Friday, October 23, 2009

மூன்று வருடங்களுக்குப் பிறகு # 11 (இறுதி)

மூன்று வருடங்களுக்குப் பிறகு # 10 இங்கே!

சென்னை எந்த அளவுக்கு என்னை பயமுறுத்துகிறதோ அதே அளவிற்கு ஆச்சரியப்படுத்தவும் செய்தது. முன்பு பார்க்காத பளபள கட்டடங்கள் ஆங்காங்கே காட்சியளிக்க, கத்திப்பாரா சந்திப்பு அடையாளம் தெரியாமல் மாறி பெரிதாக ஐந்து விரல்களை நீட்டிய மாதிரி பாலமொன்று முளைத்திருக்கிறது. மாறாதது போக்குவரத்து நெரிசல், ஒலி மாசு. இடதோர தடத்தில் செல்லும் வாகனத்தை திடீரென்று வலதோர மூலைக்குச் செலுத்தி மற்ற எல்லோரையும் அவரவர் வாகன பிரேக்குகளில் ஏறி நி்ற்க வைப்பது. முன்னெச்சரிக்கையின்றி எந்தவித சைகையும் இல்லாது அதிரடியாக எதிர்பார்க்காத திசையில் வாகனத்தைத் திருப்புவது, நடுச்சாலையில் நிறுத்துவது, சாலையில் எத்தனை தடங்கள் இருக்கிறது என்பது முக்கியமில்லை - வண்டி போகும் இடைவெளி கிடைத்தால் நுழைந்து போய்க்கொண்டேயிருப்பது, இருக்கும் சிக்னலை வி்ட்டுவிட்டு அடுத்து என்ன சிக்னல் விழும் என்று அனுமானித்துக்கொண்டு அதற்கேற்ப வண்டியோட்டுவது என்று சென்னையின் போக்குவரத்து குணங்கள் மாறவேயில்லை. இதனாலேயே நால்வழிச் சாலைகளில் எட்டு வரிசைகளில் அல்லது வரிசைகளற்று வாகனங்கள் தேனீக்களாய் அடைந்து கிடக்கின்றன. நிறைய விதவிதமான புதிய மாடல் வண்டிகள். இளைஞர்களும், யுவதிகளும் காற்றாய் பறக்கிறார்கள். தூசு, மாசு இரண்டிலும் முகத்தைக் காக்க முகமூடிக் கொள்ளைக்காரர்கள் போன்று பெண்கள் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொள்ள, ஆண்கள் பின்னால் அமர்ந்திருக்கும் பெண்ணின் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு கண்கள் மட்டும் தெரிய வண்டிகளையோட்டுகிறார்கள். எங்கிலும் பேரிரைச்சல், புகை. அவ்வளவு சீராக பிரதான சாலைகளிருந்தும் நங்கநல்லூரிலிருந்து நுங்கம்பாக்கம் செல்ல எனக்கு இரண்டரை மணி நேரம் (கால் டாக்ஸியில்) ஆயிற்று. அந்தப் போக்குவரத்தில் ஒரு நாள் புழங்கியதற்கு பைத்தியம் பிடிக்காத குறை! பார்த்ததும் காதலிக்கலாம் போன்று தோன்றும் பெண்கள் நிறையவே ஷாப்பிங் மால்களில் தென்பட்டார்கள். நங்கநல்லூர் மார்க்கெட்டில் சென்னையில் ஏதோ ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிவதற்காக வந்து தங்கியிருக்கும் சீனப் பெண்கள் காய்கறி வாங்கிக்கொண்டிருந்ததைக்கூட பார்த்தேன்.

சென்னை வாசிகள் மலைப்புக்குரியவர்கள். தென்தமிழகத்தில் “உப்புத் தண்ணி“ என்று நாங்கள் குறிப்பிடுவது குடிநீர் போன்று சுவையில்லாத, லேசான கசப்புச் சுவையுரிய தண்ணீரை. சென்னையில் நிஜமான “உப்புத் தண்ணி“ தான் எல்லா வீடுகளிலும் வருகிறது போல. அதில்தான் குளித்து உடை துவைத்து எல்லாம் செய்கிறார்கள். தண்ணீர் மேலே பட்டால் தண்ணீர் பட்ட உணர்வே இல்லை. சோப்புத் தேய்த்தால் நுரை வருவதில்லை. குளித்துவிட்டுத் துவட்டினால் பிசுபிசுக்கும் உணர்வு. இதெல்லாம் என்னைப் போன்ற கிராமத்துக்காரனால் கனவில்கூட கற்பனை செய்ய முடியாத விஷயம்! ஆனால் யாரும் இதைப்பற்றி அதிகமாக அலட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை. காலையில் எழுந்து குளித்து, உடைமாற்றி, வெயிலிலும், தூசியிலும் வியர்க்க வியர்க்க அலுவலகம் போய், மாலையில் பேருந்து, ரயில் என்று கூட்டத்தில் கிழிந்த வாழையிலையாய் வீட்டுக்கு வந்து, மின்சாரமில்லாமல், கொசுக்கடியைத் தாங்கிக்கொண்டு வியர்த்து ஊற்றி, வியர்வையுடனே தூங்கியெழுகிறார்கள். தெய்வமே என்று எல்லாரையும் நிறுத்திவைத்துச் சேவிக்கலாம் போலத் தோன்றுகிறது. ”காசு இருந்திச்சின்னா இதுல எதுவும் இல்லாம வாழலாம்“ என்கிறார்கள் - கொடுமையான உண்மை.

பணம் இருந்தால் பன்னீரிலும் குளிக்கலாம். இல்லையா குளிக்கச் சாக்கடையில் கூட தண்ணீர் இல்லை.

“மினரல் வாட்டர்“ என்று வெள்ளைக் காலர் மக்கள் வாங்கிக் குடிக்க, சாமான்யர்கள் “தண்ணிப் பாக்கெட்டு“ வாங்கிக் குடிக்கிறார்கள். இது கொள்ள வருடங்களாக நடைபெறும் சங்கதிதான் என்றாலும் இம்முறை கவனித்தது - இதற்குமுன் இம்மாதிரி வாங்கிக் குடித்திராதவர்கள்கூட காசு கொடுத்து வாங்கிக் குடிப்பதுதான். தமிழ்நாட்டில் “குழாயில் நல்ல தண்ணீர்“ என்பது “தமிழகத்தில நல்லாட்சி“ என்பது போல வருகிற மாதிரித் தோன்றும் ஆனால் வரவே வராத சமாச்சாரமாக இருக்கிறது. அரபு நாடுகளில் சொட்டு நிலத்தடிநீர் இல்லையென்றாலும் கடல்நீரைக் குடிநீராக்கி எல்லாருக்கும் 24 மணி நேரமும் மான்ய விலையில் விநியோகிக்கிறார்கள். இதை ஏன் நம் அரசாங்கங்கள் போர்க்கால அடிப்படையில் செய்ய முன்வரவில்லை என்பது புரியாத புதிர்!

முன்பாவது நிலம் வாங்கவேண்டுமென்றாலோ, வீடு வாங்கினாலோ, ஏன் வாடகைக்கு ஒரு வீட்டைப் பார்த்தால்கூட “தண்ணி கஷ்டம் இல்லல்ல?“ என்று சோதித்துக்கொள்வது வழக்கம். அவர்களும் “ஒக்காந்து கையால மண்ண நோண்டினீங்கன்னா ஈரப்பதம் இருக்கும். எளநி மாதிரி தண்ணி“ என்று சொல்வார்கள். நிலத்தடி நீர் அபாயகரமான அளவிற்குக் குறைந்து போய்விட்டது. மகா மோசமான நீர் மேலாண்மை காரணமாக மழை நீரும் மற்ற நீராதாரங்களும் கரைந்து கானல் நீராகிக்கொண்டிருக்கின்றன. இந்த லட்சணத்தில் “தண்ணீரினால் வருங்காலத்தில் மக்கள் சண்டை போட்டுக்கொள்வார்கள்“ என்று ஆரூடம் வேறு! என்னவோ இப்போது யாரும் நீருக்காக அடித்துக்கொள்ளாதமாதிரி. அவர்களுக்கெல்லாம் கண்கள் என்ன “பொடனியிலா” இருக்கின்றன? வறண்ட கிராமங்களில் பிஞ்சுக் குழந்தைகள் குடங்களைத் தலையிலேந்தி மைல் கணக்கில் நீருக்காக நடக்கின்றன. பொதுக் குழாய்களின் குட வரிசை நீண்டுகொண்டே போகிறது. பெண்கள் குழாயடியில் குடவரிசையோடு நாய்ச்சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.

நிலைமை இன்னும் மோசமாகி வருங்கால சந்ததியினரை நாயைப் போல நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டு தண்ணீருக்காக வீதி வீதியாக அலைய வைக்கப் போகிறோம் என்பதை நினைத்தாலே குலை நடுங்குகிறது. அது எப்படி எந்தச் சொரணையுமின்றி அரசு இயந்திரத்தால் இருக்க முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாகவே காணப்படும் “எவன் செத்தாலென்ன!“ என்ற மனோநிலை சமூகக் கட்டமைப்பு ஆட்டம் கண்டிருப்பதைக் குறிக்கிறது. மக்களின் ஆதாரத் தேவைகளைப் பற்றித் துளியும் கவலைப்படாத அரசாங்கங்கள் நாய்க்கு பிஸ்கெட் போடுவதுபோல கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து வேட்டி, சேலை, டிவி, ஜட்டி, முண்டா பனியன் என்று இலவசங்களில் கரைத்து மக்களைப் பிச்சைக்காரர்களாக்கி வைத்திருப்பது சோகம். இலவசங்களனைத்தையும் ரத்து செய்துவிட்டு போர்க்கால அடிப்படையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை மாபெரும் அளவில் செயல்படுத்தி மக்களுக்கு வழங்கினால் நிகழ் காலமும் வருங்காலமும் அவர்களை வாழ்த்தும். ஆனால் செய்ய மாட்டார்கள்! வாழ்த்து ஓட்டை வாங்கித் தருமா?

நல்லார் ஒருவர் உளரேல் என்று வள்ளுவர் இப்போது சொன்னால் “யோவ் பெரிசு. இனிமேல் இம்மாதிரி உளரேல்” என்று சொல்லிவிடுவார்கள். மழை பொய்த்துப் போவது ஒரு செய்தியே அல்ல இனிமேல். லட்சக்கணக்கான மரங்களும் விளைநிலங்களும் பலியிடப்பட்டு அறுபதுக்கு நாற்பது என்று பிரிக்கப்பட்டு வரைமுறையே இல்லாது வீடுகள் கட்டி அசுரவேகத்தில் விற்றுத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். படித்திருந்தும் முட்டாள்களாய் இந்தச் சுரண்டலுக்கு ஒரு பெரிய சமுதாயமே பலியாகிக்கொண்டிருக்கிறது என்பது சோகம். மழைக்கு மரம் வேண்டும். ”அடுத்த ஆண்டு இறுதிக்குள் தொலைக்காட்சி இல்லாத வீடே தமிழகத்தில் இருக்காது” என்று மார்தட்டி முழங்கும் அரசியல்வாதிகளால் ஏன் ”அடுத்த ஆண்டு இறுதிக்குள் மரம் இல்லாத வீடே தமிழகத்தில் இருக்காது” என்றோ ”அடுத்த ஆண்டு இறுதிக்குள் நல்ல தண்ணீர் வராத குழாயே தமிழகத்தில் இருக்காது” என்றோ ”அடுத்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிக்குச் செல்லாத குழந்தையே தமிழகத்தில் இருக்காது” என்றோ சவால்விட முடியவில்லை? பதிலைக் கண்டுபிடிக்க அதிகம் சிரமப்படவேண்டியதில்லை. அவர்களுக்கென்ன மயிராய் போயிற்று? ஆட்சியில் இருக்கும் சில வருடங்களில் முடிந்த வரை சுரண்டி சொத்து சேர்த்துவிட்டால் போதும். மக்களைப் பற்றி கவலைப்பட அவர்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது. வருங்காலத்தில் நம் சந்ததிகள் தண்ணீரில்லாம் நாக்கு வற்றிச் செத்தால் எவனுக்கென்ன? இன்று இருக்கும் மக்களைப்பற்றியே சிந்திக்காதவர்கள் நாளைய தலைமுறையினரைப்பற்றி எப்படிச் சிந்திப்பார்கள்? எல்லாருக்கும் தொலைக்காட்சி! ஆஹா. என்னே சிந்தனை! புல்லரிக்கிறது. இதைவிட சமூகப் பொறுப்பை யாரிடமும் காண முடியாது. கண்ட பயல்களுக்கெல்லாம் நோபெல் பரிசைக் கொடுக்கிறார்கள். நம்மூர் அரசியல்வாதிகளைக்கல்லவா கொடுக்கவேண்டும். என்ன செய்வது. ஆரியர்கள், மேற்கத்தியர்கள், அவர்கள் எப்படி திராவிடச் செம்மல்களுக்குக் கொடுப்பார்கள்! நம் ஒவ்வொரு உடன்பிறப்பும் ஒரு நோபெல் பரிசுக்குச் சமானம்! இல்லையா?

* * *

ஸ்ரீரங்கத்தின் தெருக்களில் தடுக்கி விழுந்தால் ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒரு இளைஞராவது, யுவதியாவது அமெரிக்காவில் ('ஐட்டி-ல இருக்காங்க') இருக்க, அவர்களது பெற்றோர்கள் சகல வசதிகளுள்ள அமெரிக்கச் சிறை மாதிரி தீப்பெட்டி அபார்ட்மெண்ட்களில் மின்சார, மின்னணு சாதனங்களுடன் வசிக்கிறார்கள். மாலையில் ராகவேந்திர மடத்திற்கோ, ரங்கநாதர் கோவிலுக்கோ போகிறார்கள். பென்ஷன் வாங்குகிறார்கள். வாரயிறுதிகளில் தொலைபேசி அழைப்புகளில் குசலம் விசாரித்துக் கொள்கிறார்கள் (“அம்மாவுக்கு கட்டாயம் ஒரு ஃபுல் ஹெல்த் செக் பண்ணிடுங்கப்பா - ஏப்ரல்ல வந்துட்டு ஒரு ஆறு மாசம் இருந்துட்டுப் போலாம். இவளுக்கும் ஆறு மாசம் ஆறது”). உத்தர வீதிகளில் இருக்கும் வங்கிகளுக்குப் போகிறார்கள். பவர் ஆஃப் அட்டர்னியை மஞ்சள் பையில் வைத்துக்கொண்டு கால்டாக்ஸி பிடித்து ரிஜிஸ்ட்ரார் ஆபிசுக்குப் போய் ஒரு டூ பெட் ரூம் அபார்ட்மெண்டையோ அல்லது “திருச்சி-சென்னை சாலையை ஒட்டி அமைந்த குறைந்த ஆழத்தில் நல்ல நீர் கிடைக்கும் பள்ளி, மருத்துவமனை, பூங்கா வசதிகளோடு அமையப் பெற்ற கலைஞர் அல்லது காமாட்சி நகரில் இரண்டு கிரவுண்டு நிலத்தையோ - “கிரவுண்டு மூணு லச்சம் - பத்திரத்துல நுப்பதாயிரம் போடுவோம். பாக்கி கேஷா கொடுத்திருங்க” - பதிவு செய்கிறார்கள். அதோடு கிடைக்கும் வெள்ளிக்காசு பரிசை வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பி கால் நீட்டி சுவரில் சாய்ந்து அமர்ந்து விசிறிக் கொண்டே (“மாமா கரெண்டு எப்ப வரும்?”) ஜன்னல் வழியாக வெளியுலகை வெறித்துப் பார்க்கிறார்கள். மின்சாரம் இருக்கும் சமயங்களில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டே இருக்கிறது. சென்ற விடுமுறையில் வந்த பேரக் குழந்தைகளை நினைத்துப் பார்த்துக் கொள்கிறார்கள். இரவானதும் டார்ட்டாய்ஸ் கொளுத்தி பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு உறங்கிப் போகிறார்கள்.

***
முந்தைய பத்தாண்டுகளில் காணாத அபார மாற்றத்தை மூன்றாண்டுகள் கழித்து விடுமுறைக்குச் சென்றபோது நான் கண்டேன். ஒரு புறம் நிறைய பணம் புழங்கி நூறு ரூபாய் நோட்டு “டீ” செலவிற்குப் பறக்க, இன்னொரு புறம் நாள்முழுதும் வியர்க்க வியர்க்க ரிக் ஷா ஓட்டி நாற்பது ரூபாய் மட்டும் சம்பாதிக்கும் ஏழைகள் இன்னமும் ஸ்ரீரங்கத்தின் தெருக்களில் அலைந்துகொண்டிருக்கிறார்கள். ஆண்டவனுக்குக் காணிக்கையும் ஆபரணங்களும் வருடாவருடம் குவிந்துகொண்டேயிருக்க, கோவில்களுக்கு முன் பூக்கட்டி விற்கும் பெண்மணிகளும், செருப்பைப் பாதுகாத்து ஒரு ரூபாய் வாங்கிக்கொள்ளும் முறுக்கு வியாபாரிகளும், வறுத்த நிலக்கடலை, பொரி விற்கும் தள்ளுவண்டி வியாபாரிகளும், பள்ளிக்குச் செல்லாமல் முருகன், அம்மன் வேடங்களில் சொம்பு வாயில் துணிகட்டி உண்டியலாக்கிப் பிச்சையெடுத்துக்கொண்டிருக்கும் குழந்தைகளும் இன்னும் இருக்கிறார்கள். இம்மாதிரி காட்சிகளும் பயணங்களும் முடிவற்றதாகத் தோன்றியது.

இவையெல்லாம் ஒரு பயணியாக ஒரு மாத காலத்தில் எனது குறும் பயணங்களை வைத்தான பார்வைப் பதிவு - பரந்து விரிந்த நிஜம் வேறு மாதிரியாக இருக்கலாம். சில மாற்றங்கள் (அல்லது இன்னும் மாறாதவைகள்) அதிர்ச்சியளித்தன. பல பிரமிப்பைத் தந்தன. எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொள்வதிலேயே நேரம் போயிற்று. மாற்றங்களை மனம் ஏற்றுக்கொள்ளப் பழகிற்று - ஆனாலும் மூன்றாண்டுகளுக்கு முன்பு “அண்ணே” என்றழைத்த பயல்களெல்லாம் இப்போது “அங்க்கிள்” என்றழைத்ததைத்தான் ஜீரணிக்கவே முடியவில்லை.

ஒரு மாத விடுமுறை சரசரவென்று தீர்ந்துவிட வருவதற்குமுன்பு விடுமுறையில் இதெதெல்லாம் செய்யவேண்டும், இன்ன இடங்களுக்குப் போகவேண்டும், இன்னின்னாரைப் பார்க்கவேண்டும் என்றெல்லாம் பலமாகப் போட்டுவைத்திருந்த திட்டங்களில் எதுவும் உருப்படியாக நடக்காதது மாதிரி ஒரு முழுமையின்மையோடு திரும்பப் போகிறோம் என்று தோன்றியது. இன்னும் சிலமாதங்கள் கழித்து நிதானமாக யோசித்துத் திட்டம் போட்டு வந்திருக்கவேண்டுமோ என்று தோன்றியது. எதையாவது முக்கியமானதை மறந்திருக்கப் போகிறோம் என்றும் தோன்றியது. சந்திக்க நினைத்த உறவினர்கள், நண்பர்கள் சிலரைச் சந்திக்க முடியாதது குறித்து குற்றவுணர்ச்சி தோன்றியது. மயிராய் போயிற்று என்று பேசாமல் ஸ்ரீரங்கத்திலேயே தங்கிவிடலாமா என்றும் தோன்றியது. அடுத்த தடவை வர இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகும் - அதுவரை வயதானவர்களுக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்றும் தோன்றியது. இன்னொரு மாதத்திற்கு விடுமுறையை நீட்டித்துவிடலாமா என்று தோன்றியது. அப்புறம் வேலை இல்லாமல் போய்விடக்கூடிய சாத்தியம் இருப்பதை மனம் உணர்ந்து எச்சரிக்கை மணி அடித்தது. எந்த மாற்றமும் இல்லாதது போன்று எல்லா நாளும் ஒரே நாளாய் தோன்றும் டாலரைத் துரத்தும் அமெரிக்க வாழ்க்கைக்குத் திரும்பப் போவதை நினைத்து மனம் ஆயாசமடைந்தது. ஆனாலும் மழை, பனி, வெயில், காற்று என்று எல்லா சீதோஷ்ண நிலைகளையும் வருடம் முழுவதும் அனுபவிக்கக்கூடிய பாஸ்டனுக்குத் திரும்பப் போவதை நினைத்தும், எந்நேரம் பார்த்தாலும் புன்னகை புரிந்து நலம் விசாரிக்கும் பக்கத்துவீட்டு வயதான அமெரிக்க தம்பதிகளையும், சாலையில், அலுவலகத்தில் என்று எங்கும் முன்பின் தெரியாதவர்கள் கடந்து போகையில் முகமன் சொல்லிப் போகும் வாழ்க்கைக்குத் திரும்புவதை எண்ணியும் மரங்கள் நிரம்பி நிழல் சூழ்ந்து அமைதி ததும்பும் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் வாழ்க்கையை நினைத்தும், “நம்மூரிலும் இங்குள்ளது போல நல்ல சாலைகளும் இரைச்சலற்ற மாசற்ற வாழ்வும் புன்னகை புரியும் நாகரீத்தின் உச்சியில் இருக்கும் சமூகமும் இருந்தால் எப்படியிருக்கும்” என்ற கையாலாகாத வெளிநாட்டுவாழ் இந்தியச் சுயநலச் சிந்தனைகளும் எழும்பி அதனால் மனதோரத்தில் எழுந்த மகிழ்ச்சியையும் மறுக்க முடியாது. நிற்க.

அது வரை ஷாப்பிங் செய்த பலசரக்குகள், நூறு ரூபாய் சுரிதார்கள், ஆனந்த் பிராண்டு ஜட்டி பனியன், சிறிய அகல் விளக்குகள், வடு மாங்காய் (வேண்டாம்மா - இமிக்ரேஷன்ல தூக்கிப் போட்ருவான்), அப்பளம் வடாம், 2009 பிள்ளையார் காலண்டர், பஞ்சாங்கம், பிரஷர் குக்கர், மீனு மிக்ஸி, ஊது பத்தி, சாம்பிராணிப் பொட்டலங்கள், கொலு பொம்மைகள் என்று கதம்பமாக அடுக்கியதில் இடமில்லாமல் என்னுடைய கைப்பையில் சில புத்தகங்களை மட்டும் ஓரமாக வைத்துக்கொண்டு பெட்டிகளை வாடகை வேனில் ஏற்றிக் கட்ட, குழந்தைகள் ”Hug” என்று சொல்லி தாத்தா பாட்டியைக் கட்டிப்பிடித்து விடைபெற்று டாட்டா காட்டிவிட்டு வண்டியிலேறினார்கள். பெற்றோர்களும், வீட்டிலிருந்த உறவினர்களும், நண்பர்களும் வண்டியைச் சூழ்ந்துகொண்டு கையசைத்து வழியனுப்ப, “கவனமா இருங்க, ஒடம்ப பாத்துக்கங்க” என்ற பரஸ்பரம் சொல்லிக்கொண்டு ஜன்னல் வழியாக மனைவி, குழந்தைகளின் கைகளைப் பற்றிக்கொண்டு “ஜாக்கிரதையா போய்ட்டு வாங்க. ஊருக்குப் போனதும் தகவல் சொல்லுங்க” என்று சொல்ல, “ஊருக்குப் போனதும் போன் பண்றேம்ப்பா என்று நான் சொல்லிவிட்டு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துகொண்டேன். திடீரென்று எல்லாமே ஒரு கனவு போலத் தோன்றியது. குழந்தைகள் ஆரவாரமாக எல்லாருக்கும் டாட்டா காட்டிக்கொண்டிருக்க அரை எலுமிச்சைகளை நசுக்கிக்கொண்டு வண்டி கிளம்பியபோது முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டு கண்களில் வழியத் துவங்கிய நீரை மனைவிக்குத் தெரியாமல் துடைத்துக்கொண்டேன்.

திருச்சி மற்று உபரி நகரங்களைத் தாண்டி சென்னைக்குப் பிரதான சாலையில் வாகனம் செல்ல சின்னவள் கேட்டாள். ”Daddy! Are we there yet?"


முற்றும்.

*******

நன்றி தென்றல்.காம்

Tuesday, October 20, 2009

மூன்று வருடங்களுக்குப் பிறகு # 10

காணி நிலம் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் ஒரு சிறிய வீடு கட்டுவதற்காகவாவது நிலம் வாங்கிப் போடவேண்டும் என்ற நெடுங்காலத் திட்டம் ஊருக்குத் திரும்புவதற்கு ஒரு வாரம் முன்பு திடீரென நினைவுக்கு வர நாளிதழ்களின் வரி விளம்பரங்களை ஆராய்ந்தேன். முன்பு செண்ட், கிரவுண்ட் அளவைகளில் விலை குறிப்பிடுவார்கள். இப்போது சதுரஅடி அளவையில் இருக்க திருச்சியிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நிலங்களின் விலை சதுரஅடிக்கு 200 ரூபாய் என்றார்கள் (ஒரு கிரவுண்டு கிட்டத்தட்ட நாலரை லட்சம் ஆகிறது). சரி தந்தை பெயரில் ஒரு பவர் ஆஃப் அட்டர்னியாவது வாங்கிக் கொடுத்துவிட்டு ஊருக்குப் போகலாம் என்ற முடிவு செய்தபோதுதான் சார்பதிவாளர் அலுவலகம் என்ற குகைக்குப் போகவேண்டுமே என்று உறைத்தது.

தென்னூர் ரோட்டை ஒட்டி இருந்த அந்த அலுவலக காம்பவுண்டைத் தாண்டவே முடியவில்லை. ஈக்கள் மாதிரி மக்கள் கூட்டம். அதில் நுழைந்து தேடியதில் அலுவலர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஆஸ்பெஸ்டாஸ் ஷெட் ஒன்றில் கடைபிரித்து நான்கைந்து டாக்குமண்ட் ரைட்டர்ஸ் அலுவலகங்கள் மும்முரமாக புரோக்கர்கள் நிரம்பி இயங்கிக்கொண்டிருக்க தரையில் படுத்திருந்த நாயின் வாலை மிதிக்காமல் உள்ளே நுழைந்து ஈசான மூலையில் பொதுதொலைபேசிக் கூண்டு அளவு இருந்த அறையில் அமர்ந்திருந்த டாக்குமண்ட் ரைட்டரைப் பார்க்கப் போனேன். அவர் ஈஸிசேரில் அமர்ந்திருப்பதைப் போல நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருக்க மூக்கின் நுனியில் கண்ணாடி, சட்டையின் மேல்பட்டன்கள் திறந்திருக்க, காலரில் கைக்குட்டை சுற்றியிருந்தார். அருகில் இன்னொரு இருக்கையில் சோனியாக ஒரு பெண் அமர்ந்து கணிணியில் எதையோ தட்டச்சிக் கொண்டிருக்க, என்னைப் பார்க்காமல் “என்ன?” என்றார்.

“ஒரு பவர் ஆஃப் அட்டர்னி வேணும் ஸார்”.

“யார் பேருக்கு?”

“அப்பா பேருக்குத்தான்”

“செஞ்சிரலாம்” என்று சொல்லிவிட்டு மனக்கணக்கு போட்டு “ஆயர்ரூவா கொடுங்க” என்றார்.

நூறு ரூபாய் ஸ்டாம்ப் பத்திரம். ஏற்கனவே ஆயிரம் முறை உபயோகித்த இரண்டு பக்க டெம்ளேட்டை கணிணியிலிருந்து உருவி என் பெயர், என் அப்பா பெயர், முகவரி விவரங்கள் மாத்திரம் நுழைத்து அச்சு எடுக்க வேண்டும். ஆயிரம் அநியாயமாகத் தோன்றியது.

“கொஞ்சம் பாத்து செய்ங்க ஸார்” என நான் இழுக்க, அவர் இன்னமும் நிமிராமல் “இங்க பாருப்பா. ஆயிரத்தெட்டு வேலை இருக்கு. நிறைய பத்திரம் பதிய வேண்டியிருக்கு (அதில்தான் காசு). பவர் ஆஃப் அட்டர்னில்லாம் உடனே கொடுக்க மாட்டாங்க. ஆயிரம் கொடுத்தா நாளைக்கு கெடைக்கும். சப்-ரிஜிஸ்தார்லருந்து எல்லாத்துக்கும் கொடுக்கணும்ல? எனக்கு அம்பதுதான் நிக்கும்”

நிற்க முடியாமல் வெளியில் வந்துவிட்டேன்.

அங்கிருந்து விரைந்து ஸ்ரீரங்க கோபுரத்திலிருந்து திருவானைக்காவல் செல்லும் சாலையில் இருந்த சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நண்பனோடு வந்தேன். கூட்டமேயில்லாமலிருக்க, சுற்றுச் சுவரையொட்டி தரையில் பாய்விரித்து கும்பலாக அமர்ந்திருந்தவர்களைத் தாண்டி அலுவலகத்தினுள் நுழைந்தேன். எதிர்பட்ட பியூனிடம் விசாரிக்க “வெளில ரைட்டர்ட்ட போயி சொன்னீங்கன்னா அவங்களே எல்லாத்தையும் செஞ்சு கொடுத்துருவாங்க” என்றதும் வெளியே வந்து மறுபடிம் பாய் கும்பலைப் பார்த்தபோதுதான் மையமாக டைப்ரைட்டர் ஒன்று இருப்பது கண்ணுக்குத் தெரிந்தது. அதன் முன் படபடத்துக்கொண்டிருந்தவரிடம் நெருங்கிக் கேட்டதில் அவர் “ஆயிரம் கொடுங்க” என்று கேட்க, நான் தயங்கினேன். பணம் கொடுப்பது பெரிய விஷயமில்லை. ஆனால் மனம் வரவில்லை. “வெளிநாட்ல இருக்கேன்னு சொல்றீங்க. ஆயிரத்துக்கு இம்புட்டு யோசிக்கறீங்களே” என்றார். வெளிநாட்டிலும் ஆயிரம் ரூபாய் மரத்தில் விளைவதில்லை என்று சொல்ல நினைத்தேன். “நியாயமாக் கேக்கறேன். தொள்ளாயிரம் கொடுத்திருங்க. உள்ள எல்லாத்துக்கும் கொடுக்கணும்” என்றார். நான் பேசாமல் எழுந்து நடக்க முதுகுக்குப் பின் கேலி சிரிப்புகள் கேட்டன. “விஜிலென்ஸ்க்கு கம்ளெயிண்ட் கொடுக்கலாம்னு பெரிசா போஸ்டர் ஒட்டியிருக்கானுங்களே. ஒரு போன் போட்டு சொல்லிரலாமா” என்று நண்பன் கேட்க சற்று சபலமாகத்தான் இருந்தது. ஆனால் அடுத்த வாரம் ஊர் திரும்ப வேண்டியிருந்ததால் அத்திட்டத்தைக் கைவிட்டேன். இவற்றில் எதுவும் புதிதல்ல - பல்லாண்டுகளாக அரசு இயந்திரத்தின் முனை மழுங்கிய பற்சக்கரங்களின் வழியாக மொத்தமும் பரவியிருக்கும் லஞ்சப் பேய் எல்லாருக்கும் தெரிந்த பேய்தான். இவர்களோடு போராட திராணியில்லாமல் வியர்வை பொங்க உழைத்த காசைக் கொடுத்துவிட்டு காரியத்தை முடித்துவிட்டுப் போய்க் கொண்டேயிருக்கிறார்கள். கொடுக்காவிட்டால் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் காரியம் ஆகாது என்பது நிதர்சனம்.

மதுரையிலிருக்கும் செல்வாவை அழைக்க அவன் “இங்க வா. திருநகர்ல ஆள் இருக்கு. முடிச்சிரலாம்” என்றான். அதற்காக இல்லாவிட்டாலும் வாழ்நாளில் பாதியைக் கழித்த மதுரைக்கு எப்படியும் போவதாக இருந்தேன். மனைவி குழந்தைகளை ஸ்ரீரங்கத்திலேயே இருக்கச் சொல்லிவிட்டு நண்பன் வண்டியில் தொற்றி திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் மதுரைப் பேருந்துகள் நிற்கும் பிளாட்பாரத்தினருகில் இறங்கியதும் “மர்ரை மர்ரை மர்ரை” என்று நான்கைந்து பேர் சூழ்ந்துகொண்டு “சார் ஏஸி விடியோ கோச்சு. நான் ஸ்டாப். ரெண்டு அவர்ல போயிரலாம். நூறு ரூவாய்தான்” என்று சொல்லிவிட்டு காதருகில் “தசாவதாரம் போடுவாங்க” என்றார்கள் கையைப் பிடித்து இழுக்காத குறையாக. அவர்களிடம் தப்பித்து அரசு பேருந்து ஒன்றில் ஏறி படியருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

தங்க நாற்கரத் திட்டத்தின் ஒரு பகுதியோ என்னவோ - திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் ஏகமாக வேலைகள் நடந்து கொண்டிருக்க முன்பு ஊர்களுக்குள் பயணித்த சாலையை கண்டுபிடிக்க முடியவில்லை. அமெரிக்க ஹைவே, அல்லது ஃப்ரீ வே மாதிரி சாலை நெடிதாகப் போக, எக்ஸிட் எடுத்து வழியில் இருக்கும் ஊர்களுக்குச் செல்லும் அமைப்பில் உருவாகிக்கொண்டிருந்த அந்த நால்வழிச் சாலையைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. அதிக அலுங்கல், குலுக்கல் இல்லாமல் விரைந்த பேருந்தின் ஜன்னல் வழியாக வீசியடித்த காற்றைச் சுகமாக வாங்கிக்கொண்டு பயணிக்க, மேலூர் தூசியைத் தாண்டி, யானை மலை, மீனாட்சி மருத்துவமனை, உயர்நீதிமன்றம் கடந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்தே விட்டது.
எண்பதுகளின் இறுதியில் மதுரையில் இருந்தவையெல்லாம், பெரியார் பேருந்து நிலையம், அதையொட்டி திருவள்ளுவர் பேருந்து நிலையம், அதை விட்டால் அண்ணா பேருந்து நிலையங்கள்தான். பின்பு பெரியாருக்கு எதிராக தனியார் பேருந்து நிலையம் வந்தது. அப்புறம் ஆரப்பாளையம், பழங்காநத்தம் என்று மாற்றி மாற்றி பேருந்து நிலையங்களைக் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தார்கள். மாட்டுத்தாவணி உருவான புதிதில் அடிமாடு மாதிரி பாவமாக இருந்தபோது பார்த்தது. இப்போது அதன் அபார வளர்ச்சியைப் பார்த்துப் பிரமித்துப் போனேன்.

மதுரையிலும் வெயில் சுட்டெரித்தாலும் திருச்சி போலில்லை. செல்வா “வண்டியனுப்பவா” என்று தொலைபேசியில் கேட்டபோது மறுத்துவிட்டு மஞ்சள் நிறத்தில் கூட்டமில்லாது வந்த தாழ்தளப் பேருந்தில் ஏறினேன். செல்வாவின் அலுவலகம் பைக்காராவில் இருக்கிறது. அதில் தாழ்தளப் பேருந்து நிற்காது என்றும் அதற்கு முந்தைய பழங்காநத்த நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளுமாறும் நடத்துனர் சொல்லி “டிக்கெட்டு ஒம்பது ரூவா” என்றார். என்னிடம் ஒன்பது ரூபாய் நோட்டு இல்லாததால் பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு பாக்கி வாங்கிக்கொண்டேன். அளவான நிறுத்தங்களுடன் ஓடும் பேருந்தாம் அது. அரசு மருத்துவமனை கடந்து வைகைப் பாலத்தில் பயணித்தபோது வைகையில் நீர் பூனை மூத்திரம் அளவே ஓடியதைப் பார்க்க ஏமாற்றமாக இருந்தது. தரைப் பாலத்தை ஒட்டி புதிதாக இன்னொரு மேம்பாலம் உருவாகியிருந்தது. சிம்மக்கல் வழியாக, ரயில் நிலையத்தையும், பெரியார் மற்றும் உபரி பேருந்து நிலையங்களையும் கடந்து மதுரைக்கல்லூரிப் பாலத்தின் மேல் சென்றபோது அதன் பிரும்மாண்ட மைதானத்தை - ஒரு காலத்தில் அனுதினமும் ஓடியாடிய மைதானத்தை ஆவலுடன் பார்த்தேன் - யாருமில்லாது கால்வாசி நீர் தேங்கியிருக்க பன்றிகள் நிறைய இருந்தன.

பழங்காநத்தத்திலிறங்கி அருகிலேயே இருந்த ஆட்டோவிலேறி “பைக்காரா போங்கண்ணே” என்று ஏறிக்கொண்டேன். செல்வாவின் அலுவலக வாசலில் இறங்கிக்கொண்டு அவரிடம் இருபது ரூபாய் கொடுத்துவிட்டு “வரேண்ணே” என்று உள்ளே செல்ல அவரும் எதுவும் பேசாமல் பணத்தை வாங்கிக்கொண்டு சென்றால். இதே சென்னையாக இருந்திருந்தால் என் நிலைமையே வேறு மாதிரி!

செல்வாவுக்குத் தொப்பை பெரிதாகியிருந்தது. “என்னடா ஆளு அப்படியே இருக்க?” என்றான். குசலங்கள் விசாரித்துக்கொண்டு வெளியில் வந்து பக்கத்து சாலையோரக் கடையில் டீ வாங்கிக் குடித்தபோது அந்த வெயிலிலும் இதமாக இருந்தது. மனதிற்குள் இளையராஜா “சொர்க்கமே என்றாலும்...” என்று பாடினார். செல்வாவோடு திருநகர் விரைந்து புதிய சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழிருந்த எழுத்தரிடம் விவரங்களைக் கொடுக்க அவர் கடகடவென்று பத்திரத்தை அடித்துத்தர படியேறி அலுவலகத்திற்குச் சென்றோம். மக்கள் பெஞ்ச் ஒன்றில் வரிசையாக அமர்ந்திருக்க அலுவலகம் அமைதியாக இருந்தது. செல்வா பத்திரத்தை உள்ளே கொடுக்க அரை மணி நேரம் கழித்து அழைத்தார்கள். ஒருவர் என் விரல்களில் மசி தடவி கைரேகையை பத்திரத்தில் பதித்துக்கொள்ள, செல்வாவும் இன்னொரு நண்பரும் சாட்சியொப்பங்களிட்டார்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையை மட்டும் செலுத்தி ரசீது வாங்கிக்கொண்டு மறுபடியும் கீழே எழுத்தரிடம் வந்த போது அவர் மிகவும் தயங்கி “பத்திரத்திற்கு நூறு. எழுத்துச் செலவு அம்பது - நூத்தம்பது கொடுங்க ஸார்” என்றார். அதோடு திருச்சியிலிருந்து நான் வந்த செலவுகளெல்லாம் சேர்த்து எனக்கு அதுவரை முந்நூற்றைம்பதுதான் ஆகியிருந்தது. “செல்வா வேற எதனாச்சும் யாருக்காச்சும் கொடுக்கணுமா?” என்று சந்தேகத்தோடு கேட்க, அவன் புழுவைப் போல பார்த்துவிட்டு “வண்டில ஏர்றா” என்று சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்ப நம்ப முடியாமல் ஏறியமர்ந்து அவன் அலுவலகம் திரும்பினோம்!

மறுநாள் காலை ரயிலில் திருச்சிக்குத் திரும்பிவிட்டேன்.

தொடரும்..

***

நன்றி தென்றல்.காம்

மூன்று வருடங்களுக்குப் பிறகு # 9

ஊட்டி போலாம் என்று வாண்டுகள் குதித்ததில் திடீர் முடிவு செய்து ஷெவர்லேயின் டவேரா (டவரா அல்ல) காரை வாடகைக்கு எடுத்து மூட்டை முடிச்சுகளை ஏற்றிக்கொண்டு கிளம்பிவிட்டோம். கோவையே ஜிலுஜிலுவென்றிருக்க ஊட்டி தேவையா என்று தோணினாலும் வந்ததற்கு அதையும் பார்த்துவிடலாம் என்று சமாதானப்படுத்திக்கொண்டேன். ஊட்டியும் பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்தது. ஊட்டிக்கு மலை ரயிலில் இதுவரை சென்றதில்லை என்று முதலில் எல்லாருக்கும் டிக்கெட்டும் எடுத்து வைத்திருந்தோம். ஆனால் மேட்டுப்பாளையத்தில் ஏழு மணிக்கு ஏறி ஒரு மணிக்கு குன்னூர் போய்ச் சேரும் என்பதாலும் அதற்காகக் குழந்தைகளை அதிகாலையில் எழுப்ப விரும்பாததாலும், அரை நாளை இழக்க விரும்பாமலும் காரிலேயே சென்றுவிடலாம் என்று முடிவுசெய்து 8 மணி அளவில் கோவையிலிருந்து கிளம்பினோம்.

பிளாக் தண்டர் தாண்டியதும் மலைப்பாதை ஆரம்பிக்க இருபுறம் அடர்த்தி மரங்கள். மலைத்தொடரில் ஆங்காங்கே வெள்ளிக் கோடுகளாய் அருவிகள். அருமையான சாலை. பரவசமான அனுபவம். வண்டியின் எல்லா ஜன்னல்களின் வழியாகவும் “அங்க பாரு - இங்க பாரு” என்று நகரும் மேகங்களையும், வெள்ளிக்கம்பி அருவிகளையும், சாலையோரத்தின் குரங்குக்கூட்டங்களையும் அவ்வவ்போது நாசியைத் தாக்கிய யூகலிப்டஸ் (ஸ்பெல்லிங் சரியா?) இலைகளின் வாசனையும் நிறையவே பரவசமூட்டின. இருபத்தேழோ முப்பத்துநாலோ ஹேர்பின் பெண்டுகள் (நல்ல தமிழிலும் அழகான அர்த்தத்தைத் தரும் வார்த்தைகள் ;-)) என்று அறிவிப்பு போட்டிருக்க குதித்துக்கொண்டிருந்த குழந்தைகளை அவற்றை எண்ணச் சொல்லிவிட்டு பார்வையை வெளியே செலுத்த வாகனம் வளைந்து வளைந்து உயர்ந்து ஏறியது. வரும் வழியில் டெலஸ்கோப் வ்யூ இருந்த இடத்தில் நிறுத்திச் சூடாக வேகவைத்த சோளத்தில் மிளகாய்ப்பொடி (ஸ்ஸ்), உப்பு தூவித் தின்ன டெலஸ்கோப் நிலையத்திற்கு வெளிச்சுற்றில் கம்பியைப் பிடித்து நின்றுகொண்டு பள்ளத்தாக்கைப் பார்க்க கோடாகக் கீழே தண்டவாளம் தெரிந்தது. அப்போது நேரம் 11:30 இருக்கும். “ஊட்டி ட்ரெயின் இந்நேரம் இந்தப் பக்கம் வந்தா எப்படி இருக்கும்” என்று நண்பனிடம் சொல்லி வாய்மூடுவதற்குள் தொலைவில் ரயிலின் “கூ” என்ற அழைப்பு கேட்க பரபரப்பாகக் காத்திருக்க, தலையின் வழியாகப் புகைவிட்டுக்கொண்டு கடந்து சென்றது ரயில்வண்டி - கண்கொள்ளாக் காட்சி.


குன்னூர் அடைந்ததும் முகத்திலறைந்தது யதார்த்தம். பச்சைப் பட்டாடை உடுத்திப் பார்த்திருந்த மலைகளின் இளவரசி நவீன நாகரிகத் தாக்கத்தாலோ என்னவோ சுரிதார், ஜீன்ஸ் என்று மாறி, இப்போது டூ பீஸ் உடைக்கு மாறிவிட்டாள் போலத் தோன்றியது. நிறைய பச்சை தொலைந்து, நிறைய கட்டடங்கள் - புதிய கட்டடங்கள். நிறைய வாகனங்கள். நிறைய மக்கள். ரியல் எஸ்டேட் எனும் பூதம் மாநிலத்தின் எந்தப் பகுதியையும் விட்டுவைக்கவில்லை என்று கண்கூடாகத் தெரிந்தது. ஒருவழியாக ஊட்டிக்குள் நுழைய “அது நடிகர் கார்த்திக் வீடு ஸார்” என்று ஓட்டுனர் காட்டிய அடுக்கு மாடிக் கட்டடத்தினைக் கடந்தபோது ஏதாவது ஜன்னல் வழியாக கார்த்திக் பார்க்கிறாரா என்று தேடினேன். நிறைய புதிய, பளபள கட்டடங்கள். ஒரு விடுதியில் நிறுத்தி விசாரித்தபோது “காட்டேஜூக்கு நாலாயிரம் ரூவா ஸார்” என்று சொன்னதைக் கேட்டு விலைவாசி எந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது என்று உணரமுடிந்தது. அமெரிக்காவின் புறநகரங்களில் இருக்கும் Extended Stay என்ற விடுதியில் (சமையலறை, ஒரு பெட்ரூம், ஒரு வரவேற்பறை) வாடகை ஒரு நாளைக்கு 60லிருந்து 80 டாலருக்குள் கிடைக்கும். காட்டேஜ் எடுத்து பெட்டிகளை உள்தள்ளி, குளிரில் உறைந்த கட்டுச் சாதத்தைப் பிரித்து வெட்டியெடுத்துச் சாப்பிட்டுவிட்டு அமர்ந்தோம். உறவினர் வீட்டுப் பெண்மணிகள் ஸ்வெட்டர், மங்கி குல்லாய் போட்டுக் கம்பளி சுற்றிக்கொண்டு புஸ்புஸ் என்று குளிரில் நடுங்கி மூச்சு விட என் ரெண்டு வாண்டுகளும் சாதா உடையில் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்து “கு-ஹ்-ளி-ஹ்-ர-ஹ்-லை-ஹ்-யாடீ” என்று அவர்கள் பற்கள் கடகடக்கக் கேட்டதைப் பார்த்துப் பாவமாக இருந்தது. எனக்கும் ஏனோ அவ்வளவு குளிர் தெரியவில்லை - பாஸ்டனின் குளிருக்கு இதை ஒப்பிடுவதே தவறு - அன்று ஊட்டியில் பதினைந்தோ என்னவொ செல்ஷியஸ் இருக்க மழையில்லாது அருமையாக இருந்தது.

ஒரு மணி நேரம் கழித்து வெளியே கிளம்பி ஏரிக்குச் சென்றோம். திரைப்படங்களில் நாயகனும் நாயகியும் சைக்கிள் பெடலைச் சுற்றிக்கொண்டே படகில் பாட்டுப்பாடுவதைப் பார்த்து முதல் தடவை ஊட்டி வந்தபோது ஒரு பெடல் படகை எடுத்து அனாயசமாகப் பெடலைப் போட்டதில் ஐம்பதடி தூரம் செல்வதற்குள் வியர்த்து நாக்கு தள்ளியது. பக்கத்தில் கடந்து சென்ற படகொன்றிலிருந்து ஒரு பெருசு “ஜிம்ல எக்ஸர்ஸைஸ் பண்ற மாதிரி வேகமா மெதிக்காதீங்க தம்பி. ரொம்ப மெதுவாச் சுத்துங்க. சுத்தாட்டியும் பரவாயில்லை. அப்படியே மொதங்குங்க. வேகமாப் படகோட்டி என்ன செய்யப் போறீங்க“ என்று சிரித்துக்கொண்டே சொன்னதும்தான் உறைத்தது. அதை நினைவுபடுத்திக்கொண்டு எதற்கு வம்பு என்று பத்து பேர் அமரக்கூடிய தட்டைப் படகு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கிளம்ப படகோட்டி, இஞ்சினுக்குப் பக்கத்தில் சமையல் வாயு சிலிண்டர்! மற்ற நகரங்களெங்கும் டாக்ஸி சமையல்வாயுவில் ஓட ஊட்டியில் படகுகள் இயங்குகின்றன. புகையற்ற படகுகள் பசுமை அழியும் வேகத்தைக் குறைப்பதில் ஒரு சிறு பங்காவது அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்க!


படகு சவாரி முடிந்து கரையேறி ஓரத்தில் அமைந்திருக்கும் பொழுதுபோக்கு பூங்காவிற்குச் சென்றோம். உள்ளே மின்சாரத்தில் இயங்கும் குட்டிக்கார்களில் அவரவர்கள் மோதிக்கொண்டிருக்க ஒரத்தில் சில விளையாட்டுச் சாதனங்கள். வெளியே வேகமாகச் சுற்றும் தட்டு வடிவ ராட்டினம் ஒன்று. ஏறி அமர்ந்து கொள்ள நேர் வட்டத்தில் தட்டையாகச் சுற்றாது ஏறி இறங்கி பல கோணங்களில் அசுர வேகத்தில் சுற்றும் அதில் ஏறினால் குடல் வாய்க்கு வந்துவிடும் போலத் தோன்றியதால் “நான் படம் எடுக்கிறேன்” என்று மற்றவர்களை ஏற்றிவிட்டுக் கழன்று கொள்ள அத்தைமார்கள் இருவரும் கண்களை அழுந்த மூடிக்கொண்டு முனிவர்போல அமர்ந்துகொண்டார்கள். குழந்தைகள் பற்கள் தெரியுமளவிற்குச் சிரித்துக்கொண்டே சுற்றினார்கள். ஏகப்பட்ட சத்தமெழுப்பிய அதைப் பார்த்து பயமாக இருந்தது. எங்கே அவர்களது இருக்கைப் பெயர்ந்து வெளியே எறியப்பட்டுவிடுவார்களோ என்று அஞ்சினேன். சரியாக ஒரு மாதம் கழித்து இங்கு திரும்பியதும் செய்தித் தாள்களில் வாசித்த செய்தியொன்று அதிர வைத்தது. கேரளாவிலிருந்து சுற்றுலா வந்திருந்த மாணவிகள் கூட்டமொன்று அதே ராட்டினத்தில் ஏறியிருக்கிறார்கள். உச்ச வேகத்தில் சுற்றியபோது ஒரு இருக்கை மட்டும் பெயர்ந்து வெளியே எறியப்பட இரு மாணவிகள் படுகாயமடைந்திருக்கிறார்கள். ஒரு நிமிடம் உடல் நடுங்கியது. அவர்கள் நலம் பெற்று குணமடைந்திருப்பார்கள் என்று நம்புகிறேன் (விபத்துச் செய்தியைத் தவிர அதைப் பின்தொடர்ந்த செய்திகள் அவ்வளவாக ஊடகங்களில் வராதே).

ஊட்டி மலர்ப் பூங்காவிற்குச் சென்றோம். என்ன அழகு! முன்பு பார்த்ததைவிட பளிங்காகப் பராமரிக்கிறார்கள். மக்கள் கூட்டம் அலை மோதினாலும் அப்பூங்காவின் அழகு எல்லா இரைச்சலையும் அடக்கிவிடுவதாக இருந்தது. காலாற நடந்தோம். என்ன அவசரத்திற்கு ஒதுங்க கழிவறை எதுவும் அருகாமையில் இல்லை. பூங்காவின் அந்தக் கோடியில் (மலையின் ஏற்றத்தில்) ஏதோ ஒரு மூலையில் இருக்கிறது என்று சொன்னார்கள். ஏறி அதை அடைவதற்குள் “வந்து”விடும் போலத் தோன்றியதாலும், உப்பு நீரில் வளரும் செடி எதுவும் அருகில் கண்ணுக்குத் தட்டுப்படாததாலும், வெளியில் வந்து ஒரு விடுதிக்குள் சென்று பாரமிறக்கினேன். வயதானவர்கள்தான் பாவம். சும்மாவே அடிக்கடி செல்ல வேண்டியிருக்கும். அந்தக் குளிரில் அவ்வளவு தூரம் ஏறிச்செல்வது மிகவும் கடினம். இதற்கு யாராவது ”ஆவன” செய்தால் நலம்!


தொட்டபெட்டா, செவன் ஹில்ஸ் என்று சில இடங்கள் சுற்றினோம். செவன் ஹில்ஸில் பத்து பதினைந்து குதிரைகளுடன் ஆட்கள் நின்று “வாங்க ஒரு ரவுண்டு போலாம் ஸார்” என்று அழைக்க, “டாடி டாடி” என்று குழந்தைகள் குதித்தார்கள். “நூத்தம்பது ஸார். ஃபுல் ரவுண்டு” என்று சொல்லவும் அவர்களைத் தாண்டி நடக்க, அந்தக் குதிரை விட்டை போட்டு முடிக்குமுன் “அம்பது ரூவா கொடுங்க ஸார்” என்று இறங்கினார்கள். நூற்றைம்பது, ஐம்பது பிரச்சினையில்லை. ஆனால் அதை முறையாக நிர்ணயித்து அறிவிப்பு வைத்து வசூலித்தால் நம்பகத்தன்மை கூடி நிறைய பேர் சவாரிக்கு வருவார்கள் என்பது என் கருத்து. குழந்தைகள் ஏறிப் போக இயற்கையின் அழகில் மௌனமாய் நின்றேன்.

அங்கிருந்து முதுமலைக்குச் சென்றோம். முதுமலையை நெருங்க நெருங்க குளிர் குறைந்து வெம்மை தாக்கியது. மான்கூட்டமொன்று சாலையைக் கடந்து சென்றது. பழுப்பு படர்ந்த யானையொன்றும் பாகனும் மௌனமாகச் சாலையோரம் நடந்துகொண்டிருக்க எங்கள் வாகனம் சற்றுத் தயங்கி அவர்களைக் கடந்தது. மதியம் முதுமலை வன அலுவலகத்திலிருந்து கிளம்பும் சஃபாரி பயணத்திற்கு சீட்டுகள் வாங்கி வண்டியிலேற சந்தையைப் போல பயணிகள் இரைச்சலாக இருக்க ஓட்டுனர் எழுந்து “மிருகங்களப் பாக்கணும்னா இப்படி இரைச்சல் போடாம அமைதியா வரணும். ட்ரிப்பு முடியற வரைக்கும் யாரும் பேசாதீங்க” என்ற அறிவித்துவிட்டுக் கிளம்ப எல்லாரும் மௌனமானார்கள். சாலையிலிருந்து சட்டெனப் பிரிந்து வனத்திற்குள் செல்லும் பாதையில் வாகனம் செல்ல நிறைய பாம்பு புற்றுகள், மான்கள், சிங்கவால் குரங்குகள் என்று தென்பட்டன. காட்டு யானைகள் எதுவும் தென்படவில்லை என்பது ஒரு ஏமாற்றம்.


அங்கிருந்து கர்நாடக எல்லை பத்து கிலோமீட்டர்களுக்குள் இருக்கிறது. “பர்மிட் வாங்கிட்டுப் போலாம் ஸார்” என்று ஓட்டுனர் பரிந்துரைத்தாலும், மாலை நான்கு மணியாகிவிட்டதால் இரவுப் பயணத்தைத் தவிர்க்க விரும்பி மறுத்துவிட்டேன். “சரி பார்டர் வரைக்கும் போய்ட்டு வந்துரலாம்” என்று சொல்லிவிட்டு ஓட்டினார். கர்நாடக எல்லைச் சோதனைச் சாவடி வரை சென்று ஒரு U Turn அடித்துத் திரும்பினோம்.


ஊட்டியை நெருங்குகையில் “கல்லட்டி அருவி” என்ற தேய்ந்த பெயர்ப்பலகையைப் பார்த்து வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு ஆளரவமில்லாத ஒற்றையடிப் பாதையில் அரைக் கிலோமீட்டர் தூரம் நடக்க, அடர்ந்த புதர்கள், சிறிய மரப்பாலம், பல படிகள், ஓடை, பெரிய பாறை ஆகியவற்றைத் தாண்டிப் பார்த்தால் ஆக்ரோஷமாகக் கொட்டிக்கொண்டிருந்தது அருவி. வாகனத்தை நிறுத்தி உடனே பார்க்கும் இடங்களில்தான் கூட்டம் அம்முகிறது. இம்மாதிரி நடந்து சென்று பார்க்கவேண்டும் என்றாலே பெரும்பாலானோர் அப்பீட்டு ஆகிவிடுகிறார்கள். அம்மாதிரி இடங்களைப் பார்ப்பதில் எனக்கு ஒரு அதீத திருப்தி! மனதில்லாமல் அருவியைப் பிரிந்து ஊட்டி திரும்பி மாலையே கோவைக்கு இறங்கத் துவங்கி இரவு எட்டு மணிவாக்கில் கோவை எல்லையிலிருந்த அன்னப்பூர்ணாவின் புதிய கிளை உணவகத்தில் நிறுத்தினோம். முன்பெல்லாம் கோவை நகரத்திலிருக்கும் அன்னப்பூர்ணாக்களில் நாம் சாப்பிட உட்கார்ந்தால் அடுத்த வாடிக்கையாளர் நம்மையொட்டி நின்றுகொண்டு காத்திருப்பார். சும்மா எதற்காகவே எழுந்து நின்றால்கூட நாற்காலி காணாமல் போய்விடும். நல்லவேளை இந்த தடவை அவ்வளவு கூட்டமில்லாமலிருக்க இரவு உணவை முடித்துவிட்டு பணம் செலுத்துமிடத்தில் இருந்த இனிப்பு பீடா ஒன்றையும் (கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து பீடா) வாங்கி ஒதுக்கிக்கொண்டேன். மறுநாள் சதாப்தியில் திருச்சி திரும்பினோம். கோவையின் குளுகுளு சூழ்நிலையை விட்டு திருச்சி அடுப்புக்குத் திரும்புவதற்கு மனதேயில்லை.

தொடரும்...

***

நன்றி: தென்றல்.காம்

Wednesday, October 07, 2009

மூன்று வருடங்களுக்குப் பிறகு # 8

முந்தைய பாகம் : மூன்று வருடங்களுக்குப் பிறகு # 7
ரயிலும் அதன் தொடர்பானவைகளும் எனக்கு எப்போதும் சலிக்காது ஆச்சரியமளித்துக்கொண்டிருக்கும். அடிக்கடி பயணிக்கும் ரயில் பயணிகள், ஊழியர்கள், ரயில் தண்டவாளத்தையொட்டி வாழும் மக்கள், வழித்தடங்கள் என்று அது ஒரு தனி உலகம். ஒரு பயணியாக இவற்றைப் பற்றி என்றாவது எழுத வேண்டும் என்று அடிக்கடி தோன்றும். அவ்வெண்ணங்கள் கரி எஞ்சினின் புகை போலக் காற்றில் கலந்து கரைந்து விடுகின்றன.

அடிக்கடி பயணிப்பவர்கள் என்று சிலரைப் பார்த்ததும் கண்டுபிடித்துவிடலாம். உலகமே நின்றாலும் கவலைப் படாமல், பெட்டியில் ஏறியதும், படுக்கையை விரித்து காற்றுத் தலையணையை ஊதி, மினரல் வாட்டில் பாட்டிலைத் திறந்து, மூன்றாம் பிளாட்பாரத்து முருகன் இட்லிக் கடையில் வாங்கிய பெட்டியைப் பிரித்து சாப்பிட்டு ஏறிப்படுத்து விசிலடித்து ரயில் கிளம்புவதற்குள் தூங்கிவிடுவார்கள். தாயைப் பிரிந்து கன்றுக்குட்டி தொடர்ந்து எழுப்பும் ஒலியைப் போல தொடர்ந்து “மசால் வடை, இட்லி பொங்கல், சாயா டீ, பூ புஷ்பம்“ என்று இரைந்து ஒலியெழுப்பிக்கொண்டு பாத்திரத்தை ஏந்திக்கொண்டு சில வினாடிகளுக்கு ஒரு முறை கடந்து செல்லும் காண்ட்டீன் ஊழியர்கள்.

பயணச்சீட்டு பரிசோதகர்கள் இன்னும் கொஞ்சம் வினோதமான ஆசாமிகள். வெள்ளை பேண்ட், கருப்புக் கோட்டு, வெண்கலப் பெயர்பட்டை, கையில் அட்டை, பட்டியல், நெற்றியில் குங்குமம், வீபூதி, சந்தனம் ஏதாவது ஒன்றை நிரப்பி, சிவந்த கண்களுடன் ஆவிகள் போல ரயில் முழுதும் பெட்டி பெட்டியாக உலவிக்கொண்டிருப்பார்கள். சிரித்த முகத்துடன், சிடுசிடுப்புடன், கண்களைச் சந்திக்காதவர்கள், யாரையும் சோதிக்காதவர்கள் என்று விதவிதமான பரிசோதகர்கள்.

லாலுபிரசாத் தயவிலா என்று தெரியவில்லை. திருச்சி ஜங்ஷன் பளபளவென்று இருந்தது. வெளியே பளிங்கு மேடையை பரத்தி அமைத்து, சாலையின் நடுநாயகமாக ரயில் இஞ்சின் ஒன்றை நிறுத்தி சுற்றிலும் புல் தரை, ஒளி விளக்குகளுடன் அட்டகாசமாக வைத்திருக்கிறார்கள். முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் திறந்து வைத்த கல்வெட்டு இருக்கிறது. முகப்பின் இடது பக்கத்தில் ரயில்வே காவல்துறை அலுவலகத்திற்குப் பக்கத்தில் உள்ளடங்கி அவர் ஒரு அலுவலகம் வைத்து (பதவியில்லாத காலங்களிலும்) பொதுமக்கள் குறைகளைக் கேட்டறிந்து இயன்ற தீர்வுகளைத் தந்துகொண்டிருந்தார். அந்த அலுவலகம் இருக்கிறதா என்று கண்டுபிடிக்கமுடியாதபடி ரயில் நிலையத்தின் பளபளப்பு வெளியில் விரிந்திருக்கிறது. முன்பதிவு அலுவலகத்தை வெளியே தள்ளிக்கொண்டு வைத்திருக்கிறார்கள்.

கோவையிலிருக்கும் உறவினர்களைப் பார்த்துவிட்டு நண்பர் கோவை ரவீ அவர்களையும் சந்தித்துவிட்டு வரலாம் என்று சதாப்தியில் கிளம்பினோம். அனல் தாங்காது வாடி வதங்கிய குழந்தைகளைப் பார்த்து பாவமாக இருக்க குளிரூட்டப்பட்ட பெட்டியில் சீட்டு வாங்கிக்கொண்டு அமர்ந்தோம். எந்த வகுப்பில் சீட்டு வாங்கிக்கொண்டு வந்தாலும் பாதிப் பேர் கதவருகில் நிற்கிறார்கள். ஒன்றா விரல்களிடுக்கில் சிகரெட் புகைகிறது. இல்லாவிட்டால் கர்ணனின் கவசகுண்டலம் மாதிரி காதோடு கைப்பேசி ஒட்டியிருக்க ஙமஙமஙம என்றுபேசிக் கொண்டேயிருக்கிறார்கள். அதற்கு முந்தைய வாரத்தில்தான் ஒருவர் இப்படி மனைவி உள்ளே உட்கார்ந்திருக்க எழுந்து கதவருகே கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாராம். திருச்சி ஜங்ஷன் வந்துவிட்டது. அவரைக் காணாமல் மனைவி தேட பத்து மைல்களுக்கு அந்தப் பக்கம் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்திருக்கிறார். அதிவேகத்தில் செல்லும் ரயில் - கதவருகே பாதுகாப்பற்று கைப்பேசியில் மும்முரமாக இருக்க ஒரு உலுக்கலில் தூக்கி வெளியே வீசி விட்டது ரயில்! ஆனால் இதெல்லாம் ஒரு நாள் செய்தி. யாருக்கும் உறைப்பதில்லை! உண்மையில் காலையில் காப்பியோடு தினத்தந்தி படிக்கையில் விபத்து, கொலை, கொள்ளை என்று ஏதாவது செய்திகள் இல்லாவிட்டால் எதையோ இழந்தாற்போல காப்பியும் தினத்தந்தியும் ருசிப்பதில்லை. ரொம்ப குரூரமானவர்களாகிவிட்டோமோ என்று பயமாக இருந்தது.

எங்களுக்கு முன் வரிசை காலியாக இருக்க, ஒரு உம்மணா மூஞ்சிப் பரிசோதகர் வந்து சோதித்துவிட்டுப் போனார். அடுத்த நிறுத்தத்தில் ரயில் நின்றதும், ஒரு நாற்பதுகளிலிருந்த நபரும், அவரது பெண்பிள்ளைகள் இருவரும் மஞ்சள்பைகள் சகிதம் - கிராம வாசிகள் என்று பார்த்ததும் தெரிந்தது - மெதுவாக வந்து காலியான இருக்கைகளில் அமர்ந்தனர். சில நிமிடங்களில் திரும்ப வந்த பரிசோதகர் முகத்தில் அவர்களைப் பார்த்ததும் கேள்விக்குறி. அவர் பின்னால் சலவைச் சட்டைகளில் மூன்று பெரிய மனிதர்கள் பெட்டிகளுடன் நிற்க பரிசோதகரின் விரல்களிடுக்குகளில் ரூபாய்த்தாள்கள் தெரிந்தன. வந்ததும் அந்நபரிடம் “டிக்கட்ட எடு“ என்று பயணச்சீட்டைக் கேட்டு வாங்கியவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. “ஏன்யா அறிவில்லை?“ என்று துவங்கி சில நிமிடங்கள் ஏகவசனத்தில் திட்டித் தீர்த்தார். “அன் ரிசர்வடு டிக்கட்டை வாங்கிக்கிட்டு ஏஸில வந்து உக்காந்திருக்கையே - உனக்கு ஏஸி கேக்குதா?“ என்று கத்தினார். அவர் பாவமாக ஈனஸ்வரத்தில் “தெரியலைங்க” என்று சொல்ல “ஏஸி குளிர்றது கூடவா தெரியலை? சொரணையில்லை. எந்திரிய்யா? எந்திருச்சி அடுத்த கோச்சுக்குப் போய்யா“ என்று கத்த அவர்கள் பைகளை எடுத்துக்கொண்டு பதில் பேசாது வெளியேறிச் செல்ல சலவைச் சட்டைகளைப் பார்த்து “காலியா இருந்துச்சுன்னு நோட் பண்ணி உங்களுக்கு ஒதுக்கி வச்சிருந்தேன். வந்து பாத்தா இவனுங்க. நீங்க ஒக்காருங்க ஸார்” என்று சொல்லி விலக, எனக்கு ரத்தம் கொதித்தது. உலகச் சந்தையே வாடிக்கையாளர்களை மையமாக வைத்து அவர்களையும் விற்பனையையும் தக்க வைக்க மன்றாடுகிறார்கள். எத்தனை லல்லுக்கள் வந்தாலும் அரசு இயந்திரங்களின் இடுக்குகளில் இருக்கும் இம்மாதிரி பிசுக்குகளை நீக்குவது கொஞ்சம் கஷ்டமான காரியம் என்று தோன்றியது. பீடா கும்பாவைத் தூக்கி எறிந்துவிட்டு இவர்களை உட்கார வைத்து லாலுவைக் கொண்டுத் துப்பச் செய்ய வேண்டும்! சக பயணியை இப்படி அவமதித்த அந்த நபரைக் கண்டிக்க நினைத்தாலும் பேசாமலிருந்துவிட்டதை நினைத்து குற்றவுணர்வு இதை எழுதும்போது கூட உறுத்துகிறது.

கோவை சென்று இரவு ஒன்பதேகாலுக்கு இறங்கி நிலையத்திலிருந்து வெளியில் வந்ததும் சில்லென்று காற்று உடலைத் தழுவியது ஆசுவாசமாக இருந்தது. குளிரூட்டப்பட்ட அறையில் நுழைந்தது போன்ற உணர்வு. ரயில் நிலையத்தின் முகப்பு இங்கேயும் பளிச்சென்றிருக்க, ஒழுங்கான வரிசையில் கால் டாக்ஸிகள் - யாரும் மேலே விழுந்து கையைப் பிடித்து இழுத்துக் கூப்பிடாமல் இருந்தது இன்னொரு ஆச்சரியம். பயணிகளை உடமைகளைப் பாதுகாத்துக்கொள்ளச் சொல்லி காவல்துறையின் இடைவிடாத அறிவிப்பு ஒலித்துக்கொண்டிருந்தது.

கோவைக்குப் பத்து வருடங்களுக்கு முன்பு வந்திருக்கிறேன். தெலுங்குப்பாளையத்திற்குச் செல்லும் போது எனது கோவை ஞாபகங்களை நினைவுபடுத்திக்கொள்ள முயன்றேன். எதுவும் அடையாளம் தெரியவில்லை. எல்லாமே புதிதாக இருந்தது. கோவை பரந்து விரிந்திருக்கிறது. ஆனால் திருச்சி மாதிரி பைத்தியக்காரத்தனமான, ஒழுங்கற்ற, அசுர விரிவாக இல்லாமல் ஒழுங்காகக் காட்சியளித்தது - பிரமையோ என்னவோ. தெலுங்குப் பாளையத்தில் ஒரு கிரவுண்டு நாற்பது லட்சம் என்று சொன்னதைக் கேட்டதும் (98 ல் இருபதாயிரமோ நாற்பதாயிமோ) பக்கத்துப் பெட்டிக்கடையில் இஞ்சி மொரப்பா ஒன்று வாங்கி வாயில் போட்டுக்கொண்டேன். அந்தப் பணத்தில் பாஸ்டனிலிருந்து இருபது மைல் தூரத்தில் நல்ல குடியிருப்புப் பகுதிகளில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கிவிடலாம்!

கோவை ரவீ அவர்கள் வந்திருந்தார்கள். அவருடைய நண்பர் கடைக்குச் சென்று அறிமுகப்படுத்திவிட்டு பின் ரவீயின் வீடடுக்குச் சென்று சிறிது நேரம் இருந்துவிட்டுத் திரும்பினேன்.



மறுநாள் டாக்ஸி ஒன்றில் தியான லிங்கம் (ஈஷா தியான மையம்) சென்றோம். வெள்ளியங்கிரி மலையின் மடியில் அமைந்திருக்கும் அந்த தியான மண்டபம் அழகு. உள்ளே மண்டபத்தில் நுழைந்து இருளில் கால் தடுக்காது சென்று - ஆடை உரசும் சத்தம் கூட கேட்கக்கூடாது என்பதால் பேண்ட்டை நாலைந்து மடிப்புகள் மடித்துக்கொள்ளச் சொன்னார்கள். பெண்களின் வளையல், கொலுசு இத்யாதிகளைக் கழற்றிக் கைப்பையில் வைத்து வெளியே பாதுகாக்குமிடத்தில் வைக்கச் சொன்னார்கள் - சம்மணமிட்டு அமர்ந்து கொள்ள மகா அமைதி. கண்களை இமைத்தாலே சத்தம் கேட்கும் போல இருந்தது. நடு செண்ட்டரில் லிங்கம். குடுமி வைத்துக் காவியுடையில் சில வெள்ளைக் காரர்கள். சேலை கட்டிய மாதுகள். சிறிது நேரத்தில் அசரீரி போன்று இசையும் மொழி புரியாததொரு பிரார்த்தனை பாடலும் வீணையின் நரம்புகளைச் சுண்டுவது போல எழும்பி அதிர்ந்து மண்டபத்தை நிரப்ப அந்த அனுபவம் சில நிமிடங்கள் நீடித்து ஓய மெதுவாக எழுந்து வெளியில் வந்தோம். நெடுங்காலம் கழித்து தொடர்ச்சியாக சம்மணமிட்டு 20 நிமிடங்கள் அமர்ந்ததில் அடிமுதுகு வலித்தது. ஊருக்குத் திரும்பியதும் உடற்பயிற்சியை மறுபடியும் ஆரம்பித்துவிடவேண்டும் என்று ஆயிரமாவது முறையாகச் சபதமெடுத்துக்கொண்டேன்.

குறிப்பிட்ட நேரத்தில் அவ்விசை இசைக்கப்படுவதாலும், நாங்கள் கிட்டத்தட்ட அது துவங்க ஒரு நிமிட நேரம் இருக்கும்போதுதான் மண்டபத்துக்குப் போனதாலும் அவசர அவசரமாக உள்ளே ஓட வேண்டியிருந்ததாலும் மண்டபத்திற்கு முன்பிருந்த பளிங்குக் குளத்தில் குளிக்க முடியவில்லை. ஆண்கள் பெண்கள் இருவரையும் பிரித்து ஆளுக்கு அரைமணி நேரம் என்ற ரீதியில் மாற்றி மாற்றி குளிக்க விடுகிறார்கள். அங்கேயே வேட்டிகளும், துண்டுகளும் கொடியில் காய்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றை அணிந்து இறங்கிக் குளித்துவிட்டு மறுபடி நமது உடையைப் போட்டுக்கொள்ளலாம். நான் எந்த இடத்திற்குச் சென்றாலும் குளிக்கவொரு சந்தர்ப்பம் கிடைத்தால் விடவே மாட்டேன். போன ஜென்மத்தில் தண்ணீர்ப் பாம்பாகப் பிறந்திருப்பேன் என்று நினைக்கிறேன். சட்டென்று துண்டைக் கட்டிக்கொண்டு படிக்கட்டுகளில் இறங்கிவிட்டேன். உடல் பற்றிய பிரக்ஞையில்லாது பொதுவில் குளித்த காலங்கள் போய், இப்போது லேசாகத்தான் இருந்தாலும் தொப்பை வெட்கப்படுத்தியது. எக்கி அடக்கி இறங்கினேன். “நம்மூரில் மாடு தடுக்கி விழுகிற வரைக்கும் வயசானதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள்” என்று சுஜாதா எழுதிய பிறந்ததினக் குறிப்பு நினைவுக்கு வந்தது.

குளம் என்றால் தெப்பக்குளம் போல இல்லை. ஒரு முப்பது படிகள் தரைமட்டத்திலிருந்து கீழே இறங்க இறுதியில் நீச்சல் குளத்தின் நீளத்திற்கு ஒரு தொட்டி செவ்வக வடிவத்தில் இருக்க உயரத்திலிருந்து பனிக்கட்டியின் சில்லிப்பில் நீர் தொடர்ச்சியாக விழுகிறது. ஈரப்படியில் கால் வைத்ததும் சில்லிப்பில் மயிர்கூச்செரிந்தது. குளத்தின் நடு நாயகமாக பளிங்கில் உள்ளே பாதரசம் திணித்திருக்கும் லிங்கத்தை நிறுவியிருக்கிறார்கள். நீர் மட்டத்திலிருந்து சற்று கீழே முங்கியிருக்கிறது. விழும் நீரில் உடல், மனச் சூடு நீங்க சில நிமிடங்கள் நின்று விட்டு நீந்தி லிங்கத்தை அடைந்து அதைத் தொடும் அனுபவம் வித்தியாசமாக இருக்கும் என்று சொன்னார்கள். அந்த குளிர் நீரில் குளித்ததே மனதை அமைதியாக்கிவிட்டது. லிங்கத்தைத் தொட்டேன். குளிர் நீரிலும் சில்லென்றிருந்தது லிங்கம். கண்களை மூடி வெற்றாக எதையும் நினைக்காமல் சில நிமிடங்கள் இருந்து விட்டு - அரை மணியாகி விட்டது என்று மேலே நின்றிருந்த ஊழியர் சைகை காட்ட - எழுந்து வந்து உடை மாற்றிக் கொண்டேன். வீட்டுப் பெண்களும் குழந்தைகளும் அடுத்த அரைமணி ரேஷனில் சென்று குளித்துவிட்டு வர மொத்த கட்டடத்தையும் மெதுவாகச் சுற்றிப் பார்த்துவிட்டு வண்டிக்குத் திரும்பினோம். ஏனோ தெரியவில்லை - வியாபார ஸ்தலமாகிவிட்ட ஸ்ரீரங்கம், சமயபுரம் கோவில்கள், கிரானைட் இழைக்கப்பட்ட வெளிநாட்டில் கிளைகளுடன் உள்ள, பளபள தியான லிங்கம், இவையனைத்தும் ஒவ்வொருவித அனுபவத்தைத் தந்தாலும் எளிமையாக எங்கோ ஆளரவமில்லாது இருக்கும் அழகிய மணவாளன் கோவில் போன்று ஒருவித நிறைவைத் தரவில்லை. தியான லிங்கத்தின் சூழ்நிலை அமைதி மனதை அமைதிப் படுத்தியது என்பதைக் குறிப்பிட்டாகவேண்டும். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்பெல்லாம் விசேஷ நாட்களில் கூட்டம் முண்டியடித்துக்கொண்டிருக்கும் - இப்போது 365 நாட்களும் கூட்டம் அம்முகிறது. பணம் புழங்குமளவிற்கு எல்லாருக்கும் கஷ்டங்களும் பெருகிவிட்டன போலும். கைக்குழந்தைகளைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு ஏராளமான பெண்களும், வயசாளிகளும் கோவில்களின் நிரம்பியிருக்கிறார்கள்.

எளிமையான, காற்றோட்டமான, அமைதியான, நடக்கையில் உள்ளங்கால்களில் பட்டு உடல் முழுவதும் சில்லிப்பு பரவும் கோவில்களை என்றோ இழந்து விட்டோம்.



தியான லிங்கத்திலிருந்து வெளிவந்து கோவை குற்றாலத்திற்குப் புறப்பட்டோம். தென்காசிப் பக்கம் குற்றாலத்திற்குக் கல்லூரி படிக்கும் போது போய் அனைத்து அருவிகளுக்கும் - தேனருவி உட்பட - விஜயம் செய்து குளித்திருக்கிறேன். ஆனால் அப்போதே சித்திரைத் திருவிழா கூட்டம் இருக்கும் - கோவைக் குற்றாலத்திற்குச் சற்று சந்தேகத்தோடு சென்றால் மகா ஆச்சரியம். வாகனத்தை நிறுத்திவிட்டு ஒரு கிலோ மீட்டரோ என்னவோ மலைப்பாதையில் நடக்கவேண்டும் என்று சொன்னார்கள். ஓரிரு நபர்களைத் தவிர யாரையும் காணவில்லை. கோவையிலிருந்து தியான லிங்கம், கோவை குற்றாலம் செல்லும் வழியில் இருபுறமும் முழுவதுமே விவசாயம் செழித்திருக்க எங்கும் பசுமை. மலையடிவாரத்தில் கேட்கவே வேண்டாம். ஓங்கியுயர்ந்த மரங்களும், காற்றின் குளுமையும், மெல்லிய தென்றலும் நான் இந்தியாவில்தான் இருக்கிறேனா என்று சந்தேகமே வந்துவிட்டது.! மலைப்பாதையில் பசுமைக் கடலிடையே நடக்க நடக்க உடல், மனம் முழுதும் புத்துணர்ச்சி நிரம்புவது போல இருந்தது. “போன வாரந்தான் நாலு பைக்குல பசங்க வந்திருந்தாங்க. அருவிக்குப் போய்ட்டு திரும்ப வரும்போ ஒத்தை யானை விரட்டி ஒத்தனை மெதிச்சுருச்சு. ஆள் ஸ்பாட்லயே காலி” என்று ஒருவர் திருவாய் மலர்ந்தருளினார். வற்றாயிருப்பிலிருக்கும்போது சிறுவயதில் பலமுறை காட்டழகர் கோவிலுக்கு காட்டுப்பாதையில் நடந்து சென்றிருக்கிறேன். யாராவது ஒருவர் இம்மாதிரி “யானைக் கதைகளை”ச் சொல்வது வழக்கமாதலாலும் அது வரை காட்டு யானை தரிசனம் கிட்டியதில்லை என்பதாலும் இவர் சொன்னதைச் சட்டை செய்யவில்லை. ஆனாலும் வீட்டுப் பெண்மணிகள் பயந்தார்கள். எந்தச் சந்தோஷத்தையும் மனிதன் பத்து நிமிடத்திற்கு மேல் நீடிக்க விடமாட்டான் - பயம், துக்கம், சோகம், கவலை, துன்பம் இவற்றில் ஏதாவது ஒன்று இல்லாமல் மனிதனால் சில நிமிடங்கள் கூட நிம்மதியாக இருக்க முடியாது என்று தோன்றியது. ஆதிமனிதனிலிருந்து இன்று வரை ஆதார உணர்வான பயம் ஒன்றே மனித குலத்தைச் செலுத்துகிறது என்றும் தோன்றியது. அது அமெரிக்காவானாலும் சரி. கோவைக் குற்றாலத்தில் ஒற்றையடிப்பாதையில் நடந்துகொண்டிருக்கும் நம்மைப் போன்ற சாமான்யர்களானாலும் சரி.



அருவிக்குச் சில நூறடிகள் முன்பே காற்றில் சாரல் பரவி உடலைத் தழுவியது. சூரியன் விழத் தொடங்கியிருந்தான். மலைத்தொடர்ச்சியெங்கும் ஆங்காங்கே வெள்ளிக் கீறல்கள் போல அருவிகள் தொலைதூரத்தில் தெரிந்தன. அக்காட்சியை வர்ணிக்க முயல்வது நேர விரயம். உள்வாங்கி நினைவு முழுதும் நிரப்பிக்கொண்டேன்.

ஒரு சிறு பாலம் இருக்கிறது. இடது புறம் சற்று உள்ளே பிரதான பிரதான அருவி விழ, பாலத்துக்கு அடியில் நீரோடி மூன்று அடுக்குகளி்ல் சிற்றருவிகளாக வலப்புறம் விழுகிறது. பிரதான அருவிக்குச் செல்லும் பாதையில் முட்செடிகள் போட்டுத் தடுத்திருந்தார்கள். வலது புறம் படிகள் இறங்கிச் செல்கின்றன. தடுப்புக் கம்பிகளும், கழிவறை, உடை மாற்றுமறை வசதிகளெல்லாம் செய்து அருமையாக வைத்திருக்கிறார்கள். அங்கேதான் பத்திருபது பேரைப் பார்க்க முடிந்தது. இரண்டு அடுக்காக விழும் அருவிகளில் ஒன்றைப் பெண்களுக்கு என்றும் இன்னொன்றை ஆண்களுக்கும் ஒதுக்கி அறிவிப்பு வைத்திருக்கிறார்கள். இறுதியடுக்கில் நீச்சல் குளமளவிற்கு நீர் மூன்றடி தளும்பியிருக்க தடுப்பு தாண்டி நீர் விழுந்து மலைக்குக் கீழே போகிறது. அந்த அடுக்கில் வயதானவர்களும், குழந்தைகளும் குளிக்க வசதியாக இருந்தது. தியான லிங்கக் குளத்தில் குளித்த தலை இன்னும் காய்ந்திருக்கவில்லை. அருவிக்குள் குழந்தைகளைப் பிடித்துக்கொண்டு புகுந்தேன். அருவிகளில் குளிக்கும்போது நீரின் வேகத்தில் மூச்சு முட்டும் சமயங்களில் நீர்த்திரைக்கும் பாறைக்கும் இடையிலிருக்கும் சிறு இடைவெளியில் நின்று கொள்வது வழக்கம். குழந்தைகள் குதூகலித்து ஆர்ப்பரித்தார்கள். அசுர வேகத்தில் விழும் நீர் மனம், உடல் மாசுகளனைத்தையும் துடைத்தெடுத்துப் போனது.

பின்பு கீழடுக்கு குளத்துப் பகுதியில் நின்று கற்களை நீர்ப்பரப்பில் எறிந்து தவளை காட்டும் விளையாட்டை விளையாடிவிட்டு இருளத் தொடங்கியதும் மேலேறினோம். மேலே நின்றிருந்த வன ஊழியர் ஒருவரிடம் கேட்டுக்கொண்டதில் முட்களை விலக்கி பிரதான அருவிக்குச் செல்லும் பாதையைத் திறந்தார் (குடும்பத்துடன் வந்திருந்ததால்). நன்றி கூறி நானும் நண்பனும் மட்டும் சென்று கைக்கெட்டும் தூரத்தில் விழுந்த அருவியைக் கண் கொட்டாமல் பார்த்து ரசித்துவிட்டுத் திரும்பினோம். திரும்ப வண்டி நிறுத்திய இடத்தை நோக்கி மெதுவாக நடக்கையில் சூரியன் மலைக்குப் பின் விழுந்திருக்க காட்டில் ஏகமாகப் பறவைகளின் இரைச்சல். உறவினர் வீட்டுக்கு ஈர உடையுடன் திரும்பும்போது மனம் நிறைந்திருந்தது.

இன்னும் வரும்...

நன்றி - தென்றல்.காம்

மூன்று வருடங்களுக்குப் பிறகு # 7


முந்தைய பாகம்: மூன்று வருடங்களுக்குப் பிறகு # 6

'ஒரு நிமிடம் தமிழில் ஆங்கிலம் கலக்காமல் பேசினால் பரிசு' என்று அறிவிப்பு. சீனாவில் தமிழ் கற்றுக் கொள்ளும் சீனர்களுக்கா? இல்லை வெளிநாட்டு வாழ் தமிழர்களின் 'It's weird' குழந்தைகளுக்கா? இல்லை ஐயா - தமிழ்நாட்டின் சென்னை மாநகரத்தில் வணிகவளாகம் ஒன்றில் 'மறத் தமிழர்களை' அழைத்து இப்படிச் சவால் விட்டவர் பிருத்விராஜ் - தொலைக்காட்சிச் சானல் ஒன்றுக்காக. இம்மாதிரி போட்டி வைப்பதற்காகவே தமிழர்கள் நியாயமாக அவமானத்தில் தூக்கில் தொங்கியிருக்கவேண்டும். ஆனால் நாம்தான் மறத்தமிழர்களாயிற்றே. முப்பத்திரண்டு பற்களும் தெரியக் கலந்து கொண்டார்கள். பிருத்வி 'எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் பேசுங்கள் - நீங்கள் பார்க்கும் வேலையைப் பற்றிக்கூட பேசுங்கள்' என்று உசுப்பேற்றியும் ஒவ்வொருவராக வந்து சில நொடிகளில் குப்புற விழுந்து மீசையில் மண் ஒட்டவில்லை என்று விலகினார்கள். ஒருவரிடம் என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு 'Marketing' என்று சொன்னார். 'சரி ஒரு நிமிடம் வேண்டாம். Marketing-க்கு தமிழில் என்ன என்று சொல்லிப் பரிசை வெல்லுங்கள்' என்று பிருத்வி கேட்டதற்கு அந்த நபர் பேச்சற்று பேய் முழி முழித்தார் பாருங்கள். இன்னொருவர் 'நான் பேசறேன்' என்று முன்வந்து ஆரம்பித்தார் 'வண்டிய ட்ரைவ் பண்ணும்போது சிக்னல்லாம் பாத்து லெஃப்ட் ரைட் டர்ன் பண்ணும்போது இண்டிகேட்டர் போட்டு, சேஃப்டியா டிரைவ் பண்ணனும்'. அவர் பேசுவது நல்ல தமிழ்தான் என்று சத்தியம் செய்து துண்டுபோட்டு தாண்டுவார் போலிருந்தது. எனக்கென்னவோ இத்தலைமுறைக்கு 'ஆங்கிலம் கலக்கா நல்ல தமிழ்' என்பது எது என்பதே தெரியாது என்று நினைக்கிறேன். பிறந்தது முதல் பெற்றோரிடமிருந்தும் மற்றோரிடமிருந்தும் ஊடகங்கள் வழியாகவும் எங்கெங்கும் எப்போதும் ஆங்கில வார்த்தைகள் கலந்த தமிழையேக் கேட்டுப் பேசிப் பழகி வளர்ந்த தலைமுறைக்கு அவர்கள் பேசுவது நல்ல தமிழ்தான் என்று நம்ப ஆயிரம் காரணங்கள் உண்டு.

இறுதிவரை ஒரு நிமிடம் யாரும் தமிழ் பேசமுடியாததால் 35 வினாடிகள் பேசிய ஒருவருக்கு ப்ருத்வி பரிசைக் கொடுத்தார்! இப்போதைக்கு தமிழ்நாட்டில் தீப்பொறி ஆறுமுகம்தான் தமிழை ஓயாது வளர்த்துக்கொண்டிருப்பவர் என்று தோன்றியது. இன்னும் அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்தால் அணிந்திருந்த பர்முடா, முண்டா பனியனுடன் தெருவில் இறங்கி ஓடிவிடுவேன் என்று தோன்றவே வேறு அலைவரிசைக்கு மாற்றினேன். கணவன், மனைவி கலந்து கொள்ளும் ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சி. அட்டைத் தூண்களுக்குள் மறைந்திருக்கும் கணவன்மார்களின் கண்களை மட்டும் பார்த்து மனைவி அவரது கணவனைக் கண்டுபிடிக்கவேண்டும். அந்தப் பெண்மணி தூண் தூணாகச் சென்று கண்களை உற்றுப் பார்த்துத் தேட எனக்கு இரத்த அழுத்தம் அதிகரித்துக்கொண்டே போனது. இம்மாதிரி நிகழ்ச்சிகளின் ஆதார நோக்கம் என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். கணவன் மனைவி இருவரும் மனமொருமித்து இனிய இல்லறம் நடத்துவதை இம்மாதிரிப் பந்தயங்களில் ஜெயித்துத்தான் நிரூபிக்கவேண்டுமா என்று தோன்றியது. தொலைக்காட்சியில் தோன்றி “நான் டிவில வர்றேன் பாரு“ என்ற பெருமையடித்துக்கொள்ளுதல் தவிர வேறு எந்தக் காரணங்களும் தோன்றவில்லை. சுஜாதா அடிக்கடி குறிப்பிட்ட 15 நிமிடப் புகழுக்காக என்னவெல்லாம் செய்யத் துணிகிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. மேலைநாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அப்படியே தமிழ் வடிவத்தில் எடுத்து ஒளிபரப்புகிறார்கள். நளதமயந்தி படத்தில் மாதவனும் கீது மோகன்தாஸும் அவரவர் வாழ்க்கை விவரங்களை உருப்போட்டுக்கொண்டு தயார் செய்வது போல, இந்நிகழ்ச்சிக்கென தம்பதியர்கள் மிகவும் மெனக்கெடுகிறார்கள் போலருக்கிறது. ஜெயித்தவர்கள் பரவாயில்லை. போட்டியில் தவறான விடை சொல்லித் தோற்ற தம்பதியரின் மனதில் எம்மாதிரி சிந்தனைகள் தோன்றியிருக்கும் என்று யோசித்துப் பார்த்ததில் கவலையாக இருந்தது. போட்டிக்குப் பின்னேயான அவர்களது நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்று யோசனை ஓடியது.

முன்பெல்லாம் ஒளிந்திருந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த எஃப் டிவி சானலையெல்லாம் இப்போது யாரும் சீண்டுவதில்லை போல. அதைவிடப் பிரமாதமாகவே சினிமாக் காட்சிகளிலும் பாடல்களிலும் நங்கைகள் நடமாடுகிறார்களென்பதால் யாரும் இரவு கண்விழித்துச் சிரமப்படத் தேவையில்லை. தொலைக்காட்சிகளில் கவர்ச்சி பொங்கி வழிய குடும்பத்தோடு உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவசரமாக பாத்ரூம் போகவேண்டியிருப்பது போல தொலைக்காட்சிகளின் இளைய அறிவிப்பாளர்கள் நிமிடத்திற்கு நூறு வார்த்தைகள் (தமிழாங்கிலம் ஹையர்) பேசுகிறார்கள். சமீபத்திய பாடல்கள் எல்லாச் சானல்களிலும் ஓடிக்கொண்டே இருக்க வாண்டுகள் நாக்க முக்க போன்ற இலக்கியத் தேனொழுகும் பாடல்களை பாடியாடுகிறார்கள். இப்படி ஒரே தாம் தூமென்று பாடல்களின் புழுக்கம் தாங்க முடியாது மூச்சு திணறுகையில் நம்மை ஆசுவாசப் படுத்த சில சமயம் தாம் தூமின் 'அன்பே என் அன்பே' தென்றலாக ஒலித்தது.

சுப்ரமணியபுரம் படம் அசுர ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தது. நான் இன்னும் படம் பார்க்கவில்லை - ஏனோ பார்க்கத் தோன்றவில்லை. சன் டிவியின் டாப் டென் ஜேம்ஸ் வசந்தன் திடீரென்று எதிர்பார்க்காத மூலையிலிருந்து சுப்ரமணியபுரத்தில் புயலாக வெளிவந்ததை எதிர்பார்க்கவேயில்லை. நாயகன் ஜெய் மற்றொரு ஆச்சரியம். நாயகி இன்னொரு ஆச்சரியம். மற்ற பாடல்கள் எல்லாவற்றையும் மழுங்கடித்து 'கண்கள் இரண்டால்' பாடல் மட்டும் லட்சார்ச்சனை மாதிரி எல்லாச் சானல்களிலும் ஓடிக்கொண்டேயிருந்தது. அப்பாடல் ஒரு காட்சிப்படுத்தப்பட்ட அழகிய கவிதை! பாடலின்போது ஒரு காட்சி - வண்டியில் அண்ணன் பின் அமர்ந்து நாயகி நாயகனைப் பார்த்துக்கொண்டே வர, அண்ணன் இடம் வந்ததும் வண்டியை நிறுத்துகிறான். வேகம் மட்டுப்பட்டு வண்டி நிறுத்தப்பட்ட அந்தத் தருணத்தில் சட்டென்று அவள் விழிகள் அண்ணனின் முதுகை ஏறிட்டுப் பார்க்க, ஜாக்கிரதை உணர்வுடன் வண்டியிலிருந்து இறங்கும் அந்த ஒரு மைக்ரோ நொடிக்காட்சி மட்டுமே ஆயிரம் கதை சொல்கிறது. என் இரண்டு குழந்தைகளும் அப்பாடலில் லயித்து கிட்டத்தட்ட அடிமையாகவே ஆகிவிட்டார்கள். பாடலில் நாயகி, நாயகன் இருவரின் விழிமொழிவழி உரையாடல்களின் சுவாரஸ்யமும், ஹாஸ்யமும் வயது வித்தியாசமில்லாமல் எல்லாரையும் எளிதில் கட்டிப்போட்டுவிடுகிறது. இப்படிப் பாலைவனச் சோலையாக அவ்வப்போது படங்கள் வந்து தமிழ்ச்சினிமாவின் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. புது வரவுகளுக்கு நன்றி என்று எழுதி முடிக்குமுன்பே மாரீஸ் அரங்கங்களில் பிரம்மாண்டமான ஜே.கே.ரித்தீஷின் நாயகன் படக் கட்-அவுட்டுகள் மிரட்டின! அவரது பேட்டியொன்றை சில வாரங்கள் முன்பு குமுதம் ஆன் லைனில் பார்த்த நினைவு. அவருக்கு முன்பு தமிழ்த் திரையுலகின் விடிவெள்ளி அடைமொழியுடன் சாம் ஆண்டர்ஸன் என்ற நடிகரின் சில காட்சிகளை யூட்யூபில் பார்த்து மிரண்டு போயிருந்தேன். காசுக்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல நல்ல சினிமாக்களை மட்டுமே கொண்டு திரையுலகம் இருக்க முடியாது என்பதை சுப்ரமணியபுரம், நாயகன், சாம் ஆண்டர்ஸன் போன்றோர்கள் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள். வாழ்க!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் தாண்டி முக்கொம்பு செல்லும் சாலையில் தென்னூர் செல்ல பாலமொன்று இருக்கிறது. அதன் கீழே முன்பு தண்ணீர் தேக்கிய நினைவு - ஏரியோ என்னவோ. இப்போது பாலத்தின் இரு பக்கமும் ஏராளமான கட்டிடங்கள். ஆங்காங்கே தண்ணீர்க் குட்டைகள் கொசுக்களையும் பன்றிகளையும் வாழ வைக்க மரக்கடையிலிருந்து குழந்தைகள் மருத்துவமனை வரை எல்லாம் நிறைந்திருக்கின்றன. பாலத்தின் மீது நின்று பார்க்க, St Mary's கோபுரமும் மலைக்கோட்டையும் மேகமாகத் தெரிய வெயில் எப்போதும் சுட்டெரித்துக்கொண்டு செப்டம்பர் போலவே இல்லை. முன்பெல்லாம் தென்னூர் சாலை காற்று வாங்கிக்கொண்டிருக்க பக்கத்து தில்லை நகர்ச் சாலை முழி பிதுங்கிக்கொண்டிருக்கும். இப்போது தில்லை நகர்ச்சாலைகளில் வாகனங்கள் சர்க்கஸின் மரணக்கிணற்றில் ஓடுவது போல ஓட, தென்னூர் சாலையில் பெரிய கட்டிடங்கள் முளைத்து புது அடையாறு ஆனந்த பவன் கடையில் மக்களும், ஈக்களும் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். 'அண்ணே டீ' என்று மூன்று வருடங்கள் முன்பு இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கிக் குடித்த பெட்டிக்கடைகள் எதையும் காணவில்லை. அகண்ட சாலையாக இருந்தாலும் வழக்கம்போல இருபுறமும் அடங்காத ஆக்கிரமிப்பாலும், வரையறையற்ற வாகன நிறுத்தங்களாலும், ஒரு வழிப் பாதையில் எல்லா வாகனங்களும் பறந்துகொண்டிருந்தன. சாலையின் முடிவில் தலைக்கு மேல் மேம்பாலம் ஓட மாகாத்மா காந்திப் பள்ளி. புது வர்ணமடித்து ஒவ்வொரு மாடியிலும் குழந்தைகள் விழாமலிருக்க இரும்புச் சட்டங்கள் போட்டிருக்கிறார்கள். நான்கைந்து மாடிகள் - ஆனால் லிப்ட் இருப்பது போலத் தெரியவில்லை. தேனடைபோல ஒவ்வொரு வகுப்பிலும் சீருடைக் குழந்தைகளும் சிரிக்காத ஆசிரியர்களும். இடைவேளை போல - வயவயவென்று குரல்களின் இரைச்சல் காற்றில் பரவியிருக்க, பள்ளியைத் தாண்டிச் சென்றால், ஓடும் மிக்ஸியை நிறுத்தியது போல திடீர் நிசப்தமாக அந்தச் சாலை புதிதாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு எவ்வித இரைச்சலும் நெரிசலும் இல்லாமல் உண்மையாகவே நல்ல காற்று முகத்தை வருடியது.

மறுநாள் குடும்ப சகிதமாக கால் டாக்ஸியை அமர்த்திக்கொண்டு கொள்ளிடம் பாலம், கிராமங்கள், வண்டிச்சாலை, இருபுறம் பசேலென வயல்வெளிகள், அம்மணக் குழந்தைகள், மாடுகள், மாவுமில் வெள்ளை மனிதர்கள், மசாலா வாசனை, விவசாயிகள், தூக்குச்சட்டிகள் எல்லாவற்றையும் கடந்து அழகிய மணவாளம் என்ற சிறு கிராமத்தை விட்டு விலகி நிற்கும் சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் என்ற பெயர்ப்பலகை தாங்கிய (உபயம்: s. ராமசாமி செட்டியார் மளிகை, மண்ணச்ச நல்லூர்) கோவிலுக்குச் சென்றோம். திருச்சியின் களேபர இரைச்சல் வாழ்க்கையிலிருந்து விலகி விண்வெளியில் எறியப்பட்டதுபோல அப்படியொரு பேரமைதி நிரம்பிய இடம். சுற்றுவட்டத்தில் வீடுகள் எதுவும் இல்லாது ஒதுக்குப்புறத்தில் குடியிருக்கிறார் அதிர்ஷ்டக்காரர் பெருமாள். அவரைப் போல மற்ற கடவுள்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தால் கூட்டம், குப்பை, இரைச்சல், அரசியல், ஆக்கிரமிப்பு இவற்றிலிருந்து தப்பித்து கண்காணாத இடங்களுக்கு ஓடிவிடத் தயாராகவே இருப்பார்கள்!



கோவில் அர்ச்சகரிடம் முன்கூட்டியே தகவல் கொடுத்திருந்ததால் அவர் வந்து பூஜை, அலங்காரங்களைத் தொடங்க நான் மெதுவாக கோவில் சுற்றுச்சுவரைச் சுற்றி வந்தேன். கோவிலைப் பார்த்து நின்றால் வலப்புறம் கோவிலை ஒட்டியே ஒரு சிதிலமடைந்த செங்கற் கட்டிடம் ஒன்று அனாதையாக நின்றிருக்க ஏராளமான செடிகள் எங்கும் முளைத்திருந்தன. அதை நோக்கி நடக்க நடக்க அந்தச் சிதிலங்களையும் சிதறியிருந்த செங்கற்களையும் பார்க்கும்போது என்னுள் எழுந்த உணர்வுகளை விவரிக்க இயலாது. பொதுவாகவே வரலாற்றுச் சின்னங்களைப் பார்க்க நேரிடும்போதும், அவற்றைத் தொடும்போதும், அவ்விடத்தில் உலவும்போதும் விவரிக்கவியலாத எண்ணங்கள் என்னைச் சூழும். அதே உணர்வு அப்போதும் எழுந்தது. மெல்ல அதைச் சுற்றி வந்தேன். இங்கே ஒரு காலத்தில் ஒரு கோவில் இருந்திருக்கிறது. மனிதர்கள் இதைச் சுற்றி வாழ்ந்திருக்கிறார்கள். உள்ளே ஒரு கடவுள் நிறுவப்பட்டிருந்தார். பூஜைகள் நடந்திருக்கின்றன. கருவறையை அடையாளம் காண முடிந்தது. விதானம் இடிந்திருந்தது. கருவறையின் சுவர் இடிந்திருந்தால் பின்பக்கமாக நின்று அதைப் பார்க்க முடிந்தது. முன்புற வாசல் செங்கற்களால் அடைக்கப்பட்டிருந்தது. முழுமையான செங்கல் கட்டிடம் - ஒரு பாறை கூட இல்லாது - அதிசயமாக இருந்தது.

பூஜை முடியக் காத்திருந்து வெளியே வந்த அந்த வயதான அர்ச்சகரிடம் செங்கற் கோவிலைப் பற்றி விசாரித்தேன். எக்ஸ்ட்ரா புளியோதரை, சுண்டல் கேட்டவர்களையே சந்தித்துப் பழகியிருப்பார் போல, நான் விசாரித்ததும் சட்டென்று என்னை ஏறிட்டு நோக்கிவிட்டு கண்களை மூடிக்கொண்டார். 'அதுவா.. 12ஓ 13ஓ நூற்றாண்டோ, சரியா தெரியலை. பெருமாள் அங்கதான் இருந்தார். அதான் ஒரிஜினல் கோவில். இது அப்புறம் கட்டினது. அப்போ சுல்தான் இருந்தாரில்லையா. வாத்தலைலருந்து சென்னைவரை சுல்தானோட சேனைகள் கோவில் கோவிலா போய் கொள்ளையடிச்சுட்டு (அக்கம் பக்கம் ஒரு முறை பார்த்துக்கொண்டார்) கோவில்களையெல்லாம் இடிச்சதுல இதுவும் இடிபட்டுப் போச்சு. ஆனா மூலவரை முன்னாடியே வெளியே எடுத்துட்டுப் போய் ரகசியமா வச்சிருந்ததால அவருக்கு ஒண்ணும் ஆகலை. அதுக்கப்புறம் ரொம்ப வருஷம் கழிச்சு இப்ப நாம நிக்கற இந்தக் கோவில் எழுந்தது. மூலவரைக் கொண்டு திரும்ப இங்கே வச்சாச்சு. அது அப்படியே இருக்கு - அடையாளமா' என்று சொல்லிவிட்டு காத்திராமல் வெளியேறி அவரது டிவிஎஸ் 50-ஐ எடுத்துக்கொண்டு விரைந்து சென்றுவிட்டார்.

அப்போது பத்து பதினைந்து வயதிருக்கும். குளிக்காது, கண்களில் தூக்கத்துடன், பீடி வாயில் புகைய, இறுக்கமான சட்டையும் பாதம் புரளும் லுங்கி ஒன்றையும் கட்டிக்கொண்டு அந்தப் பையன் உள்ளே வநதான். கையில் இருந்த கைப்பேசியில் குசேலன் பாட்டு சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்தது. மெதுவாக நடந்து உள்பிரகாரத்தில் இருந்த தண்ணீர்க்குழாயை நெருங்கி லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு, பீடியை எறிந்துவிட்டு, காறித் துப்பிவிட்டு, நீரைக் குடித்தான். பிறகு செங்கல் கோபுரத்திற்கும் நல்ல கோபுரத்திற்கும் இடைப்பட்ட சுவரில் ஏறி அமர்ந்து இன்னொரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டான். இப்போது வேறொரு புரியாத பாட்டு சத்தமாக ஒலிக்கத் துவங்க, நான் வெளியேறி டாக்ஸியில் அமர்ந்து (மனைவி: எவ்வளவு நேரம் காத்திருக்கறது?) கதவை அறைந்து மூடினேன்.

நன்றி: தென்றல்.காம்
***
இன்னும் வரும்...