Thursday, September 22, 2011

Black or White

Black or White
உச்ச நீதிமன்றம் மனுக்களை நிராகரித்த நிலையில் நேற்று இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கட்டக்கடைசி நொடியில் அமெரிக்கா மட்டுமல்லாது உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் எழுந்த எதிர்ப்புக்குரல்களையும் மீறி, கருணை மனுக்களையும், தடைஉத்தரவு கோரிய விண்ணப்பங்களெல்லாம் நிராகரிக்கப்பட்டு ட்ராய் டேவிஸ் என்ற ஆஃப்ரிக்க அமெரிக்கர் விஷஊசி செலுத்தப்பட்டு கொல்லப்பட்டது ஜார்ஜியா மாகாணத்தில்.

தென்னக மாநிலமான டெக்ஸஸில் வெள்ளையின நிறவெறிக் கும்பலின் உறுப்பினரான லாரன்ஸ் ரஸ்ஸல் ப்ரூவர் என்பவருக்குக் கருப்பரான ஜேம்ஸ் ஜூனியரைக் கொன்ற குற்றத்திற்காக நேற்றிரவு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஜேம்ஸை சரக்கு வாகனம் ஒன்றின் பின்புறம் சங்கிலியால் பிணைத்துத் தரதரவென கரடுமுரடான சாலையில் இழுத்துச்சென்று வாகனத்தை ஓட்டிக் கொன்றார் ரஸ்ஸல் என்பது குற்றம். டெக்ஸஸின் சமீப கால வரலாற்றில் மக்களை அதிரவைத்த நிறவெறித் தாக்குதல் சம்பவம் அது. விஷ ஊசி ஏற்றப்படுவதற்கு முன்பு கடைசியாக எதாவது சொல்ல விரும்புகிறாரா என்று கேட்கப்பட்டதற்கு “சொல்வதற்கு என்னிடம் எதுவுமில்லை” என்று சொல்லி ஆழ்ந்த பெருமூச்சுகளை உள்ளிழுத்து தூரத்தே ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்த பெற்றோரைப் பார்த்துவிட்டு கண்களை மூடிக்கொண்டாராம். வலது விழியோரம் லேசாகக் கண்ணீர் ததும்ப, ஊசி ஏற்றப்பட்டு பத்தாவது நிமிடத்தில் அவர் உயிர் பிரிந்தது.

 ஜேம்ஸ் கொல்லப்பட்ட தினம் ஜூன் 7, 1998. ஹூஸ்டன் நகரத்திலிருந்து நூற்றிருபத்தைந்து மைல் தூரத்திலிருக்கும் ஜாஸ்பர் என்ற குறுநகரத்தில் வசித்தவர். வேலை செய்யும் திறனிழந்தவர்களுக்கான அரசு வழங்கும் Disability கருணைத் தொகையில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தவர். சொந்தமாக வாகனம் எதுவும் இல்லாது எங்கு சென்றாலும் நடந்தே செல்லும் பழக்கத்தையுடையவர். அதிகாலை இரண்டு மணியளவில் சாலையோரமாக நடந்துகொண்டிருப்பதைச் சிலர் பார்த்திருக்கிறார்கள். சிறிது நேரம் கழித்து சரக்கு வாகனத்தின் பின் பக்கம் அவர் பயணித்ததைப் பார்த்திருக்கிறார்கள். அதற்கு ஆறுமணி நேரம் கழித்து சாலையில் அரைபட்ட சதைப்பிண்டக் குவியலைப் பார்த்தவர்கள் வழக்கமாக நெடுஞ்சாலையில் அடிபட்டுக் கிடக்கும் ஏதோவொரு பிராணி என்று நினைத்திருக்கிறார்கள். பின்பு மனித உடல் பாகங்களும் சிதறிக்கிடந்ததைப் பார்த்து அதிர்ந்து காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்துப் பார்க்க கைகலப்பு நடந்த தடயங்களும், கைரேகைகளும், ரத்தம் படிந்த கால் தடங்களும் கண்டுபிடிக்கப்பட்டு விரைவாக விசாரணை, ஆய்வகப் பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டு குற்றவாளிகளாக மூன்று பேரைப் பிடித்து வழக்கு நடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டு மூவரில் ஒருவரான ரஸ்ஸலுக்கு நேற்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது. இரண்டாவதாக ஜான் வில்லியம் கிங் என்பர் மரண தண்டனை நிறைவேற்றப்படக் காத்திருக்கிறார். மூன்றாமவரான ஷான் பெர்ரிக்கு ஆயுள்தண்டனை விதித்திருக்கிறாரகள் ரஸ்ஸலுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்புக் குரல்களோ ஆர்ப்பாட்டங்களோ அவ்வளவாக எழவில்லை. அமெரிக்காவில் நிறவெறி என்பது நீறுபூத்த நெருப்பாக இருக்கும் விஷயம். நம்மூர் சாதிவெறி மாதிரி. 

ட்ராய் டேவிஸ் விஷயம் சற்று குழப்பமானது. 1989-இல் துரிதஉணவகம் ஒன்றின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மார்க் மெக்ஃபெய்ல் என்ற போலீஸ் அதிகாரியைச் சுட்டுக் கொன்றதாக டேவிஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் கொலைக்கு உபயோகிக்கப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப் படவில்லை. நேரடி சாட்சியங்கள் பலர் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டுவிட்டார்கள். கடைசி நேர தடையுத்தரவுகளால் இரண்டு முறையாவது கடந்தாண்டுகளில் அவர் மரணத்திலிருந்து தப்பித்திருக்கிறார். ஆணித்தரமான சாட்சியங்கள் இல்லை என்று அவர் சார்பாக வழக்கறிஞரக்ள் எவ்வளவோ வாதாடியும் கீழ், மேல்கோர்ட்டுகள் எல்லாம் தண்டனையை உறுதிசெய்துவிட, கடைசியில் உச்ச நீதி மன்றத்திற்குப் போயும் பிரயோஜனமில்லாது போயிற்று. 

ஊசியேற்றுமுன்பு டேவிஸ் சொன்னது “சம்பவம் நடந்த அன்று நான் துப்பாக்கி எதுவும் வைத்திருக்கவில்லை. மார்க்கை நான் சுடவில்லை”. பார்வையாளர்களாக வந்திருந்த அவரது சகோதரரிடமும் மகனிடமும் ”இந்த இரவு இங்கேயே இருந்து நடப்பதைப் பாருங்கள். தொடர்ந்து இந்த வழக்கை ஆழமாக விசாரித்து உண்மையை வெளிக்கொணரக் கோருங்கள்” என்றார் டேவிஸ். பின்பு தனக்கு தண்டனை நிறைவேற்ற நின்றிருந்த அதிகாரிகளைப் பார்த்துச் சொன்னது ”கடவுள் உங்களிடம் கருணை காட்டட்டும்”. சரியாக இரவு 10:54 மணிக்கு ஊசியேற்றி 11:08 மணிக்கு டேவிஸின் உயிர் பிரிந்தது. 

அதற்குச் சில மணிநேரம் முன்பாக சிறைக்கு வெளியே திரண்டிருந்த பெருங்கூட்டம் தொடர்ச்சியாக மரணதண்டனையை எதிர்த்துக் கோஷமிட்டுக்கொண்டிருந்தது. அட்லாண்ட்டா, வாஷிங்ட்டன் டிஸியின் வெள்ளை மாளிகை முன்பு என்று அமெரிக்காவின் பல நகரங்களிலும் போராட்டம் நடந்து. அது தவிர பிரான்ஸ் போன்ற தேசங்களிலும் நூற்றுக் கணக்கில் கூட்டம் கூடி "I am Troy Davis" என்று எழுதிய அட்டைகளை ஏந்தி மக்கள் போராட, மரண தண்டனையை ரத்து செய்யக் கோரிய விண்ணப்பங்களில் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் போன்ற பிரபலங்கள் உள்ளிட்ட பத்து லட்சம் பேருக்கு மேலாகக் கையெழுத்திட்டிருந்தார்கள். ஃபேஸ்புக் ட்விட்டர் வலைப்பதிவுகள் வலைத்தளங்கள் என்று அனைத்து சமூகவலைத் தளங்களிலும் எல்லாரும் எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள். அன்று காலையில் கூட “உண்மையறியும் சோதனை”க்கு தன்னை உட்படுத்தக் கோரிய டேவிஸின் மனுவும் நிராகரிக்கப்பட்டது. தடைகோரிய கடைசி நேர வழக்கால் தண்டனை நான்கு மணி நேரம் தாமதமானது. அதை உச்ச நீதி மன்றம் நிராகரித்த நிலையில் இரவில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அத்தகவல் சிறைக்கு வெளியே கசிய குழுமியிருந்த நூற்றுக்கணக்கானவரிடம் கனத்த அமைதி. இரவு கரைய திரண்டிருந்த கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து போனது. நிரபராதி தண்டிக்கப் பட்டிருக்கிறார் என்று பரவலாக அபிப்ராயம் நிலவ, இன்று காலையிலிருந்து ஊடகங்கள் இவ்விஷயங்களைக் கையிலெடுத்துக்கொண்டு இன்னும் இரண்டு வாரங்களுக்காவது பரபரப்பாக்குவார்கள்.

ஆக இரண்டு உயிர்கள் போயிருக்கின்றன. ஒன்றுக்கு வருத்தம் எழுகிறது. இன்னொன்றுக்கு இல்லை.

சாகும் நாள் தெரிந்தால் நிம்மதியாக வாழ முடியாது என்பார்கள். சரி தவறு என்பதையெல்லாம் புறக்கணித்துவிட்டுப் பார்க்கும்போது தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னதான சில மணித்துளிகளில் அம்மனிதர்களின் மனங்களில் எம்மாதிரியான எண்ண அலைகள் ஓடியிருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். கடைசி நொடியில் “யுவர் ஆனர்” யாராவது ஊசியைக் கீழே போடுங்கள் என்று சொல்லி “நிறுத்துங்கள்” என்று குரல் கேட்குமோ என்று நினைத்திருப்பார்களோ என்று தோன்றியது. கொடுங்கோலனாகச் சித்தரிக்கப்பட்ட சதாம் உசேன் நீண்ட தாடியுடன் உணர்வுகளற்ற முகத்துடன் கைகளில் விலங்குடன் முகம் மூடப்பட்டுக் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டப்பட்ட காட்சிகள் மனக்கண்ணில் நிழலாடின.

சர்வாதிகாரிகள், கொடுங்கோலர்கள், கொடூரக் குற்றவாளிகள், குற்றம் சாட்டப்பட்ட நிரபராதிகள் என்று எல்லாவித மனிதர்களும் மரண தண்டனைக்கு ஆட்படும்போது கடைசி நொடிகளில் எல்லாவற்றாலும் கைவிடப்பட்ட நிலையில் அவர்கள் கண்களில் தெரிவதென்ன - வாழும் ஆசையா?

மரணதண்டனையை எதிர்த்து உலகம் முழுவதும் குரல்கள் எழும்பிக்கொண்டுதான் இருக்கின்றன. எனக்கு அதில் தீர்மானமான கருத்து என்று இல்லை. இதைப்பற்றி எனக்குள் எழும் ஏராளமான கேள்விகள் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. உயிரைத் தருவதும் உயிரைப் பறிப்பதும் எல்லாம் வல்ல பரம்பொருளே என்று தத்துவமாகவும் யோசிக்க இயலவில்லை. இதிலெல்லாம் நடுநிலையாகக் கருத்துசொல்ல கடவுளாக இருக்க வேண்டும் போல. எனக்கு உணர்வுகள் நிரம்பிய மனிதனாக இருப்பதே சௌகர்யமாக இருக்கிறது.

 ***

Monday, August 15, 2011

சுதந்திரம்

புதுக்கவிதை என்று வாக்கியங்களை உடைத்துப் போட்டு எழுதும் படிக்கட்டு கவிதை எழுதுவதில் ஒரு வசதி. யாப்பிலக்கணம் போன்ற கஷாயங்கள் எதையும் குடிக்காமல் தமிழ்ப்புதுக்கவிதை அகராதியில் கிடைக்கும் மேகம், இதயம், உள்ளம், உயிர், ஆத்மா, காதல், கண்ணீர், விழிகள், ரோஜா, பூக்கள், புஷ்பம் (ரெண்டும் வேற வேற), மென்மையானவள், ஓருடல், நோக்கினாள், பிரிவு போன்ற பத்து நூறு வார்த்தைகளைக் குலுக்கிப் போட்டு பள்ளி கல்லூரி முதல் வேலை அலுவலகம் என்று எதிலாவது காதலிக்க இயலாது போன யாராவது ஒரு பெண்ணை எண்ணி மாய்ந்து மாய்ந்து அரைப் பாரா ஒன்றை எழுதி, உடைத்துப் போட்டு நாலைந்து தடவை சொல்லிப் பார்த்தால் (மனசுக்குள்) நன்றாக இருப்பது போல் தோன்றினால் போதும். புதுக்கவிதை ரெடி. கூகுளில் Tags கொண்டு தேடினால் எவனாவது புகைப்படம் போட்டுவைத்திருப்பான். அதையும் கவிதைத் தலைப்பில் வைத்துவிட்டால் மதி! எழுதி போஸ்ட் செய்ததும் லேசாகப் புல்லரித்து பிடரியில் கிறுகிறுஎன்று இருக்கும். இடுகை இட்ட அடுத்த ஒரு மணித்தியாலத்தில் அக்கவிதையை நானே நாற்பது முறை படித்துப்பார்த்துக்கொண்டு ஆஹாவும் சொல்லிக்கொள்ளத் தோன்றும். அந்த வார்த்தைப் படிகளுக்குள் எனக்கு மட்டும் புலப்பட்ட சிறப்பான கவித்துவ வெளிப்பாடு படிப்பவர்களுக்கு அம்புட வேண்டுமே என்று கவலையாக இருக்கும். இருந்தாலும் கவிதைக்குப் பொருள்விளக்கம் சொல்வது கவிஞனுக்கு இழுக்கல்லவா? கவித்திமிர் கர்வம் தெறிக்க கொஞ்ச நேரம் இருந்துவிட்டு எவனாவது கமெண்ட் போடுகிறானா என்று வழிமேல் விழிவைத்துக்காத்திருந்து பார்த்துவிட்டு இன்னும் நாலைந்து முறை திரும்பக் கவிதையைப் படித்துவிட்டு பெருமூச்செறியும் புதுக்கவிஞனின் வாழ்க்கை புதினமானது (கவித்தும்ங்க).

காதல் வறண்டு போன தினங்களில் அரசு விடுமுறை தினங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏதாவது ஒரு கவிதை எழுதத் தோன்றும். தமிழ்ப்புத்தாண்டன்று (ஜனவரியிலும் ஏப்ரலிலும்) ரெண்டு கவிதை. தீபாவளியையும் Global Warming கையும் புத்தாடை வாங்கமுடியா ஏழ்மையைப் பற்றியும், பால்ய தீபாவளி நினைவுகள் பற்றியும் நாலைந்து தீபாவளிக்குக் கவிதைகள். வேறு ஏதுவும் தோன்றா சமயத்தில் போன தீபாவளிக்குப் போட்ட கவிதையை மறு வெளியீடு (எவன் படிச்சிருக்கப் போறான்? அப்படியே படிச்சிருந்தாலும் எவனுக்கு ஞாபகம் இருக்கும்?).

திடீரென்று பார்த்தால் ஆகஸ்ட் 15 வந்துவிடும். அடடா... வீட்டு நினைவுகள். Swades போன்ற படங்கள். ரோஜாவில் வரும் தமிழா தமிழா பாடல். அல்லது ஏஆர்ரஹ்மானின் வந்தேஏஏஏஏஏ மாதறம்ம்ம்! எல்லாவற்றையும் யூட்யூபில் பத்து தடவை பார்த்துவிட்டு அரசியல்வாதிகள், ஊழல்கள், “இருட்டில் வாங்கினோம் இன்னும் விடியவே இல்லை” எல்லாம் நினைவுக்கு வந்து தேசபக்தி கொழுந்து விட்டு எரிய தோள்கள் தினவெடுக்க, நெஞ்சம் விம்ம netflix-இல் new arrivals எதையாவது பார்த்துவிட்டு புதுக்கவிதை எதுவும் தோன்றாமல் தமிழ்நாட்டு மழை போல கவிதையூற்று சுத்தமாக வறண்டிருந்தாலும் எழுதாமலிருந்தால் இணையத்தில் மறந்து விடுவார்களே என்பதால் சத்யத்திற்கு

என் இனிய தாயகத்திற்கு இன்றைக்கு
இனிய சுதந்திர நல்வாழ்த்துகள்
சொல்லும் அதே நேரத்தில்
எல்லைக்கப்பாலிருக்கும்
முன்னாள் சகோதர உறவுகளுக்கு
நேற்றைக்கான தாமத
இனிய சுதந்திர நல்வாழ்த்துகள்

என்று ஒரு மொக்கை புதுக்கவிதை எழுதி...Twitter, FaceBook இன்ன பிற இணைய இத்தியாதிகளில் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு உறங்கச் செல்லும் பண்டிகைப் புதுக்கவிஞர்கள் உள்ளிட்ட அனைத்து நல்லிதயங்களுக்கும்

இனிய சுதந்திர நல்வாழ்த்துகள்!

***

Tuesday, July 26, 2011

சொர்க்க வாசல்



வற்றாயிருப்பு வீட்டு எதிரே பெருமாள் கோவில் சொர்க்கவாசல். கோவில் தெருவைப் பிளந்து கிழக்கு பார்த்து இருக்கும். கோவில் முன்பு நன்னீர் கிணறும் பின்பக்கம் ஒரு தண்ணீர்க்குழாயும் இருக்கும். நான்கு தெருப்பெண்களும் அவரவர் குடங்கள், வாளிகள் கொண்டு வந்து நீர் இறைப்பார்கள். பிடிப்பார்கள். காலையில் முதலாளாகப் போய் நீர் இறைத்தால் வறண்ட கயிறு உராய்ந்து உள்ளங்கை எரியும். சற்று கழித்துப் போனால் நீரில் நனைந்து மிருதுவாகி இறைப்பது சுலபமென்பதால் தாமதமாகத்தான் போவோம். கிணற்றுக்குச் சற்று நடக்கவேண்டும். குழாய்தான் அருகில். ஆனால் கிணற்றில் நீரிறைப்பதை வேடிக்கைபார்ப்பதற்காகப் போவதுண்டு. ஆள்நடமாட்டமில்லா மதிய வேளைகளில் எட்டிப்பார்த்தால் பாதாளத்தில் நெளியும் வானமும் சில்லவுட்டாக என் உருவமும் தெரியும். லேசாக பயமாகக்கூட இருக்கும்.

சொர்க்கவாசலுக்கு முன்பு ஐந்தடி அகலத்தில் ஐந்து கற்படிக்கட்டுகள் இருந்தன. ஒவ்வொரு படிக்கும் ஒரு பெயர் வைத்து விளையாடுவோம். Bank, Ocean, River, Water, Sea என்பதே அவற்றின் பெயர்கள். தரைக்குப் பெயர் Land. டand-ஐ ஒட்டி இருந்தது Sea. மேலே இருக்கும் படி Bank. தரையில் நின்றுகொண்டு பார்த்தால் Bank என் தோளுயரத்தில் இருந்தது.

வரிசையாக படிகளின் ஓரத்தில் நின்று கொள்ள விளையாடுபவன் முதலில் வந்து Land-இல் நின்று கொள்ள எதிராள் சொல்லும் படியில் ஏற வேண்டும். வேறு எந்தப் படியிலும் உடல் படக்கூடாது என்பதே விளையாட்டு. பட்டால் அவுட். கீழே நின்றதும் முதலில் சுலபமாக Ocean என்பார்கள். ஒரே தாண்டில் அந்த மூன்றாவது படிக்குப் போய்விடலாம். பிறகு Water; அப்புறம் Bank என்று மாறி மாறி கொஞ்சநேரம் தாண்டியதும் மறுபடியும் Land-க்குப் போகச் சொல்வார்கள். அங்கிருந்து "Bank" என்பான். இதுதான் சவால். அங்கிருந்து Bank படியில் மற்ற படிகளில் உடல்படாமல் ஏறுவது என்பது அசாதாரணமான விஷயம். ஒருகாலில் நின்று கொண்டு இன்னொரு காலை நீட்டினால் Bank எட்டாது. அங்கு போவதற்கு என்னென்னமோ சர்க்கஸ் வேலைகள் செய்வார்கள்.

சற்று பின்வாங்கி கைகளைத் தரையில் ஊன்றி தலைகீழாக நின்று ஒரு தாவு தாவி Bank-இல் ஏறிவிடுவான் ஜீவா. உயரமான பையன்கள் கைகளைத் தரையிலூன்றித் திரும்பி பாதங்கள் Bank-இல் பட Land-க்கும் Bank-க்கும் பாலம் போல சாய் கோணத்தில் நிற்பார்கள். உடனே "Land" என்று அறிவிப்பு ஒலிக்க, கால்களை நெம்பி எடுக்க முடியாமல் அவுட்டாகிவிடுவார்கள். என்னால் Land-லிருந்து Ocean-க்குத்தான் பெரும்பாலும் போக முடிந்தது. வற்றாயிருப்பில் இருந்த வரை என்னால் Bank-படியை எட்டவே முடியவில்லை.

ராமகிருஷ்ணா திரையரங்கில் இரண்டாம் ஆட்டம் எம்ஜியார் படம் பார்த்துவிட்டு வீட்டுக்குள் நுழையாமல் Bank-இல் படுத்துப் பலமுறை தூங்கியிருக்கிறேன். தாத்தா டிக்கெட் கொடுத்து முடித்துவிட்டு கணக்கையெல்லாம் செட்டியாரிடம் பைசல் பண்ணிவிட்டு வந்து தங்கபஸ்பம் ”போயிலை”யை கொஞ்சநேரம் குதப்பித் துப்பிவிட்டு Ocean-மீது படுத்துத் தூங்குவார். பகல்வெயில் சூடேறிய பாறைப் படிகளின் உஷ்ணம் இரவு முழுதும் முதுகில் இதமாகப் படிந்திருக்கும். அதிகாலை விடியுமுன் தெருப்பெண்மணிகள் வாளிகளுடன் வெளிப்பட்டு மண்தரையில் பளேரென்று நீரைத் தெளித்துக் கோலமிடுவார்கள். நீர் தெளிக்கப்படும் ஓசையில் லேசாக உறக்கம் கலையும். சிலசமயம் அத்தைமார் வாசலிலிருந்து தெளிக்கும் நீரின் சில துளிகள் முகத்தில் பட்டு எரிச்சலாக முணுமுணுத்துக்கொண்டு ஒருக்களித்து முதுகுகாட்டிப் படுப்பேன். பால்காரர் சைக்கிளில் வந்து பால் ஊற்றும் போது எழுந்து தோளில் துண்டைப் போட்டுக்கொண்டு தெற்குத்தெருதாண்டி சிவன்கோவிலுக்கு அப்பால் வயல்வெளிகளில் இருக்கும் பிரம்மாண்ட விவசாயக்கிணறுகளில் குளிக்கக் கும்பலாகக் கிளம்பிவிடுவோம்.

வேலைவெட்டியில்லாத அக்ரஹாரத்து இளைஞர்கள், நடுத்தரவயதுக்காரர்கள் சொர்க்கவாசல் படிக்கட்டுகளில் அமர்ந்து அரட்டையடிப்பார்கள். நாங்கள் பள்ளி முடிந்து வந்ததும் எங்கள் விளையாட்டைத் தொடர்வதற்காக இடத்தைக் காலிசெய்துவிடுவார்கள்.

வருடத்திற்கு ஒரு முறையோ என்னவோ மட்டும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு கருடவாகனம், மயில்வாகனம் என்று வெளிவந்து பல்லக்கில் பெருமாளைத் தூக்கி வலம் வருவார்கள். எங்கள் வீட்டுமுன் கூட்டம் அம்மும். அந்தப் படிகள்தான் எங்கள் விளையாட்டு மைதானம். சொத்து. கோவிலின் பிரம்மாண்ட சுவரையொட்டி இட்லித்தட்டுபோன்று குழிகள் தோண்டி கோலிகள் எறிந்து விளையாடுவோம். “பேந்தா” என்றொரு கோலி விளையாட்டும் பிரபலம். தெருவில் கிட்டிப்புள் தூள் பறக்கும். சைக்கிள் டயர்களையும், ரிம்களையும் குச்சியொன்று வைத்துக்கொண்டு அசுரவேகத்தில் இப்புறமும் அப்புறமும் செலுத்தி ஓடுவார்கள் பையன்கள். எதிரெதிரே நின்றுகொண்டு அவரவர் “வாகனத்தை” வேகமாக உருட்டி மோதச் செய்வது பிரபலம். ஸ்கூட்டர் டயர் ஒன்றை வைத்திருந்த பையன் தான் சாம்பியன். ஸ்கூட்டர் டயருடன் மோதி சைக்கள் சக்கரங்கள் ஜெயிப்பது சாத்தியமே இல்லை. கம்பியுடைந்து உருவமிழந்த சைக்கிள் டயர்களை ஏழைப் பையன்கள் ஓட்டிக்கொண்டு போவார்கள். எட்டு மாதிரி வளைந்து வளைந்து எலும்பில்லா விலங்கு போல ஓடும் அவை.

பம்பரங்களால் பம்பரங்களைக் குத்தி ”ஆக்கர்” வைப்போம். இதயம் மாதிரி வளைவு வளைவாக சந்தனக் கலர் கட்டையில் செய்து மேலே தலையில் வண்ணங்களெல்லாம் தீட்டி அலங்காரமாக வரும் பம்பரங்கள் பார்க்கக் கவர்ச்சியாக இருந்தாலும் எங்களுக்கெல்லாம் பிரமிடைத் திருப்பிப்போட்டது போல இருக்கும் அடர்பழுப்பு கட்டையில் செய்த வளைவுகளற்ற சாதாரண தோற்றத்திலிருக்கும் பம்பரங்கள்தான் பிடித்தமானவை. குறிபார்த்துச் சுண்டி பம்பரங்களைக் குத்திப் பெயர்க்க அவை சிறந்தவையாக இருந்தன. ஜீவா அப்படியே பம்பரத்தைத் தரையில் குத்தியெழுப்பி உள்ளங்கையில் ஏந்தி என் உள்ளங்கையில் இறக்க கிர்ரென்று குறுகுறுக்கும். அதை திண்ணைத் தரையில் விட்டால் சத்தமின்றி நீண்டநேரம் ரொங்கும்.

இருபத்திநாலு மணிநேரமும் படிகள் சொர்க்கவாசலிலேயே கிடந்தன. ஊர்விட்டு வந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்களாகிவிட்டன. அதற்கப்புறம் நடுநடுவே ஓரிரு தடவைகள் மட்டுமே போக வாய்ப்புக்கிடைத்துப் போனபோதும் படிகளைப் பார்க்கவில்லை. வீட்டையும் விற்றுவிட்டதால் சொர்க்கவாசல் பக்கம் எந்த வேலையும் இல்லை.

போனவருடம் என் அண்ணன் மதுரையிலிருந்து குடும்பத்தை அழைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு “பிறந்த ஊரைக்” காட்டுவதற்காக வற்றாயிருப்புக்குச் சென்று விட்டு வந்தான். “எப்படி இருக்கு வற்றாப்?” என்று கேட்டதற்கு, எட்டிப்பார்த்த பெருமாள்கோவில் முன்புறக் கிணற்றின் கைப்பிடிச் சுவர் இப்போது முழங்கால் உயரமே இருக்கிறதாம். ராட்டினமெல்லாம் காணாமல் போய் கிணற்றுக்குள் போர்வெல் போட்டு குழாயில் தண்ணீர் பிடிக்கிறார்கள் என்றான்.

“நம்ம வீட்டுக்குப் போனேன். இப்ப இருக்கற வீட்டுக்காரர் நல்லா மெயின்டெய்ன் பண்றார். எங்களை வரவேற்று அப்பா பத்தி விசாரிச்சார்”.

சொர்க்கவாசல் பற்றிப் பேச்சு வந்தது.

”இப்ப பாத்தா Bank-ம் Ocean-ம் மட்டும்தான் வெளியே தெரியறது. மத்ததெல்லாம் மண்ணுக்குள். ரோட்டைப் போட்டுப்போட்டு தெருவே மேடாகி வீடெல்லாம் கீழே போயிடுச்சு” என்றான்.

சோகமாக இருந்தது.

***

Thursday, April 07, 2011

Say Cheeeeeeese!


Say Cheeeeeeese!

மூன்று கழுதை வயசு வரை (அப்டீன்னா என்ன? எத்தனை?) கட்டிக் காப்பாற்றிப் பின்பற்றி வந்த வீட்டில் பெரியவர்கள் சொன்ன "லைஃப்ல எதுக்காகவும் யார்கிட்டயும் பல்லைக் காட்டிட்டு போய் நிக்கக் கூடாது” அறிவுரையை கடைசியில் கைவிட வேண்டியதாகிவிட்டது. பல்லைக் காட்டிக்கொண்டு நின்றென்ன.. உட்கார்ந்தேவிட்டேன்.

”கடைசியா எப்ப பல் தேய்ச்சீங்க...ஸாரி... க்ளீன் பண்ணீங்க?” என்றார் அந்த வெள்ளைக் கோட்டு, நெற்றிவிளக்கு பல் டாக்டர். ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று புரியாமல் “காலைலதான்” என்றேன். வாய்க்குள் இடுக்கி இருந்ததால் நான் சொன்னது அவருக்குப் புரிந்ததா தெரியவில்லை.

“இதுக்கு முன்னாடி இங்க வந்துருக்கீங்களா?”

இதுக்கு முன்னாடி நீங்க இங்க டாக்டரா இருந்தீங்களா என்று கேட்காமல் “இல்லை டாக்டர். இதான் முதல் தடவை”

”இதுக்கு முன்னாடி ஹைஜீன் செக்கப், க்ளீனிங் யார்க்கிட்ட செஞ்சுக்கிட்டீங்க?”

“இல்லை டாக்டர். இதான் முதல் தடவை”

சம்பாஷணையைத் தொடருமுன் சிறிய கொசுவர்த்திச் சுருள் ஒன்றைச் சுற்றிக் கொள்கிறேன்.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்று சும்மா படிக்க மட்டும் செய்யவில்லை. வத்திராயிருப்பில் என் சிறுவயதில் அதைக் கடைப்பிடிக்கவும் செய்தேன். எங்கள் வீட்டுக் கொல்லையில் இரண்டு வேப்ப மரங்களும், ஒரு பெரிய்ய்ய புளிய மரமும் இருந்தன. வேம்புக் குச்சியொன்றை தினமும் ஒடித்துக் கொடுப்பார் தாத்தா. அதன் முனையை முதலில் நன்றாகக் கடித்து பிரஷ் மாதிரி செய்துகொண்டு பின்பு துலக்க வேண்டும். எனக்கு வேப்பம் பழங்கள் மிகவும் பிடிக்கும். வேப்பங் குச்சி - அதைச் தின்ன வேண்டியதில்லை என்பதால் கசப்பைத் தாங்கிக்கொண்டு தேய்ப்பேன். அப்படியும் கடைவாய் வழியாக கசப்பு உள்ளிறங்கிவிடும். ”வேணும்னா உப்பு சேத்துக்கோ” என்பார் தாத்தா. நைசான பொடியுப்பெல்லாம் கிராமத்தில் கிடையாது. கல் உப்புதான். அதால் தேய்த்தால் கல்லால் பல்லைத் தேய்ப்பது போல இருந்ததால் உப்பைத் தவிர்த்துவிட்டு வேப்பங்குச்சியொடு நிறுத்திக்கொண்டேன். ஆலங்குச்சிக்கெல்லாம் ஊரெல்லையில் குளத்தங்கரைக்குப் போகவேண்டுமென்பதால் வேப்பங்குச்சியே எனது ஆஸ்தான பிரஷ் கம் பேஸ்ட்டாக இருந்தது. பிறகு கொஞ்சம் “வசதி“ வந்ததும் கோபால் பல்பொடி வாங்கினார்கள். சும்மாவா? இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேஷியா போன்ற எல்லா நாடுகளிலும் விற்கும் “ஃபாரினுக்கெல்லாம் போகும்“ வஸ்துவாயிற்றே! கோபால் பல்பொடி பொட்டலத்தை மூலையில் கிள்ளித் திறந்து உள்ளங்கையில் கால் ஸ்பூன் கொட்டி ஆள்காட்டி விரலில் ஒற்றித் தேய்த்த அந்த முதல் அனுபவத்தை மறக்க முடியாது. கோபால் பல்பொடி கோலப்பொடியில் சர்க்கரை கலந்தது போல் இருந்தது. ஆனால் வேப்பங்குச்சியின் கசப்புக்கு எவ்வளவோ பரவாயில்லை.

தாத்தா மட்டும் கோபால் பல்பொடியைத் தொடவேயில்லையே என்று புலனாய்ந்ததில் அவர் அவருக்கே என்று வைத்திருந்த சிறிய ஷெல்ப் ஒன்றில் ஒளித்து வைத்திருந்த சிறிய அலுமினிய டப்பியைக் கண்டுபிடித்தேன். பயோரியா என்று எழுதியிருந்ததைப் பார்த்தும் லேசாக பயமாக இருந்தது. தாத்தா நிறைய தங்க பஸ்பம் “போயிலை“ போடுவார். கன்னம் உப்பியே இருக்கும். முதலில் பயோரியாவை மருந்து என்று நினைத்தேன். டப்பியைத் திறந்து பார்த்ததில் பாண்ட்ஸ் பவுடர் மாதிரி தூய்மையாக இருந்தது. லேசாக மருந்து வாடை அடித்தது. ஆள்காட்டி விரலை முக்கி முதல் தேய்த்தலிலேயே ஜிவ்வென்று மேலண்ணம் எரிந்து கண்ணில் உடனடியாக நீர் வந்தது. தலைதெறிக்கத் திரும்ப ஓடி வந்தும் நீண்ட நேரம் வாய்க்குள் இன்னொரு லேயர் ஒட்டிக்கொண்டிருந்ததைப் போன்ற பிரமை இருந்தது.

பிறகு கோல்கேட் பேஸ்ட்டெல்லாம் வாங்கித் தேய்க்குமளவிற்குப் பெரிய ஆளாகிவிட்டேன். பேஸ்ட் அணில் முதுகு மாதிரி வரிவரியாக (கலரில்) பிதுங்கி வரும். ட்யூபின் குரல்வளையை நெறித்துக் கடைசித் துளி வரை பிதுக்கிவிட்டுத்தான் தூக்கிப் போடுவோம். ஆரம்ப காலங்களில் பேஸ்ட்டைத் தேய்த்ததைவிட தின்றதே அதிகம். ஒழுங்காகத் தினமும் பல் தேய்த்து கண்ணைக் கூசச் செய்யும் அளவிற்கு டாலடிக்காவிட்டாலும் ஓரளவுக்கு வரிசையான ஆரோக்கியமான பற்கள்தான் எனக்கு. நாவல்களில் படித்த “ரோஜா ஈறுகளுடன் பளீரென்று சிரித்தாள்”  வர்ணனை கொடுக்குமளவிற்கு யாரையும் பார்த்ததில்லை. மாமல்லன் மாதிரி மாபல்லன் அல்லது மாபல்லி தெருவுக்கு ஒருவர் தெத்துப் பற்களுடன் கட்டாயம் இருப்பார்கள். பல்லா அல்லது பல்லீ என்று கூப்பிடுவோம். இது தவிர கோரைப் பல்லன், காரைப் பல்லன், பாறைப் பல்லன் என்று பல வகை சினேகிதர்கள் இருந்தார்கள். பட்டாணியை நொறுக்குவோம். பொங்கல் சமயத்தில் வீட்டெதிர் பெருமாள்கோவில் சொர்க்க வாசல் படிக்கட்டுகளில் அமர்ந்து முழுக் கரும்பையும் வாயோரங்கள் எரிய எரியக் கடித்துத் தின்னுவோம். இவ்வளவு ஏன். கல்கோனாவையே அஸால்ட்டாகக் கடித்துச் சாப்பிடுவோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பொதுவாகவே ஆரோக்கிய வாழ்வு ஆதலால் மருத்துவமனையை நாடவேண்டிய அவசியமில்லாமல் இருந்தது. அரசு மருத்துவமனையை நினைத்தால்தான் லேசாக ஜூரம் வருவது போல இருக்கும்.

பிறகு பெரியவனாகி வேலைக்குப் போன பின்பும் பல்லுக்கெல்லாம் தனியாகவென்று எதையும் பரிசோதித்துக்கொண்டதில்லை.

அமெரிக்கா வந்ததும் ஹெச்ஆர் டிபார்ட்மெண்டிலிருந்து உங்களுடைய டெல்ட்டா டென்ட்டல் இன்ஷூரன்ஸ் கவரேஜ் பற்றிய விவரங்கள் இதோ என்று மின்னஞ்சலில் ஒரு ராமாயணமே அனுப்பியிருந்தார்கள். முதலில் அதை “Please click here to receive the $300 million dollars of unclaimed funds of the deceased to your bank account" வகை நைஜீரியா மின்னஞ்சல் என்று நினைத்துக்கொண்டு ரத்து செய்துவிடலாமா என்று கணிலியை (கணிலி=Mouse ஹிஹி) அமுக்கியே விட்டேன். மதியமே ஹெச்ஆர் ஆள் வந்து “டிசம்பர் முடியப் போவதால் செக்கப் செய்துகொண்டுவிடு இல்லாவிட்டால் இந்த ஆறுமாத கோட்டா வேஸ்ட்டாயிடும்“ என்று சொல்ல ஒன்றும் புரியவில்லை. அதாவது ஆறு மாதத்திற்கொருமுறை வழக்கமாக பல்லைக் காட்டி செக்கப் செய்துகொண்டுவிட வேண்டுமாம். பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத்தான் அந்த டெல்ட்டா டென்ட்டல் பாலிஸியாம். “ஆரோக்கிய வாழ்வை காப்பது லைஃபாய்தானே? எதற்கு பல்லைக் காட்டவேண்டும்?” என்று கேட்டதற்கு என்னை அயல்கிரகவாசி போன்று பார்த்துவிட்டு விலகிப் போனான். அந்த மின்னஞ்சலை மீட்டெடுத்துப் படித்துப் பார்த்ததில் தலைசுற்றி பல்வலி வரும்போல இருந்தது. அப்புறம்தான் இந்தக் கட்டுரையின் முதல் பாரா சம்பவம் நடந்தது. போனது தெருக்கோடியிலேயே இருந்த ஒரு பல் மருத்துவமனைக்கு. மருத்துவர் இளைஞராக இருந்தார். “உங்கள் டெல்லிக்கும் பெங்களூருக்கும் வந்திருக்கிறேன்“ என்றார்.

எக்ஸ்ரேயெல்லாம் (பல்லுக்குத்தான்!) எடுத்து காட்டினார்கள். கருப்பு வெள்ளையில் கலைடாஸ்கோப் பார்த்த மாதிரி பூச்சி பூச்சியாக இருந்தது. மருத்துவர் வாயில் விளக்கடித்துக் சோதித்துவிட்டு ”ஈறுகளுக்குள் ப்ளாக் இருக்கு. அதை எடுக்காவிட்டால் கொஞ்ச நாளில் பற்குழி வந்து பல்லெல்லாம் காலியாகி விடும். நோயெல்லாம் வரும்” என்று பயமுறுத்திவிட்டு Deep Cleaning செய்தேயாக வேண்டும் என்று கழுத்தில் துண்டைப் போட்டு இருக்கையின் முதுகுப் பக்கத்தைச் சாய்த்து படுக்கை வசத்தில் என்னை அழுத்தினார். “ஒரே நாளில் மொத்த வாயையும் சுத்தம் பண்ண முடியாது. இன்னிக்கு வலது பக்கம் மட்டும்” என்றார்கள். அடப் பாவிகளா,  இரண்டு மூன்று விஸிட் வருமளவிற்கு என்ன குகையையா சுத்தம் செய்யப்  போகிறார்கள்? வாய்தானே? என்று நினைத்தேன். வந்திருக்கக்கூடாதோ என்று தோன்றியது.

Ear bud ஒன்றின் கொண்டையில் நீல திரவத்தைத் தோய்த்து ஈறுகளில் தேய்க்க இனிப்பாக இருந்தது. I'll be back in 2-3 minutes என்று அவர் வெளியேறிச் செல்ல வாய்க்குள் ஒருபக்கம் மட்டும் பலூன் போல வீங்கும் பிரமை எழுந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வலது வரிசைகளில் உணர்வு தேய வாயைத் திறந்திருக்கிறேனா மூடியிருக்கிறேனா என்றே உணர முடியவில்லை. சுத்தமாக மரத்துப் போகத் தொட்டுப் பார்த்தால் உணர்வே இல்லை. பக்கவாதம் வந்து ஒரு பக்கம் செயலிழந்தவர்களின் கோணிய முகத்தினைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு இப்படித்தான் உணர்வின்றி இருக்குமோ என்று தோன்றியது.

மருத்துவர் திரும்ப வந்து “Are you doing alright?" என நான் 'Yush. ayam aallite' என்று பதில் சொன்னது எனக்கே புரியவில்லை. டாஸ்மாக் வாசலில் விழுந்து கிடக்கும் தமிழன் போல பேசினேன். அவர் இருக்கையில் பொருத்தியிருந்த தட்டில் மினி அங்குசம் மாதிரி விதவிதக் கருவிகளைப் பரப்பி வைத்து வாயைத் திறக்கச் சொல்ல, மருத்துவரின் அஸிஸ்டெண்ட் இந்தப் பக்கம் நின்றுகொண்டு கிடுக்கியால் என் வாயைத் திறந்துவைத்துப் பிடித்துக்கொள்ள கிலியாக இருந்தது. கண்ணுக்கு நேரே பிரகாசமாக விளக்கைப் போட கண்களை மூடிக்கொண்டேன்.  சிறிது நேரத்திற்கு தொடர்ச்சியாகக் கிணறு தோண்டும்போது கடப்பாரை பாறையில் மோதுவது போன்றும், கத்தியைச் சாணை தீட்டுவது போன்றும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருக்க நெருப்புப் பொறிகூட பறந்திருக்கும் போல. உள்மனதில் பற்களின் உறுதியை நினைத்துப் பெருமையாகவும் இருந்தது. “எவ்வளவு அடிச்சாலும் தாங்குறீங்களேப்பா!” என்று அவற்றைப் பாராட்டிக்கொண்டேன்.

ஒரு வழியாக முடித்துவிட்டு ”அடுத்த வாரம் அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிட்டு வாங்க. லெப்ஃட்டையும் பாத்துரலாம்” என்றார்கள். மரத்துப் போன உணர்வு மீள இரண்டு மணிநேரமாவது ஆகும் என்றார்கள். தினமும் ஃப்ளாஸ் செய்ய வேண்டும் என்று நூல் ஒன்றைப் பல்லிடுக்கில் செலுத்தி மத்து கடைவது போலச் செய்து காட்டினார்கள். முசிறியில் என் நண்பன் பசுபதியின் தாத்தா காவிரியில் இடுப்பளவு நின்றுகொண்டு சூரிய நமஸ்காரம் முடித்துவிட்டு மூக்கில் ஒரு துவாரம் வழியாக நீரை ஊற்றி மறு துவாரம் வழியாக வரச் செய்வார். நல்ல வேளை அதையெல்லாம் செய்யச் சொல்லவில்லை. வாயைக் கொப்பளிக்கச் சொன்னார்கள். வலது பக்கம் இன்னும் உணர்வின்றி இறுகியது போலிருக்க பெயருக்குக் கொப்பளித்துவிட்டு அவர்களுக்கு நன்றிகூறி அறையிலிருந்து வெளியேறினேன்.

வரவேற்பறையில் தொலைபேசியில் பிஸியாக இருந்த அம்மணி பேசிக்கொண்டே அச்சடித்து நீட்டிய பில்லைப் பார்த்தபோது மயக்கம் வரும்போல இருந்தது. பேசவும் பயமாக இருந்தது - வாய் குழறும். அவர் தொலைபேசி முடித்துவிட்டு பில்லிலிருந்த வரிகளைப் பேனாவால் ஓட்டி “மொத்தம் ஆயிரத்து இருநூறு டாலர். அதில் உங்கள் இன்ஷூரன்ஸ் நிறுவனம் எண்பது சதவீதம் கொடுத்துவிடும். பாக்கியில் பாதியை இப்போது செலுத்திவிட்டு அடுத்த வாரம் வரும்போது மீதியைச் செலுத்துங்கள்” என்றார். அந்தக் காசை வைத்து ஆயுசுக்கும் பற்பசை வாங்கலாமே என்று தோன்றியது. வேறு வழி? ஓட்டலில் சாப்பிட்டுவிட்டுக் காசில்லையென்றால் மாவாட்டவாவது செய்யலாம். இங்கே இல்லையென்றால் மறுபடி உள்ளே கூட்டிக்கொண்டு போய் மரத்துப் போக மருந்து கொடுக்காமலேயே பல்லைப் பிடுங்கிவிடுவார்கள் போலிருந்தது. போன ஜென்மக் கடன் என்று நினைத்துக்கொண்டு பேசாமல் கடனட்டையால் செலுத்திவிட்டு வெளியேறினேன். சரி பரவாயில்லை, பற்பசை விளம்பர மாடல்கள் போல ஆகிவிட்டோம் என்று ஆறுதல் படுத்திக்கொண்டு வண்டியிலேறி கண்ணாடியில் பற்களைப் பார்த்தால் அவ்வளவாக வித்தியாசம் தெரியவில்லை.

வீட்டுப் படியேறினதும் சின்னவள் வந்து ”டாடி...ஆ காட்டு? Say Cheeeeeeese...“ என்று செய்முறை விளக்கத்துடன் சொல்ல சிவாஜி மாதிரி சிரித்துக்கொண்டே மனதுக்குள் அழுதேன். பார்த்துவிட்டு “It's clean“ சொல்லிவிட்டு உள்ளே ஓடினாள்.

மறுநாள் ஆபிஸ் போய் அந்த ஹெச்ஆர் ஆளைத் தேடியதில் கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தார். என்ன ஆயிற்று என்று விசாரித்ததில் விஸ்டம் டூத் (என்னே பெயர்!) பிடுங்கிவிட்டு அது காஸ்மடிக் வகையறா சிகிச்சை என்பதால் இன்ஷூரன்ஸ் கிடையாது என்று கைவிரித்துவிட்டு சொளையாக எழுநூற்றைம்பது டாலர்களையும் பிடுங்கிவிட்டார்களாம். “அது பாட்டுக்கு தேமேன்னு சமத்தா இருந்தது” என்றார் சோகமாக. உள்ளுக்குள் சாத்தான்போலச் சிரித்துக்கொண்டு பேசாமல் என்னிருக்கைக்குத் திரும்பினேன்.

மொத்தத்தில் இந்த ஊரில் இன்ஷூரன்ஸ்காரர்களும் டாக்டர்களும் மருத்துவமனைகளும் நம்மிடம் பிடுங்கோ பிடுங்கு என்று பிடுங்குகிறார்கள். நாம் பல் பிடுங்கின பாம்பாட்டம் அடங்கியொடுங்கியிருக்க வேண்டியிருக்கிறது. சாமான்ய மக்களெல்லாம் என்ன செய்வார்கள் என்றே தெரியவில்லை. மைக்கேல் மூரின் Sicko-வைப் பார்த்திருக்கிறீர்களா?

”வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இர்றா! வாயைக் கொடுத்து மாட்டிக்காதே!” என்று பெரியோர்கள் சும்மாவா சொன்னார்கள்!

***

Wednesday, February 16, 2011

விதி சிரித்தது

*** விதி சிரித்தது ***

சுஜாதா கணையாழியின் கடைசிப் பக்கங்களில் எல்லாவற்றையும் எல்லாரையும் சகட்டுமேனிக்கு விளாசியிருப்பார். அதிலும் “கண்கள் குளமானது” என்று எழுதும் எழுத்தாளர்கள் அவரிடம் சிக்கிச் சின்னாபின்னமாயிருப்பார்கள். இம்மாதிரி கிளிஷேக்கள் இல்லாமல் தமிழ்ப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் ஒரு வரிகூட தாண்டி எதையும் படிக்க முடியாது. இப்படித்தான் ”விதி சிரித்தது” என்று சலிக்காமல் இன்னும் எழுதும் தமிழ் எழுத்தாளர்களை நினைத்து எத்தனை முறை படித்துவிட்டு கிண்டலாகச் சிரித்திருக்கிறேன் என்று எனக்கே தெரியாது. ஆனால் போன புதன் கிழமை மாலை ஒரு நாள் பயணத்திற்காக டெக்ஸஸ் செல்லவேண்டியிருந்து வீட்டிலிருந்து கிளம்பும்போது மூலையில் நின்றுகொண்டு விதி சிரித்தது என்பதை நான் கவனிக்கவேயில்லை.

ஒரே நாள் பயணமாதலால் ஒட்டகப் பொதிகள் எதுவும் இல்லாமல் ஒரு சிறிய லேப்டாப் ட்ராலியில் ஒரு செட் உடை, சூட் ஒன்றை மடக்கித் திணித்துவிட்டு Baக்Paக்கில் கணிணியை வைத்துக்கொண்டு அட்டகாசமாக விமானநிலையத்திற்குச் சென்றேன். TSA-இல் என்னை Full Body Scanner இடையில் நிறுத்தி நிராயுடைபாணியாக்கி பாக்யராஜின் நடன அசைவுகள் போல கைகளை விரித்து பறவை மாதிரி வைத்துக்கொள்ளச் செய்து சோதித்துவிட்டு அனுப்ப x-ray machine துப்பிய உடைமைகளைப் ஸாக்ஸ் கால்களுடன் பொறுக்கிக்கொண்டு பெஞ்சில் அமர்ந்து கழற்றிய எல்லாவற்றையும் மாட்டிக்கொண்டு போர்டிங் ஏரியாவுக்குச் சென்று சேர்ந்தேன். பாஸ்டனிலிருந்து ஆஸ்டினுக்கு நேரடி விமானத்திற்கு யானை விலை சொன்னார்கள் என்பதால் நியூவர்க் (Newark - இதை கொஞ்ச நாள் ஸான் ஸோஸ் மாதிரி நெவார்க் என்று சொல்லிக்கொண்டிருந்தேன்) வழியாகச் செல்லும் விமானத்தில் டிக்கெட் வாங்கியிருந்தேன்.

விமானத்தினுள்ளே Carry On baggage என்ற வகையில் இரண்டு ஐட்டங்களை மட்டும் கொண்டு செல்லலாம் - ஒரு சிறிய பெட்டியும், கைப்பை (அ) லாப்டாப் மாதிரியான சிறிய பொருளும். Check-in-இல் பெட்டியைப் போட்டால் குறைந்த பட்சம் $25 கட்டணம் கட்டவேண்டும். இன்னும் சில விமான நிறுவனங்கள் எல்லாப் பெட்டிகளுக்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதற்காகப் பெட்டியே இல்லாமல் கட்டின வேட்டியுடனா பயணம் செய்ய முடியும்? இந்த கட்டணப் பிரச்சினையினால் சிறிய பெட்டி என்ற பெயரில் சில பயணிகள் மொத்த வீட்டையும் அடைத்துக்கொண்டு கொண்டுவந்து விமானத்தில் தலைக்குமேல் பெட்டி வைக்கும் பகுதியில் திணிக்க முடியாமல் திணித்து இடத்தைக் காலி செய்துவிடுவார்கள்.

வரிசைக் கிரமமாகப் பயணிகளை விமானத்தினுள் அனுப்பத் துவங்கினார்கள். பொதுவாக கடைசி வரிசையில் ஆரம்பித்து உள்ளே அனுப்புவார்கள். அனால் சில விமான நிறுவனங்களில் முதல் வரிசையிலிருந்து அனுப்புவார்கள். எந்த வரிசையில் அனுப்புவார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

பாதிப்பேர் ஏறியதும் “விமானத்தின் ஓவர்ஹெட் கம்ப்பார்ட்மெண்ட்டில் மேலும் பெட்டிகளை வைக்க இடம் இல்லை. ஆதலால் இனிமேல் ஏறுபவர்கள் தங்களது பெட்டியைக் கட்டணமின்றி Check-in Baggage-ஆக எடுத்துச் செல்லலாம்” என்று அறிவித்தார்கள். என்னுடைய லாப்டாப் ட்ராலி மிகவும் சிறியது. இருந்தாலும் ஒரே சமயத்தில் இரண்டையும் கால்களுக்கு அடியில் வைத்துக்கொள்ள முடியாது என்பதால் லக்கேஜாகப் போட்டுவிடலாம் என்று அறிவிப்பு செய்தவரிடம் சென்றதில் அவர் பார்த்துவிட்டு ”மூஞ்சூறு மாதிரி சின்னதாகத்தான் இருக்கு - இதுக்கெல்லாம் இடம் இருக்கும். ரோலர் பிளேடுகளுக்குத்(ட்ராலி சூட்கேஸ்!) தான் இடமில்லை” என்று சொல்லி என்னை உள்ளே அனுப்ப, உள்ளே சென்று பார்த்தால் மூஞ்சூறுக்குக்கூட இடமில்லை.

எனக்குப் பின்னால் இன்னும் பத்து பதினைந்து பேர் நின்றதால் வெளியே வரமுடியாமல் அப்படியே இருக்கையில் அமர்ந்துகொள்ள எல்லாரும் அமர்ந்ததும் இடமில்லாதவர்களின் பெட்டிகளை வாங்கி லக்கேஜில் போடுகிறோம் என்று என்னுடைய, இன்னும் சிலருடைய பெட்டிகளையும் அவரவர் போர்டிங் கார்டுகளையும் வாங்கிக்கொண்டு - விமானம் தாமதமாகிக்கொண்டிருந்தது - அந்தப் பெண்மணி சென்று வெளியே லக்கேஜ் ஏற்றும் ஊழியர்களிடம் கொடுத்துவிட்டு, ரசீதுகளை போர்டிங் கார்டுகளிலில் ஒட்டிக்கொண்டு உள்ளே வந்து பணிப்பெண்ணிடம் கொடுத்துவிட்டு வெளியேற, கதவை மூடி விமானத்தை நகர்த்தி ரன்வேக்குக் கொண்டு சென்றார்கள். பணிப்பெண் கொடுத்த போர்டிங் கார்டை வாங்கி ரசீதைப் பார்த்ததில் அதில் ஸாம் ஆண்டர்ஸன் என்று பெயர் போட்டு சான்டியாகோ என்று அச்சடித்திருந்ததைப் பார்த்து திக்கென்றிருந்தது.

வேறு யாருடைய போர்டிங் கார்டோ என்று பார்த்ததில் என்னுடையதுதான். ”ஐயோ” என்று கத்தலாம் போல இருந்தது. விமானம் நகரத் துவங்கிவிட்டபடியால் இருக்கைப் பட்டியைப் போட்டுக்கொண்டு எல்லாரும் புத்தர் மாதிரி அமர்ந்திருக்க, விமானம் மேலெழும்பி நிலைகொள்ளக் காத்திருந்து பொத்தானை அனுப்பி பணிப்பெண்ணை அழைத்தேன். அந்தச் சிடுசிடு பெண்மணி சுரத்தேயில்லாமல் “Anyone going to San Diego?" என்று சோகையாகக் கேட்டது என் பின்னிருக்கைக்கே கேட்டிருக்காது - கொஞ்சம்கூட கண்டுகொள்ளாமல் நியூவர்க் போனதும் Baggage Service-க்குச் சென்று சொன்னால் பெட்டி சான்டியாகோ விமானத்தில் ஏற்றுவதற்கு முன்பு தடுத்து வெளியே கொண்டுவந்துவிடுவார்கள் நீங்கள் ஆஸ்டினுக்குக் கொண்டு சென்றுவிடலாம் என்று கூலாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

நியூவர்க்கில் இருந்த நேர இடைவெளியோ ஒன்றரை மணிநேரம். ஒரு கேட்டிலிருந்து இன்னொரு கேட்டிற்குச் செல்வதற்கு அந்த இடைவெளி எதேஷ்டம். ஆனால் வெளியே வந்து பெட்டியைக் கண்டுபிடித்து எடுத்து மறுபடியும் சோதனையை முடித்து ஆஸ்டின் விமானத்தைப் பிடிக்கமுடியுமா என்று கவலையாக இருந்தது. ஆஸ்டின் போய்ச் சேர இரவாகிவிடும் - மறுநாள் சந்திப்புக்கான உடை பெட்டியில் - உடையாவது பரவாயில்லை. எனது வீட்டுச் சாவியும் பாஸ்டன் விமான நிலையத்தில் நிறுத்திய காரின் சாவியும் அதனுள். வேறு வழியே இல்லை - வெளியே ஓடிவந்து வாடிக்கையாளர் சேவைக்குச் சென்று மன்றாடியதில் - அந்தப் பெண் ஏகமான நபர்களைத் தொலைப்பேசியில் அழைத்து மன்றாடி எவ்வளவோ முயற்சி செய்தும் பெட்டி சான்டியாகோ விமானத்தில் ஏற்கெனவே ஏற்றப்பட்டுவிட்டதால் வெளியே கொணர இயலாது என்று கைவிரித்துவிட்டார்கள். ”ஆஸ்டின் விமான நிலையத்திற்குச் சென்று சொல்லுங்கள்” என்று அவர் பரிதாபமாகச் சொல்ல, மறுபடி ஓடிப்போய் - மறுபடி TSA - மறுபடி X-Ray machine - மறுபடி போர்டிங் ஏரியாவுக்கு வியர்த்து ஊற்றி கடைசி ஆளாக விமானத்தைப் பிடித்து - மற்ற பயணிகள் முறைக்க - இருக்கையைக் கண்டுபிடித்து கடும் கோபத்துடன் அமர்ந்தேன்.

இரவு எட்டரைக்கு ஆஸ்டின் விமான நிலையத்திலிறங்கி அங்கிருந்த விமான நிறுவன வாடிக்கையாளர் சேவைக்குச் சென்று புகார் தெரிவிக்க அவர்கள் சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு ஒரு சிறிய பையில் சேவிங் செட், பிரஷ், பேஸ்ட் வைத்துக் கொடுத்துவிட்டு - மறுநாள் காலைக்குள் சான்டியாகோவிலிருந்து அந்தப் பெட்டியைக் கொண்டுவந்து விடுகிறோம் என்று உறுதியளித்து என் கைப்பேசி எண்ணை வாங்கிக்கொண்டார்கள்.
மறுநாள் எனக்கிருந்த அலுவல் பத்துமணிக்கு. மதியம் மூன்று மணி விமானத்தில் பாஸ்டன் திரும்புவதாகத் திட்டம். இரவு உறக்கம் வராமல் விடுதியறையில் புரண்டுகொண்டிருந்து எப்போது தூங்கினேன் என்று நினைவில்லை. காலை ஆறுமணிக்கு செல்லழைப்பில் எழுந்தேன். விமான நிறுவனம்தான். “மன்னிக்கவும் சான்டியாகோவிலிருந்து ஆஸ்டின் வரவேண்டிய காலை விமானம் ரத்தாகி விட்டது. உங்கள் பெட்டியை மதிய விமானத்தில் கொண்டு வருகிறோம். மாலை ஐந்து மணிக்கு ஆஸ்டின் வந்துவிடும்” என்றதும் பல்லே தேய்க்காவிட்டாலும் பரவாயில்லை என்று கத்த ஆரம்பித்தேன் “யோவ். நான் மூணு மணிக்கு பாஸ்டன் திரும்பப் போறேன்யா”.

“அப்படியா? சிரமத்திற்கு மன்னிக்கவும். அதற்குள் சான்டியாகோவிலிருந்து பொட்டியைக் கொண்டுவர இயலாது”

“அப்ப என்னை என்னய்யா செய்யச் சொல்றே?”

“சான்டியாகோவிலிருந்து பாஸ்டனுக்குச் செல்லும் விமானத்தில் உங்கள் பெட்டியைத் திருப்பிவிடுகிறோம். நீங்கள் ஊர் போய்ச் சேரும்போது பெட்டி உங்களுக்குக் காத்திருக்கும்” - அதென்ன என் காதலியா காத்திருக்க?

“அப்ப என் உடுப்பு - என் மீட்டிங் என்னாவது?”

“சிரமத்திற்கு....”

”அதை உடுய்யா... மன்னித்தேன்.. உடுப்புக்குப் பதில் சொல்க”

“நீங்கள் உடுப்பு வாங்கிக்கொண்டு க்ளெய்ம் செய்யவும். நன்றி” என்று துண்டித்துவிட்டார்கள்.

இந்த ஊரில் எந்தக் கடையாக இருந்தாலும் காலை ஒன்பது மணிக்குத்தான் திறப்பார்கள். பத்து மணிக்கு வாடிக்கையாளர் சந்திப்பு. பத்து பதினைந்து நிமிடத்திற்குள் வாங்கி உடைமாற்றி ஓடிவிடலாம் என்று நினைத்தேன். இதான் சாக்கு என்று இன்னொரு சூட் வாங்கிக்கொண்டு விடலாமா என்று சபலமாக இருந்தது. எதற்கு வம்பு. ஏற்கெனவே நேரம் சரியில்லை. இவர்கள் பாட்டுக்கு க்ளெய்ம் கிடையாது என்று சொல்லிவிட்டால் இருநூறு டாலர்கள் தண்டமாகிவிடும்.

அவசரமாகக் குளித்து விட்டு முந்தைய நாள் உடுப்பையே திரும்ப மாட்டிக்கொண்டு - கருமம் - ஒன்பது மணிக்குக் கடைகளைத் தேடியதில் Old Navy ஒன்று தென்பட்டது. எல்லாம் கலர்கலரான உடுப்புகளாக - பிஸினெஸ் உடுப்பு என்று ஒன்றையும் காணோம். கஷ்டப்பட்டுத் தேடி ஒரேயொரு முழுக்கை சட்டை (வெள்ளை) கிடைத்தது. என் கல்யாணத்திற்கு முன்பு நானிருந்த அளவில் இருந்தது. பரவாயில்லை என்று அதோடு ஒரு செட் உள்ளாடைகள், காலுறை வாங்கிக்கொண்டு, ஜீன்ஸ் பேண்டெல்லாம் தலைமுறைக்கும் துவைக்காமல் போட்டுக்கொள்ளலாம் - உடைமாற்றி ஜீன்ஸ், ஸ்னீக்கர்ஸ்ஸூடன் வாடிக்கையாளர் நிறுவனத்திற்குச் சென்று சந்திக்கும் அறையின் மேசைக்குக் கீழ் பாதியுடலை மறைத்துக்கொண்டேன் - அவர்கள் பக்கத்தில் நான்கு பேர் சந்திப்புக்கு வர எல்லாப் பயல்களும் ஜீன்ஸ் டீஷர்ட்டில்! அடப்பாவிகளா!

வழக்கம்போல தட்பவெப்ப நிலை பற்றி விசாரித்துவிட்டு (நம்மூரில் “சாப்டீங்களா?“ என்றுதான் சந்திப்பை ஆரம்பிப்போம்) என் பெட்டி தொலைத்த கதையைச் சொல்லி எல்லாரும் சிரித்து “டோன்ட் பாதர் - யூ வில் பி ஓவர் ட்ரெஸ்ட் இன் அ ஸூட். திஸ் இஸ் டெக்ஸஸ் மேன்” என்றார்கள்.

சந்திப்பு முடிய மதியமாகிவிட்டது. ஒரு மணிக்கே கிளம்பிவிட்டேன். ஆனாலும் வாடகைக் காரின் கற்கால ஜிபிஎஸ் என்னை விமான நிலையத்திற்குக் கொண்டு செல்லாமல் வேறு எங்கோ கொண்டு சென்றுவிட பிறகுத் தட்டுத் தடுமாறி விமான நிலையத்திற்குச் சென்று சேர இரண்டரை மணியாகிவிட்டது. பாதுகாப்புச் சோதனைக்குச் சென்றால் அனுமார் வால் வரிசை! ரெண்டே முக்காலுக்கு கேட்டை மூடி வண்டியை எடுத்துவிடுவார்கள். ஐயோ... அதைவிட்டால் பாஸ்டனுக்கு அன்று வேறு விமானம் கிடையாது. முன்னே நின்றவர்களிடம் ”மன்னிக்கவும். எனக்கு அவசரமாக மூன்று மணி விமானத்தைப் பிடிக்க வேண்டியிருக்கிறது. வரிசையில் முந்திச் செல்ல அனுமதிப்பீர்களா?” எனக் கேட்க அவர்கள் என்னை விட அவசமாக “எங்கள் ஃபிளைட்டு ரெண்டே முக்காலுக்கு. ஸாரி“ என்று திரும்பிக்கொண்டார்கள். ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகக் கழிந்தது. 

இதயத் துடிப்பு அதிகரிக்க கூட்டம் அதிகமானதால் திடீரென்று இன்னொரு வரிசையைத் திறந்தார்கள். அமெரிக்கா வந்த ஐந்து வருடங்களில் முதன்முறையாக நாகரிகத்தைத் துறந்து எல்லாரையும் முந்தி ஓடி அவ்வரிசையில் சேர்ந்து கொண்டு பாதுகாப்புச் சோதனை கடந்து வெளியே வந்து ஷூக்களை மாட்டிக்கொள்ள நேரம் ரெண்டே முக்காலாகிட்டது. எனது விமானம் இருக்குமிடம் C22. நான் C1 இலிருக்க ஒலிம்பிக் நூறுமீட்டர் பந்தய வீரனாக இருந்தாலும் பயனில்லை என்று உணர்ந்தேன். அங்கே நின்றுகொண்டிருந்த பேட்டரி கார் (வயசாளிக்கும், இயலாதவர்களுக்கும் இயக்கப்படுவது) ஓட்டுநர் இந்திய முகமாக இருக்க அணுகி ”நேரமாகி விட்டது. என்னை C22-க்குக் கொண்டு சேர்க்க முடியுமா?” என்று கேட்டு அவர் ”ஷ்யூர்” என்று முடிப்பதற்குள் அமர்ந்திருந்தேன். அது நடைவேகத்தைவிடச் சற்று கூடுதலான வேகத்தில் செல்லக்கூடியது. ஜீன்ஸ் லூஸாக உணரப் பார்த்தால் பெல்ட்டைக் காணோம். சே..பாதுகாப்புச் சோதனை முடிந்து எடுத்துக்கொள்ள அவசரத்தில் மறந்து விட்டேன்.

“விமானம் எத்தனை மணிக்கு மை ஃபிரெண்ட்?”

“மூணு மணிக்கு அண்ணே!”

அவர் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கி “யூ ஆர் டூ லேட் மேன்!”

காலியாக இருந்த C22-இல் நின்றிருந்த இரண்டு ஊழியர்கள் ஏதோ அறிவித்துக்கொண்டிருந்ததை நிறுத்திக் கடுப்புடன் “இஸ் தட் யூ?” என, நான் எதைக் கேட்கிறார்கள் என்று யோசிக்காமல் ”யாஆஆஆஆ” என்று மூச்சு வாங்கினேன். என் போர்டிங் கார்டை வாங்கி ஸ்கேனருக்குக் காட்டிவிட்டு ”உங்கள் பெயரைக் ரொம்பவும் கடித்துத் துப்பி அறிவித்தோமா?” எனக் கேட்க “நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கூப்பிட்டுக் கொள்ளுங்கள், விமானத்திலேற அனுமதித்ததற்கு நன்றி” என்றதும் அட்டகாசமாகச் சிரித்தார்கள். பேட்டரிகார் ஓட்டுநருக்கு நன்றி சொல்லி ஓடி உள்ளே மற்ற பயணிகளின் முறைப்பைச் சட்டை செய்யாமல் இருக்கைக்குக் சென்று அமர்ந்து அருவியாய்க் கொட்டிய வியர்வையைத் துடைத்துக்கொண்டேன்.

பாஸ்டன் விமானநிலையத்தைத் தொட்டதும் வெளியே வந்து பெட்டிகளைக் கையாளும் வாடிக்கையாளர் சேவை மையத்திற்குக் சென்றதில் உள்ளே ஓரமாக எனது பெட்டி இருந்ததைக் கண்டதும் நிம்மதி - நெடுநேரம் கழித்து லேசாகப் புன்னகைக்கக்கூட முடிந்தது.

அந்த ஊழியர் தூக்கக் கலக்கத்திலிருந்தார். அவரிடம் ரசீதைக் கொடுத்து எனது பெட்டியைச் சுட்டினேன்.

"Your ID please!"

நான் எனது ஓட்டுநர் உரிமத்தை எடுத்துக் கொடுக்க கொஞ்சநேரம் ஆராய்ந்துவிட்டு ”You are not Sam Anderson. Are you?" என்றார். (கட்டுரையின் முதற் பத்தியைப் படிக்கவும்)!

***

Wednesday, January 26, 2011

“குடி“யரசு தின வாழ்த்துகள்



டாஸ்மாக் தந்து தமிழன்
டவுசரைக் கழட்டிட்ட
டமில் தலைவருக்கு
டாக்டர் கலைஞருக்கு
டக்கீலா உப்பு எலுமிச்சை
கலந்த “குடி”யரசுதின
வாழ்த்துகள்!

***

Tuesday, January 04, 2011

ஆப்பிள் முகம்


நள்ளிரவு இருக்கும். "உலகமே வாங்கிக்கிட்ருக்கும்போது இன்னிக்கு வரைக்கும் ஐஃபோன் வாங்காம இருக்கியே? நீயெல்லாம் ஒரு மனுஷனா?” என்று நடிகர் விஜயகுமார் வேட்டி கை-பனியனுடன் வயிற்றை எக்கிக் கைநீட்டிக் கத்தியதும், மிரண்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்துகொண்டேன்.

ரொம்ப வருடங்களாவே ஆப்பிள் நிறுவனங்களின் படைப்புகள் மேல் எனக்குத் தீராத காதல். மதுரை தியாகராஜர் மேலாண்மை நிறுவனத்தில் படிக்கும்போது பேராசிரியர் படிக்கச் சிபாரிசு செய்த புத்தகங்களில் ஒன்று John Sculley எழுதிய “Pepsi to Apple". அப்போது நான் பெப்ஸி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்ததாலும் சுஜாதா சில விஞ்ஞான படைப்புகளில் மக்கின்டாஷ் என்ற குறிப்பிட்ட அந்த அபார “வஸ்து“வின் பால் எழுந்த ஈர்ப்பினாலும் அப்புத்தகத்தை வாங்க ஆவலாக இருந்து சில மாதங்கள் கழித்து சென்னைக்கு பணி நிமித்தமாக வந்தபோது எழும்பூர் ரயில் நிலையத்தின் ஹிக்கின் பாதம்ஸ் கடையில் கிடைத்ததும் வாங்கி மதுரைக்கு வந்து சேர்வதற்குள் பாதிப் புத்தகத்தைப் படித்து முடித்திருந்தேன். பெப்ஸி என்ற அசுர நிறுவனத்திலிருந்து ஆப்பிள் என்ற (அப்போதைய) கைக்குழந்தை நிறுவனத்திற்கு ஜான் ஸ்கல்லி எப்படி அவரது ரசிகராக இருந்த ஆப்பிள் நிறுவனர் Steve Jobs-ஆல் கவர்ந்திழுக்கப்பட்டார் என்ற விவரணைகளோடு, எண்பதுகளின் மத்தியில் மக்கின்டாஷை எப்படி அமெரிக்காவின் சூப்பர் பௌல் தருணத்தில் சந்தைப்படுத்தினார்கள் என்ற முழு விவரங்களும் அப்புத்தகத்தில் மகா சுவாரஸ்யமாக விவரிக்கப்பட்டிருந்தன. அப்புத்தகத்தைப் பற்றி விரிவாக இன்னொரு நாள் எழுதவேண்டும்.

அப்புத்தகத்தைப் படித்ததிலிருந்தே ஆப்பிள் நிறுவனத்தின் மீது ஒரு கவர்ச்சி எழுந்திருந்தது. மதுரையில் பெரியார் பேருந்துநிலையத்தின் தள்ளுவண்டிக்கடைகளில் வாங்கிய ஆப்பிள்களைத் தவிர எனக்கு வேறு எந்த ஆப்பிளும் தெரியாது. அப்போது நான் “பொட்டி தட்டும்” வேலையிலும் இல்லாததால் கணிணி என்பதெல்லாம் காணாதனியாகவே இருந்தது. இந்தியாவில் இணையம் அப்போதுதான் எட்டிப்பார்த்திருக்க, மின்னஞ்சல் அனுப்ப மதுரையிலிருந்து சென்னை VSNL நிறுவனத்திற்கு STDயில் மாடம் மூலமாக அழைக்க வேண்டும். மூன்று நிமிடங்களுக்குத் தொண்ணூறு ரூபாய் கட்டணம். XT போய் AT கம்ப்யூட்டர்கள் உலவிக்கொண்டிருந்தன. 40 MB வட்டுவே நாற்பதாயிரம் ரூபாய்க்கு விற்ற காலம். மெடிக்கல் ரெப்களுக்கு அடுத்தபடியாக கம்ப்யூட்டர் விற்பனை ஆசாமிகள் டிப்டாப் உடையில் வெளியில் சுற்றத் தொடங்கிய காலம். மக்கின்டோஷ் எப்படி இருக்கும் என்று யோசனை அரித்துக்கொண்டே இருந்தது.

தொண்ணூறுகளின் இறுதியில் பேங்களூருக்குக் குடிபெயர்ந்தபோது அங்கே மேலாளரைத் தாஜா பண்ணி முதன்முறையாக ஒரு iMac ஒன்றை வாங்கி பெட்டியைப் பிரித்தபோது அது ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் E.T. யில் வரும் தூர லோகப் பிராணியின் மண்டை மாதிரி, பெரிய நீலக் கலர் முட்டை மாதிரி உள் அவயங்களைக் காட்டிக்கொண்டு இருந்தது. எங்களது பிஸிக்களின் CPUக்களெல்லாம் பெரும்பாலும் தகர மேலாடை இழந்து பே-என்று பிரித்துப் போட்டே பாதி நேரம் இருக்கும். மெமரி அப்கிரேட், ஸ்லேவ் ஹார்ட் டிஸ்க் என்று எதையாவது ஆணிபிடுங்கிக் கொண்டே இருப்போம். பார்ப்பதற்கு பிரித்துப் போட்ட எந்திரன் சிட்டி ரோபாட் மாதிரியே இருக்கும். அதையெல்லாம் பார்த்துப் பழகிவிட்டு தி்டீரென்று ஐஸ்வர்யா ராய் மாதிரி (Again எந்திரன்... வேற வழி? இது எந்திரன் காலம். எந்திரன் அல்லது ஐ.ராய் உவமை இல்லாமல் ஒன்றை அனுப்பி “உங்கள் படைப்பில் எந்திரன் பற்றி எதுவும் குறிப்பிடாததால் பிரசுரத்திற்குத் தகுதியற்றதாகிவிட்டது. பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம் - பொ.ஆ.” என்று கடிதம் வருகிறது. சரி வலைப்பதிவில் போடலாம் என்று இட்டாலும் Blogger கூடத் துப்பிவிடுகிறது) ஒன்றைப் பார்த்தால் எப்படி இருக்கும்!. அதில் டெர்மினேட்டர் படமெல்லாம் போட்டு - அப்படி ஒரு துல்லியமான வீடியோவை எந்தக் கணிணியிலும் பார்த்ததே இல்லை. ”க்ராஷே ஆவாதாம்டா” ”வைரஸே கிடையாதாம்” ”Ctrl+Alt+Del பண்ணவே வேண்டாமாம்” ”தொங்காதாம்” என்று ஆளாளுக்கு கமெண்ட் அடித்து மொத்த ஆபிஸூம் கண்கொட்டாமல் ஐமேக்கை வெறித்துக்கொண்டிருக்க - லோ ஹிப் ஷீலாவைக்கூட யாரும் சைட் அடிப்பதாகக் காணோம். புது வேலைக்காக வெளிநாட்டுக்கு இடம்பெயர்ந்தபோது ஐமேக்கை பிரிந்து போகச் சோகமாக இருந்தது.

அப்புறம் சில வருடங்கள் ஆப்பிள் தொடர்பற்று இருந்து, அமெரிக்காவுக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு வந்ததும் அமெரிக்கா(வுக்குப் புதிதாக வந்த) இந்தியக் கலாசாரப்படி சுற்று வட்டார ஷாப்பிங் மால்களில் வாரயிறுதிகளை வாயைப் பிளந்துகொண்டு களித்தேன். Best Buy-இல் பால்போலத் தூய்மையாக 20 இன்ச் தட்டை மானிட்டர்களோடு பாரதிராஜா பட தேவதைகள் போல வரிசையாக அமர்ந்திருந்த ஐமேக்கின் புதிய அவதாரங்களைப் பார்த்தபோது புல்லரித்தது. வீட்டுக்கு ஒன்றை வாங்கிப் போகலாம் என்று பார்த்தால் 1500 டாலர்கள் என்று போட்டிருந்தார்கள்! ஒரு மாத அபார்ட்மெண்ட் வாடகை! அம்மாடி என்று பின்வாங்கி “சரி நமக்கு ஆப்பிள் பிராப்தம் அம்புட்டுத்தான்” என்று நினைத்துக்கொண்டு நடையைக் கட்டினேன். அவ்வப்போது ஆப்பிள் தளத்திற்குச் சென்று விண்டோ(ஸ் மடிக்கணிணி மூலமாக) ஷாப்பிங் செய்வதோடு சரி.

2007 ஜனவரியில் ஆப்பிள் நிறுவனம் ஐஃபோன் என்ற புதிய வஸ்துவை அறிமுகம் செய்தது. கடும் குளிர்காலம் - இங்குள்ள ஆப்பிள் ஸ்டோர்களுக்கு முதல்நாள் இரவே தடிமனான ஜாக்கெட்டுகளைப் போட்டுக்கொண்டு மக்கள் படையெடுத்து இரவு முழுதும் பனியில் குளிரில் நனைந்து மறுநாள் கடை திறந்ததும் அடித்துப் பிடித்து ஐஃபோனை வாங்கி ஜென்ம சாபல்யம் அடைந்ததை எல்லாச் சானல்களிலும் காட்டினார்கள். நைந்து நொய்ந்திருந்த ஆப்பிள் நிறுவனத்திற்குப் புனர் ஜென்மம் கொடுத்தது - ஸ்டீவ் ஜாப்ஸின் மறு பிரவேசம் - மற்றும் ஐஃபோனின் ஜனனம். அன்று ஆரம்பித்த ஓட்டம் அசுர ஓட்டமாக மாறி ஆனானப்பட்ட மைக்ரோஸாஃப்ட்டையே பின்னுக்குத் தள்ளி ஆப்பிளை முதன்மை நிறுவனமாக ஆக்கியிருக்கிறது ஒரு கைக்கடக்கமான சிறிய கைபேசி சாதனம் - நம்பக் கடினமாக இருந்தாலும் அதுதான் நடந்தது - நடக்கிறது.

தொடுதிரை கண்டுபிடிக்கப்பட்டதென்னவோ கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன்! ஆனால் அதன் பயன்பாட்டில் புரட்சியைச் செய்தது ஆப்பிள் நிறுவனம் - ஐஃபோனின் மூலமாக. இன்றைக்கு ஆப்பிளின் வருமானத்தில் பாதி ஐஃபோன் மூலமாக வருகிறது என்கிறார்கள். முதல் தலைமுறை மாடலுக்குப் பின் ஐஃபோன் 3ஜி அறிமுகப்படுத்தப்பட்டு பின் 3ஜிஎஸ் வந்தது. அதோடு நிற்கவில்லை. iPad-ஐ களமிளக்கினார்கள். “எது போலவும் இல்லாத, எதோடும் ஒப்பிட முடியாத ஒரு புதிய வகைப் பயன்பாட்டுச் சாதனமாக” iPad-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள். அதுவும் பெரும் வெற்றி. ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபேட் செப்டம்பர்வரை எண்பது லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்றிருக்கிறது - ஆயிரம் டாலர் விலையில் எட்டாக்கனியாக ஆப்பிள் கணிணிகள் இருக்க அதற்குப் பாதி விலையில் ஆனால் அதிக கவர்ச்சியோடு வெளியிடப்பட்டதும் ஐபேட் வெற்றிக்குக் காரணம் - எல்லாவற்றுக்கும் மேலாக கைக்கடக்கமாக, தொடுதிரையுடன் எங்கு வேண்டுமானாலும் இணையத்தொடர்புடன் எடுத்துச் செல்லும் வசதி மற்ற கணிணிகளை ஆட்டைக்கு வரவிடாமல் செய்துவிட்டது. 2011-இல் இதன் விற்பனை கிட்டத்தட்ட நாலரைக் கோடியாக இருக்கும் என்று கணிக்கிறார்கள் வல்லுநர்கள்.

ஐபேட் ஒரு பக்கம், இந்த வருடம் சந்தைக்கு வந்த ஆப்பிளின் இன்னொரு கிளியான ஐஃபோனின் 4 ஜூலைமுதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு விற்பனை எண்ணிக்கை ஒரு கோடியே நாற்பத்தோரு லட்சத்திற்கும் மேல்! போன வருடம் இதே காலகட்டத்தில் அதன் விற்பனை எழுபது லட்சம் மட்டுமே! கிட்டத்தட்ட தொண்ணூறு விழுக்காடு அதிக விற்பனை! இது ஒரு பெரும் சாதனை. பலன் - பரம வைரியான இருபது வருடங்களுக்கு மேல் பணக்கார நிறுவனமாகத் திகழ்ந்த மைக்ரோசாஃப்டை ஓட்டத்தில் முந்தியது. 2003-இல் 10 டாலரே இருந்த ஆப்பிளின் பங்கு மதிப்பு இன்றைக்கு 320 டாலருக்கு மேல். அடுத்த வருடம் இன்னும் விலை எகிறும் என்று பங்குச்சந்தை நோக்கர்கள் கணித்திருக்கிறார்கள். இன்றைய தேதிக்கு ஆப்பிளின் சந்தை மதிப்பு முந்நூறு பில்லியன் டாலர்களுக்கு மேல். (இந்திய ரூபாயில் மதிப்பைக் கண்டுபிடிக்க உங்களது அபாக்கஸ்/கூமான் குழந்தைகளை அணுகுக!). ஆப்பிளை விட்டால் இவ்வளவு சந்தை மதிப்பு இருக்கும் மற்ற இரு நிறுவனங்கள் எக்ஸான்மொபிலும் பெட்ரோசைனாவும்! ஆக தொழில்நுட்பவுலகில் இன்று ஆப்பிள் தனிக்காட்டு ராஜாவாக நடைபோடுகிறது. எல்லாம் அந்த 54 வயது இளைஞர் ஸ்டீவ் ஜாப்-இன் மகிமை!

ஒன்று வெற்றி பெற்றதும் அதைத் தொடர்ந்து ஈசல் பூச்சிகள் போல அதேபோல பல சந்தைக்கு வருவது தமிழ்ப்படங்களுக்கு மட்டுமல்ல - உலக அளவில் எல்லா மட்டத்திலும் எல்லா நிறுவனங்களிலும் எல்லாச் சந்தைகளிலும் நடக்கிறதுதான். ஐஃபோன் போலவே பல நூறு கைபேசிகள் சந்தைக்கு வந்தாலும் ஐஃபோனின் மவுசு கொஞ்சமும் குறையவில்லை. கூகுளின் ஆண்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் மோட்டரோலா போட்டி கைப்பேசி ஒன்றை இறக்கி சந்தையைக் கலக்க ஆரம்பித்ததும் ஆப்பிள் சும்மா இல்லை. இந்த வருடம் ஜூனில் நான்காம் தலைமுறை மாடலாக ஐஃபோன்-4 ஐ அறிமுகம் செய்தது. iPhone 4 இன்னொரு அபார சாதனம். இரண்டு கேமராக்கள். Face Time என்று வீடியோ அழைப்பு வசதி என்று கலக்கலான ஃபோன். சில குறைகள் இருந்தாலும் இன்று வரை ஸ்மார்ட்ஃபோன் வகையில் முன்னணியில் ஓடிக்கொண்டிருப்பது ஐஃபோன் 4 தான். ஆப்பிள் இதயத்திற்கு நல்லதென்றால் iPhone ஆப்பிளின் இதயம் என்று சொல்லலாம்.

உலகின் புருவங்களை வியப்பால் தொடர்ந்து விரியச் செய்து கொண்டிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

”எவ்வளவோ பண்றோம், இதைப் பண்ண மாட்டோமா” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு எனது ஐந்து வயது HTC கைப்பேசியை (பாதி உயிர்தான் இருந்தது) தூக்கிப் போட்டுவிட்டு இக்கட்டுரையின் முதல்வரியில் வந்த கனவுக்கு மறுநாள் போய் ஒரு ஐஃபோன் 4 வாங்கியே விட்டேன். அதை வெறும் கைபேசி என்று சொல்லிவிட முடியாது. ஆப்பிளின் இணையக் கடையில் ஆயிரக்கணக்கான மென்பொருட்கள். கோடிக்கணக்கான பாடல்கள். கைபேசி என்பது தவிர பல நூறு பயன்பாடுகள். கற்பனைதான் எல்லை என்று சொல்வதைப் போல இதை எது எதற்கோ வித்தியாசமாகப் பயன்படுத்துகிறார்கள்!

போன வாரம் CNN-இல் இளைஞர் குழு ஒன்று வெறும் ஐஃபோன்களை மட்டும் வைத்துக்கொண்டு ஓடும் ரயிலில் கச்சேரி செய்ததைக் காட்டினால்கள். ஐஃபோனை இசைக்கருவி போலப் பாவிக்க மென்பொருள் இருக்கிறது. புல்லாங்குழல்கூட ஊதலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு இசைக்கருவியாக அவரவர் ஐஃபோனை உருமாற்றிக்கொண்டு வாசிக்க ஒருவர் பாடினார்! இதேபோல் நிறைய ஆர்க்கெஸ்ட்ரா குழுக்கள் கிளம்பியிருக்கின்றன. இங்கே ஒரு கச்சேரி!

நியூயார்க்கில் ஒரு தந்தையும் மகனும் எட்டு மாதங்கள் கடினமாக உழைத்து பலூன் ஒன்றில் ஒரு High definition கேமராவையும் ஐஃபோனையும் இணைத்து ஒரு லட்சம் அடி உயரத்திற்கு அதை காற்றில்லா வெற்றிடம் வரை பயணிக்கச் செய்து அதன் மொத்த பயணத்தையும் வீடியோவில் பதிவு செய்திருக்கிறார்கள். காற்றில்லா வெற்றிடத்திலிருந்து பூமியை சாமான்யனின் செலவில் படமாக்கியிருக்கிறார்கள். அந்த வீடியோ இங்கே!

iPhone 4 வாங்கியதும் இது வரை நான் கைபேசியைப் பயன்படுத்திய விதமே மாறிப்போனது. கர்ணன் கவச குண்டலம் மாதிரி எப்போதும் அதை வைத்துக்கொண்டு சின்னச் சின்ன கணிணி விளையாட்டுகளை இறக்கி விளையாடிக்கொண்டு - எனக்கென்னவோ இது முப்பது நாளில் தீர்ந்து போகிற மோகமாகத் தெரியவில்லை. ஐந்து மெகாபிக்ஸல் கேமரா இருப்பதால் கிளிக்கி உடனடியாக Facebook-க்கோ Twitter-க்கோ அல்லது மின்னஞ்சலாகவோ இணையக் குழாமிற்கு அனுப்பிவிடமுடிகிறது. HD video எடுத்து Youtube-க்கு ஏற்றிவிட முடிகிறது. வழி தவறிப் போனால் GPS ஆக வழி கண்டுபிடித்துக்கொள்ள முடிகிறது. iBooks மென்பொருளை தரவிறக்கிக்கொண்டு நிறைய இலவச மின்புத்தகங்களை இறக்கினேன் - தஸ்தாவ்யேஸ்க்கியிலிருந்து எமிலி டிக்கின்ஸன் வரை நிறைய புத்தகங்கள். முந்தா நாள் மறுபடியும் ATT கடைக்குப் போய் மனைவியின் பழைய கைபேசியைத் தூக்கிப் போட்டுவிட்டு அவருக்கும் iPhone 4 ஒன்றை வாங்கிக் கொடுக்க குழந்தைகள் குதித்த குதிக்கு அளவே இல்லை.

நேற்று அதிகாலை வாஷிங்டன் டிஸிக்கு அலுவல்வேலையாகச் சென்றுவிட்டு பாஸ்டனுக்குத் திரும்ப மாலை விமானத்தைப் பிடிக்க நிலையத்திற்கு வந்து - கிடைத்த பொழுதில் மனைவியை அழைக்க Face Time ஐ முதன் முறையாக உபயோகப்படுத்திப் பார்த்தேன். காட்சிக்கு இடையே கண்ணாடியில் முகம்பார்த்துக்கொள்ளும் நடிகையைப் போல iPhone னை முகத்திற்கு நேராக உயர்த்தி வைத்துக்கொண்டு அந்தப் பக்கம் வீட்டில் குழந்தைகள் குதூகலிப்பதையும் புன்னகையை அடக்கக் கஷ்டப்படும் மனைவியையும் பார்க்க முடிந்தது வித்தியாசமான சந்தோஷமான அனுபவம். கணிணி யுகத்தில் எல்லாமே இணையம் மூலமாக - சாட், மின்னஞ்சல் என்று சந்திப்புகள் குறைந்து - முகம்பார்த்துப் பேசுவதும் குறைந்துபோய் விட்ட காலகட்டத்தில் ஃபோனை அப்படி உயர்த்தி வைத்துக்கொண்டு பேச வெட்கமாக இருந்தது.

என்ன இனிமேல் வேலைக்கு ஓபியடித்துவிட்டு எங்காவது நண்பர்களோடு போனால் ”நான் மீட்டிங்கில் பிஸி” என்று மனைவியிடம் பஜனை பண்ண முடியாது! Face Time உபயோகப்படுத்துவதில் சில வரையறைகள் இருக்கின்றன (வைஃபை வேண்டும்). எதிர்காலத்தில் அவை தளர்த்தப்பட்டு எந்தப் பொண்ணுடனும்...ஸாரி... ஃபோனுடனும் Face Time மூலமாக பார்த்துக்கொண்டு உரையாட முடியலாம்.

ஏற்கனவே கணிணி மூலமாக வீடியோ சாட் செய்ய முடிகிறதுதான். ஆனால் அறை இருட்டாக மணிரத்னம் படம் பார்ப்பது மாதிரி இருக்கும். கணிணி முன்னால் பிள்ளையார் போல உட்கார்ந்தே ஆக வேண்டும். பவர்கட்டோ இணையக்கட்டோ ஆனால் பேச, பார்க்க முடியாது. ஆனால் ஐஃபோன் மூலமாக இம்மாதிரி இடக்கட்டுப்பாடுகளன்றி எங்கிருந்து வேண்டுமானாலும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு தொலைபேசலாம். அப்படி எதிர்முனை ஆசாமியைப் பார்த்துப் பேசுவது ரொம்பவே வித்தியாசமான அனுபவம். ஆனால் சேட்டைசெய்துகொண்டே அல்லது முகத்தை கேலியாக வைத்துக்கொண்டே மேலாளரிடம் “உடம்பு சரியில்லை ஸார். லீவு” என்று பொய் பேச முடியாது. பாத்ரூமில் உட்கார்ந்துகொண்டு பேச முடியாது. இது மாதிரி சில்லறைக் குறைபாடுகளைத் தவிர்த்துப் பார்த்தால் இந்த வசதி குறுகிய காலத்தில் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

இம்மாதிரி ஃபோன் வாங்கியதற்கெல்லாம் கட்டுரை எழுதுவேன் என்று நினைத்தே பார்த்ததில்லை. ஐஃபோன் வசியம் அதைச் செய்திருக்கிறது. ஆனால்..... கொஞ்சம் இருங்கள். யாரோ அழைக்கிறார்கள்.

நான்: “அலோ”

“அலோ ரவியா? யார்னு தெரியுதா?”

”ஆமாங்க.. ஹிஹி நீங்களா?” நன்கு பரிச்சயமான குரல். ஆனால் யாரென்று தெரியவில்லை.

“நல்லாருக்கியா? அமெரிக்காலதான் இருக்கியா?”

அமெரிக்கா தொலைபேசி எண்ணை அழைத்துவிட்டு இம்மாதிரி ஐன்ஸ்ட்டீன் கேள்விகள் கேட்கும் நண்பர்கள் எனக்கு நிறைய பேர் இருக்கிறார்கள். சினிமா தியேட்டரில் இடைவேளையில் சந்தித்து “என்ன இந்தப் பக்கம்?” வகையறா நண்பர்கள். ஆனால் இவர் யாரென்று தெரியவில்லை. இந்த லட்சணத்தில் ஐஃபோன் இன்றைய பழமொழியாகக் காட்டியது ”உங்கள் நண்பர்கள் யாரென்று சொல்லுங்கள். நீங்கள் யாரென்று நான் சொல்கிறேன்” - நேரம்! யாராக இருக்கும்? ஃபோன் திரை வேறு 'Unidentified number' என்று காட்டுகிறது.

“ஆமாங்க. இங்கிட்டுதான் இன்னும் இருக்கேன்”

”பாத்து கொள்ள வருஷமாயிடுச்சே. எப்ப இந்தப் பக்கம் வர்றதா உத்தேசம்?”

ஜூலையில்தான் போய்விட்டு வந்தேன் என்று சொல்லலாமா என்று யோசித்து ஏன் என்னை பார்க்க வரவில்லை என்று எகிறுவாரோ என்று பயமாக இருந்தது - யாரென்று தெரிந்தால்தானே? ”வரணும் ஸார்... அடுத்த வருஷம் வரலாம்னுட்டுருக்கேன்”

“என்ன அங்க போய் ரொம்பத்தான் மாறிட்டே? வாங்க போங்கங்கறே? ஸார்ங்கறே? என்னடா ஆச்சு உனக்கு?”

யாரென்று சொல்லித் தொலையேன் எழவே என்று கத்தலாம் போல இருந்தது.

“ஹிஹி.. சும்மாத்தான். இங்க ஆபிஸ்ல இருக்கேன். வேலை மும்முரம் அதான். தப்பா நெனச்சுக்காதே”

”நீதான் எப்பவும் பிஸி பிஸிம்பியே... இன்னும் எழுதறியா?”

”எப்பவாவது. நேரம் இல்லை முன்ன மாதிரி”

”சரி ஐஎஸ்டி கால். நீ எனக்கு சனிக்கிழமை காலைல கட்டாயம் ஃபோன் பண்ணு. ஒரு முக்கியமான விஷயம் பேசணும். உனக்குத்தான் Vonage இருக்கே. இந்தியா கால் ஃப்ரீதானே? சனிக்கிழமை காலைல மறக்காம ஃபோன் பண்ணனும் என்ன? நீ மட்டும் பண்ணலை அப்புறம் நான் உன்னைக் கூப்பிடவே மாட்டேன்” வைத்தே விட்டார்(ன்).

Face Time!!!!!

***

நன்றி: தென்றல்