Saturday, October 29, 2005

சில குறிப்புகள் - வரப்புயர

** வரப்புயர **

[செப்டம்பர் 24, 2002]

நாம் சரியானது எது என்று தெரியும் வரை தவறானதைச் செய்து கொண்டே இருப்போம், அது தவறு என்று உணராமலே. ‘மனிதர்கள் அனைவரும் அண்ணாந்து பார்க்காவிட்டால் வானம் என்று ஒன்றே கிடையாது’ என்று ரிலேட்டிவிடி தியரி பற்றிய ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன். இது புரிந்து கொள்ளச் சற்று கடினமாக இருந்தாலும் சில வாழ்க்கை நடைமுறைகளை ஒப்புமைப் படுத்திப் பார்க்கும் போது புரிகிறது; சரியென்றும் தோன்றுகிறது. எளிதான உதாரணம் கூற வேண்டுமாயின் நம் ஊர்ச் சாலைகளைப் பற்றிச் சொல்லலாம்.

எனக்கு மஸ்கட் வந்து பார்க்கும் வரை, ‘நல்ல’ சாலைகள் என்றால் என்னவென்று தெரியாது. அன்றாடம் நாம் பயணிக்கும் நமது ஊர்ச் சாலைகளுக்குப் பழகிப்போனதால் (என் உடலில், பயண அதிர்வுகள் இன்னும் இருக்கிறது), நல்ல சாலைகளில் பயணம் செய்து அறியாததினால், நாம் நம் சாலைகளின் தரத்தினை ஒப்புக் கொண்டு விட்டோம். சாலைகள் மட்டுமல்ல. நமக்குக் கிடைக்கும் அனைத்தையும்- அரசியல்வாதிகளிலிருந்து நாம் சாலையில் துப்பும் எச்சில் வரை.

இங்கே கிடைக்கும் கல்வியையும், கல்விமுறைகளையும் பார்க்கும் போது, நாம் இப்படிப் படிக்கவில்லையே என்ற உணர்வு வாட்டுகிறது. நான் படித்ததெல்லாம், தேர்வுகளுக்காக மட்டுமே. தேர்வு தொடங்க மணியடிக்கும் அந்தக் கடைசி விநாடி வரை, முழுவருடமும் திறக்காமல் வைத்திருந்த புத்தகத்தின் பெரும்பாலான பக்கங்களை வேகமாகப் புரட்டிவிட்டு, சிலவற்றை தற்காலிக ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, அது தொடர்பான கேள்விகள் ஏதாவது எங்காவது கேள்வித் தாளில் தென்படுகிறதா என்று மேய்ந்துவிட்டு, தென்பட்டால் தாமரையாகவும், தென்படாவிட்டால் தொட்டாற்சிணுங்கியாகவும் முகத்தை வைத்துக்கொண்டு, ஒரு பெருமூச்சு விட்டு எழுதத் தொடங்குவேன்.

சில கேள்விகளுக்கு விடைகளை தற்காலிக ஞாபகத்திலிருந்து எடுக்கப் போராடி ‘புத்தகத்தின் நடுப்புறத்தில் வலதுபுற பக்கத்தில் மேல் இரண்டு பத்திகளில் இதன் விடையை படித்தோமே’ என்பது வரை ஞாபகம் வந்து, அந்த விடைக்கான ஒரு வார்த்தை கூட கடைசிவரை பிடிபடாமலேயே புகைபோல் மறைவதை ஆற்றாமையுடனும், இயலாமையுடனும் மனக்கண்ணால் பார்த்து வருத்தப்படுவேன். தினமும் படித்திருந்தால் இது நேர்ந்திருக்காதே என்று யோசிப்பேன். இந்த யோசனை ஒவ்வோரு முறை தேர்வு எழுதும் போதும் என் மனதில் தோன்றும். எதற்காகப் படிக்கிறோம் என்றும், எப்படிப் படிக்க வேண்டும் என்பதும் படித்து முடித்து வேலைக்கு அலையும் வரை தெரிவதில்லை. மறுபடியும் முதலிலிருந்து படித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியதுண்டு. கடிகார முள்ளை பின்னோக்கித் திருப்பி விடலாம். காலத்தைத் திருப்ப முடியுமா? ஆண்டுத் தேர்வு எப்போது முடியும், கோடை விடுமுறை எப்போது தொடங்கும் என்று மனம் ஏங்கிக் கொண்டிருக்குமே தவிர, தேர்வில் எப்படி எழுதப் போகிறோம் என்று யோசித்ததில்லை. ஒரு ஆண்டு முழவதும் படிக்காமல் விட்டதை, தேர்வு சமயத்தில் ஒரேயடியாகப் படித்து எழுதி முடித்து அப்பாடா என்று உட்கார முடியாது. கடைசித் தேர்வு எழுதிய நாளன்று இரவு தூங்குகையில் இன்னும் இரண்டு தேர்வுகள் மீதம் இருக்கின்றன, ஒன்றும் படிக்கவில்லையே என்பது போன்ற கனவுகள் வந்து அடிவயிறு கலங்கிப் போய் நடுநிசியில் வியர்த்து எழுந்து கொள்வது உண்டு. கல்லூரி முடிந்து இரண்டாவது வாரத்தில் வேலையில் சேர்ந்தாலும், அந்த இருவார காலத்தில் அனைத்து இரவுகளிலும் ‘இன்னும் தேர்வு மீதமிருக்கிறது’ என்ற கனவுகள் தினம் தோறும் வந்து சித்திரவதை செய்தது உண்டு.

பெரும்பாலான நமது மக்களுக்கு ‘வெளிநாடு’ என்பது கனவில் மட்டுமே நினைக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது. திரைப்படங்களில் வெளிநாட்டில் படமாக்கப் பட்ட பாடல் காட்சிகளை வாயைத் திறந்து கொண்டு பார்க்கப் பழகி, அந்த கதாபாத்திரங்களோடு ஒன்றிப் போய், அன்றைய இரவுகளின் கனவுகளில் அதே இடங்களில் ஆடிப் பாடி, விடிந்ததும், சுருக்கம் நீக்கப்படாத, பொத்தான்கள் தொலைந்திருக்கும் ஆடையையும், தேய்ந்த செருப்பையும் அணிந்து கொண்டு, முந்தைய தினம் சமைத்து பானை நீரில் இட்ட மிஞ்சிய சோற்றை விழுங்கிவிட்டு, அவன் அப்பா உபயோகப்படுத்திவிட்டு கொடுத்திருக்கும் மிதிவண்டியை அதன் உறையில்லா காய்ந்த கல் போன்ற தோல் இருக்கையில் அமர்ந்து, மிதித்துக்கொண்டு தொழிற்சாலையை நோக்கிப் போவான்- புன்சிரிப்புடனும், நெற்றியில் திருநீறுடனும். அவனுக்கு வருத்தமில்லை. சோகமில்லை. அவனுக்கு வாழ்க்கையில் கிடைத்திருப்பது அனைத்தும் அவனுக்குப் போதுமானதாக இருக்கிறது. ஏனென்றால் அதைவிடச் சிறந்தனவற்றை அவன் பார்த்ததில்லை. அப்படியே அவன் பார்த்திருந்தாலும், அவற்றை அடைய அவனுக்குத் தகுதியிருக்கிறது என்று ஒரு போதும் நம்பியதில்லை. அவற்றுக்காக ஓரு போதும் ஏங்கியதில்லை. இப்படியே நாற்பதோ ஐம்பதோ வருடங்கள் உழைத்துக் கடைசியில் செத்தும் போகிறான்- எதை இழந்தான் என்று அறியாமலே. அவனுடைய உலகம் சிறியது; தேவைகளும் தான். அவன் போல் எத்தனை கோடி மக்கள்!

சிறந்தனவற்றைப் பார்த்த நன்மக்கள் ‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?’ என்று தன்னையும் மற்றவர்களையும் கேள்வி கேட்டுவிட்டு ஆற்றாமையுடன் போய்விட்டார்கள். எல்லாம் இருக்கிறது, ஆனால் ஒன்றும் இல்லை என்ற நமது மக்களின் நிலை பரிதாபகரமானது. அடிப்படைத் தேவைகளுக்காக வாழ்நாள் முழுதும் உழைத்துச் சோர்ந்து போனவர்களும், கல்விக்காக, திருமணங்களுக்காக, ஏன்.. சிலசமயங்களில் உண்டு வாழ்வதற்காகக் கூட கடன் வாங்கி விட்டு, கடனையும் வட்டியையும் துரத்தித் துரத்தித் தேய்ந்து போனவர்களும் தான் அதிகம். இவர்களுக்கு எங்கே சாலைகளின் தன்மையைப் பற்றியும், ஆள்பவர்களின் தரத்தைப் பற்றியும யோசிக்கத் தோன்றும்?

‘வரப்புயர நீர் உயரும்’ உண்மைதான். ஆனால் நம்மக்கள் வரப்பு தாண்டி தலைதூக்க அவர்கள் வாழ்நாள் போதுமானதாக இல்லை. ஆனால் கோல் உயர்ந்து கோனும் உயர்ந்திருக்கிறார்கள். இந்த முரண்பாடு உறுத்துகிறது, முட்படுக்கையில் படுத்திருப்பது போல்

***

No comments: