Friday, October 23, 2009

மூன்று வருடங்களுக்குப் பிறகு # 11 (இறுதி)

மூன்று வருடங்களுக்குப் பிறகு # 10 இங்கே!

சென்னை எந்த அளவுக்கு என்னை பயமுறுத்துகிறதோ அதே அளவிற்கு ஆச்சரியப்படுத்தவும் செய்தது. முன்பு பார்க்காத பளபள கட்டடங்கள் ஆங்காங்கே காட்சியளிக்க, கத்திப்பாரா சந்திப்பு அடையாளம் தெரியாமல் மாறி பெரிதாக ஐந்து விரல்களை நீட்டிய மாதிரி பாலமொன்று முளைத்திருக்கிறது. மாறாதது போக்குவரத்து நெரிசல், ஒலி மாசு. இடதோர தடத்தில் செல்லும் வாகனத்தை திடீரென்று வலதோர மூலைக்குச் செலுத்தி மற்ற எல்லோரையும் அவரவர் வாகன பிரேக்குகளில் ஏறி நி்ற்க வைப்பது. முன்னெச்சரிக்கையின்றி எந்தவித சைகையும் இல்லாது அதிரடியாக எதிர்பார்க்காத திசையில் வாகனத்தைத் திருப்புவது, நடுச்சாலையில் நிறுத்துவது, சாலையில் எத்தனை தடங்கள் இருக்கிறது என்பது முக்கியமில்லை - வண்டி போகும் இடைவெளி கிடைத்தால் நுழைந்து போய்க்கொண்டேயிருப்பது, இருக்கும் சிக்னலை வி்ட்டுவிட்டு அடுத்து என்ன சிக்னல் விழும் என்று அனுமானித்துக்கொண்டு அதற்கேற்ப வண்டியோட்டுவது என்று சென்னையின் போக்குவரத்து குணங்கள் மாறவேயில்லை. இதனாலேயே நால்வழிச் சாலைகளில் எட்டு வரிசைகளில் அல்லது வரிசைகளற்று வாகனங்கள் தேனீக்களாய் அடைந்து கிடக்கின்றன. நிறைய விதவிதமான புதிய மாடல் வண்டிகள். இளைஞர்களும், யுவதிகளும் காற்றாய் பறக்கிறார்கள். தூசு, மாசு இரண்டிலும் முகத்தைக் காக்க முகமூடிக் கொள்ளைக்காரர்கள் போன்று பெண்கள் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொள்ள, ஆண்கள் பின்னால் அமர்ந்திருக்கும் பெண்ணின் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு கண்கள் மட்டும் தெரிய வண்டிகளையோட்டுகிறார்கள். எங்கிலும் பேரிரைச்சல், புகை. அவ்வளவு சீராக பிரதான சாலைகளிருந்தும் நங்கநல்லூரிலிருந்து நுங்கம்பாக்கம் செல்ல எனக்கு இரண்டரை மணி நேரம் (கால் டாக்ஸியில்) ஆயிற்று. அந்தப் போக்குவரத்தில் ஒரு நாள் புழங்கியதற்கு பைத்தியம் பிடிக்காத குறை! பார்த்ததும் காதலிக்கலாம் போன்று தோன்றும் பெண்கள் நிறையவே ஷாப்பிங் மால்களில் தென்பட்டார்கள். நங்கநல்லூர் மார்க்கெட்டில் சென்னையில் ஏதோ ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிவதற்காக வந்து தங்கியிருக்கும் சீனப் பெண்கள் காய்கறி வாங்கிக்கொண்டிருந்ததைக்கூட பார்த்தேன்.

சென்னை வாசிகள் மலைப்புக்குரியவர்கள். தென்தமிழகத்தில் “உப்புத் தண்ணி“ என்று நாங்கள் குறிப்பிடுவது குடிநீர் போன்று சுவையில்லாத, லேசான கசப்புச் சுவையுரிய தண்ணீரை. சென்னையில் நிஜமான “உப்புத் தண்ணி“ தான் எல்லா வீடுகளிலும் வருகிறது போல. அதில்தான் குளித்து உடை துவைத்து எல்லாம் செய்கிறார்கள். தண்ணீர் மேலே பட்டால் தண்ணீர் பட்ட உணர்வே இல்லை. சோப்புத் தேய்த்தால் நுரை வருவதில்லை. குளித்துவிட்டுத் துவட்டினால் பிசுபிசுக்கும் உணர்வு. இதெல்லாம் என்னைப் போன்ற கிராமத்துக்காரனால் கனவில்கூட கற்பனை செய்ய முடியாத விஷயம்! ஆனால் யாரும் இதைப்பற்றி அதிகமாக அலட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை. காலையில் எழுந்து குளித்து, உடைமாற்றி, வெயிலிலும், தூசியிலும் வியர்க்க வியர்க்க அலுவலகம் போய், மாலையில் பேருந்து, ரயில் என்று கூட்டத்தில் கிழிந்த வாழையிலையாய் வீட்டுக்கு வந்து, மின்சாரமில்லாமல், கொசுக்கடியைத் தாங்கிக்கொண்டு வியர்த்து ஊற்றி, வியர்வையுடனே தூங்கியெழுகிறார்கள். தெய்வமே என்று எல்லாரையும் நிறுத்திவைத்துச் சேவிக்கலாம் போலத் தோன்றுகிறது. ”காசு இருந்திச்சின்னா இதுல எதுவும் இல்லாம வாழலாம்“ என்கிறார்கள் - கொடுமையான உண்மை.

பணம் இருந்தால் பன்னீரிலும் குளிக்கலாம். இல்லையா குளிக்கச் சாக்கடையில் கூட தண்ணீர் இல்லை.

“மினரல் வாட்டர்“ என்று வெள்ளைக் காலர் மக்கள் வாங்கிக் குடிக்க, சாமான்யர்கள் “தண்ணிப் பாக்கெட்டு“ வாங்கிக் குடிக்கிறார்கள். இது கொள்ள வருடங்களாக நடைபெறும் சங்கதிதான் என்றாலும் இம்முறை கவனித்தது - இதற்குமுன் இம்மாதிரி வாங்கிக் குடித்திராதவர்கள்கூட காசு கொடுத்து வாங்கிக் குடிப்பதுதான். தமிழ்நாட்டில் “குழாயில் நல்ல தண்ணீர்“ என்பது “தமிழகத்தில நல்லாட்சி“ என்பது போல வருகிற மாதிரித் தோன்றும் ஆனால் வரவே வராத சமாச்சாரமாக இருக்கிறது. அரபு நாடுகளில் சொட்டு நிலத்தடிநீர் இல்லையென்றாலும் கடல்நீரைக் குடிநீராக்கி எல்லாருக்கும் 24 மணி நேரமும் மான்ய விலையில் விநியோகிக்கிறார்கள். இதை ஏன் நம் அரசாங்கங்கள் போர்க்கால அடிப்படையில் செய்ய முன்வரவில்லை என்பது புரியாத புதிர்!

முன்பாவது நிலம் வாங்கவேண்டுமென்றாலோ, வீடு வாங்கினாலோ, ஏன் வாடகைக்கு ஒரு வீட்டைப் பார்த்தால்கூட “தண்ணி கஷ்டம் இல்லல்ல?“ என்று சோதித்துக்கொள்வது வழக்கம். அவர்களும் “ஒக்காந்து கையால மண்ண நோண்டினீங்கன்னா ஈரப்பதம் இருக்கும். எளநி மாதிரி தண்ணி“ என்று சொல்வார்கள். நிலத்தடி நீர் அபாயகரமான அளவிற்குக் குறைந்து போய்விட்டது. மகா மோசமான நீர் மேலாண்மை காரணமாக மழை நீரும் மற்ற நீராதாரங்களும் கரைந்து கானல் நீராகிக்கொண்டிருக்கின்றன. இந்த லட்சணத்தில் “தண்ணீரினால் வருங்காலத்தில் மக்கள் சண்டை போட்டுக்கொள்வார்கள்“ என்று ஆரூடம் வேறு! என்னவோ இப்போது யாரும் நீருக்காக அடித்துக்கொள்ளாதமாதிரி. அவர்களுக்கெல்லாம் கண்கள் என்ன “பொடனியிலா” இருக்கின்றன? வறண்ட கிராமங்களில் பிஞ்சுக் குழந்தைகள் குடங்களைத் தலையிலேந்தி மைல் கணக்கில் நீருக்காக நடக்கின்றன. பொதுக் குழாய்களின் குட வரிசை நீண்டுகொண்டே போகிறது. பெண்கள் குழாயடியில் குடவரிசையோடு நாய்ச்சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.

நிலைமை இன்னும் மோசமாகி வருங்கால சந்ததியினரை நாயைப் போல நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டு தண்ணீருக்காக வீதி வீதியாக அலைய வைக்கப் போகிறோம் என்பதை நினைத்தாலே குலை நடுங்குகிறது. அது எப்படி எந்தச் சொரணையுமின்றி அரசு இயந்திரத்தால் இருக்க முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாகவே காணப்படும் “எவன் செத்தாலென்ன!“ என்ற மனோநிலை சமூகக் கட்டமைப்பு ஆட்டம் கண்டிருப்பதைக் குறிக்கிறது. மக்களின் ஆதாரத் தேவைகளைப் பற்றித் துளியும் கவலைப்படாத அரசாங்கங்கள் நாய்க்கு பிஸ்கெட் போடுவதுபோல கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து வேட்டி, சேலை, டிவி, ஜட்டி, முண்டா பனியன் என்று இலவசங்களில் கரைத்து மக்களைப் பிச்சைக்காரர்களாக்கி வைத்திருப்பது சோகம். இலவசங்களனைத்தையும் ரத்து செய்துவிட்டு போர்க்கால அடிப்படையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை மாபெரும் அளவில் செயல்படுத்தி மக்களுக்கு வழங்கினால் நிகழ் காலமும் வருங்காலமும் அவர்களை வாழ்த்தும். ஆனால் செய்ய மாட்டார்கள்! வாழ்த்து ஓட்டை வாங்கித் தருமா?

நல்லார் ஒருவர் உளரேல் என்று வள்ளுவர் இப்போது சொன்னால் “யோவ் பெரிசு. இனிமேல் இம்மாதிரி உளரேல்” என்று சொல்லிவிடுவார்கள். மழை பொய்த்துப் போவது ஒரு செய்தியே அல்ல இனிமேல். லட்சக்கணக்கான மரங்களும் விளைநிலங்களும் பலியிடப்பட்டு அறுபதுக்கு நாற்பது என்று பிரிக்கப்பட்டு வரைமுறையே இல்லாது வீடுகள் கட்டி அசுரவேகத்தில் விற்றுத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். படித்திருந்தும் முட்டாள்களாய் இந்தச் சுரண்டலுக்கு ஒரு பெரிய சமுதாயமே பலியாகிக்கொண்டிருக்கிறது என்பது சோகம். மழைக்கு மரம் வேண்டும். ”அடுத்த ஆண்டு இறுதிக்குள் தொலைக்காட்சி இல்லாத வீடே தமிழகத்தில் இருக்காது” என்று மார்தட்டி முழங்கும் அரசியல்வாதிகளால் ஏன் ”அடுத்த ஆண்டு இறுதிக்குள் மரம் இல்லாத வீடே தமிழகத்தில் இருக்காது” என்றோ ”அடுத்த ஆண்டு இறுதிக்குள் நல்ல தண்ணீர் வராத குழாயே தமிழகத்தில் இருக்காது” என்றோ ”அடுத்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிக்குச் செல்லாத குழந்தையே தமிழகத்தில் இருக்காது” என்றோ சவால்விட முடியவில்லை? பதிலைக் கண்டுபிடிக்க அதிகம் சிரமப்படவேண்டியதில்லை. அவர்களுக்கென்ன மயிராய் போயிற்று? ஆட்சியில் இருக்கும் சில வருடங்களில் முடிந்த வரை சுரண்டி சொத்து சேர்த்துவிட்டால் போதும். மக்களைப் பற்றி கவலைப்பட அவர்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது. வருங்காலத்தில் நம் சந்ததிகள் தண்ணீரில்லாம் நாக்கு வற்றிச் செத்தால் எவனுக்கென்ன? இன்று இருக்கும் மக்களைப்பற்றியே சிந்திக்காதவர்கள் நாளைய தலைமுறையினரைப்பற்றி எப்படிச் சிந்திப்பார்கள்? எல்லாருக்கும் தொலைக்காட்சி! ஆஹா. என்னே சிந்தனை! புல்லரிக்கிறது. இதைவிட சமூகப் பொறுப்பை யாரிடமும் காண முடியாது. கண்ட பயல்களுக்கெல்லாம் நோபெல் பரிசைக் கொடுக்கிறார்கள். நம்மூர் அரசியல்வாதிகளைக்கல்லவா கொடுக்கவேண்டும். என்ன செய்வது. ஆரியர்கள், மேற்கத்தியர்கள், அவர்கள் எப்படி திராவிடச் செம்மல்களுக்குக் கொடுப்பார்கள்! நம் ஒவ்வொரு உடன்பிறப்பும் ஒரு நோபெல் பரிசுக்குச் சமானம்! இல்லையா?

* * *

ஸ்ரீரங்கத்தின் தெருக்களில் தடுக்கி விழுந்தால் ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒரு இளைஞராவது, யுவதியாவது அமெரிக்காவில் ('ஐட்டி-ல இருக்காங்க') இருக்க, அவர்களது பெற்றோர்கள் சகல வசதிகளுள்ள அமெரிக்கச் சிறை மாதிரி தீப்பெட்டி அபார்ட்மெண்ட்களில் மின்சார, மின்னணு சாதனங்களுடன் வசிக்கிறார்கள். மாலையில் ராகவேந்திர மடத்திற்கோ, ரங்கநாதர் கோவிலுக்கோ போகிறார்கள். பென்ஷன் வாங்குகிறார்கள். வாரயிறுதிகளில் தொலைபேசி அழைப்புகளில் குசலம் விசாரித்துக் கொள்கிறார்கள் (“அம்மாவுக்கு கட்டாயம் ஒரு ஃபுல் ஹெல்த் செக் பண்ணிடுங்கப்பா - ஏப்ரல்ல வந்துட்டு ஒரு ஆறு மாசம் இருந்துட்டுப் போலாம். இவளுக்கும் ஆறு மாசம் ஆறது”). உத்தர வீதிகளில் இருக்கும் வங்கிகளுக்குப் போகிறார்கள். பவர் ஆஃப் அட்டர்னியை மஞ்சள் பையில் வைத்துக்கொண்டு கால்டாக்ஸி பிடித்து ரிஜிஸ்ட்ரார் ஆபிசுக்குப் போய் ஒரு டூ பெட் ரூம் அபார்ட்மெண்டையோ அல்லது “திருச்சி-சென்னை சாலையை ஒட்டி அமைந்த குறைந்த ஆழத்தில் நல்ல நீர் கிடைக்கும் பள்ளி, மருத்துவமனை, பூங்கா வசதிகளோடு அமையப் பெற்ற கலைஞர் அல்லது காமாட்சி நகரில் இரண்டு கிரவுண்டு நிலத்தையோ - “கிரவுண்டு மூணு லச்சம் - பத்திரத்துல நுப்பதாயிரம் போடுவோம். பாக்கி கேஷா கொடுத்திருங்க” - பதிவு செய்கிறார்கள். அதோடு கிடைக்கும் வெள்ளிக்காசு பரிசை வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பி கால் நீட்டி சுவரில் சாய்ந்து அமர்ந்து விசிறிக் கொண்டே (“மாமா கரெண்டு எப்ப வரும்?”) ஜன்னல் வழியாக வெளியுலகை வெறித்துப் பார்க்கிறார்கள். மின்சாரம் இருக்கும் சமயங்களில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டே இருக்கிறது. சென்ற விடுமுறையில் வந்த பேரக் குழந்தைகளை நினைத்துப் பார்த்துக் கொள்கிறார்கள். இரவானதும் டார்ட்டாய்ஸ் கொளுத்தி பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு உறங்கிப் போகிறார்கள்.

***
முந்தைய பத்தாண்டுகளில் காணாத அபார மாற்றத்தை மூன்றாண்டுகள் கழித்து விடுமுறைக்குச் சென்றபோது நான் கண்டேன். ஒரு புறம் நிறைய பணம் புழங்கி நூறு ரூபாய் நோட்டு “டீ” செலவிற்குப் பறக்க, இன்னொரு புறம் நாள்முழுதும் வியர்க்க வியர்க்க ரிக் ஷா ஓட்டி நாற்பது ரூபாய் மட்டும் சம்பாதிக்கும் ஏழைகள் இன்னமும் ஸ்ரீரங்கத்தின் தெருக்களில் அலைந்துகொண்டிருக்கிறார்கள். ஆண்டவனுக்குக் காணிக்கையும் ஆபரணங்களும் வருடாவருடம் குவிந்துகொண்டேயிருக்க, கோவில்களுக்கு முன் பூக்கட்டி விற்கும் பெண்மணிகளும், செருப்பைப் பாதுகாத்து ஒரு ரூபாய் வாங்கிக்கொள்ளும் முறுக்கு வியாபாரிகளும், வறுத்த நிலக்கடலை, பொரி விற்கும் தள்ளுவண்டி வியாபாரிகளும், பள்ளிக்குச் செல்லாமல் முருகன், அம்மன் வேடங்களில் சொம்பு வாயில் துணிகட்டி உண்டியலாக்கிப் பிச்சையெடுத்துக்கொண்டிருக்கும் குழந்தைகளும் இன்னும் இருக்கிறார்கள். இம்மாதிரி காட்சிகளும் பயணங்களும் முடிவற்றதாகத் தோன்றியது.

இவையெல்லாம் ஒரு பயணியாக ஒரு மாத காலத்தில் எனது குறும் பயணங்களை வைத்தான பார்வைப் பதிவு - பரந்து விரிந்த நிஜம் வேறு மாதிரியாக இருக்கலாம். சில மாற்றங்கள் (அல்லது இன்னும் மாறாதவைகள்) அதிர்ச்சியளித்தன. பல பிரமிப்பைத் தந்தன. எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொள்வதிலேயே நேரம் போயிற்று. மாற்றங்களை மனம் ஏற்றுக்கொள்ளப் பழகிற்று - ஆனாலும் மூன்றாண்டுகளுக்கு முன்பு “அண்ணே” என்றழைத்த பயல்களெல்லாம் இப்போது “அங்க்கிள்” என்றழைத்ததைத்தான் ஜீரணிக்கவே முடியவில்லை.

ஒரு மாத விடுமுறை சரசரவென்று தீர்ந்துவிட வருவதற்குமுன்பு விடுமுறையில் இதெதெல்லாம் செய்யவேண்டும், இன்ன இடங்களுக்குப் போகவேண்டும், இன்னின்னாரைப் பார்க்கவேண்டும் என்றெல்லாம் பலமாகப் போட்டுவைத்திருந்த திட்டங்களில் எதுவும் உருப்படியாக நடக்காதது மாதிரி ஒரு முழுமையின்மையோடு திரும்பப் போகிறோம் என்று தோன்றியது. இன்னும் சிலமாதங்கள் கழித்து நிதானமாக யோசித்துத் திட்டம் போட்டு வந்திருக்கவேண்டுமோ என்று தோன்றியது. எதையாவது முக்கியமானதை மறந்திருக்கப் போகிறோம் என்றும் தோன்றியது. சந்திக்க நினைத்த உறவினர்கள், நண்பர்கள் சிலரைச் சந்திக்க முடியாதது குறித்து குற்றவுணர்ச்சி தோன்றியது. மயிராய் போயிற்று என்று பேசாமல் ஸ்ரீரங்கத்திலேயே தங்கிவிடலாமா என்றும் தோன்றியது. அடுத்த தடவை வர இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகும் - அதுவரை வயதானவர்களுக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்றும் தோன்றியது. இன்னொரு மாதத்திற்கு விடுமுறையை நீட்டித்துவிடலாமா என்று தோன்றியது. அப்புறம் வேலை இல்லாமல் போய்விடக்கூடிய சாத்தியம் இருப்பதை மனம் உணர்ந்து எச்சரிக்கை மணி அடித்தது. எந்த மாற்றமும் இல்லாதது போன்று எல்லா நாளும் ஒரே நாளாய் தோன்றும் டாலரைத் துரத்தும் அமெரிக்க வாழ்க்கைக்குத் திரும்பப் போவதை நினைத்து மனம் ஆயாசமடைந்தது. ஆனாலும் மழை, பனி, வெயில், காற்று என்று எல்லா சீதோஷ்ண நிலைகளையும் வருடம் முழுவதும் அனுபவிக்கக்கூடிய பாஸ்டனுக்குத் திரும்பப் போவதை நினைத்தும், எந்நேரம் பார்த்தாலும் புன்னகை புரிந்து நலம் விசாரிக்கும் பக்கத்துவீட்டு வயதான அமெரிக்க தம்பதிகளையும், சாலையில், அலுவலகத்தில் என்று எங்கும் முன்பின் தெரியாதவர்கள் கடந்து போகையில் முகமன் சொல்லிப் போகும் வாழ்க்கைக்குத் திரும்புவதை எண்ணியும் மரங்கள் நிரம்பி நிழல் சூழ்ந்து அமைதி ததும்பும் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் வாழ்க்கையை நினைத்தும், “நம்மூரிலும் இங்குள்ளது போல நல்ல சாலைகளும் இரைச்சலற்ற மாசற்ற வாழ்வும் புன்னகை புரியும் நாகரீத்தின் உச்சியில் இருக்கும் சமூகமும் இருந்தால் எப்படியிருக்கும்” என்ற கையாலாகாத வெளிநாட்டுவாழ் இந்தியச் சுயநலச் சிந்தனைகளும் எழும்பி அதனால் மனதோரத்தில் எழுந்த மகிழ்ச்சியையும் மறுக்க முடியாது. நிற்க.

அது வரை ஷாப்பிங் செய்த பலசரக்குகள், நூறு ரூபாய் சுரிதார்கள், ஆனந்த் பிராண்டு ஜட்டி பனியன், சிறிய அகல் விளக்குகள், வடு மாங்காய் (வேண்டாம்மா - இமிக்ரேஷன்ல தூக்கிப் போட்ருவான்), அப்பளம் வடாம், 2009 பிள்ளையார் காலண்டர், பஞ்சாங்கம், பிரஷர் குக்கர், மீனு மிக்ஸி, ஊது பத்தி, சாம்பிராணிப் பொட்டலங்கள், கொலு பொம்மைகள் என்று கதம்பமாக அடுக்கியதில் இடமில்லாமல் என்னுடைய கைப்பையில் சில புத்தகங்களை மட்டும் ஓரமாக வைத்துக்கொண்டு பெட்டிகளை வாடகை வேனில் ஏற்றிக் கட்ட, குழந்தைகள் ”Hug” என்று சொல்லி தாத்தா பாட்டியைக் கட்டிப்பிடித்து விடைபெற்று டாட்டா காட்டிவிட்டு வண்டியிலேறினார்கள். பெற்றோர்களும், வீட்டிலிருந்த உறவினர்களும், நண்பர்களும் வண்டியைச் சூழ்ந்துகொண்டு கையசைத்து வழியனுப்ப, “கவனமா இருங்க, ஒடம்ப பாத்துக்கங்க” என்ற பரஸ்பரம் சொல்லிக்கொண்டு ஜன்னல் வழியாக மனைவி, குழந்தைகளின் கைகளைப் பற்றிக்கொண்டு “ஜாக்கிரதையா போய்ட்டு வாங்க. ஊருக்குப் போனதும் தகவல் சொல்லுங்க” என்று சொல்ல, “ஊருக்குப் போனதும் போன் பண்றேம்ப்பா என்று நான் சொல்லிவிட்டு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துகொண்டேன். திடீரென்று எல்லாமே ஒரு கனவு போலத் தோன்றியது. குழந்தைகள் ஆரவாரமாக எல்லாருக்கும் டாட்டா காட்டிக்கொண்டிருக்க அரை எலுமிச்சைகளை நசுக்கிக்கொண்டு வண்டி கிளம்பியபோது முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டு கண்களில் வழியத் துவங்கிய நீரை மனைவிக்குத் தெரியாமல் துடைத்துக்கொண்டேன்.

திருச்சி மற்று உபரி நகரங்களைத் தாண்டி சென்னைக்குப் பிரதான சாலையில் வாகனம் செல்ல சின்னவள் கேட்டாள். ”Daddy! Are we there yet?"


முற்றும்.

*******

நன்றி தென்றல்.காம்

1 comment:

Karthikeyan said...

Sundar,
Seems like you are frustrated with Chennai very much...

Last line... wiping your tears touched my heart.... i could realise how the pain and what the pain would be...

Keep posting