Wednesday, October 26, 2005

என் அப்பாவின் சைக்கிள் - # 4 (Final)

அதற்கப்புறம் கஜினி முகமது கணக்காய் கணக்கில்லாமல் முயன்றதில் சைக்கிள் கைக்குள் அடங்கியது.

மதுரை பெரியார் மேம்பாலத்தை ஒட்டி இருந்தது நாங்கள் வசித்த காம்பவுண்டு. 'பீம நிலையம்' என்று முகப்பில் எழுதியிருக்கும். வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தால், பாலத்தின் உச்சியிலிருந்து கீழ் நோக்கி விரைந்து வரும் வாகனங்களைக் காணலாம். பாலத்திற்கு அந்தப் பக்கத்தில் மதுரைக் கல்லூரியில் பரந்த விளையாட்டு மைதானம். அந்தக் கோடியில் கோடுகளாகத் தெரியும் மதுரை-ராமேஸ்வரம் ரயில்வழித்தடம். புகை கக்கிக் கிடந்த ரயில்களினால் பாலத்தின் அடிப்பக்கம் கருமை பரவியிருக்கும். தண்டவாளத்தைத் தாண்டி பாலத்தைக் கடக்கையில் ரயில் வாசனை காற்றில் எப்போதும் இருக்கும். அந்த வழித் தடத்தை ஒட்டியே ஒருகாலத்தில் 'கிருதுமால் நதி' என்று ஒன்று இருந்ததாம். இப்போது இரு புறமும் நெரிசலாக வீடுகள் கட்டி, ஒரு ஒற்றையடிப் பாதையில் சாக்கடை ஓடிக் கொண்டிருக்கிறது. நிறைய பன்றிகள் உலவும்.

பைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது கனவு. கல்லூரியில் பைக் வைத்திருந்தவர்கள் வெகு சில பணக்கார மாணவர்கள் மட்டுமே. நான் சைக்கிளுக்கே சிங்கியடித்துக் கொண்டிருந்தேன். இருந்த ஒரே ஹம்பர் சைக்கிளையும் என் தந்தை எடுத்துச் சென்றுவிடுவார். முழுதும் மூடியிருக்கும் செயின் கவர் இருப்பது அதன் விசேஷங்களில் ஒன்று. மற்ற சைக்கிள்களில் பேருக்கு ஹாக்கி ஸ்டிக் வடிவத்தில் ஒன்றை வைத்திருக்க, பாண்ட்டின் ஓரங்களில் எப்போதும் க்ரீஸ் கறை அப்பும். என் அண்ணன் குமார் அந்தச் செயின் கவரில் Jaunty lender என்று எழுதினான். அப்படியென்றால் என்னவென்று ஒரு ஏழெட்டு வருடங்கள் கழித்து அகராதியைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.

அப்பாவை ஏமாற்றி சைக்கிளை வெளியில் எடுப்பது இயலாத காரியம். இன்னொன்று அங்கிருந்து கல்லூரிக்குச் சைக்கிளில் செல்வது என்பது நடவாத (ஓட்டாத) காரியம். கிட்டத்தட்ட பனிரெண்டு கி.மீ. மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் சென்று மலை மீது வீற்றிருக்கும் செளராஷ்ட்ர கல்லூரிக்குச் செல்ல வேண்டும். அதற்கு படிக்கட்டு பயணப் பேருந்தே மேல். பால் கார்டு போன்ற பஸ் பாஸ் ஒன்று- சீசன் டிக்கெட் வைத்திருந்தேன். ஆனால் கட்டுப்படியாகவில்லை. அதைவிட எப்போதாவது டிக்கெட் எடுத்தால் போதும் என்ற தினப்படி பஸ் பயணமே வசதியாயிருந்தது.

பின்னாளில் என் அப்பாவுடன் அந்த ஹம்பரும் ரிட்டையராகிவிட, என் கைக்கு வந்தது. ஸ்போர்ட்ஸ் சைக்கிளாக அதை எளிதாக மாற்றினேன். ஒன்றுமில்லை. இரண்டு சக்கரம், பெடல், இருக்கை, ·ப்ரேம் தவிர அனைத்தையும் கழற்றிப் போட்டேன். ஹேண்டில் பாருக்கு முன்னால் ஒரு வயர்க் கூடையை மாட்டி வைத்திருந்தார். கைப்பிடியில் பிரிபிரியாக ரெக்ஸின் தொங்கும் அலங்காரக் கைப்பிடியை மாட்டியிருந்தார். இருக்கைக்கும் ஹேண்டில் பாருக்கும் இடைப்பட்ட கம்பியில் ஒரு குழந்தை சீட் ஒன்றும் இருந்தது. தவிர பக்க வாட்டில் ஒரு தகரப் பெட்டியொன்று. எல்லாவற்றையும், முழு செயின் கவர் உட்பட, கழற்றி வைத்ததும் சைக்கிளை ஒரு விரலால் தூக்க முடிந்தது. நம்பினால் நம்புங்கள். கிட்டத்தட்ட எலும்புக் கூடு மாதிரி இருந்த அதை வைத்துக் கொண்டு, அங்கிருந்து ஒரு அதிகாலை வேளையில் 'ராஜாங்கம் வீட்டுக்குப் போய்ட்டு வர்றேன்' என்று சொல்லிவிட்டு, 75 கி.மீ. மிதித்து வத்திராயிருப்புக்குச் சென்றேன். தாத்தாவும் பாட்டியும் அப்போது அங்கு இருந்தார்கள்.

போய்ச் சேர்ந்ததும் இரு கால்கள் இடுப்பில் இணையும் இடத்தில் மரணவலி. கால்களை அகற்றி வைத்துதான் நடக்க முடிந்தது. தாத்தா 'பரவாயில்லை. நாளைக்குக் காலை 'ஜெயக்குமார்'ல போயிடு. சைக்கிளை லக்கேஜா மேல போட்டுக்கலாம்' என்றார். நான் பிடிவாதமாக மறுத்து மறுநாள் அதிகாலை கிளம்பி, எதிர்காற்றில் மிதித்து மாலை மதுரை வந்து சேர்ந்தேன். அதற்கப்புறம் கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்கு சைக்கிளைப் பார்த்தாலே அலர்ஜியாக இருந்தது.

சில மாதங்கள் கழித்து, என் ஓவியத் திறனைச் சோதிக்க, அந்த எலும்புக்கூடு சைக்கிளுக்கு வெள்ளை வர்ணம் அடித்தேன். எனக்கே அதைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

பீம நிலையம் காம்பவுண்டு மிகவும் குறுகியது. மொத்தம் நான்கு வீடுகள். அவரவர் வீட்டுச் சைக்கிளை இரவு பிரதானக் கதவை மூடுமுன்னர் எடுத்து உள்ளே நடைபாதை வராண்டாவில் நிறுத்தி விடுவார்கள். ஒரு நாள் ராஜாங்கம் வீட்டுக்குச் சென்று விட்டு நள்ளிரவு திரும்ப, பிரதான கதவு பூட்டப்பட்டிருந்ததால், யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சைக்கிளை வெளியே கம்பிக் கதவருகில் நிறுத்தி, பழைய சைக்கிள் செயின் ஒன்றால் அதன் சக்கரத்தையும் கதவையும் இணைத்துப் பூட்டிவிட்டு மொட்டைமாடிக்குச் சென்று தூங்கிவிட்டேன்.

காலை எழுந்து வந்து பார்த்தபோது அந்தப் பழைய சைக்கிள் செயின் மட்டும் கம்பிக்கதவில் தொங்கிக் கொண்டிருந்தது.

(முற்றும்)

நன்றி: www.maraththadi.com

No comments: