Thursday, May 27, 2010

ஒரு கதை சொல்லு


வழக்கம் போல நேற்றிரவும் குழந்தைகளுக்கு ஒரு கதை. முன்னேற்பாடாக எந்தக் கதையையும் படித்து வைத்துக்கொள்ளாததால் இட்டுக்கட்டி ஒரு கதையைச் சின்னவளுக்குச் சொன்னேன்.

கொட்டாவி விட்டுக்கொண்டே நான் கதையை ஒருவழியாகச் சொல்லி முடிக்க, கொட்டக்கொட்ட முழித்துக்கொண்டு கேட்டுவிட்டு என் கழுத்தைக் கட்டிக்கொண்டு "Thank You daddy" என்று சொல்லி போனஸாக ஒரு முத்தத்தையும் கொடுக்கப் புல்லரித்தது. குழந்தையின் சின்னஞ்சிறு உதடுகள் கன்னத்தில் படும்போது கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட உணர்வு எழும். எப்போதும் போல Good Night சொல்லிவிட்டுத் தூங்கியிருந்தாளானால் அது இன்னொரு இரவாகப் போயிருக்கும். அவள் சிறிது யோசனையுடன் “டாடி. Did you read this story somewhere?" எனக் கேட்டாள்.

“இல்லம்மா. நானா கற்பனை பண்ணிச் சொன்னது”

“you mean you created the story all by yourself?"

“ஆமா”

இன்னும் கொஞ்சநேரம் யோசித்துவிட்டு புன்னகையுடன் தூங்கிப் போய்விட்டாள். என்ன யோசித்திருப்பாள் என்று ஆச்சரியமாக இருந்தது. குழந்தைகளின் உலகம் மிகவும் அலாதியானது என்பதை மறுபடியும் உணர்ந்தேன்.

***

வல்லான் வாழ்வான்


பரபரப்பான விஷயத்தை உடனே முந்திப் பதிவது என்ற வலைப்பதிவு ரேக்ளா ரேஸ் எனக்குக் கொஞ்சமும் ஒவ்வாதது. அதனாலேயே இந்தப் பதிவு தேவையா என்று பலமுறை யோசித்துத் தயங்கி பின் இப்போது எழுதுகிறேன்.  இதை எழுதியிருக்க வேண்டாமோ என்று பின்னொரு நாளில் தோன்றலாம்.

தமிழ்நாட்டில் எல்லைச்சாமி, முனியாண்டி கோவில் இல்லாத கிராமமே கிட்டத்தட்ட கிடையாது எனலாம். மூத்தார், நீத்தாரைக் கடவுளாகக் கருதி வணங்கிய பண்பும், கண்ணியமும் நிரம்பியிருந்த ஒரு சமூகம் இன்றிருக்கும் நிலையை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதன் வெளிப்பாடே இப்பதிவு.

மும்பை தீவிரவாத தாக்குதலைப் போல லைவ் ரிலேவாகக் காட்டவில்லை - முடிந்தால் கட்டாயம் செய்திருப்பார்கள் - அது ஒன்றுதான் குறை - நமது ஒளியூடகங்களின் பொறுப்பற்ற தன்மையின் சிகரமாக நித்தியானந்தா, ரஞ்சிதா ஆகியோரின் - அவரோட ராவுகள் வீடியோ - இந்தியா சுதந்திரம் அடைந்ததைப் போன்ற முக்கிய நிகழ்வாக அரை மணிக்கொருதரம் போட்டுத் தாக்கினார்கள்.

முதலில் சன்டிவியில் அரைமணிக்கொருதரம் என்று தொடர்ச்சியாகப் காட்டுகிறார்கள் என்று செய்தி கேள்விபட்டபோது - ஒரு வேளை இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்ட செய்தியோ இல்லை “ஐயா கொல்றாங்களே” செய்தியோ என்றுதான் நினைத்தேன். ரெண்டுமே இல்லையாம். பணம் சேர்ப்பதற்காக நீண்டநாட்களாக சலூனுக்குப் போகாமலிருக்கும் ஜடாமுடிதாரி இளைஞனும் ஒரு யுவதியும் படுக்கையிலிருப்பதை ஒரு ஒழுக்கமான, நேர்மையான, சதாசர்வகாலமும் இவ்வுலகத்தை உய்விக்கும் வழியைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும் ஆத்மா படம்பிடித்து சன் டிவிக்கு அனுப்பியிருக்கிறார்கள் போல. மிட்நைட் மசாலாவைவிட நல்லாருக்கே என்று பொழுதன்றைக்கும் போட்டுத் தாக்கியிருக்கிறார்கள். ஆனால் அதை ”மானாட மயிலாட” போன்று ஏதோ ஒரு நிகழ்ச்சிபோல என்று கலைஞர் தனது குடும்பத்தினருடனும் பேரக்குழந்தைகளுடனும் பார்த்துத் தொலைத்ததை அறிந்திருக்க மாட்டார்கள். கலைஞர் என்ன - தமிழ்நாடே பார்த்தது - இணையம் தயவில் உலகமே பார்த்தது. அந்நேரத்தில் வீட்டிலில்லாத, அல்லது சன்டிவி கனெக்ஷன் இல்லாத என் போன்ற ஆசாமிகள் யூட்யூபில் தேடி என்ன விஷயம் என்று தெரிந்து கொண்டோம். பேரக்குழந்தைகளோடு இதைப் பார்த்துவிட்டோமே என்று சங்கடம் தாங்காமல் “ஊடகங்கள் இம்மாதிரி விஷயங்களை ஒளிபரப்பாது பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்” என்று அறிக்கை மூலம் கலைஞர் அறிவுறுத்தியதும் - வழக்கமாக ஒரு வாரமாவது இதை அச்சு, ஒளி ஊடகங்களின் மூலம் பரபரப்பி மகிழும் சன் டிவி, தினகரன், தமிழ்முரசு மறுநாளே எல்லாவற்றையும் மூட்டைகட்டி - பலவருடக் குப்பை பெருக்கித் தள்ளிவிடப்பட்ட அறை மாதிரி தோற்றமளித்தன! கலைஞரின் அந்த அறிக்கை பாராட்டத்தக்கது. ஆனால் இப்படி செலக்டிவ்வாக அறிக்கைவிடுவதுதான் (வழக்கம்போலச்) சகித்துக்கொள்ள முடியவில்லை.

சரி - ஒரு வழியாய் அலை ஓய்ந்ததா என்று பார்த்தால் கலைஞர் சொன்னதற்காக இரண்டு நாட்கள் சும்மா இருந்துவிட்டு மறுபடியும் ரஞ்சிதாவைத் தேட ஆரம்பித்துவிட்டார்கள். வியாபாரம் நடக்க வேண்டுமே! ஒரு வாரமாக புல்லரிக்கச் செய்யும் செய்திகள் மயிர்கூச்செறியும் காட்சிகள் என்று இடைவிடாது பார்த்தால் என்ன ஆகும்? உடம்பும் மனதும் அரிக்கிறது! செருப்பாலடிக்கும் நிகழ்ச்சிகள், கொடும்பாவி எரிப்பு, திவசம், ஆசிரமம் நொறுக்குதல் என்று தொடர்ச்சியாக வரும் செய்திகளைப் பார்க்கும்போது நம்மூரில் இத்தனை பரமாத்களா என்று பெருமையில் நெஞ்சம் விம்முகிறது. அடஅடஅட! ஆனாலும் நம்மாட்கள் தீமை கண்டு பொங்கியெழுவதைப் பார்த்தால் அட நம்மூருக்குத் திரும்பிரலாம் போலருக்கே என்று தோன்றியதை மறுக்கவே முடியாது. Fashion TV-யைத் தடைசெய்யக் கொடிபிடித்த தமிழர்கள் இப்படி புணர்ச்சி வீடியோக்களை செய்திகளின் ஊடே குடும்பத்தோடு பார்க்குமளவிற்கு நாகரீகத்தின் உச்சியிலிருக்கிறார்களே என்று அதிசயமாக இருந்தது. தமிழ் நாட்டில் ஒரே நாளில் இத்தனை காட்சிகள் எந்தப் படமும் ஓடியிருக்காது!

பகுத்தறிவு நாமத்தைச் சார்த்திக்கொள்ளும் பக்த கோடிகள் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணாமல் வாயிலிருந்து லிங்கம் எடுப்பவர்களையும், ”நானே கடவுள்” என்ற பிராண்டில் பன்னாட்டு பிரம்மாண்ட பக்தி நிறுவனங்களை ஆயிரக்கணக்கில் உலகெங்கும் கிளைகளை ஏற்படுத்தி நடத்தி யூரோக்களும், டாலர்களும், ரூபாய்களுமாகக் கோடிகளில் புரளும் கபடவேடநாடகதாரி (உபயம் : மௌலி இன் அபூர்வ சகோதரர்கள்)களின் பின்னால் சென்று விழுந்து அங்கப் பிரதட்சணமும் ஆலிங்கனமும் செய்துவிட்டு - இப்போது தணிக்கை செய்யப்படாத படுக்கையறைக் காட்சியில் அவர்களது கடவுளைப் பார்த்து வயிறெரிந்துக் காரித்துப்பித் தூற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது. இந்த உத்தம சிகாமணிகளுக்கு எவ்வளவு பட்டாலும் புத்தி வரவே வராதா? அது எப்படி இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், நாயர், நாட்டுக்கோட்டைச் செட்டியார், ஐயர், திராவிடன் என்று வித்தியாசமே இல்லாமல் மகா ஒற்றுமையாக ஏமாறுகிறார்கள் என்று புரியவேயில்லை.

மறுபடி சன் டிவிக்கு வருவோம். என்னே சமூக சிந்தனை! என்னே நாட்டுப் பற்று! எனக்குப் புல்லரிக்கிறது! அந்த ரெண்டு ஆசாமிகளும் மனமொத்து ஆலிங்கனம் செய்ததைத் திருட்டுத் தனமாக படம் எடுத்ததை சாட்டிலைட்டுகளின் மூலமாக வரவேற்பறைக்கு அரைமணிக்கூருக்கொருதரம் போட்டுக் காட்டிய சேவைக்கு ஒரு பெயர் இருக்கிறது - மீடியா வெளிச்சம் என்று இங்கிலீஷில் - தமிழில் “விளக்குப் பிடித்தல்” என்று ஒரு வழக்கு இருக்கிறது. கலாநிதி மாறனிடம் நான் கேட்க நினைத்தது - நீங்கள் சன் டிவி பார்ப்பதுண்டா? உங்கள் மனைவி குழந்தைகள் பார்ப்பதுண்டா? துண்டென்றால் இதைக் குடும்பத்தோடு உங்கள் வீட்டில் உட்கார்ந்து பார்த்தீர்களா? இல்லையென்றால் உங்களுக்கு யூட்யூப் லிங்க் அனுப்பட்டா? இல்லாவிட்டால் உங்கள் சொத்திலிருந்து சிலநூறு ரூபாய்களைக் கொடுத்தீர்களென்றால் நக்கீரனுக்கு சந்தா கட்டி அவர்கள் முழு வீடியோவும் காட்டுகிறார்களாம் - அந்த லிங்க்கை உங்களுக்கு அனுப்பலாமா?

Mr. Nithyanandam, CEO of ஞானபீடம், ஸாரி, தியானபீடம் அநேகமாக சன்டிவியை கோர்ட்டுக்கு இழுக்கலாம். தமிழ்நாட்டில் இழுக்க முடியாது - ஆனால் கர்நாடகத்திற்கு வழக்கை மாற்றிவிட்டார்களே! எப்படியும் சில வருடங்கள் ஓடி பேரங்கள் படிந்து மக்கள் வழக்கம்போல இலவச டிவியில் மெட்டி ஒலியிலோ அல்லது தட்டு ஒலியிலோ மூழ்கி விடுவார்கள். போலீஸார் நித்யானந்தத்தையும் ரஞ்சிதாவையும் தேடுகிறார்கள் என்று செய்தி படித்தேன் - எதற்காம்? அமைதிப் பூங்காவான தமிழகத்தில் அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததற்கா? இல்லை பச்சிளம் பாலகர்கள் மனதில் பாலுணர்வைத் தூண்டிவிட்டதற்கா? அட ராமா.. அவர்கள் சன் டிவியை நடத்தவில்லை என்பதை யாராவது சொல்லக்கூடாதா?

ஏழே ஆண்டுகளோ என்னவோ - இப்படி உலகச் சந்தையில் பெரிய துண்டு போட்டு இடம் பிடித்திருக்கும் Dhyanapeetam கம்பெனியை உருவாக்கிய நித்தியானந்தத்தைப் பார்த்து நூற்றாண்டுகள் கண்டும் இந்தியச் சந்தையில் இன்னும் பாயைப் பிராண்டிக் கொண்டிருக்கும் பெப்ஸி, கோக் நிறுவனங்கள் பிச்சை வாங்கவேண்டும் என்பதை ஒத்துக்கொண்டேயாக வேண்டும். .

இந்த தேசம் படும் பாடு கேவலமாக இருக்கிறது.  எடுப்பார் கைப்பிள்ளை என்றுகூட சொல்ல முடியாது - கைப்பிள்ளை எவ்வளவோ பரவாயில்லை - இது வேறு ரகம் - என்ன ரகம் என்று எழுத நான் என்ன நக்கீரன் இணைய தளமா? அல்லது சன் டிவி நடத்துகிறேனா? 

தெருவில் கண்கட்டி வித்தை காட்டுபர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களது பிள்ளை குட்டிகளே கயிற்றில் நடக்கும், சவுக்கால் அடித்துக்கொள்ளும். ரத்தம்கக்கிச் சாகாமலிருப்பதற்காக கால்களைச் சேர்த்துவைத்துக்கொண்டு நின்று மொத்த நிகழ்ச்சியையும் அசையாது பார்த்ததுண்டு. குடுகுடுப்பைக் காரனின் ஒலி கேட்டால் வாசல்கதவை மூடி வைத்துக்கொண்டு திக்திக்கென்ற நெஞ்சத்துடன் அவன் கடந்து போகும் வரை சத்தமில்லாமல் ஒளிந்து நின்றதுண்டு. இம்மாதிரி வித்தைக்காரர்கள் கற்ற வித்தையோடு இந்து மதம், யோகா என்று சரிவிகிதத்தில் கலந்து லாகிரி வஸ்துவாகத் தர அதைத் தின்றுவிட்டு போதையில் அவர்கள் பின்னால் “கடவுளே” எனத் துதிக்கிறது பெருங்கூட்டம். அதோடு இப்போது நடிகையை வேறு பார்த்துவிட்டார்களா? ஆஹா... சாமியாருக்கு மச்சம்டா என்று நினைக்காதவர்கள் எத்தனை பேர். பிரேமானந்தாவிலிருந்து பல ஆனந்தாக்களைப் பார்த்து நாமும் ஏதாவதொரு ஆனந்தாவாகிவிட்டு ஆனந்தமாக இருக்கலாம் என்று எண்ணியவர்கள் நித்தியானந்தாவைப் பார்த்து முடிவே செய்திருப்பார்கள்! வழக்கம்போல எரியும் வீட்டில் பிடுங்கியவரை லாபம் - என்று நாட்டில் எந்தப் பிரச்சினை வந்தாலும் அந்தத் தீயில் குளிர்காய நினைக்கும் - பாதிக்கப்பட்டவர்கள் என்ற போர்வையில் வரும் சமூக விரோத கூட்டம் - இப்பிரச்சினையிலும் ஆஜராகி ஆசிரமத்தை நொறுக்குவது, உடைப்பது என்ற சமூக நற்பணிகளில் ஈடுபட, எங்கு நோக்கினும் எதிர்ப்பு குரல்கள்!

மதம் என்னும் காவிப் போர்வையைப் போர்த்திக்கொண்டு திரியும் நித்தியானந்தா மாதிரி ஆசாமிகளைக் கடவுள் போலப் பாவித்து அவர்கள் பின்னால் ஆட்டுமந்தைக் கூட்டமாகச் சென்று பணத்தை வாரியிறைத்து “அருள்” தேட நினைத்த பக்தர்கள் இனி என்ன செய்வது என்று முடிவு செய்ய வேண்டும். ஒரு வேளை இந்த விடியோவைப் பார்த்த பின்பு ஆசிரமத்துல நடிகைங்களை ஈஸியாப் பார்க்கலாம் போலருக்கே என்று கூட்டம் இன்னும் கூடலாம். 

சரி. சொல்லவந்ததை... அய்யய்யோ என்ன சொல்ல வந்தேன் என்று மறந்து போச்சே!!! தொலையட்டும். பரபரப்புச் செய்திகள் பதினைந்து நாட்களுக்கு மேல் தாங்காது. இதுவும் தாங்காது. 

காளஹஸ்தி கோபுரம் இடிந்து விழுந்திருக்கிறது. இது இடிந்து விழுந்திருக்கும் ஒரு சமூகத்தின் குறியீடே. மதம், இறை போன்ற விஷயங்களுக்குள் போகாது பார்த்தால் ஐநூறு வருடம் பழமையான ஒரு புராதான, வரலாற்றுச் சின்னத்தை நாம் பேணி காக்கும் லட்சணம் இதுதான். பகுத்தறிவு என்ற பெயரில் வரலாற்றை மறைப்பதும், புராதானங்களைக் கேட்பாரற்று, மரியாதையற்று நட்டாற்றில் விடுவதும் நம்மூரில் மட்டுமே நடக்கும். வௌவால்கள்கூட வாழமுடியாத நிலையில் அருங்காட்சியகங்கள்.  பழமையான சின்னங்களில் சமூக விரோதச் செயல்கள். இவற்றின் அருமை பெருமை என்று எதைப்பற்றியும் அறிந்துகொள்ளாத, ஊடகப்பால் ஊட்டி வளர்க்கப்படும், கவைக்குதவாத ஏட்டுச் சுரைக்காய்களைப் படித்து வளரும், எதையும் பணம்கொடுத்துச் சாதித்துக்கொள்ளலாம் என்ற கலாசாரத்தில் ஊறிய, குற்றவுணர்வே எழாத மக்கள்.

பரம ஏழை நாடுகளில்கூட அவர்களது வரலாற்றுச் சின்னங்கள் மீது அபரிமிதமான மரியாதை கொண்டு பூப்போலப் பார்த்துக்கொள்கிறார்கள. இங்கு பணம் குவிக்க மட்டுமே அதைப் பயன்படுத்திக்கொண்டு இப்படி அம்போவென இடிந்துபோக விடுகிறோம். இதுமாதிரி கேட்பாரற்று சிதிலமடைந்திருக்கும் சின்னங்கள் எத்தனை ஆயிரங்கள்? லட்சங்கள்? கடவுளாலேயே இவற்றைக் காப்பாற்ற முடியாது. ஆட்சியாளர்கள் இலவச டிவியில் மக்களை மூழ்கடித்து ஓட்டு வாங்குதில் பிஸியாக இருக்கிறார்கள். அவர்களது நிறுவனங்கள் அந்தரங்கக் காட்சிகளை உலகெங்கும் ஒளிபரப்புவதில் மூழ்கியிருக்கிறார்கள்.


காசிருப்பவர்கள் என்னமும் செய்யலாம். கேட்பாரற்ற சாமான்யர்கள் கேட்பாரற்றவர்களாகவே இருப்பார்கள். வல்லான் வாழ்வான் - இதுதான் இன்றைய நியதி.  ஒரு பெரும் சுழலில் சிக்குண்டுச் சின்னாபின்னமாகிறது சமூகம். கடவுள் காப்பாற்றட்டும்.



***

உவ்வேக்கானந்தன்!



திடீரென்று போன சனியன்று டாய்லெட் அடைத்துக்கொண்டுவிட்டது.

“போன மேயில்தானே செப்டிக்கைச் சுத்தம் செய்தோம். ரெண்டு வருஷத்துக்கொரு தடவை பம்ப் பண்ணினா போதும் என்றானே விண்ட்ரிவர் ஆள். நடுவுல வேற ரெண்டரை மாசம் ஊர்லயே இல்லையே. டாங்க் ரொம்பறதுக்கு சான்ஸே இல்லை” என்றெல்லாம் யோசித்துக்கொண்டு விண்ட்ரிவர் கம்பெனிக்குத் தொலைபேசியதில் வீக்கெண்ட் என்பதால் யாரும் உடனடியாக வரமுடியாது என்று மன்னிப்பு கேட்டுக்கொண்டு திங்கள் காலையில் ஆளனுப்புவதாகச் சொன்னார்கள். இந்த வருடம் நிறைய மழை பெய்ததாலும் போன ஜனவரி போல பனி கொட்டித் தீர்த்ததாலும் தொட்டி நிரம்ப வாய்ப்பு இருக்கிறது என்றும் சொன்னார்கள். தெருவில் எங்கள் வீட்டில் மட்டும்தான் செப்டிக் டாங்க். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் டவுன் ஸீவர் ஸிஸ்டத்தில் ஐக்கியமாகியிருக்கிறார்கள். காரணம் எங்கள் வீட்டுக்கு முன்னால் ஓடும் வாய்க்கால். மெயின் இணைப்பிலிருந்து வீட்டு வரை குழாய் போட மொத்தம் இருபதாயிரம் டாலர் ஆகும் என்றார்கள! அடப்பாவிகளா!

அவசரத்துக்குப் பேசாமல்  வாய்க்காலில் இறங்கியிருப்பேன். ஆனால் இங்கு போனால் Fox சானலின் SkyFox ஹெலிகாப்டரிலிருந்து படமெடுத்து லைவ் ரிலேவாகவே காண்பித்து நான் “போய்” முடிப்பதற்குள் சைரனைப் போட்டுக்கொண்டு காவல்துறை வந்துவிடும் என்பதால் அந்த ரிஸ்கை எடுக்காமல் என்ன செய்வது என்று யோசித்து நண்பரிடம் பேசியதில் உடனே வீட்டுக்கு வந்துவிடச் சொல்லி அழைக்க குளிக்காமல் கொள்ளாமல் குடும்பம் குட்டிகளோடு கிளம்பிப் போயாகிவிட்டது. நமது விருந்தோம்பலைப் பற்றிச் சொல்லவேண்டியதேயில்லை. எங்களை நிரம்பவும் சிரத்தையெடுத்துக் கவனித்துக்கொண்டார்கள்.

திங்களன்று காலை குழந்தைகளைப் பள்ளியில் இறக்கிவிட்டு, வீட்டுக்கு வந்து காத்திருக்கத் துவங்கினோம். பத்தரை மணியளவில் டாங்கர் லாரி வந்து பெரிய குழாய்களைப் பொருத்தி இழுத்துக்கொண்டு வந்து செப்டிக்கைத் திறந்து பார்த்துவிட்டு அந்த நபர் “உள்ளே ஒரு ஓட்டலே இருக்கிறதே” என்று சொல்ல தயக்கத்தோடு எட்டிப் பார்த்தேன். என்ன பார்த்தேன் என்பதை விவரிக்கப் போவதில்லை.

இங்கு பெரும்பாலான வீட்டுச் சமையலறைகளில் ஸிங்க் தொட்டிக்கு அடியில் Garbage Disposal என்று மிக்ஸி மாதிரி மோட்டார் ஒன்றைப் பொருத்தியிருப்பார்கள். தட்டுப் பாத்திரங்களைக் கழுவும்போது உணவுக் கழிவுகளை ஸிங்க்கில் கொட்டி ஸ்விட்சைத் தட்டினால் அவை விழுதாக அரைபட்டு நீரோடு ஐக்கியமாகிவிடும். வீட்டிலிருந்து வெளியேறும் கழிவு நீரெல்லாம் நேராக செப்டிக் தொட்டிக்குத்தான் செல்லும். வீட்டுக்காரப் பெண்மணிகள் சமைத்த மிச்சங்களையும் சிலசமயம் அதில் போட்டு குழாயைத் திறந்துவிடுவதால் அவை சிறிது சிறிதாகச் சேர்ந்து குழாயில் எங்காவது அடைத்துக்கொள்ள வாய்ப்புண்டு. அவர் செப்டிக் நிரம்பவில்லை என்றும் வீட்டிலிருந்து வரும் குழாய்களில் எங்கோ அடைப்பிருக்கிறது என்றும் சொல்லி டாங்கைச் சுத்தம் செய்யத் தேவையில்லை என்று அறிவித்துவிட்டு மூடியைத் திரும்பப் பொருத்திவிட்டு நூற்றைம்பது டாலர்கள் மட்டும் வாங்கிக்கொண்டு (டாங்கைச் சுத்தம் செய்திருந்தால் முன்னூறு டாலர்கள்), ப்ளம்பரை அனுப்புவதாகச் சொல்லிவிட்டு நம்மூர் ப்ரூ இன்ஸ்டண்ட் காஃபியை பருகிவிட்டுச் சென்றார்.

மறுபடியும் விண்ட்ரிவரில் விசாரித்ததில் மூன்று மணிக்கு ப்ளம்பர் வந்துவிடுவார் என்றும் ஒரு மணிநேரத்திற்குள் பிரச்சினை சரிசெய்யப் பட்டுவிடும் என்றும் உறுதியளித்தார். குழந்தைகள் இரண்டரை மணிக்கு பள்ளியிலிருந்து வந்துவிடுவார்கள்.

மூன்று மணிக்கு பிளம்பர் வந்து கீழ்தளத்தில் இருந்த டாய்லட் சீட் ஒன்றை கழற்றி நகர்த்தி வைத்துவிட்டு, கொண்டு வந்திருந்த இயந்திரத்தின் தாம்புக்கயிறு மாதிரியான குழாய் ஒன்றை உள்ளே செருகி இயக்கியதில் அது சரசரவென்று உள்ளே போய் கடைசியாக ஒரு துணிப்பந்தை இழுத்துக்கொண்டு வந்தது.

“இதான்” என்று வெள்ளைக்கொடி மாதிரி அதை விரித்துக்காட்டிவிட்டு கழற்றியதையெல்லாம் மறுபடி பொருத்தி ஒரு தடவை ஃபளஷ் செய்ததில் ஆஹா.. நீர் தடையின்றிப் போகும் சத்தம்!

சின்னதுதான் துணியை உள்ளே போட்டிருக்கவேண்டும். பள்ளிக்கூடம் விட்டு வந்தவளை “என்ன பண்ணினே” என்று மூலையில் மடக்கி மிரட்டிக் கேட்டேன். “நீதான் Wet Tissue வச்சு தொடச்சா அழுக்கு போயிடும்னே. அதான் அதை உள்ளே போட்டு Flush பண்ணினேன்” என்று என்னை மூலைக்குத் தள்ளி எகிறினாள். Wet Tissue காகிதம் மாதிரியும் இருக்காது. துணி மாதிரியும் இருக்காது. ஆனால் கிழியாது. “மூணு டாய்லட் இருக்கில்லியா. அதான் டப்பாவிலிருந்த எல்லா டிஸ்யூவையும் எடுத்துப் போட்டேன்.  அய்யோ I have to go one bathroom” என்று சொல்லிவிட்டு உள்ளே நுழைந்து கதவைப் பூட்டிக்கொண்டாள்.

எனக்கும் லேசாக வயிறு கலக்குகிற மாதிரி இருந்தது!

***





Tuesday, May 25, 2010

FICCI - கமல்ஹாஸன் - தமிழுணர்வாளர்கள்


கொழும்புவில் நடக்க இருக்கும் திரைப்பட விழாவில் FICCI பங்கெடுக்கக்கூடாது என்று கமல்ஹாஸன் அலுவலகம் முன்பு “தமிழுணர்வாளர்கள்” குழுமி ஆர்ப்பாட்டம் நடத்தினார்களாம். அதோடு அவர்கள் வைத்த கோரிக்கைகள்.

1. FICCI அமைப்பின் தலைமைப் பொறுப்பிலிருந்து கமல் விலகவேண்டும்
2. பத்மஸ்ரீ பட்டத்தைத் திரும்பக் கொடுக்கவேண்டும்.

மேற்குறிப்பிட்ட இரண்டையும் செய்தால் ஈழத் தமிழர்களுக்கு விடிவு காலம் வந்துவிடும் போல. போராட்டம் நடத்தியவர்களின், அவர்களைப் பின்னணியில் இருந்து உந்தியவர்களின் அறிவை மெச்சிக்கொள்ள வேண்டியதுதான்.

கலை, விளையாட்டு போன்றவை எல்லைகளற்றவை என்றெல்லாம் பீத்திக்கொண்டது ஒரு காலம். அரசியல் அவற்றில் கலந்து நாற்றமடிக்கத் துவங்கி நீண்ட நாட்களாகிறதுதான். இம்மாதிரி தமிழுணர்வு போராட்டங்களால் ஒரு மயிற்கற்றையைக் கூட பிடுங்க முடியாது என்று நன்கு தெரிந்தும் இவர்கள் போராடுவது பதினைந்து நிமிட ஊடகப் புகழுக்காகத்தான் என்று தோன்றுகிறது.

இதே FICCI க்கு வேறு யாராவது எந்த மாநிலத்தவராவது தலைவராக இருந்திருந்தால் அவர்கள் வீட்டு முன்பு சென்று போராடுவார்களா? மாட்டார்கள். அதாவது தமிழன் கமல் அந்த அமைப்புக்குத் தலைவராக இருப்பதால் அந்நிகழ்ச்சியில் அவ்வமைப்பு பங்கேற்கக்கூடாது. ஆனால் வேறு மொழி பேசுவோர் தலைவராக இருந்தால் ஒன்றும் போராட மாட்டோம். என்னே லாஜிக்!!! அதே போல பிரச்சினைக்குச் சற்றும் சம்பந்தமேயில்லாத பத்மஸ்ரீ பட்டத்தை திருப்பிக் கொடுக்கவேண்டுமாம்! ஏன் தமிழக முதல்வரிடம் பதவியைத் துறக்கச் சொல்லவேண்டியதுதானே! அல்லது இவர்களே சூட்டிய “தானைத் தலைவர்” “புரட்சித் தலைவி” போன்ற பட்டங்களை திருப்பி எடுத்துக்கொள்கிறோம் என்று அறிக்கை விட வேண்டியதுதானே? விட்டால் வீட்டுக்கு ஆட்டோ வரும் என்ற பயம்! கமல் ஹாஸன் நிதானப் போக்கைக் கடைப்பிடிப்பவர். ஆகவே அவர்மீது கல்லெறிந்து பார்க்கலாம்.

இம்மாதிரி விழா புறக்கணிப்புகளால் புண்ணைத்தான் சொறிந்து சுகம்காண முடியுமே ஒழிய விழா நடக்காமலிருக்கப் போவதில்லை.

உண்மையிலேயே அவர்கள் இலங்கையரசுக்கு நெருக்கடி கொடுக்க நினைத்தால் மாநிலத்தில் ஆட்சியிலும் மத்தியில் செல்வாக்காகவும் இருக்கும் “தமிழினத் தலைவர்” வீட்டு முன்பு சென்று போராடி இலங்கையுடன் எவ்வித வர்த்தக உறவும் தமிழ்நாடோ இந்தியாவோ கொள்ளக்கூடாது என்று பொருளாதாரத் தடை கொண்டுவரச் சொல்லி போராட வேண்டும். செய்வார்களா? மாட்டார்கள்.

இலங்கைக்கு இங்கிருந்து ஏற்றுமதியையோ, அங்கிருந்து இறக்குமதியாவதையோ நிறுத்தப் போராடுவார்களா? மாட்டார்கள். கமலிடம் போய் சொறிவது ஏன்?

பதவியை இறுகப் பிடித்தக்கொண்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பாராமுகம் காட்டும் அரசியல்வாதிகளை எதிர்த்துப் போராடாமல் கலைஞர்கள் வீட்டு முன்பு போராடுவது பைத்த்தியக்காரத்தனம்.

இலங்கைத் தமிழர்களை விடுங்கள். இலங்கைக் கடற்படை எத்தனை தமிழ்நாட்டுத் தமிழ் மீனவர்களைத் தாக்கிக் கொன்றார்கள்! இன்னும் மீனவர்கள் அடிபடுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். அப்போது எங்கே போயிற்று “தமிழுணர்வு”? இதை எதிர்த்து முதலமைச்சர் வீட்டு முன்பு போராடினார்களா? அவர் பதவி விலக வேண்டும் என்று கோஷம் போட்டார்களா? சொந்த மக்கள் பற்றியே உணர்வில்லாதவர்கள்  அண்டை நாட்டுப் பிரச்சினையை வைத்துக்கொண்டு அரசியல் செய்வது படு கேவலம்.

புல்லுருவித் தலைவர்கள் இருக்கும் வரை, அவர்களை ஆட்சியில் வைத்துக்கொண்டு வேடிக்கை பார்க்கும் மட மக்கள் இருக்கும் வரை, இந்தியா வல்லரசல்ல - வெறும் புல்லரசுதான்! இலங்கை என்ன - பிஜி தீவு கூட இந்திய மீனவர்களைக் கொல்லும். இல்லாவிட்டால் படகில் தீவிரவாதிகளை அனுப்பி கொலைவெறியாட்டத்தை நடத்தும். நாம் அகிம்சை பேசிக்கொண்டு கொன்று குவித்த கொலையாளிகளை கோர்ட்டில் நிறுத்தி கோடிக்கணக்கில் செலவு செய்து தண்டனை கொடுத்து உலகில் நம் “பெருமையை” நிலை நாட்டிக்கொள்வோம். பிறகு கண்டன அறிக்கைகள், “கடுமையான” அறிக்கைகளை அனுதினமும் விட்டுக்கொண்டிருப்போம். தமிழர்கள்/இந்தியர்கள் கேட்பாரற்று தினம் சாவார்கள். வாழ்க பாரதம்!

இதற்கு முன்பு வேறு சில பிரச்சினைகளுக்கு நடந்த போராட்டங்களில் மற்ற நடிகர்கள் மனோகரா பாணியில் வசனம் பேசி பிரச்சினைகளைப் பெரிதாக்கியதோடு சரி. கமல் அவற்றில் நிதானப் போக்கைக் கையாண்டு பேசியது அனைவரும் அறிந்ததே. இப்போது இந்த
“மாபெரும் தமிழுணர்வுப் போராட்டத்தையும்” அவருக்குயுரித்தான நிதானத்தோடு கையாண்டிருக்கிறார். அவர் வெளியிட்ட அறிக்கை கீழே!

"தமிழ் உணர்வாளர்களே...

மேற்சொன்ன விலாசம் தவிர வேறு பொறுப்புகளில் உள்ளோர் பெயர்கள் இல்லாததால்  கடிதம் ஒட்டுமொத்தமாக தமிழின உணர்வாளர்களுக்கு எழுதப்படுகிறது. அவ்விலாசம் எனக்கும் பொருந்தும் என்ற மயக்கமற்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

ஃபிக்கி என்ற அமைப்பு திரு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களால் துவங்கப்பட்டது. மனித நேயம் இந்த அமைப்பின் அடிப்படைத் தீர்மானங்களுள் இரண்டறக் கலந்ததாகும். 

உங்களைப் போன்ற உணர்வுள்ள நான், ஏற்கெனவே இலங்கை சென்று இந்த விழாவில் பங்கு கொள்வது நியாயமில்லை என்ற காரணத்தில் ஐஃபா நிகழ்ச்சியில் பங்குபெறச் செல்லவில்லை. உண்மையைச் சொன்னால், இதுவரை நடந்த ஐஃபாவின் எந்த நிகழ்ச்சியிலுமே நான் கலந்து கொண்டதில்லை. 

என் அலுவலகத்தின் முன்னாள் கூடிய ஒரு சிறு தமிழுணர்வாளர்கள்  கூட்டத்தில், சிலர் விண்ணப்ப வாக்கியங்கள் எழுதிய காகிதங்களை உயர்த்திப் பிடித்திருந்தனர். 

அவை நான் தென்னக FICCI தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்றும், இன்னொரு சுவரொட்டி, எனக்கு இந்நாடு வழங்கிய பத்மஸ்ரீ பட்டத்தை திரும்பத் தந்துவிட வேண்டும் என்றும் வலியுறுத்தின. 

தமிழ் உணர்வை மனதில் கொண்ட நான், FICCI தலைமை, FICCI entertainment தலைவர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யாரும் கொழும்பு விழாவில் பங்கேற்கக் கூடாது என அன்புக் கட்டளையிட, அவர்களும் இசைந்து IIFA விழாவுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளனர். இலங்கையில் நடக்கவிருக்கும் வர்த்தக் கூட்டமைப்பு விழாவுக்கும் இவர்கள் செல்லப்போவதில்லை என்றும் சொல்லியிருக்கின்றனர். 

மற்றபடி வியாபாரிகள் வர்த்தகம் செய்வது தொடர்ந்து நடந்து வருவதைத் தடுப்பது FICCI போன்ற சிறிய அமைப்புகள் கையில் இல்லை. உங்கள் கருத்துக்கள் என்னை வந்தடையும் முன்பாகவே (தற்காப்பு அல்ல) உணர்வின் உந்துதலால் இந்தப் பணியைச் செய்துள்ளேன். மற்றபடி என் நாடு எனக்களித்த கவுரவத்தைத் திருப்பித் தருவதால் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை என்று நம்புகிறேன்.

FICCI விமர்சனங்களை ஏற்று நடவடிக்கை எடுக்கும் மனப்பாங்குடையது. இம்மனித நேயம், மனப்பாங்கு, அதை நிறுவியவரிடம் FICCI கற்ற பாடம். தன் நிலையை உணர்த்தும் முதல் நடவடிக்கையாக FICCI தலைவர்கள் மனித நேயத்தோடு எடுத்திருக்கும் இம்முடிவு உங்களை மகிழ்விக்கும் என நம்புகிறேன்!" 


-கமல் ஹாஸன்






ஆக “போராட்டம்“ வெற்றியடைந்துவிட்டது. இனி இலங்கைத் தமிழர்களுக்கு எல்லாம் சுபமே! வாழ்க வளமுடன்!

***

Saturday, May 22, 2010

விக்கல் - சுஜாதாவின் கடைசிப் பக்கங்கள்!

செந்நிற அட்டையுடன் வந்திருக்கும் சுஜாதா கணையாழியில் 1965 லிருந்து 1998 வரை எழுதிய கடைசிப்பக்கங்களையடக்கிய தொகுதியை வாங்கி ஒரு வருடத்திற்கு மேலானாலும் கைக்குக் கிடைத்ததென்னவோ இரு வாரங்களுக்கு முன்பு.

சுஜாதா என்ற ஆளுமையின் எழுத்துலகப் பயணத்தின் மைற்கற்களை ஒரு சேர ஒரு புத்தகத்தில் பார்த்ததும் எழுந்த பெருந்திகைப்பு அடங்கவேயில்லை.

இதை வெளிக்கொண்டுவந்த மனுஷ்யபுத்திரனுக்கும் தொகுப்பதில் பெரும்பங்காற்றிய தேசிகன் மற்றும் அனைத்து மேன்மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

புத்தகத்தைப் படிக்கப்படிக்க பிரபஞ்சத்தின் கீழ் அனைத்தையும் தொட்ட எழுத்துச் சிற்பி மீது எழுந்த பிரமிப்பு அடங்க இன்னும் எத்தனை வருடங்களாகுமோ தெரியவில்லை. எழுத எழுத பண்படும் எழுத்து என்பார்கள். 80-களில் நான் படித்து பிரேமைகொண்ட அவரது வசீகர எழுத்து பாணியை அறுபதுகளிலேயே அவர் கையாண்டிருப்பது பெரிய ஆச்சரியம்- தலைமுறைகள் தாண்டிய அவரது எழுத்துகளின் ஆழம் - Consistency - சுஜாதாவின் மறைவு தமிழுக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை இன்னும் பெரிதாக இப்போது உணர முடிகிறது.

கடைசிப் பக்கங்களிலிருந்து சில பக்கங்களை பகிர்ந்துகொள்ள ஆசையாயிருப்பதால் இப்பதிவு (இன்னும் சில பதிவுகள்).

*****

“விக்கல்” - சுஜாதா

விக்கலுக்கு வைத்தியம் தெரியாதவர்கள் ஒருவருமே இல்லை என்று நினைக்கிறேன். போன வியாழக்கிழமை எனக்குப் பிடிவாதமாக விக்கல் எடுத்தது. அண்ணாசாமி வந்தார். “சௌக்கியமா?” என்றார். “க்” என்றேன். “விக்கிறதா? ஆர் யூ ஸெல்லிங்?” என்று இங்கிலீஷில் கேட்டார். “க்” என்றேன். “இதோ பார், நான் சொல்வதைச் செய். குனிந்து முதுகிலே ஒரு கிளாஸ் டம்ளரை பாலன்ஸ் பண்ணி 500 வரை அஞ்சு அஞ்சாக மூச்சு விடாமல் எண்ணு” என்றார். எண்ணினேன். 500 தாண்டியதும் “க்” என்றேன். அண்ணாசாமி யோசித்தார். “பிடிவாதமான விக்கல். ம்! கொஞ்ச நாழி சீட்டி அடித்துப் பார்” என்றார். சீட்டியடிக்கத் துவங்கினேன். “நிறுத்து, பயமாக இருக்கிறது. வேண்டாம். இப்படிப் பண்ணிப் பார். ஒரு கிளாஸ் பாலை வலது கையிலே வைத்துக்கொண்டு கழுத்தைச் சுற்றி இடது பக்கமாகக் கொண்டுவந்து சீப்பிப் பார்” என்றார். பார்த்தேன். “சேச்சே என்னப்பா கவனமாகச் செய்ய வேண்டாம்? பனியன் எல்லாம் பாலாக்கிவிட்டாயே! ...சே! சரி இப்படிச் செய். மாடிப் படியிலிருந்து உரக்கக் கத்திக்கொண்டே குதித்துக் குதித்துப் பத்து தடவை ஏறி இறங்கு” என்றார். மூன்றாம் தடவை இறங்கும்போது பக்கத்துவீட்டுக்காரர்கள் கும்பலாக வந்து என்ன என்ன என்று கவலையுடன் எட்டிப் பார்க்க அதை நிறுத்த வேண்டியதாகிவிட்டது. அண்ணாசாமி சொல்படி வாசல் புல்தரையில் சிலதடவை புரண்டு பார்த்தேன். (ஒவ்வொரு தடவையும் ஒரு கொத்துப் புல்லை வாயால் கவ்வ வேண்டும்). ம்ஹூம்! விக்கல் நிற்கவில்லை. மேலும் யோசித்தார்.


அண்ணாசாமி கையைச் சொடக்கினார்! “ஒரு ஷ்யூர் க்யூர். ஒரு காகிதப் பை கொண்டு வா” என்றார்.


கொண்டு வந்தேன்.


“மூஞ்சியை மறைத்துக்கொண்டு வெடிக்க ஊதுவதுபோல் ஊதி பைக்குள்ளேயே அஞ்சு நிமிஷம் சுவாசம் பண்ணி பைக்குள் இருக்கும் கார்பன் மானாக்ஸைட் ஜாஸ்தியாகப் போய் அது விக்கல் நரம்புகளைத் தளர்ச்சி பண்ணும்” என்றார்.


நான் அவ்வாறே மூஞ்சியைக் காகிதப் பையில் மறைத்துக்கொண்டு ஐந்து நிமிஷம் மேலும் கீழும் நடந்தேன். அண்ணாசாமி உடன் நடந்தார்.


பையை எடுத்தேன். தாமதித்துப் பார்த்தேன்.


என் விக்கல் போய்விட்டது. “போய் விட்டது சார், வந்தனம்” என்று சிரித்தேன்.


“சொன்னேனா அல்லவா? அப்ப நான் வரட்டுமா” என்று போகச் கிளம்பினார். பத்தடி போனதும் “ஹிகிக்” என்றார்.


***