Wednesday, October 26, 2005

என் அப்பாவின் சைக்கிள் # 3

இப்படியாய் என் முதல்நாள் வாடகை சைக்கிள் பயணம் முடிவுக்கு வந்தது.

சில வாரங்கள் கழித்து நடந்த தேர்வுகளில், வழக்கம்போல் சூழ்ந்துகொண்டு 'முக்கியமான கேள்வி குறிச்சுக் கொடுடா' என்ற கும்பலுக்கு பதில்சொல்லி அனுப்பியதில், கிட்டத்தட்ட நான் குறித்துக் கொடுத்த கேள்விகள் பெரும்பாலும் வந்துவிட, அவர்கள் நன்றி சொல்லிச் சென்றார்கள். எதிர்வீட்டு அம்பி என் உதவிக்கு பிரதியுபகாரமாய், அவன் அப்பாவின் பெரிய சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்து எனக்குக் கற்றுக் கொடுக்க முன்வந்தான்.

'பேலன்ஸ் இல்லாட்டி காலி. அதனால இங்க தெருவுல வேண்டாம். ஸ்கூல் க்ரவுண்டுக்குப் போயிடலாம். நீ எந்த திசைல வண்டி ஓட்னாலும் கவலை இல்லை' என்று சொல்லிவிட்டுப் பள்ளி மைதானத்துக்கு என்னைக் கேரியரில் அமர்த்திச் சென்றான். அவ்வளவு சுலபமாகச் சொல்லி விட்டேன். எங்கள் உயரத்திற்கு பெடலை முழுச்சுற்று சுற்ற முடியாது. என்னிடமிருந்து ஐம்பதடி தூரத்திலிருந்து அம்பி சைக்கிளை படுவேகமாக உருட்டி ஒரு தாவு தாவி அமர்ந்து கொள்ள அந்த வேகத்தில் சைக்கிள் ஓடி வர, கால் எட்டும் வரை நீட்டி மிதித்து விட்டு, பெடல் மறுபடியும் கைக்கு (காலுக்கு) வருவதற்குக் காத்திருந்து மிதித்து ஓட்டினான் அம்பி. என் அருகில் வந்ததும் நான் அவனையும் சைக்கிளையும் துரத்தி கேரியரில் குதித்து அமர வேண்டும். நான் எவ்வளவு முயன்றும் என் இடுப்பை கேரியரில் ஏற்ற முடியவில்லை. வழுக்கி வழுக்கி தரைக்கே மறுபடியும் நான் வந்துகொண்டிருந்ததால் அம்பிக்கு எரிச்சல் வந்துவிட்டது. போதாக்குறைக்கு நான் கேரியரில் தொற்றும் முயற்சியில் சைக்கிளைக் கிட்டத்தட்ட உடைந்த டைட்டானிக் கப்பலின் ரேஞ்சுக்கு ஆட்டியதில் அவனுக்குக் கிலி வந்துவிட்டது.

சைக்கிளை எங்கள் வீட்டுத் திறந்த திண்ணையை ஒட்டி நிறுத்தி, 'மொதல்ல நீ உக்கார்றா.. ரெண்டு பக்கமும் காலைப் போட்டு' என்றான். நான் அமர்ந்ததும், அவன் அமர்ந்துகொண்டான். இருவருக்கும் தரை எட்டவில்லை. அப்படியே திண்ணையில் இடதுகாலை வைத்து ஒரு உந்து உந்தி அப்படியே அரை பெடல் போட்டுக் கொண்டு பள்ளி மைதானத்திற்கு ஓட்டிக்கொண்டு சென்றான். ஓட்டுகையில் தான் 'அதிலிருந்து இறங்குவதெப்படி?' என்று இருவருக்கும் உறைத்தது. மைதானத்தை அடையும் முன் திட்டங்கள் வகுத்துக் கொண்டோம். அதன்படி மைதானத்தில் நுழைந்ததும் முதலில் நான் அப்படியே தாவிக் கால்களை விரித்து சைக்கிளை முன் தள்ளி விட்டு குதித்து இறங்க வேண்டும். பின்பு கொஞ்சதூரத்தில் அம்பி இருக்கையிலிருந்து வழக்கம்போல் குதித்து இறங்கி சைக்கிளைப் பிடித்து நிறுத்தி விடுவான். திட்டம் என்னவோ கேட்பதற்குச் சுலபமாகத்தான் இருந்தது.

மைதானத்தில் நுழைந்ததும் துரத்திய நாய்க்குப் பயந்து இருவரும் கால்களை முடிந்த அளவு உயரத்தில் வைத்துக் கொள்ள, மிதிவிசை போதாமல் சைக்கிள் கிட்டத்தட்ட நிற்கும் நிலைக்கு வந்துவிட்டு, அம்பி ஹேண்டில் பாரை ஆட்டி ஆட்டி விழாமல் தடுத்துக் கொண்டிருந்தான். தெய்வாதீனமாக ஓடிவந்த பன்றிக்குட்டியைத் துரத்திக்கொண்டு நாய் சென்றுவிட, இருவரும் நின்றுவிட்ட சைக்கிளை இடதுபுறமாகச் சாய்த்து கால்களை ஊன்றிக்கொண்டு நின்றோம். கேரியர் கம்பிகள் அழுத்தியதில் பின் தொடைகளில் கோடுகள் விழுந்திருந்தது.

நான் தயாரானேன்.

'எடுத்த எடுப்புல என்ன மாரி ஓட்ட முடியாது' என்றான் அம்பி.

'பின்ன?'

'மொதல்ல கொரங்குப் பெடல் போடக் கத்துக்கோ. அப்றம் சீட்ல ஒக்காந்து ஓட்டப் பழகலாம்

''கொரங்குப் பெடலா?'

'ஆமா. இதோ பாரு' என்று சொல்லிவிட்டு வலதுகாலை ஃப்ரேமிற்கிடையில் நுழைத்து அடுத்த பெடலில் வைத்துக்கொண்டு சைக்கிளை ஒரு கோணத்தில் சாய்த்து, கிட்டத்தட்ட சர்க்கஸ் போல 'ரய்க்க் ரய்க்க்' என்று ஓட்டிக் காண்பித்தான்.

'நான் பிடிச்சுக்கறேண்டா' என்ற அவன் உறுதியை நம்பி ஓட்டக் களமிறங்கினேன். முதலில் இடது காலை பெடலில் வைத்துக்கொண்டு வலது காலால் தரையை உந்தி, சைக்கிள் நகரத்தொடங்கியதும், வலது காலை பெடலில் வைத்து 'ரய்க்க்க்.. ' என்று செல்ல வேண்டும். நான் உந்திவிட்டு, வலது காலை தூக்கி, சைக்கிளைச் சாய்த்த வினாடியில் அது பொத்தென்று வலது பக்கம் விழுந்தது. அம்பி 'பரவால்ல. மறுபடியும் ஓட்டு' என்று பெரிய மனதுடன் சொல்லிவிட்டு, வலதுபுறம் நின்று சைக்கிளைப் பிடித்துக்கொண்டான். அடுத்த அரைமணி நேரத்தில் நான் 'கொரங்குப் பெடல்' நிபுணனாக மாறிவிட்டேன்.

'இப்போ அரை பெடல் போடாம முழுப் பெடல் சுத்திப் பாரு' என்றான் அம்பி. முதலில் முயற்சித்ததில் இடுப்புப் பகுதியில் ஒரு வலி. பின்பு பழகிப் போய், அதையும் விரைவாகக் கற்றுக் கொண்டேன். இரண்டுமணி நேரம் குரங்கு சைக்கிள் ஓட்டியது.

'நாளைக்கு சீட்ல ஒக்காந்து ஓட்லாம்' என்று அம்பி சொல்லியதும் திரும்பினோம். அன்று கனவில் என் ஆஞ்சநேயர் சைக்கிளை ஓட்டிக்கொண்டு சென்றார்.

மறுநாள் மாலை அம்பியுடன் மறுபடியும் மைதானத்திற்குச் சென்றோம்.

'நான் புடிச்சுக்கறேன். சீட்ல ஒக்காரு' என்று சைக்கிளை அம்பி கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

நான் ஏறி அமர்ந்ததும் கீழே பார்த்தேன். இரண்டு நூறுமாடிக் கட்டடங்களுக்கிடையே ஒரு கம்பியைக் கட்டி அதில் நடந்து சென்றால் எப்படி இருக்குமோ அப்படி உணர்ந்தேன். என் கீழே தரை வெகுதொலைவில் இருந்தது. பெடல் ஒரு காலுக்கு மட்டுமே எட்டியது. உடல் லேசாகிவிட்டது போன்ற ஒரு உணர்ச்சி.

'சரி. இப்ப அந்தப் பெடலை மிதி'

நான் மிதித்தேன். அடுத்த வினாடி பெடல் நழுவிக் கீழே போக, இந்தப்புறம் இருந்த பெடல் மேலே வர அதையும் மிதித்துக் கீழே அனுப்பினேன். சைக்கிள் நகர்ந்தாலும், பயங்கரமாக இரண்டுபக்கமும் மாறி மாறிச் சாய்ந்தது. அம்பி மிகப் பதட்டமாக இருந்தான்.

'டேய்.. டேய்.. இடுப்ப நெளிக்காதடா.. நேர வச்சுக்கோ' என்று சொல்லிக்கொண்டேயிருந்தான். நான் என்ன வேண்டுமென்றா இடுப்பை நெளித்தேன்? சைக்கிள் ஒருபுறம் சாய்ந்தாலே இடுப்பு தன்னால் மறுபக்கம் நெளிகிறது. அம்பி ஒருமணிநேரம் என்னோடு போராடினான். ஒரு வழியாக நான் சைக்கிளைச் சாய்க்காமல் ஓட்டத் தொடங்க, அம்பி பிடித்துக்கொண்டிருக்கிறான் என்ற தைரியத்தில் பெடல் போடும் வேகத்தை அதிகரித்தேன்.

'எப்படிடா?''சூப்பர். சீக்கிரம் கத்துக்கிட்டியே'

'இப்ப பயமில்லாம இருக்கு.. பெடலும் வேகமாப் போடறேன். இல்ல?'

'........'

'அம்பீ...' என்று அழைத்து பதில் வராததால் திரும்பிப் பார்க்க, தூரத்தில் அம்பி நின்று டாட்டா காட்டினான். அவ்வளவுதான். அதுவரை கற்ற சமநிலைப்படுத்துதல் எல்லாம் மறந்துபோக, நான் ஹேண்டில் பாரை பயங்கரமாக ஆட்டி 'டமால்' என்று கீழே விழுந்தேன்.

(தொடரும்...)

நன்றி: www.maraththadi.com

No comments: