Saturday, October 08, 2005

*** இலையுதிர் காலம் ***

'என்னவோ வித்தியாசமா இருக்கே' என்று விஷயம் பிடிபடாமல் தலையைச் சொரிந்து யோசித்துக்கொண்டே இருந்தேன். 'அப்பா இங்க பாருங்க மஞ்சள் மரம்' என்று துர்கா சொன்னபோதுதான் வித்தியாசம் என்னவென்று உறைத்தது.

போனவாரம் வரைகூட பச்சையாக இருந்த அந்த மரத்தின் இலைகள் இப்போது மஞ்சள் நிறத்தில் மாறியிருந்தன. பச்சை பசேலென்று இருந்த சுற்றுவட்டாரம் ஆங்காங்கே மஞ்சளும் ஆரஞ்சும் சிவப்புமாக இலைகள் நிறம் மாறி கலவையாக மாறிவிட்டது. கோடைக் காலத்திற்கும் பனிக்காலத்திற்கும் இடைப்பட்ட இலையுதிர்காலம் துவங்கிவிட்டது.

பச்சை இலைகளெல்லாம் மாயாஜாலம் போல நிறம் மாறுகின்றன. ஒருவித செம்மஞ்சளாக தீப்பிடித்தாற்போல பிரத்யேக நிறத்துடன் கொள்ளை அழகாக இருக்கின்றன இலைகள். மரத்துக்கே வித்தியாசமான அழகு வந்து அந்த இடமே அழகாகக் காட்சியளிக்கிறது.

கடந்த ஆறுவருடங்களாக வருடம் முழுதும் வெயிலான மத்திய கிழக்கிலிருந்து தினம் தினம்.. ஏன் மணிக்கு மணி பருவம் மாறிக்கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு வந்ததில் வாழ்க்கையைச் சற்று பின்னோக்கி சில வருடங்களுக்குத் தள்ளி வைத்தது போல இருக்கிறது. மஸ்கட்டில் மதியச் சாப்பாட்டிற்கு வீட்டிற்குச் சென்றால், வண்டியின் ஸ்டியரிங்கில் கையே வைக்க முடியாமல் கொதிக்கும். கைக்குட்டையே போட்டுப் பிடித்துக் கொண்டு குளிர் சாதனத்தை முழுவீச்சில் இயக்கினாலும் வீட்டை அடையும் வரை அனல்காற்று பொசுக்கி எடுத்துவிடும். நாசித் துவாரங்கள் உலர்ந்து போய் நா வறண்டு 24 மணிநேரமும் குளிர்சாதனம் ஓடிக் கொண்டிருக்கும் வீட்டுக்குள் நுழைந்ததும்தான் 'அப்பாடா' என்று இருக்கும். உடல் அயர்ந்து போகும்.

பத்து வருடங்களுக்கு முன்பு கூட நல்ல மழை பெய்துகொண்டு காவிரியும் வைகையும் கொஞ்சமாவது தண்ணீரோடு ஓடிக்கொண்டுதான் இருந்தன. பசுமை ஒரேயடியாகக் காணாமல் போகாமல் பெங்களூர் மகாத்மா காந்தி சாலையில் பெரிய மரங்களெல்லாம் நிழல் தந்தும் குளிர்வித்துக்கொண்டும்தான் இருந்தன. மதுரை திண்டுக்கல் நெடுஞ்சாலை கண்ணுக்குக் குளிர்ச்சியாக பச்சைப் பசேலென்று இருக்கும். மழைக்காலங்களில் வாய்கால்கள் நிரம்பி சில இடங்களில் சாலையின் குறுக்காகவே தண்ணீர் ஓடியதை அனுபவித்துத்தான் இருக்கிறேன்.
கொஞ்சம் கொஞ்சமாக நாம் இயற்கையை தேய்த்துக்கொண்டே இருப்பதை எல்லா இடங்களிலும் நன்றாகவே உணர முடிகிறது.

இங்கு எல்லாமே மரவீடுகள். மரங்கள் நிறைய இருப்பதால் மரவீடு கட்டுவது கல் வைத்துக் கட்டுவதைவிட மலிவாம். அது சரி. மலிவு என்பதற்கு அமெரிக்கர்கள் அகராதியில் அர்த்தமே வேறு போல.

உத்தரகோளார்த்தம் (அட.. Northern Hemisphere ஐயா!) முழுவதும் பகற்பொழுது சுருங்கிக் கொண்டே வர, தட்பவெப்பநிலையிலும் சூடு குறைந்து கொண்டே வர, மரங்கள் பனிக் காலத்துக்குத் தயாராகத் தொடங்கிவிடுகின்றன. அவற்றின் பிரதான வேலை பாம்பு சட்டையை உரித்துப் போடுவதைப் போல, மொத்த இலைகளையும் உதிர்த்து விட்டு மொட்டை மரங்களாகி விடுவது. இலையுதிர்த்தல் என்றால் ஜகன் மோகினி குலுக்கியது போல குலுங்கிக்கொண்டு உதிர்ப்பதில்லை. இலைகளெல்லாம் வர்ண ஜாலங்கள் காட்டுகின்றன. பச்சையிலைகள் எல்லாம் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்று மாறுவதில் மொத்த இடமும் வர்ணங்களின் ரகளைதான்.

இலைகள் மரங்களுக்கு இயற்கை அளித்துள்ள உணவு உற்பத்தித் தொழிற்சாலைகள். மரங்கள் நீரை வேர்கள் மூலமாகவும், காற்றிலிருந்து கரியமிலவாயுவையும் உட்கொள்கின்றன. இப்படிக் கிடைத்த நீரையும் க.மி.வாயுவையும் சூரியஒளியைக் கொண்டு சர்க்கரைச் சத்தாக மாற்றிக் கொள்கின்றன. இந்தச் சர்க்கரைச் சத்தைச் சாப்பிட்டே வளர்வதும், பூப்பதும், காய்ப்பதும், விதைகளை உருவாக்குவதும், நம் நாயக நாயகிகள் மரத்தைச் சுற்றி ஆடுவதும் நடக்கிறது. உன்னால் முடியும் தம்பியில் சீதா மரத்தடியில் படுத்திருக்க பூமழை பொழியுமே.

நீரையும், க.மி.வாயுவையும் ஒளியைக்கொண்டு கலந்துகட்டும் நிகழ்வை Photosynthesis (ஒளிக்கலவை என்று சொல்வோமா?) என்று சொல்கிறார்கள். இந்த ஒளிக்கலவையை நிகழ்த்துவது இலைகளிலிருக்கும் Chlorophyll என்ற நிறமி. இந்த நிறமியே இலைகளுக்கு பச்சை நிறத்தைக் கொடுக்கிறது.

இலைகளில் காணப்படும் இரண்டாவது நிறமி carotene. இது நீலத்தையும் பச்சையையும் உறிஞ்சிவிட்டு, மஞ்சளைப் பிரதிபலிக்கிறது. Chlorophyll ம் carotene-ம் ஒரே இலையில் கூட்டு சேர்ந்தால் அவை சிவப்பையும், நீலப்பச்சையையும், நீலத்தையும் காலிசெய்துவிடுகின்றன. இலையில் விழும் ஒளி பிரதிபலிப்பது பச்சையை. caroteneனானது Chlorophyll க்கு ஒரு அடியாள் போலத்தான் செயல்படுகிறது. அது உறியும் ஒளிச்சக்தியை Chlorophyll க்குக் கடத்தி விடுகிறது. அடியாள் என்பதால் carotene வலுவானதாக இருக்கிறது. Chlorophyll அழுகிப் போனாலும் carotene தேமேயென்று இலைகளில் நிலைத்திருக்கும். Chlorophyll இல்லாத carotene இலையை மஞ்சள் நிறமாக ஆக்கிவிடுகிறது.

மூன்றாவது வகை நிறமியானது anthocyanins. இது நீலம், நீலப்பச்சை, பச்சை ஆகிய நிறங்களை விழுங்கிவிடுவதால் காட்டுவது சிவப்பு நிறத்தை. இலைத் திசுக்களின் அமிலத்தன்மையின் அளவைப் பொருத்து, சிவப்பைக் கூடுதலாகக் காட்டும்; இல்லாவிட்டால் ஒரு மாதிரி அடர் ஊதாவைக் காட்டும். anthocyanins தான் ஆப்பிளின் சிவப்புத் தோலுக்கும், திராட்சையின் நிறத்திற்கும் காரணம். இலைத்திசுக்களிலிருக்கும் சர்க்கரையும், புரதங்களும் சேர்ந்து உருவாவது anthocyanins. அது உருவாவதற்குத் தேவையானது அதிக அளவு சர்க்கரையும் ஒளியும். அதனால் தான் ஒளிபடும் ஆப்பிள் பழங்கள் சிவப்பாகவும், நிழலில் வளர்பவை பச்சையாகவும் இருக்கின்றன.

கோடை முடிந்ததும், சூரிய ஒளியும் வெம்மையும் குறைவதை வைத்து மரங்கள் குளிர்காலம் வரப்போவதை 'அறிந்து' கொள்கின்றன. குளிர்காலத்தில் 'உணவு தயாரிக்க'ப் போதுமான வெளிச்சமும் தண்ணீரும் கிடைக்காதென்பதால், மரங்கள் ஓய்வுக்குத் தயாராகின்றன. 'உணவுத் தொழிற்சாலைகளை' நிறுத்தவும் தொடங்குகின்றன. Chlorophyll குறைவின் காரணமாக அதுநாள் வரை அமுங்கிக் கிடந்த மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள் வெளித் தெரிய இலைகளின் நிற மாற்றம்.

நிற மாற்றத்தால் இலையுதிர்காலமே களைகட்டி வர்ணங்கள் இறைக்கப்பட்ட இடம்போல சுற்றுப் புறமே கண்ணுக்கு இனிதாக மாறுகிறது.

அலைபாயுதே-யில் வரும் "பச்சை நிறமே.. பச்சை நிறமே" நினைவில் வந்து போகிறது.

நியூ இங்கிலாந்து, மிச்சிகன், விஸ்கான்ஸின் ஆகிய மூன்று பிரதேசங்களிலும் இந்த வர்ண ஜாலங்கள் ஏகமாக விளையாடுவதால் இதை ரசிக்கவே மக்கள் படையெடுத்து வருகின்றனராம். எந்தெந்த இடங்களில் நிறமாற்றங்கள் அதிக அளவு இருக்கின்றன என்று செய்தி சொல்வதற்காகவே நேரடித் தொலைப்பேசி எண்களும் உண்டு. இவ்வகைப் பயணங்களுக்கு வருடாவருடம் மக்கள் செலவழிப்பது முன்னூறு கோடி டாலர்களுக்கு மேலாம். அம்மாடி.!

வாரயிறுதியில் இப்படி நிறம் மாறிய இலைகளின் அழகைப் பார்ப்பதற்கென்றே மூட்டைகட்டிக்கொண்டு வெளியே கிளம்பிவிடுகிறார்கள். நாளைக்கு நானும் எங்கேயாவது ஊருக்கு வெளியே சென்று பார்க்கவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். முன்பெல்லாம் இலையுதிர்காலங்களில் இலைச்சருகுகள் சரசரக்க மாந்தோப்பு தென்னந்தோப்புகளில் ஓடி விளையாடியபோதும், உலர்ந்த இலைகளை எடுத்து உடைத்து விளையாடியபோதும், ஆலிலைகளையும் அரசிலைகளையும் அள்ளி விளையாடியபோதும், களத்து மேட்டிலிருந்து பார்க்கும் போது அறுவடை முடிந்த வயல்வெளிகள் அறுக்கப்பட்ட மஞ்சள் புற்களோடு இருக்க, தங்கத்தால் செய்ததோ என்று சந்தேகிக்க வைத்த நெற்குவியல்களில் குதித்து விளையாடியபோதும் இப்படி 'இலையுதிர்காலங்களை' கவனிக்க வேண்டும் என்று தோன்றாமல் போய்விட்டதே என்று ஏக்கமாக இருக்கிறது.

அருகிலிருக்கும் போது சிலவற்றின் அருமையை உணராது, தொலைவில் வந்ததும் புலம்புவது வெ.நா.வாழ் இந்தியர்களின் கடவுச் சீட்டின் கடைசிப் பக்கத்தில் எழுதியிருக்கும் விதி போல. இவற்றில் அம்மா, அப்பா, ஆட்டுக்குட்டியிலிருந்து தலைமேல் விழும் இந்த இலைகளும் அடங்கும்.

***

பி.கு. படங்களைத் தேடித் தந்த கூகுளுக்கு நன்றி

3 comments:

Anonymous said...

//நிகழ்வை Photosynthesis (ஒளிக்கலவை என்று சொல்வோமா?) என்று சொல்கிறார்கள்.//

ஒளிச்சேர்க்கை என்று படித்ததாக ஞாபகம்

b said...

ரசித்து அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள் சுந்தர்.

தனியே அமர்ந்து சிந்தித்தால் இதுபோன்ற தருணங்களில் எனக்கெல்லாம் கவிதைகள் வந்து கொட்டும்.

Sundar Padmanaban said...

நன்றி மூர்த்தி.

கொட்டும் கவிதைகளில் ஒன்றை எடுத்து விடுங்களேன்.

அன்புடன்
சுந்தர்.