Wednesday, October 26, 2005

என் அப்பாவின் சைக்கிள் - # 1

தெருவில் சர் சர்ரென்று அங்குமிங்கும் சைக்கிள் விட்டுக் கொண்டு செல்லும் என் வயது பயல்களைக் கண்டால் பொறாமையாக இருக்கும். அவரவர் வீட்டில் ஹெர்குலிஸ், அட்லஸ் என்று விதவிதமாக சைக்கிள்கள் கரும்பச்சை வர்ணங்களில் ஜொலிக்க, அவர்களின் தந்தைகள் சைக்கிள்களை எடுத்து ஓட்ட அனுமதித்திருந்தார்கள்.

நாங்கள் வசித்த சூழ்நிலைக்குச் சைக்கிள் எல்லாம் "பிளைமுத்து" கார் ரேஞ்சுக்கு இருந்ததால் திண்ணையில் உட்கார்ந்து வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. தாத்தா என்னை கவனித்திருக்க வேண்டும். அழைத்து ஒரு ரூபாய் கொடுத்து வாடகைக்கு எடுத்துக் கொள்ளச் சொன்னார். ஒரு ரூபாய் பெரிய தொகை அப்போது.

கடைத்தெருவில் பஷீர் கடையில் வரிசையாகப் பல உயரங்களில் சைக்கிள்கள் நிற்கும். சிறுவர்களுக்கே மூன்று உயரங்களில் வெவ்வேறு சைக்கிள்கள். இருப்பதிலேயே சிறியதொன்றை எடுத்துக்கொண்டு ஓட்ட முயன்றேன். முட்டி தட்டியது. அதற்குச் சற்றுப் பெரியதொன்றை, இருக்கையில் அமர்ந்து கால்களை நீட்டினால் தரையைத் தொட முடியவேண்டும், எடுத்துக்கொண்டு, தரையைத் தேய்த்துத் தேய்த்துக் கிளம்பினேன். ஒரு மணி நேரத்திற்கு எட்டணா வாடகை. அது ஒரு சரித்திரப் பயணம்.

சைக்கிள் கற்றுக்கொள்ள வசதியாக தெருக்கள் பெரும்பாலும் நேர் கோடுகளில் இருந்தன. நான் கடைத்தெருவிலிருந்து தரையைத் தேய்த்து ஒருவழியாக எங்கள் தெருவுக்குள் திரும்பினேன். இடது காலை ஊன்றிக் கொண்டு, கைகளை விறைப்பாக வைத்து கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு, வலது காலால் பெடலை அதன் வட்டப் பாதையின் உச்சியில் வைத்துக் கொண்டு, லேசாகக் குனிந்து ஒரு மிதி.. அய்யகோ.. பெடல் 11:59-ல் இருந்ததால் பின்னோக்கி அதிவேகமாகச் சுழன்று என் கெண்டைக் காலைத் தாக்கி 'விர்.விர்'ரென்றது. இதைப் பார்த்துத்தான் வால்ட் டிஸ்னி தலையில் அடி வாங்கிய டாம் பூனைக்கு சிவப்புக் கொம்பு வரைந்திருக்க வேண்டும்.

ஓரிரு நிமிடங்கள் ஆசுவாசப் படுத்திக்கொண்டு, பெடலை இந்தமுறை சரியாக வைத்துக் கொண்டு, ஒரு அரைவட்ட மிதி மிதித்ததில் சைக்கிள் நகர்ந்து சென்றது. இடதுகாலை தூக்கி பெடலில் வைத்துக் கொள்ள முடியாமல் தெருவில் ஆங்காங்கே பதிந்து நீட்டிக் கொண்டிருந்த கல் ஒன்றைத் தடுக்கி கட்டை விரல் நகத்தைப் பெயர்த்துக் கொண்டேன். இப்படியாவது சைக்கிள் கற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா என்று கழிவிரக்கமாகிக் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

தண்ணி குடிக்காம நீச்சல் கத்துக்க முடியாது; முட்டிய பேத்துக்காம சைக்கிள் வராது' என்று தாத்தா சொன்னது நினைவில் வந்தது. போதாக் குறைக்கு நண்பன் கிச்சாமி எதிரே படு வேகத்தில் கைகளை பக்க வாட்டில் விரித்துக் கொண்டு 'ஹாய்' என்று காற்றாய் கடந்துபோக, நான் விழுப்புண்களுக்கு அஞ்சாது பயணத்தைத் தொடர்ந்தேன். அடுத்த பத்தாவது நிமிடத்தில் அரை வட்டச் சுழல் முழுமையடைந்து இப்போது பெடலை ஒரு முழு வட்டம் அடிக்க முடிந்தது. தெருமுனை வரை வேறு தடங்கல்களின்றி வந்தேன்.

தெருமுனை பெருமாள் கோயிலுக்குப் பின் நல்ல தண்ணீர் பொதுக் குழாய் இருந்தது. நிறைய பெண்கள் நாள் முழுதும் குடங்களில் தண்ணீர் பிடித்துக் கொண்டே இருப்பார்கள். அவ்வப்போது ஒரு மாமா மேல் சட்டையில்லாது அண்டாவில் நீர் நிரப்பி, வேட்டி நனைய, கால்களை டைமண்ட் வடிவத்தில் விரித்து நடந்து, தூக்கிக் கொண்டு போவார். தெருவில் ஒன்றிரண்டு மாடுகளுக்கும் நாய்களுக்கும் அடுத்தபடியாக, பெண்கள் குடங்களுடன் அலைந்து கொண்டிருப்பார்கள். நான் தெருமுனையை அடைத்து சைக்கிளை 'தலகாணித் தெரு'வுக்குத் திருப்ப முயற்சிக்கையில் எதிரே அம்புஜம் இடுப்பில் தளும்பிய குடத்துடன் (கவனிக்க: தளும்பிய இடுப்பில் அல்ல) வந்ததைக் கவனிக்கவில்லை. 'டேய்..டேய்.. அம்பி..' என்ற அவளது அலறலை நான் கவனிக்குமுன் தாமதமாகிவிட்டது. அடுத்த சில கணங்களில் நாங்கள் மோதிக்கொள்ள, பலவித சத்தங்களுக்கிடையே நான் தலைசுற்றி விழுந்தேன்.

நான் எழுந்திருக்கையில் எதிரே அம்புஜம் முழங்காலைப் பிடித்து இரைச்சலுடன் எழுந்து கொண்டாள். கீழே குடம் சில சுற்றுக்களை முடித்து, பூமியின் கோணத்தில் சாய்ந்திருக்க, தரையில் நீர் ஓடி ஈரமாகியிருந்தது. அம்புஜத்தின் சேலையும்தான். பின்பு கிறீச்சுக் குரலில் அவள் வைததெல்லாம் என் காதில் விழவில்லை. நான் கிழே கிடந்த சைக்கிளையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் முன்சக்கரம் ஒரு திசையில் இருக்க, அதன் எதிர்த்திசையில் ஹேண்டில் பார் திரும்பியிருந்தது. ப்ரேமிற்கிடையே காலை வைத்து அதை நிமிர்த்தும் முயற்சியில் மறுபடியும் கீழே போட்டேன்.

அம்புஜம் குடத்திலிருந்த மண் கலந்த மீதித் தண்ணீரைக் கொட்டிவிட்டு அதன் அடிப்பாகத்தைச் சோதித்தாள். ஒருபுறம் உள்வாங்கி நெளிந்திருக்க மறுபடி காச்சு மூச்சென்று கத்த ஆரம்பித்தாள். அருகிலேயே எங்கள் வீடு. தாத்தா ஆபத்பாந்தவனாக வந்து 'கண்டார..' என்று வைது அவளை விரட்ட, தெருவில் என் எதிரிகளின் பட்டியல் அன்று துவங்கியது. அவர் திட்டத் தொடங்கினால் காதுகளை மூடிக்கொள்ள வேண்டும். நடுவீட்டில் வேட்டியை மடித்து நின்றுகொண்டு 'வக்காள..' என்று ஆரம்பித்தால் அனைவரும் திசைக்கொன்றாய் ஓடுவோம். இங்கு என்னுடன் பணிபுரியும் அமெரிக்கன் பேசும் ஐந்து வார்த்தைகளுள்ள வாக்கியத்தில், இரண்டு வார்த்தைகள் மட்டும் சொல்லவந்ததைச் சொல்ல, மீதி வாக்கியத்தில் F-இல் துவங்கும் ஆங்கில நாலெழுத்துக் கெட்டவார்த்தை நிரம்பியிருக்கும். இதற்கு எந்த விதத்திலும் குறையாது என் தாத்தா தமிழில் பேசுவார். தாத்தாவுக்கு ஊரில் மிகுந்த மரியாதை இருந்தது. 'ராஜா சாமி' என்றே அழைப்பார்கள்.

தாத்தா சைக்கிளை நிமிர்த்திப் பிடித்துக் கொண்டார். நான் முழங்கால்களில் அப்பியிருந்த புழுதியைத் துடைத்துக் கொள்ள எரிந்தது. சிவப்புக் கோடுகளாய் சிராய்த்திருக்கத் திண்ணையில் அமர்ந்து கொண்டேன். தாத்தா தேங்காயெண்ணையைத் தடவி விட்டு, தட்டிக் கொடுத்து 'இனிமே சைக்கிள் ஓட்றது ரொம்ப சுலபம்' என்று சொல்லி அனுப்பினார். பயணம் தொடர்ந்தது.

(தொடரும்...)

நன்றி : www.maraththadi.com

No comments: