Wednesday, October 26, 2005

என் அப்பாவின் சைக்கிள் - # 2

நான் ஓட்டியது ஒரு பொன்னிற வர்ண சைக்கிள். தெருவை இரண்டு சுற்றுகள் முடித்ததும், சைக்கிள் ஓட்ட முடியும் என்ற நம்பிக்கை பலமடங்கு அதிகரித்து விட்டது. நம்பிக்கையின் ஆதார காரணம் கால்களைத் தரையில் ஊன்ற முடியும் என்பதுதான். உற்சாகத்தின் உச்சத்தில் சைக்கிளை சற்று வேகமாக மிதிக்கத் தொடங்கினேன்.. சில நொடிகளுக்கு ஒருமுறை கால்களைத் தரையில் ஊன்றி சமநிலை செய்துகொண்டு ஜோராக ஓட்டினேன்.

நடுத்தெருவிலிருந்து விலகி, தெற்குத் தெருவில் ஒரு வட்டம் அடிக்கலாம் என்ற பேராசையில், தெற்குத் தெருவில் நுழைய அங்கே ஒரே ரகளையாக இருந்தது. பல பையன்கள் பலவித சைக்கிள்களை ஓட்டிக்கொண்டு அங்குமிங்கும் பறந்து கொண்டிருக்க, எனக்கு அங்கு ஏன் வந்தோம் என்று ஆகிவிட்டது. போதாக்குறைக்கு சைக்கிள் வேறு மந்திரம் போட்டாற்போல் தெருவில் எங்கெங்கெல்லாம் கற்கள் நீட்டிக்கொண்டிருக்கிறதோ, அவற்றின் மீது, நான் வேண்டாம் வேண்டாம் என்று என் கைகளுக்குக் கட்டளையிட்டும், மிகச்சரியாக ஏறி, இறங்கிச் சென்று கொண்டிருந்தது. நம்மை மீறிய ஏதோ சக்தி சைக்கிளைச் செலுத்துகிறது என்ற பிரமை இருந்தது.

தெற்குத் தெருவில் சைக்கிளிலிருந்து இறங்கிக்கொண்டு, ஆரவாரப் பையன்களைக் கடந்ததும், மறுபடியும் ஏறி, பெடல்களைச் சுழற்ற சைக்கிள் வேகம் பிடித்து கடைத்தெருவை நோக்கிச் சென்றது. அப்போது பார்த்து ஏதோ ஒரு வீட்டிலிருந்து ரொம்ப நேரமாகக் குலைத்துக் கொண்டிருந்த நாய் ஒன்று எப்படியோ வீட்டுக்காரப் பெண்மணியை ஏமாற்றிக் கதவிடுக்கின் வழியாக வெளிக் கிளம்பி, தெருவில் அம்பு போல் பாய்ந்தது. அந்த திடீர்ச் சுதந்திரத்தில் அதற்குத் தலைகால் புரியவில்லை போலும். குதித்துத் துள்ளாட்டம் போட்டது. 'ம்க்க்.. ம்க்க்க்' என்று கொஞ்சல் வேறு..

எனக்கு சைக்கிளின் முன்சக்கரத்தின் முன் இருக்கும் சாலையைத் தவிர வேறு எதிலும் பார்வையைத் திருப்ப இயலவில்லை. ஆனால் கண்ணோரத்தில் மங்கலாக நாயொன்று குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்ததைக் கண்டுகொண்டேன். தரையில் நின்றிருந்தால் எளிதாகச் சமாளித்துவிடலாம். ஆனால் அமர்ந்திருப்பதோ சைக்கிள்மீது. அதுவும் கால்கள் ஊன்றாமல் சற்று வேகமாக ஓட்டிக்கொண்டிருக்கிறேன். விதி சைக்கிள் கேரியரில் உட்கார்ந்துகொண்டு என்னைப் பார்த்து சிரிக்க, நாய் சரியாக சைக்கிள் முன் வந்து நின்றுகொண்டு 'வள்வ்' என்று குலைத்தது. நான் நிறுத்தப் போவதில்லை என்பதைக் கடைசி வினாடியில் அது உணர்ந்துகொண்டு அது விலகுவதற்குள் முன்சக்கரம் அதன் பாதத்தில் ஒரு முறை ஏறி இறங்க, ஏதோ லாரி ஏறியது போல் அது 'காள் காள்' என்று கத்தி ஊரைக் கூப்பிட்டது.

ஒரு வழியாகச் சமாளித்து விழாமல் நிற்க, வீட்டுக் கதவு திறந்து ஒரு மாமி வெளிப்பட்டு, கத்திக்கொண்டிருந்த நாயையும் என்னையும் பார்த்து சந்தேகத்துடன் 'என்ன ஆச்சு?' என்றாள். நான் 'ஒண்ணுமில்லை மாமி..' என்று ஆரம்பிப்பதற்குள் பக்கத்து வீட்டு முன் இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த வாண்டு ஒன்று 'மணி கால் மேல சைக்கிள் ஏறித்து' என்று சொல்லி வைக்க, மாமி 'அய்யோ' என்றாள்.

மணி அதற்குள் காதுகளைப் பின்புறம் திருப்பி ஒட்டிக்கொண்டு, வாலைப் பின்னங் கால்களுக்கிடையில் நுழைத்துக்கொண்டு படு வேகமாக மாமியை அடைந்து அவள் கால்களுக்கிடையில் ஒண்டிக்கொள்ள, மாமி அதன் காலைத் தூக்கிப் பார்த்து சோதித்தாள். லேசாகச் சிவந்திருந்தது போலும். அதற்குள் மணி மாமியின் முகத்தை ஒரு ரவுண்டு நக்கி முடித்திருந்தது.

'கல்லெறியறது போதாதுன்னு இப்போ சைக்கிளை ஏத்தறேளா?' என்றாள் மாமி. நான் 'தெரியாம..' என்று ஆரம்பிக்க, எங்கிருந்தோ வந்த பந்து ஒன்று நாயின் அருகில் விழுந்து தெறிக்க, அது அதிர்ச்சியில் 'வள்' என்று கத்திவிட்டுத் தலைதெறிக்க ஓடியது. மாமி என்னை விட்டுவிட்டுப் பந்தை எடுத்துக்கொண்டு என் பின்னால் பந்தை எடுக்க வந்த பையனை 'வாடா வா.. இன்னிக்கு என்ன பண்றேன் பாரு' என, பையன் பத்தடி தூரத்தில் நிச்சயமில்லாமல் நின்றான். நான் இதுதான் சமயம் என்று வேகம் பிடித்தேன். தெருக்கோடியில் லாரி ஒன்று நின்று தெருவை அடைத்துக்கொண்டிருந்ததை கவனித்தேன். அரைபாடி லாரி. நான் சைக்கிளை நிறுத்தவேண்டும் என்பதை உணர்ந்து பிரேக்கைப் பிடிக்க, கிட்டத்தட்ட கைப்பிடியோடு ஒட்டுமளவிற்கு பிரேக்கைப் பிடித்தும், சைக்கிளின் வேகத்தில் எந்த பின்னேற்றமும் இல்லை. பாழாய்ப்போன கடைக்காரன் பிரேக் பிடிக்காது என்பதைச் சொல்லவில்லை.

போதாக்குறைக்கு அந்த இடத்தில் தெரு சற்று இறக்கமாக இருக்க, சைக்கிளின் வேகம் அதிகரித்தது. நான் 'அய்யய்யோ' என்று அலறலுடன் லாரியின் பின்புறத்தை அடைந்து அதன் பின்புற கதவைப் பிடித்துத் தொங்க, சைக்கிள் என்னிடமிருந்து விடுபட்டு லாரிக்குள் சென்று விழுந்தது.

லாரியின் கதவிலிருந்து இறங்கி, மண்டியிட்டு உள்ளே நுழைந்து சைக்கிளை வெளியே இழுத்து வந்தேன். அதை நிமிர்த்திப் பார்க்க சற்று புழுதி அப்பியிருந்ததைத் தவிர வேறு சேதம் எதுவும் இல்லாததுபோல் தோன்றியது. ஒருமணி நேரம் முடிய இன்னும் சில நிமிடங்கள் இருக்க, நான் கடைத்தெருவில் திரும்பி பஷீர் கடைக்கு விரைந்தேன். 'இது என்ன ஒரு கம்பி மட்டும் நீட்டிக்கொண்டிருக்கிறதே!' என்று சோதித்ததில் கைப்பிடிக்குக் கீழே ப்ரேக் உடைந்து கம்பி தொங்கிக்கொண்டிருந்தது. நான் சைக்கிளை நிறுத்தி அந்தக் கம்பியை நிமிர்த்து வைத்துப் பார்த்ததில் அது தொக்கிக்கொண்டு அசையாது நின்றது. நான் அலுங்காமல் நலுங்காமல் சைக்கிளை மெதுவாக உருட்டிக்கொண்டு போய் கடையில் நிறுத்திவிட்டு, பஷீரிடம் பாக்கி எட்டணாவை வாங்கிக்கொண்டு திரும்பிப் பார்க்காது வீட்டுக்குச் சென்று சமையலறையில் சென்று சில் தரையில் படுத்துக்கொள்ள லேசாகக் காய்ச்சல் அடிப்பது போல் இருந்தது. அப்படியே தூங்கிப் போனேன்.

மாலை எழுந்து வெளியில் வர திண்ணையில் தாத்தா யாரோடோ உரத்துப் பேசிக்கொண்டிருந்தார். லேசாக எட்டிப் பார்த்ததில் பஷீரின் முகம் தெருவில் தெரிய, தலையை உள்ளிழுத்துக்கொண்டேன்.

'என்ன பாய்? என்ன ஆச்சு'

'ஒண்ணுமில்லிங்க சாமி.. நம்ப தம்பி சைக்கிள் எடுத்திச்சு'

'ஆமா.. நாந்தான் சொன்னேன். திருப்பி விட்டுட்டான்ல?'

'விட்ருச்சி சாமி.. ஆனா.. '

'என்ன வாடகை தர்லயா?'

'அதெல்லாம் தம்பி கொடுத்திருச்சு.. ஆனா வண்டில ப்ரேக்கு ஒடஞ்சிருக்கு..'

'அதனால..?'

'புது ப்ரேக்கு கம்பி ரெண்ட்ரூவா ஆகும்.. அதான்..'

'அவந்தான் ஒடச்சானா? வேற யாராவது ஒடச்சிருக்கப் போறான்'

'இல்லீங்க.. தம்பி எடுத்ததுக்கப்புறம் வேற யாரும் வண்டிய எடுக்கலை'

'அதுக்கு முன்னாடி'

'அப்ப நல்லா இருந்துச்சு.. '

'அப்படியா சரி.. இந்தா..' என்ற தாத்தாவின் குரல் கேட்க, அவர் பணம் கொடுப்பதை உணர்ந்து வருத்தமாக இருந்தது.

அது திரையரங்கத்தில் மூன்று காட்சிகளுக்கும் டிக்கெட் கொடுக்கக் கண்விழித்து உழைக்கும் அவரது இரண்டுநாள் சம்பளம்.

(தொடரும்...)
நன்றி: www.maraththadi.com

1 comment:

b said...

அன்பின் சுந்தர்,

மிகவும் சுவையாகச் செல்கிறது கதை. ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்கமுடியாத இளமைப் பருவ நினைவுகள்!