Sunday, April 17, 2005

*** வீடு ***

*** வீடு ***

மதுரைவாசிகள் என்ன தான் 'அண்ணே, அண்ணே' என்று மிகவும் 'மருவாதையுடன்' அரிவாளால் வெட்டிக்கொண்டாலும், அவர்களின் நகைச்சுவை உணர்வுக்குப் பஞ்சமில்லை என்பது என் அபிப்ராயம். அது எல்லாவிடத்திலும் வெளிப்படும்.

அங்கிருந்தது கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள். வாடகை வீட்டிலிருந்ததால், மதுரைக்குள்ளேயே இடம் மாறிக் கொண்டிருந்தோம். இரண்டு வருடத்திற்கு மேல் தங்க விட மாட்டார்கள். விட்டால் வீடு திரும்பக் கிடைக்காது என்று பயம்.

முதலில் இருந்தது ஜெய்ஹிந்த்புரத்தில் பாரதியார் தெருக்கோடியில் இருந்த நாடார் காம்பவுண்ட்டில். காம்பவுண்ட் என்று பெயர்தானே தவிர காம்பவுண்ட் கிடையாது. இருவரிசையில் பத்து வீடுகள். கடைசியில் வரிசையாக நான்கு (பொது) குளியலறைகளும், கழிப்பறைகளும். பதினைந்துக்குப் பத்தடி இடத்தை இரண்டாகப் பிரித்து ஒன்று சமையலறையாகவும், இன்னொன்றை மற்ற எல்லாவற்றுக்கும் புழங்கிக்கொண்டோம்.

இப்படியெல்லாம் வாழ்வார்கள் என்பதையே அப்போதுதான் தெரிந்து கொண்டேன். வத்திராயிருப்பில் தனி வீடு. முசிறியிலும் தான். கிராமங்களிலும் சற்று பெரிய கிராமங்களிலும் வீடுகள் அகலம் குறைவாகவும், அநியாயத்திற்கு நீளமாகவும் கட்டியிருப்பார்கள். வாசலில் யார் வந்தாலும், வீட்டின் எந்தப் பகுதியிலிருந்தாலும் லேசாகத் தலையை நீட்டிப் பார்த்துவிடலாம். தேடவேண்டியதில்லை. தெருவில் நின்று கொண்டு பார்த்தால், அரைக் கிலோமீட்டர் தள்ளி வீட்டுப் பெண்மணி கொல்லைப்புறக் கிணற்றில் துணி துவைப்பதைப் பார்க்கலாம். வாசல் கதவுகள் பெரும்பாலும் திறந்து வைக்கப்பட்டிருக்கும். இந்த நீள அமைப்பின் லாஜிக் என்னவென்று யாராவது சொன்னால் தேவலை.

இன்னொரு விஷயம் வீடுகள் அடுத்தடுத்து இடைவெளியில்லாமல் வரிசையாக இருக்கும். வீட்டின் இடது அல்லது வலது பக்கச் சுவர் பக்கத்து வீட்டுக்காரருடையதாக இருக்கும். தெரு முழுவதும் அப்படித்தான். அபூர்வமாக வரும் வெளியூர் திருடர்கள் மொட்டை மாடிகளில் வீடு விட்டு வீடு தாண்டி எளிதாகத் தப்பிச் சென்று விடுவார்கள் என்பதுதான் இதில் உள்ள ஒரே அசெளகர்யம். உள்ளூர் திருடர்களாகிய நாங்கள், அவ்வப்போது மொட்டை மாடியில் காயப்போட்டிருக்கும் வடாமை பிய்த்துத் தின்றுவிட்டுக் காகங்களின் மீது பழிபோட்டுவிடுவோம். காய்ந்த வடாமைவிட, மாவுதான் ரொம்ப ருசி. இன்றும் அம்மா வடாமிற்கு மாவு தயாரானவுடன், ஒரு கையளவு உருட்டிக் கொடுத்துவிட்டுக் காயப் போடச் செல்வார்கள். வேகவைத்த அரிசிமாவின் மிதவெப்பத்துடன், பச்சை மிளகாய் மற்றும் உப்புக் காரத்துடன் வடாம் மாவின் ருசி இருக்கிறதே, அடடா..

பாரதியார் தெரு அடைசலாக, இரைச்சலாக இருக்கும். ஒரு பக்கம் வெல்டிங் ஒர்க்ஷாப்பிலிருந்து தீபாவளி ரேஞ்சுக்கு மத்தாப்புப் பொறிகளுடன் வெல்டிங் நடந்து கொண்டே இருக்க, அடுத்த பக்கம் நியாய விலைக் கடையில் வருடம் முழுவதும் நிரந்தர மண்ணெண்ணை டின்களின் வரிசை நெளி நெளியாக நீண்டு இருக்கும். சைக்கிள் ரிக்க்ஷாக்களில் குழந்தைகளும் அவர்களின் பள்ளிப் பைக்கட்டுகளும் பிதுங்கி வழிய, திறந்த சாக்கடையில் தாரை விட கரிய நிறத்தில் கழிவு ஓடாமல் தேங்கியிருக்கும். அதன் மேல் லேயரில் கொசுக்கள் கால் நனையாமல் அமர்ந்து அவ்வப்போது பறந்து வந்து ரத்த முத்தமிட்டுப் போகும். ஒரு ஆட்டோ தெருவில் வந்தால் இருசக்கர வண்டிகள் நிறுத்தப்பட்டு இடதோ வலதோ சாய்ந்து கால் ஊன்றிக்கொண்டு வழிவிட வேண்டியிருக்கும். இத்தகைய ஒரு தெருவில் இருந்து கொண்டு டி.வி.எஸ். பள்ளிக்கு முழுவெள்ளைச் சீருடையில் சென்று வருவதென்பது நரகம்.

தெரு தாண்டி சில நூறு கஜங்கள் கழித்து சுப்பிரமணியபுரம் ஆரம்பிக்கும். ஜெ.ஹி.புரத்திலிருந்து, சு.ம.புரம் செல்வது என்பது, துபாயிலிருந்து செல்லும்போது திடீரென்று ஷார்ஜாவுக்குள் இருப்பதை உணர்வது போல - எல்லை எங்கே என்று கண்டே பிடிக்க முடியாது. ரோடிலேயே இருபுறமும் காய்கறிக்கடைகளும், நடுப்புறத்தில் காய்கறிக் கழிவுகளும். சீருடை முழுவெள்ளையாக இருந்ததே இல்லை. கால்சராயின் கடைசி அங்குலம் எப்போதும் செம்மண் கலரில் இருக்கும். மழை பெய்தால் அவ்ளோதான்.

சு.ம.புரத்தின் முடிவில் டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியும் அதைத் தொடர்ந்து டி.வி.எஸ். நகருக்குள் லக்ஷ்மி மெட்ரிக்குலேஷன் பள்ளியும். பத்தாவது வரை 'உயர் நிலைப் பள்ளி', +1 மற்றும் +2 இருப்பது 'மேல்நிலைப் பள்ளி' என்பதை, முசிறியில் ஒன்பதாவது சேர்ந்தபோது கற்றுக்கொண்டு மனனம் செய்து கொண்டேன்.

பாரதியார் தெரு நாடார் காம்பவுண்ட்டில் சில மாதங்கள் மட்டும் நின்றுகொண்டே வாழ்ந்து விட்டு, பின்பு சுப்பிரமணியபுரத்திற்குக் குடிபெயர்ந்தோம். வீட்டுக்காரர் வத்திராயிருப்பில் இருந்தார். அவர் என் அம்மாவிற்கு தூரத்து அண்ணன் உறவுமுறையாம். பேசும்போது சில நொடிகளுக்கு ஒரு முறை தலையை பரத நாட்டிய அபிநயம் போல ஒரு சிறு வட்டமடித்துக் கொள்வார். மானரிஸம் என்று நினைத்தேன். ஏதோ நரம்புப் பிரச்சனை போல. அவர் வீடும் ஒரு காம்பவுண்ட் தான். ஆனால் நான்கே வீடுகள் - இடம் இரண்டு, வலம் இரண்டு. வீட்டுக் கொனேயில் நான்கு கழிவறைகளும், நான்கு குளியலறைகளும் - ஒவ்வொருவீட்டுக்கும் ஒவ்வொன்று ஒதுக்கியிருந்தார். நாடார் காம்பவுண்ட் போல, பொதுக் கழிவறை/குளியலறை பிரச்சனை அங்கு இல்லை.

வீட்டின் பக்கவாட்டிலும் பின்புறத்திலும் பரந்திருந்தது குருகுலம் பள்ளி. முன்புறம் இரு கடைகள். ஒன்று சைக்கிள் உதிரி பாகங்கள் விற்கும் கடை. கடைமுன் தரையில் பாய் ஒருவர் அமர்ந்து எப்போதும் ஏதாவது சைக்கிளைப் பிரித்து சரிபார்த்துக்கொண்டு, எண்ணை, க்ரீஸ் அப்பிய ஆடையுடனும், கை, கால்களுடனும் இருப்பார். இன்னொன்று டெய்லர் கடை. 'ஸ்டார் ஆ·ப் ஸ்டார்ஸ்' என்று பெயர் பொறித்த பழைய பலகை தாங்கியிருக்கும். டேபிளுக்குப் பின், முதலாளி பெல்ஸ் அல்லது பெல்பாட்டம் பேன்ட் மற்றும் கட்டம் போட்ட சட்டை அணிந்து, கழுத்தில் இஞ்ச் டேப் மாலையுடன் கோணலான ஸ்கேலில் ஏதாவது துணியில் க்ரேயானால் கோடிட்டுக் கொண்டும் வாடிக்கையாளர்களை எதிர்பார்த்துக் கொண்டும் இருப்பார். உள்ளே குறை வெளிச்சத்தில் இரண்டு தையல் கலைஞர்கள் ஓயாது தைத்துக்கொண்டு இருப்பார்கள். அப்போது டைட்ஸ் பேன்ட் தான் பிரபலமாக இருந்தது. முதலாளி சற்று பழைய ஆசாமி. அவர் இளமையில் பிரபலமாக இருந்த அதே ஆடை வடிவத்தை அன்றும் பின்பற்றிக்கொண்டு அணிந்து வந்தார். பேன் ட்டின் கடைசிப் பட்டியின் விளிம்பில், அரை வட்ட வடிவிற்கு உலோக ஜிப் வைத்து தைத்திருக்கும். அலமாரியில் தைத்த ஆடைகள் அடுக்கியும் தொங்கிக்கொண்டும் இருக்கும். சில ஆடைகள் வெகு நாட்களாக அங்கேயே இருந்ததாக ஞாபகம். வாராக் கடன் போல, வாரா வாடிக்கையாளர்களாக இருக்கும். அல்லது சும்மா படம் காட்டுவதற்காக, முதலாளியே சொந்தத்தில் துணி வாங்கித் தைத்து அடுக்கியிருந்திருப்பாரோ என்னவோ.. அவருக்குத் தான் தெரியும். இந்த இரு கடைகளும் வீடு கட்டிய நாள் முதல் இருக்கின்றன. ஐம்பது ரூபாய் வாடகைக்கு ந்த்தவர்கள் அப்போது இரு நூறு ரூபாய் வாடகை கொடுத்துக்கொண்டிருந்தனர். பக்கத்திலிருந்த அதைவிட சிறிய புதிதாக கட்டிய கடைக்கு ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் வாடகையாம் என்று எங்கள் வீட்டுச் சொந்தக் காரர் புலம்புவார். இவர்கள் வந்து இருபது வருடங்களாகி விட்டதால் அவ்வளவு எளிதாகக் காலிசெய்ய முடியாது என்பார்.

தீபாவளி நேரங்களில் படுபயங்கர பிஸியாகிவிடுவார்கள் அனைத்து தையல் கலைஞர்களும். வருட சம்பாத்தியத்தின் பெரும்பகுதியை அந்த ஓரிரு மாதங்களில் சம்பாதித்துவிடுவர். அவர்களின் உழைப்பு பிரமிக்க வைப்பது. மதுரையில் சில தையல் கடைகள் கல்லூரி வட்டாரங்களில் மிகவும் பிரபலம். திண்டுக்கல் ரோடின் முடிவில் மீனாட்சி கோயிலுக்கு அருகே இருக்கும் 'சமத்' கடை. இன்னொரு கிளை அமெரிக்கன் கல்லூரிக்கு எதிரே இருக்கும் - ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட கடைகள். ஆதலால் கூலி அதிகம். அவர்கள் ஏஸியில் அமர்ந்து தைப்பதற்கு நாம் ஏன் அதிகம் கூலி கொடுக்கவேண்டும் என்று முணுமுணுத்துக் கொண்டாலும், வேறு எங்கும் தைக்கக் கொடுக்க மாட்டோம். அவ்வளவு தரமான வேலை அவர்களது.

இரவில் மொட்டை மாடியில் படுத்துக்கொள்வோம். வீடு இருந்தது மதுரை-திருப்பரங்குன்றம் சாலையில் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து முதல் பாலத்தின் கடைசிச் சரிவின் இடது பக்கத்தில். எங்கள் வீட்டை அடுத்து கூட்டுறவு சங்கக் கட்டிடமும் (அங்கும் நியாயவிலைக் கடை இருந்தது), அதற்கடுத்து அம்பி மாமாவின் சிறிய பெட்டிக்கடையும் இருந்தது. அம்பிமாமாவும் ஏதோ ஒரு வகையில் தூரத்து உறவு. எப்போது போனாலும் கடலை மிட்டாய் ஒன்றை கேட்காமலே எடுத்துக் கொடுப்பார். 'டெய்லி ஒண்ணாவது சாப்பிடு' என்பார். ஏன் என்று கேட்டதற்கு அவர் கொடுத்த விளக்கம் இது. 'கடலையை மட்டும் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும். வெல்லம் மட்டும் சாப்பிட்டால் வயித்தால போகும்; ரெண்டையும் சேத்து சாப்பிட்டா சமாதானம் ஆயிரும். ஒடம்புக்கு ரொம்ப நல்லது' - இது எப்படி இருக்கு? அதையெல்லாம் இடித்து பெரிய கட்டிடம் எழுப்பி, பங்குச் சந்தை அலுவலகம் ஏதோ ஒன்று வந்துவிட்டது என்று கேள்விபட்டேன்.

அவர் கடைக்கு அடுத்து தமிழ்நாடு பாலிடெக்னிக். அதற்கு எதிர்புறம், மதுரைக் கல்லூரி. எங்கள் வீட்டு மொட்டைமாடியிலிருந்து பார்த்தால், பாலத்தில் வரும் வாகனங்களையும், அதற்கடுத்தாற்போல் இருக்கும் மதுரைக் கல்லூரியின் விசாலமான (இதை அடிக்கடி 'விலாசமான' என்று தப்பாக எழுதுவேன்) விளையாட்டு மைதானமும்.

பெரியார் நிலையத்தில் இருந்து வெளியில் வந்ததும் இருநூறு மீட்டரில் 'திடீர் நகர்' (பெயர்க்காரணம் தேடவே தேவையில்லாத பெயர்!). அடுத்து 'மெஜூரா காலேஜ்'. அடுத்து 'ஆண்டாள்புரம்', 'வசந்த நகர்', பழங்காநத்தம் (பழம்,காய் நாற்றம் மருவி இப்படி ஆயிருக்குமோ?) அப்புறம் அழகப்பன் நகர் வந்து, பைக்காரா வரும். அந்தப்பக்கம் வைகை முட்காட்டை (ஆறு எங்கே ஐயா இருக்கிறது!) கடந்தால் இன்னொரு குறு மதுரை நகரம் பரந்து விரிந்து அழகர் கோயில் வரை இருக்கிறது. 'ஐயர் பங்களா' என்றொரு நிறுத்தம். அந்த காலத்தில் ஆளில்லா அத்துவானக் காட்டில் முதன் முதலில் பங்களா கட்டி ஐயர் குடியேறியிருக்கலாம்!. இதைச் சொல்லும்போதே எஸ்.வி.சேகரின் Crazy thieves in palavakkam நாடகம் நினைவுக்கு வருகிறது. :)

சு.ம.புரம் வீட்டிலிருந்து பழங்கா நத்தத்தில் உள்ள ஒரு சந்தில் இருந்த வீட்டில் சில மாதங்கள் இருந்து விட்டு, என் யெஸ்டி பைக்கின் கனத்தை (மேல்மாடி) வீட்டுக்காரம்மா பார்த்து பயந்து, வண்டியை உள்ளே நிறுத்த அனுமதிக்காததால் (தரை உடைந்து விடும்), டிவிஎஸ் நகருக்குக் குடி பெயர்ந்தோம். அங்கு கீழ் வீட்டில் வீட்டுக்காரர் இருக்க, நாங்கள் மாடிவீட்டில். வீட்டுக்காரருக்கு ஒரு பைபாஸ் ஆகியிருந்ததால், அதிர்ச்சி தரும் விதமாக ஏதும் நடக்கக் கூடாது என்று சொன்னார்கள். பால் காய்ச்சி குடிவந்த முதல்நாளே, வண்டியை வீட்டின் முன் கொண்டு வந்த நிறுத்த, இடி இடித்த அதிர்ச்சியுடன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வந்த வீட்டுக்காரர் 'கொஞ்சம் சவுண்டை குறைக்கக் கூடாதா?' என்று கேட்க, அந்த வயதின் ஆணவத்தில் 'வண்டில வால்யூம் கன்ட்ரோல் இல்லையே மாமா?' என்றிருக்கிறேன்.

வீட்டில் சற்று வேகமாக நடந்தால், கீழே இருந்து குரல் வரும் 'ஓடாதீங்க. திம்மு திம்முன்னு சத்தம் வருது' என்று. தண்ணீர்த் தொட்டி காலியாகி குழாயில் நீர் வராவிட்டாலும் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட கால அளவுக்கு மட்டுமே நீர் ஏற்றுவார்கள்.

வத்திராயிருப்பிலும், முசிறியிலும், தண்ணீரிலேயே கிட்டத்தட்ட வாழ்ந்துவிட்டு, மதுரை நகர வாழ்க்கை நரகமாக இருந்தது என்றால் மிகையாகாது. அந்த வீட்டிலும் இரு வருடங்களுக்கு மேல் இருக்கவில்லை. காலி செய்யக் காரணம் எனது வண்டியின் சத்தமும், வீட்டுக்காரரின் நெஞ்சுவலியும்.

எதிர்வீட்டில் பள்ளித்தோழன் முரளி இருந்தான். அவன் வீட்டில் இரண்டு பசுக்கள் இருந்தன. அவன் ராசி ரிஷபம். இன்னொரு நண்பன் ராஜாங்கம் (First Blood புகழ்) அவர்கள் ரைஸ் மில்லில் நிறைய ஆடுகள் வளர்த்தான். அவன் ராசி மேஷம்.

என் அண்ணன் குமார் பிறந்த தினம் அக்டோபர் இரண்டு. நண்பன் பசுபதி (முசிறி) ஜனவரி 26. இன்னொரு நண்பன் செல்வா (முசிறி-மதுரை) ஆகஸ்ட் 15. மூன்று பேர் பிறந்த நாட்களன்று நாட்டுக்கே விடுமுறை என்று முன்பு பெருமையடித்துக் கொண்டிருந்தார்கள். குறைந்த பட்சம் எனக்கு அவர்கள் பிறந்த தினங்கள் மறக்காமலிருக்கிறது!

முரளியின் அண்ணன் சுந்தா (சுந்தரராமன்) அப்போது சி.ஏ. படித்துக்கொண்டு இருந்தார். ஆள் பார்க்க மெளனராகம் கார்த்திக் மாதிரி இருப்பார். சி.ஏ. என்றதும் ஞாபகம் வருகிறது. பி.காம். படித்துவிட்டு சி.ஏ. 'பண்ணுவது' அப்போது பிரபலம். யாரைக்கேட்டாலும் 'சி.ஏ. பண்ணுகிறேன்' என்பார்கள். எனக்குத் தெரிந்து கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடங்களாக அதையே சொல்லிக்கொண்டு இருந்தவர்கள் நிறைய பேர்.

நான், ராஜாங்கம், செல்வா மற்றும் பசுபதி ஆளுக்கொரு யெஸ்டி வைத்திருக்கிறோம். கொடைக்கானலுக்கு எப்போதும் அதில் தான் போவோம். இதுவரை கொடைக்கானலுக்கு நான்கு சக்கர ஊர்தியில் சென்றதில்லை. யெஸ்டியின் 250 ஸிஸி வலிமை மலைகளில் பயணிக்கும்போது தெரியும். மற்ற 100 ஸி.ஸி.க்கள் திணறும்போது, நாங்கள் மூன்று பேர் ஒரு வண்டியில் அனாயசமாகச் செல்வோம். எங்கள் அனைத்து வண்டிகளின் எரிபொருள் டாங்க்கில் Bad Guys என்று எழுதி வைத்திருந்தோம் (மைக்கேல் ஜாக்ஸனின் பரம விசிறிகள் நாங்கள்). பெட்ரோல் குடிப்பது ஒன்று தான் யெஸ்டியின் ஒரே குறை. ஒரு லிட்டருக்கு அதிக பட்சம் 30 கி.மீ. தான் வரும். ஆனால் நீங்கள் உடற்பயிற்சி செய்யவே தேவையில்லை. அதை வண்டியின் தாங்கியில் இழுத்து நிறுத்தவும், வண்டியை ஸ்டார்ட் செய்யவும் வலிமை வேண்டும் - 150 கிலோவுக்கு மேல் எடை. மிகப் பெரிய பயன் என்னவென்றால் யாரும் ஓஸி கேட்க மாட்டார்கள்! உதைத்துத் துவக்கும்போது தவறு செய்தால் கணுக்கால் காலி! திடீரென்று அணைந்து விட்டால் ஒரு நாள் முழுவதும் உதைத்தாலும் மீண்டும் கிளப்ப முடியாது. மெக்கானிக் வந்து, அதைத் தடவிக்கொடுத்துவிட்டு, சில நொடிகள் கழித்து, ஒரே உதையில் அதைக் கிளப்ப, நமக்கு ஆத்திரமாக வரும். ஒருமுறை சக அலுவலர் ஒருவர் எவ்வளவோ அறிவுரை சொல்லியும் கேட்காமல் அதை இரவல் வாங்கிக்கொண்டு (நான் கிளப்பிக் கொடுத்து) போனவர் மாலைப் பொழுதில், வியர்த்து விறுவிறுத்துப் போய் தள்ளிக்கொண்டு திரும்பி வந்தார்.

பெப்ஸியில் பணிபுரிந்ததாலும், தங்கை பாத்திமா கல்லூரியில் படித்ததாலும், அங்கிருந்து விளாங்குடிக்கு தனிவீடு காம்பவுண்ட் சுவருடன் பார்த்துச் சென்றோம். அந்த இடம், விவசாய நிலமாக இருந்து, பின்பு ப்ளாட் போட்டு விற்றதில், வங்கியில் பணிபுரிந்த ஊழியர் குழுமம் ப்ளாட்டுகள் வாங்கி தனித்தனி வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தனர். சிலர் அவரவர் வீடுகளில் குடியிருந்தனர். அங்கே தான் நிறைய வருடங்கள் இருந்தோம்.

2001-ல் ஸ்ரீரங்கத்தில் ஒரு சிறிய ·ப்ளாட் ஒன்றை எல்.ஐ.ஸி.யில் கடன் வாங்கி, வாங்கி இப்போது பெற்றோர்கள் குடிபெயர்ந்து விட்டார்கள்.

என் வண்டி ஸ்ரீரங்கத்தில் இன்னும் நிற்கிறது. விடுமுறையில் செல்லும்போது (மனைவியின் ஆட்சேபத்தைப் புறக்கணித்து) அதில் வலம் வருவேன். அடுத்த விடுமுறைக்குச் ஸ்ரீரங்கம் செல்லும்போது வண்டியின் க்ளட்ச் மற்றும் ஸ்பார்க் ப்ளக் மாற்ற வேண்டும். சீட்டில் பறவைகள் எச்சமிட்டுக் காய்ந்து அதுவே ஒரு புதிய டிசைன் போன்று இருக்கிறது.

இனிமேல் வீடு காலி செய்யத் தேவையிருக்காது.

***

3 comments:

Anonymous said...

This post is not readable in Firefox.

Anonymous said...

hi...one unofficial, unauthenticated version about the Name of PALANGANATHAM is as below:

During the old old days...palanganatham used to be the grave yard and place of punishment GALLOWs. Hence, normal people never visit there...hence it was PUZHANGAA NATHAM (vinaithogai of PUZHANGAATHA - meaning not used/habitated)

Even now...you can see Kovalan Nagar near...a place where KOVALAN of silappathikaram was hanged to death, near the level-crossing

Sundar Padmanaban said...

hello anonymous,

//hence it was PUZHANGAA NATHAM //

very interesting. அப்ப நா நெறயபேத்துக்கிட்ட கேட்டுப் பாத்தேன். ஒத்தருக்கும் பேர்க்காரணம் தெரியலை. நானா 'பழங்கா நத்தம்'ங்கறதுக்கு ஒரு அர்த்தம் வச்சிக்கிட்டேன். அதாவது முன்னாடி அங்க நெறய வெவசாயம் பண்ணி, நெறய தோட்டம்லாம் போட்ருப்பாய்ங்க. காய் கறி பழம் எல்லாம் நெறய வெளஞ்சிருக்கும். அங்கிட்டு சந்தை எதாச்சும் இருந்துருக்கும். அதனால எப்பயும் காய் கறி பழம் நாத்தம் (வாசனை) அடிச்சுக்கிட்டே இருந்திருக்கும். அதனால 'பழம் காய் நாத்தம்' மருவி 'பழங்காநத்தம்" ஆயிருச்சு போலன்னு நெனச்சுக்கிட்டேன். நீங்க சொல்றது எனக்கு புது செய்தி. ரொம்ப நன்றிங்க.

//Even now...you can see Kovalan Nagar near...a place where KOVALAN of silappathikaram was hanged to death, near the level-crossing //

ரொம்ப சரி. இத நான் நெறய பேரு சொல்லக் கேட்ருக்கேன். கேட்ட தாண்டி டிவிஎஸ் நகருக்குள்ள போம்போதெல்லாம் இது ஞாவகத்துக்கு வரும்.

பொதுவாகவே எனக்கு வரலாற்றுச் சின்னங்கள் மீது தீவிர காதல் உண்டு. அப்படியே கண் மூடி அந்தக் காலகட்டத்துக்குள் போய்விடுவேன். கற்பனையில் காட்சிகள் விரியும். அது கோவிலாகட்டும், பழங்கால வீடாகட்டும், ஏதாவது கல்லறையாகட்டும் - அப்படியே காலச்சக்கரத்தில் பின்னோக்கிப் பயணித்து சென்றுவிடுவேன். தஞ்சை பெரிய கோவிலுக்குள் காலடி வைத்தபோது 'இந்தக் கோவிலைக் கட்டி முடித்ததும் சோழ அரசன் இந்தப் படியில் காலடி பதித்து உள்ளே சென்றிருக்கிறான்' என்ற நினைத்த கணத்தில் புல்லரித்து உடல் தூக்கிப் போட்டது.

நீங்கள் யாரென்று தெரியவில்லை. ஆனாலும் வந்து பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றிகள்.