Wednesday, October 07, 2009

மூன்று வருடங்களுக்குப் பிறகு # 8

முந்தைய பாகம் : மூன்று வருடங்களுக்குப் பிறகு # 7
ரயிலும் அதன் தொடர்பானவைகளும் எனக்கு எப்போதும் சலிக்காது ஆச்சரியமளித்துக்கொண்டிருக்கும். அடிக்கடி பயணிக்கும் ரயில் பயணிகள், ஊழியர்கள், ரயில் தண்டவாளத்தையொட்டி வாழும் மக்கள், வழித்தடங்கள் என்று அது ஒரு தனி உலகம். ஒரு பயணியாக இவற்றைப் பற்றி என்றாவது எழுத வேண்டும் என்று அடிக்கடி தோன்றும். அவ்வெண்ணங்கள் கரி எஞ்சினின் புகை போலக் காற்றில் கலந்து கரைந்து விடுகின்றன.

அடிக்கடி பயணிப்பவர்கள் என்று சிலரைப் பார்த்ததும் கண்டுபிடித்துவிடலாம். உலகமே நின்றாலும் கவலைப் படாமல், பெட்டியில் ஏறியதும், படுக்கையை விரித்து காற்றுத் தலையணையை ஊதி, மினரல் வாட்டில் பாட்டிலைத் திறந்து, மூன்றாம் பிளாட்பாரத்து முருகன் இட்லிக் கடையில் வாங்கிய பெட்டியைப் பிரித்து சாப்பிட்டு ஏறிப்படுத்து விசிலடித்து ரயில் கிளம்புவதற்குள் தூங்கிவிடுவார்கள். தாயைப் பிரிந்து கன்றுக்குட்டி தொடர்ந்து எழுப்பும் ஒலியைப் போல தொடர்ந்து “மசால் வடை, இட்லி பொங்கல், சாயா டீ, பூ புஷ்பம்“ என்று இரைந்து ஒலியெழுப்பிக்கொண்டு பாத்திரத்தை ஏந்திக்கொண்டு சில வினாடிகளுக்கு ஒரு முறை கடந்து செல்லும் காண்ட்டீன் ஊழியர்கள்.

பயணச்சீட்டு பரிசோதகர்கள் இன்னும் கொஞ்சம் வினோதமான ஆசாமிகள். வெள்ளை பேண்ட், கருப்புக் கோட்டு, வெண்கலப் பெயர்பட்டை, கையில் அட்டை, பட்டியல், நெற்றியில் குங்குமம், வீபூதி, சந்தனம் ஏதாவது ஒன்றை நிரப்பி, சிவந்த கண்களுடன் ஆவிகள் போல ரயில் முழுதும் பெட்டி பெட்டியாக உலவிக்கொண்டிருப்பார்கள். சிரித்த முகத்துடன், சிடுசிடுப்புடன், கண்களைச் சந்திக்காதவர்கள், யாரையும் சோதிக்காதவர்கள் என்று விதவிதமான பரிசோதகர்கள்.

லாலுபிரசாத் தயவிலா என்று தெரியவில்லை. திருச்சி ஜங்ஷன் பளபளவென்று இருந்தது. வெளியே பளிங்கு மேடையை பரத்தி அமைத்து, சாலையின் நடுநாயகமாக ரயில் இஞ்சின் ஒன்றை நிறுத்தி சுற்றிலும் புல் தரை, ஒளி விளக்குகளுடன் அட்டகாசமாக வைத்திருக்கிறார்கள். முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் திறந்து வைத்த கல்வெட்டு இருக்கிறது. முகப்பின் இடது பக்கத்தில் ரயில்வே காவல்துறை அலுவலகத்திற்குப் பக்கத்தில் உள்ளடங்கி அவர் ஒரு அலுவலகம் வைத்து (பதவியில்லாத காலங்களிலும்) பொதுமக்கள் குறைகளைக் கேட்டறிந்து இயன்ற தீர்வுகளைத் தந்துகொண்டிருந்தார். அந்த அலுவலகம் இருக்கிறதா என்று கண்டுபிடிக்கமுடியாதபடி ரயில் நிலையத்தின் பளபளப்பு வெளியில் விரிந்திருக்கிறது. முன்பதிவு அலுவலகத்தை வெளியே தள்ளிக்கொண்டு வைத்திருக்கிறார்கள்.

கோவையிலிருக்கும் உறவினர்களைப் பார்த்துவிட்டு நண்பர் கோவை ரவீ அவர்களையும் சந்தித்துவிட்டு வரலாம் என்று சதாப்தியில் கிளம்பினோம். அனல் தாங்காது வாடி வதங்கிய குழந்தைகளைப் பார்த்து பாவமாக இருக்க குளிரூட்டப்பட்ட பெட்டியில் சீட்டு வாங்கிக்கொண்டு அமர்ந்தோம். எந்த வகுப்பில் சீட்டு வாங்கிக்கொண்டு வந்தாலும் பாதிப் பேர் கதவருகில் நிற்கிறார்கள். ஒன்றா விரல்களிடுக்கில் சிகரெட் புகைகிறது. இல்லாவிட்டால் கர்ணனின் கவசகுண்டலம் மாதிரி காதோடு கைப்பேசி ஒட்டியிருக்க ஙமஙமஙம என்றுபேசிக் கொண்டேயிருக்கிறார்கள். அதற்கு முந்தைய வாரத்தில்தான் ஒருவர் இப்படி மனைவி உள்ளே உட்கார்ந்திருக்க எழுந்து கதவருகே கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாராம். திருச்சி ஜங்ஷன் வந்துவிட்டது. அவரைக் காணாமல் மனைவி தேட பத்து மைல்களுக்கு அந்தப் பக்கம் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்திருக்கிறார். அதிவேகத்தில் செல்லும் ரயில் - கதவருகே பாதுகாப்பற்று கைப்பேசியில் மும்முரமாக இருக்க ஒரு உலுக்கலில் தூக்கி வெளியே வீசி விட்டது ரயில்! ஆனால் இதெல்லாம் ஒரு நாள் செய்தி. யாருக்கும் உறைப்பதில்லை! உண்மையில் காலையில் காப்பியோடு தினத்தந்தி படிக்கையில் விபத்து, கொலை, கொள்ளை என்று ஏதாவது செய்திகள் இல்லாவிட்டால் எதையோ இழந்தாற்போல காப்பியும் தினத்தந்தியும் ருசிப்பதில்லை. ரொம்ப குரூரமானவர்களாகிவிட்டோமோ என்று பயமாக இருந்தது.

எங்களுக்கு முன் வரிசை காலியாக இருக்க, ஒரு உம்மணா மூஞ்சிப் பரிசோதகர் வந்து சோதித்துவிட்டுப் போனார். அடுத்த நிறுத்தத்தில் ரயில் நின்றதும், ஒரு நாற்பதுகளிலிருந்த நபரும், அவரது பெண்பிள்ளைகள் இருவரும் மஞ்சள்பைகள் சகிதம் - கிராம வாசிகள் என்று பார்த்ததும் தெரிந்தது - மெதுவாக வந்து காலியான இருக்கைகளில் அமர்ந்தனர். சில நிமிடங்களில் திரும்ப வந்த பரிசோதகர் முகத்தில் அவர்களைப் பார்த்ததும் கேள்விக்குறி. அவர் பின்னால் சலவைச் சட்டைகளில் மூன்று பெரிய மனிதர்கள் பெட்டிகளுடன் நிற்க பரிசோதகரின் விரல்களிடுக்குகளில் ரூபாய்த்தாள்கள் தெரிந்தன. வந்ததும் அந்நபரிடம் “டிக்கட்ட எடு“ என்று பயணச்சீட்டைக் கேட்டு வாங்கியவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. “ஏன்யா அறிவில்லை?“ என்று துவங்கி சில நிமிடங்கள் ஏகவசனத்தில் திட்டித் தீர்த்தார். “அன் ரிசர்வடு டிக்கட்டை வாங்கிக்கிட்டு ஏஸில வந்து உக்காந்திருக்கையே - உனக்கு ஏஸி கேக்குதா?“ என்று கத்தினார். அவர் பாவமாக ஈனஸ்வரத்தில் “தெரியலைங்க” என்று சொல்ல “ஏஸி குளிர்றது கூடவா தெரியலை? சொரணையில்லை. எந்திரிய்யா? எந்திருச்சி அடுத்த கோச்சுக்குப் போய்யா“ என்று கத்த அவர்கள் பைகளை எடுத்துக்கொண்டு பதில் பேசாது வெளியேறிச் செல்ல சலவைச் சட்டைகளைப் பார்த்து “காலியா இருந்துச்சுன்னு நோட் பண்ணி உங்களுக்கு ஒதுக்கி வச்சிருந்தேன். வந்து பாத்தா இவனுங்க. நீங்க ஒக்காருங்க ஸார்” என்று சொல்லி விலக, எனக்கு ரத்தம் கொதித்தது. உலகச் சந்தையே வாடிக்கையாளர்களை மையமாக வைத்து அவர்களையும் விற்பனையையும் தக்க வைக்க மன்றாடுகிறார்கள். எத்தனை லல்லுக்கள் வந்தாலும் அரசு இயந்திரங்களின் இடுக்குகளில் இருக்கும் இம்மாதிரி பிசுக்குகளை நீக்குவது கொஞ்சம் கஷ்டமான காரியம் என்று தோன்றியது. பீடா கும்பாவைத் தூக்கி எறிந்துவிட்டு இவர்களை உட்கார வைத்து லாலுவைக் கொண்டுத் துப்பச் செய்ய வேண்டும்! சக பயணியை இப்படி அவமதித்த அந்த நபரைக் கண்டிக்க நினைத்தாலும் பேசாமலிருந்துவிட்டதை நினைத்து குற்றவுணர்வு இதை எழுதும்போது கூட உறுத்துகிறது.

கோவை சென்று இரவு ஒன்பதேகாலுக்கு இறங்கி நிலையத்திலிருந்து வெளியில் வந்ததும் சில்லென்று காற்று உடலைத் தழுவியது ஆசுவாசமாக இருந்தது. குளிரூட்டப்பட்ட அறையில் நுழைந்தது போன்ற உணர்வு. ரயில் நிலையத்தின் முகப்பு இங்கேயும் பளிச்சென்றிருக்க, ஒழுங்கான வரிசையில் கால் டாக்ஸிகள் - யாரும் மேலே விழுந்து கையைப் பிடித்து இழுத்துக் கூப்பிடாமல் இருந்தது இன்னொரு ஆச்சரியம். பயணிகளை உடமைகளைப் பாதுகாத்துக்கொள்ளச் சொல்லி காவல்துறையின் இடைவிடாத அறிவிப்பு ஒலித்துக்கொண்டிருந்தது.

கோவைக்குப் பத்து வருடங்களுக்கு முன்பு வந்திருக்கிறேன். தெலுங்குப்பாளையத்திற்குச் செல்லும் போது எனது கோவை ஞாபகங்களை நினைவுபடுத்திக்கொள்ள முயன்றேன். எதுவும் அடையாளம் தெரியவில்லை. எல்லாமே புதிதாக இருந்தது. கோவை பரந்து விரிந்திருக்கிறது. ஆனால் திருச்சி மாதிரி பைத்தியக்காரத்தனமான, ஒழுங்கற்ற, அசுர விரிவாக இல்லாமல் ஒழுங்காகக் காட்சியளித்தது - பிரமையோ என்னவோ. தெலுங்குப் பாளையத்தில் ஒரு கிரவுண்டு நாற்பது லட்சம் என்று சொன்னதைக் கேட்டதும் (98 ல் இருபதாயிரமோ நாற்பதாயிமோ) பக்கத்துப் பெட்டிக்கடையில் இஞ்சி மொரப்பா ஒன்று வாங்கி வாயில் போட்டுக்கொண்டேன். அந்தப் பணத்தில் பாஸ்டனிலிருந்து இருபது மைல் தூரத்தில் நல்ல குடியிருப்புப் பகுதிகளில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கிவிடலாம்!

கோவை ரவீ அவர்கள் வந்திருந்தார்கள். அவருடைய நண்பர் கடைக்குச் சென்று அறிமுகப்படுத்திவிட்டு பின் ரவீயின் வீடடுக்குச் சென்று சிறிது நேரம் இருந்துவிட்டுத் திரும்பினேன்.



மறுநாள் டாக்ஸி ஒன்றில் தியான லிங்கம் (ஈஷா தியான மையம்) சென்றோம். வெள்ளியங்கிரி மலையின் மடியில் அமைந்திருக்கும் அந்த தியான மண்டபம் அழகு. உள்ளே மண்டபத்தில் நுழைந்து இருளில் கால் தடுக்காது சென்று - ஆடை உரசும் சத்தம் கூட கேட்கக்கூடாது என்பதால் பேண்ட்டை நாலைந்து மடிப்புகள் மடித்துக்கொள்ளச் சொன்னார்கள். பெண்களின் வளையல், கொலுசு இத்யாதிகளைக் கழற்றிக் கைப்பையில் வைத்து வெளியே பாதுகாக்குமிடத்தில் வைக்கச் சொன்னார்கள் - சம்மணமிட்டு அமர்ந்து கொள்ள மகா அமைதி. கண்களை இமைத்தாலே சத்தம் கேட்கும் போல இருந்தது. நடு செண்ட்டரில் லிங்கம். குடுமி வைத்துக் காவியுடையில் சில வெள்ளைக் காரர்கள். சேலை கட்டிய மாதுகள். சிறிது நேரத்தில் அசரீரி போன்று இசையும் மொழி புரியாததொரு பிரார்த்தனை பாடலும் வீணையின் நரம்புகளைச் சுண்டுவது போல எழும்பி அதிர்ந்து மண்டபத்தை நிரப்ப அந்த அனுபவம் சில நிமிடங்கள் நீடித்து ஓய மெதுவாக எழுந்து வெளியில் வந்தோம். நெடுங்காலம் கழித்து தொடர்ச்சியாக சம்மணமிட்டு 20 நிமிடங்கள் அமர்ந்ததில் அடிமுதுகு வலித்தது. ஊருக்குத் திரும்பியதும் உடற்பயிற்சியை மறுபடியும் ஆரம்பித்துவிடவேண்டும் என்று ஆயிரமாவது முறையாகச் சபதமெடுத்துக்கொண்டேன்.

குறிப்பிட்ட நேரத்தில் அவ்விசை இசைக்கப்படுவதாலும், நாங்கள் கிட்டத்தட்ட அது துவங்க ஒரு நிமிட நேரம் இருக்கும்போதுதான் மண்டபத்துக்குப் போனதாலும் அவசர அவசரமாக உள்ளே ஓட வேண்டியிருந்ததாலும் மண்டபத்திற்கு முன்பிருந்த பளிங்குக் குளத்தில் குளிக்க முடியவில்லை. ஆண்கள் பெண்கள் இருவரையும் பிரித்து ஆளுக்கு அரைமணி நேரம் என்ற ரீதியில் மாற்றி மாற்றி குளிக்க விடுகிறார்கள். அங்கேயே வேட்டிகளும், துண்டுகளும் கொடியில் காய்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றை அணிந்து இறங்கிக் குளித்துவிட்டு மறுபடி நமது உடையைப் போட்டுக்கொள்ளலாம். நான் எந்த இடத்திற்குச் சென்றாலும் குளிக்கவொரு சந்தர்ப்பம் கிடைத்தால் விடவே மாட்டேன். போன ஜென்மத்தில் தண்ணீர்ப் பாம்பாகப் பிறந்திருப்பேன் என்று நினைக்கிறேன். சட்டென்று துண்டைக் கட்டிக்கொண்டு படிக்கட்டுகளில் இறங்கிவிட்டேன். உடல் பற்றிய பிரக்ஞையில்லாது பொதுவில் குளித்த காலங்கள் போய், இப்போது லேசாகத்தான் இருந்தாலும் தொப்பை வெட்கப்படுத்தியது. எக்கி அடக்கி இறங்கினேன். “நம்மூரில் மாடு தடுக்கி விழுகிற வரைக்கும் வயசானதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள்” என்று சுஜாதா எழுதிய பிறந்ததினக் குறிப்பு நினைவுக்கு வந்தது.

குளம் என்றால் தெப்பக்குளம் போல இல்லை. ஒரு முப்பது படிகள் தரைமட்டத்திலிருந்து கீழே இறங்க இறுதியில் நீச்சல் குளத்தின் நீளத்திற்கு ஒரு தொட்டி செவ்வக வடிவத்தில் இருக்க உயரத்திலிருந்து பனிக்கட்டியின் சில்லிப்பில் நீர் தொடர்ச்சியாக விழுகிறது. ஈரப்படியில் கால் வைத்ததும் சில்லிப்பில் மயிர்கூச்செரிந்தது. குளத்தின் நடு நாயகமாக பளிங்கில் உள்ளே பாதரசம் திணித்திருக்கும் லிங்கத்தை நிறுவியிருக்கிறார்கள். நீர் மட்டத்திலிருந்து சற்று கீழே முங்கியிருக்கிறது. விழும் நீரில் உடல், மனச் சூடு நீங்க சில நிமிடங்கள் நின்று விட்டு நீந்தி லிங்கத்தை அடைந்து அதைத் தொடும் அனுபவம் வித்தியாசமாக இருக்கும் என்று சொன்னார்கள். அந்த குளிர் நீரில் குளித்ததே மனதை அமைதியாக்கிவிட்டது. லிங்கத்தைத் தொட்டேன். குளிர் நீரிலும் சில்லென்றிருந்தது லிங்கம். கண்களை மூடி வெற்றாக எதையும் நினைக்காமல் சில நிமிடங்கள் இருந்து விட்டு - அரை மணியாகி விட்டது என்று மேலே நின்றிருந்த ஊழியர் சைகை காட்ட - எழுந்து வந்து உடை மாற்றிக் கொண்டேன். வீட்டுப் பெண்களும் குழந்தைகளும் அடுத்த அரைமணி ரேஷனில் சென்று குளித்துவிட்டு வர மொத்த கட்டடத்தையும் மெதுவாகச் சுற்றிப் பார்த்துவிட்டு வண்டிக்குத் திரும்பினோம். ஏனோ தெரியவில்லை - வியாபார ஸ்தலமாகிவிட்ட ஸ்ரீரங்கம், சமயபுரம் கோவில்கள், கிரானைட் இழைக்கப்பட்ட வெளிநாட்டில் கிளைகளுடன் உள்ள, பளபள தியான லிங்கம், இவையனைத்தும் ஒவ்வொருவித அனுபவத்தைத் தந்தாலும் எளிமையாக எங்கோ ஆளரவமில்லாது இருக்கும் அழகிய மணவாளன் கோவில் போன்று ஒருவித நிறைவைத் தரவில்லை. தியான லிங்கத்தின் சூழ்நிலை அமைதி மனதை அமைதிப் படுத்தியது என்பதைக் குறிப்பிட்டாகவேண்டும். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்பெல்லாம் விசேஷ நாட்களில் கூட்டம் முண்டியடித்துக்கொண்டிருக்கும் - இப்போது 365 நாட்களும் கூட்டம் அம்முகிறது. பணம் புழங்குமளவிற்கு எல்லாருக்கும் கஷ்டங்களும் பெருகிவிட்டன போலும். கைக்குழந்தைகளைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு ஏராளமான பெண்களும், வயசாளிகளும் கோவில்களின் நிரம்பியிருக்கிறார்கள்.

எளிமையான, காற்றோட்டமான, அமைதியான, நடக்கையில் உள்ளங்கால்களில் பட்டு உடல் முழுவதும் சில்லிப்பு பரவும் கோவில்களை என்றோ இழந்து விட்டோம்.



தியான லிங்கத்திலிருந்து வெளிவந்து கோவை குற்றாலத்திற்குப் புறப்பட்டோம். தென்காசிப் பக்கம் குற்றாலத்திற்குக் கல்லூரி படிக்கும் போது போய் அனைத்து அருவிகளுக்கும் - தேனருவி உட்பட - விஜயம் செய்து குளித்திருக்கிறேன். ஆனால் அப்போதே சித்திரைத் திருவிழா கூட்டம் இருக்கும் - கோவைக் குற்றாலத்திற்குச் சற்று சந்தேகத்தோடு சென்றால் மகா ஆச்சரியம். வாகனத்தை நிறுத்திவிட்டு ஒரு கிலோ மீட்டரோ என்னவோ மலைப்பாதையில் நடக்கவேண்டும் என்று சொன்னார்கள். ஓரிரு நபர்களைத் தவிர யாரையும் காணவில்லை. கோவையிலிருந்து தியான லிங்கம், கோவை குற்றாலம் செல்லும் வழியில் இருபுறமும் முழுவதுமே விவசாயம் செழித்திருக்க எங்கும் பசுமை. மலையடிவாரத்தில் கேட்கவே வேண்டாம். ஓங்கியுயர்ந்த மரங்களும், காற்றின் குளுமையும், மெல்லிய தென்றலும் நான் இந்தியாவில்தான் இருக்கிறேனா என்று சந்தேகமே வந்துவிட்டது.! மலைப்பாதையில் பசுமைக் கடலிடையே நடக்க நடக்க உடல், மனம் முழுதும் புத்துணர்ச்சி நிரம்புவது போல இருந்தது. “போன வாரந்தான் நாலு பைக்குல பசங்க வந்திருந்தாங்க. அருவிக்குப் போய்ட்டு திரும்ப வரும்போ ஒத்தை யானை விரட்டி ஒத்தனை மெதிச்சுருச்சு. ஆள் ஸ்பாட்லயே காலி” என்று ஒருவர் திருவாய் மலர்ந்தருளினார். வற்றாயிருப்பிலிருக்கும்போது சிறுவயதில் பலமுறை காட்டழகர் கோவிலுக்கு காட்டுப்பாதையில் நடந்து சென்றிருக்கிறேன். யாராவது ஒருவர் இம்மாதிரி “யானைக் கதைகளை”ச் சொல்வது வழக்கமாதலாலும் அது வரை காட்டு யானை தரிசனம் கிட்டியதில்லை என்பதாலும் இவர் சொன்னதைச் சட்டை செய்யவில்லை. ஆனாலும் வீட்டுப் பெண்மணிகள் பயந்தார்கள். எந்தச் சந்தோஷத்தையும் மனிதன் பத்து நிமிடத்திற்கு மேல் நீடிக்க விடமாட்டான் - பயம், துக்கம், சோகம், கவலை, துன்பம் இவற்றில் ஏதாவது ஒன்று இல்லாமல் மனிதனால் சில நிமிடங்கள் கூட நிம்மதியாக இருக்க முடியாது என்று தோன்றியது. ஆதிமனிதனிலிருந்து இன்று வரை ஆதார உணர்வான பயம் ஒன்றே மனித குலத்தைச் செலுத்துகிறது என்றும் தோன்றியது. அது அமெரிக்காவானாலும் சரி. கோவைக் குற்றாலத்தில் ஒற்றையடிப்பாதையில் நடந்துகொண்டிருக்கும் நம்மைப் போன்ற சாமான்யர்களானாலும் சரி.



அருவிக்குச் சில நூறடிகள் முன்பே காற்றில் சாரல் பரவி உடலைத் தழுவியது. சூரியன் விழத் தொடங்கியிருந்தான். மலைத்தொடர்ச்சியெங்கும் ஆங்காங்கே வெள்ளிக் கீறல்கள் போல அருவிகள் தொலைதூரத்தில் தெரிந்தன. அக்காட்சியை வர்ணிக்க முயல்வது நேர விரயம். உள்வாங்கி நினைவு முழுதும் நிரப்பிக்கொண்டேன்.

ஒரு சிறு பாலம் இருக்கிறது. இடது புறம் சற்று உள்ளே பிரதான பிரதான அருவி விழ, பாலத்துக்கு அடியில் நீரோடி மூன்று அடுக்குகளி்ல் சிற்றருவிகளாக வலப்புறம் விழுகிறது. பிரதான அருவிக்குச் செல்லும் பாதையில் முட்செடிகள் போட்டுத் தடுத்திருந்தார்கள். வலது புறம் படிகள் இறங்கிச் செல்கின்றன. தடுப்புக் கம்பிகளும், கழிவறை, உடை மாற்றுமறை வசதிகளெல்லாம் செய்து அருமையாக வைத்திருக்கிறார்கள். அங்கேதான் பத்திருபது பேரைப் பார்க்க முடிந்தது. இரண்டு அடுக்காக விழும் அருவிகளில் ஒன்றைப் பெண்களுக்கு என்றும் இன்னொன்றை ஆண்களுக்கும் ஒதுக்கி அறிவிப்பு வைத்திருக்கிறார்கள். இறுதியடுக்கில் நீச்சல் குளமளவிற்கு நீர் மூன்றடி தளும்பியிருக்க தடுப்பு தாண்டி நீர் விழுந்து மலைக்குக் கீழே போகிறது. அந்த அடுக்கில் வயதானவர்களும், குழந்தைகளும் குளிக்க வசதியாக இருந்தது. தியான லிங்கக் குளத்தில் குளித்த தலை இன்னும் காய்ந்திருக்கவில்லை. அருவிக்குள் குழந்தைகளைப் பிடித்துக்கொண்டு புகுந்தேன். அருவிகளில் குளிக்கும்போது நீரின் வேகத்தில் மூச்சு முட்டும் சமயங்களில் நீர்த்திரைக்கும் பாறைக்கும் இடையிலிருக்கும் சிறு இடைவெளியில் நின்று கொள்வது வழக்கம். குழந்தைகள் குதூகலித்து ஆர்ப்பரித்தார்கள். அசுர வேகத்தில் விழும் நீர் மனம், உடல் மாசுகளனைத்தையும் துடைத்தெடுத்துப் போனது.

பின்பு கீழடுக்கு குளத்துப் பகுதியில் நின்று கற்களை நீர்ப்பரப்பில் எறிந்து தவளை காட்டும் விளையாட்டை விளையாடிவிட்டு இருளத் தொடங்கியதும் மேலேறினோம். மேலே நின்றிருந்த வன ஊழியர் ஒருவரிடம் கேட்டுக்கொண்டதில் முட்களை விலக்கி பிரதான அருவிக்குச் செல்லும் பாதையைத் திறந்தார் (குடும்பத்துடன் வந்திருந்ததால்). நன்றி கூறி நானும் நண்பனும் மட்டும் சென்று கைக்கெட்டும் தூரத்தில் விழுந்த அருவியைக் கண் கொட்டாமல் பார்த்து ரசித்துவிட்டுத் திரும்பினோம். திரும்ப வண்டி நிறுத்திய இடத்தை நோக்கி மெதுவாக நடக்கையில் சூரியன் மலைக்குப் பின் விழுந்திருக்க காட்டில் ஏகமாகப் பறவைகளின் இரைச்சல். உறவினர் வீட்டுக்கு ஈர உடையுடன் திரும்பும்போது மனம் நிறைந்திருந்தது.

இன்னும் வரும்...

நன்றி - தென்றல்.காம்

No comments: