Thursday, September 18, 2008

மூன்று வருடங்களுக்குப் பிறகு # 4

அபார்ட்மெண்ட் வீட்டுக்குள் நுழைந்து தொலைக்காட்சியின் ஒலியளவைக் குறைத்தும் இன்னும் சத்தம் அதிகமாக இருக்கக் கவனித்தால் சத்தம் பக்கத்து வீட்டிலிருந்து வந்துகொண்டிருந்தது. எதிர் வீட்டில் வேறு ஒரு சானல் பார்க்கிறார்கள் போல - அதையும் எங்கள் வீட்டிலேயே கேட்க முடிந்தது. 'பக்கத்து வீட்டுல வயசானவங்க - காது சரியாக் கேக்காது' என்று அவ்வளவு அதிக ஒலியளவிற்கு விளக்கம் சொன்னார்கள். இரண்டு வீடுகளிலும் ஒரே சானல் ஓடும் பட்சத்தில் எங்கள் வீட்டில் ஒலியைச் சுத்தமாகக் குறைத்துவிடுவார்களாம்!

கிட்டத்தட்ட இருபது இருபத்தைந்து வருடங்களில் அதிவேகத்தில் காற்று மாசடைந்து வருவது தெரிந்த சங்கதிதான். இம்முறை நான் இருந்த நாட்களில் கவனித்தது ஒலியினால் ஏற்படும் அதிக இரைச்சல் - Noise Pollution. பொதுவாகவே எல்லாரும் உரக்கத்தான் பேசுகிறார்கள். யாரிடமும் பேச்சுக்கொடுத்தாலும் இரண்டு வாக்கியங்களுக்கு மேல் தாங்காது நாசூக்காக மெதுவாகப் பேசச் சொல்ல வேண்டியிருந்தது. சாதாரணமாக இருவர் பேசிக் கொண்டிருந்தாலும் பார்ப்பதற்கு உரத்து வாய்ச் சண்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று நினைக்குமளவிற்குச் சத்தமான பேச்சு. இது காது மந்தத்தில் கொண்டு விடும் - விட்டிருக்கிறது. எந்தக் குழந்தையிடம் எதைக் கேட்டாலும் முதல் முறையிலேயே பதில் வருவதில்லை. 'ம்?' அல்லது 'ஆ?' என்று பதில் கேள்வி - நான் முதலில் கேட்டதை இன்னும் நிதானமாக மறுபடியும் கேட்க பதில் சொன்னார்கள். சிலது என்னருகில் வந்து நிஜமாகவே காதைக் காட்டி 'என்ன கேக்கறீங்க?' என்றதில் ஆடிப்போய்விட்டேன். மெள்ளமாக உருவாகிவருகிறது செவிடாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தலைமுறை.

தசாவதாரத்தை பாஸ்டனில் வெளிவந்த நாளன்றே பார்த்துவிட்டேன். நம்மூரில் திரையரங்கத்திற்குச் சென்று வருடக்கணக்காகிறதே என்று திருவானைக்கோவில் இருக்கும் திரையரங்கத்திற்கு 20 டிக்கெட்டுகள் வாங்கி மொத்த குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு சென்றேன். திரையரங்கம் பக்கமே 20-30 வருடங்களாக வந்திராத என் தந்தையையும் 'பெருமாள் படம் முழுக்க வர்றாரு' அழைத்துச் செல்ல அவர் படம் முழுதும் காதுகளை அழுந்த மூடிக்கொண்டு பார்க்க நேர்ந்தது. அவ்வளவு அதிபயங்கர ஒலியளவை வைத்திருந்தார்கள். நாங்கள் அமர்ந்திருந்தது Box-இல். Sound Effects என்பதை தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக இம்மாதிரி திரையரங்குகளில் அதிக ஒலியளவில் நான்கைந்து முறை பார்த்தாலே காது மந்தமாகிவிடுவது நிச்சயம். நல்லவேளை அந்த அரங்கத்தில் படத்தில் ஆழ்ந்து இருக்கையில் ஏஸியை அணைத்துவிடவில்லை.

வாகன ஓட்டிகள் ஓயாது ஒலிப்பானை ஒலித்துக்கொண்டே இருக்கிறார்கள். கிளம்பும்போது பீங்க். பின்பு சாலையில் செல்கையில் பீங்க் பீங்க். சிக்னலில் பீங்க். முன்னால் வண்டி போனால் பீங்க். நின்றால் பீங்க். நகர்ந்தால் பீங்க். செல்லுமிடம் சேர்ந்ததும் பீங்க். வீட்டிலுள்ளவர்களுக்கு வந்ததைத் தெரிவிக்க பீங்க். வண்டியே ஓட்டாமல் சும்மா உட்கார்ந்திருந்தால் அவர்களது விரல்கள் காற்றில் ஒலிப்பானை அமுக்கிக் கொண்டேயிருக்கின்றன. இப்படி ஆயிரக்கணக்கான வாகனங்கள் அல்லும் பகலும் ஒலிப்பானை ஒலித்துக்கொண்டு இருந்தால் பாம்புக்கும் காது இப்போதெல்லாம் மந்தமாகியிருக்கும்! எதையாவது சொன்னால் 'ஆ ஊ ன்னா அமெரிக்கா ஆப்பிரிக்கான்னு அலட்டிக்கிறான்யா' என்று சொல்லிவிடுவார்கள் என்பதால் தயங்கியே இருக்க வேண்டியிருந்தது. வரையறையற்ற சாலைப்போக்குவரத்தில் எவ்விதகளும் கடைபிடிக்கப்படாமல் சர்க்கரையைக் கண்ட பிள்ளையார் எறும்புகளைப்போல வாகனங்கள் எல்லாத் திசைகளிலும் பறக்கின்றன. விபத்துகள் அனுதினமும். மக்கள் கொத்து கொத்தாகச் சாகிறார்கள். இதைப்பற்றி எந்த மசிரான்களும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

மாம்பழச் சாலையைத்தாண்டி காவிரிப்பாலத்தில் நண்பனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்க நடுப்பாலத்தில் இருக்கும்போது எதிர் திசையில் வந்த காரோட்டி என்ன செய்தார் என்பதைக் கீழே பாருங்கள்! இம்மாதிரி இருந்தால் ஏன் விபத்து நடக்காது?



உயிரைக் கையில்பிடித்துக்கொண்டுதான் சாலையில் இறங்க வேண்டியிருக்கிறது. ஆனால் என்னைத்தவிர எல்லாரும் சாதாரணமாகத்தான் போய் வந்துகொண்டு இருக்கிறார்கள். எல்லாருக்கும் பழகிவிட்டது. நான் அங்கு இருந்தால் ஓரிரு மாதங்களில் எனக்கும் பழகிவிடும். ஆனால் ஏன் இப்படி இருக்கவேண்டும்?. முன்பு இருந்ததை விட சாலைகள் எல்லா இடங்களிலும் இப்போது நன்றாகவே இருக்கின்றன. திருச்சியிலிருந்து மதுரைக்கு அனைத்து சாலை வேலைகளையும் மிஞ்சி இரண்டரை மணிநேரத்தில் சென்றுவிடமுடிகிறது. சாலை வேலைகள் நிறைவு பெற்றால் ஒன்றரை மணிநேரத்தில் சென்றுவிடலாம். திருச்சியிலிருந்து சென்னைக்கு ஐந்து அல்லது ஆறரை மணிநேரத்தில் சென்றுவிட முடிகிறது. முன்பெல்லாம் 8-9 மணி நேரம் ஆகும்.

பிரச்சினை அதிக அளவிலான வாகனங்கள். அதையும் மிஞ்சி முறைப்படி ஓட்டாத, ஓட்டக் கற்றுக்கொள்ளாமல் ஓட்டுனர் உரிமத்தை 'வாங்கி' வண்டியோட்டும் பொது ஜனங்கள். சாலைவிதிகளின் அடிப்படை அறிவுகூட பெரும்பாலானோரிடம் இல்லை. எல்லாரும் ஒரே ஒரு விதியைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். அது "முன்னால் செல்லும் வாகனம் - சிறிதோ, பெரிதோ - அதை உடனடியாக முந்திச் செல், பின்னால் வருபவனுக்கு வழிவிடாதே" என்பதுதான். இந்தியச் சாலைகளின் போக்குவரத்தைப் பற்றி ஏகப்பட்ட நகைச்சுவைத்துணுக்குகள், ஒலி, ஒளித் துணுக்குகள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் அவற்றைப் பார்த்துச் சிரிக்க முடியவில்லை. அவமானமாகத்தான் ஒவ்வொருமுறையும் உணர நேரிடுகிறது. 'ஏழை நாடு' 'வளரும் நாடு' என்று நிரந்தரமாக ஜல்லியடிப்புகளைச் செய்துகொண்டே குட்டிச்சுவராக விட்டுக்கொண்டிருக்கிறார்கள். RTO அலுவலகம் என்றொரு செவ்வாய்கிரம் இருக்கிறதே - அங்குதான் பிரச்சினையின் ஊற்று துவங்குகிறது. ஓட்டுனர் உரிமத்திற்கான தேர்வுகளைக் கடுமையாக்கி அதில் முறைப்படித் தேர்ச்சியடைந்தவர்களுக்கு மட்டுமே உரிமம் என்பதைக் கடுமையாக அமல்படுத்தினாலே சில வருடங்களில் முன்னேற்றம் கண்டுவிடலாம் என்பதை நான் தீவிரமாக நம்புகிறேன். அங்கு செல்லாமலே இடைத்தரகர்களிடம் பணம், போட்டோ, கையெழுத்து என்று கொடுத்து உரிமத்தை வாங்கும் நிலை வேரறுக்கப்படவேண்டும். இதை ஒழுங்காகச் செய்து சாலைப் போக்குவரத்தைக் கடுமையாகக் கண்காணித்து சரிப்படுத்தினால் முன்னேற்றம் நி்ச்சயம்.

சாக்கடையாக இருந்த சத்திரம் பேருந்து நிலையம் இப்போது எவ்வளவோ பரவாயில்லை. சாலையை நன்றாக அகலப்படுத்தியிருக்கிறார்கள். முன்பே சொன்னது போல சாலைகள் பிரமாதமாகவே இருக்கின்றன. ஆனால் போக்குவரத்து. நிறுத்தங்களில் நிறுத்தாமல் ஆங்காங்கே சாலையில் நிறுத்தப்படும் பேருந்துகளால் நெரிசல் ஏற்படுகிறது. கேமராவில் கண்காணித்து, ஒலிபெருக்கியில் அவ்வப்போது வாகன ஓட்டிகளை எச்சரித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின், காவலர்களின் பணி மிகவும் பாராட்டத்தக்கது. நடுச்சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆனால் அவர்களுக்குத் தேவையான அதிகாரங்களும், கருவிகளும், வசதிகளும் குறைவாக இருக்கும்போது வாகன ஓட்டிகள் அவர்களை மதியாது செல்லும் போக்கு பரவலாகக் காணப்படுகிறது. இதைப்பற்றி விவரிக்க ஆரம்பித்தால் இக்கட்டுரை பாதை மாறி வேறெங்கோ சென்றுவிடும் என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

ஒழுங்காகச் சாலை விதிகளை மதித்து ஓட்டினால் இவ்வளவு 'பீங்க்' தேவையில்லை - ஏன் தேவையே இல்லை. எனது 10 வருட வெளிநாட்டு அனுபவத்தில் அதிக பட்சமாக பத்து முறைக்குள்ளேதான் ஒலிப்பானை உபயோகித்திருப்பேன் - அதுவும் மற்ற ஓட்டுனர்களை ஏதாவது விஷயத்துக்காக எச்சரிக்கத்தான். இதைப்பற்றி விவாதித்து நேரத்தை விரயம் செய்து கடைசியில் நண்பனை உட்காரச்சொல்லிவிட்டு ஸ்ரீரங்கத்திலிருந்து ஜங்ஷனுக்குச் சென்று திரும்ப வீட்டுக்கு வரும்வரை ஒரு முறை கூட ஒலிப்பானை ஒலிக்காது ஓட்டிச் சென்று வந்து காட்டியதும்தான் அவன் யோசிக்க ஆரம்பித்தான்.

இன்னும் வரும்....

14 comments:

வல்லிசிம்ஹன் said...

இன்னும் இரண்டு மாதத்தில் ஊர் திரும்புகிறோம்.
நான் நினைப்பதையெல்லாம் நீங்கள் எழுதுகிறீர்கள். முதலில் பயமாக இருக்கும் . பிறகு பழகிவிடும்.
இது இந்தியச் சிந்தனை:)

வீடுகள் இன்னும் அதிக அழுக்காகத் தெரியும். காலில் தூசி எப்போதும் ஒட்டும்.இதையெல்லாம் எதிர்பார்த்துப் போனாலும் இரண்டு நாட்களில் அப்பாடி நம்ம ஊருக்கு வந்துட்டோம்டா சாமின்னு நினைப்பது எங்கள் இருவருக்கும் பழகிவிட்டது!!

Sundar Padmanaban said...

வல்லி மேடம்

//வீடுகள் இன்னும் அதிக அழுக்காகத் தெரியும். காலில் தூசி எப்போதும் ஒட்டும்.//

அது தெரிஞ்ச விஷயம்தான்.

//இதையெல்லாம் எதிர்பார்த்துப் போனாலும் இரண்டு நாட்களில் அப்பாடி நம்ம ஊருக்கு வந்துட்டோம்டா சாமின்னு நினைப்பது எங்கள் இருவருக்கும் பழகிவிட்டது!!//

சொர்க்கமே என்றாலும் நம்மூரு போலாகுமா? திரும்ப இங்க வந்துட்டாலும் ஏன் வந்தோம், அங்கேயே இருந்திருக்கமுடியாதான்னு தோணிக்கிட்டேதான இருக்கும்! இம்மாதிரி புற உலக materialistic சமாசாரங்களைக் கழித்துவிட்டுப் பார்த்தால் தாய்நாடு, சொந்த ஊர், தாய்வீடு இவற்றில் நிறைந்த ரத்தபந்தங்களும், நட்புகளும் - இவற்றை மிஞ்சி எதுவும் கிடையாது!

வடுவூர் குமார் said...

உருவாகிவருகிறது செவிடாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தலைமுறை.
நிஜம் நிஜம் நிஜம்.
நேரமாகிவிட்டது,பிறகு முழுவதுமாக படிக்கிறேன்.

சின்னப் பையன் said...

தொடர் சூப்பரா வந்துக்கிட்டிருக்கு....

நாங்க ஊருக்குப் போய் 2.75 வருடங்களாகிவிட்டது... நாங்களும் போனால் இப்படித்தான் ஃபீல் பண்ணுவோம்னு நினைக்கிறேன்....

Rajasubramanian S said...

very useful post.i think one has to go abroad especially to the west to realise how indifferent we are to human lives and observation of road rules and pollution.the meaning for abuse is clear from the waypeople use their cell phones.
P.S my unicode is not enabled today and so the text is in English.

வெட்டிப்பயல் said...

நீங்க சொல்றதை நானும் உணர்ந்தேன்... அக்கம் பக்கத்து வீடுகளிலும் இப்படி தான் சத்தம் வந்தது. அதே மாதிரி பேசிக்கறதும். ஒரு வேளை நாமக்கு தான் இப்படியாச்சோனு தோனுச்சு. அதை இங்க வந்து அப்படியே மறந்துட்டேன். இதை படிச்சதும் ஞாபகம் வந்துடுச்சு...

Bharath said...

ஆஹா அருமையான பதிவு.. வலிக்காமல் குத்தியிருக்கிறீர்கள். நான் feel பண்ணினதெல்லாம் இன்னுமொருவர் எழுத்தில் பார்க்கும் பொழுது சந்தோஷமாய் உள்ளது. இன்னும் காலாசார அதிர்ச்சி பற்றி எதிர்பார்க்கிறேன்..

Sundar Padmanaban said...

வடுவூர் குமார்

படிச்சுட்டு உங்க கருத்துகளைச் சொல்லுங்க. நன்றி.

ச்சின்னப் பையன்

ஆமா. என்னதான் ஊடகங்கள் மூலமாவும் நண்பர்கள் உறவினர்கள் மூலமாவும் நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனித்து வந்தாலும் நேரில் காண்பதன் அனுபவம் ரொம்பவே வித்தியாசமானதா இருக்கும். தாஜ் மஹாலைத் திரையில் பார்ப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப் போல! நன்றி.

Sundar Padmanaban said...

ராஜசுப்பிரமணியன் s,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Sundar Padmanaban said...

வெட்டி

//அதை இங்க வந்து அப்படியே மறந்துட்டேன். இதை படிச்சதும் ஞாபகம் வந்துடுச்சு...//

இன்னும் ஒரு வாரம் சும்மா இருந்திருந்தா சோம்பல்பட்டு எழுதாமலேயே போயிருப்பேன். இந்த தடவை அப்படியாயிடக்கூடாதுன்னுதான் வழக்கத்துக்கு விரோதமா வேலைக்கு நடுவுல :-) அப்பப்ப எழுதிப் போட்டுட்டேன்.

நன்றி.

Sundar Padmanaban said...

bharath

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//இன்னும் காலாசார அதிர்ச்சி பற்றி எதிர்பார்க்கிறேன்..//

எதைக் கலாச்சாரம் என்று நாம் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதைப் பொருத்துத்தான் நமக்கு அதிர்ச்சி ஏற்படுவதும் ஏற்படாததும் நிகழும். நீங்கள் இப்போதைய உடைக் கலாச்சாரத்தைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். எனக்கு அதிர்ச்சி எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அது குறித்து சொல்லவேண்டியது கொஞ்சம் இருக்கிறது. தனியாக இல்லாவிட்டாலும் வரும் பதிவுகளில் அவை ஊடாடி வரும் என்று நினைக்கிறேன்.

நன்றி.

mynah said...

பொதுவாகவே எல்லாரும் உரக்கத்தான் பேசுகிறார்கள்.
meduvaagap pesinal "romba Alattikkathe. Sattamap pesu" endra commentgalai ketkaththan vendum.

வாகன ஓட்டிகள் ஓயாது ஒலிப்பானை ஒலித்துக்கொண்டே இருக்கிறார்கள்
Mumbail mathaththil oru naal "No honking day" endru oru vidhi murai irukkirathu. idhu ella maanilangalilum vandaal nandraga irukkum.
Miga azhagaga ungal manadhil thondriyavaigalai cholliyirukkireergal. Thodarnthu ezhuthavum.
Nandri
mythili

Sundar Padmanaban said...

மைதிலி

//Mumbail mathaththil oru naal "No honking day" endru oru vidhi murai irukkirathu. //

நல்ல யோசனை. அதான் நமது கட்சிகள் அடிக்கடி பந்த் நடத்துகிறார்களே. பந்த்தினால் விளையும் ஒரே நன்மை வாகன இரைச்சல்களும் மாசுபடுதலும் ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொள்வதுதான்! :-)

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

மாதவராஜ் said...

தீபாவளி வாழ்த்துக்கள்