Thursday, March 13, 2008

மன்னியுங்கள் ஸ்டெல்லா ப்ரூஸ்



தமிழில் வாசித்த எல்லா எழுத்தாளர்களின் பெயர்களையும்விட என்னை அதிகம் கவர்ந்த பெயர் ஸ்டெல்லா ப்ரூஸ். படித்தவற்றில் சட்டென நினைவுக்கு வருவது அது ஒரு நிலாக்காலம். எந்த வித கவர்ச்சிப் பூச்சுமன்றி எளிமையான நடையில் நீரோட்டமாக எழுதியவர்.

அவர் ஒரு பெண் எழுத்தாளர் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். அவர் ஒரு ஆண் என்பதையோ அவரது இயற்பெயர் ராம்மோகன் என்பதையோ அவர் மறைந்த நாள் வரை அறிந்திராத என் அறியாமையை எண்ணி வெட்கமாக இருக்கிறது.

மரணம் தந்த வருத்தத்தை விட அதை அவர் தேடிக்கொண்ட வழிமுறையை அறிந்து ஏற்பட்ட அதிர்ச்சியின் தாக்கம்தான் மிகமிக அதிகமாக இருந்தது.

சுஜாதா இயற்கையாக மரணமடைந்தார். வாழ்வில் பொருளாதார ரீதியாக எந்தச் சவால்களையும் சந்திக்காது பிரபலமானவராகவே மறைந்தார். அவரது மறைவு ஏற்படுத்தியது துக்கம்.

ஆனால் ஸ்டெல்லா ப்ரூஸ் மரணமடைந்தது பலத்த அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தியது. கைவிடப்பட்ட முதியோர்களைப் பற்றிய செய்திகளை அடிக்கடி படிக்க நேரும்போதெல்லாம் மிகவும் வலிக்கும். இருப்பதிலேயே கொடுமையானது முதுமையில் வறுமை - ஸ்டெல்லா அவர்கள் மனைவியின் பிரிவினால் ஏற்பட்ட தனிமையைத் தாங்காமலும், வறுமையினை எதிர்கொள்ள முடியாமலும் தற்கொலை என்ற அதீத முடிவைத் தேடிக்கொண்டது அறிந்து - குற்றமிழைத்தது போல உணர்ந்தேன். பிரபலமானவர்களுக்கு ஒன்று என்றால் ஓடிவர ஆயிரம் பேர் இருக்க ஏழை சொல் அம்பலம் ஏறாது என்று மறுபடியும் மறுபடியும் நிரூபிக்கப்படுகிறதே என்று வேதனையாக இருந்தது.

அவர் இம்மாதிரி ஒரு துன்பமான நிலையில் இருந்தார் என்பதைக்கூட தமிழ் எழுத்துலகம் அறிந்திராதிருந்தது (அல்லது நான் அறிந்திராமலிருந்தது) பெரிய அவமானம். கேவலம்.

எப்படி யார் கண்ணிலும் படாமல் போய் விட்டார் என்ற கேள்வியே தொக்கி நிற்கிறது. காலம் மறக்கச் செய்துவிடுகிறதோ? வெளிநாட்டுக்கு வேலை விஷயமாகக் கிளம்ப நேரும்போது பெற்றோரைப் பிரி்ந்து செல்லும் அந்தச் சூழ்நிலையில் தனியாகச் சமாளிப்பார்களா? ஏதாவது உடல்நிலை சரியில்லையென்றால்கூட சட்டென ஓடி வரமுடியாதே என்று பல்வேறு எண்ணச்சிக்கல்களில் உழன்றுகொண்டே கிளம்பி வந்து சில காலம் கழித்து வாரயிறுதித் தொலைபேசி அழைப்புகளிலும், முக்கிய நாட்களின் தொலைபேசி அழைப்புகளிலும், flicker-இல் புகைப்படங்களையிட்டு நண்பனுக்கு அனுப்பி பெற்றோரிடம் காட்டச் சொல்வதிலும் - ஆரம்ப நாட்களின் வலிகளை மறந்து - மரத்து - ஒரு விதமாக வாழ்க்கையை வெளிநாட்டில் ஓட்டுவதில் - வாழ்க்கையின் முக்கியத்துவங்களும், கவலைகளும் மாறிவிட்டதைப் போல - ஸ்டெல்லா ப்ரூஸ் போன்ற எத்தனையோ எழுத்தாளர்களை ரசித்துப் படித்த காலங்கள் தேய்ந்து நினைவிலிருந்தே கிட்டத்தட்ட மறைந்து போய்விட்ட வேளையில்தான், அவர்களது மறைவின் மூலம் எத்தகைய அவல நிலையில் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற உண்மை உறைத்துச் செவிட்டிலடிக்கிறது. இன்னும் எத்தனை கலைஞர்களும், படைப்பாளிகளும் இப்படி அவலநிலையில் கவனிப்பாரற்று மூலையில் இருளில் போடப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

முன்பே அவரை நினைவு கூர்ந்திருந்தால் அவரது தனிமையைத் தீர்க்காவிட்டாலும், வறுமையையாவது போக்கியிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. வாசகர்களின் தொடர்புமற்று எழுத்தாளன் இப்படி ஐயோவென முடிவைத் தேடிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவது என்னைப் போன்ற வாசகர்களின் குற்றமாகத்தான் பார்க்க முடிகிறது. நான் ஏதாவது செய்திருக்க வேண்டும் - செய்யவில்லை.

உங்கள் மரணத்திற்கு ஏதோவொரு வகையில் நானும் உடந்தை. வருத்தத்துடன் குற்றவுணர்ச்சியும் தொக்கி நிற்கிறது.

மன்னியுங்கள் ஸ்டெல்லா ப்ரூஸ் அவர்களே!

++++

12 comments:

யாத்ரீகன் said...

சுஜாதாவின் அல்லோலகத்திநூடே கவனிக்கபடாமலே போய்விட்ட நிகழ்வென்று வருந்தினேன் ..
இப்போதைக்கு பதிவுக்கு / வருத்தத்துக்கு நன்றி சுந்தர் ..

Radha Sriram said...

அமாம் சுந்தர்...மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.அதும் அவரோட கடிதத்த படிச்சொடனே....ரொம்ப வருத்தமா இருந்தது.ஒரு தடவை சிந்தானதிதான்னு நினைக்கரேன்.....அவரோட மனைவியுடைய மறுத்துவத்திற்காக நிறைய செலவு செய்து இப்போ ஏழ்மை நிலைல இருக்காருன்னு எழுதியிருந்தார்.....சில சமயம் இந்த மாதிரி தவிர்க்கபடகூடிய விஷயங்களுக்கு நாமும் ஒரு contributor ஆயிட்ரோம்.அச்சசோன்னு சொல்லிட்டு மறந்துடரோமோ??

வெற்றி said...

/* அவர் ஒரு ஆண் என்பதையோ அவரது இயற்பெயர் ராம்மோகன் என்பதையோ அவர் மறைந்த நாள் வரை அறிந்திராத என் அறியாமையை எண்ணி வெட்கமாக இருக்கிறது. */

இப்பிடி ஒரு எழுத்தாளர் இருந்தார் எண்ட விசயமே அவர் மறைந்த பிறகு வ்ந்த பதிவுகளில் இருந்துதான் அறிந்து கொண்டேன். (-:

இவர் பற்றிய பலரின் பதிவுகளைப் படிக்கும் போது ஒரு சிறந்த எழுத்தாளரைத் தமிழுலகம் இழந்து விட்டது என்றே சொல்லத் தோன்றுகிறது.

/* குற்றமிழைத்தது போல உணர்ந்தேன். பிரபலமானவர்களுக்கு ஒன்று என்றால் ஓடிவர ஆயிரம் பேர் இருக்க ஏழை சொல் அம்பலம் ஏறாது என்று மறுபடியும் மறுபடியும் நிரூபிக்கப்படுகிறதே என்று வேதனையாக இருந்தது. */

உண்மைதான் சுந்தர்.

Sundar Padmanaban said...

யாத்ரீகன்

நன்றி.

ராதா ஸ்ரீராம்.

துரதிர்ஷ்டவசமாக நூற்றுக்கணக்கான பதிவுகள் தினமும் வரும் வேளையில் முக்கியமான பதிவுகளைத் தவறவிட நேர்கிறது. சிந்தாநதி ஏற்கனவே ஸ்டெல்லா ப்ரூஸ் குறித்து எழுதியிருந்ததை நான் அறிந்திருக்கவில்லை. அம்மாதிரி பதிவுகள் தமிழ்மணம் மாதிரி திரட்டிகளில் கட்டம்கட்டி சில வாரங்கள் வைக்க ஏற்பாடு செய்திருந்தால் பலரது கவனத்தை ஈர்த்திருக்கும். அவர்கள் செய்திருந்தார்களா என்று தெரியவில்லை. தினமும் வலைப்பக்கம் வரமுடியாத என் நேரப்பிரச்சினை முக்கிய காரணம்.

வெற்றி.

நன்றி.

நன்றி.

Mukundaraj said...

Sundar,

I guess when he lost his wife, Anandha Vikatan published an article last year or 2006 about him and how he is not able to come out from that loss and loneliness.

Mukund

Sundar Padmanaban said...

Mukund,

My bad - I am not a subscriber to Vikatan and don't get the printed version here - I don't blame anyone else on this; but my ignorance.

Thanks for the comment.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

மிகவும் வருத்தமான விசயம்தான் சுந்தர்..

ஆனால் ஏனோ மறைந்த பிறகும் சுஜாதாவுக்கு கிடைத்த மரண அஞ்சலி மரியாதைகள் இவருக்கு இல்லை என்பதே வேதனையான செய்தி...

பாரதியின் மரண ஊர்வலத்தில்
ஆட்களின் எண்ணிக்கையை விடவும்
ஈக்களின் எண்ணிக்கையே அதிகம் என்று வைரமுத்து எழுதியது ஞாபகம் வருகின்றது உங்கள் பதிவினை படிக்கும்பொழுது..

நல்ல பதிவு.

Sundar Padmanaban said...

ஞானியார்

//ஆனால் ஏனோ மறைந்த பிறகும் சுஜாதாவுக்கு கிடைத்த மரண அஞ்சலி மரியாதைகள் இவருக்கு இல்லை என்பதே வேதனையான செய்தி//

ஒரே அளவு கைதட்டல்களும், புகழும், மரியாதைகளும் இரு வேறு கலைஞர்களுக்கு எப்போதும் கிடைப்பதில்லை. ஒரே அளவு பிரபலம் படைத்தவர்கள் யாருமே இல்லை.

சமூகத்தில் அவரவர் ஏற்படுத்திய தாக்கங்களுக்கேற்ப அங்கீகாரம் பெறுகிறார்கள் என்பதே நிஜம். அங்கீகாரம் என்பது பணமோ, புகழோ அல்ல - அவர்கள் சம்பாதித்த உள்ளங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறேன்.

நான் சுஜாதா - சுரதா - தமிழ்ச்செல்வன் - ஸ்டெல்லா ப்ரூஸ் - எம்ஜியார் - சிவாஜி போன்ற ஒப்புமை விளையாட்டுகளுக்கு வரவில்லை. சாமியில் பெரியசாமி யார் சின்னச் சாமி யார் என்பது தேவையில்லா ஆராய்ச்சி, நேர விரயம். அவரவர் பேட்டை அல்லது ராஜபாட்டை வேறு.

என் வருத்தமும் வேதனையும் ஸ்டெல்லா ப்ரூஸ் மாதிரி படைப்பாளிகளை - சிறிய, பெரிய என்ற படைப்பு அளவுகோல்கள் ஏதுமின்றி - இப்படி துயரமான முடிவைத் தேடிச் செல்லும் நிலையில் வைத்திருக்கும் சமூகச் சூழலைப் பற்றியது. எனது அறியாமையைப் பற்றியது. கவனிப்பாரற்று மூலையில் விழுந்து கிடக்கும் இன்னும் எத்தனையோ படைப்பாளிகளையும் கலைஞர்களையும் பற்றியது.

சுஜாதாவின் இறுதி ஊர்வலத்தில் ஏன் ஆயிரம் வாலா வெடி போட்டார்கள், ஏன் ஸ்டெல்லாவிற்கு ரோல் கேப் கூட வெடிக்கவில்லை - அல்லது ஏன் ஒரு சாரார் இலட்சம் வாலா வெடி போட்டு இம்மரணங்களைக் கொண்டானார்கள் - என்பது போன்ற கேள்விகள் மறைந்து போன அவர்களுக்கு எந்தவித மரியாதையையும் தந்துவிடப் போவதில்லை.

நம்மால் செய்ய முடிவதைச் செய்வோம். ஏன் சின்னப் பதிவு பெரிய பதிவு அல்லது பதிவே போடவில்லை என்பதற்குள் போகவேண்டாமே ப்ளீஸ்.

தங்கள் கருத்துகளுக்கு நன்றி.

ILA (a) இளா said...

இன்னொரு வருந்ததக்க விஷயம் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் வெறும் "பத்தே" பேர் :(.

Anonymous said...

என் கருத்துக்கள்
http://payanangal.blogspot.com/2008/03/blog-post.html
http://rathnesh.blogspot.com/2008/03/blog-post_05.html

Sundar Padmanaban said...

இளா

கேக்கறதுக்கே ரொம்பக் கொடுமையா இருக்கு! :-(

புருனோ

சுட்டிகளுக்கு நன்றி. படிக்கிறேன்

Nanda Nachimuthu said...

when i read ur post and others comments i can strognly feel from heart as you say...manniyungal stella bruce...

avaradhu vegu thooraththil manam novel pola ippozhudhu vegu thooraththil stella bruce...

comparison seiyaavae koodadhu...kalaignarkal vishayathil...