Thursday, February 06, 2014

குளியல்


பதின்வயது வரை வீட்டில் குளித்ததாய்ச் சரித்திரமே கிடையாது - உடனே மூக்கைப் பொத்தாதீங்கய்யா. 80-களில் குளியல் என்றாலே விவசாயக் கிணறு (அல்லது அதன் பம்ப்பு செட்டு), நதி, குளம், வாய்க்கால் என்றுதான் குளியலிடங்கள். இவையெதுவும் இல்லாத ஊர்களில் வாழ்ந்த(வாழ்வ)தில்லை! அதிலும் பம்ப்பு செட்டு ஓடும்போது தொட்டியில் இறங்கிக் கொஞ்சம் குளித்துவிட்டு தலையை மெதுவாய் குழாயருகே கொண்டுபோனால் கழுத்தை முறிக்கும் வேகத்துடன் தண்ணீர் தலையில் அறையும். தலையின் அழுக்கென்ன, மயிரையே பிடுங்கும் வேகம்! 

அதிகாலையில் கழுத்தில் சிவப்புத் துண்டை மாலையாகப் போட்டுக்கொண்டு கிளம்பினால் பள்ளி துவங்க அரைமணி நேரத்துக்கு முன்பு வரை குளியல் போட்டுவிட்டு அகோரப் பசியுடனும், சிவந்த கண்களுடனும் வீட்டுக்கு வருவோம். பிறகு மூணு, நாலு மணி வரை பள்ளி. வந்ததும் திரும்ப சிவப்புத் துண்டு, கைக்கடக்கமாகச் சோப்பு என்று கிளம்பி இருளும் வரை தண்ணீரில் விளையாட்டு. 

வற்றாயிருப்பில் கிணறுகள், குளங்கள், கண்மாய்களுக்குப் பஞ்சமே இருந்ததில்லை. (வி)சாலாட்சி, சிவன், அனுமார் கோயில்களுக்குப் பின்னால் சோகையாக அர்ஜூனா நதி - பெரும்பாலும் மணல்தான் ஓடும். நான் இருந்த பதிமூன்று வருடங்களில் ஓரிரண்டு தடவைதான் அந்நதியில் நீர் நிரம்ப ஓடியிருக்கிறது. மற்ற நாட்களில் ஓரடி அகலத்துக்கு ஓரமாய் ஓடும் நீரில் உருண்டு புரண்டுதான் உடலை நனைக்கவேண்டும். பிறகு சுத்தமாக வற்றிவிட்டது. 

எண்பதுகளின் மத்தியில் முசிறிக்குக் குடிபெயர்ந்தபோது, காவிரி வரவேற்றாள். அவ்வளவு தண்ணீரைப் பார்த்ததேயில்லை. ஆண்கள், பெண்கள் படித்துறைகள், முசிறி-குளித்தலை இணைப்புப் பாலம், அகண்ட காவிரி, கரையையொட்டி பல கிலோமீட்டர்கள் நீண்டு ஊர்களை இணைத்த தார்ச்சாலைகளும், வாழைத்தோப்புகளும், பசுமை போர்த்திய வயல்களும் என்று புதியதொரு உலகம்! உடலும் மனதும் ஜிலுஜிலுவென்றிருக்கும். காவிரியில் எந்நேரமும் தண்ணீர். கரையொட்டியிருக்கும் எளிய வீடுகள். வீட்டின் கொல்லைப்புறத்திலிருந்து காவிரிக்குள் இறங்கிவிடலாம். பெரிய பெரிய படிகளாக இருக்கும். 

கோடையில் நீர் கொல்லைப்புற படிகளிலிருந்து படிபடியாக இறங்கி பின்னோக்கிப் போகும். நதி நடுவில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும் மணல் பிரதேசங்கள், கோரைப் புற்கள், பெரும் பாறையொன்று, மீன்களின் எலும்புக்கூடுகள். படித்துறையருகே நீர் சற்று வெதுவெதுப்பு கூடி ஓடும். கொக்குகள் அலைபாய்ந்துகொண்டிருக்கும். மக்கள் நதியைக் கடந்து இக்கரைக்கும் அக்கரைக்கும் போவார்கள். படிகளில் நீர்க்கறையைப் பார்த்து “அவ்ளோ தண்ணி ஓடிச்சு” என்று அங்கலாய்த்துக் கொள்வோம். 

படித்துறை நீரைக் கடந்து மணல்பிரதேசத்தில் பையன்களெல்லாம் கிரிக்கெட் விளையாடுவோம். கண்களில் அவ்வப்போது மணல் தெறிக்கும். தலைமட்டும் வெளியில் தெரிய மணலில் புதைத்துக்கொள்வோம். சிறு மீன்களை வேட்டியையோ, துண்டையோ விரித்துப் பிடித்து ஆங்காங்கே சிறு குழிகள் தோண்டி ஊற்றெடுக்கும் நீரில் கொஞ்ச நேரம் வைத்திருந்து, கிரிக்கெட் முடிந்ததும் அக்குழியிலிருந்து மணற் கால்வாய் தோண்டி நதிநீரிணைப்பு செய்து மீன்கள் மெதுவாக நதியில் கலந்து மறைவதைப் பார்த்துவிட்டு படித்துறையைச் சுற்றியிருக்கும் புதர்களில் பதுங்கியிருபக்கும் பாம்புகளை நினைத்து மயிர்கால்கள் கூச்செரிய ஈரக்கால்களுடன் வீட்டுக்கு நடப்போம். 

கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கவும் கொஞ்சம் கொஞ்சமாய் நீர் வரத்து அதிகரித்து நதி நடுவேயான தற்காலிக மணல் உலகம் மறையும். 

காற்றில் சிறந்தது மழைக்காற்று!

ஆடிப்பெருக்கில் வீர இளைஞர்கள் காவிரிப் பாலத்திலிருந்து நீரில் சொருக்கடிப்பார்கள். கார்ப்பெட் மாதிரி அவ்வப்போது வெங்காயத் தாமரைக் கூட்டம் பறவைகளுடன் கடந்து போகும். சிலசமயம் வயிறூதிய கன்றுக்குட்டியுடலும், எப்போதாவது ஒரு பிணமும். 

நதியில் குளிக்கும் போது சோப்பெல்லாம் போடுவதில்லை. மணலையே எடுத்து கரகரவென்று தேய்த்துக்கொள்வோம். பாத அழுக்குகளை மீன்கள் பார்த்துக்கொள்ளும். அக்ரஹாரத்து மாமாக்கள் பூணூலால் உடலைத் தேய்த்துக்கொள்வார்கள். பெண்கள் மாஜிக் நிபுணிகள் மாதிரி குளிப்பார்கள்.  

ஆலமரத்தடிப் பிள்ளையார், குழந்தைகள், பெண்கள், ஆண்கள், வண்டி மாடுகள், கரையோரம் எசமானர்களுக்குக் காத்திருக்கும் நாய்கள், சலவைத்துணி மூட்டைகளுடன் கழுதைகள், மீன்கள், மின்கம்ப காகங்கள், ஆந்தைகள், கொக்குகள், தண்ணீர்ப் பாம்புகள், எப்போதாவது கோவில் யானை என்று நீரை வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த நதிக்கரை நாகரிகம் அது. 

வெகு சில நாட்களில் இருள் கவிந்து வீட்டுக்கு வந்து திண்ணையில் வீட்டுப்பாடம் செய்ய தெருவிளக்கு வெளிச்சத்தில் அமர்கையில் கிரிக்கெட் சுவாரஸ்யத்தில் விடுதலை செய்ய மறந்து போன மணற்குழி மீன் குஞ்சுகள் நினைவுக்கு வரும். அன்றிரவு தூக்கம் வராது.

***

2 comments:

Poornima Srinath said...

My mother is from watrap. You have given a beautiful description about the village.reading your blog just makes me feel that I should have visited the place long ago. I came across this while searching to see some images of watrap. Thank you so much.

poomeena@gmail.com said...

My mother is from watrap. You have given a beautiful description about the village.reading your blog just makes me feel that I should have visited the place long ago. I came across this while searching to see some images of watrap. Thank you so much.