சென்ற ஞாயிறன்று (செப்.18) எழுத்தாளர் சுந்தர ராமசாமியுடனான கலந்துரையாடலுக்கான ஏற்பாட்டினை மரத்தடியில் தெரிவித்த பிகேஎஸ்க்கு நன்றி. ஒரு வாரம் முன்பே சொல்லியிருந்தால் சற்று தயாராகப் போயிருப்பேன். வாய்ப்பு கிடைத்ததே எதேஷ்டம் என்பதால் தவற விடவில்லை.
திண்ணை கோபால் ராஜாராம் அவர்களது வீட்டில் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. பாஸ்டன் பாலாஜி (பாபா), துக்காராம், பாரி, பிகேஎஸ் எல்லாரும் வந்திருந்தார்கள். பிரமாதமான வாசிப்பனுபவங்களுடன் வந்திருந்த அவர்கள் ஏகப்பட்ட விஷயங்களைப் பேச நான் நன்றாக வேடிக்கை பார்த்தேன். நடுவில் ஜே.ஜே. சில குறிப்புகளைப் பற்றிக் குறிப்பிட முயன்று அதற்குள் மறுபடியும் உள்ளிழுக்கப் பட்டுவிடுவேன் என்ற பயத்தில் நிறுத்திவிட்டேன். இம்மாதிரி கலந்துரையாடலில் கலந்துகொள்வது முதன்முறையென்பதால் மெளனமே சவுகரியமாக இருந்தது. :)
மொழியியல் வல்லுநர் அண்ணாமலையும் வந்திருந்தார்கள்.
சுரா எளிமையாக இருக்கிறார். மென்மையான பேச்சு. 75 வயதான பழுத்த பழமாக வெண்தாடியுடன் யோகி மாதிரி இருக்கிறார். சுஜாதாவைப் போன்றே உயரமாக இருக்கிறார்.
நிறைய விஷயங்கள் பேசப்பட்டு விவாதிக்கப்பட்டன. ராஜாராம் ஆணித்தரமாகச் சில கேள்விகளை எழுப்பினார். அவற்றுக்குள் போகவில்லை. ஆனால் சில விஷயங்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
- "பிள்ளை கெடுத்தாள் விளை"யைப் பற்றியும் அதன் மீதான விமர்சனத் தாக்குதல்களைப் பற்றியும் விவாதம் நடந்தபோது, அவர் சொன்ன சில விளக்கங்களை ஏன் எழுதவில்லை என்று கேட்டோம். சுரா மெதுவான குரலில் சொன்னது "ரொம்பத் திட்டறாங்கன்னு அதிகம் எழுத விரும்பலை". ஒரு எழுத்தாளன் எழுத நினைப்பதை எழுதக்கூடாது என்று நினைக்கச் செய்யும் அளவிற்கு நாகரீகமற்று விமர்சித்துக் காயப்படுத்தி வைத்திருப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.
- ஜாதிமத அவதூறுகளைக் குறித்துப் பேசும்போது அவர் குறிப்பிட்டவை: "பிறப்பினால் ஒருவன் தகுதியையும் தன்மையையும் நிர்ணயிப்பது அவமானப்பட வேண்டிய ஒழிக்கப்படவேண்டிய பழக்கம்". "தனது வளர்ப்பியல்புகளும் சார்பியல்புகளும் எழுத்தாளனது படைப்புகளில் எப்படியாவது பிரதிபலித்தே தீரும்"
- தலித் இலக்கியம் பற்றிப் பேசும்போது குறிப்பிட்டது "நான் அவர்களது கஷ்டங்களையும் நஷ்டங்களையும் உணர்கிறேன். அனுதாபம் கொள்கிறேன். ஆனால் இப்படி அனுதாபம் தெரிவிக்கும் (தலித் அல்லாத) என்னுள்ளிட்ட எவரும் அவர்களை முழுதுமாகப் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். அவர்களாகப் பிறந்தால் மட்டுமே அவர்களது வலிகளை உணரமுடியும் என்ற உண்மை அதற்குக் காரணமாயிருக்கலாம்." "நாளையே என் பெண் ஒரு தலித் இளைஞனைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று என்னிடம் வந்து நின்றால் என்னுள் இருக்கும் சு.ரா. என்ன சொல்வான் என்று என்னையே கேட்டுக்கொள்கிறேன்".
- கலந்து கொண்ட நண்பர்கள் கைகளில் வைத்திருந்த புத்தகங்களை வெகு ஆர்வத்துடன் கேட்டு வாங்கிப் புரட்டிப் பார்த்தார். அவர் படித்திராத புத்தகங்களையோ எழுத்தாளர்களையோ பற்றி நண்பர்கள் குறிப்பிட்டபோது கவனத்துடன் உள்வாங்கிக் கொண்டார். புத்தகங்களின் எழுத்தாளர்களின் பெயர்களை சிலமுறை கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டார். இந்த ஆர்வம் ஆச்சரியத்தைத் தந்தது. இது எழுத விழைபவர்கள் கற்றுக் கொள்ளவேண்டிய சிறந்த பழக்கம்.
- இது சுராவின் ஸ்டைல் என்று சொல்லக்கூடிய வகையில் எந்தவித நடை ஒற்றுமையும் அவரது படைப்புகளில் காணப்படவில்லையே என்று கேட்டதற்கு "கதையின் தன்மைக்கேற்ப நடையை நிர்ணயித்துக் கொள்கிறேன்".
- சுஜாதாவைப் பற்றிக் குறிப்பிடுகையில் சொன்னது "அவர் சிறந்த எழுத்தாளர். தமிழிலக்கியத்துக்கு எவ்வளவோ செய்யக்கூடிய அபாரமான ஆற்றல் மிக்கவர். ஆனால் அவ்வாற்றலை அவர் இன்னும் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளவில்லை".
- கம்யூனிஸம் மார்க்ஸீயம் என்று பேச்சு சென்ற போது "ரஷ்யா வீழும் என்று பத்து வருடங்களுக்கு முன்பே கணித்துச் சொன்னவர்களை வரிந்து கட்டிக்கொண்டு எதிர்த்தவர்கள் ரஷ்யா வீழ்ந்தபோது வாயை மூடிக்கொண்டு இருந்தார்களேயொழிய அக்கணிப்பை ஏற்றுக்கொள்ளும் முதிர்ச்சியோ பக்குவமோ இல்லாத ஒளிந்து கொண்டார்கள்." என்றார்.
சந்திப்பு பகற்பொழுது முழுதையும் ஆக்கிரமித்துக்கொண்டு மாலை வரை நீண்டது. சுவை மிகுந்த இனிய மதிய உணவை திருமதி. சந்திரா ராஜாராம் அளித்தார்கள்.
மொத்தத்தில் மறக்க முடியாத இனிய சந்திப்பு.
***
3 comments:
அடடே! நீங்க பாஸ்டன் போயாச்சா நினைவலைகள் சுந்தர்?
பிறப்பால் வரும் தகுதி, கம்யூனிச ரஷ்யான்னு நாலே மொழி போட்டாலும் நறுக்குன்னு இருந்தது சுந்தர். (மொத்தப்பேச்சையும் பதிவுசெய்து போட்டிருக்கலாம்- பேராசை!)
'சுஜாதாவைப் போன்றே உயரமாயிருக்கிறார்' என்பதில் உள்குத்து எதுவுமில்லையே! :-) :-)
பாபா என்ன கேள்வி கேட்டார்?
எம்.கே.குமார்.
ஆமாங்க எம்.கே. வந்து ரெண்டு மாசம் ஆச்சு. மரத்தடில சொல்லிருந்தேனே நீங்க பாக்கலைன்னு நினைக்கிறேன்.
உள்குத்தெல்லாம் எதுவும் இல்லை. நான் முதன்முதலாகச் சந்தித்த எழுத்தாளர் சுஜாதா. அவர் நல்ல உயரம். இரண்டாவதாக இப்போது சு.ரா.வைச் சந்தித்திருக்கிறேன். இவரும் நல்ல உயரம். அவ்வளவே நான் சொல்ல வந்தது.
பாபா அவரது வலைப்பதிவிலும் இச்சந்திப்பைக் குறித்துச் சொல்லியிருக்கிறார்.
மொத்தப் பேச்சும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திண்ணை ராஜாராம் ஏற்பாடு செய்த சந்திப்பாதலால் அவர்கள் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன்.
அன்புடன்
சுந்தர்.
பல மணி நேர உரையாடலை எளிமையாகத் தொகுத்ததற்கு நன்றி சுந்தர். ரொம்பவே அடக்கமாக, சுவாரசியங்களை சுருங்கச் சொல்லியிருக்கீர் ;-))
என்னுடைய பதிவு - E - T a m i l : இரு சந்திப்பு
Post a Comment