக்கும் வசந்த்தும் ஆண்களாக இருந்தாலும் எங்களையெல்லாம் வசீகரித்துக் கொண்டேயிருந்தார்கள. கதையில் வசந்த் என்று அவன் பெயர் வரும் வாக்கியத்திலிருந்து அடுத்த வாக்கியத்திற்குப் போவதற்குள் யாராவது பெண்ணிடம் ஏதாவது குறும்பு செய்திருப்பான் அவன். மூன்றாவது வாக்கியத்தில் கணேஷ் கட்டாயம் அவனை ஒருமுறையாவது அதட்டியிருப்பார் என்பது அவர்கள் வரும் கதைகளில் பிரதானமாக இருந்தாலும் அலுத்ததேயில்லை.

ஆதர்ச திரைப்படக் கதாநாயகர்களை அந்த அளவு ரசித்தோமோ இல்லையோ வாத்தியாரின் எழுத்துகளை நிறையவே ரசித்தோம். என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, நைலான் கயிறு, பிரிவோம் சந்திப்போம், தூண்டில் கதைகள், கற்றதும் பெற்றதும் என்று சகட்டு மேனிக்கு இந்தியச் சாலைகளில் ஓடும் பலவித வாகனங்களைப் போல, பல களன்களைக் கொண்ட எழுத்துகளில் பயணித்துக்கொண்டே இருந்தார். ஜீனோவைக் கழற்றி செயலற்றதாக ஆக்கியபோது நிஜமாகவே கண்ணில் நீர் பெருகியது. அந்த எழுத்துகள் அழ வைத்திருக்கின்றன. நிறையவே சிரிக்க வைத்திருக்கின்றன. ஏராளமானவற்றை ரசிக்க வைத்திருக்கின்றன.

காலப் போக்கில் வாழ்க்கையின் ஓட்டத்தில் ஓடி இணையத்தில் தமிழ் குழுக்கள், வலைப்பதிவுகள் என்று பரவலாக தமிழை மறுபடியம் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்ததும் அச்சில் வாசித்தவற்றில் சிலவற்றை திரையில் வாசிக்க முடிந்ததும், ஆர்வத் தீ மறுபடியும் பற்றிக் கொண்டு எரிந்து சனி காலையின் அம்பல அரட்டையில் முதன்முதலாக முகமன் சொல்லி அவரைச் சந்தித்தபோது 'யாராச்சும் அவர் பெயரில் அரட்டையடிக்கிறார்கள்' என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் அரட்டை துவங்கியதும் கேள்விகளுக்குத் தெறித்து விழுந்த கூர்மையான அரைவரி அல்லது ஒரு வார்த்தை பதில்களில் அவர்தான் என்ற உறுதியானதும் உற்சாகமாக சனிக்கிழமை எதையும் தவறவிடாதிருந்தேன். பின்பு எப்படியோ அரட்டை நின்று போனது.

பிரபலமானவர்களைச் சந்தித்தால் அதுவரை நம் மனதில் எழுப்பியிருக்கும் பிம்பம் உடைந்து போகும் என்று அவர் குறிப்பிட்டதை வாசித்துவிட்டு அவரை நேரில் சந்திக்கவேண்டும் என்ற நினைப்பே எழாமலிருந்தது. அப்படியே சந்திக்க நினைத்தாலும் 'அவர் மாதிரி பெரியாளுங்களையெல்லாம் நம்மால் சந்திக்க முடியமா?' என்ற அவநம்பிக்கையே ஓங்கியிருக்கும். அதனாலேயே அவரைச் சந்திப்பது என்பதைப் பற்றியெல்லாம் யோசித்ததே இல்லை.

2003-ஆம் வருட இறுதியில் விடுமுறைக்கு ஸ்ரீரங்கம் சென்றிருந்தபோதுதான் அது வரை தவமிருந்த அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அதைப் பற்றி மரத்தடியில் எழுதியது...

+++++
பள்ளியில் முதல் வகுப்பு சேர்ந்தபோது தாத்தா கைப்பிடித்து அழைத்துச் சென்று வகுப்பறையைக் கண்டுபிடித்து 'போ.. நல்லா படி' என்று கையை விட்டுச் சென்றதும் தனியாக வகுப்பறை வாசலில் நின்ற அந்தச் சில வினாடிகளில் ஒரு வித பய உணர்வு ஆட்கொண்டது. 'வாத்யார் எப்படி இருப்பாரோ? அடிப்பாரா? என்ன கேள்வி கேட்பார்? என்ன பதில் சொல்ல வேண்டும்?' என்று வயிற்றைப் பிசைந்தது. அதேபோல் இன்றும் இதயம் படபடத்தது. ஒருவித இனம் புரியா பயம் அடிவயிற்றைக் கவ்வியது. எதற்கென்று கேட்கிறீர்களா? வாத்தியாரைப் பார்க்கப் போனேன்.

அம்பலத்தில் நேற்று காலை அரட்டையில் கலந்துகொண்டு பேசியபோது, 'நாளை ஸ்ரீரங்கம் வருகிறேன்' என்று சுஜாதா சொன்னதும் துள்ளிக் குதித்தேன். அவரை தூரத்தில் நின்று பார்த்தாலே போதும் என்று கனவு காண ஆரம்பித்துவிட்டேன். 'ஸ்ரீரங்கத்தில் சகோதரன் வீட்டில் தங்குகிறேன். இதோ தொலைபேசி எண்' என்று கேட்பதற்கு முன்பே கொடுத்த அவரின் எளிமை பிரமிப்பூட்டியது. காலையில் அத்தொலைபேசி எண்ணை அழைத்ததும் அவரது சகோதரர் 'அவர்ட்டயே பேசுங்களேன்' என்று சுஜாதாவிடம் கொடுத்ததும் 'சொல்லுங்க சுந்தர்' என்று எளிதாக அவர் பேசத் தொடங்கியதும்- எதுவும் எதிர்பாராதது- ஆதலால் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. 'வெல்கம் பேக் டு ஸ்ரீரங்கம். ஒங்கக்கிட்ட பேசுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு ஸார்' என்று வாய்குழறச் சொன்னாலும் அவரைச் சந்திக்க வேண்டுமே என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். 'ஒரு அஞ்சு நிமிஷம் வந்து பாத்துட்டுப் போய்டறேன் ஸார்' என்று கேட்க 'இப்பவே வாங்களேன். என் ப்ரதர்கிட்டக் கொடுக்கறேன். அட்ரஸ் கேட்டுக்கோங்க' என்று ஜெட்வேகத்தில் சொல்லி விட்டுக் கொடுக்க முகவரி பெற்று, மனைவியை அழைத்துக் கொண்டு சற்றுத் தாமதமாகச் சென்று வரவேற்பறையில் அமர்ந்துகொள்ள, அவர் மதிய உணவிலிருந்தார்.

பதற்றமாகவே இருந்தது. வரவேற்பறை மிகுந்த ரசனையுடன் அலங்கரிக்கப் பட்டிருக்க வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். சற்று நேரத்தில் அவரது சகோதரர் வர, அவர் பின்னே மெதுவாக மெலிந்த தேகத்துடன் சுஜாதா. பேசவே தோன்றவில்லை. வணக்கம் தெரிவித்து அமர்ந்ததும், தொலைபேசியதுபோலவே சகஜமாக உரையாடலைத் துவக்கினார். அவரே அவரது சகோதரரிடம் அம்பல அரட்டையைப் பற்றியும் அதில் பங்குபெறும் நம் குழு நண்பர்களையும் பற்றிச் சொல்லி (பாங்காக் சீனியையும் நினைவில் வைத்துச் சொன்னார் மனிதர்!) அறிமுகப் படுத்தி 'மரத்தடில ரொம்ப நல்லாப் பண்றாங்க' என்றார்.

இருவருக்கும் இருவருடங்கள் வித்தியாசமாம். ஆனால் முகங்கள் அச்சு அசலாக ஒரே மாதிரியாக இருந்தன. இரா.மு., எல்லே மற்றும் க்ளப் பெரியவர்களைப் பற்றியும் குறிப்பிடத் தவறவில்லை. முகுந்த் பற்றியும் தமிழா உலாவியைப் பற்றியும் இந்த வாரக் கற்றதும் பெற்றதுமில் குறிப்பிட்டிருந்த ஓப்பன் சோர்ஸ் பற்றியும் பேசிவிட்டு 'ஒரு லட்சம் வார்த்தைகளுக்கு தமிழ் வார்த்தைகள் தேவையாயிருக்கு. ஓப்பன் சோர்ஸ்ல (லினக்ஸ்) தமிழ் கொண்டு வரணும். நீங்கள்ளாம் உங்களால முடிஞ்ச அளவுக்கு எடுத்துப் பண்ணுங்க' என்று சொன்னார். இது குறித்து நண்பர்களிடம் பேசவேண்டியிருக்கிறது. அம்பல அரட்டையில் பங்கு கொள்ளும் மரத்தடி நண்பர்கள் ஒவ்வொருவர் பற்றியும் குறிப்பிட்டுக் கேட்டார். என் மனைவியிடம் குடும்பத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டார். ஓமான் மட்டும் துபாய் குறித்து சிலநிமிடங்கள் பேசினோம். நான் அறிந்த விவரங்களைச் சொன்னேன். வாய் பேசிக்கொண்டிருந்தாலும், கண்கள் அவர்மீதே இருந்தது. அவரது உடல்நிலை மிகவும் கவலையளித்தது. விடைபெறும்முன் மரத்தடி நண்பர்கள் சார்பாக, புத்தாண்டு வாழ்த்து மடல் ஒன்றை அவருக்கு அளித்துவிட்டு, தொந்தரவு செய்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு வணங்கி விடைபெறுகையில் ஒரு மணி நேரம் ஆகியிருந்தது. மாலை ஆறுமணிக்கு அரிமாசங்கக் கூட்டம்.

நேற்று அரட்டையில் ஒரு சிறு உரையாடல்

சுஜாதா : 'நாளை மாலை அரிமா சங்கக் கூட்டத்தில் கலந்து கொள்கிறேன். அங்கு வாருங்கள்'

நான் : 'நான் அரிமா உறுப்பினர் இல்லை. ஆனால் சிம்மராசி. அந்தத் தகுதியில் உள்ளே விடுவார்களா?'

சுஜாதா : 'நானே ரிஷப ராசிதான். சிம்மத்திற்கு உணவு. என்னை விடும்போது உங்களையும் விடுவார்கள்'

விட்டார்கள்.

குறிப்பிட்ட நேரத்திற்குச் சென்று அங்கிருந்த அரிமாக்களிடம் அறிமுகப் படுத்திக்கொண்டு திஸ்கி, யூனிக்கோட் பற்றி கொஞ்சம் கொளுத்திப் போட்டதும் அவர்களுக்குப் பற்றிக் கொண்டது. காய்ந்து போன கம்பங்கொல்லையாக இருந்தார்கள். இ-கலப்பையைக் கொண்டு எந்த விண்டோஸ் மென்பொருள்களிலும், இணையத்திலும் எங்கு வேண்டுமானாலும் தமிழில் உழலாம் என்று சொன்னபோது நூறு தடவையாவது 'அப்படியா?' என்று ஆச்சரியப் பட்டுக் கொண்டார்கள்.

'எதாவது செய்யணும் ஸார்' என்றார்கள். திக்குத் தெரியாமல் தவிப்பது கண்கூடாகத் தெரிந்தது. இவர்களுக்கு, தமிழுக்காக இப்போதிருக்கும் இணையத் தொழில்நுட்பத்தைப் பற்றிச் சொல்ல ஆள் தேவை. ஆசாத் மற்றும் ராஜா சவுதியில் இணையத் தமிழை அறிமுகப் படுத்தியது நினைவுக்கு வர, அவர்களிடம் அதேபோல் இங்கும் செய்துகாட்டமுடியும் என்று சொன்னவுடன் ஆர்வத்துடன் 'செஞ்சிரலாம் சார். தேதி குறிச்சுட்டு சொல்றோம். நீங்க ஊர் திரும்பறதுக்குள்ள நடத்திரலாம்' என்று மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டார்கள்.

ராஜாவிடம்/ஆசாத்திடம் அந்த நிகழ்ச்சியின் agenda-வைக் கேட்கவேண்டும். அதேபோல் இங்கு நடத்திக்காட்டினால் ஊர் பற்றிக்கொண்டு தமிழ்த் தீ எளிதாகப் பரவும் என்று நம்பிக்கை தோன்றுகிறது. பார்க்கலாம். கூட்டம் சம்பிரதாயமாக நடந்து, சுஜாதா சிறிது சொந்தமாகவும், பலது ஏற்கெனவே எழுதிய விஷயங்களையும் சற்றுச் சிரமத்துடன் மூச்சு வாங்கிக்கொண்டு பேசினார்- அவரை உட்கார வைத்தே பேசச் சொல்லியிருக்கலாமே என்று தோன்றியது. பிறகு சில கேள்விகளுக்கு சுருக்கமாக விடையளித்தார்.

நன்றியுரை முடிந்து இரவு உணவு விருந்து துவங்குகையில் அறிமுகமாயிருந்த அரிமாக்களிடமும், வாத்யார் கூட்டத்தில் புகைப் படத்திற்கும், கையெழுத்திற்கும் சிக்கியிருந்ததால், அவரது சகோதரரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன். வீட்டுக்கு வந்து நண்பர்களிடம் உடனே பகிர்ந்து கொள்ளும் ஆவலில் இந்தக் கடிதம்.

பசிக்கவில்லை. இன்று உறக்கம் வராது!

+++++

எத்தனையோ சிறுகதைகள், குறுங்கதைகள், நாவல்கள் என்று இது அது என்றில்லாமல் ஒரு சராசரி மனிதனின் வாழ்வில் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறுக்கிடும் அனைத்துத் துறைகளைப் பற்றியும் கட்டுரையாகவோ, கதையாகவோ, நாவலாகவோ, கேள்வி பதிலாகவோ, கற்றதிலும் பெற்றதிலுமோ அயராது தொடர்ச்சியாகப் பதிவு செய்துகொண்டே வந்திருக்கிறார் அவர்.

எந்த சஞ்சிகையாக இருந்தாலும் கடைசிப் பக்கத்திலிருந்துதான் படிப்பேன் - விதிவிலக்கு அவரது எழுத்துகளைத் தாங்கி வருபவை.

+++++

ஒரு வரிக்கதை, அரைவரிக்கதை, சிறுகதை, குறுங்கதை, கவிதை, நாவல், தூண்டில் கதைகள் என்று நானறிந்திருந்த எழுத்தின் சாத்தியங்களையும் எல்லைகளையும் தொடர்ச்சியாக விரித்துக்கொண்டே போனவர் அவர்.

இயல்பாகவே வரும் நகைச்சுவையும் நையாண்டியும் ஒரு வரம். அது அவருக்கு ஸ்ரீரங்க கோபுரமளவிற்கு வாய்த்திருந்தது. அவரது அஞ்சலிக் கூட்டத்தில் 'எதைக் கேட்டாலும் அதெல்லாம் பெரிய கம்ப சூத்திரமில்லப்பா சிம்ப்பிள்தான் என்று சொல்லிவிடுவார். கம்ப சூத்திரத்தையே அப்படித்தான் சொல்லுவார்' என்று குறிப்பிட்டாராம் கமல். உண்மை. எளிமையாக, அதே சமயத்தில் சுருக்கமாக, ஸ்வாரஸ்யமாக எழுதும் அவரது எழுத்து நடையின் பாதிப்பு இல்லாத ஆரம்பகால எழுத்தாளர்களே இல்லை என்று சொல்லிவிடலாம் போல.

சினிமான்னா என்ன என்று கேட்கப்பட்டபோது 'அது நெசம் போல பொய் சொல்றது' என்றாராம்.

கல்லூரிக் காதல் கதையை எழுதிக்கொண்டு வந்து அவரிடம் கருத்து கேட்டு நச்சரித்தவரிடம் 'காதல் கதையை எழுதணும்னா உங்களுக்குக் காதல் அனுபவம் இருக்கணும் ஸார்" என்றவரிடம், அந்த நபர் கேட்டது 'நீங்ககூடதான் கொலைக் கதையெல்லாம் எழுதறீங்க'!

+++

நதிகளைச் சார்ந்த இடங்களில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு நதிகள் மீதான ஸ்நேகத்தை மற்றவர்களால் புரிந்து கொள்வது கடினம். அவ்விடங்கள் சார்ந்து வந்த படைப்புகள் என்னை எப்போதும் பாதித்திருக்கின்றன. அது எழுத்து வடிவிலான படைப்புகளாயினும் சரி - மஹாநதி போன்ற படங்களும் சரி.

படித்த தினத்திலிருந்து இன்று வரை இன்னமும் என்னைப் பாதித்துக் கொண்டிருக்கும் அவரது நாவல் - "ஆ". சென்னையில் துவங்கினாலும் கதை ரயிலேறி திருச்சி, ஸ்ரீரங்கம், பாலத்திற்கு அந்தப் புறம் நின்று வாவா என்று அழைக்கும் ஆசிரியை, வற்றிய நதி நடுவே நிகழும் சம்பவங்கள் என்று என்னை ஹிப்னாடிஸத்தில் ஆழ்த்தியது போல, நானே அக்கதையின் பாத்திரமாக இருப்பது போல உணரவைத்த படைப்பு அது. தொடர்கதையாக வந்து ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஆ-வென 'ஒரு கமர்ஷியலுக்காக' அவர் முடித்ததை ஆர்வத்துடன் படித்து அடுத்த வார ஆ-விற்காகக் காத்திருந்த நாட்களையும், பின்னாளில் புத்தகமாக வாங்கியும் ஏராளமான முறை சலிக்காது படித்ததையும், புத்தகத்தை அன்றைய காதலி, இன்றைய மனைவிக்கு அவருடைய பெயரை முதற்பக்கத்தில் 'To my dear --+ஆ' என்று எழுதிப் பரிசளித்ததையும் நினைக்கையில் - எனது பல்வேறு வாழ்க்கை நிலைகளில் அவரது பாதிப்பை உணரமுடிகிறது.

ஆ-வைப் படமாக எடுத்தால் நாயகனே இல்லாது கேமராக் கோணத்தையே நாயகனது கோணமாகக் காட்டி முழுப்படத்தையும் எடுத்தால் எப்படியிருக்கும் என்றெல்லாம் யோசித்ததுண்டு!

ஆ-வை பற்றி நினைக்கும் போது, வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் நமது செயல்பாடுகளெல்லாம் நம்மிடம் நாமே மனதிற்குள் பேசிக்கொள்ளும் உரையாடல்களின் விளைவாகவே இருக்கின்றன என்று தோன்றுகிறது. ஆ -ஆடிட்டரி ஹலுஸினேஷன் - மாதிரியான குரல் பிரமைகள் எதுவும் இல்லாவிட்டாலும் மனதில் ஒலிக்கும் என் குரலே விரல்கள் வழியாக இப்பதிவில் ஒலி்த்துக்கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

ஆ-வைப் போலவே அவரது ஸ்ரீரங்கத்து தேவதைகளும், ஸ்ரீரங்கத்துக் கதைகளும் எனது வாழ்க்கையின் பல்வேறு பக்கங்களைத் தூசி தட்டியிருக்கின்றன.

+++++

விக்ரம் தொடர்கதையை தொடர்ச்சியாகப் படித்து அது படமாக்கப்பட்டபோது 'ஐயய்யோ சலாமியாவெல்லாம் கதையாகப் படிக்க ஸ்வாரஸ்யமாக இருக்கும். படத்திற்கு அது சரிவராது - நல்ல படம் வீணாகி விடுமே' என்ற கவலையாக இருந்தது. மதுரை மதி திரையரங்கத்தில் முதற் காட்சிக்குச் சென்று பார்த்தபோதும் அதிவேகமான முதல் பகுதியின் வெற்றியை, கற்பனை சலாமியாவும், அம்ஜத்கான், மனோரமா, ஜனகராஜ் தொடர்பான கொடுமையான நகைச்சுவைக் காட்சிகள் கெடுக்கப் போகிறது என்று நினைத்து வருந்தினேன். சுஜாதா இதைக் கமலிடம் சொல்லியிருக்கக்கூடாதா என்றும் நினைத்துக் கொண்டேன். 'கமலின் ஆறுகோடி ரூபாய் கனவு' என்று புத்தகமாகவும் வந்த நினைவு. ஒரு கேள்வி பதிலில் கமல் 'விக்ரம்?' என்ற ஒற்றை வார்த்தைக் கேள்விக்கு 'விரயம்' என்று பதிலளித்திருந்தார். இன்றைக்கெல்லாம் ஷங்கர் விக்ரம் படம் எடுத்திருந்தால் அந்த ஆறு கோடி ரூபாயை 'காப்பிச் செலவுக்கு' கணக்கு எழுதியிருப்பார்!

++++++

நட்புக்காக எழுத்தில் அவர் செய்த சமரசங்கள் அவர் மீது நிறைய பேருக்கு வெறுப்பையும் சம்பாதித்துக்கொடுத்திருந்தது. அவர் சினிமாவிற்குச் சென்றிருக்கக்கூடாது என்றுதான் இன்றுவரை நினைக்கிறேன். பத்திரிகைகளில் 'ஏராளமான மார்புகளுடன் அவள் வந்தாள்' என்று அவர் எழுதினால் அதைக் கண்கொட்டாது படித்து ரசிப்பவர்கள் அது படமாக்கப்பட்டால் 'ச்சீ' என்று விமர்சனம் செய்வார்கள் என்பதை உணர அவர் ஏனோ மறந்தார். கலாசாரக் காவலர்களின் பல்வேறு முகங்கள் ரத்தம் ஒரே நிறத்திலிருந்து பாய்ஸ் வரை அவரைத் துரத்தித் துரத்தி அச்சுறுத்தியதை எண்ணிப் பார்த்துக் கொள்கிறேன். அப்படி அச்சுறுத்தியவர்களுக்கும், இன்று வலையுலகில் சங்கடமேயில்லாமல் அவருக்கு அன்று மறுக்கப்பட்ட அதே 'எழுத்துச் சுதந்திரத்தை' ஆயுதமாகப் பாவித்து அவரைத் தாக்குபவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை.

++++++

மரணத்தின் விளி்ம்புவரை ஏற்கெனவே சென்று அந்த அனுபவங்களையும் அவரது வழக்கமான பாணியில் எழுதியதைப் படித்தபோது 'இவர் நிஜமாகவே மரணித்தபின் அந்த அனுபவங்களைக் கட்டுரையாக எழுதிவிடுவார்' என்று நம்பிவிடலாம் போல இருந்தது.

++++++

அவரது மரணச் செய்தியைக் கேட்டபோது வெறுமையாக இருந்தது. யாரிடமும் பேசப் பிடிக்காமலிருந்தது. தமிழ் மணத்தில் தொடர்ச்சியாக எங்கும் சுஜாதா வியாபித்திருக்க வருத்தம், அஞ்சலிகள், மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் பின்னூட்டம், விளக்கம், பதில் விளக்கங்கள், என்று ஒருபுறம் பதிவுகள் வந்துகொண்டிருக்க, இதற்கெல்லாம் ஒப்பாரியா என்று கேட்ட பதிவுகள் - சுஜாதா - சுரதா என்று ஒப்புமைப்படுத்தி கேள்வி கேட்ட பதிவுகள் - எல்லாரையும் ஏதோவொரு விதத்தில் அவர் பாதித்திருக்கிறார் என்ற மட்டில்தான் அவற்றைப் படிக்க முடிந்தது. இம்மாதிரி அடிதடிகளினூடே அஞ்சலி தெரிவித்துப் பதிவு போட மனம் இடங்கொடுக்கவில்லை. தவிர ஒவ்வொருவருக்கும் அவரவரது கருத்துக்கு ஒரு நியாயம் இருக்கும். யார் சரி யார் தவறு என்ற நடுநிலைப் பார்வை யாரிடமும் இல்லையென்பதால் எல்லாமே சரியாகிவிடுகிறது. ஊடகச் சுதந்திரம், கட்டற்ற இணையவெளி, அது தரும் முகமூடிகள் - யாரும் எதைப் பற்றியம் எப்படியும் எழுதலாம். யாரும் தடுக்க முடியாது. பிடித்தவற்றைப் பிடித்துக் கொண்டு இந்த பரந்த வெளியில் தொங்குவதுதான் வழி - பிடிக்காதவற்றை நினைக்காதிருப்பது மேல் - இரு சாராருக்கும் - அல்லது எல்லா சாராருக்கும் இது பொருந்தும். சற்று காட்டமாகச் சொல்லப் போனால் வலையுலகில் வலைப்பதிவுகளும் வலைப்பதிவர்களும் தத்தமது ஏரியாக்களைக் காத்துக்கொள்ளும் நாய்கள் மாதிரி. வேற்றாள் உள்ளே நுழைந்தால் - பிடித்திருந்தால் வாலாட்டப்படும் - இல்லையெனில் வள்வள்தான் - நாய் என்பதை தரக்குறைவான பிரயோகத்திற்காக இங்கு உபயோகிக்கவில்லை - எனக்கு நாய் பிடித்தமான தோழமை. ஒரு காரின் பின்புறத்தில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் சொல்வது போல சில நேரங்களில் 'The more people I meet, the more I love my dog' என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. நிற்க.

சாவுக்கு ஏன் ஒப்பாரி வைக்கவேண்டும்? அப்படியென்றால் எல்லாச் சாவுக்கும் ஏன் ஒப்பாரி வைக்கவில்லை என்று பகுத்தறிவு ரீதியாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டன. இது அஞ்சலிப் பதிவா, ஒப்பாரிப் பதிவா என்று நான் பகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்திக்கவில்லை. சிலரது சாவுச்செய்தி 'அப்படியா?' என்று கேட்கவைக்கும், சிலவற்றுக்கு 'ஐயோ' என்றிருக்கும். சிலவற்றுக்கு 'நாம் இப்போது எம்மாதிரியான உணர்ச்சிகளுக்கு ஆட்படவேண்டும்?'என்று குழப்பமாக இருக்கும். வெறுமையாக இருக்கும். அந்திப் பொழுதில் தோன்றும் இனந்தெரியாத சோக உணர்வு போல சோகமாக இருக்கும். பெரும்பாலும் அமைதியாக இருக்கத் தோன்றும். சுஜாதா இயற்கை எய்திய செய்தி என்னை வெறுமையாகத்தான் உணர வைத்தது. திடுக்கிடல்கள் எதுவுமின்றி ஆனால் ஆயாசமாக உணர்ந்தேன். துக்கமாக இருந்தது. கடந்த சில வருடங்களாகவே மரணத்தை நோக்கி ஒரு குழந்தையாக அவர் தவழ்ந்து சென்று கொண்டிருந்தார் என்றே எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது. ஆதலால் உடல் உபாதைகளிடம் தொடர்ச்சியாகப் போராடிக்கொண்டிருந்தவருக்கு விடுதலை கிடைத்துவிட்டது என்று ஓரத்தில் நிம்மதியாகவும் இருந்தது.

சுஜாதா ஜுரத்துடன் பதிவு பதிவாகப் போட்டு அலைந்ததில்லை என்றாலும் இப்பதிவு எழுதுவதற்கு எனக்கிருக்கும் முக்கிய காரணமாக நான் உணர்ந்தது - என் வாழ்நாளில் இவ்வளவு நீண்ட நாட்களாக தொடர்ந்து ரசித்து வாசித்த எழுத்தாளர் அவர் ஒருவர்தான் என்பதால். என்னையறியாமலேயே அடிமனதின் ஆழத்தில் நீண்ட வருடங்களாகத் தேங்கியிருக்கும் அவர் மீதான அபிமானத்தின் வெளிப்பாடாகவே இப்பொழுது அவர் மறைவிற்காக என்னுள் என்னைச் சூழ்ந்திருக்கும் வருத்த உணர்வினைப் பார்க்கிறேன்.

நம்மை ஏதோவொரு விதத்தில் பாதித்திருக்கும் எந்த உயிரும் மறையும்போது இயல்பாகவே எழும் வலிகளுக்கும் துக்கத்திற்கும் இம்மாதிரி வெளிப்பாடுகள் ஒரு வடிகால். ஒவ்வொரு மரணச் செய்தியும் நமக்கும் நாளை இது நிகழக்கூடும் என்ற நிஜத்தினை உணராது அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களில் மூழ்கி உறங்கிக்கொண்டிருக்கும் என் போன்றோருக்கு உறக்கத்தைக் கலைக்கும் கடிகார அலார ஒலி. சுஜாதா மறைந்த செய்தி ஒலித்தபோது விபத்துப் பகுதியைக் கடக்கும் வாகனம் போல, வாழ்க்கை தனது வேகத்தைக் குறைத்து நிதானித்துப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பயணத்தைத் தொடர்கையில் கடந்து சென்றவற்றை அடிக்கடி பார்த்துக்கொள்ள உதவும் வாகனக் கண்ணாடி போல, இம்மரணங்களை அடிக்கடி நினைத்துப் பார்த்துக்கொள்ள இப்பதிவுகள் துணைபுரியலாம்.

ஒரு பயணம் முடிவுக்கு வந்திருக்கிறது. நின்ற போது சன்னல்களுக்கு வெளியே எழுந்த ஏராளமான இரைச்சல்கள் இப்போது அடங்கிவிட்டன. நமது பயணம் தொடர்கிறது. அதுவும் ஒரு நாள் முடிவுக்கு வரும். இரைச்சல்கள் மறுபடியும் எழும். என்ன - அவற்றைக் கேட்கத்தான் நாம் இருக்க மாட்டோம்! எல்லாரும் போய்ச் சேருவதென்னவோ ஓரிடம்தான். நீங்கள் முதலில் போய்ச் சேர்ந்துவிட்டீர்கள். நாங்கள் எப்போது வந்து சேர்ந்துகொள்வோம் என்று தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் காதருகே வந்து சொல்லுங்கள் - சிலநொடிகளுக்கு முன்னால்!

அதுவரை உங்களைத் தொந்தரவு செய்யப் போவதில்லை சுஜாத்....ஆ!

++++++++++

19 comments:

PPattian said...

நல்லா எழுதியிருக்கீங்க.. இவ்வளவு தாக்கமான்னு ஆச்சரியப்பட வைக்குது.. உங்கள் அளவுக்கு சுஜாதாவை படித்தறியாதவன் என்பதால் இருக்கலாம்...

செல்வம் said...

சுந்தர் மிக அருமையான பதிவு.சுஜாதா குறித்து ஆழ்மனதில் இருந்து உண்மையாக எழுதியிருக்கிறீர்கள்.எப்போதும் கற்பனைகளை விட உண்மைகள் சிறப்பாக இருக்கும் என்பதற்கு நல்ல உதாரணம்....

Senthil said...

You reflected most of the thoughts
that I had for Sujatha Sir..
Even I was just staring through the window
when I heard the news..
well written post..

Sundar Padmanaban said...

புபட்டியான் (புதுப்பட்டியா?)

நன்றி.

செல்வம்.

//எப்போதும் கற்பனைகளை விட உண்மைகள் சிறப்பாக இருக்கும் என்பதற்கு நல்ல உதாரணம்....
//

ஒத்துக்கொள்கிறேன். ஏனெனில் கற்பனைகளைவிட உண்மைகள் நம்பற மாதிரி இருக்கும்! :-)

வருகைக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

இன்றும் சனிக்கிழமைதான். அம்பலம் சாட் தான் இல்லை. வெகுவாக உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள்.
நம் எல்லோரிடமும்
இத்தனை ஆழமான எண்ணங்களை விதைத்துவிட்டுப் போயிருக்கிறார்.

11.30 லிருந்து 12.30 வரை நாம் ஒரு சாம்ராஜ்ஜியதில் வாழ்ந்தோம்.
வித்தியாசம் என்ன என்றால் அவர் மன்னர் என்ற பந்தா காட்டவில்லை.
நான் பெரியவன், நீ?? என்ற கேள்வியே வரவில்லை.
நன்றி சுந்தர்.

Sundar Padmanaban said...

வல்லிசிம்ஹன் மேடம் (துளசிக்கா மாதிரி உங்களையும் வல்லிக்கான்னு கூப்பிடலாமா?)

//நான் பெரியவன், நீ?? என்ற கேள்வியே வரவில்லை.//

ஆமா - தூரத்திலருந்து அவரை பார்க்கறப்போ இருந்த பிரமிப்பை வாசகர்களோட கடைப்பிடிச்ச எளிமையான அவரது அணுகுமுறை மூலமா அவரே மாத்திட்டார்.

பிரபலங்களும் எளிமையும் அபூர்வ காம்பினேஷன். அப்படி இருக்கும் (இருந்த) சிலரில் அவரும் ஒருவர்.

நன்றி.

Doctor Bruno said...

இதயத்திலிருந்து எழுதியிருக்கிறீர்கள். ஆ கதை, மற்றும் ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்னைப்போல் உங்களையும் பாதித்திருக்கிறது :) :(

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நெகிழ்வான நினைவுகள்...
நன்றாகா எழுதியிருக்கிறீர்கள்.

///////புபட்டியான் (புதுப்பட்டியா?)

நன்றி.///////

எந்த புதுப்பட்டி?

Sundar Padmanaban said...

Doctor Bruno

நன்றி ஸார்.

அறிவன்.

புபட்டியான் பின்னூட்டம் இட்டிருந்தார். புதுப்பட்டியான் என்பதைத்தான் சுருக்கி அப்படிப் பெயர் வைத்திருக்கிறாரா என்று கேட்பதற்காக புதுப்பட்டியா? என்று கேட்டிருந்தேன்.

தங்கள் வருகைக்கு நன்றி.

அரை பிளேடு said...

எனது எண்ணங்களை நீங்கள் பதிவு செய்திருப்பதாக உணர்கிறேன். நன்றி.

Sundar Padmanaban said...

அரை பிளேடு

நன்றி.

mahe said...

sujathavin maraivu enakkul aerpaduthiya vetridathai, mattrum sinthanai ootangalai pola avarin pala rasigargal petriruppathe avarin thaakkam evvalavu perithu enpathai kaatugirathu..
well said sunthar..

ஓகை said...

அங்கேயே படித்துவிட்டேன். அருமையான பதிவு.

Sundar Padmanaban said...

Mahe, ஓகை ஸார்

நன்றி.

enRenRum-anbudan.BALA said...

சுந்தர்,

நிதானமாக 2 முறை வாசித்தேன், என்ன சொல்வதென்று தெரியவில்லை, மனது கலக்கமாகவும், பாரமாகவும் இருப்பது போல ஓர் உணர்வு.

அருமையாக எழுதியிருக்கிறீர்கள் என்று சொல்வது சற்று போலித்தனமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

நான் ஓர் அதி தீவிர சுஜாதா ரசிகன், பதிவர் தேசிகனின் நெருங்கிய நண்பனாக இருந்தும், சாரை சந்திக்க முடியாமல் போனது துரதிருஷ்டமே :(

இப்பதிவின் சுட்டியை எனது அஞ்சலிப் பதிவுகள் பட்டியல் பதிவில் சேர்த்து விடுகிறேன்.

http://balaji_ammu.blogspot.com/2008/03/421.html

//கலாசாரக் காவலர்களின் பல்வேறு முகங்கள் ரத்தம் ஒரே நிறத்திலிருந்து பாய்ஸ் வரை அவரைத் துரத்தித் துரத்தி அச்சுறுத்தியதை எண்ணிப் பார்த்துக் கெதள்கிறேன். அப்படி அச்சுறுத்தியவர்களுக்கும், இன்று வலையுலகில் சங்கடமேயில்லாமல் அவருக்கு அன்று மறுக்கப்பட்ட அதே 'எழுத்துச் சுதந்திரத்தை' ஆயுதமாகப் பாவித்து அவரைத் தாக்குபவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை.
//

ம்ம்ம்ம்ம்ம் .....

//சுஜாதா ஜுரத்துடன் பதிவு பதிவாகப் பேதட்டு அலைந்ததில்லை என்றாலும் இப்பதிவு எழுதுவதற்கு எனக்கிருக்கும் முக்கிய காரணமாக நான் உணர்ந்தது - என் வாழ்நாளில் இவ்வளவு நீண்ட நாட்களாக தெதடர்ந்து ரசித்து வாசித்த எழுத்தாளர் அவர் ஒருவர்தான் என்பதால். என்னையறியாமலேயே அடிமனதின் ஆழத்தில் நீண்ட வருடங்களாகத் தேங்கியிருக்கும் அவர் மீதான அபிமானத்தின் வெளிப்பாடாகவே இப்பெதழுது அவர் மறைவிற்காக என்னுள் என்னைச் சூழ்ந்திருக்கும் வருத்த உணர்வினைப் பார்க்கிறேன்
//
யதார்த்தத்தை, நிஜ உணர்வை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் !

எ.அ.பாலா

Sundar Padmanaban said...

எ.அ.பாலா

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Anonymous said...

Very Good post. Sujatha fondly remembered by you..

Essex Siva said...

என்னைப் போல் பலர் இருக்கின்றார்கள் என்று தெரியும். இன்று அவர்களில் ஒருவரை அறிந்துகொண்டேன்.
இருந்தாலும் பொறாமையாக இருக்கிறது - அவரிடம் பேசியிருக்கிறீர்கள், உங்களை அவருக்கு தெரிந்திருக்கிறது...
You are very lucky...

சிவா கிருஷ்ணமூர்த்தி

பத்மநாபன் said...

எனது மடிகணினியில் தமிழ் தொலைந்து விட்டது ... NHM க்கும் McAfee க்கும் வரப்பு தகராறு ... சீர் செய்ய நேரமில்லை .. அதனால் தமிழ் வலைப்பூ பக்கம் வராமல் இருந்தேன் ... ஆனால் வாத்தியார் பதிவு எப்படியோ என் மூக்கை வியர்க்க படிக்க அழைத்து விடும் ... வாத்தியாரின் வாசக உன்னதத்தை அழகாக வெளிபடுத்தியுள்ளீர்கள் ...

உங்கள் பதிவை படித்தவுடன் , ஏதோ நானே எழுதியதைப்போல் திருப்பி திருப்பி படித்தேன் ...

சக வாசகனுக்கு நன்றி சொல்லியே யாகவேண்டும் என்று தமிழை தேடி அடித்து கொண்டுவந்து ஒட்டிவிட்டேன் ...

நன்றிகள் சுந்தர்.......