Saturday, May 22, 2010

விக்கல் - சுஜாதாவின் கடைசிப் பக்கங்கள்!

செந்நிற அட்டையுடன் வந்திருக்கும் சுஜாதா கணையாழியில் 1965 லிருந்து 1998 வரை எழுதிய கடைசிப்பக்கங்களையடக்கிய தொகுதியை வாங்கி ஒரு வருடத்திற்கு மேலானாலும் கைக்குக் கிடைத்ததென்னவோ இரு வாரங்களுக்கு முன்பு.

சுஜாதா என்ற ஆளுமையின் எழுத்துலகப் பயணத்தின் மைற்கற்களை ஒரு சேர ஒரு புத்தகத்தில் பார்த்ததும் எழுந்த பெருந்திகைப்பு அடங்கவேயில்லை.

இதை வெளிக்கொண்டுவந்த மனுஷ்யபுத்திரனுக்கும் தொகுப்பதில் பெரும்பங்காற்றிய தேசிகன் மற்றும் அனைத்து மேன்மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

புத்தகத்தைப் படிக்கப்படிக்க பிரபஞ்சத்தின் கீழ் அனைத்தையும் தொட்ட எழுத்துச் சிற்பி மீது எழுந்த பிரமிப்பு அடங்க இன்னும் எத்தனை வருடங்களாகுமோ தெரியவில்லை. எழுத எழுத பண்படும் எழுத்து என்பார்கள். 80-களில் நான் படித்து பிரேமைகொண்ட அவரது வசீகர எழுத்து பாணியை அறுபதுகளிலேயே அவர் கையாண்டிருப்பது பெரிய ஆச்சரியம்- தலைமுறைகள் தாண்டிய அவரது எழுத்துகளின் ஆழம் - Consistency - சுஜாதாவின் மறைவு தமிழுக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை இன்னும் பெரிதாக இப்போது உணர முடிகிறது.

கடைசிப் பக்கங்களிலிருந்து சில பக்கங்களை பகிர்ந்துகொள்ள ஆசையாயிருப்பதால் இப்பதிவு (இன்னும் சில பதிவுகள்).

*****

“விக்கல்” - சுஜாதா

விக்கலுக்கு வைத்தியம் தெரியாதவர்கள் ஒருவருமே இல்லை என்று நினைக்கிறேன். போன வியாழக்கிழமை எனக்குப் பிடிவாதமாக விக்கல் எடுத்தது. அண்ணாசாமி வந்தார். “சௌக்கியமா?” என்றார். “க்” என்றேன். “விக்கிறதா? ஆர் யூ ஸெல்லிங்?” என்று இங்கிலீஷில் கேட்டார். “க்” என்றேன். “இதோ பார், நான் சொல்வதைச் செய். குனிந்து முதுகிலே ஒரு கிளாஸ் டம்ளரை பாலன்ஸ் பண்ணி 500 வரை அஞ்சு அஞ்சாக மூச்சு விடாமல் எண்ணு” என்றார். எண்ணினேன். 500 தாண்டியதும் “க்” என்றேன். அண்ணாசாமி யோசித்தார். “பிடிவாதமான விக்கல். ம்! கொஞ்ச நாழி சீட்டி அடித்துப் பார்” என்றார். சீட்டியடிக்கத் துவங்கினேன். “நிறுத்து, பயமாக இருக்கிறது. வேண்டாம். இப்படிப் பண்ணிப் பார். ஒரு கிளாஸ் பாலை வலது கையிலே வைத்துக்கொண்டு கழுத்தைச் சுற்றி இடது பக்கமாகக் கொண்டுவந்து சீப்பிப் பார்” என்றார். பார்த்தேன். “சேச்சே என்னப்பா கவனமாகச் செய்ய வேண்டாம்? பனியன் எல்லாம் பாலாக்கிவிட்டாயே! ...சே! சரி இப்படிச் செய். மாடிப் படியிலிருந்து உரக்கக் கத்திக்கொண்டே குதித்துக் குதித்துப் பத்து தடவை ஏறி இறங்கு” என்றார். மூன்றாம் தடவை இறங்கும்போது பக்கத்துவீட்டுக்காரர்கள் கும்பலாக வந்து என்ன என்ன என்று கவலையுடன் எட்டிப் பார்க்க அதை நிறுத்த வேண்டியதாகிவிட்டது. அண்ணாசாமி சொல்படி வாசல் புல்தரையில் சிலதடவை புரண்டு பார்த்தேன். (ஒவ்வொரு தடவையும் ஒரு கொத்துப் புல்லை வாயால் கவ்வ வேண்டும்). ம்ஹூம்! விக்கல் நிற்கவில்லை. மேலும் யோசித்தார்.


அண்ணாசாமி கையைச் சொடக்கினார்! “ஒரு ஷ்யூர் க்யூர். ஒரு காகிதப் பை கொண்டு வா” என்றார்.


கொண்டு வந்தேன்.


“மூஞ்சியை மறைத்துக்கொண்டு வெடிக்க ஊதுவதுபோல் ஊதி பைக்குள்ளேயே அஞ்சு நிமிஷம் சுவாசம் பண்ணி பைக்குள் இருக்கும் கார்பன் மானாக்ஸைட் ஜாஸ்தியாகப் போய் அது விக்கல் நரம்புகளைத் தளர்ச்சி பண்ணும்” என்றார்.


நான் அவ்வாறே மூஞ்சியைக் காகிதப் பையில் மறைத்துக்கொண்டு ஐந்து நிமிஷம் மேலும் கீழும் நடந்தேன். அண்ணாசாமி உடன் நடந்தார்.


பையை எடுத்தேன். தாமதித்துப் பார்த்தேன்.


என் விக்கல் போய்விட்டது. “போய் விட்டது சார், வந்தனம்” என்று சிரித்தேன்.


“சொன்னேனா அல்லவா? அப்ப நான் வரட்டுமா” என்று போகச் கிளம்பினார். பத்தடி போனதும் “ஹிகிக்” என்றார்.


***

No comments: