Thursday, May 27, 2010

வல்லான் வாழ்வான்


பரபரப்பான விஷயத்தை உடனே முந்திப் பதிவது என்ற வலைப்பதிவு ரேக்ளா ரேஸ் எனக்குக் கொஞ்சமும் ஒவ்வாதது. அதனாலேயே இந்தப் பதிவு தேவையா என்று பலமுறை யோசித்துத் தயங்கி பின் இப்போது எழுதுகிறேன்.  இதை எழுதியிருக்க வேண்டாமோ என்று பின்னொரு நாளில் தோன்றலாம்.

தமிழ்நாட்டில் எல்லைச்சாமி, முனியாண்டி கோவில் இல்லாத கிராமமே கிட்டத்தட்ட கிடையாது எனலாம். மூத்தார், நீத்தாரைக் கடவுளாகக் கருதி வணங்கிய பண்பும், கண்ணியமும் நிரம்பியிருந்த ஒரு சமூகம் இன்றிருக்கும் நிலையை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதன் வெளிப்பாடே இப்பதிவு.

மும்பை தீவிரவாத தாக்குதலைப் போல லைவ் ரிலேவாகக் காட்டவில்லை - முடிந்தால் கட்டாயம் செய்திருப்பார்கள் - அது ஒன்றுதான் குறை - நமது ஒளியூடகங்களின் பொறுப்பற்ற தன்மையின் சிகரமாக நித்தியானந்தா, ரஞ்சிதா ஆகியோரின் - அவரோட ராவுகள் வீடியோ - இந்தியா சுதந்திரம் அடைந்ததைப் போன்ற முக்கிய நிகழ்வாக அரை மணிக்கொருதரம் போட்டுத் தாக்கினார்கள்.

முதலில் சன்டிவியில் அரைமணிக்கொருதரம் என்று தொடர்ச்சியாகப் காட்டுகிறார்கள் என்று செய்தி கேள்விபட்டபோது - ஒரு வேளை இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்ட செய்தியோ இல்லை “ஐயா கொல்றாங்களே” செய்தியோ என்றுதான் நினைத்தேன். ரெண்டுமே இல்லையாம். பணம் சேர்ப்பதற்காக நீண்டநாட்களாக சலூனுக்குப் போகாமலிருக்கும் ஜடாமுடிதாரி இளைஞனும் ஒரு யுவதியும் படுக்கையிலிருப்பதை ஒரு ஒழுக்கமான, நேர்மையான, சதாசர்வகாலமும் இவ்வுலகத்தை உய்விக்கும் வழியைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும் ஆத்மா படம்பிடித்து சன் டிவிக்கு அனுப்பியிருக்கிறார்கள் போல. மிட்நைட் மசாலாவைவிட நல்லாருக்கே என்று பொழுதன்றைக்கும் போட்டுத் தாக்கியிருக்கிறார்கள். ஆனால் அதை ”மானாட மயிலாட” போன்று ஏதோ ஒரு நிகழ்ச்சிபோல என்று கலைஞர் தனது குடும்பத்தினருடனும் பேரக்குழந்தைகளுடனும் பார்த்துத் தொலைத்ததை அறிந்திருக்க மாட்டார்கள். கலைஞர் என்ன - தமிழ்நாடே பார்த்தது - இணையம் தயவில் உலகமே பார்த்தது. அந்நேரத்தில் வீட்டிலில்லாத, அல்லது சன்டிவி கனெக்ஷன் இல்லாத என் போன்ற ஆசாமிகள் யூட்யூபில் தேடி என்ன விஷயம் என்று தெரிந்து கொண்டோம். பேரக்குழந்தைகளோடு இதைப் பார்த்துவிட்டோமே என்று சங்கடம் தாங்காமல் “ஊடகங்கள் இம்மாதிரி விஷயங்களை ஒளிபரப்பாது பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்” என்று அறிக்கை மூலம் கலைஞர் அறிவுறுத்தியதும் - வழக்கமாக ஒரு வாரமாவது இதை அச்சு, ஒளி ஊடகங்களின் மூலம் பரபரப்பி மகிழும் சன் டிவி, தினகரன், தமிழ்முரசு மறுநாளே எல்லாவற்றையும் மூட்டைகட்டி - பலவருடக் குப்பை பெருக்கித் தள்ளிவிடப்பட்ட அறை மாதிரி தோற்றமளித்தன! கலைஞரின் அந்த அறிக்கை பாராட்டத்தக்கது. ஆனால் இப்படி செலக்டிவ்வாக அறிக்கைவிடுவதுதான் (வழக்கம்போலச்) சகித்துக்கொள்ள முடியவில்லை.

சரி - ஒரு வழியாய் அலை ஓய்ந்ததா என்று பார்த்தால் கலைஞர் சொன்னதற்காக இரண்டு நாட்கள் சும்மா இருந்துவிட்டு மறுபடியும் ரஞ்சிதாவைத் தேட ஆரம்பித்துவிட்டார்கள். வியாபாரம் நடக்க வேண்டுமே! ஒரு வாரமாக புல்லரிக்கச் செய்யும் செய்திகள் மயிர்கூச்செறியும் காட்சிகள் என்று இடைவிடாது பார்த்தால் என்ன ஆகும்? உடம்பும் மனதும் அரிக்கிறது! செருப்பாலடிக்கும் நிகழ்ச்சிகள், கொடும்பாவி எரிப்பு, திவசம், ஆசிரமம் நொறுக்குதல் என்று தொடர்ச்சியாக வரும் செய்திகளைப் பார்க்கும்போது நம்மூரில் இத்தனை பரமாத்களா என்று பெருமையில் நெஞ்சம் விம்முகிறது. அடஅடஅட! ஆனாலும் நம்மாட்கள் தீமை கண்டு பொங்கியெழுவதைப் பார்த்தால் அட நம்மூருக்குத் திரும்பிரலாம் போலருக்கே என்று தோன்றியதை மறுக்கவே முடியாது. Fashion TV-யைத் தடைசெய்யக் கொடிபிடித்த தமிழர்கள் இப்படி புணர்ச்சி வீடியோக்களை செய்திகளின் ஊடே குடும்பத்தோடு பார்க்குமளவிற்கு நாகரீகத்தின் உச்சியிலிருக்கிறார்களே என்று அதிசயமாக இருந்தது. தமிழ் நாட்டில் ஒரே நாளில் இத்தனை காட்சிகள் எந்தப் படமும் ஓடியிருக்காது!

பகுத்தறிவு நாமத்தைச் சார்த்திக்கொள்ளும் பக்த கோடிகள் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணாமல் வாயிலிருந்து லிங்கம் எடுப்பவர்களையும், ”நானே கடவுள்” என்ற பிராண்டில் பன்னாட்டு பிரம்மாண்ட பக்தி நிறுவனங்களை ஆயிரக்கணக்கில் உலகெங்கும் கிளைகளை ஏற்படுத்தி நடத்தி யூரோக்களும், டாலர்களும், ரூபாய்களுமாகக் கோடிகளில் புரளும் கபடவேடநாடகதாரி (உபயம் : மௌலி இன் அபூர்வ சகோதரர்கள்)களின் பின்னால் சென்று விழுந்து அங்கப் பிரதட்சணமும் ஆலிங்கனமும் செய்துவிட்டு - இப்போது தணிக்கை செய்யப்படாத படுக்கையறைக் காட்சியில் அவர்களது கடவுளைப் பார்த்து வயிறெரிந்துக் காரித்துப்பித் தூற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது. இந்த உத்தம சிகாமணிகளுக்கு எவ்வளவு பட்டாலும் புத்தி வரவே வராதா? அது எப்படி இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், நாயர், நாட்டுக்கோட்டைச் செட்டியார், ஐயர், திராவிடன் என்று வித்தியாசமே இல்லாமல் மகா ஒற்றுமையாக ஏமாறுகிறார்கள் என்று புரியவேயில்லை.

மறுபடி சன் டிவிக்கு வருவோம். என்னே சமூக சிந்தனை! என்னே நாட்டுப் பற்று! எனக்குப் புல்லரிக்கிறது! அந்த ரெண்டு ஆசாமிகளும் மனமொத்து ஆலிங்கனம் செய்ததைத் திருட்டுத் தனமாக படம் எடுத்ததை சாட்டிலைட்டுகளின் மூலமாக வரவேற்பறைக்கு அரைமணிக்கூருக்கொருதரம் போட்டுக் காட்டிய சேவைக்கு ஒரு பெயர் இருக்கிறது - மீடியா வெளிச்சம் என்று இங்கிலீஷில் - தமிழில் “விளக்குப் பிடித்தல்” என்று ஒரு வழக்கு இருக்கிறது. கலாநிதி மாறனிடம் நான் கேட்க நினைத்தது - நீங்கள் சன் டிவி பார்ப்பதுண்டா? உங்கள் மனைவி குழந்தைகள் பார்ப்பதுண்டா? துண்டென்றால் இதைக் குடும்பத்தோடு உங்கள் வீட்டில் உட்கார்ந்து பார்த்தீர்களா? இல்லையென்றால் உங்களுக்கு யூட்யூப் லிங்க் அனுப்பட்டா? இல்லாவிட்டால் உங்கள் சொத்திலிருந்து சிலநூறு ரூபாய்களைக் கொடுத்தீர்களென்றால் நக்கீரனுக்கு சந்தா கட்டி அவர்கள் முழு வீடியோவும் காட்டுகிறார்களாம் - அந்த லிங்க்கை உங்களுக்கு அனுப்பலாமா?

Mr. Nithyanandam, CEO of ஞானபீடம், ஸாரி, தியானபீடம் அநேகமாக சன்டிவியை கோர்ட்டுக்கு இழுக்கலாம். தமிழ்நாட்டில் இழுக்க முடியாது - ஆனால் கர்நாடகத்திற்கு வழக்கை மாற்றிவிட்டார்களே! எப்படியும் சில வருடங்கள் ஓடி பேரங்கள் படிந்து மக்கள் வழக்கம்போல இலவச டிவியில் மெட்டி ஒலியிலோ அல்லது தட்டு ஒலியிலோ மூழ்கி விடுவார்கள். போலீஸார் நித்யானந்தத்தையும் ரஞ்சிதாவையும் தேடுகிறார்கள் என்று செய்தி படித்தேன் - எதற்காம்? அமைதிப் பூங்காவான தமிழகத்தில் அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததற்கா? இல்லை பச்சிளம் பாலகர்கள் மனதில் பாலுணர்வைத் தூண்டிவிட்டதற்கா? அட ராமா.. அவர்கள் சன் டிவியை நடத்தவில்லை என்பதை யாராவது சொல்லக்கூடாதா?

ஏழே ஆண்டுகளோ என்னவோ - இப்படி உலகச் சந்தையில் பெரிய துண்டு போட்டு இடம் பிடித்திருக்கும் Dhyanapeetam கம்பெனியை உருவாக்கிய நித்தியானந்தத்தைப் பார்த்து நூற்றாண்டுகள் கண்டும் இந்தியச் சந்தையில் இன்னும் பாயைப் பிராண்டிக் கொண்டிருக்கும் பெப்ஸி, கோக் நிறுவனங்கள் பிச்சை வாங்கவேண்டும் என்பதை ஒத்துக்கொண்டேயாக வேண்டும். .

இந்த தேசம் படும் பாடு கேவலமாக இருக்கிறது.  எடுப்பார் கைப்பிள்ளை என்றுகூட சொல்ல முடியாது - கைப்பிள்ளை எவ்வளவோ பரவாயில்லை - இது வேறு ரகம் - என்ன ரகம் என்று எழுத நான் என்ன நக்கீரன் இணைய தளமா? அல்லது சன் டிவி நடத்துகிறேனா? 

தெருவில் கண்கட்டி வித்தை காட்டுபர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களது பிள்ளை குட்டிகளே கயிற்றில் நடக்கும், சவுக்கால் அடித்துக்கொள்ளும். ரத்தம்கக்கிச் சாகாமலிருப்பதற்காக கால்களைச் சேர்த்துவைத்துக்கொண்டு நின்று மொத்த நிகழ்ச்சியையும் அசையாது பார்த்ததுண்டு. குடுகுடுப்பைக் காரனின் ஒலி கேட்டால் வாசல்கதவை மூடி வைத்துக்கொண்டு திக்திக்கென்ற நெஞ்சத்துடன் அவன் கடந்து போகும் வரை சத்தமில்லாமல் ஒளிந்து நின்றதுண்டு. இம்மாதிரி வித்தைக்காரர்கள் கற்ற வித்தையோடு இந்து மதம், யோகா என்று சரிவிகிதத்தில் கலந்து லாகிரி வஸ்துவாகத் தர அதைத் தின்றுவிட்டு போதையில் அவர்கள் பின்னால் “கடவுளே” எனத் துதிக்கிறது பெருங்கூட்டம். அதோடு இப்போது நடிகையை வேறு பார்த்துவிட்டார்களா? ஆஹா... சாமியாருக்கு மச்சம்டா என்று நினைக்காதவர்கள் எத்தனை பேர். பிரேமானந்தாவிலிருந்து பல ஆனந்தாக்களைப் பார்த்து நாமும் ஏதாவதொரு ஆனந்தாவாகிவிட்டு ஆனந்தமாக இருக்கலாம் என்று எண்ணியவர்கள் நித்தியானந்தாவைப் பார்த்து முடிவே செய்திருப்பார்கள்! வழக்கம்போல எரியும் வீட்டில் பிடுங்கியவரை லாபம் - என்று நாட்டில் எந்தப் பிரச்சினை வந்தாலும் அந்தத் தீயில் குளிர்காய நினைக்கும் - பாதிக்கப்பட்டவர்கள் என்ற போர்வையில் வரும் சமூக விரோத கூட்டம் - இப்பிரச்சினையிலும் ஆஜராகி ஆசிரமத்தை நொறுக்குவது, உடைப்பது என்ற சமூக நற்பணிகளில் ஈடுபட, எங்கு நோக்கினும் எதிர்ப்பு குரல்கள்!

மதம் என்னும் காவிப் போர்வையைப் போர்த்திக்கொண்டு திரியும் நித்தியானந்தா மாதிரி ஆசாமிகளைக் கடவுள் போலப் பாவித்து அவர்கள் பின்னால் ஆட்டுமந்தைக் கூட்டமாகச் சென்று பணத்தை வாரியிறைத்து “அருள்” தேட நினைத்த பக்தர்கள் இனி என்ன செய்வது என்று முடிவு செய்ய வேண்டும். ஒரு வேளை இந்த விடியோவைப் பார்த்த பின்பு ஆசிரமத்துல நடிகைங்களை ஈஸியாப் பார்க்கலாம் போலருக்கே என்று கூட்டம் இன்னும் கூடலாம். 

சரி. சொல்லவந்ததை... அய்யய்யோ என்ன சொல்ல வந்தேன் என்று மறந்து போச்சே!!! தொலையட்டும். பரபரப்புச் செய்திகள் பதினைந்து நாட்களுக்கு மேல் தாங்காது. இதுவும் தாங்காது. 

காளஹஸ்தி கோபுரம் இடிந்து விழுந்திருக்கிறது. இது இடிந்து விழுந்திருக்கும் ஒரு சமூகத்தின் குறியீடே. மதம், இறை போன்ற விஷயங்களுக்குள் போகாது பார்த்தால் ஐநூறு வருடம் பழமையான ஒரு புராதான, வரலாற்றுச் சின்னத்தை நாம் பேணி காக்கும் லட்சணம் இதுதான். பகுத்தறிவு என்ற பெயரில் வரலாற்றை மறைப்பதும், புராதானங்களைக் கேட்பாரற்று, மரியாதையற்று நட்டாற்றில் விடுவதும் நம்மூரில் மட்டுமே நடக்கும். வௌவால்கள்கூட வாழமுடியாத நிலையில் அருங்காட்சியகங்கள்.  பழமையான சின்னங்களில் சமூக விரோதச் செயல்கள். இவற்றின் அருமை பெருமை என்று எதைப்பற்றியும் அறிந்துகொள்ளாத, ஊடகப்பால் ஊட்டி வளர்க்கப்படும், கவைக்குதவாத ஏட்டுச் சுரைக்காய்களைப் படித்து வளரும், எதையும் பணம்கொடுத்துச் சாதித்துக்கொள்ளலாம் என்ற கலாசாரத்தில் ஊறிய, குற்றவுணர்வே எழாத மக்கள்.

பரம ஏழை நாடுகளில்கூட அவர்களது வரலாற்றுச் சின்னங்கள் மீது அபரிமிதமான மரியாதை கொண்டு பூப்போலப் பார்த்துக்கொள்கிறார்கள. இங்கு பணம் குவிக்க மட்டுமே அதைப் பயன்படுத்திக்கொண்டு இப்படி அம்போவென இடிந்துபோக விடுகிறோம். இதுமாதிரி கேட்பாரற்று சிதிலமடைந்திருக்கும் சின்னங்கள் எத்தனை ஆயிரங்கள்? லட்சங்கள்? கடவுளாலேயே இவற்றைக் காப்பாற்ற முடியாது. ஆட்சியாளர்கள் இலவச டிவியில் மக்களை மூழ்கடித்து ஓட்டு வாங்குதில் பிஸியாக இருக்கிறார்கள். அவர்களது நிறுவனங்கள் அந்தரங்கக் காட்சிகளை உலகெங்கும் ஒளிபரப்புவதில் மூழ்கியிருக்கிறார்கள்.


காசிருப்பவர்கள் என்னமும் செய்யலாம். கேட்பாரற்ற சாமான்யர்கள் கேட்பாரற்றவர்களாகவே இருப்பார்கள். வல்லான் வாழ்வான் - இதுதான் இன்றைய நியதி.  ஒரு பெரும் சுழலில் சிக்குண்டுச் சின்னாபின்னமாகிறது சமூகம். கடவுள் காப்பாற்றட்டும்.



***

No comments: